சனி, 8 ஜூலை, 2017

பிரிவோம் சந்திப்போம் - கீதா ரெங்கன்





இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் உங்களுக்கு மைக்கேல் மதனகாமராஜன் கமலையும், ஊர்வசியையும் நினைவுபடுத்தலாம் என்பதை இங்கு சாச்சுட்டரி வார்னிங்க் போல் கொடுத்துவிடுகிறேன். அந்தப் படம் பார்த்த தாக்கத்தில் எழுதி வைத்த ஒன்றை இப்போது கககபோ 1 ற்காகச் சற்று மாற்றி எழுதியுள்ளேன். இது இயக்குநர்களுக்கல்ல. நம்ம ஏரியாவுக்கு மட்டுமே!!! (ஹேய் கீதா ரொம்பத்தான் அலட்டாத என்ற குரல்கள் கேட்குது!!) சரி வாங்க என் கூட சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு. நாமளும் இப்ப வெஸ்ட் கோஸ்ட்ல போகப்போறோம்…..


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் இன்னும் சற்று நேரத்தில் புறப்படத் தயாரான நிலையில் அதன் எஞ்சின் பெரிதாக மூச்சுவிட்டு உறுமிக் கொண்டிருந்தது, 27 வயதிலேயே கொஞ்சம் பூசிய உடம்பையும் தன் பைகளுடன் தூக்கிக் கொண்டு மூச்சிரைக்க வந்த அவள் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியின் படியில் கால் வைக்கவும், ஓர் இளைஞனும் வேகமாக வந்து அவள் பின்னால் ஏறுவதற்கு நிற்கவும், திரும்பிப் பார்த்த அவளது அழகிய கண்கள் பெரிதாக விரிய, கோபத்தில் மூக்கு விடைக்க


“ஆரு மொகத்துல முழிக்கப்டாதுனு நினைச்சுண்டுருந்தேனோ அது வந்து நிக்கறது கண் முன்னால. எல்ல்லாம்ம் எந்த் தலையெழுத்தாக்கும்” என்று முனங்கிட


“தோ பாரு தங்கம் ச்சொல்லணும்னா எந்நோட மொகத்தப் பாத்துச் ச்சொல்லு இப்படி முனங்கண்டாங்கேட்டியா…”


“ஆராக்கும் தங்கம்? இப்ப எதுக்காக்கும் யென் முன்னாடி வந்து நிக்கறேள்.”


“ஏய்! ஞான் எதுக்கு ஒம் முன்னாடி வந்து நிக்கணுமாக்கும்? நேக்கென்ன வட்டாக்குமோ? இந்த ரயிலுலதான் நேக்கு றிஸர்வேஷன்”


“உங்க புருஷன் பொண்டாட்டி சண்டைய வீட்டுல போய் வைச்சுக்கங்க. இப்ப நாங்க ஏறதுக்கு வழி விடுங்கம்மா.” என்று சக பயணிகள் திட்டிக் கொண்டே ஏறினர்.


“ஏய்... ஆராக்கும் புருஷன் பொண்டாட்டி? ஹும்” என்று தன் முகவாய்க்கட்டையை வலது தோளைத் துக்கி இடித்துக் கொண்டாள்.


“நம்ம ச்சண்டைய அப்புறமா வைச்சுக்கலாங்கேட்டியா தங்கம். நீ இப்போ ஏறப் போறயா இல்லை எறங்கப் போறயா. வண்டி பொறப்படறதுக்கு ஆயாச்சுக் கேட்டியா”


“நீங்க ஆராக்கும் எந்ந எறங்கச் ச்சொல்லறதுக்கு? தங்கமாம் தங்கம். வேற பொட்டிக்குப் போங்கோ…”


“ஹோ! அத ச்சொல்லறதுக்கு நீ ஆராக்கும்? நேக்கும் இந்தப் பொட்டிலதான் ரிஸர்வேஷனாக்கும் கேட்டியா”


“ஹோ! ஸ்சல்லியம்” என்று சொல்லிக் கொண்டே தங்கமணி ஏறிட, மூட்டை முடிச்சுகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு தங்கமணிக்குக் கணவனாகப் போகும் கனவில் இருக்கும் அவள் மாமா மகன் செல்லமணி அங்கு வந்து சேர்ந்தான். தங்கமணியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனைக் கண்டதும், ‘இந்த சோமேஸ்வரன் எங்கே இங்க வந்தான்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே


“டீ தங்கம்! அவனோட எந்நவாக்கும் பேச்சு! நீ உள்ள போ மொதல்ல” என்று சொல்லிக் கொண்டே ஏற, தங்கமணி நேரே போய் தங்களுக்கு ரிஸர்வ் செய்திருந்த இருக்கை எண்ணைப் பார்த்துக் கொண்டே சென்று ஜன்னல் இருக்கையில் தொப்பென்று உட்கார்ந்தாள். தங்கமணியின் கோபம் இன்னும் அடங்கவில்லை. பின்னால் ஏறிய சோமு தன் இருக்கை எண்ணைச் சரிபார்த்துக் கொண்டே வந்தவன் தன் இருக்கையில் தங்கமணி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும்’


“ஏய்! எழுந்திரு! அது என்னோட ஸீட்டாக்கும்.” தங்கமணி பதில் சொல்லாமல் வெளியில் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் சோமு சொல்லிட, 


“வோ…..! இந்த ரெயில்வே கடங்காரன் ஒங்களுக்கும் இங்கயா போட்டுத் தொலைச்சுருக்கான்? ஒங்க மொகத்த பாத்துண்டே யாத்ரை. எல்ல்லாம்ம் எந்தலையெழுத்து” என்று சொன்னவள் மீண்டும், “முடியாது. எதித்தாப்புலயும்தான் ஜன்னல் ஸீட்டு இருக்கே”


“ஒந்ந யாரு என் மொகத்தப் பாக்கச் ச்சொன்னா! ஆமாம்! இந்த ஸீட்டு என்னோடதில்லையாக்கும். ஏய் செல்லமணி நீ அவளுக்குச் சொல்லப்படதா..” என்று அவளருகில் உட்கார்ந்திருந்த செல்லமணியைக் கேட்க, “அது தங்கமணியோடதுதான்!” என்று செல்லமணி சொல்லவும், உடனே தங்கமணி, “வோ! அப்போ ந்நான் வேண்டாதவா ஸீட்டுலயாக்குமோ ஒக்காந்துருக்கேன்” என்று சொல்லிக் கொண்டே நகர நினைத்தாள். அப்போது சோமுவைக் கல்யாணம் செய்து கொள்ளக் காத்திருக்கும் சோமுவின் அத்தை பெண் சுந்தரி விசும்பலுடன் வந்தாள்.. 


“இப்படியாக்குமோ எந்ந தனியா விட்டுட்டு ஓடிப் போவேள்? அப்படியென்ன த்ருதிநு கேக்கறேன்? திண்டாடிப் போய்ட்டேனாக்கும் இங்க வரதுக்குள்ள..” என்று விசும்பலுக்கிடையே தொடர்ந்தாள். “எதுக்காக்கும் இப்போ வேண்டாதவா கூட பேஸ்சிண்டுருக்கேள்?”


