வெள்ளி, 23 ஜூன், 2017

நினைவலைகள்! க க க போ 2.


இது இரண்டாம் கரு. 
=====================

ஒரு பூங்கா . 

அதில் உள்ள ஒரு இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்! 

தனியான, அழகிய இளம்பெண் !

அவளுடைய நினைவலைகள்தான் கதை. 

 

(ஹி ஹி சும்மா கையில் கிடைத்த படத்தைப் போட்டிருக்கேன். அதனால தமிழ்ப் பெண் இல்லை என்றெல்லாம் நெனச்சுக்காதீங்க!  ஏன் என்றால் தமிழில் அல்லவா அவளுடைய நினைவலைகள் இருக்கின்றன. மேலும் பி சுசீலாவின் பாடல் வரிகள் வேறு மிக்ஸ் ஆகவேண்டும். நெல்லைத் தமிழன் ஜெயராஜ் வரைந்த படம் போடவேண்டும் etc etc )

ஆனால் ... கதையின் கடைசி வரிகள்: 


அப்பொழுது எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்தது அந்த  இனிமையான பாடல்!  பாடலைப் பாடிய பி சுசீலா, அவளுக்காகவே அந்த வரிகளைப் பாடியது போலிருந்தது!  


-------------------------
யார் அவள்? என்ன நினைவலைகள்? என்ன பாடல்? எல்லாம் உங்கள் கற்பனைக்கு. 

நடத்துங்கள் யாகத்தை! 
------------------------------


திங்கள், 19 ஜூன், 2017

குற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்


அன்புடன்
நெல்லைத் தமிழன்

கண்டிஷனல்  கருவுக்கு கதை போட தெரியுமா?

சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேசுவதற்கு நான் 1 மணி நேரம் பேச்சைத் தயாரித்தால், அதே சப்ஜெக்டை ½ மணி நேரம் பேச 2 மணி நேரத்துக்குமேல தயாரிக்கறதுல செலவழிக்கணும். 10 நிமிடம்தான் பேசப்போறேன்னா, அதுக்கு இன்னும் நிறைய நேரமாகும் என்ற பொருள் வரும்படி சொல்லியிருக்கிறார். சிறுகதைக்கும் அதுதான் அளவுகோல் என்று நினைக்கிறேன். 20 வரிக்குள்ள சிறுகதை எழுதணும், அதுவும் கொடுத்த தீம்ல எழுதணும்னா அதுக்கு ரொம்பத் திறமை வேணும். நானோ, கதை எழுதறது கம்ப சூத்திரமா என்று எண்ணி எழுத முயல்கிறவன். எழுதும்போதுதான் தோணுது, நெடுங்கதை எழுதறது கொஞ்சம் சுலபம், 20 வரி (ஒரு பதிவுல அடங்கறமாதிரி) சிறுகதை எழுதறதுக்கு ரொம்பத் திறமை வேணும்னு. “நம்ம ஏரியா” சொன்ன கண்டிஷன்லதான் கதை எழுதியிருக்கேன். கொஞ்சம் (‘நிறையவே?) வள வளன்னுதான் எழுதியிருக்கேன். படம் இல்லைனா படிக்க சுகப்படாதுன்னு ஒரு படத்தையும் போட்டிருக்கேன் (எல்லாம் ஏதோ பத்திரிகையில் பார்த்த படம்தான்). அதுக்காக, இந்தப் படம் எந்த இடத்திற்காகப் போட்டிருக்கிறார்னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணாதீங்க. உண்மையாகவே 80கள்ல நல்ல படம் வரையும் திறமை இருந்தது. இப்போது பொறுமையே இல்லை. இதை வரைய 8 நிமிடங்கள் எடுத்துக்கொண்டேன்.


குற்றம் பார்க்கில் ... 

ஏம்பா.. என்ன பண்ணிண்டிருக்க. அம்மா கடைக்குப் போன்னு காலைலேர்ந்து கத்திண்டிருக்கா. நீயானா இங்க உட்கார்ந்து என்னவோ எழுதிண்டிருக்கயே.

டே.. இன்னைக்குள்ள ஒரு போட்டிக்கு கதை எழுதணும்டா. அதை எழுதிமுடிச்சுட்டேன்னா,கடைக்குப் போம்போது போஸ்ட் பண்ணிட்டு வந்துடுவேன். ரெண்டு நாளைக்குள்ள போய்ச் சேர்ந்துடும். இல்லைனா அப்புறம் டயம் கிடைக்காதுடா.

“இன்னுமா எழுதிண்டிருக்க”

“இல்லைடா. ஒரு வழியா கதையை எழுதிமுடிச்சுட்டேன். ஆனா ஒண்ணுமட்டும் நெரடறது”

என்ன கதை எழுதியிருக்க. வாசிச்சுப் பார்க்கவா?

‘பாரேன்’.

