எழுதியவர் : குரோம்பேட்டைக் குறும்பன்.
இளவரசி சொன்னதைக் கேட்ட புங்கவர்மனுக்கு தன காதுகளையே நம்ப முடியவில்லை.
"இன்னும் ஒருமுறை சொல்லு?"
"மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை கண்டு பிடித்து, கொல்லவேண்டும்."
"என்ன? கொல்ல வேண்டுமா?"
"ஆமாம்"
"ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி?"
"விவரமா சொல்றேன் கேட்டுக்குங்க. என்னுடைய சுயம்வரத்திற்கு மொத்தம் அம்பத்தாறு தேச மன்னர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என் தந்தை. ஆனால் வந்தது என்னவோ நாற்பது தேச இளவரசர்கள்தான்."
"பாக்கி?"
"எப்படியோ எஸ்கேப் ஆயிட்டாங்க. ஆமாம் நீங்க ஏன் சுயம்வரத்திற்கு வரவில்லை"
"எப்போ நடந்திச்சு சுயம்வரம்?"
"நேத்திக்கு"
"ஹி ஹி ... எங்கள் அரண்மனை தபால் ஊழியருக்கு நான்கு மாத சம்பள பாக்கி. இன்றைக்கு வருகின்ற தந்தியையே அவரு ஒரு வாரம் கழிச்சிதான் கொண்டு வந்து கொடுப்பாரு. சுயம்வர லெட்டர் போட்டிருந்தீங்கன்னா ஒரு மாதம் கழித்துத்தான் கொடுப்பாரு."
"சரி. நாற்பது பேர்களில் நீ யார் கழுத்தில் மாலை போட்டாய்?"
"வந்த நாற்பதும் சுமாராகத் தான் இருந்தார்கள். அதுல இருந்தவர்களுக்குள் கமலஹாசன் போல இருந்த ஒருவருக்கு மாலை போட்டேன்."
"என்னது! கமலஹாசன் போல இருந்தவரை சுமார் என்று சொல்கிறாய்?"
"ஓ சாரி. அவர் குணா கமலஹாசன் மாதிரி இருந்தார்."
"அபிராமி, அபிராமி! அவரைத்தான் நான் தேட வேண்டுமா?"
"இல்லை. அவரை இல்லை. நான் அவருக்கு மாலை இட்டதும், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, குறும்பானந்தா என்னும் சாமியார் இளவரசன், எனக்குச் சாபம் இட்டான்."
"என்ன என்று?"
"என்னைப் போன்ற குறு(ம்பு)முனியை மணக்காமல், குணா கமலனை மாலையிட்ட உனக்கு இந்த சாபம் இடுகின்றேன். நீ மாலை இட்டவரை யார் கொல்கிறார்களோ அவர் உன் கணவராவார்."
"அப்புறம்?"
"இதைக் காதில் கேட்டவுடன், குணாவுக்கு முன்னே இருந்த தனா அவரைக் கொன்றுவிட்டு, தானே என் கணவன் என்றான்."
"அய்யய்யோ! அப்புறம்?"
"குறும்பானந்தா சும்மா இல்லாமல், 'அப்படிக் கொன்ற கணவனை யார் கொல்கிறார்களோ அவனே உன் புருஷன்' என்றார்."
"கொண்டவனைக் கொன்றவனை, கொண்டவன் என்றால் அவனைக் கொன்று கொண்டவனாகிறான் - கொல்லப்படுபவன்..... ஐயோ இப்பவே கண்ணைக் கட்டுதே!"
"எனக்கும் அப்படித்தான் கண்ணைக் கட்டிச்சு. குறும்பானந்தாவின் கால்களில் தடாலென்று விழுந்து, சாமீ - இந்த சாபத்திற்கு விமோசனம் கிடையாதா என்று கேட்டேன்."
"என்ன சாப விமோசனம் என்று சொன்னார்?"
"இப்படி ஒருவரை ஒருவர் கொன்று, கடைசியில் முப்பத்தொன்பதாவது கணவனைக் கொல்லுகின்ற, இந்த சுயம்வரத்திற்கு வராத இளவரசனே உன் முழு நேரக் கணவன் ஆவான். அது மட்டும் இல்லை இந்தத் தவ முனிக்கு மாலை இடாததால், நீ மாலை நேரங்களில் தவளையாக மாறிவிடுவாய். உன் நாற்பதாவது, நிரந்தரக் கணவனைக் கண்டதும், உன் தவளை உருவம் விலகிவிடும்'என்று சொன்னவாறு அவர் போட்டியிலிருந்து விலகி வெளிநடப்பு செய்துவிட்டார்."
"அப்புறம்?"
"ஒருவரை ஒருவர் வெட்டி சாயப்பதைப் பார்த்ததும், அதிர்ச்சியிலேயே மீதியிருந்த இளவரசர்களில் ஒருவர் மயக்கமாகி விழ, அவரை அந்த நாட்டு ஆபத்துதவிகள் தூக்கிச் சென்று விட்டார்கள்."
