சனி, 14 அக்டோபர், 2017

வைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)






     பீஷ்மரின் சபதம், தசரதர் கைகேயிக்குக் கொடுத்த வரம் இரண்டுமே மகாபாரதம் மற்றும் இராமாயணத்தின் நிகழ்வுகளுக்கு ஆணிவேர். பல சபதங்கள், உறுதிகள், ரகசியங்கள், வைரக்கியங்கள், சத்யப்பிரமாணங்கள் அடங்கியவையே பல வரலாறுகள். பொன்னியின் செல்வனில் கூட சில சத்யப்பிரமாணங்கள், ரகசியங்கள் கதைப் போக்கை மாற்றுவது போல் நம் சாதாரண மனிதர்களின் வாக்கையிலும் சத்யங்கள், சபதங்கள்,, உறுதிகள், குடும்ப நன்மைக்காக மறைக்கப்படும் ரகசியங்கள், எடுக்கப்படும் முடிவுகள் என்று சில தவறாகி…, வைராக்கியங்கள் என்று எளிதான வாழ்க்கையைச் சிக்கலாக்கி விடுகின்றது. அப்படி ஒரு கருவை, கதையை, என் மனதில் நெ த வின் கண்டிஷன், உணர்ச்சிகள் நிறைந்த குறுநாவல் அளவிற்கு விரித்தது. அதை முடிந்த அளவிற்குச் சுருக்கி இங்குக் கொடுத்துள்ளேன். நெ த மற்றும் கௌதம் அண்ணா, ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி.


வைராக்கியம்

கீதா   ரெங்கன்


“அப்பா போதும்பா! நீங்க தனியா இங்க இருக்கறது. எங்களோட வந்துடுங்க.” ராஜேந்திரன் அப்பாவிடம் இறைஞ்சினான்.


“வேணாம்டா. இங்கேயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்”. அருள்மொழி சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடினார்.


ராஜேந்திரனுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக் கொண்டான். ஆர்த்தி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
‘அடடா! நான் என்னையுமறியாமல் வாய் விட்டுவிட்டேனோ?’ என்றும் அருள்மொழி நினைத்துக் கொண்டார்.


“என்னப்பா இப்படிச் சொல்றீங்க. நீங்க ரெண்டு பேருமே எங்க கூட இருக்கத்தானே கூட்டிட்டுப் போக வந்துருக்கோம். உங்க உடம்பு சரியில்லாத இந்த நேரத்துல அம்மா மட்டும் தனியா உங்களைக் கவனிச்சுக்கறது கஷ்டமில்லையாப்பா கொஞ்சம் யோசிங்கப்பா”


“நாங்க இப்ப அங்க வரதா இல்லை. ஒரு வேளை நான் கண்ண மூடிட்டா? அதுக்குத்தான் அப்படிச் சொன்னேன். அவ்வளவுதான்” என்று கண்ணைத் திறக்காமலேயே பதில்..


“சரி அப்படினா நீங்க இங்க இருங்க. நாங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போறோம்.” என்று ஒரு கொக்கி போட்டான். அம்மா இல்லாமல் அப்பா இருக்கமாட்டார் என்பதால்.


அருள்மொழி கண்களைத் திறந்து ஆர்த்தியைப் பார்த்தார். ஆர்த்தியோ அவரை நேரடியாகப் பார்க்க முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். ஆர்த்திக்கு தன் மாமனாரின் வைராக்கியத்தின் காரணம் தெரியும். ஆனால் அது ராஜேந்திரனுக்கு தெரியாது. இங்கு என்ன நடக்கப் போகிறதோ,. ராஜேந்திரனிடம் அருள்மொழியோ, ஆர்த்தியோ ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற பதற்றத்தில் இருந்தாள் வானதி.


ராஜேந்திரன் சென்னையில் ஒரு வங்கியில் ஆஃபீஸராக வேலை பார்க்கிறான். அதே வங்கியில் ஆர்த்தியும் வேலை பார்க்கிறாள். வானதியிடமிருந்து தகவல் வந்ததும் உடனே இருவரும் வங்கியில் லீவ் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிடைத்த பேருந்தில் ஏறி அன்று காலைதான் பார்வதிபுரம் வந்திருந்தார்கள். மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு, அப்பாவும் உறங்காமல் இருந்ததால்தான், ராஜேந்திரன் மெதுவாகப் பேச்சைத் தொடங்கிட மேலே உள்ள உரையாடல்.


“என்னிக்குத் திரும்ப போறீங்க? டிக்கெட் கன்ஃபார்ம்டா இருக்கா?”
“ஏம்பா விரட்டறீங்க? என்னாச்சு உங்களுக்கு? நீங்களும் வரீங்கனா நாளைக்கே புறப்படலாம். இல்லைனா நாங்க இன்னும் ஒரு ரெண்டு, மூணு நாள் இருந்துட்டுத்தான் போவோம்.……இருக்கலாம் தானே?” கொஞ்சம் கோபத் தொனியாக இருந்தாலும் அவனுக்கு, இந்த ரெண்டு நாளில் எப்படியேனும் அப்பாவின் மனதை மாற்ற முடியாதா என்ற ஒர் எண்ணம்


“நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினது உங்களுக்குப் பிடிக்கலை. அதை வெளில சொல்லாம வேற விதமா காட்டறாத நானும் பாத்துட்டுத்தானே இருக்கேன்? ஸாரிப்பா! நான் இன்னும் உங்க மகன் அதே ராஜேந்திரன்தான். இன்னிக்கு சாயங்காலம் டாக்டர்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டேன். போறோம். வரீங்க.” என்று அழுத்தமாகச் சொன்னவன், “அம்மா அந்த காய் லிஸ்ட கொடு.” என்று லிஸ்டை வாங்கிக் கொண்டு வெளியில் சென்றான். ராஜேந்திரன் போவது வரை காத்திருந்த ஆர்த்தி,


“மாமா, ப்ளீஸ் மாமா மன்னிச்சுருங்க. ப்ளீஸ்! அப்பா, அம்மா பண்ணின தப்பை நாங்க எல்லாரும் உணர்ந்துட்டோம். அவங்க உங்ககிட்ட மன்னிப்பு கேக்க வராங்க” என்று அருள்மொழியின் காலைத் தொட்டு அழுதாள். 



அருள்மொழி பதில் எதுவும் சொல்லாமல் மனதிற்குள், இட்ஸ் டூ லேட்” என்று நினைத்து மீண்டும் கண்களை மூடினார்.


பின்னர் அவள் வானதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “அத்தை ப்ளீஸ்! சத்தியமா அத்தை நாங்க உணர்ந்துட்டோம். உங்க மகனுக்குத் தெரியாம என் வேதனைய மறைக்க ரொம்பக் கஷ்டப்படறேன் அத்தை” என்றதும், ‘ஹையோ ஆர்த்திக்கு நான் இவரிடம் சொல்லாத அந்த ஒரே ஒரு ரகசியமும் தெரிஞ்சுருச்சோ? இப்போ அவரிடம் மன்னிப்பு கேட்கறேன்னு சொல்லி சொல்லிட்டாள்னா? நிலைமை இன்னும் மோசமாகிடுமே” என்று நினைத்து ஆர்த்தியை அணைத்து சமாதானப்படுத்தி தங்கள் அறைப்பக்கம் கூட்டிக் கொண்டு சென்றாள்.
கண்ணை மூடிக் கொண்டிருந்த அருள்மொழிக்கு வழக்கமாக மதிய உணவிற்குப் பின் வரும் உறக்கம் கூட வரவில்லை. குட்டையை ஒரு கலக்கு கலக்கினால் அடியில் இருக்கும் வேண்டாதவை மேலெழும்பி வரத்தானே செய்யும்!



31 வருடங்களுக்கு முன் கோவையில் அருள்மொழி ஒரு கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராக இருந்த போது, ஒரு நாள், காவல்துறையில் வேலை செய்த அவன் நண்பன் சத்யமூர்த்தி அருள்மொழியைச் சந்தித்தான். மும்பையில் இருக்கும் ஒரு விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்பட்ட 20 பெண்களில் ஒரு பெண் கோவையைச் சேர்ந்தவள் என்பதால் கோவைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அவள் பெற்றைரைத் தொடர்பு கொண்டும் வரவில்லை என்றும், படித்த பெண் போலத் தெரிகிறாள். உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். சத்யாவிற்கு தன் டிப்பார்ட்மென்ட் மீதே நம்பிக்கையில்லை,
“ம்ம் யோசிக்கணும். நாளைக்கு ஸண்டேதானே! காலைல அந்தப் பொண்ணை மீட் பண்ணலாமா? இப்ப எங்க இருக்கு அந்தப் பொண்ணு?”



“வெளில, நம்பகமான போலீஸ்காரர் பொறுப்புல. நாளைக்கு நான் காந்தி பார்க்குக்குக் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.