---

காலையில் கண்முழித்த ராமமூர்த்திக்கு, மேல்பெர்த்தில் படுத்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துத் திடுக்கிட்டது. பார்க்க கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். நாம படுத்துண்ட கீழ்பெர்த்துக்கு உரிய விசுவனாதன் அவராக இருக்குமோ என்ற சந்தேகம். இன்னும் பலர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நேரம் 5 மணி என்று கெடிகாரத்தில் ஒளிர்ந்தது. எழுந்து விரைவாக பக்கெட்டுடன் கழிவறை நோக்கிச் சென்றார். அவருக்கு தூர ரயில் பிரயாணமானாலும் சரி, தினமும் காலையில் குளிக்கவில்லையானால் ஓடாது. காலைக்கடனை முடித்துவிட்டு, குளித்து நெற்றி நிறைய விபூதி பூசி, தன் இடத்துக்கு வரவும், கம்பார்ட்மென்டில் ஒவ்வொருவராக எழுந்திருக்கவும் சரியாக இருந்தது.

என்ன டாக்டர் சார்… சிவப்பழமா இருக்கேள். எனக்கு, பல் தேய்க்கிறேனோ இல்லையோ, முதலில் காபி வயித்துக்குள் போனால்தான் மற்ற வேலையெல்லாம் ஓடும். பக்கத்து சீட் பத்மனாபன் கொட்டாவி விட்டுக்கொண்டே சொன்னார்.

‘காபி, டீ’ ரெண்டும் வரப்போறது. அவா அவா டம்ளர் எடுத்துண்டு ரெடியா இருங்கோ. டூர் ஆபரேடர் உதவியாளர் ஒவ்வொரு பகுதியிலும் உரத்துச் சொல்லிக்கொண்டே சென்றார். கட்டையான அந்தக் காண்டாமணி குரலைக் கேட்டு, எல்லோரும் எழுந்து அவரவர் பைகளில் டம்ளரைத் தேட ஆரம்பித்தனர்.

சுவாமினாதனும் மெதுவாக இறங்கி, அவரது பையைத் துழாவ ஆரம்பித்தார்.

“சார்.. நீங்கதான் சுவாமினாதன் சாரா?”  “ஆமாம்”

“நான் டாக்டர் ராமமூர்த்தி. நீங்க நடு ராத்திரிதான் ரயில்ல ஏறப்போறதாச் சொன்னா. கொஞ்சம் உடம்பு அயர்ச்சியா இருந்தது. என்னைவிட சின்னவர்தானே என்று நினைச்சு உங்களோட கீழ் பெர்த்துல படுத்துண்டுட்டேன். வந்தபோது எழுப்பியிருந்தேள்னா, மேல் பெர்த்ல போய்ப் படுத்துண்டிருப்பேன். சாரி”

“அதுனால என்ன சார். இந்த முதுகெலும்பு பிரச்சனையாலதான் மேல ஏறிப் படுத்துக்க சிரமமாயிருந்தது. அதுக்காக தூங்கறவாளை எழுப்பலாமா? காசிக்கு, பாவத்தைத் தொலைக்கப் போறவன், கூடக் கொஞ்சம் பாவத்தை ஏன் சேத்துக்கணும்?”

காபி, டீ வினியோகம் ஆனதும், டூர் உதவியாளரிடம், எப்போது டிபன் வரும்னு சுவாமினாதன் கேட்டார். “இப்பவே ரெடியாயிருக்கு. எல்லாரும் பல் தேய்ச்சு ரெடியாகிடட்டும். பதினைஞ்சு நிமிஷத்துல கொண்டுவந்திடறேன்”

எல்லோரும் தட்டில் சுடச்சுட பொங்கலும், சட்டினியும் வாங்கினபின், பெட்டியில் கலகலப்பு திரும்பியது.

“சுவாமி சார்.. நேத்து நைட் எங்களோட இருந்துருந்தேள்னா, ராத்திரி 11 மணி வரைல ஒரே சிரிப்பும் கும்மாளமுமாப் போயிருக்கும். நீங்க மிஸ் பண்ணிட்டேளே. சீட்டுக்கச்சேரிலயும் சேர்ந்திருக்கலாம். என்ன ஒரு கை குறைஞ்சுடுத்து” கோண்டு என்கிற கோவிந்தன் அங்கலாய்த்தார். சுவாமினாதனிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே வெளிப்பட்டது.

‘டாக்டர் சார்.. என்ன தட்டைத் தூக்கிண்டு கிளம்பிட்டேள்” கோண்டு வம்புக்கிழுத்தார்.

‘அம்மாவும் வொய்ஃபும் சாப்டாச்சான்னு பார்த்துட்டு வந்துடறேன்’

கம்பார்ட்மென்டில் ஒரு பகுதியில் பெண்களுக்குத் தனியிடம் ஒதுக்கியிருந்தார்கள். அவாளுக்குள்ள பேசிண்டிருக்கவும், சட்டுனு அமைதியா தூங்கறதுக்கும் அது வசதிதான். டூர் ஆபரேட்டருக்குத்  தெரியும். எப்போதும் ஆண்கள் சைடுல இரயில் பிரயாணம்னா சீட்டு, கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. எப்படியும் கோவில், மற்ற இடங்களெல்லாம் பார்க்கப்போகும்போது அவா அவா பெண்டுகளோட சேர்ந்துதான் போவா. பிரயாண சமயத்திலாவது கொஞ்சம் எஞ்சாய் செய்கிறவர்கள் எஞ்சாய் செய்யட்டுமே என்று இப்படி அரேஞ்ச்மென்ட். பெரும்பாலும் எல்லோருக்கும் இதில் சந்தோஷம்தான்.

