செவ்வாய், 20 நவம்பர், 2018

பாசுமதி - ரேவதி நரசிம்ஹன்முன்குறிப்பு :


நம்ம ஏரியாவுக்கான கதைக் கரு கொடுப்பதில் கவுதமன்ஜியை மிஞ்சி யாரும் கிடையாது.  சுவையான பாத்திரங்களை, அவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே தலைப்பை உருவாக்கி விட்டார். 

வாழ்த்துக்கள்.

நாமும் அதை ஒட்டியே எழுதலாம் என்று ஆரம்பிக்கிறேன்.

லஸ் விநாயகரே துணை.

==================================================================================================================

வியாழன், 15 நவம்பர், 2018

கௌலாப் புட்டு.


ஆமாம், ஆமாம்!  என்னுடைய கண்டுபிடிப்பு. 

கௌலாப் புட்டு!   GOU LAB PUTTU.
==========================================

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை  : 8  மேசைக்கரண்டி.(Fried gram.)

அரிசிமாவு : நான்கு மேசைக்கரண்டி. (Rice flour.)

துருவிய தேங்காய் : நான்கு மேசைக்கரண்டி. (Desiccated coconut.)

பாரீஸ் அம்ரித் பூரா சர்க்கரை : ஐந்து மேசைக்கரண்டி. (Bura sugar) 

Image result for fried gramImage result for rice flourImage result for desiccated coconutImage result for parrys amrit sugar

ஏலக்காய் : நான்கு அல்லது ஐந்து. உள்ளே உள்ள ஏல அரிசியை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். (தண்ணீர் சேர்க்கவேண்டாம். )

மேற்கண்ட நான்கு பொருட்களையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். Dry mix.

சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கலக்கியவாறு, இட்லிமாவு பதத்திற்குக் கொண்டுவரவும். 

இட்லித்தட்டில் எண்ணெய் தடவி, கலவை மாவை இட்லிகளாக ஊற்றி, இட்லி குக்கரில், வேகவிடவும். வழக்கமான இட்லி வேகும் நேரம்தான். 

ஆறிய பின்பு, அந்த இட்லிகளை எடுத்து, அப்படியே விண்டு அல்லது உதிர்த்துச் சாப்பிடலாம். 

இது சுவையான காலை உணவு. 


செய்து, சுவைத்துப் பார்த்து, கருத்து கூறுங்கள். 

===========================================


ஞாயிறு, 11 நவம்பர், 2018

கதைக்கான கரு : பாசுமதி.


பாசுமதி !

இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் :
பா : பாசு என்கிற பாஸ்கரன் 'எங்கள் பாங்க்' மேனேஜர், சுமதி மீது ஒரு கண்.

சு : சுமதி , கதாநாயகி. பாங்கில் பணிபுரியும் அழகிய, இளம்பெண். 

ம : மதிவதனன் :  சுமதியை காதலிக்கும் பாங்க் அலுவலர்.
                                  
தி : தினேஷ்   பாங்குக்கு மாதம் ஒருமுறை மட்டும் வருகின்ற பணக்கார கஷ்டமர். இவர் முக சாயல், பாஸ்கரன் போலவே இருக்கும். கிட்டத்தட்ட பாஸ்கரன் டபிள் ஆக்ட் பண்ணுகிறாரோ என்ற சந்தேகம் வரலாம். அந்த அளவுக்கு உருவ ஒற்றுமை. 

மேற்கண்ட நான்கு பேருமே திருமணம் ஆகாதவர்கள்.    

பாசுவும் மதிவதனனும், தினேஷின் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, சுமதியைக் கவர திட்டம் இடுகிறார்கள். 

+++ அதாகப்பட்டது, பாஸ்கரனுக்கு மதிவதனன் வில்லன், மதிக்கு பாஸ்கரன் வில்லன். சுமதியை எப்படியாவது தன்னவள் ஆக்கிக்கொள்ள - ஒருவரை ஒருவர் குழிபறிக்க, தினேஷை உபயோகப்படுத்திக்கொள்ள திட்டம் இடுகிறார்கள்.

என்ன திட்டம்?

சுமதி யாரைக் கல்யாணம் செய்துகொள்கிறாள்? 

அதெல்லாம் நீங்க புனையவேண்டிய கதை.

தொடர்கதையோ / சிறுகதையோ,  

யார் யார் எழுதப்போகிறீர்கள் என்பதை, பின்னூட்டத்தில் பதிந்துவிடுங்கள். 

எல்லோரிடமுமிருந்தும் கதைகள் வந்து சேரும்வரை, நாங்க பொறுமையாகக் காத்திருப்போம்! 


===============================================

திங்கள், 5 நவம்பர், 2018

'கௌ'லாப் ஜாமூன்.இது என்னுடைய கண்டுபிடிப்பு. Gou_Lab Jamoon. 

நீங்களும் செய்து, சுவைத்துப் பாருங்கள். 

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை:  100 கிராம்.

(Nestle Everyday போன்ற ) பால் பவுடர் : 100 கிராம்.

ஏலக்காய் : பத்து எண்ணிக்கைகள். 

தயிர் : ஆறு தேக்கரண்டி. 

சர்க்கரை : ஒரு கப். 

சுத்தமான தண்ணீர் : ஒரு கப். 

நல்லெண்ணெய் : 100 மி லி +

தயார் செய்யும் நேரம் : அதிகபட்சம் முக்கால் மணி நேரம்.

==================================

முதலில், ஏலக்காய்களை உரித்து, அதன் உள்ள கருப்பு நிற அரிசிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள். 

