வெள்ளி, 1 செப்டம்பர், 2017

விதி வலியது – நெல்லைத்தமிழன்.



அன்புடன்

நெல்லைத் தமிழன்.



வாசகர்களே!.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வரலாம். ஆனால் அந்த Impact இருக்கணும், ஆனால் நடந்ததை அப்படியே பிரதிபலிப்பதாகவும் ஆகிவிடக்கூடாது என்று முயன்றிருக்கிறேன். அதனால், உண்மைக்கும் இந்தக் கதைக்கும் தூரம் இருக்கும். கதையை வாசிக்கும்போது, மனதில் நிகழ்ச்சி ஓடவேண்டும், ஆனால் செய்திபோல் இருந்துவிடக்கூடாது என்று மனதில் தோன்றியது. கொடுக்கப்பட்ட வரிகள், சொன்ன கதைக்குப் பொருந்துகிறதா என்று பாருங்கள். நடந்த நிகழ்வைப் பற்றியும், அதில் நடக்காமல் போனவற்றைப் பற்றியும் தொடர்புபடுத்தி எழுதலாம். ஆனால் ரொம்ப நீண்டுவிடும். வெறும் கதையாக எழுதும்போதும், ‘தலைவரின்’ சாந்த முகம் என் கண்ணில் வந்துபோகிறது. இப்படி நடந்திருந்தால், இப்படி நடக்காமல் இருந்திருந்தால் என்று பலவற்றையும் யோசிக்கத் தோன்றுகிறது. ஒரு செயல், அது செய்யப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும். அது யாருக்கும் பிரயோசனமில்லாமல், அர்த்தம் இல்லாமல் போவதில் என்ன உபயோகம் இருக்கிறது? விதி வலியதுதானே.

எங்கள் கிரியேஷன்ஸ்- கண்டிஷனல் கரு 03  

விதி வலியது – நெல்லைத்தமிழன் 

பஸ் அந்த நிறுத்தத்திலிருந்துநடத்துனர் விசில் சத்தம் கேட்டதும் கிளம்பியது.அவர்கள் அதில் இருந்தார்கள்எல்லாம் நினைத்தபடி நடக்குமா? ஒவ்வொருத்தரின் மனதும் ஒவ்வொரு திசையில் இருந்தது.

சிவப்ரகாசத்துக்கு எல்லாம் நினைத்ததுபோல் நடக்கவேண்டுமே என்று தோன்றிக்கொண்டிருந்தது. ஒரு சிறு தவறும் பெரும் விளைவை ஏற்படுத்திவிடும். இந்த முடிவைத் தலைமை தன்னிடம் அறிவித்தபோது, ‘ஏன் எதற்கு’ என்று எந்தக் கேள்வியும் கேட்கத் தோன்றவில்லை. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தெரியாதா? காரணமில்லாமல் எங்கேயும் காரியம் இருக்குமா? தன்னிடம் அத்தகைய பெரிய பொறுப்பைக் கொடுத்ததை எண்ணி, சிவத்துக்குப் பெருமிதம்தான் ஏற்பட்டது.  அதற்கான பணத்தை, முன் பின் அறிமுகமில்லாத ஒருவர் தன்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றபோது சிவத்துக்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை. “ராயபுரம் ரெட்டியார் வீதிக்கு நாளை மதியம் 3 மணிக்குச் செல்லுங்கள், அங்கேயே உங்களை ஒருவர் தொடர்புகொள்ளும்வரை இருங்கள்” வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் பணத்தைக் கொண்டுவந்தவர் மறைந்துவிட்டார்,.  இயக்கத்தில், யாரிடமும் யாரும் கேள்வி கேட்பதோ அல்லது அந்தரங்க உரையாடல் மேற்கொள்வதோ வழக்கத்தில் இல்லை. தேவைக்குமேல் யாரும் யாரிடமும் பேசுவதும் இல்லை. அதிலும் குறிப்பாக இந்த மாதிரி தூதுவர்களாக வருபவர்களை முகத்துக்கு நேரே கூர்ந்து பார்ப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது. 
                  
அறையின் மரக் கதவைச் சார்த்தி,  பணத்தை பழைய டிரங்குப் பெட்டி இருந்த மூலையில், டிரங்குப் பெட்டியை நீக்கிவிட்டு, அதன் கீழ் இருந்த குப்பை சத்தைகளை அகற்றி, சிறிய கதவுபோன்ற அமைப்பைத் திறந்து அதனுள்ளே வைத்துவிட்டு, மீண்டும் பழையமாதிரியே வைத்துவிட்டார் சிவம். யாரும் அந்த அறைக்கு வந்துபார்த்தால், மூலையில் பழைய டிரங்கு பெட்டியே கண்ணைக் கவராது. அதில் இருக்கும் பழைய சினிமாப் பத்திரிகைகள், கொஞ்சம் பூஜைப் பொருட்கள், சினிமா பாட்டுப் புத்தகங்கள் போன்றவை எதுவும் சாதாரணமாகத்தான் தெரியும். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்தப் பெட்டியை எப்போதும் பூட்டுவதில்லை. அதுவும்தவிர, அறை முழுவதும் பேச்சலர் அறையைவிட மோசமாக அழுக்குப் படிந்த உடைகள், சிறிய கயிற்றில் தொங்குகின்ற பழைய கைலிகள், சாதாரண செருப்பு, பழைய பெல்ட் போன்றவைகளோடு இன்னொரு மூலையில் ஒரு ஸ்டவ் அடுப்பும் கொஞ்சம்கூட யாரையும் சந்தேகப்படவைக்காதவாறுதான் இருந்தது. இதில் யார், அந்தப் பழைய டிரங்குப் பெட்டியை நகர்த்தி, அதன் கீழ் இருக்கின்ற பேப்பர் குப்பை போன்றவைகளை விலக்கி, செங்கலை நகர்த்தி பணம் மறைத்துவைத்திருப்பதைப் பார்க்கமுடியும். சிவத்துக்கு திருப்தி ஏற்பட்டது. மறுநாள், தூதுவன் சொன்னபடி ராயப்பேட்டை ரெட்டியார் வீதிக்குச் சென்றார். காயலான் கடைகளும், மெக்கானிகல் ஷாப்புகளுமாக அந்தத் தெருவே அடைசலாகவும், சந்தடியோடும் இருந்தது. முழு தெருவையும் ஒரு தடவை நடந்தால் இருபது நிமிடம் எடுக்கும்போலிருந்தது. ஒரு தடவை நடந்துவிடுவோம் என்று நடக்க ஆரம்பித்தபோது, சிவத்துக்கு யாரோ தோளில் தட்டியதுபோல் தோன்றி அனிச்சையாகத் திரும்பினார். ‘அண்ணே இந்தாங்க’ என்று சொல்லி ஒரு பையைக் கொடுத்துவிட்டு, யாரென்று கேட்பதற்குள் வந்தவர் திரும்பிவிட்டார். வீட்டுக்கு வந்தபிறகுதான் அது பெல்ட் வெடிகுண்டு இணைக்கப்பட்ட மார்புக்கவசம் என்று சிவத்துக்குத் தெரிந்தது. 