திரும்பி வந்தபின், ராமமூர்த்தி, தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த சுவாமினாதனைப் பார்த்தார். “என்ன சார்.. சோர்வா இருக்கறமாதிரி தெரியறது. நீங்க மட்டும்தான் வந்திருக்கேளா.. அல்லது ஆத்திலயும் வந்திருக்காளா?”

“இல்லை டாக்டர் சார். நான் மட்டும்தான்.”.

“என்ன சார்… கயா யாத்திரைனா சும்மாவா. ஆத்திலயும் கூட்டிண்டு வந்திருக்கலாமே”

“சார்.. நான் ஒரு டிவோர்சி. என் அம்மா சமீபத்துல பரகதி அடைஞ்சுட்டா. என்னோட உடம்பு கொஞ்சம் சரியா இருக்கறச்சேயே அவளுக்கு கயா ஸ்ராத்தம் பண்ணிடலாம்னு இதுல ஜாயின் பண்ணினேன்”

“அடடா சின்ன வயசுலேவா உங்காத்து மாமியைப் பிரிஞ்சுட்டேள்? குழந்தைகள்லாம் இருக்கோ?” கோண்டு பேச்சில் நுழைந்துகொண்டார்.

“என்னோடது கொஞ்சம் வித்தியாசமான கதை. ரொம்பப் பேர் சொந்த வாழ்க்கையின் அவலத்தை வெளில சொல்லமாட்டா. நான் பண்ணினது தவறுன்னு எனக்குத் தோன்றினதுனால, அதைச் சொல்றதுக்கு நான் வெட்கப்படலை. தவறை, தவறுன்னு புரிஞ்சுண்டு அதை வெளிய வெட்கப்படாமல் சொல்றதுதான், அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறதுக்கான முதல்படின்னு நான் நம்பறேன்”

ஏதோ சுவாரசியமான கதை கேட்கற ஆவல் எல்லோருக்கும் வந்தது. சுவாமினாதன் தொடர்ந்தார்.

‘நான் அம்மாவுக்கு ஒரே மகன். ரொம்ப நாள் கழிச்சுப் பொறந்தவன். எங்க அம்மா ஜாதி விட்டு ஒரு செட்டியாரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுண்டா. ஜாதி விட்டு கல்யாணம் செஞ்சுண்டதுனால, எங்க அம்மாவை அவா உறவினர்களெல்லாம் விலக்கிட்டா. அப்பா பணக்காரானாலும் அவருக்குள்ள சொத்தைப் பிரிச்சுக் கொடுத்துட்டு உறவை அத்துண்டுட்டா. எனக்கு 6 வயதா இருக்கும்போதே எங்கப்பா இறந்துட்டா. அப்போலேர்ந்து எங்க அம்மாவுக்கு நானும், எனக்கு அவளுமா இருந்தோம். நானும் நல்லாப் படிச்சு ஆடிட்டரானேன். எங்கம்மா கொஞ்சம் கண்டிப்பானவ. எதுவும் ஒரு ஒழுங்கோடதான் நடக்கணும்னு அவளுக்கு. அதை மீறினா ரொம்ப கோபப்படுவா. நானும் அம்மா மனம் கோணாம எப்போதும் எங்கம்மாவுக்கு விட்டுக்கொடுத்துடுவேன்.  அவ செய்யறது தவறுன்னு மனசுக்குத் தோணினாலும் அதை வெளிப்படையா சொல்லவே மாட்டேன். சரி. சரி.. பெரியவங்க.. வாழ்க்கையிலே தனிமையாவே ரொம்பவருஷமா கஷ்டப்படறாளேங்கற எண்ணம்தான் என் மனசுல இருக்கும். அப்படி இருந்தது என் வாழ்க்கையைப் புரட்டிப் போடும்னு நான் நினைக்கவேயில்லை”. சுவாமினாதன், பெருமூச்செறிந்து ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

“யாருக்கேனும் இன்னும் பொங்கல் வேணுமா? அடுத்து 10 மணிக்கு டீதான். மத்தியானம் அலஹாபாத் போன உடனே அங்கே ரெண்டு மணிக்கு லஞ்ச்” உதவியாளர் சொல்லிக்கொண்டே சென்றார். கதை கேட்கிற சுவாரசியத்துல யாருக்கும் பசியைப் பத்தின கவலை இல்லாமல் போயிடுத்து.

அப்படி என்ன ஆயிருக்கும். எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி எழுந்தது. சட்டென்று எழுந்த அமைதியே சுவாமினாதனுக்கு மீதிக் கதையைச் சொல்லும் உத்வேகத்தைக் கொடுத்தது.