பொட்டுக்கடலையை, ஏல அரிசி சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 

பொட்டுக்கடலை மாவு ஒரு கப், பால் பவுடர் ஒன்றேகால் கப் (NOTE : BY VOLUME is mentioned here. So take the powders accordingly, from the powders you have.)  என்ற அளவில் இரண்டு மாவையும் சேர்த்து, நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக்கூடாது. 

நன்றாகக் கலந்த கலவையை, சிறிது சிறிதாக தயிர் சேர்த்து, பிசையுங்கள். எச்சரிக்கை : தயிரை சிறிது சிறிதாகக் கலக்கவேண்டும். இல்லையேல் கலவை தோசைமாவு பதத்திற்குப் போய்விடும். நமக்கு வேண்டியது, சப்பாத்தி மாவு பதம். இந்தப் பதம் வந்ததும், மாவுக் கலவை, கை விரல்களில் ஒட்டிக்கொள்ளும். கவலைப் படவேண்டாம். கலவையை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போ இரும்புச் சட்டியை காஸ் ஸ்டவ் சிறிய பர்னர் மேல் ஏற்றி, ஸ்டவ்வைப் பற்றவைத்து, இரும்புச் சட்டியில், நல்லெண்ணெய் ஊற்றவும். 

எச்சரிக்கை : எண்ணெய் அதிகம் சூடாகிவிடக்கூடாது. காஸ் ஸ்டவ்வை சிம்மர் நிலையிலேயே எரியவிடுதல் அவசியம். 

எண்ணெய் பொரிக்கின்ற அளவுக்கு சூடானதும், அதில் பொ.க.மா + பா ப + த கலவையை, கையில், சூடு இல்லாத (!) சாதாரண நல்லெண்ணையை (மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்காக ) விரல்களில் தொட்டுக்கொண்டு, மொழு மொழுவென்று சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் ஒவ்வொன்றாக சிவக்கப் பொரித்து எடுக்கவும். எச்சரிக்கை : உருண்டைகள் கிட்டத்தட்ட பத்து நொடிகளுக்குள் வெந்து உப்புச் சீடை கலருக்கு வந்துவிடும். (அதிக நேரம் எண்ணெயில் பொரிந்தால், சீடை கலர் போய், சிவந்து, அதற்கப்புறம் பழுப்பு நிறம், பின் கருப்பு நிறம் ஆகிவிடும். அந்தக் கருப்பு வண்ண கௌலாப் ஜாமூன்களை அப்பாவிக் கணவர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்பதை அறியவும்

எண்ணெய் அதிகம் சூடாகிவிட்டால், அவ்வப்போது, ஸ்டவ்வை ஆஃப் செய்து பொரிக்கும் வேலையைத் தொடரவும். 

******
ஊசிக் குறிப்பு : 
====> தயிர் சேர்த்து மாவு பிசைதலும், கலவை உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுப்பதும் மிகவும் கவனமாகச் செய்யவேண்டிய விஷயங்கள்.
******

அப்புறம் ஜீரா ரெடி செய்வது உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் 

ஒரு பங்கு (By Volume - not by weight) தண்ணீர் - உதாரணமாக நூறு மி லி தண்ணீரில்  நூறு மி லி சர்க்கரை சேர்த்து, அடுப்பில் குறைந்த தீயில், சூடாக்கவும். சர்க்கரை எல்லாம் கரைந்தவுடன், ஜீராவை அடுப்பிலிருந்து இறக்கவும், (எச்சரிக்கை : ஜீராவை அதிக நேரம் அடுப்பில் வைக்கக்கூடாது. கம்பிப்பதம், பாகுபதம் எல்லாம் தேவை இல்லை. ) சூடாக இருக்கும்போதே அதில், பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும். அவ்வளவுதான். மேட்டர் ஓவர். 

அந்த கௌலாப் உருண்டைகள், ஆறு / ஏழு மணி நேரமாவது ஜீராவில் ஊறட்டும். 

நீங்க போய் சீரியல் பாருங்க. 

பிறகு கௌலாப் ஜாமூன் எப்படிச் சாப்பிடுவது என்று உங்களுக்கு எல்லாம் சொல்லாமலே தெரியுமே! 

செய்து பார்த்து, சுவைத்துப் பார்த்து எழுதி அருளியவர் : கௌதமன். 

நன்றி!

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!

=============================================புதன், 31 அக்டோபர், 2018

வட்ட வட்ட தோசை சுட்டு ....


தோசை ஏன் வட்டமா இருக்கு ? யாரும் சதுர தோசை சுட முயற்சிக்கல்லியா ? கேள்வி கேட்டவர் ஏஞ்சல். 

பதிலும், கதையும் இங்கே!

=======================================

தோசை, முதலில் சதுர வடிவமாகத்தான் இருந்தது. 

காரணம் என்ன என்றால், தோசைக்கல் செய்கின்ற தொழிலாளி, இரும்பை செஞ்சூடு பதத்திற்குக் கொண்டுவந்து, தோசைக்கல் உருவாக்கும்பொழுது, எவ்வளவு முயன்றாலும் அதை ஒழுங்கான வட்ட வடிவிற்கு கொண்டுவர இயலாது. ஆனால், சதுர வடிவாக சுலபமாக, தட்டித் தட்டி உருவாக்க இயலும். 

Simple anvil and hammering work.