 அன்று இரவு உறக்கம் வரவில்லை. கடமையைச் செய்வதிலிருந்து பிறழ்ந்துவிடக்கூடாதே என்ற எண்ணமே சிவத்தின் மனதை ஆக்ரமித்திருந்தது. தான் ஏற்பாடு செய்திருந்தபடி நாளை பாக்கியமும் ஆதிரையும் காலையிலேயே வந்துவிடவேண்டுமே, இரவு தாங்கள் எண்ணியபடி எல்லாம் நடக்கவேண்டுமே என்று தோன்றியது. தங்கைக்கும் தன் அம்மாவுக்கும் ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் வாய்ப்பு தனக்கு வந்தது காலதேவனின் நீதி என்றுதான் அவருக்குத் தோன்றியது. எல்லாம் நினைத்தபடி முடிந்தால், தனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப்பற்றி சிவத்துக்குக் கவலை இல்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சிவப்ரகாசம் டார்கெட்டைக் கொன்றதுதான் சரித்திரத்தில் இடம்பெறும். அது நிச்சயம் தங்கள் ஊரில் உள்ளவர்களையும், தன் உறவினர்களையும் சென்றுசேரும். தனக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கும் விதமாக சிவப்ரகாசம் பழிவாங்கிவிட்டான், நம் எல்லோருக்கும் சேர்ந்து அவன் தியாகம் புரிந்துவிட்டான் என்று அவர்கள் கூச்சலிட்டு மகிழ்வதை மனக்கண்ணால் நினைத்ததுமே அதிசயமாக அவன் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.
  
ஆதிரை மெதுவாக அவள் வயிற்றைத் தொட்டுப்பார்த்துக்கொண்டாள். ரொம்ப டைட்டாகத்தான் பெல்ட் இருந்தது. கவலைப்பட ஒன்றும் இல்லை, விழுந்துவிடாது. நல்லவேளை, தனக்கு பஸ்சில் உட்கார இடம் கிடைத்தது. முழு தூரமும் நின்றுகொண்டே பிரயாணம் செய்யவேண்டும் என்றால் ரொம்ப ரிஸ்க். இன்னும் இரண்டு மணி நேரமாகும். பத்தாவது முறையாக, தனக்குச் சொல்லப்பட்டவைகளை அவள் எண்ணிப்பார்த்தாள். பெரும்புதூர் சென்றதும், அங்கு அருகிலிருக்கும் விடுதி பாத்ரூமிற்குள் போய், பெல்ட்டின் இடது பகுதி அறையில் பேட்டரியை உள்ளே வைத்துவிடவேண்டும். கூட்டத்தில் தலைவர் தங்கள் அருகில் வரும்போது வயிற்றுப்பகுதிக்குக் கீழ் இருக்கும் லீவரை அழுத்தமாக வலதுபக்கம் நோக்கி வளைக்கவேண்டும். அதிலிருந்து 5 வினாடிகளில் முழு குண்டும் வெடித்துவிடும். 30 மீட்டர் சுற்றளவுக்கு ஒன்றுமே மிஞ்சாது. அழுத்தமாகத் திருகாதவரை, லீவர் தானாகவே ஆன் ஆகாது. பஸ் பிரயாணத்தின்போது எந்தச் சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பேட்டரியை வைப்பது, அந்த ஊரை அடைந்தபின்புதான் என்பது திட்டம். 

நேற்றைக்கு இரவு சினிமா பார்த்துவிட்டு, தனக்குப் பிடித்த சிலோன் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு 2 மணியாகிவிட்டது. காலை 10 மணியிலிருந்து இரண்டுமுறை பெல்ட் வெடிகுண்டு இருந்த கவசத்தையும் அதன்மீது உடையையும் அணிந்து, பெல்ட் லீவரை அழுத்தி டிரையல் ரன் செய்துபார்த்துவிட்டாள். கொஞ்சம்கூட அடையாளம் தெரியாது, வலியை உணரும் நேரமே இருக்காது என்று திருப்பித் திருப்பிச் சொல்லியிருந்தார் சிவம், அன்று அவளுக்குப் பிடித்த சிவப்பு பச்சை பொட்டுக்கள் வைத்த சுடிதாரை அணிவதற்காக வைத்திருந்தாள். கிளம்புவதற்கு முன்னால் அவள் ஆசையாக மல்லிகைப் பூச்சரத்தை வாங்கி தலையில் சூடிக்கொண்டாள். மல்லிகையின் வாசனையும், இரவு தூக்கத்தின் மிச்சமும், அவளுக்குக் கொஞ்சம் கண் அயரலாம் என்று தோன்றியது. இத்தனை நாள், இந்த நாளுக்காகத்தானே காத்திருக்க நேரிட்டது. தன் சகோதரன் வாழ்க்கை அழிந்ததற்கும், தான் மணந்துகொள்ளவேண்டியவன் இறந்ததற்கும் தான் பழிவாங்குவது எத்துணை ஆறுதலாக இருக்கப்போகிறது.

பாக்கியத்துக்கு ஆதிரை கூட இருக்கவேண்டும் என்பது உத்தரவு. சொல்லும் நேரத்தில் அவளைவிட்டுப் பிரிந்துவிடவேண்டும், பிறகு சிவப்ரகாசத்துடன் திரும்பவேண்டும் என்பது திட்டம். கடைசி நேரத்தில் ஏதேனும் சிக்கல் நேர்ந்தால் பாக்கியம் ஆதிரை இடத்துக்கு மாறவேண்டியிருக்கும். இப்போதுவரை எந்தச் சிக்கலும் இல்லை. அவளுக்கு இதில் ரொம்ப ஆர்வம் இல்லை. எதுக்கு பொழைக்க வந்த இடத்தில் தேவையில்லாத வேலை. நாம செய்யற செயல் என்ன என்ன பின்விளைவை ஏற்படுத்துமோ.. இதுவரை இயக்கத்தில் காயம் படுபவர்களும், உடனடி மருத்துவ உதவி தேவைப்படுபவர்களும் சிக்கலில்லாமல் கோடிக்கரையில் இறங்கமுடிகிறது. அதையெல்லாம் இது கெடுத்துவிடுமே. யார் இந்தமாதிரி முன்யோசனை இல்லாத இந்த வேலையைச் செய்யச்சொல்லியிருப்பார்கள்? இப்போதுவரை நமக்கு உதவியாக தமிழகம் இருக்கிறது, அங்கிருந்து முழுவதுமாக இங்கு வந்தவர்களுக்கு வேலை போன்ற வாய்ப்புகளும் கிடைக்குது. அதுவெல்லாம் கெட்டுப்போகுமே என்பது அவள் எண்ணம். இருந்தாலும் இயக்கத்தின் பிடியில் இருக்கும் தன் குடும்பத்தை நினைத்துத்தான் அவள் இதில் சேர்ந்தாள். நல்லதோ கெட்டதோ, ஊரோடு ஒத்துப்போவதுதான் தங்களுக்கு நல்லது என்பது அவள் எண்ணம். ஓரிரு நாட்கள் பழக்கம் என்றாலும், அவளுக்கு ஆதிரைமேல் அன்பு அதிகமாகியிருந்தது. அவளுடைய சொந்தக் கதையைக் கேட்டதும் அவளுடைய துரதிருஷ்டத்தை நினைத்து வருந்தினாள் பாக்கியம்.  மே மாத வெயிலினால், பஸ்ஸின் உள்ளேயும் அனலடிப்பதுபோல் சூடு. கூட்டத்தின் கசகசப்பு, அவளுக்கு அவளுடைய பனைமரங்கள் சூழ்ந்த கிராமத்தை நினைவுபடுத்திற்று.






