ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 5

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 5 

எழுதியவர் : நெல்லைத் தமிழன் 

பானுமதி வெங்கடேச்வரனின் ‘சூரியன் கோவில்’ கட்டுரை சென்னையில் உள்ள கொளப்பாக்கம் அகத்தீஸ்வரம் கோவிலைப் பற்றியது.  அந்தக் கோவிலின் படங்களை இணைத்திருக்கலாம். கட்டுரை நவகிரகக் கோவில்களைப் பற்றியதா இல்லை அகஸ்தீஸ்வரம் கோவிலை மட்டும் சொல்கிறதா என்பதில் குழப்பம்.  கட்டுரை இன்னும் நன்றாக எழுதப்பட்டிருக்கலாம். இருந்தாலும் புதிய கோவில் அறிமுகம் என்ற வகையில் நன்று. “சில நவக்கிரகக் கோவில்கள்” என்ற பதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நெல்லையில் வைணவக் கோவில்கள் ஒன்பது, வைணவர்களின் நவக்கிரகக் கோவில்களாகவும் அதேபோல சிவனுடைய கோவில்கள் ஒன்பது, சைவர்களின் நவக்கிரக் கோவில்களாகவும் வணங்கப்படுகிறது.  அதுபோலவே கும்பகோணத்திலும் அமைந்துள்ளது என்று நினைக்கிறேன்.

 

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் “பைரவியும் பைரவர்களும்” என்ற நகைச்சுவை அனுபவம் புன்னகைக்க வைத்தது.  பைரவி ஆலாபனைக்குப் பதிலாக காஞ்சுபோன பைரவர்களுக்கு ஒரு துணையாக பைரவியைத் தேடிக் கூட்டிக்கொண்டுபோயிருக்கலாமோ?  நல்ல எழுத்தாளர்கள் வலைப்பதிவை விட்டு ஒதுங்குவது தொடர்கதையாக ஆகிவிட்டது.

 

கீதா சாம்பசிவம் எழுதியிருக்கும் ‘பக்தியா ஆன்மீகமா? இரண்டும் ஒன்றா” என்ற கட்டுரை நிறைய தகவல்களைத் தாங்கியிருக்கிறது.  உடல், உயிர், ஆன்மா என்று மூன்றைச் சொல்கிறார். இதில் பிழை இருக்கிறது என்று தோன்றுகிறது. ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம், ஆன்மா என்ற மூன்றுதானே உண்டு. சூக்கும சரீரத்தை இவர் உயிர் என்று குறிப்பிடுகிறாரோ?  தேடல் தீவிரமாக இருக்கும்போது நம் தேடுதலுக்கு வழிகாட்ட தக்க குரு ஒருவர் அமைவார் என்பதை நல்லா எழுதியிருக்கார்.  கட்டுரையைப் படித்த தும் என் மனதில் பாம்பாட்டிச் சித்தரின் பாடலான “தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார், தன்னை அறியாதவரே தன்னைக் காட்டுவார்” என்பது நினைவுக்கு வந்தது.  பாராட்டுகள் கீதா சாம்பசிவம்.

 

சியாமளா வெங்கட்ராமனின், லேடீஸ் கிளப் பொங்கல், வித்தியாசமான ஒரு பொங்கல்தான்.  கிராமத்துச் சூழ்நிலையை நகரத்துக்குக் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள்.  நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடும் பொங்கல் தரும் மகிழ்ச்சியை கட்டுரை தந்தது.

 

இரா.அரவிந்தன், திருப்பதி மகேஷின் சிங்கப்பூர் மெமரீஸ் புத்தக அறிமுகத்தை நன்றாக எழுதியிருக்கிறார். நானும் திருப்பதி மகேஷ் தன் சிங்கப்பூர் பயணத்தை தன் வலைத்தளத்தில் எழுதியபோது படிக்க ஆரம்பித்தேன். பாதியிலேயே அவர் எழுதுவதைத் தொடரவில்லை என்பதை உணர்ந்து ஏமாற்றமடைந்தேன்.  வாய்ப்புக் கிடைக்கும்போது அந்த மின்னூலை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை புத்தக அறிமுகம் ஏற்படுத்துகிறது.  கட்டுரை சரியாக format செய்யப்படவில்லை. எழுத்துப் பிழைகளும் கண்ணை உறுத்துகிறது.