  
(சதுர தோசைக்கல்லில், சதுர தோசை வார்ப்பது சுலபம். )

=================

இது சம்பந்தமாக, இதோ ஒரு கற்பனைக் கதை! 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவிலிருந்து அதிரானா மியாவ்ச்காவ் என்னும் ரஷ்ய உணவு விஞ்ஞானி, அங்கே விளைந்த உளுந்தாவ்ச்காவ் என்னும் தானியத்தை நிறைய எடுத்துக்கொண்டு, பெரும்பயணமாக, சோழ நாட்டில் உள்ள இட்டளியூர்  என்னும் ஊருக்கு வந்தார்.  இட்டளியூரில்  நெல் நிறைய விளையும். அந்த ஊர்,  இருந்த குறுநிலம் இட்லிபுரி. இட்லிபுரியை ஆண்டு வந்த மன்னனின் பெயர் சோற்று மாக்கான். 
அதிரானா மியாவ்ச்காவ், சோற்று மாக்கானைப் பார்த்து, தோசை (அப்போ அதற்கு, அதிரானா வைத்த பெயர் தோச்காவ் என்பதாகும்) செய்யும் முறை பற்றி எடுத்துக் கூறி, பரிசு பெற்றுச் செல்ல வந்திருந்தார்.   

அதற்கு முன்பு, தான் கண்டுபிடித்த பலகாரத்தை, sample production செய்து பார்க்க எண்ணி, இரும்பு வேலை செய்யும் தொழிலாளியிடம், தனக்கு வட்ட வடிவ இரும்புக் கல்  வேண்டும் என்று கேட்டிருக்கிறார். எதற்கு என்று கேட்ட இரும்புத் தொழிலாளியிடம், முழு விவரங்களையும் கூறினார் அதிரானா. 

அந்த இரும்புத் தொழிலாளி, அதிரானாவின்  காலில் விழுந்து, " ரஷ்ய விஞ்ஞானி அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள். உங்கள் கண்டுபிடிப்பான தோசை என்பதை, தயவுகூர்ந்து, சதுர வடிவமானது என்று மன்னருக்கு அறிமுகம் செய்யுங்கள். வட்ட வடிவில் ஆனது என சொல்லிவிட்டால், வட்ட தோசைக் கல்  வேண்டும் என்று அரண்மனை தொடங்கி, ஆண்டிகள் மடம் வரை எல்லோரும் ஆர்டர் தருவார்கள். தட்டிக் கொட்டி, ஒரு சரியான வட்டக் கல் உருவாக்கும் நேரத்தில், பன்னிரண்டு சதுர தோசைக்கல்  என்னால் சுலபமாக உருவாக்க முடியும். என்னுடைய புரோடக்டிவிடியை இம்ப்ருவ் செய்ய நீங்க உதவுங்க" என்று கேட்டுக்கொண்டார். அதோடு, அதிரானாவுக்கு ஒரு சதுர வடிவ தோசைக்கல்லை செய்து கொடுத்து, அதனுடைய அடிப்பக்கத்தை, (நெருப்புப்பக்கம்) அடையாளம் கண்டுபிடிக்க, சிவப்பு வர்ணம் அடித்துக் கொடுத்தாராம். 

(அதை ரஸ்யாவுக்குக் கொண்டுபோன அதிரானா, அதை வைத்த இடம்தான்  தற்காலத்தில் RED SQUARE - MOSCOW என்று அழைக்கப்படுகிறது.) 

அதிரானாவும் இதற்கு ஒப்புக்கொண்டு, சோற்று மாக்கானிடம் தோச்காவ் செய்முறை பற்றி விளக்கமளித்தபோது, சதுர வடிவாகவே செய்து காட்டினார். 

மிகவும் சந்தோஷமடைந்த சோற்று மாக்கான், அதிரானாவிடம், "ரஷ்ய விஞ்ஞானியே! உங்கள் கண்டுபிடிப்பு, அதி அற்புதமானது! நிறைய பரிசுகளை, படகில் ஏற்றி, தேம்ஸ் நதி வழியாக உங்க ஊருக்கு அனுப்புகிறேன். இனி வருகின்ற ஜன்மங்களில் எல்லாம், நீவிர் விஞ்ஞானி, செஃப், ஞானி என்று போற்றப்படுவீர்" என்று புகழ்ந்துரைத்தான். 

===========================

அது சரி, அப்புறம் சதுர வடிவ தோசை எப்போது வட்ட வடிவமானது?

சோற்று மாக்கான், தன் அரண்மனை சமையல்காரனான, அச்சுதனை அழைத்து, அதிரானா சொன்ன முறைப்படி, தோசைகள் வார்த்துக் கொடுக்கச் சொன்னான். அச்சுதன், அவ்வாறே அரிசி உளுந்து ஊறவைத்து, ஐந்து மணிநேரம் கழித்து அதனை அரைத்து, உப்புச் சேர்த்து, எண்ணெய் தடவி, முறுகலாக சதுர தோசைகள் செய்தான். 

அரசன் சாப்பிடுவதற்கு முன்பு, தோசை என்னும் அந்த வஸ்து சுவை எப்படி இருக்கின்றது என்று பார்க்க, அச்சுதன் சதுர தோசையின் ஒரு கார்னரைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டான். 'ஆஹா ! என்ன சுவை, என்ன சுவை.' இன்னும் ஒரு கார்னர், இன்னொரு கார்னர் என்று நான்கு கார்னர்களையும் சாப்பிட்டுவிட்டான். இப்போ தோசை கார்னர்கள் இழந்து, வட்டவடிவமாகி விட்டது. 

எல்லா தோசைகளின் கார்னர்களையும் கபளீகரம் செய்த அச்சுதன், வட்ட வடிவ தோசைகளை, மன்னனிடம் கொண்டு சென்று கொடுத்தான். 

சோற்று மாக்கான், "அச்சுதா ! ஏன் சதுரவடிவில் தோசை வார்க்கவில்லை? " என்று கேட்டான். 