“அம்மா ஜாதிமாறி கல்யாணம் பண்ணிண்டதால, எனக்குக் கல்யாணம் பண்ணறது கொஞ்சம் தடை பட்டுண்டே போயித்தான் நடந்தது. என் ஆத்துக்காரி கல்யாணியோட எங்க அம்மாவுக்கு ஆரம்பத்துல நல்லா ஒத்துத்தான் போச்சு. ஆனா, அவளுக்கு எங்க அம்மா எல்லாத்துலயும் தலையிடறது பிடிக்காமல் போயிடுத்து. நான் சாப்பிடறதுகூட, எங்க அம்மாவோடதான் சாப்பிடணும்னு எதிர்பார்த்தா. மூச்சுக்கு முன்னூறு தடவை, சுவாமிக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, அதப் பண்ணினயா, இது வேண்டாம்னு ரொம்ப மூக்கை நுழைச்சது கல்யாணிக்கு வெறுப்பு வர காரணமாயிடுத்து. எப்போப் பாத்தாலும் கல்யாணிகிட்ட சிடுசிடுன்னு இருப்பா. சாயந்திரம் நான் வந்தா கல்யாணியைப் பத்தி ஏதேனும் குறை சொல்லிண்டிருப்பா. கிட்டத்தட்ட கல்யாணி ஒரு மூணாம் மனுஷி மாதிரித்தான் வீட்டுல இருந்தா. நான் வீட்டுல இல்லாதபோது ரெண்டுபேரும் ரெண்டு துருவங்களாத்தான் இருந்தாங்க.  எனக்கு அம்மாவைக் கடிந்து சொல்ல மனமே இல்லை. கல்யாணிட்ட, எவ்வளவோ சொல்லிப்பாத்தேன், ‘அவ பெரியவ. புரிஞ்சிக்கறது கஷ்டம்னு’. ஒரு கட்டத்துல தனிக்குடித்தனம் வச்சால்தான் ஆச்சுன்னு கல்யாணி சொல்லிட்டா. அவள் சொன்னதுல தப்பில்லை. ஆனால் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள்ள தனிக்குடித்தனமா, அம்மாவை எப்படி தனியா விடறது? என்னால அதை நினைச்சே பார்க்கமுடியல. என் நேரம்தான் சரியில்லைனு சொல்லணும். யாரோட சமாதானமும் கல்யாணி மனசுல ஏறவேயில்லை. எங்க அம்மாவும் தன்னை மாத்திக்கொள்ளவேயில்லை. ஒரு நாள், தன்னோட அம்மா வீட்டுக்கே போறேன்னு எழுதிவச்சுட்டு கல்யாணி போயிட்டா. அப்போ இருந்த மனநிலைல எனக்கும் கோபம் வந்துடுத்து. சமாதானப் படுத்த முயற்சி எடுக்கலை. அவ ஊருக்குப் போய் அவள்ட பேசி, அவளை வரச்சொல்ல எனக்குத் தன்மானம் இடம் கொடுக்கலை. கோபத்துல விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டேன். 

“என்ன டைவர்சா?” ஏக காலத்தில் சத்தம் வந்தது. “ஐயையோ.. சமாதானப்படுத்தலையா நீங்க. இல்லை மத்தவா மத்யஸ்தம் பண்ணலையா”.

“அவளை சமாதானப்படுத்தலை. அம்மாவுக்கும் புரியவைக்க முடியல. தனிக்குடித்தனம்னா சரி.. நீங்க அம்மாவை விட்டுட்டு வரணும்கறதுதான் அவாளோட கண்டிஷனாக இருந்தது. அதுக்கு எனக்கு மனசு இல்லை. கடைசில விவாகரத்தாயிடுத்து”

“வேற கல்யாணம் பண்ணிண்டேளா? அப்புறம் என்னாச்சு”

“அதுக்குள்ள அம்மாவுக்கும் கொஞ்சம் முடியாம ஆயிடுத்து. அவ, தான் பண்ணினது தப்புன்னு நினைக்கலை. அவ குணம் அப்படி. கொஞ்ச வருஷம் கழிச்சு, அம்மா என்னை, கல்யாணியைப் போய் பாத்துட்டுவாடா. டைவர்ஸ் ஆச்சுன்னு நினைக்காதேன்னு சொன்னா. நானும் தயக்கத்தோட அவ ஊருக்குப் போனேன். அவளும் அவ பெற்றோரும் ஊரைக் காலிபண்ணிட்டுப் போயிட்டான்னு கேள்விப்பட்டேன். எங்க அம்மாவோடதான் என்னோட வாழ்க்கைன்னு ஆய்ப்போச்சு. அது ஆச்சு 20 வருஷத்துக்குமேல. ரெண்டு வருஷம் முன்னால்தான் அம்மா காலமாயிட்டா. அவளாவது நற்கதி அடையட்டும்னு கயா ஸ்ராத்தத்துக்காகப் போறேன்.. நம்பி வந்த பொண்ணோட வாழ்க்கையை அழிச்ச பாவத்துக்குத்தான் ப்ராயச்சித்தமே கிடையாதே”

குனிந்து கண்ணில் பெருகும் நீரைத் துடைத்துக்கொண்டார்.

“வருத்தப்படாதீங்கோ சார்.. உங்களைப் பார்த்தா என் சகோதரன் மாதிரிதான் எனக்கு எண்ணம் வருது. விதியை யாரால மாத்த முடியும்”  ராமமூர்த்தி சுவாமியின் கையைப் பிடித்துக்கொண்டார்.
‘ஏன்னா.. உங்களை அம்மா கூப்பிடறா” நித்ய கல்யாணி ராமமூர்த்தியைக் கூப்பிட்டாள்.  அவர் யாருடைய கையைப் பிடித்திருக்கிறார் என்று பார்த்த நித்யாவுக்கு சுரீர் என்று மனதில் தோன்றியது. “இதோ வர்றேன் ஏதேனும் பிரச்சனையா”  கேட்டுக்கொண்டபடி ராமமூர்த்தி மனைவியைத் தொடர்ந்தார்.