 

அதிராவின் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, அவரது ட்ரேட்மார்க் வார்த்தைகளுடன், EB (Engal Blog) என்று வரைந்த ஒரு கர்சீப்(?) தைத்த சாகசத்தை எழுதியுள்ளார்.  அவரது எழுத்தை ரசிப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை பிடிக்கும். மற்றவர்களுக்கு, இது என்ன ஆங்கில வார்த்தையாயிருக்கும் என்று யோசித்தே யோசித்தே… தலைமுடியைப் பிச்சுக்குவாங்க.  இருந்தாலும் நல்ல முயற்சி.

 

ஏகாந்தனின் சோமாலியாவில் ஒரு இந்திய இரவு, 80களில் கண்காணாத ஆப்பிரிக்க தேசத்தில் வாழ்க்கையை ஆரம்பித்தவரின் இந்திய ஏக்கத்தைக் கண்முன் கொண்டுவந்தது.  சோமாலிய வனக்காட்சி (நெடுஞ்சாலையிலிருந்துந்து புகைப்படம் எடுத்த தைப்போன்ற தோற்றம்), சமீபகால சோமாலிய அழகிகள் என பலவற்றைத் தொட்டுச் சென்ற ரசனையான பதிவு. சோமாலியா என்றாலே, கடற் கொள்ளையர்கள்தான் மனதில் வந்து செல்வார்கள். இந்தியர்கள் வாழ்வில் சோமாலியர்களின் பங்கு (சமையல், வீட்டு வேலைகள்) போன்றவற்றையும் அவர் விவரித்திருக்கலாம், ஆனால் கட்டுரை, ‘அந்த ஓர் இரவு’ பற்றியது என்பதால் விட்டுவிட்டார் போலும்.

 

ரஞ்சனி நாராயணன், தன் அக்காவை நினைவுகூர்ந்து எழுதியிருந்தது, நன்றாக இருந்தது. அவருக்குப் பிடித்த பாடல்கள் அனேகமாக எல்லாமே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். இருந்தாலும் சில பாடல்களை நான் பாடுவதில்லை, அவற்றில் அறச் சொற்கள் நிறைய இருப்பதால். “நினைந்து நினைந்து நெஞ்சம்’ ஒரு உதாரணம்தான். இத்தகைய பாடல்கள் நம் வாழ்வில் இன்னுமே துக்கத்தைக் கொண்டுவந்துவிடும் என்பது என் அபிப்ராயம். (சில ஸ்லோகங்களைச் சொன்னால், அதில் உள்ளார்ந்து இருக்கும் காயத்ரி மந்திரம் சொன்ன பலன் கிடைக்கும் என்று சொல்வதைப் போல, துக்கப் பாடல்களும் நமக்கு இன்னும் துக்கத்தைக் கொண்டுவந்துவிடும் என்பது என் நம்பிக்கை) ஆனாலும் கஷ்டங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் வாழ்வின் சுவைகளை அனுபவிக்கவே முடியாது போய்விடும். இயல்பான அவருடைய குணத்தை எப்படி மாற்றிக்கொண்டிருக்க முடியும்? பக்தி போன்றவற்றில் மனதைத் திருப்பினால்தான் இழையோடிய சோகங்களை மனது மறக்கும் எனத் தோன்றுகிறது. பல்வேறு எண்ணங்களை எழுப்பும் கட்டுரை.


 (தொடரும்) 



11 கருத்துகள்:

  1. பாராட்டியதுக்கு நன்றி நெ.த. விமரிசனம் இத்தனை பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா எழுதலாம்னு தெரிஞ்சிருந்தா நானும் எழுதி இருப்பேனோ? அதிலே இத்தனை வார்த்தைகள் என ஒரு கட்டுப்பாடு விதிச்சதாலே நமக்குச் சரிப்பட்டு வராதுனு நினைச்சேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி பதிவுக்கு எழுதி அனுப்பப்போகிறேன்.. அதுக்கும் இப்படிச் சொல்லாதீங்க. வெந்நீர் எப்படிப் போடுவது என்றுகூட திபதிவுக்கு அனுப்பலாம்.

