வியாழன், 13 ஜூலை, 2017

எதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்



எதையும் மாற்றும் காதல்

 
 
பிரேம் குழந்தையை பார்க்கின் ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டிக்கொண்டிருக்க, அஞ்சு பூங்காவைச் சுற்றி தன் பார்வையை சுழல விட்டாள். பெரும்பாலும் இளம் பெற்றோர்கள். ஒன்றிரெண்டு தாத்தா பாட்டிகளும் குழந்தைகளோடு வந்திருந்தனர். 

எல்லா குழந்தைகளும் சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் அதனுடைய அம்மாவை விட்டு இறங்க மாட்டேன் என்று ஆடம் பிடித்தது.

"இங்க பார், ஹார்ஸ்.. இதுல உட்கார்ந்துகோ. ஹை..! வைட் ஹார்ஸ்! ஜம்முனு போகுமே.. டக் டக் டக்.."  என்று அந்த குழந்தையின் அப்பா கூற, அது அதன் அம்மாவின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டது.

சரி,ஓகே! இங்க பார் மெரி கோ ரவுண்ட்! இதுல போறியா?

இப்போது வேண்டாம் என்று பலமாக தலையை ஆட்டியது.

ஊஞ்சல்? ஊஞ்சலில் ஆடலாமா?

கொஞ்சம் ஆர்வமாக ஊஞ்சலை பார்த்ததால் அம்மாவிடமிருந்து குழந்தையை அப்பா வாங்கிக் கொண்ட உடனே, "அம்மா அம்மா என்று அழ ஆரம்பித்தது.  'அம்மா இங்கதான்டா இருக்கேன்', என்று தாய் சமாதானப் படுத்தியும் அடங்காமல் பெரிதாக வீறிட்டு ஊஞ்சலிலிருந்து குதித்ததும் அந்த குழந்தையின் அப்பாவிற்கு கோபம் வந்து விட்டது. 
 
 

 

'போறும் போறும் கிளம்பு, இவளை இங்கே அழைத்து வந்ததே வேஸ்ட்'  என்று  பொரிந்த படியே வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

'குழந்தைதானே?'  என்றபடியே அந்த தாய் கணவனை பின் தொடர்ந்தாள்.  அஞ்சுவுக்கு தன்னுடைய இளம் பிராயம் நினைவுக்கு வந்தது. 

அவளும் அந்தக் குழந்தை போலத்தான் இருந்தாள்.  அவளால் அம்மாவை ஒரு கணம் கூட பிரிய முடியாது.  உறவிலும், நட்பிலும் எல்லோரும் அவளை 'அம்மா கோண்டு', 'அம்மா ஒட்டி' என்றெல்லாம் கேலி செய்வார்கள்.  விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கூட,  நடு நடுவில் வீட்டுக்கு வந்து அம்மாவை பார்த்து விட்டுப் போவாள். 

சாப்பிடும் பொழுது உனக்கு வெறும் சாதம் மட்டும் போதும் தொட்டுக்க எதுவும் வேண்டாம்,  அதன் உங்கம்மா இருக்காளே..  என்பார்கள். 

ஸ்கூலில் என்னடி பண்ணுவ?  ஸ்கூலிலும் அவளுக்கு அம்மா நினைவு வரும்.  எப்படியோ சமாளித்துக் கொள்வாள்.  ஸ்கூலிலிருந்து வரும் பொழுது அம்மா வீட்டில் இருக்க வேண்டும். 

"நீ குழந்தையா இருந்தப்போ என்னை பாத்ரூம் கூட போக விட மாட்ட, நான் வருவதற்குள் கத்தி ரகளை பண்ணி விடுவ,  குளிக்கும் பொழுது கூட உன்னை என் எதிரில் ஒரு ஸ்டூலில் உட்கார வைத்துக் கொண்டுதான் குளிப்பேன்." 