அச்சுதன் அதற்கு, "மன்னர் மன்னா - இதுதான் வார்க்க சுலபமான வடிவம், சுவையும் அதிகமாக இருக்கும்" என்றான். 

சோதித்துப் பார்த்த சோற்று மாக்கான், " ஆம்! உண்மைதான்! என்ன சுவை, என்ன சுவை " என்று பாராட்டினான்! 

இனி தனக்கு அளிக்கப்படும் தோசைகள் வட்டவடிவிலேதான் இருக்கவேண்டும் என்று ஆணையிட்டான். 

அதோடு முடிந்துவிட்டதா கதை?

இல்லையே! 

அச்சுதனுக்கு, அஞ்சலி என்று ஒரு தங்கை. அச்சுதன் தோசை கார்னர்களைக் கபளீகரம் செய்ததைக் கண்ட அஞ்சலி, தனக்கும் சில கட்டிங் வேண்டும் என்று கேட்டாள். தரவில்லை அச்சுதன். அப்புறம் என்ன? சோற்று மாக்கானிடம் போட்டுக்கொடுத்துவிட்டாள் அஞ்சலி. 

சோற்று மாக்கான் அச்சுதனை இழுத்து வரச் சொல்லி, விசாரணை செய்தான். அச்சுதன் உண்மையை ஒப்புக்கொண்டான். 

அச்சுதனை மன்னித்து அனுப்பிய சோற்று மாக்கான், அன்று முதல், தோசைகள் வட்ட வடிவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். வட்ட வடிவில் இருக்கும் தோசையின் எந்த ஓரத்திலும், யாரும் ஒரு துளி தோசை கூட, தடயம் இல்லாமல் பிய்த்துத் தின்றுவிடமுடியாது என்பதால்தான் சோற்று மாக்கான் இந்த சட்டம் போட்டான். 

அந்தக் காலத்தில் தோசைக்கல் சதுர வடிவில் இருந்தாலும், தோசைகள் வட்ட வடிவில் இருந்ததற்கு இதுவே காரணம்! 

============================================
                        

வியாழன், 18 அக்டோபர், 2018

சு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன்.


(ஆசிரியருக்கு ! 

நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு.  இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. 


இதை வெளியிட்டு, சுந்தரியிடமிருந்தும், நெல்லைத்தமிழனிடமிருந்தும்  தப்பிச்சுடுங்க! 'குரோ குறு')

================================================================

குணா சீற்றமாக பேசினான். " ஏன் அப்பா, ஏன்? எதுக்கு என்னை வேலை மெனக்கெட்டு ஒரு வாரம் ஓசிச் சோறு சாப்பிட அனுப்பினே? சுந்தரியை ஏன் உங்களுக்கெல்லாம் பிடிக்கலை? அவளுக்கென்ன குறைச்சல்?" 

மூர்த்தி கூறினார். "குறிப்பாக இதுதான் காரணம், அதுதான் காரணம் என்றெல்லாம் சொல்லமுடியாது. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அதிருப்தி இருக்கு. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேள். சுந்தரி இங்கே வந்த முதல் நாளே ... "

தொலைபேசி மணி அடித்தது. மூர்த்தி அதை எடுத்தார். " ஹலோ - ஆமாம் குணா வீடுதான். நீங்க? ஓ நீங்களா? சொல்லுங்க சார்! அட! அப்படியா! சுந்தரிக்கு எங்கள் எல்லோரையும் பிடித்திருக்கிறதா! சந்தோஷம். நான் வந்து ..... அது ..... சொல்கிறேன் கேளுங்க ...... சுந்தரியை எங்களுக்குப் ... " 

அவசரமாக அருகே ஓடிவந்த குணா, மூர்த்தி கையிலிருந்த ரிசீவரை வெடுக்கெனப் பறித்து, "பிடிச்சுருக்கு" என்றான். தொலைபேசி மறுமுனையில் சத்தம் எதுவும் வரவில்லை. 

"தாங்க்ஸ் மாப்பிள்ளே " என்று சொல்லியபடி கையில் உள்ள மொபைலை உயரே தூக்கிப் பிடித்தவாறு வாசல் பக்கத்திலிருந்து உள்ளே வந்தார் சுந்தரி அப்பா. 

குணா வீட்டில் உள்ள எல்லோரும் சிரித்தபடி, "வாங்க சம்பந்தி!" என்றார்கள். 

குணா, மூர்த்தியிடம், "இது என்னப்பா டிராமா? " என்று கேட்டான். 

மூர்த்தி: "நடந்ததை எல்லாம் சுருக்கமாச் சொல்றேன் கேட்டுக்கோ. உன்னுடைய பாட்டியும், சுந்தரியின் பாட்டியும் பள்ளித்தோழிகள். ஒருநாள் எதேச்சையாக கோவிலில் சந்தித்திருக்கிறார்கள். ஒருவர்க்கொருவர் அவர்களின் குடும்பம் பற்றிப் பேசிக்கொள்கையில் அவர்களுக்கு உங்க ரெண்டு பேருக்கும் முடிச்சுப்போட ஐடியா வந்துருக்கு. நீ ஆபீஸ் சார்பில் திருநெல்வேலி டூர் போயிருந்தபோது, அவர்கள் எல்லோரும் நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. எங்களுக்கு அவர்கள் எல்லோரையும் பார்த்தவுடனே பிடித்துப் போயிற்று. ஜாதகம், நியுமராலஜி என்று எல்லாவற்றிலும் பொருத்தம் அபாரமாக இருந்தது."

"அப்புறம்?" 