ரயில்  வந்து அந்த ஸ்டேஷனில் நின்றதுஅவர்கள் காத்திருந்தார்கள்எந்தச் சிக்கலும் திட்டத்தில் வந்துவிடக்கூடாது. அன்றைய இரவு 9 மணி வாக்கில் அவர்கள் காஞ்சீபுரம் இரயில் நிலையத்தில் இறங்கி காத்திருக்க வேண்டும். பத்து, பத்தரை வாக்கில் அவர்களிடம் ஒரு பார்சல் கொண்டுசேர்க்கப்படும். 11 மணி சென்னை செல்லும் மெயிலில் ஏறி தாம்பரத்தில் இறங்கி, அங்கிருந்து மாற்று ரயிலில் நுங்கம்பாக்கத்தில் இறங்கவேண்டும். இடையில் வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது. சாதாரண பிரயாணிகள்போல் உடை அணிந்திருக்கவேண்டும். யாருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடாது. நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கியதும் ஒருவர் அவர்களை அடையாளம் கண்டு, இயக்கத்தின் சின்னம்போட்ட அட்டையைக் கொடுப்பார். அவரிடம் அந்த பார்சலைச் சேர்ப்பித்துவிடவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்சல் பிறர் காணும்படி வைத்திருக்கக்கூடாது. இதில் தவறு ஏற்பட்டால், இயக்கம் கடுமையாகத் தண்டிக்கும்.  அவர்களுக்கு, ‘கண்டிப்பை’விட, இயக்கத்துக்கான தங்களது பங்களிப்புதான் மிகவும் ஊக்கம் தரத் தக்கதாக இருந்தது. தன் மக்கள், தன் இனம் தலை நிமிர, இயக்கம் பாடுபடுவதும், அதற்கான கள உழைப்பை அங்கிருக்கும் எல்லோரும் தருவதும் அவர்களுக்குப் பெருமிதமாக இருந்தது. ஆனால் களத்தில் தாங்களும் இல்லாது தமிழகத்தில் இருப்பது வருத்தமாகத்தான் இருந்தது. அதனால், கிடைத்த சிறு வாய்ப்பும் தாங்களும் அணிலைப் போல ஏதாவது உதவியை இயக்கத்திற்குச் செய்கிறோம் என்ற திருப்தியை ஏற்படுத்தியது.  


***

ஹைதிராபாத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டத்தை முடித்துக்கொண்டு விமானதளத்துக்கு தலைவர் 4 மணிக்கு வந்துசேர்ந்தார்.  தலைவரின் முதன்மை உதவியாளர் மிஸ்ரா,  ஹெலிகாப்டர் பழுதாகியிருக்கும் செய்தியை மெதுவாகச் சொன்னார்.. எல்லோருக்கும் ஒரே டென்ஷன். பழுது நீக்கிப் புறப்பட 3-4 மணி நேரத்துக்குமேல் ஆகிவிடுமாம்.   

“இரவு ஹைதையிலேயே நடக்கும் தேர்தல் கூட்டத்தில் தலைவர் இரவு பேசிவிட்டு அங்கிருந்தே இரவு 12 மணி விமானத்தில் திருவனந்தபுரம் சென்றுவிடலாமே”  என்றார்.. ஆந்திரக் கட்சித் தலைவர்.

தலைவருக்கோ எப்படியும் தான் கலந்துகொள்வதாக வாக்களித்த சிறுபூதூர் அரசியல் கூட்டத்திற்குச் சென்றே ஆகவேண்டும். அந்தப் பாராளுமன்றத் தொகுதியில்தான் தங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான மாணிக்கவேலர் நிற்கிறார். அவர் தன் அன்னையின் ஆதர்ச நண்பர். கட்சியிலும் தாத்தா காலத்திலிருந்து இருக்கிறார். தான் வாக்குக் கொடுத்திருக்கிறோமே, நிறைவேற்றவேண்டுமே என மனத்தில் கலக்கம்.

‘Try your best’, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பழுதுபார்க்கட்டும். எத்தனை நேரமானாலும் சிறுபூதூர் கூட்டம் முடிவதற்குள்ளாவது தலையைக் காட்டிவிடலாம். தலைவர் முடிவெடுத்தார்.

மற்றவர்கள்போன்றவர் அல்ல மாணிக்கவேலர். தங்கள் வீட்டுக்குள் தங்குதடையில்லாமல் எப்போதும் வரும் உரிமையைப் பெற்றவர். அம்மாவின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். ஒரு கைம்மாறும் பெற்றுக்கொண்டவர் கிடையாது. குடும்பத்தின் மேலும் கட்சியின் மேலும் அத்துணை விசுவாசம். அதனால்தான், ‘வயசாகிவிட்டது, போதும் தலைவரே’ என்று சொல்லியும் இந்தத் தடவை தேர்தலில் மாணிக்கவேலர் பெயரையும் இடம்பெறச் செய்தார். இந்த முறை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்ல தலைவருக்கு அவகாசமே இல்லை. நிச்சயம் தமிழகத்தில் தாங்கள் கூட்டணி வைத்துள்ளதால் அனேகமாக நான்கில் மூன்று பங்குக்குமேல் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பது உறுதி. தமிழகக் கட்சித் தலைவரோ தான் பிரச்சாரத்துக்கு வரவேண்டிய தேவையில்லை என்று சொல்கிறார். அப்போதுதான் அவருக்கு மாணிக்கவேலர் நினைவுக்கு வந்தார். அவருடைய தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்தால் என்ன? அது முடிந்ததும் காரில் ஏறி திரும்ப சென்னைக்கு வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றுவிடலாமே. தமிழகத்தில் மக்களுக்கும் காங்கிரஸ் அபிமானம் உண்டே. பிரச்சாரத்தில் தமிழகம் இல்லாவிட்டால் புறக்கணித்தது போலாகிவிடுமே. அதனால் தேர்தல் பிரச்சாரத் திட்டம் தீட்டும் குழுத் தலைவரிடம் தீர்மானமாக, தான் சிறுபூதூர் பிரச்சாரத்துக்குப் போவதைச் சொல்லிவிட்டார். தன்மீது தலைவருக்கு உள்ள அபிமானத்தை நினைத்து மாணிக்கவேலருக்கு மனம் கொள்ளா பூரிப்பு..

தமிழக கட்சித் தலைவர் மீண்டும் தலைவரிடம் சொன்னார். ‘அந்தத் தொகுதி நிறைய கிராமங்களை அடக்கியது. நகரங்களைப்போல் பெரிய மைதானங்களைக் கொண்ட இடம் இல்லை. எதற்கு அந்தத் தொகுதியில் பிரச்சாரம் செய்யவேண்டும்? வேண்டுமென்றால், அடுத்த தொகுதியில் கூட்டம் வைத்துக்கொள்ளலாமே. அது பெரிய நகரம், பாதுகாப்பு ஏற்பாடுகளும், கூட்ட ஏற்பாடுகளும் செய்வது சுலபமல்லவா? தேர்தல் வேறு வெகு அருகாமையில் இருக்கிறது, நாங்கள் எல்லோரும் பல தொகுதிகளுக்கும் செல்லவேண்டியிருக்கிறது, தேர்தல் ஏற்பாடுகள் நிறைய இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், சென்னையிலேயே பிரம்மாண்டமான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கெடுத்துக்கொள்வார்கள், லட்சக்கணக்கான மக்களும் திரளுவார்கள்’

“No. No. நான் மாணிக்கம் மாமாவுக்கு வாக்களித்துவிட்டேன். மாற்றமுடியாது” தீர்மானமாக தலைவர் சொல்லிவிட்டார்.

