அனிச்சத் தின் மறுபக்கம்
வேதா
கீதா ரெங்கனின் தோழி எழுதிய சிறுகதை :
அழகான இளம் மாலைப் பொழுது, பூமியின் மறு பகுதிக்குத் தன் கடமையாற்ற வேண்டி டாட்டா சொல்லித் தயாராகிக் கொண்டிருந்தான் சூரியன். தன் நடைப் பயிற்சியை முடித்த கதிர் கடற்கரையில் சற்று நேரம் கடற்கரைக் காற்றை அனுபவித்துச் செல்லலாம் என்று அமர்ந்தான். கடல் ஆர்ப்பரித்து அலைகளைக் கரைக்கு அனுப்பி, அங்கு குழுமியிருந்த மக்களின் மனச் சோர்வைப் பெற்றுத் தன்னிடம் கொண்டு வரச் செய்து மக்களின் மனதை மகிழ்வாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கதிரின் மனதிலோ கடல் அலைகளைப் போல் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து மோதியது.
சற்று தூரத்தில் குழந்தைகள் மணல் வீடும், கோட்டையும் கட்டி விளையாடிக் கொண்டிருக்க அவர்கள் கட்டி முடிக்கும் தருவாயில் எங்கிருந்தோ வந்த பந்து ஒன்று மணல் கோட்டையின் உச்சியைத் தகர்த்து விட்டு கதிரின் அருகில் வந்து விழுந்தது. அவன் சிரித்துக் கொண்டே அப்பந்தை கவனமாகக் கோட்டையைத் தட்டிவிடாதபடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் எரிந்தான் கனவுகள் எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்துவிடும் என்ற வாழ்க்கைத் தத்துவம் எதுவும் அறியாத, கவலையில்லா வயது. ஒரு மனிதனின் வாழ்வில் இதுதான் அருமையான பருவமோ? கதிருக்கு அப்படித்தான் தோன்றியது.
அவன் தாத்தா கட்டிய அந்தப் பாரம்பரிய வீடும் இப்படித்தானே சில வருடங்களுக்கு முன் வரை அண்ணன்களின் குடும்பங்கள், குழந்தைகள், சித்தப்பா,பெரியப்பா குழந்தைகள், நட்பு வட்டம் என்று நிறைந்து கலகலவென்று நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்”என்பது போல் இருந்தது! இப்போதோ? இதே நாள்தான் 4 வருடங்களுக்கு முன் அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டதே.
“சார், மாங்கா தேங்கா பட்டாணி சுண்டல்”
சுண்டல் பையன்! இவன் வயதொத்த குழந்தைகள் பீச்சில் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்க, இவனோ தன் வாழ்வாதாரத்திற்காகச் சுண்டல் விற்கும் நிலை!. பாவம்’ என்று நினைத்து அவனிடம் சுண்டல் வாங்கினான். வாய் சுண்டலை அசை போட மனம் நினைவுகளை அசைபோடத் தொடங்கியது.
சமீபகாலமாக அவன் மனதில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி. அதெப்படி அவனுக்கும் அவன் மனைவிக்குமிடையேயான தனிப்பட்ட மனத்தாங்கல்,அவனைச் சுற்றியுள்ளவர்களின், அதுவும் அவனை நன்கு அறிந்தவர்களின் அவன் மீதான பார்வையையே மாற்றியது? மாற்றியதோடு அல்லாமல் அவன் வாழ்விலும் குறுக்கிட வைத்தது?
சிறு வயது, பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம் என்று ஒவ்வொரு மகிழ்வான பருவமும் வேகமாகக் கடந்து வேலை, திருமணம், குடும்ப வாழ்க்கை என்று புதிய பரிமாணங்கள், உறவுகள், நட்புகள் என்று விரிந்து ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் மாற்றித்தான் போடுகிறது இந்தக் காலச்சக்கரம். வயதாக ஆக அனுபவங்களும், சூழல்களும், என்னென்னவோ கற்றுக் கொடுத்து இன்னும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்கிறது இந்த வாழ்க்கைச் சக்கரம். கதிர் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
சில வருடங்களாக அவன் குடும்பத்தார் அவனிடம் நடந்து கொண்டவிதமே மாறிவிட்டது. அதனாலேயே குடும்பத்தின் மீதான அவன் பார்வையுமே மாறிவிட்டிருந்தது. எல்லோரையுமே அந்ததந்த உறவு வட்டத்திற்குள் பார்க்காமல் நட்பு ரீதியாக மட்டுமே அணுக வேண்டும் என்ற மனநிலை.
‘ஆம் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்பவர்கள் நட்புகள் மட்டும்தானே” என்று நினைத்த வேளையில்,
“ஹே! கதிர்” என்ற பழக்கமான குரல் கேட்கத் திரும்பிப் பார்த்தான். ‘அட! செல்வன்!’