"எல்லாம் பொருந்தியிருந்தாலும், எங்களுக்குத் தெரியும், நீ ஒரு கொனஷ்டை, நாங்கள் பிடித்திருக்கு என்றால், நீ பிடிக்கவில்லை என்பாய், நாங்க அழகு என்று சொன்னால், நீ இல்லை என்று வாதாடுவாய். கன்னி ராசி ஆம்பிள்ளை அப்படித்தான் இருப்பான் என்று உன் தாத்தா சொல்லுவார். அதனால, இந்த நாடகம் ஏற்பாடு செய்தோம். இப்போ உன் வாயாலேயே பிடிச்சிருக்குன்னு சொல்ல வெச்சுட்டோம் " 

"சமையல், சு டோ கு உட்பட, உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று சுந்தரியிடம் சொன்னோம். 'கவலைப்படாதீங்க மாமா, நான் பாத்துக்கறேன் என்று சொன்னாள்" 

" அப்போ சமையல் சமாச்சாரம் எல்லாம் நாடகமா? " 

"இல்லைடா அது மட்டும் நாடகம் கிடையாது. அவர்கள் வீட்டில் எல்லோருமே நன்றாகச் சமைப்பார்கள்." 

"இந்த நாடகத்தில் சுந்தரிக்கு எவ்வளவு தெரியும்? "

"இதுக்கு கதை, வசனம், டைரக்ஷன் எல்லாமே சுந்தரிதான்!"

" அட ராக்ஷஷி!" என்றான் குணா .

==================================
டும் டும் டும் டும் ..... 

==================================

கல்யாணத்திற்குப் பிறகு, மறுநாள், சமையலறையில் வேலையாக இருந்த சுந்தரியிடம், ஞாயிறு ஹிந்து பேப்பரை எடுத்துக்கொண்டு ஓடிவந்தான் குணா. 

" சுந்தரி, சுந்தரி ... நீ சு டோ கு சால்வ் செய்வதில் கெட்டிக்காரி என்பதை உன் பீரோவில் இருந்த பேப்பர்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். இந்தா ஹிந்து பேப்பர். நாம ரெண்டு பேரும் இதை சால்வ் செய்யலாம் வா !"

"எண்பத்து ஒரு கட்டங்களில், அவர்கள் எவ்வளவு கட்டம் எண்கள் கொடுத்திருக்கிறார்கள்? "

" இருபத்தேழு. "

" நீங்க எவ்வளவு பூர்த்தி செய்தீர்கள்? "

" எட்டு. "

" அட! அவ்வளவா ! " 

" என்ன சுந்தரி இவ்வளவு ஆச்சரியப்படுகிறாய் நீ மீதி இருக்கின்ற கட்டங்கள் எல்லாவற்றையும் அழகாக பூர்த்தி செய்வாயே!!" 

" சேச்சே இதிலெல்லாம் டைம் வேஸ்ட் செய்யமாட்டேன். சுலபமாகத் தெரிந்த மூன்று நான்கு எண்களைப் பூர்த்தி செய்வேன். பிறகு, மறுநாள் பேப்பரில் வருகின்ற விடையைப் பார்த்துப் பூர்த்தி செய்வேன். "

"அடிப்பாவி! இதுவும் உன் டுபாக்கூர் வேலைதானா! சு டோ கு இன் சுமேரியன் கல்ச்சர்னு உன் பீரோவுல புத்தகம் பார்த்தவுடனேயே நான் செக் செஞ்சிருக்கணும்!  சமையல் எல்லாம் அப்படித்தானா? அதில் என்ன டுபாக்கூர் டெக்னிக் சொல்லிடு. "

" அது மட்டும் டுபாக்கூர் இல்லை. எங்க வீட்டுல எல்லோரும் நல்லா சமைப்பாங்க. எனக்கும் தெரியும். மேலும் நான், எங்கள் ப்ளாக் வலைப்பதிவில், திங்கக்கிழமைப் பதிவில், நெல்லைத்தமிழன் என்று ஒரு அங்கிள் ........."

" ஸ்டாப், ஸ்டாப், ஸ்டாப் ! இது நம்ம ஏரியா. இங்கே எங்கள் ப்ளாக் பத்தி எல்லாம் சொல்லி வெறுப்பேற்றாதே " என்று சொல்லியபடி அருகே வந்த குணபதி, சுந்தரியைக் ....................

(முற்றும்) 
                              

புதன், 17 அக்டோபர், 2018

சு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.


சு வீ 

குணா ஞாயிறு பேப்பரில், சு டோ கு பகுதி உள்ள பக்கத்திற்கு வந்தவுடன், அவனுக்கு, தன் வீட்டில் நேற்று, சனிக்கிழமைப் பேப்பரில், சு டோ கு பகுதியில், தான் தடுமாறிய கட்டங்கள் ஞாபகம் வந்தது. இன்றைய பேப்பரில், சனிக்கிழமை சு டோ குவின் சரியான எண்கள் கொடுக்கப்பட்டிருந்ததும், அதையும், தான் தடுமாறிய இடங்களையும் சரிபார்க்க, சுந்தரியின் புத்தக பீரோவில் இருந்த சனிக்கிழமைப் பேப்பரை எடுத்தான். சு டோ கு பக்கத்தை எடுத்து பார்வையிட்டவன், திடுக்கிட்டான். 


எல்லா எண்களும் அழகாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தது! இது என்னடா அதிசயம்! வெள்ளிக்கிழமைப் பேப்பரை எடுத்துப் பார்த்தான்! அதே அதே! எண்பத்தொரு எண்களும் அவனைப்பார்த்துச் சிரித்தன!

நடுவிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துப்பார்த்தால், அங்கும் அதே நிலை! 

அட! இந்த சுந்தரி, சூப்பர் சுந்தரிதான் போலிருக்கு! தான் எவ்வளவுதான் முயன்றாலும், சு டோ குவில் நாலு ஸ்டார் / அஞ்சு ஸ்டார் டிஃபிகல்டி தினங்களில், எங்காவது ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நின்றுவிடும். இவள் இப்படி சிக்சர் அடிக்கும் சுந்தரியா இருக்காளே! 

குணா சு டோ கு சுந்தரியை, குண(ணா)சுந்தரியாக்கிக் கொள்ள அநேகமாக முடிவுசெய்துவிட்டான்! 

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை, காலை உணவு, அலுவலகம், மாலையில் சூப்பர் காபி, அறுசுவை இரவு உணவு என்று ராஜபோகமாகக் கடத்தினான். மதிய உணவு மட்டும் அலுவலகக் கேண்டீனில். எல்லா நாட்களிலும், வீட்டில் உள்ள எல்லோருமே அவனுடன் சகஜமாக, இயல்பாகப் பேசினார்கள். அவன் பேசியவைகளை ரசித்தார்கள்.

===============================

கு வீ 

குணா வீட்டில், சுந்தரியிடம் வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் சினேகபாவத்துடன் நடந்துகொண்டார்கள். சுந்தரி காலை உணவு தயாரித்து, மற்றவர்களோடு சேர்ந்து சாப்பிட்டு, அலுவலகம் சென்று வந்தாள். சமைப்பது, காபி போடுவது எல்லாவற்றிலும் அவளுடைய நுணுக்கங்களை, குணாவின் அம்மாவுக்கும், பாட்டிக்கும் சொல்லிக்கொடுத்தாள்! அவர்கள் செய்ததை சாப்பிட்டு புகழவும் செய்தாள். 

இரவு தூக்கம் வராத நேரங்களில், புத்தகம் படிப்பது, சு டோ கு போடுவது என்று பொழுது போயிற்று. 

==================================

அடுத்த ஞாயிறு காலையில், அவரவர்கள் வீட்டில் அவரவர்கள் வந்து சேர்ந்தார்கள். 

மூர்த்தி, குணாவிடம் கேட்டார். " இப்ப சொல்லுடா உன் அபிப்பிராயத்தை" 

" அப்பா எனக்கு சுந்தரி வீட்டாரைப் பிடித்திருக்கு. அவர்கள் சமையல் பிரமாதமாக இருக்கு. அங்கே இருந்த ஒருவாரமும், என்னை மாப்பிளே மாப்பிளே என்று கூப்பிட்டு, எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து அவர்கள் நடந்துகொண்டதில், அவர்களுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே சுந்தரி கதை என்ன? உங்கள் எல்லோருக்கும் சுந்தரியைப் பிடித்திருந்ததா? நீங்க சொல்லுங்க! "

மூர்த்தி, " எங்களுக்கு, சுந்தரியைப் பிடிக்கவில்லை " என்றார். 

(தொடரும்) 
=====================================

(அடுத்த பதிவுல, நிச்சயமா முடிக்கணும்! எவ்வளவுதான் இழுக்கறது! கு கு )

செவ்வாய், 16 அக்டோபர், 2018

சு டோ கு 1 -- குரோம்பேட்டை குறும்பன்.

     
குணபதிக்கு, கோபம் கோபமாக வந்தது! 

சுந்தரி, தமன்னா ஜாடையில் இருந்தது, நெல்லைத்தமிழனுக்கு வேண்டும்னா பிடிக்கலாம்! தன்னுடைய கற்பனைக் கதாநாயகி போல அவளால் ஆக முடியாது. 
அவளுடைய அம்மா ஐம்பது வயதானால் அனுஷ்கா எப்படி இருப்பாளோ அந்த மாதிரி இருக்காங்க. அவள் புருஷன் பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருக்கார். அவங்களுக்கு என்னவோ இந்த விசித்திர புத்தி, விபரீத புத்தி!


              
(அடேய் யாரங்கே? இந்த கு கு அட்ரஸுக்கு ஒரு ஆட்டோ அனுப்புடா !)

ஆனாலும், இந்த அப்பா அம்மாவுக்கு புத்தி எங்கே போயிற்று? அவங்க சொன்ன கண்டிஷனை, அப்படியே பின்பற்றுவோம் என்று சொல்லி, என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்களே!

"போய் தங்கிவிட்டு சொல்வதை, இப்பவே சொல்லிடறேனே, எனக்கு சுந்தரியைப் ...."

" டேய் என்ன சொல்வதாக இருந்தாலும், ஒரு வாரம் கழிச்சு சொன்னால்தான் நாங்க ஏற்றுக்கொள்வோம். உடனே மூட்டையைக் கட்டிகிட்டுப் போ" என்று சொன்னார் மூர்த்தி. "அப்புறம், இன்னொரு சமாச்சாரம். நீ அங்கேயும், சுந்தரி இங்கேயும் இருக்கின்ற இந்த ஒருவாரத்துக்கு, அங்கிருந்து இங்கேயும், இங்கிருந்து அங்கேயும், No phone / mobile calls. பெரியவங்க நாங்க இந்தக் கண்டிஷனையும் கே ஜி ஜி க்குத் தெரியாம போட்டிருக்கோம். இந்த வீட்டிலும், அந்த வீட்டிலும் நடக்கின்றவைகளை அவசரப்பட்டு மற்றவர்க்கு சொல்லி, அதனால அவர்களின் இயல்பான நடத்தை மாறிவிடக்கூடாது என்பதால்தான் இந்தக் கண்டிஷன். புரிஞ்சதா?" 