அதோடு பிரயாணத் திட்டத்தில் குறுக்கீடு என்பது இல்லாமல் போய்விட்டது.

‘தலைவரே என்னோட விருந்தினர் மாளிகைக்கு வாங்க. அரைமணி பிரயாணம்தான். ரெண்டு மணி நேரமாவது ஓய்வெடுத்துக்குங்க. நீங்க வந்திருப்பதை மற்றவர்களிடம் சொல்லவேண்டாம். யாரும் தொந்தரவு தராமல் ஓய்வெடுங்க. ஹெலிகாப்டர் பழுது சரியானதும் கிளம்பிடலாம்’  ஆந்திரக் கட்சித் தலைவர் சொன்னார்.

‘இப்போ ஏதேனும் விமானம் சென்னை செல்வதற்கு இருக்கிறதா? ஒருவேளை அப்படி இருந்தால் இடம் இருக்கான்னு பாருங்க. அதிலேயே சென்றுவிடுகிறேன். ஹெலிகாப்டர் சரியானதும் அவரை சென்னைக்குக் கொண்டுவந்து அங்க காத்திருக்கச் சொல்லிடலாம். இல்லைனா சிறுபூதூர் பக்கத்துலேயே எங்காவது ஹெலிபேட் இருந்தா அங்கேயிருந்தே திருவனந்தபுரம் போயிடலாம்”  தலைவர் தன் முதன்மை உதவியாளர் மிஸ்ராவிடம் சொன்னார்.

பக்கத்திலிருந்த ஆந்திர மாநிலத் தலைவருக்கு, தன்னுடைய விருந்தினர் மாளிகைக்கு தலைவர் வரும் வாய்ப்பு நழுவுகிறதே என்று தோன்றியது. தலைவரும் சென்னை போயாகவேண்டும் என்ற பிடிவாதத்தில் இருப்பதால், அதற்கு ஏதேனும் உதவி செய்து தலைவர் மனதில் இடம்பிடிக்கலாமே என்றும் தோன்றியது. ‘சட்’ என்று இன்னும் 1 1/2 மணி நேரத்தில் சென்னை செல்ல விமானம் இருப்பது ஞாபகத்தில் வந்தது. ‘மிஸ்ரா சார்.. இன்னும் ஓரிரண்டு மணி நேரத்தில் ஒரு விமானம் சென்னை செல்லும். அதை விட்டால் காலை 3 மணிக்குத்தான் அடுத்த விமானம். நான் வேணும்னா ஏர்போர்ட் அதாரிட்டிகிட்ட பேசவா?’

***
தலைவர் வரும் ஹெலிகாப்டர் இன்னும் காணோமே. விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள் ஆர்வத்துடன் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். தலைவரை வரவேற்க வந்த மானிலத் தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்போதும்போல் பொதுக்கூட்டங்கள் முடிய தாமதமாவது இயல்புதான். 6 மணி ஆகிவிட்டதே. இதற்குள் வந்திருக்கவேண்டுமே. பொதுக்கூட்டம் நடக்கும் ஊருக்கு காரில் போகவே 1 ½ மணி நேரமாகுமே. தலைவர் வேறு ஆட்சியில் இல்லை. இருந்திருந்தால் டிராபிக்கை இப்போவே கிளியர் பண்ணி ¾ மணி நேரத்திலேயே பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்குப் போகமுடிவதுபோல் செய்திருக்கலாம்”  மானிலத் தலைவருக்கு மனதில் இருந்த கவலை, குளிர்காற்றையும் மீறி முகத்தில் வேர்வைத் துளிகளை வரச்செய்தது.

அங்கு தூரத்தில் நடிகை நளினாஸ்ரீ உட்கார்ந்துகொண்டிருப்பது அவர் கண்களில் தெரிந்தது. ‘இவங்களுக்கு வேற வேலையே இல்லை. கட்சி வேலைக்குத் தேடினா போன் எடுக்கறதே இல்லை. தலைவர் முகத்தில் தரிசனம் கொடுக்கமட்டும் மைதாமாவைப் பூசிக்கிட்டு ஆஜராயிடுவாங்க. இங்கேயே ஒவ்வொருவராக தலைவரிடம் பேசுகிறேன், போட்டோ எடுக்கிறேன் என்று நேரத்தைக் கடத்தினால் எப்படி நேரத்துக்குள் கூட்ட மைதானத்துக்கு தலைவரை காரில் கொண்டுசெல்லமுடியும்? நேரம் ஆனால், பொதுக்கூட்டத்துக்கு வந்தவங்க எப்படி திரும்பப் போவாங்க. ஏற்கனவே நேரமாகிவிட்டது.’ என்ற எரிச்சல் மனதில் உண்டானது.

அப்போதுதான் ஏர்போர்ட் மேனேஜர், அவரை நோக்கி வருவதைப் பார்த்தார்.

‘சார்.. தலைவர் ஹெலிகாப்டரில் வரலை. 7 ½  மணி ஹைதராபாத் விமானத்தில் வர்றாங்க. எனக்கு இப்போதான் தகவல் வந்தது’.

“ஹப்பா” என்று மானிலத் தலைவருக்கு மனது ரிலீஃப் ஆனது.

‘கிள்ளிவளவன்.. சொல்றதை கவனமாக் கேளுங்க. தலைவர் ரெஸ்ட்.ரூம் போகணும்னா இங்கேயே போயிட்டு, உடனேயே அவரை தனி காரில் அனுப்பிடுவோம். நான் தேர்தல் வேலைகளைப் பத்தி அவர்கிட்ட சொல்றதுக்கும் கம்பெனி கொடுக்கவும் அவரோட கார்ல போறேன். டி.ஐ.ஜிட்ட சொல்லி பாதுகாப்பு வண்டியை முன்னால போகச்சொல்லுங்க. முடிஞ்சா டிராபிக்கை கிளியர் செஞ்சு வைக்க instruction கொடுத்திடட்டும். என்னால ராத்திரி உடனே திரும்பமுடியாது. அதுனால ஒருவேளை விமான நிலையத்துலேர்ந்து வேற விமானத்துல தலைவர் திருவனந்தபுரம் போறார்னா, இங்க நீங்க தொண்டர்களோட இருந்து வழியனுப்பணும். இப்போ முதல்ல கொஞ்சம் ஆட்களை வரிசைப்படுத்துங்க. இங்கேயே தலைவர் பார்க்கவேண்டிய முக்கியமானவர்களை காருக்கு நடக்கும்போதே ‘ஹாய்’ சொல்றமாதிரி செய்திடுவோம். நேரமில்லை. அவங்கள்டயும் சொல்லிடுங்க, தலைவர்கிட்ட பேசறதுக்கு முயற்சிபண்ணக்கூடாதுன்னு. சீக்கிரம். தலைவர் 8 மணிக்குள் கார்ல புறப்பட்டுடணும். சிறுபூதூர்ல இருக்கற மாவட்ட கட்சித் தலைவர்ட்ட இந்தத் தகவலைச் சொல்லிடுங்க. அவங்க ஆபீசுக்கோ அல்லது வீட்டுக்கோ போன் பண்ணிடுங்க’.

தலைவர் விமானத்தில் வருகிறார் என்ற செய்தி தெரிந்ததும் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் அங்கேயே வழியில் நின்று தலைவர் இறங்குவதைப் பார்க்க முடியும் என்று ஆர்வக்கோளாறு தொண்டர்கள், ஏர்போர்ட் கட்டிடம் முடியும் இடத்திற்கு விரைந்தனர்.

மணி இரவு 7 1/2.