“எப்படி இருக்க கதிர்” என்று கேட்டுக் கொண்டே கை குலுக்கிவிட்டு அருகில் அமர்ந்தான் செல்வன். சிறு வயது முதல் மிக நெருங்கிய நண்பன்.
“நீ எப்படி இருக்க? என்ன இந்தப் பக்கம்”.
“நானும் வாக்கிங்க் தான். உன்ன இங்க பார்த்ததும் வந்தேன்…..”
வழக்கமான நண்பர்களைப் பற்றிய விஷயங்கள், கதிரின் மென்பொருள் பிஸினஸ் விஷயங்கள், உலக விஷயங்கள் என்று ஒடியது அவர்களின் உரையாடல்கள். செல்வனின் செல் ஃபோன் கிணு கிணுத்தது. வாட்சப்பில்.
“ஓ! இன்னிக்கு உன் வெட்டிங்க் டே! பாரு ஆஷா நம்ம க்ரூப்ல மெசேஜ் அனுப்பிருக்கா. நீதான் க்ரூப்ல ஆக்டிவா இல்லையே! அவங்களுக்கு எல்லாம் உன் விஷயமும் தெரியாதே. பொண்ணுங்களுக்கு என்னா மெமரிப்பா இப்படி நாள் எல்லாம் நினைவு வைச்சுக்கற அளவு”
கதிரிடம் இருந்து பெருமூச்சுதான் வந்ததே தவிர அவனால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? இதே நாள் அவன் திருமண வாழ்க்கை முடிந்த நாள்.செல்வனுக்கு கதிரின் மண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் தெரியும்.
“ஹேய் கதிர் என்னாச்சு? எனிதிங்க் ராங்க்? ஆஷாவோட விஷ்ஷை நான் உன்கிட்ட சொன்னது கஷ்டமாயிடுச்சோ…ஸாரி…….?”
“ஹேய்! அப்படி எல்லாம் இல்ல…..”
“உன் பிரச்சனை தெரியும்டா. இப்ப உன் ரியாக்ஷன் பாக்கும் போது உன் மனசுல சம்திங்க் நாட் ஆல்ரைட்னு தெரியுது….”.
“யெஸ்…. இப்ப அதுலருந்து மீண்டாலும்……ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல? உனக்கே தெரியும் எங்க வீடு, குடும்பம் எல்லாம் முன்னாடி எப்படி இருந்துச்சுனு. கான் ஆர் தோஸ் கோல்டன் டேய்ஸ்”
“என்னடா சொல்ற? உன் பெர்சனல் லைஃப் பிரச்சனைக்கும் அதுக்கும் என்னடா சம்பந்தம்…”
கேள்விகள் அவனது நினைவுகளை இன்னும் கிளறி விட்டது. “அப்படித்தான் ஆகிப்போச்சு செல்வன். உனக்கு என் பிரச்சினை மட்டும் தானே தெரியும்!இன்சிடென்ட்ஸ் தெரியாதே. என் மனைவி கயல் சுயமா சிந்திக்காம எடுத்த தப்பான முடிவுனால, அவளுக்குக் கிடைச்ச தப்பான வழிகாட்டல்னால,குடும்பமே மாறிப் போச்சு.”
“ம்ம்ம்ம்ம்……சின்ன வயசுல உங்க வீட்டுல நாம எவ்வளவு விளையாடியிருப்போம்! உங்க வீடு எப்பவுமே ஜே ஜே நு இருக்குமே. நான் கூட எங்க வீட்டுல சொல்வேன். இருந்தா கதிர் குடும்பம் மாதிரி இருக்கணும்னு”
கதிருக்கு கடந்த 4 வருட நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.
அழகான ஒரு காலைப் பொழுது. கதிர் வழக்கம் போல் உடல்நலம் சரியில்லாத தன் தந்தையின் தேவைகளைக் கவனித்துவிட்டு, டயஃபர் மாற்றி,உடலைத் துடைத்து உடைகள் மாற்றிவிட்டு, அவருக்குத் தேவையானவற்றை அருகில் அவர் கஷ்டப்படாமல் எடுத்துக் கொள்ள வைத்துவிட்டு தன் அலுவலத்திற்குக் கிளம்பினான். கடந்த 30 வருடங்களாக அவன் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான். அவன் மனைவி அரசு நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் வேலை பார்த்து வந்தாள்.
அன்று அவள் வேலைக்குக் கிளம்பாமல் இருந்ததைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் அவளிடம் கேட்க யத்தனிக்கையில் வாசலில் யாரோ வருவது போன்ற கேட்டின் சத்தம். அந்த நேரத்துக்கு யார் வரப் போகிறார்கள் என்று பார்த்தவனுக்கு ஆச்சரியம். வெவ்வேறு இடங்களில் இருந்த கயலின் உடன் பிறப்புகள், வேறு உறவினர்கள் எல்லோரும் கூட்டமாக வந்தார்கள்.