என்ன மாதிரியான பெண்ணை, மனைவியாக எனக்கு பகவான் கொடுத்திருக்கிறார். ராமமூர்த்தியின் மனதில் பெருமிதம் ஏற்பட்டது.

சிறுவயதிலிருந்தே அவருக்குபிறருக்கு உதவும் எண்ணம் இருந்தது. தந்தையில்லாமல் தன்னை வளர்த்த அம்மாவுக்கும் அதே எண்ணம்தான். எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாள். ‘பகவான் கொடுத்த உயிர்அடுத்தவாளுக்கு உதவறதுக்குத்தாண்டா. ராமூ,நம்மகிட்ட இருக்கற பணம்லாம் நம்மோடது இல்லடா. நாம பகவானின் பணத்தைத்தான் கையாளறோம்னு எப்போயும் நினைக்கணும். அடுத்தவாளுக்கு உதவ முடியலைனா மனுஷ ஜன்மம் எடுத்து என்ன பயன்இல்லை பணத்தினால்தான் என்ன பயன்”

நன்றாகப் படித்த ராமுதனக்கு உகந்த தொழிலாகமருத்துவரானார். சிறிய கிளினிக்கை வைத்திருந்தாலும்அவர் கவனம் முழுக்க மேலே மேலே படிப்பதிலும்மற்றவர்களுக்கு எந்த எந்த வழிகளில் பயன்படலாம் என்பதிலுமே நேரம் கழிந்தது. அம்மா என்ன சொன்னாலும் தட்டாத ராமமூர்த்திஅம்மா கல்யாணப் பேச்சை எடுக்கும்போதெல்லாம் தட்டிக்கழித்துவிடுவார். லட்சுமிக்கு இது ரொம்ப வருத்தம் என்றாலும்பத்து ரூபாய் டாக்டர் என்று மகன் பெயர் பெற்றது அவளுக்கு சந்தோஷம்தான். அடுத்தவர்களுக்கு உதவணும்னு தான் சொல்லிக்கொண்டே இருந்தது இந்த அளவு அவன் மனசை ஆக்கிரமிக்கும் என்று அவள் நினைத்ததில்லை. வாரம் ஒரு நாள் எங்க இலவச மருத்துவ முகாம் அமைத்தாலும் தானும் போய் சேவை செய்யப் புறப்பட்டுவிடுவார். மனதில் எப்போதுமே திருமணம் செய்துகொள்ளும் எண்ணமோ அந்த ஆசையோ அவருக்கு ஏற்பட்டதில்லை. அம்மாவுக்கு உடம்பு முடியாவிட்டால் பார்த்துக்கறதுக்குக் கூட வீட்டில் ஒருத்தி இல்லையேடா என்று அம்மா சொல்லும்போதெல்லாம்அதுக்கென்னமாஒரு நர்ஸை ஏற்பாடு பண்ணிடுவேன்,கவலைப்படாதே என்று சொல்லிவிடுவார்.   ஒரு நாள்அம்மா, ‘ஏண்டா எனக்கு முடியாமப் போயிடுத்துனா யாரையோ விட்டுப் பார்த்துக்கச்சொல்வேன்னு சொல்றயே.. நீ கல்யாணம் பண்ணிண்டு உன் பொண்டாட்டி என்னப் பாத்துப்பான்னு சொல்ல மாட்டேங்கிறயே’ என்று கண்ணீர் விட்டபோதுதான்சரிஅம்மாவுக்காக திருமணம் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. ஆதரவற்ற பெண்ணையோ அல்லது துணையை இழந்த பெண்ணையோதான் திருமணம் செய்யவேண்டும் என்றும் அவர் தீர்மானித்தார். இப்படித்தான் நித்யா அவர் மனைவியானார். தன்னுடைய லட்சியத்துக்குக் கிஞ்சித்தும் குறை வராமல்வீடுஅம்மாவின் சௌகரியம் போன்ற எதுவுமே அவருக்குக் குறுக்கே நில்லாமல்அவருக்கு மிகவும் உதவியாக இருந்தாள். அம்மாவுக்கோஅவள்அவரைவிட முக்கியமானவளாக ஆகிவிட்டாள். ஆச்சு.. பதினைஞ்சு வருஷம் ஓடினதே தெரியலை. குழந்தை இல்லை என்பதைத் தவிர,வேறு குறை எதுவும் இல்லை. அம்மாகாசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரத்துக்குப் போகவேண்டும் என்று சொன்னதால் மூன்றுபேரும் இந்தப் பயணத்தில் சேர்ந்திருந்தார்கள்.