அம்மா நிறைய முறை சொல்லியிருக்கிறாள்.  அவள் பிளஸ் டூ படிக்கும் பொழுது தாத்தா இறந்து போனார்.  ஆகவே அம்மா கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மாமா வீட்டில் இருக்க நேர்ந்தது.  பத்தாம் நாள் அங்கு சென்றவள் அம்மாவிடம்,"அம்மா எப்போமா வருவ?" என்று கேட்டுக் கொண்டிருந்ததை கவனித்த மாமி,  ''சரிதான்! வசந்தி, நீ உன் பொண்ணுக்கு வீட்டோட மாப்பிளைத்தான் பார்க்கணும்." என்று கிண்டல் செய்தாள்.

ஆனால், நடந்தது என்ன?  திருமணம்தான் அவளையும் அம்மாவையும் ஒரேயடியாக பிரித்தது.  அம்மாவைப் பார்க்காமல் ஒரு நாள் கடத்துவதே கடினமாக இருந்தவள்.  காதல் திருமணம் செய்து கொண்டதால் மூன்று வருடங்களாக அம்மாவை பார்க்காமல் இருக்கிறாள்.  எதையும் மற்றும் காதல் அவளையும் மாற்றியது.

அலுவலகத்தில் அவளுடைய டீம் லீடராக இருந்த பிரேமின் அணுகுமுறை அவளைக் கவர்ந்தது.  எதற்கும் பதட்டப் படாமல் இருப்பதும், எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவதும்,  நேர்த்தியாக உடை அணிவதும் அவளை அவன் பால் ஈர்த்தது.  அதைப் போன்ற ஈர்ப்பு அவனுக்கும் அவள் பால் இருப்பது தெரிந்தது என்றாலும் அதை வெளிக் காட்டாமலே இருவரும் பழகிக் கொண்டிருந்தார்கள்.   ஆனால் இவர்களின் ஈர்ப்பை மோப்பம் பிடித்த நட்பு வட்டம் அதை ஊதி ஊதி வளர்த்து விட்டது. 

பிரேமை பொறுத்த வரை தன் வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றான்.  ஏனென்றால் அவன் பெற்றோர்களே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்று கூறி விட்டு, அஞ்சுவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.  அவளைப்பற்றி அவர்களிடம் சொல்லியிருப்பான் போலிருக்கிறது. 

"என்னமா பிராமின் கேர்ள்...  நான் வெஜ் சாப்பிடுவாயா?" என்றார் அவன் அப்பா. 

''சும்மா இருங்க, இவன் வெஜிடேரியனா மாறிட்டுப் போறான்''.  

''அதெல்லாம் சும்மா,  ஒரு வருஷம் வேணா சாப்பிடாமல் இருப்பான். நான் கூட அப்படித்தானே சொன்னேன், முடிந்ததா?''

''டாடி நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை''

''ஓகே குட்!''  என்றவர் அவள் குடும்பத்தைப் பற்றி விசாரித்து விட்டு,  ''ஓகே, எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?''  என்றார் 

''நீங்க பெர்மிஷன் கொடுத்ததும்''

''நான் இப்பவே கொடுத்தாச்சு'',  என்றவர் மனைவி பக்கம் திரும்பி ''என்ன அப்படித்தானே.. ?''  என்க அவள் சிரித்துக் கொண்டே தலை ஆட்டினாள். 

ஆனால் தனிமையில் அவளிடம்,  ''இன்டெர் காஸ்ட் மேரேஜ் என்பது அவ்வளவு ஈஸி கிடையாது.  யாராவது ஒருத்தர் முழுசா விட்டுக் கொடுக்கணும்.  எங்க கேசுல நான் வீட்டுக் கொடுத்தேன்.  நாங்க திருநெல்வேலி சைவப் பிள்ளை.  முட்டை கூட சாப்பிட மாட்டோம். கல்யாணம் ஆன புதிதில் சாப்பிட்டு மேஜையில் ரொம்ப கஷ்டப்பட்டேன். எங்க வீட்டு மனிதர்கள் என்னை ஒதுக்கி விட்டார்கள்.  அதனால் பிரேமை கிறிஸ்டியனாகத்தான் வளர்த்தோம்.  அவன் வயது குழந்தைகள் மொட்டை போட்டு, காது குத்தி  வருவதை பார்த்தால் அவனுக்கு அதெல்லாம் செய்ய முடியவில்லையே என்று தோன்றும்.  அவன் குழந்தையாக இருந்த பொழுது, "டாடிக்கு மட்டும் அப்பா, அம்மா,  அண்ணா, அக்கா, தங்கை எல்லாருமிருக்காங்களே,  உனக்கு யாரும் கிடையாதா?"  என்று கேட்டிருக்கிறான்.''