வித்தியாசமான புரட்சி சிந்தனைகள் உடையவன் அருள்மொழி. மறுநாள் காலை 9 மணிக்கு காந்தி பார்க்கில் சந்தித்தனர். பார்த்த முதல் பார்வையிலேயே அவளிடம் இருந்த ஏதோ ஒன்று தன்னை ஈர்த்ததை அருள்மொழி உணர்ந்தான். முகத்தில் படிப்பின் களை. பார்த்தவுடன் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற தோற்றம். இவள் எப்படி இதில் சிக்கினாள்? என்று அவனுக்கு வியப்பு. அங்கு நிலவிய அமைதியை உடைத்த அருள்மொழி,


“உங்க பேரு வானதினு சத்யா சொன்னான். பேரே வித்தியாசமா, நல்லா இருக்கே!” என்று நேரடியாகவே பேசத் தொடங்கினான். அதிர்ச்சியிலும், பயத்திலும், அவமானத்திலும் அழுத வானதி கிட்டத்தட்ட மயங்கும் நிலையில் இருந்தாள்.

“தைரியமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அழுதீங்கனா அடுத்து என்ன செய்யணும்னு மூளை யோசிக்காது. தப்புத் தப்பாதான் யோசிக்கும்” “சத்யா அவங்க ஏதாவது சாப்டாங்களா?”


“ஐயோ அதை ஏன் கேக்கற அருள். ஒன்னும் சாப்பிட மாட்டேனுட்டாங்க. செத்துப் போய்டனும்னு வேற சொல்லிட்டுருக்காங்க.”


“இந்தாங்க தண்ணி. முகத்தைக் கழுவி கொஞ்சம் குடிங்க” என்று வானதியிடம் தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு, “சரி சத்யா நான் போய் டிஃபன் பார்ஸல் வாங்கிட்டு வந்துடறேன். நாம சாப்டுட்டு முதல்ல அவங்க வீட்ல கொண்டு போய் விட முயற்சி பண்ணுவோம்’ என்று சொல்லி பார்ஸல் வாங்கி வந்தான். சாப்பிட்டார்கள்.


“உங்க அப்பா அம்மா உங்களுக்கு வானதினு சரியான பேர்தான் வைச்சுருக்காங்க. அப்பா. பொன்னியின் செல்வன் ரசிகரோ? நீங்க வாசிச்சிருக்கீங்களா?” என்று அவளை கொஞ்சம் சகஜ நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்தான்.


சற்றே ஆசுவாசமடைந்த வானதி, “ஆமா! சின்ன வயசுலேயே டக்னு அதிர்வேனாம். அதான் எனக்கு வானதினு பெயர் வைச்சதா சொல்லுவார். நானும் வாசிச்சுருக்கேன்.”

“உங்க க்வாலிஃபிக்கேஷன்?”


“எம் ஏ இங்கிலிஷ். டைப்ரைட்டிங்க், ஷார்ட்ஹேன்ட் தெரியும்”


“ஓ! வெரி குட்! போகும் போது பேசிட்டே போவோம்” என்று சொல்லி அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், காந்திபுரம் சென்று பேருந்தில் ஏறினார்கள்.


பேருந்தில் செல்லும் போது வானதி அவர்களிடம் மும்பையில் தனக்கு நடந்தது பற்றிச் சுருக்கமாகச் சொன்னாள். “எனக்கு மும்பையில, அப்பாவோட ஒரு ஸ்டூடன்ட், அவர் நடத்தற கம்பெனில ஸ்டெனோவா வேலை போட்டுக் கொடுத்தாரு. ஹாஸ்டல்ல என்னோட ரூம் மேட்டும் ஒரு கம்பெனிலதான் வேலை பார்த்துட்டிருந்தா. அவ உடம்பு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப அவளுக்கு உதவப் போக, அவளைத் தேடி வந்த ரெண்டு பேர்கிட்ட நான் சிக்கிக்கிட்டேன். அப்பதான் தெரிஞ்சுச்சு அவ இப்படியான தொழில் செஞ்சது. ஹாஸ்டல் வார்டன் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்துருப்பாங்க போல. அந்த இடத்துக்கு போலீஸ் வந்தாங்க.


அதுல தமிழ் பேசுற ஒரு போலீஸ்காரரும் இருந்ததால நம்ம காப்பாத்திடுவார்னு சந்தோஷப்பட்டேன். ஆனா, அவன் வேற எண்ணத்தோட எங்கிட்ட வந்தான். நான் என்னோட பலத்த எல்லாம் யூஸ் பண்ணி, எதிர்த்துப் போராடி கத்திக் கூச்சல் போட்டு எப்படியோ காப்பாத்திக்கிட்டேன். அடிச்சாங்க. மயக்கம் வந்துச்சு. சுதாரிச்சுக்கிட்டேன். திரும்பவும் போலீஸ் வந்து எங்கள மீட்டு…..இதோ இப்ப உங்க முன்னாடி இருக்கேன். .செய்யாத ஒரு தப்புக்கு உலகப் பார்வைல கேவலமான பெயர் எனக்கு” என்று சொல்லி, வந்த அழுகையைப் பேருந்து என்பதால் அடக்கிக் கொண்டாள்.



வானதியின் பெற்றோரை அருள்மொழியும், சத்யாவும் சந்தித்துப் புரிய வைக்க முனைந்த போது, வானதியின் அக்காவிற்கும், தங்கைக்கும் திருமணம் ஆக வேண்டும், வானதியை தலைமுழுகியாச்சு என்று ஏற்க மறுத்து வீட்டுக் கதவை அடித்துச் சாற்றினார்கள். வானதி உடைந்து போனாள். வழியில் கண்ட கிராம மக்களோ வார்த்தைகளை அள்ளித் தெளித்தனர். இத்தனைக்கும் ஃபோட்டோ எந்தச் செய்தித்தாளிலும் இடம்பெறவில்லை. ஊர்ப் பெயர் செய்தியில் வந்ததால் இருக்கலாம்.
அருள்மொழி வானதியை தன்னுடன் வேலை செய்த ஒரு பெண் பேராசிரியரின் வீட்டில் தங்கச் செய்தான். வானதி மிகவும் தளர்வாய் இருந்தாள். தினமும் சந்தித்தார்கள். நிறைய பேசினார்கள். நட்பூ காதலாய் மலர்ந்தது.



“வானதி, அருள்மொழியை மணந்தால் ஓஹோ என்று இருக்குமாம். அத்தனை நல்ல ஜாதகமாம், குடந்தை சோசியர் சொன்னார். அந்த வானதி, தான் அரசியாக விரும்பவில்லைனு உறுதி எடுத்த மாதிரி இந்த வானதி உறுதி எடுக்காம என் அரசியா வருவாங்கனு நம்பறேன்”
“சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் சொல்வதாம்!” என்று சொல்லிச் சிரித்தாள். “அந்த வானதி அருள்மொழியைத்தானே மணந்தாள். அதேதான் இங்கும்” அருள்மொழிக்கு மிகவும் மகிழ்ச்சி. “நா சைவம். நீங்க?”


“நா அசைவம் ஆனா இப்ப சைவம். சரி நான் நேரடியாவே கேக்கறேன். நீங்க என் மேல இருக்கற அனுதாபத்துனால கல்யாணம் பண்ணிக்க நினைக்கறீங்கன்னா… யோசிங்க. ஏன்னா கொஞ்ச நாள்ல சலிப்பு வரலாம்”


“உண்மைய சொல்லறேன். முதல்ல அனுதாபம். இப்ப, உங்களைப் பிடிச்சு அது அன்பா மாறிடுச்சு. என்னை நம்பலாம்.”


அருள்மொழி பொங்கலுக்கு நாகர்கோவில் சென்றபோது வானதியையும் அழைத்துச் சென்று குடும்பத்தாரிடம் இருவரும் விரும்புவது பற்றியும், பொத்தாம் பொதுவாக அவள் ஆதரவற்ற பெண் என்று மட்டும் சொன்னான். அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டாலும், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  அருள்மொழி, வானதியை ஒரு கோயிலில் வைத்துக் கல்யாணம் செய்து, கோவை வேண்டாம் என நாகர்கோவிலில், தான் படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராகச் சேர்ந்தான்.



வானதியும் ஒரு நிறுவனத்தில் ஸ்டெனோவாகச் சேர்ந்தாள். சுற்றிலும் மலைகளும், நீர்நிலைகளூம், வயல்களும் சூழ்ந்திருந்த பார்வதிபுரத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். அன்பான, மகிழ்வான வாழ்க்கையின் அர்த்தமாக ராஜேந்திரன் பிறந்தான். அடுத்த மூன்று வருடங்களில் பெண் குழந்தை நந்தினி. குழந்தைகளிடம் அவர்களுக்குப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தவுடன் வானதியைப் பற்றி இருவருமே சொல்ல நினைத்திருந்தார்கள். நந்தினிக்குப் பருவ வயதில் மூளைக் காய்ச்சல் வந்து இறந்து போனாள். அதன் பின் ராஜேந்திரனிடம் சொன்னால் அவனுக்கு தன் பிறப்பில் ஒருவேளை சந்தேகம் வந்துவிடுமோ என்ற தயக்கத்தில் சொல்லாமல் விட்டனர். ராஜேந்திரன் தன்னுடன் பணி புரியும் ஆர்த்தியை விரும்பி, ஒன்றரை வருடங்களுக்கு முன் கைப்பிடிக்க நினைத்த போது அவர்களிடம் சொல்ல நினைத்திருந்த போது பிரச்சனைகள் முந்திக் கொண்டன. அதனால் ஏற்பட்ட வைராக்கியம்தான் அருள்மொழியின் வார்த்தைகளில் வெளிப்பட்டது.