"அப்போ பாக்கி இருந்த முப்பத்தெட்டு பேர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்து முப்பத்தி எட்டாவது இளவரசர், உன்னை இங்கே சனிமூனுக்கு சாரி - ஹனிமூனுக்கு அழைத்து வந்தாரா?"
"ஆமாம்."
"இங்கே நீங்க ரெண்டு பேரும் வந்து சேர்ந்தவுடன், அரக்கன் தோன்றி, அவரைக் கவர்ந்து சென்று விட்டான். சரியா?"
"அட! இவ்வளவு சமத்தா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை" என்றாள், தவளை இளவரசி.
"இன்னும் பார் இளவரசியே என் சமத்தை. ஏழு கடல் ஏழு மலை சமாச்சாரம் உனக்கு எப்படித் தெரியும்?"
"அரக்கன் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இருந்தான்."
"எங்கே உன் மொபைலைக் கொடு."
"இந்தாருங்கள் மன்னா. ஆனால் அதிலிருந்து ஓ சி - எஸ் டி டி எதுவும் போட்டு என்னுடைய அக்கவுண்ட் பாலன்சை ஏப்பம் விட்டுவிடாதீர்கள்!"
"சேச்சே அப்படி எல்லாம் செய்துவிடமாட்டேன். அரக்கனின் நம்பரைப் பார்த்து, அவனுக்கு ஒரு மிஸ்டு கால் - என்னுடைய மொபைலில் இருந்து கொடுப்பேன். அப்புறம் பார் வேடிக்கையை! ஆனால் அதற்கு முன்பு வேறு இரண்டு வேலைகள் உள்ளன."
"என்ன இரண்டு வேலைகள்?"
"ஒன்று, அரக்கனின் மொபைல் நம்பரை ட்ராக் செய்து அவன் எங்கே இருக்கின்றான் என்று தெரிந்து கொள்வது. இரண்டாவது கூகிள் எர்த் போய், இங்கிருந்து ஏழு கடல், ஏழு மலை மேற்கே தாண்டினால், எந்த இடம் வருகின்றது என்று பார்ப்பது."
புங்கவர்மன், தன மொபைலில், இந்த இரண்டு வேலைகளையும் இரண்டே நிமிடங்களில் செய்து - வியப்படைந்தவனாக, 'அட' என்றான். பிறகு, அரக்கனின் நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தான்.
அடுத்த நிமிடம், அரக்கனிடமிருந்து அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.
புங்கவர்மன், அலைபேசியில், "மிஸ்டர் அரக்கன். பௌர்ணமி வரையில் வெயிட் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். தவளகிரி இளவரசியின் கணவனை இப்பொழுதே கொன்றுவிடு. முனிவர் இட்ட சாபத்தினால், தவளகிரி இளவரசியின் கணவனைக் கொல்பவர், அவளின் கணவன் ஆகிவிட முடியும்." என்றான்.
மறுகணம், அந்தக் காட்டின் ஈசான்ய மூலையில் இருந்த கார் ஷெட் - மன்னிக்கவும் - தேர் ஷெட்டிலிருந்து, "ஐயோ" என்ற சத்தம் கேட்டது.
புங்கவர்மன், புன்னகையுடன், "இளவரசியே உன்னுடைய முப்பத்து ஒன்பதாவது கணவன் தயார். இப்போ நான் அந்த முப்பத்து ஒன்பதாவது கணவனான அரக்கனைக் கொன்று, உன் நிரந்தரக் கணவன் ஆகிவிடுவேன்" என்றான்.
பிறகு, அரக்கன் மொபைலை டிராக் செய்ததில், அது புங்க தேசத்தின் புறநகர்ப் பகுதியைக் காட்டியதும், கூகிள் எர்த் சென்று பார்த்ததில், ஏழு கடல், ஏழு மலை தாண்டினால், அது இதே காட்டைக் காட்டியதையும், சுருக்கமாகச் சொன்னான்.
தவளகிரி இளவரசியை அழைத்துக் கொண்டு - தேர் ஷெட்டுக்கு சென்று. ஷெட்டின் கதவை திறந்து, அங்கே பதுங்கியிருந்த அரக்கனை, தன் வாளால் கொன்றான். அங்கு ஏற்கெனவே இருந்த முப்பத்து எட்டாவது கணவனின் உடலையும், அரக்கன் உடலையும் ராஜ மரியாதையோடு புதைக்க ஆணையிட்டான்.
தவளகிரி இளவரசி, புங்கவர்மனின் வீர சாகசத்தையும், சமயோசித அறிவையும், கண்டு, வியந்து, ஓடி வந்து கட்டிக் கொண்டாள், அவரை!