“ஆராக்கும் வேண்டாதவா” என்று சொல்லிக் கொண்டே சோமு சுந்தரியை ஜன்னல் இருக்கையில் அமரச் செய்து அவனும் அடுத்து அமர்ந்து கொண்டான்.



“இப்போ சமாதானம்தானே! ந்நான் தங்கமணியோட ஸீட்டுல ஒக்காரலையாக்கும்.”


“வேண்டாதவாதான்… பின்னே ந்நோக்கும் தங்கமணிக்கும் டைவேழ்ர்ஸ் ஆகி ஒரு கொல்லம் ஆகப்போறது. மறந்து போச்சாக்கும்? நீ இனிமே அவளோடு பேஸ்சப்படாது கேட்டியா” – செல்லமணி


“வோ! ந்யான் ஒந்ந்னும் மறக்கலையாக்கும் கேட்டியா. டைவோழ்ர்ஸ் ஆனா பேஸ்சப்படாதுனு ஆராக்கும் சட்டம் போட்டா? நந்நா கேட்டுக்கோ செல்லமணி ந்யானாக்கும் அவளோட சீனியர் ஆத்துக்காரர்….நீ ஜுனியர்தான் கேட்டியா..அதுவும் இன்னும் கல்யாணம் ஆகலை…வந்துட்டான் பேஸ்ச. ஹையடா….” என்று இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டி வலது கை முழங்கை முட்டை இடது உள்ளங்கையில் வைத்து அவனை நோக்கி பாம்பு கொத்துவது போல் ஆட்டினான்.


“வோ…! சீனியர் ஆத்துக்காரராமே! மொகத்தப் பாரு!” – தங்கமணி


“என்னோட மொகத்துக்கு எந்ந கொறச்சலாக்கும்? இப்பக் கூட வழில பொண்கள் எந்நப் பாத்துட்டு ‘வெரி ஹேன்ட்ஸம்’..நு சொல்லிட்டுப் போனாளாக்கும்…….இல்லையாடி சுந்தரிக் குட்டி”


“வோ!.…ஹேண்ட்ஸம்மாம்! பாலைக் கொட்டி சப்பாத்திமாவ குழைச்சா மாதிரி!  பல்லு துருத்தி சுண்டெலி மாதிரி இருக்கறவள் சுந்தரிக் குட்டியாம்! ஹையடா! நீங்கதானே அன்னிக்குப் பாடினேள் எந்நப் பாத்து ‘சுந்தரி நீயும்… சேர்ந்நிருந்தால் திருவோணம்’ னு. திருவோணம் என்னாச்சு? புஸ்ச்வானமாயிடுத்த்து….இப்போ வேற சுந்தரி ஒங்க பக்கத்துல” என்று அழுதுகொண்டே புடவைத் தலைப்பால் மூக்கை உறிஞ்சினாள்.


“தோபாரு. நீ ரொம்ப சுந்தரியாக்கும்னு நினைச்சுண்டு இன்னொரு பொம்மனாட்டியை இப்படி எல்லாம் ச்சொல்லப்ப்படாது கேட்டியா! புஸ்ச்வானமானதுக்கு ஆறாக்கும் காரணம்?”


“தோ பாரு, தங்கமணி! அந்தப் பழைய சமாச்சாரத்த ஒடப்புல போடு. இனிமே அவர் எனக்காக்கும் ஆம்படையான் மனஸ்லாச்சா.” என்று டம்மி பீஸான சுந்தரிக்குட்டி சைக்கிள் கேப்பில் தன் உள்ளக் கிடக்கையைச் சொல்லிட….


“ஏய்! சுந்தரிக் குட்டி இதென்னவாக்கும் புதுக் கதை? ஆறாக்கும் ந்நோக்கு ஆம்படையானாகப் போறா? ந்யானாக்குமோ? ஹையடா…ஆளாளுக்கு என்னென்னவோ ச்சொல்லிண்டுருக்கேள்! நேக்கு ஒந்நுமே மனஸ்லாகலைகேட்டேளா”


“ஹோ! அதெல்லாம் புத்த்தி உள்ளவாளுக்குத்தான் மனஸ்லாகும்! டீ சுந்தரிக் குட்டி ந்நோக்கு இவர் ஆம்படையானாகப் போறாராக்கும்? ஆரு ச்சொன்னா?” – தங்கமணி


“ஆரு ச்சொல்லணும்? ஆத்துப் பெரியவா எல்லாரும் சேந்து தீர்மானிச்சதாக்கும்..” – சுந்தரி.


“ஹேய் தங்கமணி எந்ந ச்சொந்நாய்? ந்நேக்கு புத்த்தியில்லைஐனாக்குமோ? ஆமாம்! ஸ்செரிதான்…இல்லைஐதான்……”


“இப்படி எதிரும் புதிருமா இருக்கறவாள எந்த ஜோஸ்யர் புண்ணியவான் அன்னிக்குச் ச்சேத்து வைச்சானாக்குமோ” என்று தலையில் அடித்துக் கொண்டான் செல்லமணி.


“ஒஹ்ஹொஹொஹொஹொ” என்று வாயைத் துண்டால் மூடிக் கொண்டு பெரிதாகச் சிரித்தான் சோமு. 


“எதுக்காக்கும் இப்போ இப்படி ஒரு எக்காளச் சிரிப்புங்கறேன். ந்யான் நெஜத்த தானே ச்சொந்நேன்.”


“இப்படி ரயில்ல நானும்…….அவளும் எதிரும் புதிருமா உக்காந்துக்கறது கூட
ஜோஸ்யக்காரனாக்குமோ கணிக்கறான்னு……ஓஹ்ஹொஹொஹொ” என்று பேசியதை முடிக்க முடியாமல் சிரித்தான் சோமு.



“ஹோ, நாம ரண்டு பேரும் ச்சண்டை போட்டுக்கறதையாக்கும் செல்லமணி சொன்னான்…….இன்னும் ஒங்க களியாக்கறது போகலையாக்கும்…” தங்கமணி


“போகாது! ஏய்! செல்லமணி! எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சது ஜோஸ்யர் ஒந்நும் இல்லைஐ. இதோ இருக்காளே இவளோட திருட்டுப் பாட்டியாக்கும், ந்யான் இவளோட கையைப் பிடிச்சு இழுத்தேன்னு ஊரைக் கூட்டி ஏமாத்தி அப்பாவியான ந்நேக்கு இவளைக் கல்யாணம் பண்ணி வைச்சாளாக்கும்”


“என்னோட பாட்டிய எதுக்காக்கும் குத்தம் ச்சொல்லறேள். எங்க பாட்டி அப்படிச் ச்சொன்னாலும் நீங்க இழுக்கலைனு ச்சொல்லாம சும்மாதானே இருந்தேள்.. ஒங்கப்பாதான் பாட்டிகிட்ட மாப்புக் கேட்டு உங்களை எந்நோட தலைல கட்டி வைச்சாராக்கும்…”


“வோ! சோமுவ உன் தலைலயா கட்டினா? ஹையோ தங்கமணி அந்த வெயிட்டை எப்படியாக்கும் நீ தாங்கினாய்?” – செல்லமணி.


