வியாழன், 22 டிசம்பர், 2011

கடதரங்கம்!

கடந்த மூன்று வருடங்களாக, சென்னை இசை விழாவில், சுகன்யா குழுவினர் நடத்தும் ஸ்திரீ தாள் தரங்கிணி நிகழ்ச்சியின் மிகச் சிறிய சாம்பிள். உங்கள் பார்வைக்கு. 

    

Sthree Thal Tharang (Laya Raga Sangamam – Ensemble) 
     

திங்கள், 5 டிசம்பர், 2011

சென்னை இசைவிழா கச்சேரிகள் 2011-12


எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு: 

சென்னை இசைவிழா 2011-12 கச்சேரிகள், ஒவ்வொரு தேதியிலும், எந்தெந்த நேரத்தில், என்னென்ன கச்சேரிகள், எங்கெங்கு நடக்கின்றன; அவைகள் காசுக் கச்சேரியா அல்லது ஓசிக் கச்சேரியா? கச்சேரிகள் நடக்கும் சபா விலாசம் என்ன போன்ற விவரங்களை, ஒரு பி டி எஃப் கோப்பாக வெளியிட்டுள்ளோம். 

அதைக் காண, தரவிறக்க,  >>>>இங்கே<<<<     சொடுக்கவும். 

நம் வாசகர்களுக்கு, மேலும் ஒரு வேண்டுகோள். 

இந்த சீசனில், நீங்கள் ஏதாவது கச்சேரிக்குச் சென்று வந்தால், உங்கள் கச்சேரி விமரிசனத்தை, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ, எழுதி, engalblog@gmail.com   மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 

கச்சேரி விமரிசனம் எழுதுபவர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி எழுதலாம்.

கச்சேரி நடந்த தேதி: 

கச்சேரி நடந்த இடம்.

யார் பாட்டு?

பக்க வாத்தியங்கள் வாசித்தவர்கள் யார்?  

நினைவிருக்கின்ற பாடல்கள் / ராகம்.

எந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்தது.

கச்சேரியின் சிறப்பம்சம் என்று எதையாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

பாடகரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஏதாவது சொல்ல விரும்பினால், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

இந்த விவரங்கள் + உங்கள் எழுத்துத் திறமை ஆகியவற்றுடன், எழுதி அனுப்புங்கள். இயன்ற வரையில், வளரும் இளம் கலைஞர்களை, உற்சாகப் படுத்தும் வகையில் எழுதப் படுகின்ற விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பாடகர், உங்கள் சொந்த பந்தமாக அல்லது நண்பராக இருந்தாலும் ஆட்சேபணையில்லை! 
                         

சனி, 3 டிசம்பர், 2011

தவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)


(எழுதியவர் மீனாக்ஷி. )

."..காப்பாற்ற வேண்டும்.  தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்!"  என்று அவள் சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கி, குரல் தழுதழுத்தது.  

அவள் சொன்னதை கேட்டு புங்கவர்மன் மனம் இறங்கினாலும் தன்னுடைய நிலைமையை நினைத்துப் பார்த்தான்.  பின் அவளிடம் "இளவரசி.. நான் மீளமுடியாத பணப் பிரச்சனையில் இருக்கிறேன்.  இந்த நிலைமையை எப்படி சீர்செய்வது என்பதறியாமல் நானே பெருங்குழப்பத்தில் இருக்கிறேன்.  அதனால்தான் நாட்டில் இருக்க இயலாமல் அடிக்கடி வேட்டையாட காட்டுக்கு வந்து விடுகிறேன்.  இந்த நிலையில் நான் எப்படி உங்களுக்கு..." என்றான். 