அவனுக்கு ஆச்சரியம்! இத்தனை பேரும் எதற்கு வருகிறார்கள்? இவன் மனதில் கேள்விகள் நிறைந்து கொண்டிருந்த போது அவர்கள் உள்ளேயே வந்துவிட்டார்கள். எந்தவித சாதாரணப் பரிமாற்றங்களும் இல்லாமல் நேரடியாகவே
“உங்க கூடக் கொஞ்சம் பேசனும்.” என்றார்கள்.
குழம்பிய கதிர், “ஏதாச்சும் ரொம்ப முக்கியமான விஷயமா? இல்ல எதுக்கு கேக்கறேன்னா, எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங்க் இருக்கு. நான் சாயந்திரமா வந்ததும் பேசலாமா? நீங்க அதுக்குள்ள குளிச்சு, சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க…” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் மனைவி வீட்டின் முன் கதவை உள்பக்கமாகப் பூட்டு போட்டுப் பூட்டியபடியே,
“நீ இப்ப அவங்களோடு பேசாம வெளிய போக முடியாது” என்று சொன்னதும் அவளது செயல் இவனுக்கு மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும்? அதுவும் அவன் மனைவியின் உறவினர் வந்து வெகு நாட்கள் ஆகியிருக்க மனைவியும் இவனிடம் அவர்கள் வருவது குறித்து எதுவும் சொல்லவில்லையே என்ற பல குழப்பமான சிந்தனைகள் மனதில் புரள, யோசித்தவாறே உட்கார்ந்தான்.
“உன்னைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்து இந்த 20 வருஷமா உன் கூடவே இருந்து உன்னை, உங்க அம்மா அப்பாவ எல்லாம் கவனிச்சத தவிர எங்க சகோதரிக்கு வேற எந்த ப்ரயோஜனமும் இல்லை. அதனால அவ உன் கூட வாழனுன்னா ஒரு தொகை கொடுக்கனும் இல்லைனா அவ உன்னைப் பிரிய வேண்டிவரும்” என்று கயலின் பெரிய அண்ணன் சொல்லவும் கதிருக்கு அதிர்ச்சி. கதிர் தன் மனைவி கயலைத் திரும்பிப் பார்த்தான். கயலோ மௌனம் சாதித்தாள்.
‘இவளுக்கு என்னாயிற்று? இந்த 20 வருடங்கள் நன்றாகத்தானே போயிற்று! பெரிய பிரச்சனைகள் எதுவும் வந்ததில்லையே. பார்க்கப் போனால் அவள் தன் கனவுகளை அடையவும், தனித்தன்மையுடன் வாழவும் நான் அவளுக்கு சுதந்திரம் கொடுத்து ஆதரவாகத்தானே இருந்தேன்.’ என்றெல்லாம் அவன் மனதில் ஓடியது.
கதிரின் குடும்பம் கொஞ்சம் பழமையான குடும்பம். அவனது சகோதரர்களின் மனைவிகள் யாரும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதோடு அவர்கள் அணியும் ஆடைகளிலிருந்து அவர்கள் வாழும் வாழ்க்கை வரை எல்லாவற்றிற்கும் தடைகள் உண்டு.
அப்படியான ஒரு குடும்பத்தில் இவன் தன் மனைவியை வேலையை விடவேண்டாம் என்று சொல்லி, மேல்படிப்பும் படிக்க வைத்து அவள் விரும்பிய வாழ்க்கையைத்தான் கொடுத்திருந்தான். இதெல்லாம் அவள் இவனுடனான இந்த 20 வருட வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம் தானே?
“என்ன ஒன்னுமே சொல்ல மாட்டேன்றீங்க” என்று மனைவியின் இரண்டாவது அண்ணனிடமிருந்து அடுத்த கேள்வி
.
“ம்ம்ம்ம் ஓகே, நான் கயலோடு தான் பேசணும். இது எங்க தனிப்பட்ட விஷயம். அதுவுமில்லாம அவ கல்யாணம் ஆன நாள்ல இருந்து இதுநாள் வரை எங்கிட்ட இது பத்தியோ இல்லை அவ குறை பத்தியோ சொன்னதில்ல. ஸோ நான் அவகிட்ட பேசணும். உங்க வார்த்தைகளை விட நான் அவ வார்த்தைகளுக்குத்தான் மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கிறேன்…”
“கயல் என்னாச்சு கயல் உனக்கு? ஏன் உன் கூடப் பிறந்தவங்க எல்லாரும் இப்படிப் பேசறாங்க? நீ இதுவரை எங்கிட்ட எதுவுமே சொல்லலை. அப்புறம் ஏன் இப்படியான ஒரு திடீர் மாற்றம்?”