“அதை ஏன் கேக்கறாய்! இவரைக் கல்யாணம் பண்ணிண்டு நான் பட்ட த்துக்கம் ஆரும் படப்டாதுகேட்டியா.” என்று சொல்லிக் கொண்டே அழுதாள் தங்கமணி.


“ஏய் தங்கமணீ நீயும் ஒங்க பாட்டி மாதிரி கள்ளமெல்லாம் பேஸ்சப்படாது கேட்டியா? அப்படி எந்நவாக்கும் ந்நோக்கு விஜாரம்? ந்நோக்கு நான் சமைச்சுப் போடலையா? துணி தோச்சுப் போடலையா? பூ வாங்கித் தரலையா? வெளில கூட்டிண்டு போலையா? ஒங்கூட தாயக்கட்டம், பல்லாங்குழி ஆடலையாக்குமோ? ஒங்க பாட்டிக்கு சப்போர்ட் பண்ண வேண்டி கள்ளம் ச்சொல்லுவியே!…ந்நான் ஷெமிச்சு பொறுத்துக்கலையாக்குமோ? ந்நான் எந்ந ச்செய்யலை ச்சொல்லு பாக்கலாம்.”


“அதுவா ஒரு ஆத்துக்காரிக்கு வேணும்? போற எடத்துல எல்லாம் ஏதாவது ஒரு பொம்மநாட்டி கையைப் பிடிச்சு இழுத்தார்னு ஆராவது ச்சொல்லிண்டே இருந்தாளே…அதக் கேட்டு கேட்டு….” என்று ஓ வென்று வாயில் புடைவைத் தலைப்பைச் சுருட்டி வைத்து அழுதாள் தங்கமணி.


“வோ! அப்போ ஆராவது ச்சொன்னா ஒன் ஆம்படையானை சம்ஷியப்பியோ”


“என்னோட ஒந்நுவிட்ட அத்தையும் ச்சொன்னாளாக்கும், கொச்சில, தன் கண்ணால பாத்தேன்னு”


“ஹோ! அப்போ ரெண்டு விட்ட வெங்கிடி மாமாவும் சொல்லிருப்பரே? ந்யாந்தான் பக்கத்துலயே இருந்தேன்னு! அது எங்க க்ரூப்லருந்த ஒரு குட்டி கொதிக்க்கற றசத்தைக் கையில கொட்டிண்டுடுத்து. அதுக்கு ஐஸ் கட்டிய கொண்டு போய் அவ கையில வெச்சுப் பிடிச்சுண்டா தப்பாக்குமோ? ஈஸ்ச்வரா!”


“ஹோ! ஒன் அஸிஸ்டென்ட் ஈஸ்ச்வரனை விளிக்கண்டா. ந்நோக்கு சப்போர்ட் பண்ண. அவன் எங்க இங்க இருக்கான்?” என்று செல்லமணி சொல்லிட


“ஏய்! ன்யான் பகவான் ஈஸ்ச்வரனையாக்கும் விளிச்சேன்”


“எப்போதும் எண்டே பகவதினு தானே கூப்பிடுவர்!” என்று தங்கமணி சொல்லவும்…


“என்டே பகவதினு விளிச்சா அப்புறம் ந்யான் ஏதோ ஒரு பகவதிய இழுத்துண்டு வந்துட்டேன்னு ஒங்கிட்ட மூணுவிட்ட வேம்பு அத்தை ரகசியமா குஸுகுஸுப்பா  அதான்…”


“இன்னும் அது வேற பாக்கி இருக்காக்குமோ? கொச்சில மட்டுமா? அப்புறம் திருப்பூணித்துறால ஒரு கல்யாணத்துக்கு நீங்க போனஸமயத்துல அங்கேயும்தான் ஒரு பொண்ணொட கையைப் பிடிச்சுண்டேளாமே. சித்தப்பா சொன்னாராக்கும்…”


“ஹோ! ந்நல்ல சித்தப்பன்! தோ பாரு. ஆலப்புழைலயும்தான் இழுத்தேன். அம்பலப்புழைலயும்தான் இழுத்தேன். இப்ப அதுக்கென்னவாக்கும்? டைவோழ்ர்ஸ் ஆயாச்சே அப்புறம் எதுக்கு அதப் பத்திப் பேஸ்சறாய்?


“எப்படி டைவோழ்ர்ஸ் ஆச்சுனு சத்தியம் இவாளுக்குத் தெரியண்டாமா?”


“அதான் லோகத்துக்கே தெரியுமே! நீ ஒந்னும் ச்சொல்லண்டாங்கேட்டியா…ந்யான் கையப் புடிச்சு இழுத்திருந்தா அங்கயும் ஒங்க பாட்டி மாதிரி ஒரு பாட்டி வந்து கள்ளம் ச்சொல்லி என் தலைல அந்தக் குட்டிய கட்டியிருப்பாளாக்கும். நானும் இப்போ கொழந்த குட்டியோட இங்க வந்துருப்பேனாக்கும். கொடுத்து வைக்கலை ந்நேக்கு”


“வோ! அப்போ நேக்கு கொழந்தை பொறக்கலைனு ச்சொல்லிக் காட்டறேளாக்கும்.”


இவர்களின் பேச்சைக் கேட்ட சக பயணிகள் ஏதோ ஷூட்டிங்க் என்று நினைத்து வேடிக்கை பார்த்தனர். அதில் ஒருவர் எழுந்து எங்கேனும் கேமார வைத்திருக்கிறார்களோ என்று தேடினார். 


“மைக்கேல் மதன காம ராஜன் படத்தோட செகன்ட் பார்ட் போல தோணுதுல” என்று பயணிகளில் ஒருவர் சொல்லிட


“அப்படித்தான் தோணுது ஆனா, புதுமுகங்கள வைச்சு எடுக்கறாங்க போல”


“டைவோர்ஸ் ஆன கணவன் மனைவி சந்திச்சுக்கறாங்களாம். அதான் கதைக்கரு, கேஜிஜினு புதுசா ஒருத்தர் போல. ஏதோ ஒரு மேகசின்ல ‘ரகசியம்னு’ வந்துருந்துச்சு.”


“ரகசியமா அது? ஹஹஹ். சரி அப்ப இது ஷூட்டிங்க்தான்றீங்க. அப்படினா 4 காரேக்டரும் டைவேர்ஸ் ஆகி ஹீரோயின சந்திக்கறாங்களா? மத்ததுக்கெல்லாம் யாரா இருக்கும்?” என்று ஒருவர் கேட்டிட


“அப்ப நாமளும் படத்துல வருவமோ” என்று சொல்லிக் கர்சீஃபால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, பௌடரை எடுத்துப் போட்டுக் கொண்டு, தலையில் இல்லாத முடியை வாரிக் கொண்டார் வேறு ஒருவர். 