ஆர்த்தியின் பெற்றோர் தங்கள் செல்லப் பெண்ணின் விருப்பத்தை ஏற்று அருள்மொழியைக் கண்டு சம்பந்தம் பேச வந்தார்கள். பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், உள்ளிருந்து வந்த வானதியைக் கண்டதும் ஆர்த்தியின் அப்பா அதிர்ச்சி அடைந்தார்.



“என் வைஃப் வானதி” என்று வானதியை அறிமுகப்படுத்திய அருள்மொழி வானதியிடம், “வானதி இவங்க ஆர்த்தியோட பேரன்ட்ஸ். மோகன். ரிட்டையர்ட் போலீஸ் ஆஃபீஸர். மாலினி, காலேஜ் பிரின்ஸிபல்.” என்றார்.



“ஸாரி ஸார்! இந்தக் கல்யாணம் நடக்கறது கஷ்டம்.”


அருள்மொழி திகைத்தார். “என்ன ஸார் சொல்றீங்க? காரணம்?”
“உங்க வைஃப் வானதி.” என்று சொன்னவர் தன் மனைவியிடம் மிக மெதுவான குரலில் ஏதோ சொல்ல, அவள் முகமும் சற்றுச் சுருங்கியது.


“ராஜேந்திரன் உங்க மகனா” என்று நேரடியாகவே மாலினி கேட்கவும் அருள்மொழிக்குக் கோபம் வந்துவிட, வானதி அவரது கையைப் பிடித்து அடக்கினாள்.


“ராஜேந்திரன் எங்க ரெண்டுபேருக்கும் பிறந்த மகன்தான். என் கணவருக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும். ராஜேந்திரன்கிட்ட என்னைப் பத்தி சொல்ல நினைத்து, சொல்லலை. ஆனா, ராஜேந்திரன் எப்ப ஆர்த்தியை விரும்பறதா சொன்னானோ அப்பவே அவங்க ரெண்டு பேரையும் நேர்ல பார்க்கும் போது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க நினைச்சுருந்தோம். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. நீங்கதான் ஆர்த்தியோட அப்பாவா இருப்பீங்கனு நான் எதிர்பார்க்கலை.”


“கல்யாணத்துக்கு மும்பைல அப்ப என் கூட வேலை செஞ்ச போலீஸ் ஃப்ரென்ட்ஸ். வருவாங்க. அவங்க உங்க வைஃபை பார்த்தா பல கேள்விகள் வரும் ராஜேந்திரன் பற்றிய டவுட்ஸ் வரும்…ஸோ..”


“என்ன ஸார்! இது. வானதி மேல எந்தத் தப்பும் இல்லாதப்ப அதுவும் இத்தனை வருஷத்துக்கப்புறம் எதுக்கு, யாருக்குப் பயப்படணும்?”


“என் பையன் விரும்பற பொண்ணு பெரிய இடத்துப் பொண்ணு. அப்புறம் ஆர்த்திக்கு ஒரு தங்கை இருக்கா. ஸோ எனக்கு ஸ்டேட்டஸ் முக்கியம். இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கணும்னா உங்க வைஃப் கல்யாணத்துக்கு வரக் கூடாது. இல்லைனா அவங்க யார் கண்ணுலயும் படாம மறைவா இருக்கணும். அப்புறமும் நீங்க எங்க வீட்டுக்கோ, பொண்ணு வீட்டுக்கோ வரக் கூடாது. இந்தக் கண்டிஷனுக்கு ஓகேனா கல்யாணம் நடக்கும்.”



அருள்மொழி நிலைகுலைந்து போனார். வானதியோ டக்கென்று அழுத்தமாக, “ஓகே! என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும். வராது இது உறுதி. எங்களுக்குக் குழந்தைகள் வாழ்க்கைதான் முக்கியம். உங்க கண்டிஷனை ஏத்துக்கிட்ட மாதிரி, எங்களோடது கண்டிஷன் இல்ல ரிக்வெஸ்ட். தயவு செஞ்சு ராஜேந்திரன்கிட்ட என்னைப் பத்தியோ, உங்க கண்டிஷன் பத்தியோ எதுவும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்”



“வானதி! என்னம்மா இது? எப்படிம்மா நீ இல்லாம கல்யாணம்? அப்புறம் நாம நம்ம பிள்ளை வீட்டுக்கும் போகக் கூடாதுனு சொல்றாங்க. ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்மா”



“ஓகே நாங்க அப்ப கிளம்பறோம். நீங்க யோசிச்சுச் சொல்லுங்க” என்று அவர்கள் புறப்பட்டுச் சென்றதும், அருள்மொழி வானதியிடம் கோபமாக “எப்படி வானதி முடியும்? முகூர்த்தம், ரிசப்ஷன், குடும்ப ஃபோட்டோ, அப்புறம் அவங்களோடு போய் இருக்கணும் எல்லாத்துக்கும் நீ வேணும்னு ராஜேந்திரன் எதிர்பார்ப்பான்ல?” என்றவர் அதன் பின் பேசவே இல்லை.



“அருள் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. நான் தைரியமா இதை எதிர்க்கொள்ள முடியும். நான் வருவேன், பார்ப்பேன். ஆனா என்னை வெளிப்படுத்திக்க மாட்டேன். நீங்க கொஞ்சம் எங்கூட ஒத்துழைச்சீங்கனா டாக்டரான உங்க பெஸ்ட் ஃப்ரென்டோட சப்போர்ட்ல ஒரே ஒரு நாள்தானே! ட்ராமா போட்டு ராஜேந்திரனை சமாளிச்சுரலாம். இப்ப இதெல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா நம்ம பையன் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டான். அந்தப் பொண்ணு என்ன தப்பு பண்ணிச்சு? அவ நம்ம பிள்ளைய விரும்பினது தப்பா? நிலைமை மீறிப் போச்சு. இப்ப பிள்ளைங்க வாழ்க்கைதான் முக்கியம்” என்று சொன்னாலும் அருள்மொழிக்கு வருத்தம் தணியவில்லை. 



“உன் முடிவு ரொம்ப வேதனையான முடிவு. எனக்குத் தாங்கும் சக்தி இல்லை. எனக்கு உடன்பாடில்லை” அவரது மனதில் வைராக்கியம் இறுகியது. வானதியின் உறுதி வென்றது. கல்யாணத்தை அவள் நினைத்த படியே சமாளித்து இந்த ஒன்றரை வருடமாக அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லிச் சமாளித்துவிட்டார்கள்.



ராஜேந்திரனோ, தன் காதல் கல்யாணம் தன் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை அதை வெளிக்காட்டாமல் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைத்தான். இத்தனை நாள் இயல்பாக எடுத்துக் கொண்ட ராஜேந்திரன் இப்போது தங்களை அழைத்துச் செல்வதில் உறுதியாக இருக்கிறான் என்ற எண்ண அலைகளில் சிக்கியிருந்த அருள்மொழியை காலிங்க்பெல் இந்த நிமிடத்திற்குக் கொண்டுவந்தது. பக்கத்துவீட்டு நண்பர். ராஜேந்திரன் வந்திருப்பதை அறிந்து பார்க்க வந்திருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருக்க உள்ளே…


  
“அத்தை, தன்வினை தன்னைச் சுடும்னு! ராஜா அடிக்கடி சொல்லுவார். சுட்டுருச்சு! என் தங்கையைக் காதலிச்ச பெரிய இடத்துப் பையன். அவளை மோசம் பண்ணிட்டு இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டேனுட்டான். அபார்ஷன் செஞ்சு பிரமை பிடிச்சு இருக்கா. அம்மா அப்பா, தாங்க செய்த தப்பை நினைச்சு ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க. நானும் அதுல ஒரு பார்ட் தானே. உணர்ந்துட்டோம். அவங்களும் நாளன்னிக்கு வந்து உங்க ரெண்டுபேர்ட்டயும் மன்னிப்புக் கேட்கறதா இருக்காங்க அத்தை.”



“அவங்க ராஜேந்திரன் முன்னாடி பேசினா பிரச்சனையாகிடுமே மா”
“அத்தை கவலைப் படாதீங்க. நான் ராஜேந்திரன வெளிய கூட்டிட்டுப் போய்டறேன். அம்மா அப்பா வரட்டும். அவங்க பேசட்டும். அப்படியாவது மாமா முடிவை மாத்திக்கிறாரான்னு பார்ப்போம் அத்தை…ராஜா உங்க ரெண்டு பேரையும் இங்கருந்து கூட்டிட்டுப் போகாம நகர மாட்டார்”



“ராஜேந்திரன் வந்துட்டான் போல குரல் கேக்குது கண்ணைத் துடைச்சுட்டு ஃப்ரெஷ் ஆகிடு. நாம இயல்பா இருப்போம்….எல்லாம் நல்லபடியா நடக்கும் ஆர்த்தி….”



இரு நாட்களில் ஆர்த்தியின் பெற்றோர் வந்தார்கள். தகுந்த நேரம் பார்த்து ஆர்த்தி ராஜேந்திரனை வீட்டு சாமான் வாங்க வேண்டும் என்று வெளியில் அழைத்துச் சென்றாள். அருள்மொழியிடமும், வானதியிடமும் மன்னிப்பு கேட்டு தங்கள் நிகழ்வு எப்படியான பாடத்தைப் புகட்டியது என்று சொல்லி தாங்கள் உணர்ந்ததையும் சொல்லி அழுதார்கள்.