      நீக்கு
  2. விமரிசனத்திற்கு வார்த்தைகள் அளவு சொன்னதற்கு ஒரே காரணம் என்ன என்றால் - - "நிறை / குறைகளை சொல்லி விமரிசனம் " என்று மட்டும் சொல்லியிருந்தால் - பெரும்பான்மை மக்கள் " குறைகள் எதுவுமே இல்லை - எல்லாமே சூப்பர் " என்று எழுதி அனுப்பிவிடுவார்கள். குறைந்த பட்சம் ஐநூறு வார்த்தைகளாவது இருக்கவேண்டும் என்று கூறினால் மட்டுமே - கொஞ்சமாவது படித்து கவனம் செலுத்தி எழுதுவார்கள் என்பதால்தான். மற்றபடி விமரிசன வார்த்தைகளுக்கு உச்ச வரம்பு எதுவும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  3. @நெல்லை, நீங்க சூக்கும சரீரம் என்பதைத் தான் நான் உயிர் என்கிறேனோ? எதுக்கும் கொஞ்சம் தெளிவு படுத்திக் கொண்டு வந்து பதில் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  4. விமரிசனம் செய்ய மிகப் பொறுமை வேண்டும். அந்தப் பணியை
    நிறைவாக நிறைவேத்தி இருக்கிறார் நெல்லைத் தமிழன்.

    எத்தனையோ கேள்விகள் கீதாவின் பதிவைப்
    படித்ததும் எழுகின்றன.
    இது போல ஆத்ம விசாரங்களைத் தொடர்ந்து
    படித்தால் தான் கொஞ்சமாவது தெளிவு வரும்.
    இருவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. தொடரும் விமர்சனங்கள் - ஒவ்வொரு பகுதியையும் பொறுமையாகப் படித்திருக்கும் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  6. இன்றைக்குத்தான் இந்த விமரிசனப் பகுதியைப் படித்தேன். என் அக்கா, என் அம்மா இருவருமே தாங்கள் கஷ்டப்பட என்றே பிறந்திருப்பதாகத்தான் நினைத்திருந்தார்கள். என் அம்மாவைக் கூட கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். என் அக்கா நான் வாய்விட்டு சிரித்தாலும் கோபித்துக் கொள்ளுவாள். நான் இணையத்தில் எழுதுவது என்பதே அவளுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது. காமாட்சி மா ஒருமுறை என்னைப் பார்ப்பதற்காக சென்னைக்கு அக்காவின் வீட்டிற்கு வந்திருந்தார். அவர்களும் என்னைப் போல எழுதுகிறார் என்று தெரிந்ததும் தான் கொஞ்சம் சமாதானம் ஆனாள். இத்தனைக்கும் வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தவள் அவள். நெல்லை தமிழன் சொல்வதுபோல இயல்பை எப்படி மாற்ற முடியும்?
    எனக்கு வல்லி எழுதியிருந்த கணவன்-மனைவி கருத்து வேற்றுமை பற்றிய கட்டுரை பிடித்திருந்தது. நுணலும் தன் வாயால் கெடும் என்பது எத்தனை உண்மை! வேடிக்கை வினையாயிற்று. எதைப் பேசுவதானாலும் சற்று யோசித்து வார்த்தைகளை விட வேண்டும் என்பது எப்போதும் உண்மை. கீதா சாம்பசிவத்தின் கட்டுரை படிக்கவில்லை. எப்போதுமே ஆத்மா உடல் எல்லாம் குழப்பும். அந்தப் பக்கம் அதிகம் போவதில்லை.
    ரிஷபன் கதை, மாலா மாதவன் கதை அவரவர் பாணியில். பொறுமையுடன் எல்லாவற்றையும் படித்து விமரிசனமும் செய்திருக்கும் நெல்லைத் தமிழனுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறார்.
    ஆனாலும் முழுமையாக பொங்கல் மலரை படித்து இருக்க வேண்டும் நான்.
    அப்போது இருந்த என் மனநிலையில் ஒன்றும் படிக்க முடியவில்லை.
    அப்புறம் நேரம் எப்படியோ போகிறது.

    பதிலளிநீக்கு
  8. இங்கே வந்துதான் விமரிசனக் கட்டுரைகளைப் படிக்கவேண்டும் என இப்போதுதான் புரிந்தது.
    என் சோமாலிய சிறு அனுபவக்கட்டுரையை ரசித்தமைக்கு நன்றி. உங்கள் நீண்ட விமர்சனத்தின் மற்ற பகுதிகளையும் படிக்கிறேன்! கிரிக்கெட் சீசன் வேறு ஆட்டிவைப்பதால், இன்னும் மின்னிலாவையே முடிக்கவில்லை !

    பதிலளிநீக்கு