“எந்நத்துக்கு இத்ர விஜாரம். தோ பாரு தங்கமணி. ந்யான் அந்த அர்த்த்த்துலச் சொல்லலையாக்கும் கேட்டியா. நமக்குக் கொழந்தை பொறக்கறதுக்குள்ள ஒங்க பாட்டியும், ஒந்நுவிட்ட, ரெண்டுவிட்டதுகள் எல்லாம் ச்சேர்ந்து நான் அவளை இழுத்தேன், இவளை இழுத்தேனு சொல்லிண்டு, அவஸ்தானம் கோர்ட்டுக்குப் போய் நேக்கு டைவேழ்ர்ஸ் கட்லாசு கொடுத்தாளே. நாம சந்தோஷமா இருந்ததெல்லாத்தையும் மறந்துட்டியாக்குமோ”


“அந்த சந்தோஷந்தான் நாஸ்சமாயிடுத்தே ஒங்களால” என்று மீண்டும் மூக்கை உறிஞ்சினாள் தங்கமணி.


“அதுகள் எல்லாம் ஒம் மனசைக் கெடுத்தது, நானும் எங்கப்பாவும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததைப் பிடுங்கிக்கவாக்கும். ஆமாம்!.”


“நீ எதுக்காக்கும் மெட்ராஸ் வந்தாய்? தங்கமணிய ஃபாளோ பண்ணறியாக்குமோ” – செல்லமணி


“ஹோ! தங்கமணிய ஃபாளோ பண்றதாக்குமோ என் ஜோலி? ஒரு கல்யாணத்துக்குச் ச்சமைக்க வந்தேன். சுந்தரிக் குட்டியும் என் கூட அந்தக் கல்யாணத்துக்கு வந்தா. அம்புட்டுத்தான்.” என்றவன் மீண்டும், “ஸ்செரி, செல்லமணி நீ ச்சொன்னது போல யான் அவளை ஃபாளோ பண்ணினேன்னே வெச்சுக்கோயேன்…நோக்கென்னவாக்கும்னு கேக்கறேன்? நீங்கள் ரண்டுபேரும் எதுக்காகவாக்கும் வந்தேள்?”


“நாங்கள் எதுக்கு வந்தா ஒங்களுக்கென்னவாக்கும்? என்று சோமுவைக் கேட்டவள் செல்லமணியைப் பார்த்து, “தோ பாரு செல்லமணி வேண்டாதவாளோடு வேண்டாத்த சம்பாஷணை வேண்டாம் கேட்டியா, மனஸ்லாச்சா”


“ஹோ! எந்ன்ன ஒரு றைமிங்க்!! இதென்னவாக்கும்? நீங்க மட்டும் கேட்பேளாக்கும் ந்யான் கேட்கக் கூடாதாக்குமோ? – சோமு


“ஆமாம்! அப்படித்தான்! கேட்பேன்! எந்ந ச்செய்வேள்” – தங்கமணி


“ந்யான் ஒந்நும் ஒங்கூட பேசலையாக்கும் கேட்டியா. செல்லமணிக்கிட்டதான் பேஸ்சினேன்…” “ம்க்கும்” என்று தங்கமணி வலிப்புக் காட்டிவிட்டுத் திரும்பிக் கொண்டாள். தங்கமணிக்கு வத்தக் குழம்பு சாதம் பிடிக்கும் என்பதால் சோமு…


“செல்லமணி ஒங்க ரண்டுபேருக்கும் சாப்பாடு கொண்டு வந்துருக்கேளோ? ந்நாங்க வத்தக்குழம்பு ஸ்சாதம், எலுமிச்சம்பழ ஸ்சாதம், தயிர்ஸ்சாதம், இட்டலி எல்லாம் ன்யான் உண்டாக்கியதாக்கும். கொண்டு வந்துருக்கோமாக்கும். க்கும்…”


“ஆக்கும்…க்கும்…செல்லமணி நேக்கு ஆரோட ஸ்சாப்பாடும் வேண்டாங்கேட்டியா. ந்ந்நோக்கு வேணும்னா வாங்கிக் கொட்டிக்கோ”


“புலி பஸ்சிச்சாலும் புல்லைத் தின்னாது” னு தமிழ்ல ஒரு வாஜகம் உண்டு கேட்டியா செல்லமணி – சோமு


“ந்யான் ச்சண்டைக்காரினு ச்சொல்லிக் காட்டறார் பாரு செல்லமணி? எங்க பெந்தம் முறிஞ்சு போயாச்சே..”


“வோ கோர்ட் ச்சொன்னா முறிஞ்சுடுத்துனு அர்த்தமாக்குமோ? ந்நேக்கு இன்னும் முறிஞ்சிட்டில்லையாக்கும்.” என்று சொன்ன சோமு செல்லமணியைப் பார்த்து, “செல்லமணி நான் பொதுவாயிட்டுத்தானே சொன்னேன். எதுக்காக்கும் அவள் தன்னை புலினு ச்சொன்னதா ச்சண்டை போடறா?”


“ந்நேக்கும் நீ தங்கமணிய ச்சொன்னதாத்தான் தோணித்துக்கேட்டியா” அவர்கள் இருவரும் பேசுவதில் ஏதோ அர்த்தம் இருப்பது போல் தோன்றினாலும், கிடைக்கும் கேப்பில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான் அங்கு ஒரு டம்மி பீஸான செல்லமணியும். 


“பாத்தியா செல்லமணி….ந்நாந்தான் சண்டைக்காரி அதான் பெந்தம் முறிஞ்டுத்துனு அம்புட்டுப் பேருக்கும் தெரியணும்னுதானே…” என்று முடிக்காமல் மீண்டும் அழத் தொடங்கினாள் தங்கமணி.


“வோ! நல்ல கல்பனை! கேட்டியா செல்லமணி. இப்படிக் கல்பனை பண்ணிண்டுதான் வைஃபா இருந்தவள் வைஃபையா ஆயிட்டா”


“வைஃபையா? அப்படிந்நா எந்நவாக்கும் செல்லமணி?” –தங்கமணி


“ஹோ! பெந்தம் தள்ளிப் போச்சுந்னு ச்சொல்லு செல்லமணி”. தங்கமணிக்குப் புரிந்தது.


“சுந்தரிக்குட்டி அந்த வத்தக் கொழம்பு சாதப் பொட்டலத்த எடு. ந்நேக்கு றொம்பப் பசிக்கறதாக்கும்.” என்று எடுத்து வைத்துக் கொண்டு இருவரும் சாப்பிடத் தொடங்கினர். வாசனை மூக்கைத் துளைக்கவும் செல்லமணிக்கும், தங்கமணிக்கும் நாவில் நீர் ஊறியது என்றாலும் கேட்க முடியாமல் தவித்ததை சோமு ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டான். 


“செல்லமணி, ஒங்களுக்குத் தராம ச்சாப்புடறோம்னு தெற்றிக்கண்டாங்கேட்டியா. எதித்தாப்புல இருக்கறவா பெந்தமில்லைனு ஆனப்புறம்…ம்ம்ம்....ஸ்செரி போகட்டும்… அவா ஸ்சாப்பிடலைனாலும்…ஸாரமில்லைகேட்டியா. இந்தா எல்லாத்துலயும் ஓரோரு பொட்டலம்” இப்படி இவர்கள் வாதம் செய்து கொண்டே வந்ததில் என்ன ஸ்டேஷன் வந்தது, கடந்தது என்பதை யாரும் கவனிக்கவே இல்லை. 