“நமக்கும் வயசாகுது. நமக்கு எதிர்காலத்துக்குன்னு எந்த சேமிப்பும் இல்ல. எனக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. ஸோ நீ எனக்கு ஒரு தொகை கொடுப்பேன்னு உறுதிப்படுத்து. அப்படினா உன் கூட இருப்பேன். இல்லைனா நான் பிரிஞ்சு போறேன்.”
கதிர் அவளது பதிலில் உறைந்து போனான். தன் மனைவியிடமிருந்து இப்படியான ஒரு பதிலை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லையாதலால் அதிர்ச்சியில் அவனால் பேசக் கூட முடியவில்லை.
இப்படியான வாக்குவாதங்கள், கூப்பாடுகள் அடுத்த சில வாரங்கள் தொடர்ந்தது. கதிரின் சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரும் விஷயம் கேள்விப்பட்டுப் பேசுவதற்கு வந்தார்கள். ஆனால் கதிர் உறுதியாக இருந்தான் இது தங்களின் தனிப்பட்ட விஷயம் அதனால், தான் தன் மனைவியிடம் மட்டுமே பேசுவேன் என்று. குடும்பத்தினருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பினார்கள். ஆனால் கதிரின் அண்ணன் கவினும் அவன் மனைவி ஜெயாவும் மட்டும்
“கதிர் நீ அவங்க சொல்றதக் கேட்டு யோசிச்சு ஒத்துக்கணும்.” என்று சொல்லவும் தன் அண்ணனும் ஏன் இப்படிப் பேசுகிறான் என்ற வியப்பு.
“இங்க பாரு கதிர், நம்ம அப்பா படுத்த படுக்கையா இருக்கார். இன்னும் கொஞ்ச நாள் தான். அம்மாவுக்கு வயசாயிடுச்சு. அதனால இந்தப் பரம்பரை வீட்டை நமக்குள்ள பிரிச்சு உன் ஷேரை உன் மனைவிக்கு கொடுத்துரலாம்.”
அண்ணாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கதிருக்கு எல்லாமே தெளிவாகப் புரிந்தது. கவினும், ஜெயாவும் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அம்மாவின் சொத்தைப் பிரிக்கச் சொன்னதும், இதுதான் கவின், ஜெயா மற்றும் கயலின் நெடுங்காலத் திட்டமோ என்றும் கூடத் தோன்றியது. கயல் இதை கதிரிடம் மீண்டும் மீண்டும் கேட்க,
“கயல், என் பேரன்ட்ஸ் இருக்கற வரைக்கும் நான் அவங்ககிட்ட இதைப் பத்திப் பேச மாட்டேன். இந்த வீடு அவங்களுடையது. அவங்க காலம் வரைக்கும் இதுல இருக்கறதுக்கு அவங்களுக்கு உரிமை உண்டு.” என்றவனுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் திடீரென்று கயல் சொன்ன வார்த்தைகள்.
“இந்தக் குடும்பத்துக்காக என் வாழ்க்கை முழுசையும் செலவழிச்சதுக்கு நான் செஞ்சது எல்லாத்தையும் திரும்ப வாங்காம விடமாட்டேன். நீ பார்த்துட்டே இரு”
அப்போது கதிர் இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போதுதான் அதன் அர்த்தம் புரிந்தது ஏன் அவன் மனைவி இப்படி நடந்து கொண்டாள் என்பதும் விளங்கியது.
“கயல் இங்க பாரு. நாம நல்ல சந்தோஷமாத்தான் இருந்துட்டுருந்தோம். நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மூணாவது நபர நுழையவிடாத.”
“எனக்கு இனி உன் கூடப் பேசறதுல விருப்பமில்ல. என் அண்ணன்கள் சொல்றததான் கேப்பேன். நான் கேட்ட சொத்து நீ கொடுக்கலைனா அதை எப்படி வாங்கணும்னு எனக்குத் தெரியும். அதுக்கு என் அண்ணாக்கள் சப்போர்ட் பண்ணுவாங்க. நீ என்னை சமாதானப்படுத்த முயற்சி பண்ணாத. இனி என் ஆக்ஷன் தான் பேசும்.” இதைச் சொல்லிவிட்டு கயல் தன் உடன் பிறப்புகளோடு கதிரை விட்டுச் சென்றுவிட்டாள்.