விமானம் ஓடு பாதையில் வேகமாக ஓடி நின்றதுஅவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேஇல்லை
       

75 கருத்துகள்:

  1. நான் எதிர்பார்க்கவில்லை, கதை வெளியிடப்படும் என்று. நீங்கள் கொடுத்த கண்டிஷனில் எனக்கு இரண்டு ஸ்கெலடன் வந்துபோனது. இரண்டாவதை விட இது குறைந்த சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் இதனை எழுதினேன். படம் காரணத்துடன் வெளியிடப்படவில்லையா?

    கதைக் கரு ரொம்பவும் முக்கியம் என்பதை இதற்கான உடனடி எதிர்வினையில் தெரிந்துகொண்டேன். நான் 11ம் வகுப்பில் ஹாஸ்டலில் இருந்தபோது ஹாஸ்டல் dayக்கான ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்றேன். என் அண்ணன் என் சார்பில் (அவன் 12) மேடையில் ஏறி பரிசு பெற ஆசைப்பட்டான். அடுத்தவருஷமும் நான்தான் பரிசு பெறுவேன் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லாத்தால் அவனை பரிசு வாங்கச் சொன்னேன். 12ம் வகுப்பின்போது அதீத ஆர்வத்தால் பிள்ளையாரை backgroundஆக வைத்து நல்லாத்தான் வரைந்திருந்தேன். இரண்டாம் பரிசுகூடக் கிட்டவில்லை. (நான் படித்தது கிறித்துவப் பள்ளியில், ஓவியம் தேர்ந்தெடுக்கும் குழுவும் அப்படியே. குறையாகச் சொல்லவில்லை). அதுதான் theme என்பது போட்டிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது.

    வெளியிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரி சார்! காப்பி பேஸ்ட் கலாட்டா! படம் காணாம பூடுச்சு!

      நீக்கு
    2. உற்சாகப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கோடு வெளியிட்டதற்கு கௌதமன் அவர்களுக்கு நன்றி. இதற்குப் பொருத்தமான இன்னொரு சைவக் கதையுடன் வருகிறேன்.

      நீக்கு
    3. ///இதற்குப் பொருத்தமான இன்னொரு சைவக் கதையுடன் வருகிறேன்.//
      என்னாது சைவக் கதையோ? அப்போ அடுத்து அசைவக் கதையையும் எதிர்பார்க்கிறோம்ம்:).

      நீக்கு
    4. சைவக் கதைனா நல்லமுடிவுள்ள கதை. சோகக் கதையல்ல. ஆனா இதுல ஓவியா, ஆரவ்லாம் எதிர்பார்க்காதீங்க.

      நீக்கு
  2. >>> அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!.. <<<

    எல்லாமும் நினைவுக்கு வந்தன..

    தொடரட்டும் தங்கள் பணி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைகளைக் குறிப்பிட்டிருக்கலாம் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  3. கதையா, சம்பவமா? படம் ஒன்றும் இல்லையே.... வெறும் கட்டமாக இருப்பதால் சென்சார் செய்யப்பட்டுள்ளதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் இப்போது தெரிகிறதா என்று சொல்லவும்.

      நீக்கு
    2. எழுதியது கதை. உள்ளடக்கியது நடந்த சம்பவம். நன்றி வான்மதி.

      நீக்கு
  4. காலையில் படம் தெரியவில்லை இப்போது தெரிகிறது.
    பழைய சம்பவங்களை கதையில் இணைத்துள்ளது தெரிகிறது.
    அருமையான கதை அமைப்பு. சொன்ன கதைக்கு பொருந்துகிறது.

    பதிலளிநீக்கு
  5. //தலைவரின்’ சாந்த முகம் என் கண்ணில் வந்துபோகிறது//

    கண்ணில் வந்த தலைவரை
    படமும் நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேன் மக்கள் மேன் மக்களே என்று சொல்லத்தக்க அளவில் அவருடைய நற்குணங்களைப் படித்திருக்கிறேன். சஞ்சயைவிட நல்லவர் சாத்வீகமானவர் ராஜீவ்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற் செல்லும். நன்றி

      நீக்கு
  7. விதி வலியதே அருமையாக சென்றது நகர்வு.

    நண்பர் திரு. நெல்லைத் தமிழன் அவர்கள் வரைந்த ராஜீவ்காந்தியின் படம் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  8. அச்சச்சோஓஒ.. என்னால் இப்போதான் கொமெண்ட் போட முடிகிறது... ஆவ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் கதை எழுத மாட்டார் என்றல்லவா நினைத்திருந்தேன்ன்ன்.. எழுதிட்டார்ர்.. வாழ்த்துக்கள்... நான் நேற்று கங்கணம் கட்டினேன் எப்படியாவது கதையை முடிச்சு இன்று காலை போஸ்ட் பண்ணிடோணும் என.. முடியல்லியே...:) இப்போ திரும்படியும்:) கங்கணம் கட்டியிருக்கிறேன்ன்ன்.. இன்று எழுதி முடிச்சிடோணும் என..

    எனக்கொரு டவுட்டூஊஊஊ கங்கணம் என்றால் என்ன? எல்லோரும் பாவிக்கிறார்களே என நானும் பாவிக்கிறேன்:)...

    ஆங்ங்ங்ங் இன்னொன்று நெல்லைத்தமிழன்... நான் கெள அண்ணனோடு கோபம்:).. அதனால கோபம் எனில் வீட்டுக்குள் வரப்பிடாதெல்லோ:) எனவே வேலியால எட்டிப்பார்த்தே படிச்சு கொமெண்ட் போடப்போறேன்.. காது கேய்க்காட்டில்.. சொல்லுங்கோ சத்தமா கொமெண்ட் போடுறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவா ஒரு செயலைச் செய்துமுடிக்க கையில் கயிறு கட்டிக்கறது போன்று செய்து, காரியம் முடிந்ததும் அதை அவிழ்ப்பார்கள். கிராமத்துலகூட சேலைல முடிஞ்சு வச்சுப்பாங்க. இதுதான் கையில் கங்கணம் கட்டிக்கொள்வதன் காரணம். காரியம் முடிஞ்சதுனா கங்கணத்தைக் கழட்டுவார்கள். பின்னால அதுதான் "கங்கணம் கட்டிட்டுச் செயல்படுறான்" என்று வந்ததுனு நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஓ நிஜமாவோ... இதுதான் கங்கணமா.. நான் நினைத்திருந்தேன் கங்கணம் என்பது.. வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போவார்களே... இரண்டில் ஒன்று பார்த்திடலாம் என.. அப்படியாக்கும் என நினைச்சிருந்தேன்ன்ன்.. நன்றி.

      நீக்கு
  9. ஹா ஹா ஹா.. என்ன அது ஒருபக்க மீசையும் ஒருபக்க தாடியும் வளர்ந்து.. தோழிலே தொங்குகிறதோ? முகம் நன்றாக வந்திருக்குது.. எதுக்கு அந்த கறுப்பு மை அடிச்சீங்க.. அது குழப்புது அழகை.. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்பப்ப இந்த ள/ழ மட்டும் என் இமேஜை டமேச் ஆக்கிடுதே:) இல்லை எனில் நான் இப்போ எங்கேயோஓஓஓஓஓஓ போயிருப்பேனே:)..