''ஜாதி மதம் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டு இல்லை என்று இப்போது தோணும்.  குழந்தையை ஸ்கூலில் சேர்க்கணும் என்றாலும் ஜாதியும் மதமும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.  மதம் என்னும் இடத்தில்  "நில்(nil) என்று குறிப்பிட்டேன்" என்று சினிமா நடிகர்கள் சொல்லலாம்.  அதெல்லாம் பொய்.   சின்ன வயசுல நமக்கு எதுவும் பெரிசா தெரியாது.  நாற்பது வயது ஆகும் போதுதான் நம் வீடு,  நம் பழக்கம் என்று பல விஷயங்களை மிஸ் பண்ண ஆரம்பிப்போம்.  இதை எல்லாம் நல்ல யோசிச்சீங்களா?'' என்றாள்.

அஞ்சு அவள் தங்களை ஆதரிக்கிறாளா?  எதிர்க்கிறாளா? என்று புரியாமல் குழம்பினாள்.  எப்படிப்பட்ட குழம்பிய குட்டையாக இருந்தாலும் காதல் தூண்டில் அதில் மீன் பிடிக்காதா?

அப்பாவின் கோபம்,  அம்மாவின் அழுகை,  ஆத்திரம்,  சாபம் எல்லாவற்றையும் மீறி அவள் பிரேமை கை பிடித்தாள்.  அவள் திருமண ரிசப்ஷனுக்கு அண்ணாவும் அப்பாவும் வந்தார்கள்.  மூன்று வருடங்களாகி விட்டது அம்மாவின் முகத்தைப் பார்த்து.  அண்ணா மட்டும் தொடர்பில் இருந்தான்.  அனால் அவன் திருமணத்திற்கு அழைப்பு ஈ-மெயிலிலும் தபாலிலும் வந்தது.  'செல்வதும் செல்லாததும் உன் விருப்பம்' என்று கூறி பிரேம் ஒதுங்கிக் கொள்ள,  அவளும் செல்லவில்லை.  என்றாலும் சகோதரன் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.   

திருமணத்திற்குப்  பிறகு அண்ணா தன் மனைவியை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு வந்திருந்தான்.  அவர்களை அம்மா தனிக் குடித்தனம் வைத்து விட்டதை தெரிந்து கொண்டாள்.

பின்னர் சந்திக்கும் பொழுதெல்லாம் அவள் அம்மாவைப் பற்றி விசாரித்தால், "வர வர அம்மா வீட்டில் தங்குவதே இல்லை. பக்கத்தில் இருக்கும் சுவாமிஜியின் ஆஸ்ரமத்திற்கு அடிக்கடி சென்று விடுகிறாள்" என்றான்.  'அந்த ஆஸ்ரம வாசிகளோடு வெளியூர் கோவில்களுக்கும் பயணங்கள் மேற்கொள்கிறாள்' என்றும் கூறினான்.

அதே போன்ற ஒரு புனித யாத்திரை சென்றவள் வீடு திரும்பவில்லை. உடன் சென்றவர்களை விசாரித்த பொழுது,  'சென்ட்ரலில் இறங்கிய பிறகு உங்கள் அம்மா ஒரு ஆட்டோ பிடித்து சென்றார், அவர் வீட்டிற்குத்தான் வருகிறார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.' என்றனர். 