அங்கு கடந்து சென்ற ஒரு பெரியவர் அங்கு வந்த மணத்தில் திரும்பிப் பார்த்திட சோமு இருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில், “டேய்! சோமு இங்க எப்படி? எப்படி இருக்க? உன் சாப்பாடு சாப்பிட்டு கொஞ்ச நாளாச்சு. இவதான் உன் வைஃபா” என்று சுந்தரியைப் பார்த்துக் கேட்டதும், 


“ஹோ! இதாராக்கும்! வாங்கோ! டி கே மாமா! ந்நந்நாருக்கேளா? ஆத்துல மாமி, கொழந்தைகள் எல்லாரும் ந்நந்நாருக்காளா? கோயம்புத்தூருக்கு பொண்ணாத்துக்குப் போயிண்டிருக்கேளாக்குமோ? ந்யான் இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். இது என்னோட ஸிஸ்டராக்கும். ஒக்காருங்கோ மாமா. சுந்தரிக்குட்டி கொஞ்சம் தள்ளி ஒக்காரு, மாமா உக்காரட்டும்…மாமா, வத்தக்குழம்பு ஸ்சாதம் இருக்குச் சாப்பிடறேளா?”


‘ஸிஸ்டராக்கும்’ என்றதைக் கேட்டதும், தங்கமணிக்கு ஆச்சரியம். சுந்தரிக்கோ அதிர்ச்சி.


“ஆமா, நான் என் பொண்ணாத்துக்குத்தான் போறேன். நான் சாப்பிட்டாச்சு. உங்களுக்கு எல்லாம் இருக்கா? கொஞ்சமா டேஸ்டுக்கு மட்டும். உன் கல்யாண லைஃப் எப்படிப் போயிண்டுருக்கு? ஸாரி உன் கல்யாணத்துக்கு வர முடியல. உன் வைஃப்  கொடுத்து வைச்சவ.”


“ஹோ அதுக்கென்ன மாமா. லைஃப் சந்தோஷமா போயிண்டிருக்கு. ந்நாந்தான் கொடுத்து வைச்சவன்கேட்டேளா. யென் ஆத்துக்காரி என்னை நன்னா பாத்துக்கறாளாக்கும். என்னை விட றொம்ப ந்நன்ன்னா சமைப்பாளாக்கும் கேட்டேளா” என்று சொல்லிவிட்டு வத்தக் குழம்பு சாதத்தை அவர் கையில் கொஞ்சம் கொடுத்து, “டேஸ்ட் பாருங்கோ மாமா!” என்று சொன்னான். சோமு பேசியதைக் கேட்டதும் தங்கமணிக்கு வியப்பு இன்னும் கூடியது. ‘நாங்க ச்சேந்துருக்கறாப்பலனா சொல்லறார்’ என்று நினைத்தாள்.


“ஓ! அப்படினா அவளையும் உன் தொழில்ல பார்ட்னரா போட்டுக் கூடக் கூட்டிண்டு போகலாமே”


“அவள் ந்நேக்கு லைஃப் பார்ட்னரா மட்ட்ட்டும் இருந்தா போரும் மாமா. ஆத்தப் பாத்துண்டு, அடுக்களைலியும் ஜோலி செஞ்சுண்டு…பாவம் அவள் இந்தத் தணல்ல எல்லாம் கஷ்டப்பட வேண்டாம்கேட்டேளா. ந்யான் இப்படி ஊரூரா அலைஞ்சுண்டு, ஆத்துல அவளுக்குச் சகாயிக்க முடியலையேனு ந்நேக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்காக்கும்.”
“உன் மனசு போலவே உன் வாழ்க்கை! வத்தக் குழம்பு ஸ்சாதம் சூப்பர்….அப்புறம் கொச்சில கல்யாணத்துல ஒரு பொண்ணு கொதிக்கற ரஸத்தைக் கைல கொட்டிண்டு.. நீ கூட ஐஸ்கட்டி எல்லாம் அவ கைல வைச்சு…ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போனியே…..அந்தப் பொண்ணு இப்போ எப்படி இருக்கா?”


“ஓ! அந்தக் குட்டியா?!. அந்த ஆக்சிடெண்டுக்கு அப்புறம் அவாத்துல போகண்டானு சொல்லிட்டாளாம். இப்போ வரதில்லை”


தங்கமணி விக்கித்துவிட்டாள். ஓ அப்படிந்நா இவர் எந்நைத்தான் நினைச்சுண்டுருக்காராக்குமோ. இவர் மொதல்ல டைவேழ்ர்ஸ் தர மாட்டேனுதானே சொன்னார். ந்நாந்தானே பாட்டியும் மத்தவாளும் சொல்லறதக் கேட்டுண்டு ஆடினேன். இவர் சொல்லற மாதிரி அவா பணத்துக்குத்தானோ? “நீ சந்தோஷமா இருப்பேன்னா டைவேழ்ர்ஸுக்கு சைன் போடறேன்னு” தானே போட்டார்”. ஆனா? ந்நான்? என்று நினைத்து வருந்தினாள்.


“ஓ! ஓகே! சரி சோமு கோயம்புத்தூர் வந்தாச்சு. இறங்கணும். நைஸ் டு மீட் யு. அடுத்தாப்புல எங்காத்துல ஒரு கல்யாணம் வரது. அதுக்கு இப்பவே ஒன்ன புக் பண்ணியாச்சு. தேதி ஃபிக்ஸ் ஆனப்புறம் உங்கிட்ட தேதி எல்லாம் சொல்றேன். நீ இன்னும் முன்னுக்கு வரணும்னு பகவானை வேண்டிக்கறேன். சரியா…பை” 


“பை மாமா! ஜமாய்ச்சுடலாம் கேட்டேளா!” என்று சொல்லி அவருக்கு விடை கொடுத்தான். சாப்பிட்டு முடிக்கவும் அடுத்து பாலக்காடு ஸ்டேஷன் வந்தது. இரவு 8.45. மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு இறங்கினர். தங்கமணி சோமுவையே பார்த்துக் கொண்டு இறங்கினாள். அவன் ஏதாவது சொல்வான் என்ற எதிர்பார்ப்பில்.


“செல்லமணி நீ முன்னாடி போ. எந்நப் பத்தி விஷமிக்கண்டாங்கேட்டியா. ந்யான் பிந்நாடி வந்துப்பேன்.” என்று தங்கமணி சொல்லவும், ஏமாற்றம், வருத்தம் கலந்த கோபத்துடன் செல்லமணி, “வாடி சுந்தரிக்குட்டி. நீ சோமுவுக்கு வெயிட்செய்யண்டாங்கேட்டியா. அவா ரண்டு பேரும் பாத்துப்பா.. ன்யான் உங்காத்துல உன்னைக் கொண்டாக்கறேன்” என்று சொல்லி சுந்தரியைக் கூட்டிக் கொண்டு சென்றான்.



“இந்த செல்லமணி எங்கயாக்கும் போறான்” என்று சொன்ன சோமு, ”ஏய் செல்லமணி! தங்கமணிய கூட்டிண்டு போ. இந்த ராத்திரியில அவள் எப்படி தனியா போவள்”


“ந்யானாக்கும் அவனப் போகச் சொன்னேன். நீங்கள் எநக்குத் துணையா இருக்கறப்போ ந்நேக்கு வேற ஆரும் வேண்டாங்கேட்டாளா!” என்று கண்ணில் நீர் கசிய தங்கமணி சொன்னதும், சோமு அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தான். “இப்போ ஆறாக்கும் ப்பேஸ்சினது? நீயாக்குமோ?!” 