அவர்கள் கல்யாணம் பேச வந்த போது வானதியைக் கண்டு ஷாக் ஆன ஆர்த்தியின் அப்பா, மும்பையில், வானதியிடம் தவறாக நடந்து கொண்டது தான் தான் என்பது வெளியில் வராமல் இருக்க கணக்குப் போட, வானதியோ தன்னிடம் தவறாக நடந்த அந்த போலீஸ்காரர் ஆர்த்தியின் அப்பாவாகிப் போனாரே என்று குடும்ப நன்மை கருதி தான் அவர்களுக்கு எந்தவகையிலும் பிரச்சனையாக இருக்கமாட்டேன் என்றது ஆர்த்தியின் அப்பாவிற்குப் புரிந்து சாதகமாகி இவளை விபச்சாரி என்று அவர் கண்டிஷன்ஸ் போட, அருளுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அதுமட்டும் ரகசியமாகவே அன்றும், இன்றும் அங்கு புதைந்து போனது.



அருள்மொழி அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாலும், அவரது மனம் நடந்த நிகழ்வுகளின் வருத்தத்திலிருந்து எளிதாக மீளவில்லை.. தன் மனைவி அவமானப்பட்டதை  ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ராஜேந்திரன், ஆர்த்தி, வானதி இவர்களின் அன்பான வார்த்தைகள் அருள்மொழியின் வைராக்கியத்தை முறியடித்ததா? வாசகர்கள் உங்களிடம் விட்டுவிடுகிறேன்.


56 கருத்துகள்:

  1. நெல்லை வானதி என்று ஒரு பாத்திரத்துக்குப் பெயர்கொடுத்ததும் கீதா ரெங்கனின் கற்பனை பொன்னியின் செல்வனுக்குத் தாவி விட்டது போல.பாத்திரங்கள் பெயரில் புகுந்து விளையாடி விட்டார். கதையும் அருமை. கீதா.. திறமையை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறீர்கள். ஜொலிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்! ஆமாம் ஸ்ரீராம்! நெல்லை, வானதி என்று பெயர் கொடுத்ததும் என்னை ஈர்த்த, ஈர்க்கும் பெயராயிற்றே....உடன் பொன்னியின் செல்வன் வானதி கதாபாத்திரம் நினைவில் வந்தது....உண்மைதான் ஸ்ரீராம்!!! பொன்னியின் செல்வனை ரசித்து ரசித்து வாசித்திருக்கிறேன்....கல்லூரி படிக்கும் போது. அப்புறம் மீண்டும் வாசிக்க நினைத்தும் இதோ இதுவரை வாசிக்க முடியவில்லை....

      நெல்லையின் டயலாக்ஸ் வைத்து எனக்குக் கருவும், கதையும் மனதில் தோன்றியதும் எனக்குக் குறுநாவல் அளவில் உணர்ச்சிகள் ததும்ப விரிந்ததும் உண்மை...முடிந்த அளவு சுருக்கினேன்...மிக்க, மனமார்ந்த நன்றி தங்களின் பாராட்டிற்கு, ஊக்கத்திற்கு, செம்மைப்படுத்துவதறகு என்று சொல்லிக் கொண்டே போகலாம்... ஸ்ரீராம்..

      நெல்லைக்கும் என் மனமார்ந்த நன்றி...அழகான ஆரம்பம் கொடுத்து...கதை எழுத வைத்தமைக்கு...

      கீதா

      நீக்கு
  2. அருமையாக கதையை புணைந்து இருக்கிறீர்கள் அனைத்து உறவுகளுமே கடந்தகால கசப்பான நிகழ்வுகளை அறிந்தால் மனம் சங்கோஜப்படும்.

    படிக்கும் நமக்கே மனதை சங்கடப்படுத்துகிறது கதை.

    இதைப்படிக்கும் பொழுது கிட்டத்தட்ட எனக்கு அறிந்த ஒரு குடும்பத்தின் நினைவுகள் சட்டென வந்தது.

    காரணம் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த உண்மை நிகழ்வுகளை கண்டேன் கதையில்...

    வாழ்த்துகள்

    ஃப்ரம் செல்லின் வழி கருத்து ஆகவே சிறிதாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி மிக்க நன்றி! கருத்திற்கு. ஜி எல்லா கதைகளுமே பார்த்தீர்கள் என்றால் நம்மைச் சுற்றி நடப்பவையாகவே இருக்கும்...எனக்கு வெகு நாட்களாக இந்தச் சபதங்கள், உறுதி மொழிகள், ரகசியங்கள் என்று எளிய வாழ்க்கையைச் சிக்கலாக்க வைக்கிறதே என்று தோன்றும்...அதில் ஒரு சிறு பகுதியை இங்கு பயன்படுத்திக் கொண்டேன்...இப்படி ஒன்று உண்மையிலேயே பங்களூரூவில் அதுவும் 30 வருடங்களுக்கு முன் நடந்திருக்கிறது ...பாருங்கள்...

      மிக்க நன்றி கில்லர்ஜி!

      கீதா

      நீக்கு
  3. ஆஹா சூப்பர்ப் கீதா ..மிகவும் அருமையா அழகாக கொண்டுசெல்லப்பட்ட கதை ..
    அருள் மற்றும் வானதி மகனிடம் முதலிலேயே சொல்லியிருக்கலாம் ..
    இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது ஆனா தப்பு செய்தவங்க அதை உணரும் விதமா கதையை நகர்தியது அருமை ..
    சினிமாவில் நடப்பதை போன்ற சம்பவங்கள் நிறைய பேர் வாழ்வில் நடந்திருக்கு இப்படி ..அழுக்கு மனது மனுஷங்க அவர்கள் குற்றங்களை மறைத்து நீதிமானாக காட்டிகொள்வோர் எல்லா இடத்திலும் இருப்பாங்க ஆனா அவங்களை கண்டுபிடிப்பது கஷ்டம் :(
    இதனால்தான் நல்லவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க ...
    எனக்கு இன்னும் புரியாத விஷயம் கெட்டவங்களுக்கு மட்டும் நல்லது நடக்குது நல்லவர்களுக்கு எப்பவும் கஷ்டமும் துன்பமும் தாலாட்டுது :(

    மனுஷ மனங்களின் அழுக்கை க்ளீன் செய்ய கடவுளே ஒரு மருந்தை கண்டுபிடிச்சி அனுப்பினால்தான் உண்டு :(

    அருள் காலமுச்சூடும் வைராக்கியத்துடன் இருப்பதில் தவறில்லை ..எந்த சூழ் நிலையிலும் தவறு செய்யாதோர் எதற்கு தன்னை தாழ்த்திக்கணும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இன்னும் புரியாத விஷயம் கெட்டவங்களுக்கு மட்டும் நல்லது நடக்குது நல்லவர்களுக்கு எப்பவும் கஷ்டமும் துன்பமும் தாலாட்டுது :(// ஹையோ ஏஞ்சல் ஹைஃபைவ்! பெரிசா ஹைஃபைவ்!!! எனக்கு அடிக்கடித் தோன்றும் இது.....ரொம்பவே...

      ஏஞ்சல் அவங்க சொல்லியிருக்கலாம்...சொல்லத்தான் நினைத்தார்கள் ஆனால் தயக்கத்தில் விட்டார்கள் அப்புறம் நினைத்த போது நிலைமை எல்லை மீறிவிட்டது...ஆனால் இப்படிச் சொல்லாமல் இருப்பதுதானே பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள்...முன்னுரையில் சொல்லியிருப்பது போன்று....

      ஏஞ்சல் சினிமா மட்டும் என்ன நம்மைச் சுற்றி நடப்பதைத்தானே எடுக்கறாங்க..அதனால ஒற்றுமை தோன்றும் தான்....என்ன..சினிமால மரத்தைச் சுத்தி ஆடுவாங்க பாடுவாங்க....2 1/2 மணி நேரத்துல சுபம் போட்டுருவாங்க ஆனா லைஃப் அப்படி இல்லையே!!!!

      கீதா

      நீக்கு
    2. அழுக்கு மனது மனுஷங்க அவர்கள் குற்றங்களை மறைத்து நீதிமானாக காட்டிகொள்வோர் எல்லா இடத்திலும் இருப்பாங்க ஆனா அவங்களை கண்டுபிடிப்பது கஷ்டம் :(//

      அதுவும் நம்ம பக்கத்துலேயே கூட இருப்பாங்க ஆனா நம்மால அத்தனை சீக்கிரம் அறிய முடியாது....ஏஞ்சல்...இல்லையா....நான் ரொம்ப சின்ன வயசுல ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன் அப்புறம் காலேஜ் வந்தப்புறம் அப்படிப்பட்டவங்களுக்கும் சேர்த்து ப்ரே பண்ணத் தொடங்கிட்டேன்...எல்லாம் கான்வென்ட் காட்மதர் சொல்லிக் கொடுத்ததுதான்...அவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்...