"நீ எல்லாம் ஒரு அப்பனா ?" என்று மனதுக்குள் பழிப்புக் காட்டியவாறு, சூட்கேசில், ஒரு வாரத்துக்கான உடை, மற்றப் பொருள்களை எல்லாம் அடைத்து எடுத்துகொண்டான் குணபதி.

======================
ஞாயிறு.

" வாங்க மாப்பிளே! இதுதான் சுந்தரியின் ரூம். இங்கேதான் நீங்க ஒருவாரம் தங்க வேண்டும். " பூ வி, வாயெல்லாம் பல்லாக ஒரு ரூமைக் காட்டினார்.

அந்த ரூமில் உலவிய செண்ட் வாசனையே குணபதிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. 'இது என்ன.  கந்தூரி உற்சவ கடைவீதியில் நுழைந்ததுபோல அப்படி ஒரு ஸ்ட்ராங் வாசனை! மைல்ட் செண்ட் எதுவும் பிடிக்காதா சுந்தரிக்கு?' என்று நினைத்துக்கொண்டான்.

அறையில் மூன்று கண்ணாடி பீரோக்கள். ஒன்றில் புடவை பிளவுஸ் எல்லாம் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது பீரோவில் நவீன உடைகள்.

மூன்றாவது பீரோவில் மேலே உள்ள இரண்டு தட்டுகளில், புத்தகங்கள். புத்தகங்களின் தலைப்புகளை  மேலோட்டமாகப் பார்வையிட்டான்.

Test your IQ.
Brain Teasers.
Creativity.
Party Jokes.
Unsolved murders in history.
Forgotten celebrities of nineteenth century.
How to say no.
I am OK you are OK.
You are the universe.
Theory of Relativity.
Su Do Ku in Sumarian culture.

இன்னும் பலதரப்பட்ட  தலைப்புகள் கொண்ட புத்தகங்களை, பிரமிப்போடு பார்த்தான். இதெல்லாம் இவளே வாங்கி படித்தவையா அல்லது எங்காவது சுட்டவையாக இருக்குமா என்று யோசித்தான்.

பீரோவின் கீழ்த்தட்டில் ஹிந்து பேப்பர்கள் கிட்டத்தட்ட ஒரு மாத பேப்பர்கள் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

ஒருகணம் தன்னுடைய வீட்டில், தன் அறையில், புத்தகங்களும் பேப்பர்களும் எப்படி தாறுமாறாக பெட்டி மேல், பீரோவில், கட்டில் மேல் என்று இறைந்துகிடக்கும் என்று நினைத்துப் பார்த்தான்.

காலை உணவு உண்ண, டைனிங் டேபிள் அருகே சுந்தரியின் பெற்றோர் மற்றும் அவர்களின் பெற்றோர் என எல்லோரும் காத்திருந்தனர். குணபதி, அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். அவர்களோடு அமர்ந்து, நடுவில் ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்த இட்லிகளை நோட்டம் விட்டான். சுற்றிலும் சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் என்று வகை வகையான விஷயங்கள்.

" என்ன, எவ்வளவு வேண்டுமோ அதை சங்கோஜப்படாம எடுத்துப் போட்டுக்குங்கோ மாப்பிளே!"

முதலில், தயக்கமாக இரண்டு இட்லிகளை எடுத்துப்போட்டுக் கொண்டான் குணா. கொஞ்சம் சட்னி, கொஞ்சம் சாம்பார் என்று போட்டுக்கொண்டான்.

மிருதுவான இட்லியும், சுவையான சட்னியும், சாம்பாரும் மிகவும் சுவையாக இருந்தன. அப்புறம் இரண்டு இட்லி, மிளகாய்ப்பொடி. இன்னும் இரண்டு... யாராவது தன்னை நோட்டமிடுகிறார்களா என்று பார்த்தான் குணா.

சுந்தரியின் தாத்தாக்கள் இருவரும் அந்தக்காலத்து ஹோட்டல்கள் பற்றி பேசியபடி இட்லிகளை காலி செய்துகொண்டிருந்தார்கள். சுந்தரியின் அப்பா குணபதியிடம், தன் அலுவலகப் பிரதாபங்களை கொட்டிக்கொண்டிருந்தார். நடுநடுவே குணபதியின் வேலை, அலுவலகம் பற்றி சின்னச்சின்ன விசாரணைகள். பாட்டிகளும், சுந்தரியின் அம்மாவும் இட்லிக்கு எந்தக்கடை அரிசி, பருப்பு எல்லாம் உகந்தது என்றும், என்ன விகிதத்தில் எவ்வளவு நேரம் ஊறப்போட்டால் நன்றாக இருக்கும், வெந்தயம் எவ்வளவு போடலாம் என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

காலை உணவுக்குப் பின் தாத்தாக்கள் இருவரும் ஹாலில் அமர்ந்து டிரம்ப் முதல் தெலுங்கானா தேர்தல் வரை தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

பாட்டிகளும், சுந்தரியின் அம்மாவும், சமையல் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். சுந்தரியின் அப்பா, அவர்களுக்கு வேண்டிய காய்கறி நறுக்குதல், தேங்காய் உடைத்தல், துருவுதல் போன்ற வேலைகளை செய்துகொண்டே, ஹால் கிழவர்கள் பேச்சிலும் அவ்வப்போது கமெண்ட் சொல்லிக்கொண்டிருந்தார்.

குணா தன்(?) ரூமுக்கு வந்து அன்றைய ஹிந்து பேப்பரைப் படித்தவாறு தூங்கிப் போனான்.