“ம்ம்ம்ம்” என்று வெட்கத்துடன் தங்கமணி கண்ணில் நீருடன், “ந்நானேதான்” என்று சொன்னதும்,


“ஹோ! எந்நால நம்பவே முடியலையாக்கும் கேட்டியா! றொம்ப சந்தோஷமாருக்காக்கும்.” என்று சோமு தங்கமணியின் கைகளைப் பிடித்துக் கொள்ள, “ந்நேக்கும் தான்…ஆனா நமக்கு டைவேழ்ர்ஸ் ஆயுடுத்தே” என்று தங்கமணி சொல்ல, ”ஏய்! அத தூக்கி ஒடப்புல போடு. ந்நேக்கு நீ, ந்நோக்கு நான்” என்று பொது இடம் என்றும் பாராமல் அவளை அணைத்துக் கொள்ள, இருவரும் பொங்கி அழுதனர்! எல்லா உணர்வுகளும் கலந்த கண்ணீர்! வேடிக்கைப்பார்த்தவர்கள் “ஹப்பா சுபம் தான்” என்று பேசிக் கொள்ளவும், ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது!



(எங்க கதைல லாஜிக்கெல்லாம் தேடப்படாது கேட்டேளா!!!)

32 கருத்துகள்:

  1. வேறு மாதிரி முடிச்சுட்டீங்களே...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இது ஏற்கனவே எழுதி வைச்சிருந்தது....நடுல கொஞ்சம் மாத்தினேன் அவ்வளவுதான்...முடிவு இப்படி இருந்தா என்னனு யோசிச்சேன்...இந்த மாதிரியும் சேர்ந்திருக்க மாட்டாங்களா என்ன யாராவது..??!!! ஹஹ்ஹ
      கண்டிஷன் ல வரலியோ??! மிக்க நன்றி ஸ்ரீராம்....கருத்துக்கு...

      கீதா

      நீக்கு
  2. பதில்கள்
    1. ​இன்னும் முடிக்கவில்லையா கில்லர்ஜி?!!

      நீக்கு
    2. ஹஹஹஹ்ஹஹ அதுவும் நீ.......ளமாச்சே!!!! ஸ்ரீராம் முடிச்சுட்டாராம்...தூங்கிட்டு காலைல கமென்ட்...பார்த்திருப்பீங்களே...

      நீக்கு
  3. மிக அருமை. சம்பாஷணைகளிலேயே கதையை நகர்த்தும் வித்தை கைவந்திருக்கிறது. முடிவு எதிர்பார்த்தது தான்! இதுவும் நன்றாகவே இருக்கிறது. சந்தோஷத்திலும் கண்ணீர் பொங்கும் தானே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை கீதாக்கா நீங்கள் கதையின் உள் ஓட்டத்தைப் புரிந்து கொண்டமைக்கு மிக்க மிக்க நன்றி!!! ஆம் சந்தோஷத்திலும் அதுவும் ஏதோ ஒரு ஷணப் பொழுதில் வேண்டாத சொற்களைக் கேட்டு முடிவெடுத்து பிரிந்து ஆனால் உள்ளூள் வருத்தம் இருக்க மீண்டும் இணையும் போது அதுவும் பையனுக்கு பிரிய மனமில்லாமல் மனைவிக்காகப் பிரிந்து பின் மீண்டும் சேரும் வாய்ப்பு வந்து சேரும் போது அந்த உணர்வுகள் அழுகையில்தானே முடியும் சொல்லி மாளாதுதான்...ஆம் முடிவு உங்கள் கருத்துதான்..

      மிக்க நன்றிக்கா உங்கள் பாராட்டிற்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  4. கதை நன்றாக இருக்கிறது. கதை முடிவு சுபமாய் முடிந்தது மனநிறைவு. புரிதல் இருந்தால் பிரிவு ஏது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் புரிதல் கூட சில சமயம் ஷணப் பொழுது திசை மாறி பிரிந்து பின்னர் மீண்டும் இணைய வாய்ப்பும் இருக்கிறது என்றும் அறிந்தேன் இன்று...

      மிக்க நன்றி கோமதி அக்கா கருத்திற்கு...

      நீக்கு
  5. ஹாஹா... பாலக்காட்டு பாஷையில் ஒரு கதை. மீண்டும் மை.ம.கா.ராஜன் பார்த்த உணர்வு.

    பாராட்டுகள் கீதா ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி அதன் தாக்கத்தில் அதன் கண்டினியுவேஷன் போல் எழுதி வைத்திருந்த ஒன்றுதான் கொஞ்சம் மாற்றி இங்கு...

      மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  6. சம்பாஷணைகளை இரசித்தேன் பலரும் புரிதலின் தவறுகளால் பிரிந்த பிறகே புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் இதுவும் அவ்வகையே வாழ்க வளமுடன் அந்த தம்பதியினர்.

    நேற்றிரவு படித்து விட்டேன் கருத்திடாமல் உறங்கி விட்டேன்.

    எதற்கும் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் கதையாசிரியர் நம்ம ஏரியா பக்கம் வராமலிருப்பது நல்லது.

    பின்னே கோர்ட்டு, கேஸுன்னு அலைய வேண்டியது வரும் கேட்டோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பாஷணைகளை இரசித்தேன் பலரும் புரிதலின் தவறுகளால் பிரிந்த பிறகே புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் இதுவும் அவ்வகையே வாழ்க வளமுடன் அந்த தம்பதியினர்.// உண்மைதான் கில்லர்ஜி. ஒரு நொடிப் பொழுதில் சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள் பிறர் பேச்சைக் கேட்டு முடிவெடுத்துவிட்டு, அதிலும் பையனிடம் பணம் இருந்தால் அதைப் பறிப்பதற்கு என்றும் இப்படி டைவேர்ஸ் நோட்டிஸ் அனுப்புகிறார்கள். அதற்காகப் பையன் மேல் இல்லாத பழிகளெலலம் சுமத்துகிறார்கள். சட்டமும் பெண்களுக்குத்தான் சாதகம்.

      பின்பு வருந்தி சேர்கிறார்கள் என்பதை இன்றுக் கண் கூடாகக் கண்டேன். நான் கண்ட சோடியிலும் பையனின் பணத்திற்காகப் பெண் வீட்டார் இல்லாததை சொல்லிப் பிரிய வைத்து...இப்படியும் பெற்றோர் இருக்கிறார்களா என்று கேட்கலாம் இருக்கிறார்கள். என்பது உண்மை....பாதிக்கப்பட்ட இன்னொருவர் இருக்கிறார் ஆனால் அதை இங்கு சொல்ல முடியாது ஜி..


      //எதற்கும் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் கதையாசிரியர் நம்ம ஏரியா பக்கம் வராமலிருப்பது நல்லது.