இவர்கள் விக்கித்துப் போனார்கள்.  எங்கே தேடுவது,  எப்படி தேடுவது என்று தெரியாமல், கோவில்கள்,ஆஸ்ரமங்கள், மடங்கள் என்று எல்லா இடங்களுக்கும் சென்றார்கள்.  சில நாட்களுக்குப் பிறகு அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

என்னைத் தேடிக் கொண்டிருந்தால் தயவு செய்து உடனே நிறுத்தி விடவும்.  நான் என்னுடைய ஆன்மீக தேடலை நாடிச் செல்கிறேன். நம்முடைய மதத்தில் பெண்களுக்கு துறவு கிடையாது.  ஆனாலும், ஒரே மாதிரி செக்கு மாட்டு வாழ்க்கை என்னை சலிப்படைய வைக்கிறது. தினமும் சமைப்பதும், சாப்பிடுவதும், சீரியல் பார்ப்பதும்தான் வாழ்க்கையா? 

என்னைப் பொறுத்த வரை என் கடமைகளை நான் முடித்து விட்டேன். கடவுள் அருளால் நான் உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருக்கிறீர்கள். உங்களை மகன்,மருமகள், மகள்,மாப்பிள்ளை எல்லோரும் சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள். 

மகனும்,மகளும் செட்டிலாகி விட்டார்கள்.  அவர்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளலாமே என்று யாருக்காவது தோணலாம்.  என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விட்டேன்.  இனி அவரவர் குழந்தைகளை அவரவர்தான் வளர்க்க வேண்டும்.  அந்த பாரத்தையும் என் தலையில் போட்டுக் கொண்டு, "ஐயோ! குழந்தை சாப்பிடவே இல்லையே,  இந்த முறை தேர்வில் மதிப்பெண்கள் குறைந்து விட்டதே..!'' என்றெல்லாம் ஓட்டிய பழைய படத்தையே எத்தனை முறை ஓட்டுவது ? உங்கள் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகள் எல்லோருக்கும் என் ஆசிகள்!  

இதற்குப் பிறகு அவர்கள் தேடுவதை கை விட்டார்கள்.  அஞ்சு நினைவலைகளில் முழுகி இருக்க குழந்தையோடு வந்த பிரேம் 'கிளம்பலாமா?'  என்றான். 

தலையசைத்து ஆமோதித்த அஞ்சு எழுந்திருக்க,  அவள் தாயாரை ஒத்த ஒரு பெண்மணி அந்த பெஞ்சில் வந்து அமர்ந்தாள்.  முதல் முறையாக செல் போனில் இயர்போன் இணைத்து பாட்டு கேட்கிறார் போலிருக்கிறது.  ஏதோ அட்ஜெஸ்ட் செய்ய முயல,  இயர்போன் துண்டிக்கப்பட்டு, 'ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு, கனவிலே என் தாய் வந்தாள்...  என்னும் பி.சுசிலா பாடிய பாடல் பலமாக ஒலித்தது. 
 
 
 

இதை எதிர்பார்க்காத அந்த பெண்மணி, "ஐயையோ! ஏன் இப்படி ஆகிவிட்டது?'' என்று அசடு வழிந்தார்.  அஞ்சு அந்த செல்போனை வாங்கி இயர்போனை மீண்டும் இணைக்க முயல,  "இல்ல அது வேண்டாம், ரொம்ப சத்தமா இருக்கு, நான் ஸ்பீக்கரில் போட்டு பாட்டு கேட்டுக்கறேன், வால்யூம் மட்டும் கொஞ்சம் குறைத்துக்கொடு." என்றார். அதன்படியே செய்துவிட்டு, அஞ்சு வாயிலை நோக்கி நடக்க, " என்னுயிர் தாயே நீயும் சுகமா? இருப்பது எங்கே சொல் என்றேன் .."  என்று பி.சுசிலாவின் குரல் தொடர்ந்தது.

33 கருத்துகள்:

  1. கதை அருமை. காதலை இடம் மாற்றி விட்டீர்கள். வித்தியாசமான களம். தேர்வு செய்திருக்கும் பி சுசீலா பாடலோ என்றும் இனியது. தேவாம்ருதப் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முதலில் பாடலை தேர்வு செய்து விட்டேன், பிறகு பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் கதையை அமைத்தேன். ரிவர்ஸ் திங்கிங். பாராட்டுக்கு நன்றி!