கதிர் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் எல்லாமே வீணாகியது. அதன் பின் கயல் தன் உடன்பிறப்புகளோடு கதிரின் அண்ணன்களின் வீடு,உறவினர் வீடு நட்புகளின் வீடு என்று ஒவ்வொன்றாகச் சென்று பிரச்சனை செய்து கதிரின் மேல் அவதூறு பரப்பினாள். கதிருக்கு அவனது உடன்பிறப்பு கவின் மட்டும் அழுத்தம் கொடுத்தான் அவர்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்று.
“கதிர் நம்ம குடும்ப பேரு, கௌரவம் எல்லாம் காப்பாத்தற பொறுப்பு உன் கைலதான். அவங்க கேக்கறத கொடுக்க இந்த வீட்டைப் பிரிக்கலாம். அவங்க மிரட்டறாங்க கொடுக்கலைனா கோர்ட்டுக்குப் போறோம்னு.”
கதிருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. அவர்கள் கோர்ட்டிற்குப் போகுமளவு தான் என்ன செய்தோம் என்று யோசித்தான். வயதான பெற்றோரை அவர்கள் காலம் வரை காப்பாற்ற நினைப்பதும், அவர்களின் இந்த வீட்டை அவர்கள் இருப்பதற்காகக் காக்க நினைப்பதும் தவறா? பணத்துக்காக மக்கள் இந்த அளவிற்கு மாறுவார்களா என்ன? அதுவும் தான் மிகவும் மதித்து ஆதரவளித்த தன் மனைவியும் சேர்ந்து கொண்டு. இனி வேறு வழியில்லை. கோர்ட் வழியேதான் போக வேண்டும். இனி வரப் போகும் நாட்கள் கண்டிப்பாகக் கடினமான நாட்கள்தான். எதிர்கொள்வதும் மிகவும் கஷ்டம்தான். ஆனால் அப்படித்தான் நடக்கும் என்றால் அதைத் தவிர்க்க முடியுமா என்ன? கதிர் அதற்குத் தன் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டான்.
கயலும் அவளது உறவினர்களும் உறவினர்களிடம் அவதூறு பரப்புவதைத் தொடந்து கொண்டிருந்தார்கள். அவள் பெண்கள் காவல் நிலையத்திற்குச் சென்று கதிர் அவளைக் கொடுமைப் படுத்தியதாகப் பொய்யான புகாரும் பதிந்தாள். போலீஸ் விசாரணை நடந்தது. கதிரின் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பது உறுதியானதும் கயல் கொடுத்த புகாரில் உண்மை இல்லை என்று கூறி புகாரை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
கயலோ கதிரின் அண்ணனிடம் சென்று, “உங்க தம்பி எனக்குப் பணம் கொடுக்கலைனா நான் கோர்ட்டுக்குப் போவேன்” என்று சொல்ல கதிரின் உடன்புறப்புகள் எல்லோரும் மிகவும் பயந்தனர். கயலும் அவளது உடன்பிறப்புகளும் இனி என்ன செய்வார்களோ என்று.
“நான் வீட்டுக்கு வந்து என் சாமான் எல்லாம் எடுத்துட்டுப் போறேன்” கதிரை அழைத்துச் சொன்னாள் கயல்.
“கயல் யாரோ உன்னைத் தூண்டிவிட்டு நீ ரொம்ப அவசரப்படற நம்ம உறவை முறிக்கறதுல. உனக்கு என்ன தேவைன்றத நாம ரெண்டு பேரும் பேசி சந்தோஷமா வாழ முடிவு செய்வோம்.”
“சோ கவின் அண்ணா சொன்னது போல வீட்டைப் பிரிச்சு எனக்கான பங்கைக் கொடுக்க நீ ரெடியா?”
“ஸாரி! கயல் என்னால அதைச் செய்ய முடியாது. உனக்கு வேண்டியதுக்கு வேற வழிகளை நாம ஆலோசிக்கலாமே”
“இதுதான் உன் பதில்னா, எனக்கு அதை எப்படி வாங்கணும்னு தெரியும்” என்று சொல்லி தன் சாமான்களை தன் சகோதரர்களுடன் வந்து எடுத்துச் சென்றாள்.
பாரம்பரிய வீடு சில கோடிகளுக்குப் போகும். இந்த வீட்டைப் பிரிக்க வேண்டும் என்று கதிரின் அண்ணி ஜெயா இதற்கு முன்பே சொல்லிக் கொண்டுதான் இருந்தாள்.