      பின்னே கோர்ட்டு, கேஸுன்னு அலைய வேண்டியது வரும் கேட்டோ.....//

      ஹஹஹஹஹ்ஹ மிக்க நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  7. சம்பாஷனைகள் மை.ம.கா.ராவிலிருந்து உருவின மாதிரித்தான் இருக்கு. கதைல கொஞ்சம் லாஜிக் வேண்டாமோ? நம்பும்படியா இல்லையே. இதென்ன, டைவர்ஸ்ல கையெழுத்துப்போட்டுப் பிரிகிறது அப்புறம் கண்ணில் நீர் வர சேர்றது. என்ன டைவர்ஸ்னா உடனே, சரி ரெண்டுபேரும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கிளம்புங்கோன்னு ஆயிடுமா? பேரும் தங்கமணி ரங்கமணின்னு நெட் பேரா இருக்கு. கொஞ்சம் நல்ல பேரா வச்சிருக்கலாமோ? காமேஸ்வரனை சோமேஸ்வரனாக்கினமாதிரி? இருந்தாலும் பாலக்காட்டு பேச்சு ரசிக்க வைத்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பாஷனைகள் மை.ம.கா.ராவிலிருந்து உருவின மாதிரித்தான் இருக்கு.// அஹஹஹஹ் எண்டெ ஈஸ்வரா!! அப்படியா இருக்கு? நேக்கு நீ நோக்கு நீ அங்கும் வரும்..இங்கு அதைச்க் சொல்லி முடித்திருக்கிறேன்...ஆனால் அதன் கண்டினியுவேஷன் போல்தான் எழுதி வைத்திருந்தேன்..அதாவது இருவரும் திருமணம் முடிந்த பின்...வாழ்வது..பெயர்களை மட்டும் மாற்றி. அப்பெண் ஒரு நொடிப் பொழுதில் எடுப்பார் கைப்பிள்ளை போல் பிறர் சொல்லுவதைக் கேட்டு அதை நம்புவதால் முடிவுக்கு ஒத்துப் போகிறாள்.அவர்கள் இருவருமே ஒரு விதமாக தர்கம் செய்து கொண்டே தான் இருப்பார்கள் இல்லைஅய.. ஸோ பிரிவதால் பழைய கதையின் சுட்டிக் காட்டுதல் இங்கு இடையில் வருவதால் தோன்றியிருக்கலாம். ஆனால் இதில் உரையாடல்கள் எனது கற்பனைதானே...சரி எதற்கும் மீண்டு மைமகாரா வைக் கேட்கிறேன்...இந்த பார்ட் மட்டும். ஏனென்றால் எனக்கு வசனங்கள் அப்படி பை ஹார்ட்டாக நினைவில் இல்லை. மீன் என்பதும் குக் என்பதும் திருட்டுப் பாட்டி கையை இழுத்தல் மட்டும் நினைவிருக்கிறது..

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன்...

      நீக்கு
    2. கதைல கொஞ்சம் லாஜிக் வேண்டாமோ? நம்பும்படியா இல்லையே. இதென்ன, டைவர்ஸ்ல கையெழுத்துப்போட்டுப் பிரிகிறது அப்புறம் கண்ணில் நீர் வர சேர்றது. என்ன டைவர்ஸ்னா உடனே, சரி ரெண்டுபேரும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கிளம்புங்கோன்னு ஆயிடுமா? //

      பிரிந்தவர்கள் 1 வருடத்தில் சேர்ந்த கதை இதோ இன்று தெரிந்தது. நேற்று ஸ்ரீராமுக்குக் கூடப் பதில் சொல்லும் போது இப்படியும் யாரேனும் சேர்ந்திருக்கமாட்டார்களா என்ன என்று சொல்லியிருந்தேன். இன்று நெருங்கிய உறவினர் மரணத்திற்குச் செல்ல நேர்ந்தது. மரணம் அடைந்தவர் கேரளத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் பேச்சு கேரள பிராமணர் தமிழாகத்தான் இருக்கும். இதோ இங்கே சொல்லப்பட்டது போல்...ஆனல் மனைவியின் ஊர் சென்னை என்பதால் இங்கு இறுதியில் செட்டில் ஆனார். அப்போது 2015 இறுதியில் பிரிந்த ஒரு ஜோடி (இஅவர்களும் கேரளத்தில் வளர்ந்தவர்கள்) இன்று அங்கு சேர்ந்து வந்திருந்தனர். அப்போது அறிந்தது அவர்கள் சேர்ந்து விட்டார்கள் என்று. அந்தப் பெண் சொன்னது தன் அப்பா அம்மா சொன்னதைக் கேட்டுப் பிரிந்து விட்டு வருந்தி, கணவர் டைவர்ஸ் முதலில் கொடுக்க விருப்பமில்லாமல் ஆனால் இவள் சந்தோஷம் கருதி சம்மதித்துக் கொடுத்துவிட்டு, ஆனால் அவர் இவளைத் தொடர்ந்து கொண்டே இருந்து...உண்மையை உணர்ந்ததும் மீண்டும் யார் சொல்லுவதையும் மைன்ட் பண்ணாமல் சேர்ந்து வாழ்கின்றனராம்.அவள் அப்படி அழுதாளாம் மீண்டும் அந்தப் பையன் வந்து மீட் செய்ததும்..நான் நினைத்துக் கொண்டேன் பரவாயில்லையே நாம் எழுதியது போல் இப்படியும் நடக்கிறது என்று....ஆனால் பிரிபவர்கள் நிஜமாகவே ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் இருக்க விரும்புபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் குடுமப்த்திலேயே ஒரு ஜோடிக்கு இப்போது கோர்ட்டில் நடந்து வருகிறது..கேஸ்....

      அப்புறம் இப்படி உள்ளுக்குள் அன்பு வைத்து வெளியில் சண்டை போட்டுக் கொண்டு அதாவது ஸில்லியாகச் சண்டைகள் போட்டுக் கொண்டு ஷணப் பொழுதில் முடிவெடுத்து பிரிந்து விட்டு ஃபீல் பண்ணி பல உண்ர்வுகள் கலந்து ஆனந்தம், ஒரு கில்டி ஃபீலிங்க் எல்லாம் கலந்த ஒரு கண்ணீர் என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையோ...ஹஹஹ்..

      இப்போது சந்தித்தவர்கள் கூட ஒருத்தருக்கொருத்தர் கேலி நையாண்டி பண்ணிச் ஸில்லியாகச் சண்டை போடுபவர்கள் முதலிலும்., இப்போது பிரிந்து சேர்ந்து செகண்ட் இன்னிங்க்ஸிலும் அதே சண்டைதான் - அதுவும் அங்கிருந்த பாத்ரூமிற்குப் போவதற்கும், அங்கு கொடுக்கப்பட்ட காபி குடிப்பதற்கும் அவர்கள் போட்ட சண்டை ஹஹஹ் ரகம் ஆனால் சிரிக்க முடியவில்லை...