      நீக்கு
    2. தோழிலே// ஹாஹாஹா ஏஞ்சல் அதிராக்கு இதெல்லாம் சர்வ சகஜமப்பா அதான் தொழிலே!!! ஹிஹிஹிஹி....இருந்தாலும் போனா போவுது!! பூஸார் பாருங்க கதை எழுதிட்டாங்க...அதுக்குள்ள...அதுக்குப் பாராட்டுகள் அதிரா...இனிதான் உங்க கதைய வாசிக்கணும்....இதோ போறேன்....

      கீதா

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. அதிரா.. இது படம் வரைவதில் ஒரு முறை. படத்தைக் கூர்ந்து பார்க்கக்கூடாது. முழுவதுமா படம் அந்த ஆப்ஜக்டைக் கண்ணுல கொண்டுவரும். இந்தமாதிரி வரையற (கிறுக்கற அப்படின்னு சொன்னால் நாங்க மரியாதைக்குறைவுன்னு நினைப்போம்) படத்துல கண்ணை மட்டும் பார்த்தா நல்லாருக்காது. Something like suggestive art?

      நீக்கு
    5. //படத்தைக் கூர்ந்து பார்க்கக்கூடாது.///
      ஹா ஹா ஹா என்னில ஒரு பழக்கம் இருக்கு.. எதையும் உற்றுப்பார்ப்பேன்ன்ன்.. கண்ணும் எப்பவும் கூர்மை கொஞ்சம் அதிகம்.. நிலத்தில் ஊரும் குட்டிப் பூச்சி புழுக்களைக்கூட உற்றுப் பார்த்து பாய்ந்து சென்று.. எதுக்கு இதை எல்லாம் உற்றுப்பார்க்கிறீங்க என ஏச்சும் வாங்குவதுண்டு ஹா ஹா ஹா:).

      ஆங் அது கீதா அது.. எழுத்துப் பிழையா இப்போ முக்கியம்.. கதை வெளிவந்துவீட்டதே.. கொஞ்சம் சத்தமா சொன்னால்தான் கீதா,.. அஞ்சுவுக்கு கேக்கும்:)

      நீக்கு
  10. ஆவ்வ்வ்வ்வ் கொடுக்கப்பட்ட “ராஸ்க்” ஐ கச்சிதமாகக் கடைப்பிடித்து.. அதே வசனத்தை அங்கங்கு கொடுத்து அசத்திட்டீங்க.. நீங்க பாஸ் ஆகிட்டீங்க:).. இது வேற பாஸ்.. பொஸ் அல்ல:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா- இதைப் படித்த உடனே, 10ம் வகுப்பு ஹாஸ்டலில் விடுமுறை நாட்களில் போட்ட 16 வயதினிலே" திரைப்பட வசனங்கள் ஞாபகம் வந்துவிட்டது. "ஆத்தா நான் பத்தாப்பு பாஸாயிட்டேன்" என்று ஶ்ரீதேவி சொல்வது நினைவுக்கு வந்தது. நன்றி

      நீக்கு
    2. அதிடா, ட வரவேண்டிய இடத்துக்கெல்லாம் ர உபயோகப்படுத்தி குழப்பறீங்க. Ruskக்குப் பதிலா ராஸ்க்கனு எழுதினீங்களான்னு மனசுல வந்து அப்புறம் டாஸ்க் என்று கண்டுகொண்டேன்.

      நீக்கு
  11. ஒரு போராட்டக் கதைபோல தீவிரவாதக் கோஸ்டிபோல எழுதியிருக்கிறீங்க.. இதனால்தான் கெள அண்ணன் வெளியிடாமல் விட்டிடுவார் எனச் சொன்னீங்களோ ஹா ஹா ஹா.. அவர் இதுக்கெல்லாம் பயப்புடமாட்டார்ர்:)..

    நன்றாக இருக்கிறது கதை.. எங்களைவிட எதிர்ப்பாலாருக்கு அதிகம் பிடிக்கும் என நினைக்கிறேன்.

    நான் எழுத நினைத்ததை.. எழுதிவிட்டார்களே.., எனும் கவலை இம்முறை இல்லாமல் முதலாவதாகக் கலக்கிட்டீங்கள்.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் போராட்டக் கதையேதான் அதிரா...வாசிக்கத் தொடங்கினேன் இது ராஜீவ் கொலை பேஸ் என்று தோன்றியது. நாளை முழுவதும் படித்துப் பார்த்தால்தான் தெரியும்...ஸோ பை பை நௌ...நாளை வருகிறேன்...

      கீதா

      நீக்கு
    2. அதிரா -- உங்களுக்கு இந்த நிகழ்ச்சி தெரியாதா அல்லது அப்போது இலங்கையில், நீங்கள் இல்லையா?

      நீக்கு
    3. சம்பவம் தெரியும் ஆனா என்ன எப்படி நடந்தது என்றெல்லாம் அரசியலுக்குள் போவதில்லை... அதனால இது புரியவில்லை.. பின்புதான் புரிந்துகொண்டேன்..

      ஏதோ கற்பனையில் எழுதியிருக்கிறீங்க என நினைச்சிட்டேன்.

      நீக்கு
  12. விதி வலியது என்பதை உணர்த்திய பதிவு

    பதிலளிநீக்கு
  13. நெல்லை அண்ட் ஸ்ரீராம் கௌதம் அண்ணா நாளை மீண்டும் வந்து வாசித்துக் கருத்து போடுகிறேன்/றோம்..தஇன்று தாமதமாகிவிட்டது...முழுவதும் படிக்க இயலவில்லை...அதான்...

    அதிரா நானும் எழுத நினைத்து மனதில் இரண்டு கதைகள் ஓடுகின்றன...எழுதணும் அதுதானே பெரிய கடினமான வேலை எனக்கு...எழுதுவது என்பது ஃப்ளோ வரும் போது வீட்டில் தடை வரும்...அப்புறம் உக்காரும் போது ஃப்ளோ வராது...பார்க்கணும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே.. அதே.. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நிலைமைதான் எனக்கும்.. இருப்பினும் விடமாட்டேன்ன் அதிராவோ கொக்கோ...:)

      நீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைப்பிங் எர்ரர் மர்ம திகில் கதை :)//அது யாருக்கும் பிரயோசனமில்லாமல், அர்த்தம் இல்லாமல் போவதில் என்ன உபயோகம் இருக்கிறது? விதி வலியதுதானே//

      hmm true



      நீக்கு
    2. அவசரமா டைப்பினேன் ஸ்பெல்லிங் வார்த்தை எல்லாம் மாத்தி விழுந்திருக்கு :)
      இப்போ மீண்டும் பதிகிறேன்

      வித்தியாசமா கதை எழுதியிருக்கீங்க நல்லா இருக்கு .நான் நினைச்சேன் கண்டிஷனால் கருவுக்கு மறுபடியும் இட்லி சாப்பாட்டு பார்சல் புது மனா தம்பதிகள்னு எழுதுவீங்கன்னு :) ..இதுவும் நல்லா இருக்கு .அந்த படம் பென்சில் லைன் ட்றாயிங்கா ..நல்லா இருக்கு ..போட்டோ நைட் டைம் எடுத்தமாதிரி இருக்கு அதான் டார்க்கா காட்டுது ..பின்னூட்டத்தில் சொன்ன பிள்ளையார் படமும் இதே டெக்கினிக்கில் தான் வரைஞ்சின்களா ..அதை வச்சிருந்தா பகிருங்களேன் இங்கே ..ரோசாப்பூ மாதிரி எனக்கும் கிராப்ட் செய்ய ஒரு படம் கிடைக்கும்ல :)