      மிக்க நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
    3. அருள் காலமுச்சூடும் வைராக்கியத்துடன் இருப்பதில் தவறில்லை ..எந்த சூழ் நிலையிலும் தவறு செய்யாதோர் எதற்கு தன்னை தாழ்த்திக்கணும் ?//

      சரிதான் ஏஞ்சல்! அவரது வைராக்கியத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால், தவறு மெயினாக ஆர்த்தியின் அப்பா மீது...இப்போது மன்னிப்பும் கேட்கிறார்...அட்லீஸ்ட் அருள்மொழி பிள்ளையுடன் செல்லலாம்...ராஜேந்திரன் என்ன தவறு செய்தான்? அவனுக்கு இது எதுவுமே தெரியாமல் புதைக்கப்படுகிறது...இப்போது இருப்பது ஒரே பிள்ளை..ஆர்த்தியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்லாவிட்டாலும் மகனின் வீட்டிற்காவது செல்லலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது...

      மிக்க நன்றி ஏஞ்சல்....

      இந்தக் கருத்தை நேற்று அடித்து...மதுரை சகோவுக்குக் கமென்ட் போட்டுட்டு வரும்போது காணலை...அப்புறம் க்ரோம் மீண்டும் தகராறு செய்யத் தொடங்கியது..சென்ற மூன்று நாட்களாக க்ரோம் வேலை செய்யவில்லை..டிடியிடம் மீண்டும் க்ரோம் டவுன்லோட் பண்ணினால் பிரச்சனை ஆகுமா என்று கேட்டு.பண்ணிப்பாருங்க என்று சொல்ல...வேறு ப்ரௌசர் இல்லாததால் இதிலேயே..இதிலேயே செய்து மீண்டும் தகராறு.....அப்புறம் .இதோ இப்போது மீண்டும் கொடுக்கிறேன்...வரும் என்று நினைக்கிறேன்...

      நீக்கு

  4. கதை அதுவும் கீதா ரெங்கண் என்பதால் படித்தேன்..... நல்ல கதையை படித்தது போல ஒரு உணர்வு.. இப்படியே நீங்கள் தொடர்ந்து கதை எழுதிக் கொண்டிருந்தால் லஷ்மி இந்துமதி சிவசங்கரி வரிசையில் கீதா ரெங்கனாதன் பெயரும் வந்துவிடும்...பெரிய எழுத்தாள்ர் ஆன பின் என்னை மறந்துவிடாதீர்கள் கீதா...


    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை வாங்க மதுரை!!! ஹையோ ஹையோ ரொம்ப வெக்கப்பட வைச்சுட்டீங்களே மதுரை!!! நீங்க சொல்லியிருக்கற எழுத்தாளர்கள் எல்லாம் ஜாம்பவான்கள்....அந்த அளவு எல்லாம் சான்ஸ் இல்லை...இந்த அழகான நட்பூ வட்டம் போதும் மதுரை....இங்குதான் நம்மை மேம்படுத்திக் கொள்ள நிறைய டிப்ஸ் கிடைக்கிறது....மதுரை சகோ அதெல்லாம் நடக்காது நடந்தாலும் எனக்கு எப்போதும் இந்த நட்பூ வட்டம்தான்....நீங்களும் தான் அதில்!!

      மிக்க மிக்க நன்றி மதுரை பாராட்டிற்கு...

      கீதா

      நீக்கு
    2. @truth/// ஹலோ எச்சூச்ச்ச்ச்மீ அது "கண்" அல்ல " கன்" ஆக்கும்:).. எப்பவுமே கண் பற்றிய நினைப்பில் இருந்தா இப்பூடித்தான் ஆகும் கர்ர்ர்ர்:)..

      நீக்கு
    3. ஹா ஹாஹா அதிரா...அது டைப்போ!! அதுவும் மொபைலில் அடித்தால் பிரச்சனை ரொம்பவே வரும்...என்றாலும் மதுரையை இப்படி கலாய்ப்பது ஜாலிதான்....ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    4. உங்களுக்கும் எனக்கும் இரண்டு கண்ணுதான் ஆனால் ரங்கநாதனுக்கு மூன்று கண்கள் உண்டு என்பது உங்களுக்கு தெரியாதா? கோயிலுக்கு போன கடவுளை நல்லா உற்றுபார்த்து சாமி கும்பிடனும் அவர் போட்டு இருக்கிற நகை என்ன டிசைன் என்று பார்க்க கூடாது

      நீக்கு
    5. ////Avargal UnmaigalOctober 16, 2017 at 3:11 AM
      உங்களுக்கும் எனக்கும் இரண்டு கண்ணுதான் ////
      ஹையோ ட்றுத் கணக்கில வீக்கூஊஊ.. இருவருக்கும் எனில் 4 கண்கள் என வரோணுமாக்கும் ஹா ஹா ஹா:)...

      நீக்கு
  5. பல சமயங்களில் நல்லதொரு வாழ்க்கைக்கு உண்மைகள் குழியில் போட்ட உரங்களாகவே இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா! அழகான வரி மதுரை சகோ!!! உண்மைதான்...இந்த வரி 100% உண்மையே!

      கீதா

      நீக்கு
  6. அன்பு கீதா. ஒரு வானதியை வைத்து இவ்வளவு பெரிய வைராக்கியக் கதையை எழுதி இருக்கிறீர்கள்.
    நினைத்துப் பார்க்கவே அஞ்சும் உண்மைகள் வருத்த்கின்றன.
    அருள்மொழி வானதி தம்பதியின் ஆரோக்கியமான தாம்பத்தியம் உருக வைக்கிறது. செய்யத குற்றத்துக்கு இத்தனை தண்டனை.
    குற்றம் செய்தவரோ தப்பிக்கிறார்.
    உலகம் முழுவதும் இப்படியே செல்கிறது.
    அன்பு வாழ்த்துகள் அம்மா. வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா....மிக்க நன்றி அம்மா உங்கள் கருத்திற்கு. நமக்கு நினைத்துப் பார்க்கவே அஞ்சும் உண்மைகள்...ஆனால் நம்மைச் சுற்றி நிறையவே நடக்கின்றனதான் வல்லிம்மா...கில்லர்ஜி கூடச் சொல்லியிருக்கிறார் பாருங்கள் 30 வருடங்களுக்கு முன் பங்களூரில் நடந்திருப்பதாக...

      குற்றம் செய்தவரோ தப்பிக்கிறார்.
      உலகம் முழுவதும் இப்படியே செல்கிறது. //

      ஆம்...எனக்கும் இது அடிக்கடித் தோன்றும்...ஏஞ்சலும் சொல்லியிருக்கிறார்.. மற்றொரு பதிவர் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் அழகான நியாயமான கேள்வியும் கேட்டிருந்தார். ஏஞ்சலுக்கே பதில் சொல்லும் போது இதை எழுத வேண்டும் என்று நினைத்து க்ரோம் தகராறில் விட்டுப் போனது..

      அந்தப் பதிவர் கேள்வியுடன் எழுதியதன் சாராம்சம் இதுதான்...இறைவன், இறைவி பூமிக்கு வந்து நடந்து செல்கிறார்கள்...பல துன்பங்களைப் பார்க்கும் போது இறைவி இறைவனிடம் கேட்கிறார் இறைவா ஏன் இப்படி கஷ்டம் உங்களை எல்லோரும் வணங்குகிறார்களே நீங்கள் உதவக் கூடாதா என்று...இதில் என்னால் ஒன்றும் செய்ய இயலாது...அவர் சொல்லுவது அவரவர் செய்த கர்ம வினை என்பார். அப்போது 4 பையன்கள் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்வார்கள்...அதைப் பார்த்த இறைவி கேட்பார், இறைவா இது அநியாயம் இல்லையா....அந்தப் பெண்ணைக் காப்பாற்றுங்கள் என்பார். இறைவன் அந்தப் பெண் செய்த முற்பிறவியில் செய்த தவறுக்கு அனுபவிக்கிறாள் என்பார். இறைவி கேட்பாள் அப்படி என்றால் அந்தப் பையன்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு இப்படி ஒரு பெண்ணைச் சுகிப்பதுதான் பலனோ....எனக்கு இது நியாயமான கேள்வியாகப் பட்டது என்னதான் நானும் பல சமயங்களில் எனக்கு நடப்பவற்றிற்கு.. என் கர்மவினை என்று சொல்லிக் கொண்டாலும்....புரியாச கான்செப்ட்...ஆனால் மனதிற்குச் சமாதானம் சொல்லிக் கொள்ள கிடைக்கும் ஒரு கருவி.... கான்செப்ட்...

      ஆனால் ஒன்று இப்போது நாம் செய்யும் தவறுகளுக்கு....தண்டனை கிடைப்பதை மனம் ஏற்றுக் கொள்கிறது....ஆனால் செய்யாத தவறுகளுக்குக் கிடைக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள மனம் கொஞ்சம் கஷ்டப்படுகிறது...இருக்கவே இருக்கு கர்மா....இதைப்பற்றி எல்லாம் அழகாக எழுதும் கீதாக்கா ஒரு பதிவு போட்டால் தேவலாம்...

