வெள்ளி, 24 மே, 2013

ஐ பி எல் புராணம்!


"வாரும் நாரதரே! பூலோகத்தில் ஏதும் விசேஷம் உண்டா?"
    
"உண்டு. நிறைய உண்டு. இந்திய மக்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள்."

"எப்படி?"

"சுலபமாக காசு சம்பாதிக்க நிறைய பேர் கற்றுக் கொண்டுவிட்டார்கள்!"

"நான் கூட பிட்டுக்கு மண் சுமந்தது உண்டே! அது போலவா?"

"ஈஸ்வரா அதெல்லாம் ஜூஜூபி!"

"இல்லை நாரதா அதெல்லாம் ஜிலேபி இல்லை. பிட்டு. பி ...  ட் ...   டு!"

"நாராயண! நான் சொன்னது ஜூ ஜூ பி!"

"அப்படி என்றால்?"

"நீங்க சம்பாதித்தது எல்லாம் குச் நஹி!"

" ஆமாம் - குச்சியாலதான் - முதுகுல ஒரு அடி போட்டான் - அந்த ..."

"ஈஸ்வரா - பிட்டுக்கு மண் சுமந்த காலம் எல்லாம் போயே போச்சு. இப்போ பெட்டுக்கு  காசு அள்ளும் காலம்!"

" அட சுவாரஸ்யமா இருக்கே! மேலே சொல்லு!"

"இந்தியத் துணை கண்டத்துல ..... "

"யாருக்குத் துணை?"

"ஈஸ்வரா - பேஜார் பண்ணாதீங்க. குறுக்க ஒன்னும் பேசாம கேளுங்க."

"சரி "

"எங்கே விட்டேன்?"

"எதை?"

"ஈஸ்வரா!"

"ஓ சரி. " (வாய் பொத்திக் கொள்கிறார்)

"ஹாங் - இந்தியாவுல, அஞ்சு வருஷத்துக்கு ஒரு தபா எலெக்சன் வரும். அப்போ வோட்டுக் குத்த பணம் தருவாங்கோ."

"இப்போ எல்லாம் முத்திரை குத்தறது இல்லை, பொத்தான் அமுக்கறதுன்னு நீ பத்து வருஷத்துக்கு முன்னாடி ...."

"ஆமாம். இப்போ எல்லாம் பொத்தான் அமுக்கறதுதான். சாரி."

"அதாவது இவங்க அமுக்கினா - அவங்க வந்து பொதுப் பணத்தை நிறைய அமுக்கிக்கலாம். சரியா?"

"அதே அதே சபாபதே!"

"சரி. அதே அதே சம்பாதிப்பதே - ஆனா அது அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறைதானே?"

"அதனால இப்போ ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை ரொம்பப் பேருங்க சம்பாதிக்க ஐ பி எல் என்று ஒரு ஆட்டத்தை கண்டுபிடிச்சுருக்காங்க."

"ஐ பி எல் என்றால் என்ன?"

"ஐயோ பாவம் லூசுப்பசங்க!"

"ஏன்?"

"லூசு என்றால் இங்கே அப்பாவியாகப் பணத்தை விட்டவர்கள்!"

"ஓ?"

"இது கிரிக்கட் ஆட்டம். இந்தியாவில் இருக்கின்ற முன்னாள், இந்நாள் கேப்டன்கள் எல்லோரும் - ஆளுக்கு ஒரு அணியில் தலைவராகவோ தொண்டராகவோ ஆடுவார்கள். ஒத்தாசைக்கு மற்ற தேசத்திலிருந்தும் வீரர்களை விலை கொடுத்து வாங்குவார்கள்."

"அந்தக் காலத்தில் அடிமைகளை விலை கொடுத்து வாங்கினார்களே - அது மாதிரியா?"

"இவர்கள் எல்லாம் அடிமை இல்லை. அரசர்கள். சூப்பர் கிங்க்ஸ், ராயல், நைட்டு, பஞ்சாப் கிங்ஸ் என்றெல்லாம் பெயர் இட்டுக் கொள்வார்கள்."

"மும்பை இந்தியர்கள்?"

"அப்போ மீதி அணிகளில் இருக்கறவங்க இந்தியர்கள் இல்லையா?"

"அதானே! சரி. மேல சொல்லு நாரதா!"

" ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதுவார்கள்."

"ஏன்?"

"மோதுகின்ற இரு அணிகளின் ஊரிலும் ஒவ்வொரு போட்டி."

"சரி, இதுல யாரு சம்பாதிக்கிறாங்க, எப்படி?"

"அப்படி கேளுங்க. ஒவ்வொன்னா சொல்றேன் கேளுங்க சர்வேஸ்வரா!
இந்த போட்டி நடக்கும் மைதானத்தில் நுழைய ஆயிரக் கணக்கில் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கணும்."

"அது நியாயம்தானே!"

"ஓரளவுக்கு நியாயம்தான். அப்புறம் நடப்பது எல்லாம் அநியாயங்கள்தான்!"

"யார் முதலில் மட்டை பிடிப்பது அல்லது பந்து போடுவது என்பதை தீர்மானிக்க, இரு அணி தலைவர்களும் பூவா தலையா போட்டுப் பார்ப்பார்கள்.  
   