      நீக்கு
  2. காதலிக்கும் பொழுது ஜாதி-மதம் தெரியாது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் பொழுது தெரியும் உண்மை

    பதிலளிநீக்கு
  3. காலத்துக்கு ஏற்ற கதை! பாடலும் அதன் பொருத்தமும் கச்சிதமாக உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! உங்கள் பாராட்டு சந்தோஷம் அளிக்கிறது.

      நீக்கு
  4. கதை நல்லா இருக்கு. பாடலும் நல்ல தேர்வு. என்னைப் பொறுத்தவரை, தங்கள் வாழ்க்கையைத் தீர்மானம் செய்தவர்கள் மீண்டும் தாய்/தந்தையோடு ஒட்டுறவு அற்றுப்போனதே என்று கவலைப்படக் கூடாது. தன் முடிவால் தான் தவறவிட்டதுதானே அது?

    என்னைக் கவர்ந்த ஒரு வாக்கியம், "என்றெல்லாம் ஓட்டிய பழைய படத்தையே எத்தனை முறை ஓட்டுவது ? "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // என்னைப் பொறுத்தவரை, தங்கள் வாழ்க்கையைத் தீர்மானம் செய்தவர்கள் மீண்டும் தாய்/தந்தையோடு ஒட்டுறவு அற்றுப்போனதே என்று கவலைப்படக் கூடாது. தன் முடிவால் தான் தவறவிட்டதுதானே அது?// நீங்கள் சொல்வது ஐடியல் நிலை, நடைமுறையில் பெற்றோர்களை துறந்து காதல் திருமணம் செய்து கொண்ட பலர் குறிப்பாக பெண்கள் தாங்கள் இழந்ததை நினைத்து ஏங்கவே செய்கிறார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி! இப்படி சவாலை அளித்ததற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  6. கதை மிகவும் அருமை... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  7. கதையும் அதற்கான பாடலும் அருமை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. தாய் தன் மகளின் மேல் வைத்த பாசமும் துறவு நிலையை கொண்டு வந்து விட்டுவிட்டது.
    "பாசம் வைத்தால் அது மோசம், அன்பு வைத்தால் அது துயரம்"
    என்ற பாடல் என் நினைவுக்கு வருது.

    அம்மாவின் முடிவு நல்ல திருப்பம் கதையில்.யாரும் எதிர்பாராதது.
    பாராட்டுக்கள்.

    மகள் கேட்ட பாடல் அவள் நினைவுக்கு பொறுத்தமாய் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. கதை மிகவும் நன்றாக இருக்கிறது. பாடலும் அருமை!! நல்ல சாய்ஸ்!!

    கீதா: இப்போதைய தலைமுறையினரின் கதை...வித்தியாசமான தளம்...

    மிக்வும் அருமை அக்கா! பின்னிட்டீங்க போங்க!!! பாட்டும் சூப்பர்!! ஏற்ற பாடல்!

    பதிலளிநீக்கு
  10. பிரபா மீனாட்சி கூகிள் ப்ளஸ்ஸில் இந்தக் கதை பற்றிச் சொல்லியிருப்பது..

    பொதுவா சார்ந்திருத்தல் என்பதை தான் நாம் பிரியம் , பாசம் என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கோம் என்று எனக்கு தோணும் . இந்த கதையில் அவரின் அம்மா இப்படி தனித்துவ சிந்தனையோடு , இருப்பவர் , சாதாரணமாகி போன காதல் மணத்தை கடைசி வரை ஏற்று கொள்ளாதது ஏன் என தெரியலை . குழந்தையோ , வேறு உறவுகளோ . இந்த அதீதமான சார்நதிருத்தல் என்பது ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்டவரை சலிப்புற செய்து விடும் என்றே தோணுது . எல்லோருமே ஒரு சுதந்திர காற்றை தானே சுவாசிக்க விரும்புகிறோம் ..இல்லையா..?



