(ஆசிரியருக்கு !
நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு.
================================================================
குணா சீற்றமாக பேசினான். " ஏன் அப்பா, ஏன்? எதுக்கு என்னை வேலை மெனக்கெட்டு ஒரு வாரம் ஓசிச் சோறு சாப்பிட அனுப்பினே? சுந்தரியை ஏன் உங்களுக்கெல்லாம் பிடிக்கலை? அவளுக்கென்ன குறைச்சல்?"
மூர்த்தி கூறினார். "குறிப்பாக இதுதான் காரணம், அதுதான் காரணம் என்றெல்லாம் சொல்லமுடியாது. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அதிருப்தி இருக்கு. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேள். சுந்தரி இங்கே வந்த முதல் நாளே ... "
தொலைபேசி மணி அடித்தது. மூர்த்தி அதை எடுத்தார். " ஹலோ - ஆமாம் குணா வீடுதான். நீங்க? ஓ நீங்களா? சொல்லுங்க சார்! அட! அப்படியா! சுந்தரிக்கு எங்கள் எல்லோரையும் பிடித்திருக்கிறதா! சந்தோஷம். நான் வந்து ..... அது ..... சொல்கிறேன் கேளுங்க ...... சுந்தரியை எங்களுக்குப் ... "
அவசரமாக அருகே ஓடிவந்த குணா, மூர்த்தி கையிலிருந்த ரிசீவரை வெடுக்கெனப் பறித்து, "பிடிச்சுருக்கு" என்றான். தொலைபேசி மறுமுனையில் சத்தம் எதுவும் வரவில்லை.
"தாங்க்ஸ் மாப்பிள்ளே " என்று சொல்லியபடி கையில் உள்ள மொபைலை உயரே தூக்கிப் பிடித்தவாறு வாசல் பக்கத்திலிருந்து உள்ளே வந்தார் சுந்தரி அப்பா.
குணா வீட்டில் உள்ள எல்லோரும் சிரித்தபடி, "வாங்க சம்பந்தி!" என்றார்கள்.
குணா, மூர்த்தியிடம், "இது என்னப்பா டிராமா? " என்று கேட்டான்.
மூர்த்தி: "நடந்ததை எல்லாம் சுருக்கமாச் சொல்றேன் கேட்டுக்கோ. உன்னுடைய பாட்டியும், சுந்தரியின் பாட்டியும் பள்ளித்தோழிகள். ஒருநாள் எதேச்சையாக கோவிலில் சந்தித்திருக்கிறார்கள். ஒருவர்க்கொருவர் அவர்களின் குடும்பம் பற்றிப் பேசிக்கொள்கையில் அவர்களுக்கு உங்க ரெண்டு பேருக்கும் முடிச்சுப்போட ஐடியா வந்துருக்கு. நீ ஆபீஸ் சார்பில் திருநெல்வேலி டூர் போயிருந்தபோது, அவர்கள் எல்லோரும் நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. எங்களுக்கு அவர்கள் எல்லோரையும் பார்த்தவுடனே பிடித்துப் போயிற்று. ஜாதகம், நியுமராலஜி என்று எல்லாவற்றிலும் பொருத்தம் அபாரமாக இருந்தது."
"அப்புறம்?"
"எல்லாம் பொருந்தியிருந்தாலும், எங்களுக்குத் தெரியும், நீ ஒரு கொனஷ்டை, நாங்கள் பிடித்திருக்கு என்றால், நீ பிடிக்கவில்லை என்பாய், நாங்க அழகு என்று சொன்னால், நீ இல்லை என்று வாதாடுவாய். கன்னி ராசி ஆம்பிள்ளை அப்படித்தான் இருப்பான் என்று உன் தாத்தா சொல்லுவார். அதனால, இந்த நாடகம் ஏற்பாடு செய்தோம். இப்போ உன் வாயாலேயே பிடிச்சிருக்குன்னு சொல்ல வெச்சுட்டோம் "
"சமையல், சு டோ கு உட்பட, உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று சுந்தரியிடம் சொன்னோம். 'கவலைப்படாதீங்க மாமா, நான் பாத்துக்கறேன் என்று சொன்னாள்"
" அப்போ சமையல் சமாச்சாரம் எல்லாம் நாடகமா? "
"இல்லைடா அது மட்டும் நாடகம் கிடையாது. அவர்கள் வீட்டில் எல்லோருமே நன்றாகச் சமைப்பார்கள்."
"இந்த நாடகத்தில் சுந்தரிக்கு எவ்வளவு தெரியும்? "
"இதுக்கு கதை, வசனம், டைரக்ஷன் எல்லாமே சுந்தரிதான்!"
" அட ராக்ஷஷி!" என்றான் குணா .
==================================
டும் டும் டும் டும் .....
==================================
கல்யாணத்திற்குப் பிறகு, மறுநாள், சமையலறையில் வேலையாக இருந்த சுந்தரியிடம், ஞாயிறு ஹிந்து பேப்பரை எடுத்துக்கொண்டு ஓடிவந்தான் குணா.
" சுந்தரி, சுந்தரி ... நீ சு டோ கு சால்வ் செய்வதில் கெட்டிக்காரி என்பதை உன் பீரோவில் இருந்த பேப்பர்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். இந்தா ஹிந்து பேப்பர். நாம ரெண்டு பேரும் இதை சால்வ் செய்யலாம் வா !"
"எண்பத்து ஒரு கட்டங்களில், அவர்கள் எவ்வளவு கட்டம் எண்கள் கொடுத்திருக்கிறார்கள்? "
" இருபத்தேழு. "
" நீங்க எவ்வளவு பூர்த்தி செய்தீர்கள்? "
" எட்டு. "
" அட! அவ்வளவா ! "
" என்ன சுந்தரி இவ்வளவு ஆச்சரியப்படுகிறாய் நீ மீதி இருக்கின்ற கட்டங்கள் எல்லாவற்றையும் அழகாக பூர்த்தி செய்வாயே!!"
" சேச்சே இதிலெல்லாம் டைம் வேஸ்ட் செய்யமாட்டேன். சுலபமாகத் தெரிந்த மூன்று நான்கு எண்களைப் பூர்த்தி செய்வேன். பிறகு, மறுநாள் பேப்பரில் வருகின்ற விடையைப் பார்த்துப் பூர்த்தி செய்வேன். "
"அடிப்பாவி! இதுவும் உன் டுபாக்கூர் வேலைதானா! சு டோ கு இன் சுமேரியன் கல்ச்சர்னு உன் பீரோவுல புத்தகம் பார்த்தவுடனேயே நான் செக் செஞ்சிருக்கணும்! சமையல் எல்லாம் அப்படித்தானா? அதில் என்ன டுபாக்கூர் டெக்னிக் சொல்லிடு. "
" அது மட்டும் டுபாக்கூர் இல்லை. எங்க வீட்டுல எல்லோரும் நல்லா சமைப்பாங்க. எனக்கும் தெரியும். மேலும் நான், எங்கள் ப்ளாக் வலைப்பதிவில், திங்கக்கிழமைப் பதிவில், நெல்லைத்தமிழன் என்று ஒரு அங்கிள் ........."
" ஸ்டாப், ஸ்டாப், ஸ்டாப் ! இது நம்ம ஏரியா. இங்கே எங்கள் ப்ளாக் பத்தி எல்லாம் சொல்லி வெறுப்பேற்றாதே " என்று சொல்லியபடி அருகே வந்த குணபதி, சுந்தரியைக் ....................
(முற்றும்)