என்னம்மா”... ‘. அம்மா இருந்த கேபினில்நித்யாவைத் தவிர பிறர் இல்லை. “ஏண்டா.. காசில 7 ராத்திரி தங்கி விசுவனாதருக்கு அபிஷேகம் செய்தா குழந்தை கண்டிப்பா பொறக்கும்னு இப்போ ஒருத்தர் சொன்னா. நாம அங்க இருந்துட்டு அப்புறமா திரும்பினா என்னடா”. “அம்மா.. ப்ராப்தம் இருந்தா குழந்தை பிறக்கும். அதுக்காக இதிலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. என்னை வற்புறுத்தாதே. பகவானுக்கேஎனக்குன்னு குடும்பம் இருந்தா அதுலதான் என் கவனம் போகும்இவன் மத்தவங்களுக்கு சேவை செய்யட்டும்னு குழந்தை பாக்கியம் கொடுக்கலையோ என்னவோ. இந்தத் தடவை இந்த யாத்திரைக்கு வந்தது உனக்கு உடம்பு நல்லா இருக்கும்போதேஇந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிண்டுபோணம்னுதான். நீ ஏன் எங்களைப் பத்தி விசாரப்படறே” என்றவாறே திரும்பினார் ராமமூர்த்தி.

......
யாத்திரையிலிருந்து திரும்பினபிறகு ரெண்டு நாள் கழித்துஒரு மத்தியான வேளையில் கல்யாணியிடம் லட்சுமி சொன்னாள். “சின்ன வெங்காயத்தை நான் உரிக்கறேன். சாயந்திரம் இட்லிக்கு வெங்காய சாம்பார் பண்ணிடு”.

“பாத்துப் பண்ணுங்கோ அம்மா. கத்தி கைல பட்டுடப்போறது. நீங்க ஏன் இதெல்லாம் பண்ணணும். நானே பண்ணிப்பேனோல்லியோ”.

“அலகாபாத் போய்ச் சேர்ந்த அன்னைக்கு நீங்க ரெண்டுபேரும் என்னடி தனியாப் பேசிண்டிருந்தேள். வரும்போது உன் கண் கலங்கி இருந்தது. குழந்தை விஷயமா காசில தங்கச்சொல்லிச் சொன்னதுக்கு ஏதேனும் சொன்னானாஉன்னை ஏதேனும் திட்டினானா?”

“இல்லம்மா. அவர் அதைப்பத்திலாம் ஒண்ணும் சொல்லலை. அவர் என்னைக்கு என்னைத் திட்டியிருக்கார்?.”

“அப்புறம் எதுக்குடி கண் கலங்கியிருந்ததுநான் அப்போவே கேட்கக்கூடாது மறுநாள் கேட்கணும்னு நினைச்சேன். அப்புறம் எல்லோரோடவும் யாத்திரைல இருக்கறச்சே கேட்கவே மறந்துடுத்து”

“உங்கட்ட சொல்லாததுக்கு மன்னிச்சுருங்கோம்மா. அன்னைக்கு ரயில்ல என்னோட முதல் கணவனும் வந்திருந்தார்”.

“யாரு. சுவாமினாதன்னு சொன்னேயே. அவரா?”

“ஆமாம். நீங்க கூப்பிட்டேள்னு நான் உங்க பிள்ளையைக் கூப்பிடப் போனப்ப இவர் இருந்த அதே பொட்டிலதான் அவரைப் பார்த்தேன். அவர்உங்க பிள்ளைட்ட தன்னோட கதையெல்லாம் சொன்னாராம்.. கதையைக் கேட்கும்போதே அவருக்கு சந்தேகம் வந்ததாம். நான் சட்டென்று முகம் மாறினதைப் பாத்து அவருக்குப் புரிஞ்சுடுத்தாம்”

“ராமு அதுக்கு என்னடி உங்கிட்டச் சொன்னான்?”

“உங்க பிள்ளை அன்னைக்கு எங்கிட்ட பேச வந்தப்போஎனக்கு ரொம்ப பட படப்பா இருந்தது. ஆனா அவர், ‘நித்யா.. எல்லாப் பொண்களும் நல்லவாதான். நாம அவா கிட்ட நடந்துக்கறதப் பொறுத்துத்தான் இருக்கு. நீ அதே பொண்ணுதான். அம்மாவுக்கு உன் மேல் எத்தனை அன்பு,பாசம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னெல்லாம் அம்மாக்கு நான் எப்படா ஆத்துக்கு வரேன்னு இருக்கும். நீ ஆத்துல காலடி எடுத்துவச்சப்பறம் என்னைவிட உம்மேலதான் அவளுக்கு அத்தனை அன்பு. எனக்கும் வாழ்க்கைல ஒரு அர்த்தமும்அம்மா சந்தோஷத்தைப் பார்த்து நிம்மதியும் கிடைச்சது. எங்களுக்குக் கிடைச்ச தனமாத்தான் நீ இருக்க. அதே பொண்ணோட நல்ல குணம் அவாளுக்கு அப்போ சரியாத் தெரியலை. அத விதின்னுதான் சொல்லணும். இப்போ அவர் வருந்தி என்ன பிரயோசனம்நீ இதை நினைத்து விசாரப்படாதே. அம்மாட்டயும் சொல்ல வேண்டாம். பழைய அத்தியாயத்தை மீண்டும் புரட்டறதுல என்ன அர்த்தம் இருக்கு’ ன்னுட்டார். அவரோட அன்ப நெனைச்சு எனக்குக் கண் கலங்கித்து.

லட்சுமிக்கும் கண்களில் நீர் வந்தது. அது வெங்காயத்தாலா அல்லது பிள்ளையின் பண்பான குணத்தாலா என்று அவளுக்குத் தெரியவில்லை.
----

ஏம்பாஎன்ன தலைப்புல கதை எழுதச் சொன்னாஇல்லை ஏதேனும் தீம் கொடுத்திருக்காளா?