    //பொதுவா சார்ந்திருத்தல் என்பதை தான் நாம் பிரியம் , பாசம் என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கோம் என்று எனக்கு தோணும்//

    இந்தக் கருத்து எனக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொதுவா சார்ந்திருத்தல் என்பதை தான் நாம் பிரியம் , பாசம் என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கோம் என்று எனக்கு தோணும்//
      வழி மொழிகிறேன். இக்கருத்தை. மட்டுமல்ல அந்த அம்மா தன் மகள் தன்னையே சுற்றிச் சுற்றி வந்தவள் இப்படித் தனக்கு விருப்பமில்லாத ஒன்றைத் தானே முடிவெடுத்து விட்டாளே என்று பொஸஸிவினெஸால் வந்தது. எல்லாருக்கும் பொஸசிவ்னெஸ் இருக்கும் கொஞ்சமேனும் ஆனால் அந்த பொஸெசிவ்னெஸ் எல்லையைத் தாண்டும் போது ஏற்படும் விபரீதங்கள் பல. ஸோ அது பாசம் என்று சொல்லுவதை விட கண் மூடித்தனமா ஒன்று எனலாம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அவளது கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது..இதுவும் அந்த விபரீதத்தில் சேர்த்திதான்...

      கீதா

      நீக்கு
    2. இக் கருத்தை அடித்து வெளியிட, போகாமல் இப்போதான் பப்ளிஷ் ஆச்சு...இங்கு இணையப் பிரச்சனையால்...

      கீதா

      நீக்கு
    3. //இந்த கதையில் அவரின் அம்மா இப்படி தனித்துவ சிந்தனையோடு , இருப்பவர் , சாதாரணமாகி போன காதல் மணத்தை கடைசி வரை ஏற்று கொள்ளாதது ஏன் என தெரியலை// .

      மகளின் காதல் மணத்தால் விரக்தி அடைந்த தாய் உள் முகமாக திரும்பிய பிறகு மகள் அப்படி ஒன்றும் பெரிய குற்றம் புரிந்து விடவில்லை என்று உணர்கிறாள். ஆனால் அதை அறிவித்து மீண்டும் பாச வலையில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.
      இதை அந்த தாய் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட விரும்பினேன். ஆனால் எழுத எனக்கு நேரம் கிடைப்பது கடினம். இந்தக் கதையை ஒரு நாளைக்கு ஒரு வரி என்னும் ரேஞ்சில் எழுதிக்கொண்டிருந்தேன்.
      எனவே கடிதத்தை நான் நினைத்தது போல உணர்வு பூர்வாமாக எழுத முடியவில்லை. பிரபா சுப்ரமணியத்தின் பின்னூட்டத்தை வெளியிட்டதற்கு நன்றி ஸ்ரீராம்!
      துளசிதரன் &கீதா மீள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  11. பெண்கள் இப்படிப் போனால் இருவரும் விட்டுவிட சான்ஸ் இருக்கிறது. ஆனால் இதுவே பிள்ளையாக இருந்தால் தாயால் விடமுடியாது. சார்ந்து வாழ்வென்பது இவ்விடம் விட்டுக் கொடுத்துப் போகவேண்டி இருக்கும். காலந்தாழ்ந்தேனும் ஏதோ ஒரு வழியில் உறவுகள் ஏற்படுகிறது. அந்தத் துறவரம் வருவதற்கும் காலங்கனியவேண்டி இருக்கிறது. இம்மாதிரி ஒரு அன்னைக்கு துறவரம் வந்ததென்று கற்பனை செய்தது நல்ல விஷயம். பாசம் என்றுநினைக்காமல் விரக்திதான் காரணம். போய்விட்டாள் அவ்வளவுதான். விவேகமில்லாது ஆத்மதியாகம் செய்து கொண்ட எத்தனை அசட்டு அம்மாக்களின் கதைகள் படித்தோம். இது விவேகமான அம்மா. வரவேற்கவேண்டிய கதை. பாராட்டுகள் கதாசிரியை அவர்களுக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவமும் தெளிவும் செறிந்த பின்னூட்டம்.மிக்க நன்றி!

      நீக்கு
  12. அருமையான கதை.வாழ்க வளமுடன்��

    பதிலளிநீக்கு