கதிர் இதிலிருந்து வெளிவர முயற்சி செய்த போது கயலும் அவள் சகோதரர்களும் மேலும் மேலும் ஏதேனும் ஒரு பிரச்சனை கொடுத்தார்கள். கதிர் இல்லாத போது அவன் அலுவலகத்திற்குச் சென்று அங்கும் கத்தி கூப்பாடு போட அலுவலகத்தில் வேலை செய்தவர்கள் காவல்துறையைக் கூப்பிட்டு புகார் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
கதிரினால் மறக்க முடியாத நாள் அது. அந்த நாளில்தான் கதிருக்கு கோர்ட் வழியாக கயல் நோட்டீஸ் அனுப்பியிருந்தாள். டொமஸ்டிக் வயலன்ஸ் அதாவது அவளுக்குக் குழந்தை இல்லாததால் மாமியார் கடும் வார்த்தைகள் கூறிக் கொடுமைப்படுத்தியதாகவும், கதிர் கொடுமைப்படுத்தியதாகவும், 20வருடங்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் புகார் கூறி அதற்கு மிகப் பெரியதொரு தொகை தரவேண்டும் என்றும், டிவோர்ஸ் வேண்டும் என்றும் கேட்டிருந்தாள். கதிருக்கு அவன் மாமா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
“இப்பல்லாம் படிச்சு வேலைக்குப் போற பெண்கள் எல்லாம் ரொம்ப பேராசைப்பட்டு, சட்டம் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு தப்பா யோசிச்சு லீகல் டெரரிசம்ல இறங்கி பணம் கறக்க முயற்சி பண்ணுறாங்க.”
கயலும் அவள் குடும்பத்தாரும் லீகல் டெரரிஸத்தில் இறங்கி தொகையை எப்படியேனும் பெற வேண்டும் என்று முயன்றார்கள். கதிர் அவளுக்குப் பணமே கொடுத்தாலும் கூட, இனி தன் வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு மாறப் போவதில்லை, கயல் இவனின் சட்ட ரீதியனா மனைவி என்ற ஒன்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பணம் பெற முயற்சி செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட கதிர் தன்னிடம் தவறு இல்லை என்பதை நிரூபிக்க அதே சட்டத்தின் உதவியால் அவர்கள் தொடுத்திருந்த வழக்கை எதிர்கொள்ளத் தயாரானான்.
கதிரின் வக்கீலும் அவர்களுடன் சமாதானமாகப் பேசி வழக்கை செட்டில் செய்யலாம் என்று எவ்வளவோ முயற்சி செய்தும் கயலும் அவள் குடும்பத்தாரும் உடன்படாதாதல் வழக்கு இழிபறியானது.
அடுத்த 4 வருடங்கள், கயலின் தேவையற்ற, உண்மையில்லாத புகார்கள் அடங்கிய வழக்கினால் குடும்ப நீதிமன்றம், மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் என்று அலைந்ததன் நடுவில் தன் பிஸினஸையும் கவனிக்க வேண்டியிருந்ததால், என்னதான் தைரியமாக எதிர்கொண்டாலும், மன உளைச்சல்களுக்குள்ளானான் கதிர். கதிரின் வக்கீலும் ஆஃப் த கோர்ட் மீண்டும் கயலின் குடும்பத்தாருடன் பேச எவ்வளவோ முயன்றும் அவர்கள் பணம் மற்றும் விவாகரத்து மட்டுமே பேசினார்கள்.
இறுதியில் இரு நீதிமன்றங்களும் கதிருக்குச் சாதகமான முடிவை வழங்கியது. டொமஸ்டிக் வயலன்ஸ் புகாரில் எந்த உண்மையும் இல்லை என்றும், ஒரு படித்த, பெரிய பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படியான ஒரு பொய்ப் புகாரை அளித்திருப்பது மிகவும் வேதனையான, கண்டிக்கத்தக்க விஷயம் என்றும், கயலுக்கு, கதிர் எந்தவித காம்பன்சேஷனும் கொடுக்கத் தேவையில்லை என்றும் சொல்லி விவாகரத்துத் தீர்ப்பையும் அளித்தது.
கதிர் இதிலிருந்து விடுபட்டான். ஆனால் இவனது பிரச்சனையால் அண்ணன் கவினின் குடும்பமே இவனையும், மற்ற சகோதரர்களையும் விட்டு விலகியதும், குடும்பம் பழைய மகிழ்ச்சியை இழந்ததும் வேதனையான விஷயமாகவே இருந்தது அவனுக்கு.
இதைக் கேட்ட செல்வனுக்கும் ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருந்தது.