“ரயில் பிரயாணத்துல கதை நடக்கணுமாம். டைவர்ஸ் பண்ணின பெண், இன்னொருவன் மனைவியா, அவர் கணவரோட அதே டிரெயின்ல வரணுமாம். அவளோட பழைய கணவனும் புதுக் கணவனும் பேசி ஒருவரைப் பற்ரி மற்றொருவர் அதிக விவரங்கள் தெரிஞ்சுக்க ஆசைப்படறாங்களாம்”

அதுக்கு எதுக்கு, அப்புறம் கதையை வள வளன்னு நீட்டிருக்க? ராமமூர்த்தி வைஃப் சுவாமியைப் பாத்தாச்சோன்னோ. அதோடயே கதை முடிஞ்சதோல்யோ. அப்பவே. சண்டை போட்டா இல்லை, பயந்து பேசாமப் போயிட்டா இல்லை சுவாமி மன்னிப்புக் கேட்டார் அப்படின்னு முடிச்சிருக்கவேண்டியதுதானே. குழந்தை வரம், காசில தங்கறதுன்னுலாம் வள வளன்னு சப்ஜெக்டை விட்டுப் போறது.

‘டே.. கதை கடைசில அவா கொடுத்துருக்கற வரில முடியணுமாம்’.

“எந்த வரிலயாம்?’

 "பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்." 

(கதை முடிந்துவிட்டது. இனி  நம்ம ஏரியா ஆசிரியர்  ஒருவரின் அதிகப்பிரசங்கம் :  "சர்ச்சில் சொல்லியிருக்கிறார்" என்று படிக்க ஆரம்பித்ததும், Church என்று நினைத்து, யார் சொன்னார், எந்த சர்ச்சுல  என்று கொஞ்சம் குழம்பினேன். அப்புறம் குற்றம் பார்க்கில் ... என்று படித்ததும், ஏதாவது ஒரு  Park ல நடந்த குற்றம் பற்றிய மர்மக்கதை என்று நினைத்தேன். நெல்லைத் தமிழன் ஆட்டோ அனுப்புவாரோ என்று இப்போ பயமா இருக்கு. மீண்டும் கட்டிலுக்கடியில் தஞ்சம் புக வேண்டி வரும் போலிருக்கு!)  சனி, 10 ஜூன், 2017

க க க போ தெரியுமா?


தலைப்பைப் பார்த்து, யாரும் குழம்பாதீங்கோ ! 


விளக்கம் : கண்டிஷனல்  கருவுக்கு கதை போட தெரியுமா? 

அதாகப்பட்டது, நாங்க ஒரு கதைக்கரு இங்கே கொடுப்போம். சில கண்டிஷனும் போடுவோம். 

அந்தக் கருவை கண்டிஷனாக வளர்த்து, நீங்க ஒரு சிறுகதை எழுதவேண்டும். 

(என்னது தொடர்வதையா? சாரி தொடர்கதையா? ஊஹூம் - அதெல்லாம் கிடையாது. முடியாது. நஹீ. etc )

கரு இதுதான்: 

ஒரு விவாகரத்தான ஆண். ரயிலில் ரிசர்வ் செய்து, பத்துமணி நேரப் பயணம். அதே ரயிலில், விவாகரத்து செய்த / செய்யப்பட்ட  மனைவி புதிய கணவனுடன், புதிய கணவனுக்கு பழைய கணவரைத் தெரியாது. நீண்ட தூர, நேரப் பயணம் என்பதால், பயணிகள் எல்லோரும்  ஒருவருக்கொருவர் பெயர், ஊர், என்ன தொழில், ஏன் இந்தப் பயணம் போன்று விவரங்களுடன்  அறிமுகம் செய்துகொள்கிறார்கள். பிறகு பயணிகள் ஒருவருக்கொருவர் பேசியபடி பயணிக்கிறார்கள். விவாகரத்தான ஆணும், புதிய கணவனும்தான் அதிகம் பேசி, ஒருவரைப்பற்றி மற்றவர் அதிக விவரங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். 
      


கண்டிஷன்: 

கதையின் கடைசி வரி இதுதான். " பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்." 


============================

மற்றபடி, கதையின் தலைப்பு, பெயர்கள், வசனங்கள், இத்யாதி எல்லாம் உங்கள் இஷ்டம் போல். 

எழுதிய கதையை அவரவர் தளங்களில் வெளியிட்டு, சுட்டியை 

kggouthaman@gmail.com

and 

sri.esi89@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். உங்கள் வலைப்பூவில் வெளியிடுவதாக இருந்தால், முன்னுரையில், இந்தப் பதிவிற்கு ஒரு சுட்டி கொடுங்கள். 

அல்லது கதையை இதே மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 


மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பின்னூட்டத்தில் கேளுங்கள். 

Start Music. 


வியாழன், 8 ஜூன், 2017

ரோஜா ரோஜா ...! குரோம்பேட்டை குறும்பன்

 
கடந்த நான்காம் தேதி.
அதிகாலை.
அலைபேசி .... குழலூதி மனமெங்கும் கொள்ளை கொண்டது.
யாரு என்று பார்த்தால் .....  
கு. கு. கு. கு. என்று அறிவித்தது.