      நீக்கு
    3. எனக்கென்னமோ அவசரத்தில ஸ்பெல்லிங் மிஸ்ரேக் வந்தமாதிரி தெரியல்லே:).. கதை படிச்ச நடுக்கத்தில வந்தமாதிரி இருக்கே.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

      நீக்கு
    4. அவ்வ்வ் அப்படியும் திரும்பி மிஸ்டேக் செஞ்சிருக்கேன் :)

      சரி மியாவ் அந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும்

      நீக்கு
    5. பிள்ளையார் படம் டிரெடிஷனல ஆனால் நீர்நிலையில் தாமரைகளோடு வரைந்த ஞாபகம். "வச்சிருந்தா"- நான் 6வது சேர்ந்தது எங்க அப்பா ஹெட்மாஸ்டரா இருந்த உயர்நிலைப்பள்ளில. அங்க ஆண்டுவிழால ஓட்டப்பந்தயம், "பானை உடைத்தல்" போட்டில கலந்துகொண்டேன். இரண்டாவது விளையாட்டில் நம்ம கண்ணை துணியால் முழுமையா கட்டி, (நமக்கு கொஞ்ச தூரத்துல உயரே பானை கட்டிவைத்திருப்பார்கள், உள்ளே தண்ணீர் இருக்கும்) நம்மை சுத்திவிட்டு அப்பறம் கையில் கம்பைக்கொடுப்பார்கள். பொதுவா எப்போதும் direction மாறிடும். அதுல முதல் பரிசு, எங்க அப்பா கையெழுத்து போட்ட சர்டிபிகேட். இதை 86ல் தொலைத்துவிட்டேன். அதுதான் நான் இன்னும் நினைத்து வருந்துவது.

      நீக்கு
  15. அருமையான கோர்வையான நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட கதை! எப்படி நடந்திருக்கும் என்பதைக் கற்பனையில் கண்டு சொல்லப்பட்டிருக்கிறது. நெ.த.வின் திறமைக்கு அளவே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். படமும் நன்றாகத் தெரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சாம்பசிவம் மேடம்... எழுதும்போது நான் அந்த நிகழ்வுகளை எல்லாம் மனதில் திருப்பி ஓட்டினேன், படித்தவைகள் அனைத்தும் நினைவு வந்தது. வெறும்ன அந்த நிகழ்வைப் பற்றி நிறைய எழுதலாம். வேண்டாம் வேண்டாம் எனத் தடுத்தும், தடங்கல்கள் வந்தபோதும், காந்தம் நோக்கி ஓடும் இரும்புபோல் விதியை நோக்கி தலைவரை ஓடவிட்டுவிட்டது.

      உங்கள் பாராட்டு ஊக்கம் கொடுக்கிறது, அன்புக்கு நன்றி.

      நீக்கு
    2. இன்னும் சொல்வதெனில் "சாந்தமான த்லைவரின்" என்று நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததைப் படிக்கும்போதே இதானோ எனத் தோன்றியது. படிக்கையில் முழுவதும் புரிந்தது. ஆகவே தான் ரொம்ப விவரிக்கவில்லை. எடுத்துக்கொண்ட கதைக்கருவைத் திறமையுடன் செதுக்கிக் கொண்டு வந்து விட்டீர்கள்! நடந்த நிகழ்வின் பிரதிபலிப்பை எத்தனை வருடங்கள் உணர்ந்து கொண்டே இருப்பது? மேலும் அதை இப்போது வெளிக்காட்டுவதில் என்ன மாறப் போகிறது! ஒன்றும் இல்லை! இல்லையா! :) மற்றபடி இதில் எந்த நிகழ்வு என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லாமலேயே புரிந்து கொள்ளும்படியாகவே எழுதி உள்ளீர்கள்! முதல் பத்தியிலேயே புரிய ஆரம்பித்து விடுகிறது. நாங்க அப்போ ஜாம்நகரிலே இருந்தோம். 22 ஆம் தேதி சென்னை செல்லப் பயணச் சீட்டு எடுத்திருந்தோம். அன்றிரவு அஹமதாபாத் போனால் ரயில்கள் தமிழ்நாட்டுக்குச் செல்லவில்லை! ரத்து எனச் செய்தி! ஓரிரவு முழுவதும் அஹமதாபாதில் பொழுதைக் கழித்து விட்டு மறுநாள் மீண்டும் ஜாம்நகர் திரும்பினோம். ராணுவக் குடியிருப்பில் இருந்ததால் பல்வேறு தகவல்களும் உடனுக்குடன் வந்து சேர்ந்தன! கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆயிற்று சகஜமான சூழ்நிலைக்குத் திரும்ப!

      நீக்கு
    3. நன்றி கீதா மேடம். என் நெருங்கிய உறவினரின் மகன் திருமணம் அதே நாளில் fix செய்திருந்தார்கள். யாரும் போகமுடியாமல் அவசரகோலத்தில் இருப்பதைவைத்துத் திருமணம் நடந்தது. இரண்டுவருடத்துக்குள் பிரிவும் நடந்தது.

      நீக்கு
  16. நெத முதலில் பாராட்டுகள்! உடனே கதை எழுதிட்டீங்களே அதுக்கு!!! அப்புறம் படத்திற்கு! ராஜீவ் அழகாக இருக்கிறார் உங்கள் ஸ்கெச்சிலும்....

    மூன்றையும் அழகாக லிங்க் பண்ணிக் கொண்டுவந்து செமையா முடிச்சிட்டீங்க! எழுதின விதமும் நல்லாருக்கு. ராஜீவ் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் உங்கள் கதையில் அந்தத் தலைவர் அந்தப் விமானத்தில் வராமல் ஏதோ அவர் மனதில் தோன்ற லாஸ்ட் மினிட்டில் யாருக்கும் தெரியாமல் ஹெலிகாப்டர் சரியானதும் தன் பெர்சனல் செக்கரட்டரியிடம் மட்டும் சொல்லி திருவனந்தபுரம் பறந்திருக்கலாம்...இது எனது கற்பனை!! ஏனோ இது போன்ற சாவுகள் பிடிப்பதில்லை!! (விமானம் தரையிறங்கி ஓடியது அவர்கள் மகிழ்ந்தார்கள் என்றுதானே முடிக்கணும் உள்ளில் தலைவர் இருந்தாரா இல்லையானு சொல்ல வேண்டாமே!! இல்லையா அதனால்..ஹிஹிஹி.)

    கதை ரொம்பப் பிடித்தது. உங்கள் திறமை அபாரம் சாமியோவ்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I was grossed with those events. என்னை எப்போது கேட்டாலும் படித்தவைகள் ஞாபகம் வந்துவிடும். பெருங்களத்தூர்ல அதிகாலைல மாடிக்கு எங்கம்மா வந்து இதனைச் சொன்னார்கள். (புத்தகங்கள், செய்திகள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம்) உடனே மெயின் ரோடுக்கு (10 நிமிட நடை, தாம்பரம் வண்டலூர் மெயின்ரோடு) சென்றுவிட்டேன். ஜீப்பில் தலைவர்கள் அழுதபடி தாம்பரம் நோக்கிச் செல்வதைப் பார்த்தேன்).