“ம்ம்ம்ம்ம்….எனக்கு உன் மன நிலை புரியுது கதிர். கம் ஆன். இதுலருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்துதானே ஆகணும்…”
“உண்மைதான். நான் இப்ப ஓகேதான். இந்த கேஸ்ல நான் எதிர்பார்த்த முடிவு இதுதானா நு நீ கேட்டியானா இல்லைனுதான் நான் சொல்லுவேன்.கயலோட நடவடிக்கையினால எல்லாமே மாறிப் போச்சு எங்க குடும்பத்துல. ஆனா இனி அவ குடும்பத்துனால எனக்கு எந்தவித டார்ச்சரும் இருக்காது.எனக்கு என்ன தோனுதுனா, கணவன் மனைவிக்குள்ள ஏதாவது பிரச்சினைனா அவங்க ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்கணும் இல்ல பிரியறதுதான் வழினா இப்படி எல்லாம் செஞ்சு குடும்பத்தைப் பிரிக்காம சுமூகமா பேசிப் பிரியலாம். அப்புறம் கூட நண்பர்களா வாழலாம். ஒருத்தருக்கொருத்தர் மனச புண்படுத்திக்காம இருக்கலாமேனு தோணுது. என் மனைவி கூட இப்படிப் பண்ணாம என் கூடப் பேசி செட்டில் செய்திருக்கலாம். இப்ப கூட நல்ல நண்பர்களா இருந்திருக்கலாம் இப்படி உறவே இல்லாம போனதுக்கு. இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தமில்லாம போயிடுச்சு பார்த்தியா….”
“ம்ம்ம் புரியுது கதிர் உன் மன நிலை” என்று சொல்லிய செல்வன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.
“கதிர் கம் ஆன். ஐ கேன் அண்டர்ஸ்டான்ட். நீ இதுலருந்து வெளில வந்து உன் பிஸினஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணனும். ரிலாக்ஸ்... வெல், இந்த வீக் என்ட் நாம ஃப்ரென்ட்ஸ் எல்லாரும் அவுட்டிங்க் போறோமே! ஒரு கெட்டுகெதர்…..லெட்ஸ் எஞ்சாய்! லெட் இட் பி எ குட் சேஞ்ச் ஃபார் யு. வா! இப்ப பக்கத்துல இருக்கற ரெஸ்டாரன்ட் போய் ஒரு டீ குடிப்போம்... வா….”
மகிழ்வித்துக் கொண்டே இருக்கும் கடல் அலைகள் கதிரின் கால்களையும் தொட்டுச் சென்றது. மனதையும் அது வருடியது போல் இருந்தது. காலம் பார்த்துக் கொள்ளும். கதிர் செல்வனுடன் நடக்கத் தொடங்கினான்.
கயல் மாதிரியும் சிலர்.
பதிலளிநீக்குஅருமையான கதை ஓட்டம்
வாழ்த்துகள்
ஆஹா ரிஷபன் அண்ணாவிடமிருந்தே பாராட்டா!!
நீக்குஉங்கள் கருத்தைச் சொல்லிவிடுகிறேன். மிக்க நன்றி அண்ணா
கீதா
மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் கௌ அண்ணா கதையை வெளியிட்டமைக்கு.
பதிலளிநீக்குகீதா
கயல் மாதிரி பெண்கள் இருக்கமாட்டார்கள் என முதலில் நான் நினைத்தாலும் (20 வருட வாழ்க்கையைப் பிரிவதில் என்ன லாபம் இருந்துவிட முடியும்?), நான் இத்தகைய சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். மனைவியின் சகோதரன் வீட்டிற்குள் வந்து நுழைந்து, வெளி இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் கணவனை, அவனுடைய வீடு/மனைவி இடையேயான உறவை கசந்த வார்த்தைகளால் பிரித்து, சகோதரிக்கு, அவள் எதிர்காலம் பற்றிப் பயமுறுத்தி..... வளர்ந்த, கல்லூரி செல்லும் பிள்ளைகள் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கவிட்டு (அம்மா அப்பாவிற்கிடையேயான பிரச்சனைகளால்).... இதுபோல பல நிகழ்வுகள்.
பதிலளிநீக்குஎது இவர்களை இப்படி மனமாற்றம் கொள்ளச் செய்கிறது? ஏதாவது அடி மனதில் வெறுப்பு, விரக்தி இல்லாமல், வெறும்ன தன் சகோதரன் சொன்னான் என்பதற்காக இப்படி பிரிய, அதுவும் பணத்தைப் பிரித்துக்கொண்டு பிரிய உடன்படுவார்களா?
மனைவி என்பவள் அடிமை அல்ல. அவளும் சரிசமமாக நடத்தப்படாவிட்டால், இத்தகைய மனநிலையைத் தவிர்க்கமுடியாது என்பதை உணர வைத்த கதை.
கதாசிரியருக்குப் பாராட்டு.