அவன் முடிக்கும் முன்னமே அவள், "..உங்கள் ஒருவரால்தான் அவரை காப்பாற்ற முடியும்... நீங்கள் என் கணவரை மீட்டு வந்து என்னிடம் ஒப்படையுங்கள்.   நான் உங்களுக்கு வேண்டிய பொன்னும், பொருளும் அளிக்கிறேன்.  நீங்கள் மறுக்காமல் இந்த உதவியை எனக்கு செய்தே ஆகவேண்டும், ஏனென்றால் உங்கள் ஒருவரால்தான் அவரை, அவரை.." என்று சொல்லியபடியே மயங்கி சரிந்தாள்.

அவளுக்கு என்ன ஆயிற்று என்று அவள் அருகே செல்ல ஓரடி எடுத்து வைத்தான் புங்கவர்மன். 
      
எதிர்பாரால் அடித்த பலத்த காற்றினால் மேகங்கள் விலகி நிலவின் ஒளி மயங்கி விழுந்த அவள் மேல் பட, அவள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தவளை ஆனாள்.  மயக்கம் இன்னும் தெளியாத நிலையில் தவளை அப்படியே அசையாமல் படுத்திருந்தது.
    
பொன்னும், பொருளும் வேண்டிய அளவிற்கு கிடைக்க போகிறது என்பதினாலேயே புங்கவர்மன் உடனேயே செயலில் இறங்கினான்.  புறப்படும்முன் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளியை அழைத்து நடந்த அனைத்தையும் சொல்லி, தவளை உருவில் இருக்கும் அந்த இளவரசியை பாதுகாக்கும்படி ஆணையிட்டான்.   எப்படியாவது ஏழு கடல், ஏழு மலையை கடந்து இந்த சாதனையை செய்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் தங்கள் குல தெய்வமான புங்கனாதரை வேண்டிக் கொண்டு மேற்கு திசையை நோக்கி புறப்பட்டான்.
   
பாதையில் கவனம் வைத்து பயணத்தை செலுத்தி கொண்டிருந்தவனின் பாதையில் ஒரு மிகப் பெரிய மலைபாம்பு குறுக்கிட்டது.   புங்கவர்மன் சிறிதும் அஞ்சாமல் அதனுடன் போராடி, வென்று தன் பயணத்தை தொடர்ந்தான்.  இரவு நேரத்தில் தனிமையில் காட்டில் பயணிக்கும்போது ஓய்வெடுக்க வேண்டாம் என்ற தீர்மானத்துடன் பயணத்தை தொடர்ந்தவன், விடிந்ததும் சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் புறப்படலானான்.  பகல் நேரம் முழுவதும் வழியில் ஏற்பட்ட இடர்களை களைந்து,  தன் பயணத்தை தொடர்ந்தான்.  அந்தி நேரமும் வந்தது, அவன் பயணத்தின் முதல் கட்டமாக பரந்து விரிந்து கடலும் தென்பட்டது.  சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கினான்.  இருள் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.  முற்றிலும் இருள் பரவுவதற்கு முன், எப்படியாவது இந்த கடலை கடந்து விட வேண்டும் என்ற உறுதியுடன் கடலை கடக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டான் புங்கவர்மன்.
  
"என்ன இது? என்ன பண்ணிண்டு இருக்க?" என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

"இருட்டுறதுக்குள்ள கடலைக் கடந்தாகணும்" என்றான்.

"என்னடா உளறிட்டிருக்கே? கரண்ட் போறதுக்குள்ள ஹோம் வொர்க் முடிக்காம, இந்த புது வீடியோ கேமை  விளையாட ஆரம்பிச்சுட்டயா!  ஹோம் வொர்க்கை முதல்ல  முடிச்சுட்டு அப்பறமா விளையாடுனு உனக்கு எத்தனை தடவ சொல்றது?".  அம்மா அவனை கடிந்து கொண்டாள்.
   
'அம்மாக்கு எங்கேந்து புரிய போறது, ஹோம் வொர்காவது எமர்ஜென்சி லாம்ப் வெச்சுண்டு பண்ணிடலாம், வீடியோ கேம் ஆட முடியுமா?  யுபிஎஸ் ஒண்ணு வாங்குப்பான்னு ஒரு தடவ அப்பாகிட்ட கேட்டதுக்கு  எனக்கெல்லாம் அந்த காலத்துல....னு தன் பழைய ராமாயணத்தை பாட ஆரம்பிச்சவர்தான்.  நிறுத்தறதுக்கு ஒரு வாரம் ஆச்சு.  