      நீக்கு
    3. இருந்தாலும் பாலக்காட்டு பேச்சு ரசிக்க வைத்தது. பாராட்டுகள்.//

      மிக்க நன்றி நெல்லை தங்களின் பாராட்டிற்கு

      நீக்கு
    4. ஓ.. கீதா ரங்கன் - இப்படியும் நடக்கிறதா? 'எண்ணித் துணிக கருமம்' என்பதை அறியாதவர்கள் போலிருக்கிறது, அல்லது அந்த வயதிலும் மெச்சூரிட்டி வராதவர்கள் போலிருக்கிறது. நாளைக்கு குழந்தைகள் பிறக்கும்போது அவர்கள் கேள்வியை எப்படி எதிர்கொள்வார்களோ. அட்லீஸ்ட் தவறை உணர்ந்து திருத்திக்கொண்டார்களே. எந்தப் பிரச்சனை வந்தாலும், வருங்காலத்தில் அந்தப் பெண் கணவனை, முனைந்து கேள்விகேட்க முடியுமா?

      நீக்கு
    5. ஒன்னு சொல்ல விட்டுட்டேன்...ஆமா கொஞ்சம் லாஜிக் இல்லைதான் ஹஹஹ அதுக்குத்தான் கடைசில சொல்லிருக்கேனே லாஜிக் எல்லாம் தேடப்படாது நு ஹஹஹஹ்ஹ

      நீக்கு
    6. ஓ இப்படியும் நடக்கிறதானு கேட்டுருக்கீங்க நெல்லை ..

      ஆமாம்...இன்னும் சொல்லப் போனால்...இப்படிக் கொஞ்சம் அச்சுப்பிச்சுத்தநமாகப் பேசும் குடும்வங்கள், ஜோடிகள் உண்டு.எங்கு, சமூகம் பற்றி..இங்கு அதை வெளிப்படையாகப் பொது வெளியில் சொல்ல முடியாதே... ஆனால் நான் அறிந்து கொண்டது. அவர்கள் கொஞ்சம் அப்படியும் இப்படியும் இருந்தாலும், பல குடும்பங்கள் அடிப்படை தேவையான விட்டுக் கொடுத்தல், அன்பு சந்தோஷம் இது மட்டுமே என்று வாழ்ந்து வருகிறார்கள்கிண்டலும் கேலியுமாய் சிரித்துக் கொண்டே...வருமானம் குறைவாக இருந்தாலும், படிப்பறிவு குறைவாக இருந்தாலும்....

      படித்தவர்கள் அறிவுபூர்வமாகப் பேசினாலும், யதார்த்தம் யதார்த்தம்...மெச்சுஉரிட்டி என்று பேசினாலும்...Family charm கூட்டுக குடும்பம், குறைந்து வருகிறதோ என்றும் தோன்றுகிறது...

      நீக்கு
  8. பேரும் தங்கமணி ரங்கமணின்னு நெட் பேரா இருக்கு. கொஞ்சம் நல்ல பேரா வச்சிருக்கலாமோ? // ஹஹ்ஹஹஹ்ஹ்ஹ் நெட் பேரா? ஓ அப்பாவி தங்கமணினு ஒருத்தங்க இருக்காங்கல்ல அதை வைச்சு சொல்லறீங்களா....ஐயோ நெல்லை நான் ஏற்கனவே இதை எழுதிட்டேன் அப்பாவி தங்கமணி எனக்கு கமென்ட் போட்டுருந்தாங்க அட ராமா நாம் இந்தப் பேர்தானே வைச்சுருக்கோம்னு நினைச்சு மாத்த நினைச்சு மறந்துட்டேன். அப்புறம் என் உறவினர், நட்பு வட்டத்தில் செல்லமணி, பாருக்குட்டி, சுந்தரிக்குட்டி, மீனுக்குட்டி, எல்லா பெயர்களும் உண்டு. தங்கமணி என் கிராமத்தில் எங்கள் தெருவில் இருந்த பெண் இப்போது இங்குதான் இருக்கிறாள், என்னுடன் தொடர்பிலும். கிட்டத்தட்ட அவள் கேரக்டர் இந்தத் தங்கமணியிலும் வெளிப்பட்டிருக்கிறது...

    மிக்க நன்றி நெல்லை...மிகவும் ரதிச்சேன் உங்க கமென்டை...

    பதிலளிநீக்கு
  9. பாலக்காட்டுத் தமிழ்..
    பாலட பாயசம் மாதிரி இனிமை.. அருமை..

    பிரிதல் என்பது யாருக்குத் தான் இனிக்கும்?..
    தேனும் பாலும் போல திகட்டாத வாழ்வு..
    சேர்ந்தே இருக்கட்டும் .. என்றென்றும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சகோ!!! பாலக்காட்டுத் தமிழ் ஆம்! அதை அவர்கள் பேசிக் கேட்கும் போது பல சமயங்களில் சிரிப்பு வந்துவிடும். அதில் பலரும் அப்பாவித்தனமாகப் பேசுவது போல இருக்கும். பெரும்பாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் விடாமல் வார்த்தைக்க்கு வார்த்தை பதிலடி நக்கல் நையாண்டியுடன் கொடுத்தாலும் அதில் ஓர் சிறிய அன்யோன்யம் வெளிப்படுவது போன்றும் தோன்றும் எனக்கு.....இனிமைதான்..

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. பேச்சு மொழியில் பாராட்டும் கதை நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  11. "
    “இப்போ ஆறாக்கும் ப்பேஸ்சினது? நீயாக்குமோ?!”


    “ம்ம்ம்ம்” என்று வெட்கத்துடன் தங்கமணி கண்ணில் நீருடன், “ந்நானேதான்” என்று சொன்னதும்
    "
    என அழகான நடையுடன் அருமையான கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்ப்பாவானன் சகோ தங்கள் கருத்திற்கு

      நீக்கு
  12. பாலக்காட்டுத் தமிழ். கேரளக்காரர்களுடன் பழக்கமிருந்ததால் ரஸித்துப் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையில் அற்பகாரணங்கள் மற்றவர்களின் பேச்சை நம்பி டைவர்ஸில் முடியும் நிகழ்வுகள். பின்னாடி இப்படி வாய்ப்பு கிடைத்து இணைந்தால் நல்ல கற்பனை. அழகான ரஸிக்கும்படிான பிணக்கு அருமை. வாக்குவாதம் மனதில் அசைபோடவைக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சியம்மா. கதையை ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றிமா. ஆமாம் அற்ப காரணங்களுக்காகப் பிரிந்து பின்னர் சேர்ந்த ஒரு சோடியை இரு நாட்களுக்கு முன் நான் இதை எழுதி எங்கள் கிரியேஷனில் ஸ்ரீராம் வெளியிட்ட மறுநாள் அப்படி இணைந்த ஜோடியைச் சந்தித்தேன். மிகவும் வியப்பாக இருந்தது. ஸ்ரீராமுக்கு முதலில் கருத்திட்ட போது கூட இப்படியும் ஒரு ஜோடி இருக்காதா என்ன என்று சொல்லியிருந்தேன். ஆனால் மறுநாளே அப்படிப் பிரிந்து (பிரிந்தது தெரியும்..)மீண்டும் இணைந்த ஒரு ஜோடியைச் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை...

      மிக்க நன்றி காமாட்சிம்மா....தொடர்ந்து ஊக்கமிகு வார்த்தைகள் கொடுத்து ஊக்குவிப்பதற்கும் மிக்க நன்றிம்மா...

      நீக்கு