" மாப்ளே .. எழுந்திருங்கோ. சாப்பாடு தயார் ! " என்ற சு அப்பா குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான்.

காலை உணவு போன்றே மதிய உணவும் பிரமாதமான சுவை. எல்லாவற்றிலும் வேண்டிய அளவுக்கு மேலாகவே ஒரு பிடி பிடித்தான் குணா.

ஆஹா! சுந்தரியைக் கல்யாணம் செய்துகொண்டால், வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டான். கூடவே இன்னும் ஒரு சந்தேகமும் வந்தது. 'சுந்தரிக்கு சமைக்கத் தெரியுமா' என்பதுதான் அது. அதைப் பிறகு கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டான்.  

மாலையில், நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி ஒன்றுக்குக் கூப்பிட்டிருந்ததால், சுந்தரி வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு, இரவு எட்டு மணிக்குள் திரும்பிவிடுவதாகக் கூறிக் கிளம்பினான், குணா. 

இரவு திரும்பி வந்த குணா தனக்காக எல்லோரும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்து மனம் சங்கடப்பட்டான். அவர்களோடு சேர்ந்து இரண்டு சப்பாத்தி, பருப்பு சாப்பிட்டான். 'இவர்களுக்கு எப்படி சப்பாத்தி இவ்வளவு மிருதுவாகவும், சுவையாகவும் செய்யத் தெரிகிறது!' என்று வியந்தான். 
   


அதையும்விடப் பேராச்சர்யம் ஒன்று அங்கே அவனுக்காகக் காத்திருந்தது. 

==========================

குணா வீட்டில் சுந்தரி. 

டி வி சீரியல் எதையும் அவள் பார்க்கவில்லை. " வேஸ்ட் ஆஃப் டைம்" என்றாள். ஆங்கில சேனலில் செய்திகள் மட்டும் இருபது நிமிடங்கள் பார்த்தாள். ஒரே செய்தி திரும்பவும் வந்த நேரத்தில், டி வியிடமிருந்து விடுபட்டு, வேறு வேலை பார்க்கப் போனாள். குணா அறையில் தாறு மாறாகக் கிடந்த புத்தகங்கள், மற்றப் பொருட்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கிவைத்தாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சில புத்தகங்களைப் படித்தாள்.  

சுந்தரியை ஏகத்துக்குப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள், குணாவின் பெற்றோரும், அப்பாவின் பெற்றோரும். 

" இவ்வளவு படிச்ச பொண்ணு, பெரிய வேலையில் உள்ளவள், இவ்வளவு மரியாதையாகப் பழகுகிறாளே! " 

" சமையலறையில் என்னை ஒரு வேலையும் செய்யவிடவில்லை! பம்பரமாட்டமா சுழன்று கிடு கிடுவென எல்லாம் செய்கிறாள்! கேட்டாக்க இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் எல்லாம் என் பொறுப்பு என்று சொல்லி சுறுசுறுவென சமைத்து, எல்லோரையும் டைனிங் டேபிளுக்கு அழைத்து, தானும் சரிசமமாக அமர்ந்து, சாப்பிட்டாள் !"

" ஒவ்வொரு பதார்த்தமும் பிரமாதமாக இருந்தது. அவங்க வீட்டில் எல்லோருக்குமே நன்றாகச் சமைக்கத் தெரியுமாம்!"

இதை எல்லாம், சுந்தரி, பக்கத்தில் உள்ள ஸ்டோருக்குச் சென்றிருந்த சமயம், அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். 

சுந்தரி பக்கத்தில் உள்ள ஸ்டோரிலிருந்து, தானே தேர்ந்தெடுத்த சில பொருட்களை வாங்கி வந்திருந்தாள். தான் வாங்கி வந்திருந்த அரிசியையும் பருப்பையும் மறுநாள் இட்லிக்காக ஊறப்போட்டுக்கொண்டிருந்தாள் சுந்தரி.

மூர்த்தி தன் சந்தேகத்தை சுந்தரியிடமே கேட்டுவிட்டார். 

" எப்பிடி அம்மா இவ்வளவு பிரமாதமாக சமைக்கிறாய்? "

" மாமா, எங்க வீட்டில் அம்மா, அம்மாவின் அம்மா எல்லோருக்கும் நன்றாக சமைக்கத் தெரியும். அப்புறம் நான், 'எங்கள் ப்ளாக்' வலைப்பதிவில் திங்கட்கிழமைகளில் வரும் சமையல் பகுதியையும் விடாமல் படித்து, காப்பி செய்து என் கணினியில் போட்டுவைத்துள்ளேன். நெல்லைத்தமிழன் என்று ஒருவர் பலதரப்பட்ட சமையல் குறிப்புகளை அள்ளி வீசுகிறார். ஆஹா - மனுஷன் பிச்சு உதறிடுவார்! அதை எல்லாம்தான் நான் சமைக்கிறேன்." 
   
சனிக்கிழமை ஹிந்து பேப்பரில் இருந்த சு டோ கு பகுதியில், குணா அரையும் குறையுமாய் விட்டு வைத்திருந்த எண்களை, அழகாக பூர்த்தி செய்தாள். 

திங்கட்கிழமைக் காலையில், சுந்தரி போட்டுக்கொடுத்த காபியைக் குடித்த குணா வீட்டு மக்கள் சொக்கிப்போய்விட்டார்கள்! 

இட்லியும் சட்னியும் மிகவும் பிரமாதம்! காலை உணவுக்குப் பின், தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றாள் சுந்தரி.

(மீதி அடுத்த பதிவில்!)