இப்போ இந்த பாழாப்போன லாப் டாப்ல அப்பர் ஏரோ கீ சரியாவே வேலை செய்யல.  இதுல நான் எப்படி இந்த கடலை தாண்டறது.  அப்பாகிட்ட ஒரு புது லாப்டாப் வாங்கி தரயான்னு தப்பி தவறி கூட கேக்க முடியாது.  யுபிஎஸ் கேட்டதுக்கே ஒரு வாரம் ராமாயணம் பாடினவர், லாப்டாப் கேட்டா, யம்மா!   

இவங்களுக்கெல்லாம் என் நிலைமையை எப்படி புரிய வைக்கறது?  வகுப்புல பாதி பேர் இந்த கேம் முழுக்க முடிச்சாச்சு.  அவங்கள் எல்லாரையும் விட வேகமா நான் இதை முடிச்சு காமிக்கறேன்னு பெட் வேற கட்டி இருக்கேன்.  என் லாப் டாப் இருக்கற அழகுக்கு இந்த பெட் எல்லாம் நான் போட்டிருக்கணுமா?' என்று தன்னை தானே நொந்தபடி மீண்டும் மீண்டும் ஏரோ கீயை விரல் தேஞ்சு போற அளவுக்கு அழுத்தினான். 
  
பக்கத்துல இருந்து இவன் படற பாட்டை எல்லாம் பாத்து இவன் தம்பி சிரிச்சுண்டு இருந்தான்.  வர்ற ஆத்திரத்துக்கு.. 'அவ்வ்வன்ன்னை ஒண்ணும் பண்ண முடியாது.   ஏன்னா, அவன் ஏற்கெனவே இந்த கேமை இவனுக்கு முன்னாடி முடிச்சாச்சு' என்று நொந்தவனுக்கு தம்பியோட இளிப்பு வெறுப்பா இருந்துது.  
  
'தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே தேவலாம்னு எப்பவும் அம்மா சொல்லுவா.  இப்ப இந்த குட்டி பிசாசோட தயவு தேவை' நெனச்சு,  "ஏய், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா"னு கெஞ்சலா கேட்டான்.
  
"நீ நேரா லெவல் அஞ்சுக்கு போ.  அங்க அந்த இளவரசியோட கணவன் இருப்பான்.  அவன் மேல கிளிக் பண்ணினா அவனுக்கு மயக்கம் தெளிஞ்சுடும்.  அதுக்கப்பறம் லெவல் ஆறு விண்டோ தானே ஓபன் ஆயிடும்.  அது ரொம்ப ரொம்ப ஈசி.  லெவெல் ஆரோட கேம் ஓவர்" என்றான் தெரிந்த பிசாசு.  

"டேய், ரொம்ப தேங்க்ஸ்டா!  கரண்ட் போறதுக்கு முன்னாடி இந்த கேமை முடிக்கறேன்".  அஞ்சாவது லெவலுக்குத் தாவினான். 

விண்டோ ஓபன் ஆகாமல்  திரும்ப டென்ஷன் ஆகி தம்பியிடம், ""என்னடா இதுக்கு கோட் வோர்ட் இருக்கா? க்ளிக் செஞ்சா ஒண்ணும் ஆகலியே? என்ன கோட் வோர்ட்? சொல்லித்தொலை" என்றான். 
  
"அதாண்டா.. அந்த இளவரசி மயக்கமாறதுக்கு முன்னாடி சொன்ன கடைசி வார்த்தை, அதான் கோட்" என்று தம்பி சொன்ன ஸ்பெல்லிங்கை வாய் விட்டு அழுத்தமாக சொல்லிக் கொண்டே டைப் செய்ய ஆரம்பித்தான்.....

அ வ ரை.