      மிக்க நன்றி வல்லிமா

      கீதா

      நீக்கு
    2. "அந்தப் பையன்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு இப்படி ஒரு பெண்ணைச் சுகிப்பதுதான் பலனோ." - அப்படி இல்லை கீதா ரங்கன். பணம் கீழே கிடக்கிறது. பார்க்கும் மனது, அதனை எடுத்து உரியவரிடம் கொடுக்கலாம், இல்லை அமுக்கிக்கொள்ளலாம், இல்லை காவல்துறையிடம் கொடுத்து, ஒருவேளை உரியவரிடம் போய்ச்சேராமல் இருந்துவிடலாம். எதைச் செய்வது என்பது பார்ப்பவரின் முடிவு. அதைப்பொறுத்து கர்ம வினை அமையும். இதனை வேறு மாதிரி சொல்கிறேன். காரணமில்லாமல் அந்தப் பெண் பூர்வ ஜன்மத்தில் இந்த மூவரையும் பழிக்கு ஆளாக்கியிருக்கலாம், அதனால் வருத்தமுற்ற அவர்களின் ஆத்மா இப்போது பழி வாங்கியிருக்கலாம். அதற்குப் பதில் இந்தச் செயலைச் செய்யாமல் இருந்தால் அது அவர்களுக்கு புண்ணிய கர்மாவைத் தந்திருக்கும்.

      இந்த 'கர்மா' என்னும் விளக்கம் இல்லையென்றால், குற்றம் புரிபவர்கள் தப்பிக்கவும், பணக்காரர்களாக ஆனதற்கும், சம்பந்தமேயில்லாமல் சிலர் பணக்காரர்கள் ஆவதற்கும், படிப்புக்கும் கிடைக்கும் சம்பளத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் இருப்பதற்கும் காரணம் கற்பிக்க இயலாது.

      நீக்கு
  7. கீதா சிஸ் மிக அருமை..... பெயர்கள் பொருத்தமாய் மாறிவிட்டீர்கள். என்ன ஒரு அடவடித்தனம் ரிடையர் ஆனாலும் குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கவே இல்லை தெய்வம் நின்று கொள்ளும் என்பதற்கேற்ப நடந்தது, இப்போ புரிந்தது தனக்கு என்று வரும் போது வலிகள். அருமையான நடை ...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பூவிழி!!! மிக்க நன்றி தங்கையே!! தவறு செய்பவர்கள் ஒரு சிலரே தங்கள் தவறை நினைத்து வருந்துவது...பலரும் தங்கள் தவறுகளை ஜஸ்ட் லைக்தாட் துடைத்துத் தள்ளி உதறிவிட்டுச் செல்வதுதான் நடக்கிறது...ஒன்று அவர்களுக்குத் தாங்கள் செய்தது தவறு என்று உரைக்கும் அளவிற்குப்புத்தி இல்லை இல்லை என்றால் அதீத ஈகோ...செருக்கு...அவர்களின் கண்ணை/மூளையை மறைத்துவிடுகிறது! நீங்கள் சொல்லியிருப்பது போல் தனக்கென்று வலி அதுவும் உடையும் அளவிற்கு வலி வந்தால் மட்டுமே உணர்தல் நிகழ்கிறது..

      மிக்க நன்றி பூவிழி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  8. முழுமையாக கதையைப் படித்துவிட்டு எழுதுகிறேன். ஆரம்பம் ஹெவி சப்ஜக்ட் என்று தோன்றவைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துவ் அந்துவிட்டதே...இதோ பார்க்கிறேன் நெல்லை...

      கீதா

      நீக்கு
  9. //அருள்மொழியின் வைராக்கியத்தை முறியடித்ததா?..//

    யாராவது இதற்கு பதில் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தால், ஏஞ்சல் மட்டும் சொல்லியிருக்கிறார். சொல்லியிருக்கும் பதிலும் அற்புதம்.

    //வாசகர்கள் உங்களிடம் விட்டுவிடுகிறேன்.//

    சகோ. கீதா, இது கூட கல்கி பாணி தான்! ..)) உங்களுக்குத் தெரியாததா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா வாங்க! மிக்க நன்றி கருத்திற்கு. ஏஞ்சலின் சொல்லியிருக்கும் முடிவு நன்றாகவே உள்ளது. யாருக்கும் தோன்றும் ஒன்றுதான்...எனது கருத்தும் கொடுத்திருக்கிறேன் அண்ணா....

      சகோ. கீதா, இது கூட கல்கி பாணி தான்! ..)) உங்களுக்குத் தெரியாததா?..//

      அண்ணா உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தெரியாது அண்ணா...நான் பொன்னியின் செல்வன் எல்லாம் திருமணத்திற்கு முன் அதுவும் வீட்டிற்குத் தெரியாமல் வாசித்தது. கதைப் புத்தகங்கள், எக்ஸ்ட்ரா கரிக்குலர் எதற்கும் அனுமதி கிடையாது. படிப்பு மட்டும்தான். நானோ படிப்பில் ரொம்ப வீக்....எங்கள் வீட்டிலேயே படிப்பில் ரொம்ப வீக் என்றால் நான் தான் அதாவது மதிப்பெண் வாங்குவதில்...அலை ஓசை, பார்த்திபன் கனவு கூட முழுவதும் வாசித்ததில்லை...தொடராக வந்த நினைவு...இடையிடையே சில வாசித்ததுண்டு...கல்லூரியில்..கிடைக்கும் நேரத்தில்..நூலகத்தில்தான் இருப்பேன் கிடைக்கும் நேரத்தில் வாசித்தவையே.அப்படி வாசித்தவைதான்...தேவனின் எங்கள் குடும்பம் பெரிது......நாபாவின் குறிஞ்சிமலர்..சுஜாதாவின் சில கதைகள்..ரா சு நல்லபெருமாளின் கதை கலைமகளிலோ அல்லது அமுத சுரபியிலோ பரிசு பெற்ற கதை ..நம்பிக்கை என்று நினைவு.....திருமணத்திற்குப் பின்னும் இல்லை. எனவே எழுத்தாளர்களின் பாணி பற்றி ரொம்பச் சொல்லத் தெரியாது அண்ணா....ஸ்ரீராம் கூடச் சொல்லியிருந்தார் மீண்டும் வாசிக்கத் தொடங்குங்கள் என்று...தொடங்கணும்...

      மிக்க நன்றி ஜீவி அண்ணா...

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி ஜிவி சார் ..எனக்கு எப்பவும் நேர்மை உண்மை ஜெயிக்கணும் அதனால்தான் சில சமயங்களில் கதையை ரியல்னு நினைச்சி கோபப்படுவேன் :) அதுபோல எண்ணம் தப்பானவங்களுக்கு நாம் தரும் மன்னிப்பு கூட அவங்களுக்கு தகுதியற்றதுன்னு தோணும் சில சம்பவங்களை படிக்குங்ம்போதும் கேள்விப்படும்போதும்

      நீக்கு
  10. பெரியதாக எழுதவேண்டிய கதை. நிறைய வசனங்களுடன் உணர்ச்சிகளோடு எழுதுவதற்கான களம் உள்ள பெரிய கதை. அதனால் பல நிகழ்வுகள் கதைச் சுருக்கம் படிக்கும் எண்ணத்தைத் தருகிறது. இதை வைத்தே திரைப்படம் எடுக்குமளவிற்கான plot.

    ஆனால் வெறும் சில வாக்கியங்களிலிருந்து இவ்வளவு பெரிய கதையை யோசித்ததற்கே பாராட்டுகள்.

    அருள்மொழி மன்னிக்கத்தான் வேண்டும். காலம் கற்றுக்கொடுத்த பாடத்தைவிடப் புதிதாக ஆர்த்தியின் அப்பா கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

    நல்லா கதையைப் பின்னியுள்ளீர்கள். ஆனால் குறுகிய வடிவத்தில் அடைத்ததுபோல் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் கீதா ரங்கன். இதனை பெரிதாக எழுதுங்கள். ரொம்ப நல்லா வரும். உங்களுக்கு அதற்கான திறமை இருக்கிறது. நேரம் இருக்கான்னு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியதாக எழுதவேண்டிய கதை. நிறைய வசனங்களுடன் உணர்ச்சிகளோடு எழுதுவதற்கான களம் உள்ள பெரிய கதை. அதனால் பல நிகழ்வுகள் கதைச் சுருக்கம் படிக்கும் எண்ணத்தைத் தருகிறது. இதை வைத்தே திரைப்படம் எடுக்குமளவிற்கான plot.//

      ஆமாம் நெல்லை....மனதில் விரிந்ததை எழுதிய போது 17 பக்கம் வந்தது...அப்புறம் 17 ஆக்கினேன்..அப்புறம் 13ல் நிறுத்தினேன்...அப்புறம் மீண்டும் மீண்டும் யோசித்து....9 பக்கங்கள் வரை கொண்டுவந்தேன்...

      //அருள்மொழி மன்னிக்கத்தான் வேண்டும். காலம் கற்றுக்கொடுத்த பாடத்தைவிடப் புதிதாக ஆர்த்தியின் அப்பா கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? //

      எனக்கு தோன்றும் ஒரு வாசகம்... கை கொடுக்கும் வாசகம்...மஹாபாரதத்தில் தர்மர் சொல்லுவது "க்ஷமா ஹி சத்ய ஹை"

      குறுகிய வடிவத்தில் அடைத்ததுபோல் தோன்றுகிறது// உண்மைதான் நெல்லை! எனக்கும் அந்த எண்ணம் இருந்தது... இருக்கிறது...

      மிக்க நன்றி நெல்லை பாராட்டுகளுக்கு...நேரம் இருக்குமா தெரியலை நெல்லை. நேரம் மட்டுமில்லை எழுதுவதற்கான சூழல்...பதிவுகள், கதைகள் எழுதுவதற்கே முடிவதில்லை...