"யோவ் கு கு ! என்ன இந்த நேரத்துல ?"

" ரோஜா படம் வரைஞ்சிருக்கேன். வந்து வாங்கிக்க ! "

" மெயில் பண்ணு "

"முடியாது"

"ஏன்? "

"நெட் இல்ல. "

--------------------------
ஹூம் .....  பொடி நடையாக நடந்து குமரன் குன்றம் சென்று குரோம்பேட்டை குறும்பனை அலையில் அழைத்தேன்.

"அட்ரஸ் சொல்லு. "

" சொல்லமாட்டேன் "

" அப்போ நான் திரும்பிப் ...."

" போகாதே ! பக்கத்துல விவேகானந்தா வித்யாலயா இருக்குதா? "

" ஆமாம்."

" கேட்டுல தயிர் வடை தேசிகன் மாதிரி ஒரு செக்யூரிடி ஆள் இருக்காரா?" 

" ஆமாம்."

" அவருகிட்ட போயி, அவர் காதுல ..... 'நம்ம ஏரியா கு கு ' ன்னு சொல்லு"

சொன்னேன்.
என்னை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு ஒரு கவரை என் கையில் கொடுத்தார்.
கரகரத்த குரலில் " வீட்டுக்குப் போய்தான் பிரிச்சிப் பார்க்கணும் " என்றார்.
-----------------------------
வீட்டுக்கு வந்து, கவரைப் பிரித்தேன் .

அதில் இருந்த இரண்டு படங்களில் ஒன்று இது.

இன்னொன்று? 


செவ்வாய், 6 ஜூன், 2017

ரோஜா 3


இது நம்ம ஏரியாக்கு ..மகள் வரைஞ்சது 

சாக்லேட் box உள்ளிருக்கும் perforated Cushion pad மேலே வரைஞ்சி அதுமேல பேப்பர் piecing டெக்னீக் ,க்ரேப் பேப்பர் ஒட்டி கலர் செய்தது .


ஏஞ்சலின் . 


          

ஞாயிறு, 4 ஜூன், 2017

அதிராவின் ரோஜா !*'கெளதமன் அண்ணன்' நலமாக இருப்பீங்கள் என நம்புகிறேன். நான் வரைந்த, ஃபப்ரிக் பெயிண்ட் பண்ணிய [நாமிருவர்.. நமக்கிருவர்.. அஞ்சுவையும் சேர்த்துச் சொன்னேன்:)]  ரோசாக்கள் வருது.. உங்கள் வசதிக்கு வெளியிடுங்கோ. படங்கள் துலக்கமா இருக்கோ எனச் சொல்லிடுங்கோ, இல்லை எனில் திரும்ப அனுப்பிவிடுறேன்.

நன்றி,
அன்புடன் அதிரா.


(ஊசிக் குறிப்பு :  * கௌதமனுக்கு நாலு அண்ணன்கள். எந்த அண்ணனைக் கேட்கிறீர்கள்? 

அடுத்த பதிவில், மினி ஏஞ்சல் வரைந்த ரோஜா.)  


வியாழன், 1 ஜூன், 2017

ரோஜா 1ஏஞ்சலின் அவர்கள் முதல் ஆளாக ரோஜா வரைந்து அனுப்பியிருந்தார். 

(மே நான்காம் தேதி என்னுடைய நூற்று நான்கு வயது அம்மா இறைவனடி சேர்ந்தார்கள். அதைத் தொடர்ந்து பல காரியங்கள் நானும் என் சகோதரர்களும் சேர்ந்து செய்யவேண்டியதாயிற்று. அதனால் வலைப்பூ பக்கம் வருவது மிகவும் குறைந்து போயிற்று. )


எங்கள் வாசகர்கள் எல்லோரும் இனி தொடர்ந்து அவர்கள் வரைந்த ரோஜாப்பூ படங்களை, 

kggouthaman@gmail.com 

அல்லது / and 

sri.esi89@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். வழக்கமான காலதாமதத்துடன் வெளியிட முயற்சி செய்கிறோம். 

சகோதரி ஏஞ்சலின் முதலில் அனுப்பிய படம் இது. 

பிறகு அவர் பீரோ அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தார். 


1)   ரோஜா வந்துகிட்டேயிருக்கு :) மயில் கிட்ட கொடுத்து அனுப்பியிருக்கேன் :) 

2)  மகளைத்தான்  வரைய சொல்ல நினைச்சேன் ..பொண்ணு எக்ஸ்சாம்ஸில் பிசியா இருக்கா .அதனால் நானே வரைஞ்சி biro வில் அவுட்லைன் கொடுத்து கலர் பண்ணினேன் ..
இதே படம் இன்னொரு வடிவிலும் வரும் அதையும் அனுப்பறேன் . 


The pictures are here! 

A)

 B) 
 C) 
 D) 


A , B , C, D இந்த நாலில் எது நல்லா இருக்கு? 

ஆஷா போன்ஸ்லே பாடட்டும். சாரி பதில் போடட்டும்! 

    
(அதிரா அவர்கள் அனுப்பிய படத்தை இப்போதான் பார்த்தேன். அதை அடுத்த பதிவில் காணக்கொடுப்போம்!)