அப்போவே ஆரம்பிச்சுடுவாங்க நம்ம சூதாட்டக் குஞ்சுகள். எந்த அணி  இந்த சுண்டுதலில் ஜெயிப்பார்கள் யார் முதலில் மட்டை பிடிப்பார்கள், என்று பந்தயம் கட்டுவார்கள். அதற்கென்று புக்கிகள் என்று ஒவ்வொரு வட்டாரத்திலும் இருப்பார்கள். அவரிடம் பணம் கட்டுவார்கள். பணம் கட்டி எக்ஸ் அணி முதலில் பேட் செய்வார்கள் என்று பந்தயத் தொகை கட்டுவார்கள். அவர் சொன்ன அணி பூவா தலையா வென்றால், அவருக்கு உடனடியாக கட்டிய தொகையைப் போன்று ஒன்றரை மடங்கு வரை பணம் கிடைக்கும்.! 

"அட! சுலபமாக நூறை நூற்றைம்பது ஆக்கிவிடலாம் போலிருக்கே! சரி, அந்த  அணி பூவா தலையாவில் பணால் ஆகிவிட்டால்?"

"கட்டிய பணம் கோவிந்தா!" 

"ஓ! பணம் கட்டியவர்கள் இந்த அணிக்கு ஆயிரம் பேர், அந்த அணிக்கு ஆயிரம் பேர் என்று வைத்துக் கொண்டால், ஆளுக்கு நூறு ரூபாய் கட்டினார்கள் என்று வைத்துக் கொண்டால், இரண்டு லட்சம் வசூல்.  ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவு. மீதி ஐம்பதாயிரம் லாபம்!" 

"அதற்குப் பிறகு, ஒவ்வொரு அணியும் ஆடுகின்ற ஒவ்வொரு ஓவரிலும் எவ்வளவு ஓட்டங்கள் எடுப்பார்கள், ஒவ்வொரு பந்து வீச்சாளரும் எவ்வளவு பேரை ஆட்டமிழக்கச் செய்வார்கள்? யார் அதிகம் ஓட்டங்கள் எடுப்பார்கள், யார் அதிகம் விக்கெட்டுகள் எடுப்பார்கள், சிக்சர் அடிப்பவர் எவ்வளவு தூரம் அடிப்பார், எந்த அணி ஜெயிக்கும், எத்தனாவது ஓவரில் ஜெயிக்கும், எவ்வளவு விக்கெட் வித்தியாசத்தில் ஜெயிக்கும், எவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்கும், என்று எந்த புள்ளி விவர விஷயத்திலும் பந்தயம் கட்டுவார்கள். ஒரு முறை ஆட்டம் பற்றிய விமரிசனம் பேசும் பெண் எந்த நிற உடை அணிந்து வருவார் என்று கூட பந்தயம் கட்டினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!" 

"அடேயப்பா - கொள்ளைதான்! ஆனால் ஆடுபவர்கள் என்ன செய்வார்கள்? பார்ப்பவர்கள்தானே பந்தயம் கட்டி, பணம் இழக்கிறார்கள்?"

"அங்கேதான் சர்வேஸ்வரா நீங்க தப்புப் பண்ணுறீங்க. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல, அம்பயர், ஆட்டக்காரர் தொடங்கி, பவுண்டரிக்கு அப்பால் பந்து பொறுக்கிப் போடும் ஆட்கள் வரை, யாராருக்கோ எல்லாம் பங்கு இருக்கின்றது என்று இப்போ பரவலாகப் பேசுகிறார்கள். பணம் எவரெஸ்ட் வரை ஏறும்; பாதாளம் வரை பாயும்." 

"யோசித்துப் பார்த்தால் ..... சூதாட்டமும் ஒரு ஆட்டம்தானே! கிரிக்கட் போல இதையும் ரசித்தால் என்ன போயிற்று?"

"எங்கும் பணம் கட்டாமல், எதையும் இழக்காமல், எவரையும் ஏமாற்றாமல், தொலைக்காட்சியில், பொழுது போக்காக ஆட்டத்தை கண்டு இரசிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அதிகம் ஆசைப்பட்டு, ஆயிரக் கணக்கில் பணம் கட்டி, ஏமாற்றுக்காரர்களிடம் பணம் இழப்பவர்கள் ஏமாளிகள். ஏமாற்றுக்காரர்களுக்கு  துணை நின்று அப்பாவி மக்களை ஏமாற்றி, குறுக்கு வழியில் கோடிக் கோடியாக சம்பாதிக்கும் முதலைகள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர்கள். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?"

"அதை நம்ம ஏரியா வாசகர்களே சொல்லட்டும்!"    
                   

6 கருத்துகள்:

  1. அந்தப் பணமே தான் தண்டனையாக மாறும்...

    பதிலளிநீக்கு
  2. // அப்போ மீதி அணிகளில் இருக்கறவங்க இந்தியர்கள் இல்லையா? //

    Actually, even few of MI players are not Indians

    பதிலளிநீக்கு
  3. "ஐ பி எல் என்றால் என்ன?"

    "ஐயோ பாவம் லூசுப்பசங்க!"

    "ஏன்?"//

    வயிற்றெரிச்சலோடு சிரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கிரிக்கெட் சூதாட்டம் பற்றி எளிமையா புட்டு புட்டு வச்சுட்டீங்க சகோ!

    பதிலளிநீக்கு
  5. கிரிக்கெட் சூதாட்டம் இது உங்க ஆட்டம் பிச்சுட்டிங்க

    பதிலளிநீக்கு
  6. கிரிக்கெட் சூதாட்டம் இது உங்க ஆட்டம் பிச்சுட்டிங்க

    பதிலளிநீக்கு