      மிக்க நன்றி நெல்லை...

      நீக்கு
  11. நெடுங்கதைக்கான அழுத்தம்..

    சரளமான நடை.. உரையாடல்கள் கூர்மை.. முடிவில் ஏதோ ஒன்று மனதை அழுத்துகின்றது..

    இதுதான் கதையின் வெற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு சகோ! தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்...

      நீக்கு
  12. ஆஹா கீதா கதையும் வந்துவிட்டதோ...கீதா எப்போ கதை எழுதினாலும் எனக்கு உடனே வர முடியாமல் போய் விடுகிறதே... என்ன மாயமோ என்ன மந்திரமோ:).. நாளை படிச்சுக் கொமெண்ட் போடுவேன் கீதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை அடுத்த இடுகை வருகிறது என்று சொல்லி பல நாட்கள் (வாரங்கள்) ஆகிவிட்டது. இடுகையைக் காணோம்.

      நீக்கு
    2. பரவால்ல அதிரா....நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள்...எனக்கும் இப்படி நேர்வதுண்டு.....

      நெல்லை பாவம் போனா போகுது.. விட்டுருங்க...ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. என்ன மாயமோ என்ன மந்திரமோ:).. நாளை படிச்சுக் கொமெண்ட் போடுவேன் கீதா... - இன்னும் குணா படப் பாடலின் மயக்கத்திலிருந்து வெளிவரவில்லை போலிருக்கிறது.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா பாலமுரளிகிஸ்ணா:) கர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  13. நானும் தாமதமாய் வந்திருக்கேன். என்றாலும் கதை அருமை! பல்வேறு திருப்பங்களுடன் கூடிய தொடராக வந்திருக்க வேண்டியதோ! விறுவிறுப்பாய் இருந்தது. ஏஞ்சலின் சொல்கிறாப்போல் தப்பு செய்பவர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெளி உலகுக்குத் தங்களை நல்லவராய்க் காட்டிக் கொள்கின்றனர். இதை நான் வெவ்வேறு கோணங்களிலும் பார்க்கிறேன். எந்தத் தப்புமே செய்யாமல் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு குடும்பத்துக்காக வாழ்பவர்கள் மோசமானவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இதை யோசிக்கையில் மனம் வருந்தினாலும் தப்பு செய்பவர்களை அவர்கள் மனசாட்சி என்னும் மாபெரும் கடவுளே தண்டனை கொடுப்பார் என்று ஆறுதல் அடைய வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தத் தப்புமே செய்யாமல் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு குடும்பத்துக்காக வாழ்பவர்கள் மோசமானவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்.//

      மிகவும் சரியே அக்கா! இதை நான் முழுவதும் ஏற்றுக் கொள்வேன்...

      மாபெரும் கடவுளே தண்டனை கொடுப்பார் என்று ஆறுதல் அடைய வேண்டி இருக்கிறது.//

      யெஸ் அக்கா இதுவும் அப்படிச் சொல்லி மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியும் இருக்கிறதுதான்..

      மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு...ஆம் பெரிதாகத்தான் என் மனதில் தோன்றியது ஆனால் முடிந்த அளவு சுருக்கிக் கொடுத்திட்டேன்...

      நீக்கு
  14. அருமையான கதைக்கரு. அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து பல்வேறு படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன். அருள்மொழி நல்ல முடிவையே எடுப்பார் என்றே நம்புவோம். ஏனெனில் அருமையான பிள்ளை! அருமையான மருமகள்! பிறக்கப் போகும் பேரனை/பேத்தியை எடுத்துக் கொஞ்ச வேண்டாமா? ஆனால் நான் முதலில் நினைச்சது என்னவெனில் ஆர்த்தி வானதியின் சகோதரர் மகளாக இருப்பாளோ என்றே! :) ஆனால் ஆர்த்தியின் அப்பா மும்பையில் வேலை செய்த கொடுமையான போலீஸ்காரர் என எதிர்பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா பாராட்டிற்கு. படைப்புகள்!!?? எழுத முயற்சி செய்கிறேன் அக்கா...அதற்கு நேரம்...சூழல் எல்லாம் வேண்டியிருக்கே...

      ஆம் அருள்மொழி நல்ல முடிவை எடுப்பார் என்று நினைப்போம்...பேரன் பேத்தி என்று குடும்பம் மகிழ்வுடன் இருக்க வேண்டாமா,,,...வானதிக்கு சகோதரர் இல்லையே...கதையில்..சகோதரிகள் மட்டுமே...

      ஆர்த்தியின் அப்பா மும்பையில் வேலை செய்த கொடுமையான போலீஸ்காரர் என எதிர்பார்க்கவில்லை.// ..வானதிக்கும் அவர் ஆர்த்தியின் அப்பாவாகிப் போனாரே என்ற ஷாக் முதலில்...வருத்தம் எல்லாம்....

      மிக்க நன்றி அக்கா உங்கள் ஊக்கமிக்க வார்த்தைகளுக்கு...

      கீதாக்கா வல்லிம்மாவுக்குக் கொடுத்திருக்கும் பதிலில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்...முடிந்தால் எழுதுங்கள்..அல்லது ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள் என்றால் லிங்க் கொடுங்கள்...மிக்க நன்றி கீதாக்கா...


      கீதா

      நீக்கு
    2. @கீதா, பின்னூட்டங்கள் பெரிதாக இருந்தமையால் எதையுமே முழுமையாகப் படிக்கவில்லை. ஆகவே நீங்கள் வல்லிக்குச் சொல்லி இருப்பதை இப்போது தான் கவனிக்கிறேன். மிகப் பெரிய பொறுப்பு! இதை நியாயப்படுத்தி எழுதினாலும் சரியாக இருக்காது! தப்பு என எழுதினாலும் சரியாக இருக்காது. பார்க்கலாம். மனதில் படட்டும்!

      நீக்கு
    3. மிக்க நன்றி கீதாக்கா....உங்களுக்குச் சரியாக மனதில் படும் போது எழுதுங்க...ஏன்னா இந்த மாதிரி சப்ஜெக்ட் ரொம்ப சென்சிட்டிவ். நிதானமா எழுதுங்க அக்கா...

      கீதா

      நீக்கு
  15. பதில்கள்
    1. மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ...கருத்திற்கு

      கீதா

      நீக்கு

  16. அமைதியான வாழ்வின் அடித்தளத்தில் சௌகரியமாகப் புதைக்கப்பட்ட உண்மைகள். சிலர் வாழ்வில் உண்மைக்குரிய இடமே பூமிக்கடியில்தானோ..முடிச்சுக்களாலான கதை. இருந்தும் சிக்காது வேகம் காட்டுகிறது. அருள்மொழியின் பாத்திரத்தில் காத்திரம் இருக்கிறது. உங்கள் எழுத்தில் ஒரு லாவகம் தெரிய ஆரம்பிக்கிறது. ஒரு சபாஷ் போட்டுவிடவேண்டியதுதான் உங்களுக்கு.

    நிறைய சிந்திக்கிறீர்கள்; வாசிப்பு ஏக்கமும் உங்களில் உண்டு எனத் தெரிகிறது. வாசிக்கவேண்டிய தருணமும் இதுதான். நமது முன்னோடிகளின் –சிறுகதை மன்னர்களான தி.ஜானகிராமன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், மௌனி, சுஜாதா, ஜெயமோகன் மற்றும் ஆர்.சூடாமணி போன்றோரின்- கதைகளை நேரங்கிடைக்கும்போது படிக்கமுடிந்தால் நல்லது எனத் தோன்றுகிறது. எழுத்தில் மேலும் மெருகேறும். (நானும் இத்தகைய படைப்பாளிகளைத் தேடிப்படித்துக்கொண்டிருப்பதால் பெயர்கள் வேகமாக இங்கேவந்து விழுந்துவிட்டன; வேறொன்றுமில்லை!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்! 'ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' என்று ஒரு நூல். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால தமிழ் எழுத்துலகைப் பற்றிய ஆவணம். 37 தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூலில் காணக்கிடைக்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்களில் ஜெயமோகன் தவிர அத்தனை பேரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

      நான் எழுதிய நூல். உங்கள் பரந்த வாசிப்பு ரசனைக்கும் அனுபவத்திற்கும் நிச்சயம் என் வாசிப்பு ரசனை துணை போகலாம்.

      சென்னை சந்தியா பதிப்பகத்தின் சென்ற வருட வெளியீடு இது.

      சந்தியா பதிப்பகத்தின் தொலைபேசி எண்: 044- 24896979
      இணையத் தொடர்புக்கு: www.sandhyapublications.com

      நீக்கு
    2. மிக்க நன்றி ஏகாந்தன் சகோ! தங்களின் சபாஷிற்கு!

      நிறைய சிந்திக்கிறீர்கள்;// ஹையோ சகோ இதுதான் பல சமயங்களில் பிரச்சனையாகவும் முடிகிறது. ரூம் போட்டு யோசிக்கறாங்க நு நாம் இசையமைப்பாளர்கள், கதை எழுதுபவர்கள் பலரையும் சொல்லுவதுண்டு.... ஆனால் அது எவ்வளவு முக்கியம் என்று எழுதும் போதுதான் தெரிகிறது. நீங்கள் சொல்லியிருப்பவர்கள் அத்தனைபேருடையதும் ஒன்று அல்லது ரெண்டு சுஜாதா தவிர்த்து (சுஜாதாவின் கதைகள் கொஞ்சம் வாசித்ததுண்டு..திருமணத்திற்கு முன்) வாசித்திருக்கிறேன். ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை... இப்போது பலரது எழுத்துகளும் ஃபைலில் இருக்கின்றன...வாசிக்கவேண்டும்...மிக்க நன்றி ஏகாந்தன் சகோ உங்கள் ஊக்கத்திற்கு...