      மாற்றி எழுதியிருக்கலாம், மனதில்லை

      நீக்கு
    2. உண்மையில எனக்கு மீண்டும் அந்த சம்பவம் அப்படியே வந்தது நினைவில் ..அப்பா அப்போ ஸ்ரீபெதும்புதூர் ல வேலை முடிஞ்சி திரும்பறார் நீங்க சொன்னவற்றை அப்படியே அவர் சொல்ல கேட்டிருக்கன் ..அப்போ ஜுனியர் விகடன் நக்கீரன்லாம் பாஸிடிச்சி இன்னும் நடுங்கிருக்கேன்

      நீக்கு
    3. நிறைய கமெண்ட்ஸ் removed by authorஅனு வருது. நிறைய மிஸ்டேக் வருது. யாரோ(?) கங்கணம் கட்டிட்டு அவங்களைவிட நீங்க ரொம்ப மிஸ்டேக் விடணும்னு வயிரவர்கிட்ட வேண்டிக்கிட்டிருப்பாங்களோ? கேனடால வயிரவர் கோவில் இருக்கா என்ன? இருந்தாலும் இதுவரை வேண்டிக்கிட்ட ஒண்ணையும் செய்தமாதிரியும் தெரியலையே

      நீக்கு
    4. ஹா ஹா ஹா.. தெய்வம் நின்று கொல்லுமாமே:) ஹையோ நேக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊ:).

      நீக்கு
  17. ராஜீவ் காந்தியின் கொலை கண் முன் அப்படியே நின்றது. பெயர்களை மட்டும் மாற்றி நிகழ்வுகளை உங்கள் கற்பனைக்கு அழகாக விட்டிருக்கிறீர்கள் நெல்லை தமிழன்! அந்த நாளை மறக்க முடியுமா? அந்த அதிகாலை நேரத்தை? அந்த விமானம் ஓடுபாதையில் ஓடி நின்றது என்று முடிவு கௌதம் ஸார் கொடுத்திருந்தபடி மற்ற இரண்டுடனும் தொடர்புபடுத்தி முடித்ததும் அருமை. முடிவின் இறுதியில் என் மனம் நினைத்தது அந்த விமானத்துள் தலைவர் இருக்கக் கூடாது என்று. இன்னொரு தலைவரின் சாவு இப்படி நிகழ வேண்டாம் என்றும் தோன்றியது....இதுவே உங்களுக்கு வெற்றியல்லவா?!!!!!!

    அருமையாக எழுதியுள்ளீர்கள் நெல்லைத் தமிழன், பாராட்டுகள், வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஞ்சத்தனம் இல்லாமல், குறைகள் இருந்தபோதும் பாராட்டும் இயல்பு. நன்றி கீதா ரங்கன்.

      நீக்கு
  18. சொல்லவிட்டுவிட்டேன். x மார்க் போட்டு கட்டம் மட்டுமே என் மொபைலில் தெரிந்தது. படம் என்று நினைக்கிறேன் ஆனால் பார்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  19. விதி வலையது தலைப்பு அருமை! அப்படி என்றால் அவர் தப்பித்தார் என்றும் கொள்ளலாமோ நெ த? இல்லை விதி வலையது என்றால்.....உண்மை நிகழ்வுதானா?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி வலியது. தப்பிக்க முடியாது. வராஹமிகிர்ர் கதை உங்களுக்குத் தெரியும்தானே. தொண்டர்களுக்கு தலைவரைப் பார்க்கும் மகிழ்ச்சி. அவர்களுக்குத் தெரியுமா இன்னும் 1 1/2 மணி நேரத்தில் விடிவெள்ளி மறையப்போகிறது என்று?

      நீக்கு
  20. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை 'நடந்த' நிகழ்வுகளை வெளிப்படையாகவே தொட்டுச் சென்றது தான் கதைக்கான பலவீனமாக அமைந்து விட்டது. ஆனால் வாசகர்களின் வாசிப்பு இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று தெரிகிறது. (நெ.த.வின் அந்த முன்னுரைக்குப் பின்னும்!)

    இருந்தும் கட்டக்கடைசியாக Thulasidharan சொல்லும் வரை வாசித்தவர்கள் நடந்த நிகழ்வின் பிரதிபலிப்பை உணராது இருந்தது இன்னொரு ஆச்சரியம். அவர் சொன்னதற்கு முன்னான கீதாம்மாவின் பின்னூட்டம் நடந்த நிகழ்வு என்று மேம்போக்கானது. எந்த நிகழ்வு என்று துளசி சார் சொல்லித்தான் வெளிப்படையாகிறது.

    ஊர் பெயரை மாற்றியிருக்கலாம். பெண்ணை ஆணாக்கியிருக்கலாம். பெல்ட் சமாச்சாரத்தை சுத்தமாக கைகழுவி விட்டு வேறு வழி யோசித்திருக்கலாம்.

    இந்த மாதிரியான கதைகளுக்கு நிகழ்வுகளை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தாமல் அந்த நிகழ்வு தான் என்று தெரியப்படுத்துவது தான் கதை வார்ப்புகளின் உச்சமான சிறப்பாகிப் போகும்.

    குழப்பமில்லாத நேரேஷன் நெல்லைத் தமிழனுக்கு அவர் ஊர் அல்வாவாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் விரைவில் பதில் எழுதுவேன். உங்கள் பின்னூட்டம் நல்ல அறிவுரை. ஶ்ரீராம் "வரலாறு" என்று சொன்னபோதும், நான், நிறைய "விலகி" எழுதியிருக்கிறேனே என்று நினைத்தேன்.அப்புறம் எனக்கே புரிய ஆரம்பித்தது. ஆனாலும் வரிகள் என்ற கண்டிஷனினால் கதை பாலிஷ் செய்யப்படவில்லை. I appreciate and value your feedback. நன்றி.

      நீக்கு
    2. உங்கள் விமரிசனம் உண்மை. பட்டவர்த்தனமா எழுதறது வரலாறு அல்லது diary. ஶ்ரீராம் இதைத்தான் சொன்னார். கற்பனை கதையை வெறும்ன நடந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கொண்டுபோய் கோர்த்துவிட்டுட்டு மீதி எல்லாம் வாசகர்கள் ஊகிக்கும்படி இருக்கணும்னு. நன்றி ஜீவி சார்.

      நீக்கு
  21. ஜி.வி. சார் சொன்னது போல இத்தனை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அப்படி இருந்திருந்தால், கடைசி வரிகளை இன்னும் கொஞ்சம் ரசித்திருக்க முடியும். கதையில் விரவியிருந்த சோகம் உங்கள் வெற்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுமதி வெங்கடேசுவரன். விரவியிருந்த சோகம் என் மனத்தில்இருந்து வந்தது.

      நீக்கு
  22. நீங்கள் வரைந்த படம் மிக அழகு. நெல்லைத்தமிழன்.
    மிக மிக ஜாக்கிரதையாக சம்பவங்களைக் கோர்த்து
    அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். சுரீல் என்று பயம் மிகுகிறது.

    எத்தனை அழகான முகம். சாத்வீகம்.
    அரசியலுக்கு வந்திருக்கவே வேண்டாம். அருமையான எழுத்து மா. நன்றாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்சி வல்லி சிம்ஹன் அம்மா. படம் நன்றாக வந்தது. உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  23. புள்ளிகளை இணைப்பது தெரிந்தாலும் இணைக்கும் சாமர்த்தியம் ரசிக்கும் விதத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை சார். உங்கள் பின்னூட்டத்துக்கு. உற்சாகம் அளிக்கிறீர்கள்.

      நீக்கு
  24. இன்றுதான் உங்கள் பின்னூட்டங்கள் பார்த்தேன். எந்தப் பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லாமல் இருக்கக்கூடாது என்பது என் பாலிஸி. தாமதத்துக்கு Sorry.

    பதிலளிநீக்கு