      கீதா

      நீக்கு
  17. Reply option வேலைக்காகலை. அதனால் இங்கே. தங்கள் பதிலோடு சேர்த்துப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன்:

    தங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி, சகோ.

    அமரர் ர.சு. நல்லப்பெருமாளின் இரண்டு நாவல்கள் அவர் பெயரைச் சொல்லக் கூடியவை. இரண்டுமே கல்கி பத்திரிகையில் வெளிவந்தவை தாம். உங்கள் நினைவுக்கு வருகிறதா, பாருங்கள்.

    1. கல்லுக்குள் ஈரம்

    2. போராட்டங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் புத்தகங்கள் குறித்து நெட்டில் வாசித்தேன். ஆனால் இரண்டுமே வாசித்ததில்லை. மற்றொரு நாவல் மயக்கங்கள் வாசித்திருக்கிறேன். அது கலைமகள்/அமுதசுரபி எதிலோ வந்தது...மூடநம்பிக்கைகள் கூட சிலசமயங்களில் மனிதருக்கு உதவுகின்றன என்று...அந்தக் கதை வாசித்த போது அது புட்டபர்த்தி நினைவுக்கு வந்தது...அங்கு மக்கள் குவிவது ஒவ்வொருவது நம்பிக்கை, அங்கு நடப்பது ஏமாற்று வேலை என்று அதை நிரூபிக்க ஒரு ரிப்போர்ட்டர் ஊடகம் என்று கதை இறுதியில் மூட நம்பிக்கை கூட எப்படி மக்களின் மனதினை அமைதியாக்குகிறது என்று முடியும்...நினைவு...அருமையான கதை...

      கீதா

      நீக்கு
    2. நான் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி பூவனம் ப்லாக்கில் எழுதிக் கொண்டிருந்த பொழுது அமரர் ர.சு.நல்லபெருமாளின் அருமை மகள் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார்கள், "நன்றாக எழுதுகிறீர்கள்? என் அப்பாவைப் பற்றி எப்பொழுது எழுதப் போகிறீர்கள்? அவர் பற்றி உங்களுக்குத் தகவல்கள் ஏதாவது வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.." என்று எழுதியிருந்தார்கள்.

      எனக்கு அவர் மெயில் பார்த்து மிகவும் பெருமையாக இருந்தது. 'இவர் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ்சொல்' என்கிற மாதிரி. மகனோ, மகளோ இருந்தால் இப்படி இருக்க வேண்டும்.
      நிறைய தமிழ் எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் தந்தையோ தாயோ எப்படிப்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் இவர் என்றே தெரியாது.

      எழுத்தாளர்களுக்கு அணுக்க சொந்தக்காரர்களே அவர்களின் எழுத்தில் மனசைப் பறிகொடுத்த அவர்கள் வாசகர்கள் தாம்.

      நீக்கு
    3. @ ஜீவி:

      //..ர.சு.நல்லபெருமாளின் அருமை மகள் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார்கள், "நன்றாக எழுதுகிறீர்கள்? என் அப்பாவைப் பற்றி..//

      இந்தச் செய்தி மனதை நெகிழவைத்தது. தன் அப்பாவைப்பற்றி அவருடைய படைப்புகளைப்பற்றித்தான் என்ன ஒரு வாஞ்சை அந்தப் பெண்ணிற்கு.

      இப்போதெல்லாம் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அப்பா, அம்மாக்களின் அருமை தெரிவதில்லை. அப்படியே அப்பாவோ அம்மாவோ ஒரு எழுத்தாளர் என்று தெரிந்தாலும் அவர்கள் என்னதான் எழுதுகிறார்கள் என்று படித்துத் தெரிந்துகொள்ளும் பொறுமை, அக்கறை இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது? மேலும் எழுத்தாளன் என்பவன் ஒரு பைத்தியக்காரன், பொழக்கத்தெரியாத தெண்டம் என்கிற நோக்கில் பார்க்கும் தமிழ்ச்சமூகம் நம்முடையது. இந்த விஷயத்தில் மலையாளிகளையும், பெங்காலிகளையும் நான் மதிக்கிறேன்.

      நீக்கு
  18. ஆஹா இரண்டாம் தடவையாக முழுமையாகப் படிச்சே புரிஞ்சு கொண்டேன் கதையை.. நெ. த சொன்னதுபோலவே கிட்டத்தட்ட படக்கதைபோலவே இருக்கு.

    இன்னொன்று உண்மைச் சம்பவமாக இருக்குமோ எனவும் ஒரு கட்டத்தில் தோணியது... ஏனெனில்... ராஜேந்திரனுக்கு ஒரு தங்கையைப் பிறக்க வைத்து அதுக்கு நந்தினி எனப் பெயரும் வச்சு பின்பு அக்குழந்தை மூளைக்காச்சலால் இறந்து விட்டது என இங்கு எதற்காக சொல்ல வேண்டும்... ஒரே மகன் என முடிச்சிருக்கலாமே என எண்ணினேன்.

    மிக அருமையாக இருக்கு கீதா.. உண்மைக்கதை இல்லை கற்பனைதான் எனில்.. நல்லாத்தான் கற்பனை வருகிறது உங்களுக்கு.. வழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா!! மிக்க நன்றி கருத்திற்கு!!!! முழுவதும் கற்பனைதான். ஒரே ஒரு செய்திக் குறிப்பைத் தவிர. ஒரு நல்ல குடும்பத்துப் பெண் விபச்சாரப் பகுதியில் சிக்கி பின்னர் மீட்கப்பட்டு வரும் போது அவள் பேசியது மிகவும் மனதிற்கு வருத்தமாக இருந்தது. அவள் எந்தத் தவறும் செய்யவில்லை...ஆனால் சமூகத்தால் ஒதுக்கப்படுகிறவள்...அவள் தான் விபச்சாரி இல்லை என்று சொன்னாலும் இந்த சமூகம் ஒத்துக் கொள்ளாது இல்லை என்றே அவள் சொன்னதுதான்...

      மிக்க நன்றி அதிரா...கருத்திற்கு..வாழ்த்திற்கு...

      ஆனால்பாருங்கள் கிலல்ர்ஜி சொல்லியிருக்கார் உண்மையாகவே இது நடந்தது என்று ...

      கீதா

      நீக்கு
  19. மிகவும் அருமையான கதை...
    ஒரு நாவலாக விரிய வேண்டும்... முடிந்தால் நாவலாக விரியுங்கள் அக்கா...
    வரலாற்றுப் பாத்திரங்களின் பெயர்களை வைத்து மிகச் சிறப்பான கதை...
    ரொம்பப் பிடித்திருந்தது.

    எழுதிய கீதா அக்காவுக்கும் பகிர்ந்து கொண்ட ஸ்ரீராம் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கு...நாவலாக....... ம்ம்ம் பார்க்கிறேன் முடியுமா என்று...நெல்லைத் தமிழனின் வரிகள் இவை குமார் அதைத் தொடர்ந்து நாம் பெயர் மாற்றிக் கொள்ளலம், உறவு முறைகள் வட்டார மொழி என்று நம் கற்பனை...

    //“அப்பா போதும்பா! நீங்க தனியா இங்க இருக்கறது. எங்களோட வந்துடுங்க.” வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.

    “வேணாம்டா. இங்கேயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்”. சுவாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடினார்.

    வாசுவிற்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக் கொண்டான். வசு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.//

    இவை நெல்லைத் தமிழனின் வரிகள்...எனவே நெ தவிற்கும், ஸ்ரீராம், கௌதம் அண்ணா எல்லோருக்கும் மிக்க நன்றி...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. @ ஜீவி:

    //… ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' என்று ஒரு நூல். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால..//

    உங்கள் நூலைப்பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி. ந.பிச்சமூர்த்தி காலத்திலிருந்து 37 எழுத்தாளர்களைப்பற்றி எனில் நிறையப் படித்திருக்கவேண்டும் நீங்கள். ஏகப்பட்ட உழைப்பு, கால அவகாசம் எடுத்துக்கொண்டுதான் அந்தப் புத்தகம் வெளிவந்திருக்கும். சந்தியா அதை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாங்கிப் படிக்க விரும்புவேன்.

    பரந்துபட்ட வாசிப்பனுபவம் எனக்குண்டு எனச் சொல்வதற்கில்லை. ஆனால் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களை select reading செய்திருக்கிறேன். இண்டர்நெட் இல்லாத காலத்தில் நான் நிறையப் படித்திருக்க, எழுதியிருக்கக்கூடும். ஆனால் நம் நாட்டில் இருந்தால்தானே.. எனது வெளிஉறவு அரசுப்பணி ஏகப்பட்ட நேரத்தைக் காவு வாங்கியிருக்கிறது ஒரு முப்பது வருட காலகட்டத்தில். All in life; all in the game..

    பதிலளிநீக்கு