என்னுடைய சொந்தக் கருத்து.... ஒரு மனைவி, தன்னுடைய மாமனார்/மாமியாரைப் பார்த்துக்கொள்கிறாள் என்றால், அது அவளது கடமைக்கு மீறிய உதவும் செயல் என்றுதான் எடுத்துக்கொள்கிறேன். காரணம், பெரும்பாலான மாமியார்கள், திருமணமானபிறகு வரும் மருமகளை கொஞ்சம் அப்படி இப்படி நடத்துகிறார்கள். அதையும் மீறி அந்தப் பெண், தனக்குச் சம்பந்தமில்லாத, கணவனின் பெற்றோருக்கு உதவி செய்தால், கணவன், சாதாரணமானவர்கள் தங்கள் மனைவியைத் தாங்குவதைவிட இன்னும் ஒருபடி மேலே போய், அதிகமாகவே தாங்கவேண்டும். அதிலும், குழந்தை இல்லை என்றால், அதற்கான தீர்வை நோக்கியும் இருவரும் செல்லவேண்டும் (தத்தெடுத்துக்கொள்வதோ இல்லை வேறு தீர்வோ). வெறும்ன, தன் பெற்றோரை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தால், அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையில் என்ன பிடிப்பு இருக்கும்? காலமெல்லாம் சம்பாதிக்கவும், வீட்டில் நர்ஸ் வேலை பார்க்கவும்தானா அவள் வாழ்க்கை?
பதிலளிநீக்குஇந்தக் கவனத்தை கதிர் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்காததுதான் அடிப்படைப் பிரச்சனை என்று என் மனதில் தோன்றுகிறது.
கதைப்படி கதிரின் சகோதரர்கள்(ன்), அவன் பெற்றோருக்கு உதவினமாதிரி தெரியவில்லை. அவளுடைய வாழ்க்கைக்கான ஆதாரத்தை கயல் சேகரித்துக்கொள்ள முயல்கிறாள். கதிர் இதனை இன்னும் நன்றாக கையாண்டு, அவன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கலாம்.
நல்லா அன்போட ஆதரவா இருந்தவங்க, சட்னு சிலரது 'துர்போதனையால' இன்னொரு எக்ஸ்டிரீமுக்கு மாறிடுவாங்க. கைகேயி ஒரு உதாரணம். ராமனிடம் அன்பாக இருந்தவள், அவன் காட்டுக்குப் போனால்தான் ஆயிற்று என்று சொல்லும்படி மாறிவிடுகிறாள். அதுபோல அண்ணனின் துர்புத்தியால் கயல் மாறி, அவள் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டாளோ?
பதிலளிநீக்குநெல்லை உங்களின் இரு கருத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குகீதா
நல்ல கதை. கயல் போன்ற சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
கதை நன்றாக இருக்கிறது. ஆனால், கதிருக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று மனம் சங்கடப்படுகிறது.
பதிலளிநீக்குகௌ அண்ணா மிக்க நன்றி கருத்திற்கு
நீக்குகீதா
கானலில் கரைந்த கயல்....
பதிலளிநீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குபாராட்டுகள்
கதை நன்றாகத்தான் இருக்கிறது. பிரிவுக்கான காரணங்களை சொல்லாமல் திடீரென்று பிரிய முடிவெடுக்கிறாள் என்பது பலவித யூகங்களுக்கு வித்திடுகிறது. குறைந்தபட்சம் கோடி காண்பித்திருக்கலாம்.
பதிலளிநீக்குகதையை படிக்கும் போது ஏன் இப்படி நடக்கிறது? நினைக்க தோன்றுகிறது.
பதிலளிநீக்குதனக்கு என்று தனி உலகம், தனித்தனமை வேண்டும், தன்னை மதிக்க வேண்டும், தனக்கும் உணர்ச்சிகள், ஆசைகள் உண்டு கவனிக்க பட வேண்டும் என்ற உணர்வுகள் தலைதூக்கும் போது இது போன்ற பிரிவுகள் ஏற்படுகிறதோ?
அந்தக் காலம் போல் நிறைய நகை, சீர்கள் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்தாலும் கண்வன் குடும்பத்தினருக்கு அடங்கி அவன் விருப்பம்தான் தன் விருப்பம் என்று வாழ்ந்த வாழ்க்கை அடிமை வாழ்க்கை என்று உணரபட்டதால் ஏற்பட்ட விளைவுகளோ?
குழந்தை இல்லாத வாழ்க்கையில் வெறுமையோ? அல்லது கணவன் சம்பாதிக்கும் அனைத்தையும் தன் குடும்பத்திற்கே செலவழித்துக் கொண்டு இருக்கிறார் தனக்கு பிற்காலத்தில் என்ன கிடைக்கும் என்று எதிர்கால பயமா? இதே கேள்வியை உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்கள் கேட்ட கேள்விகளா? எது இந்த கதையின் கதாநாயகி பிரிவு என்று தெரியவில்லை.
ஸக ஓரகத்திகள் போல இல்லை. வேலைக்கும் போகிறவள். புருஷன் கவனம் குடும்பத்தின் மீது அதிகம். இப்போது அன்பு காட்டும் குடும்ப வாரிசுகளும் பெரிதாகப்போனால், அவர்களின் தாய்தந்தையர்கள் மீதுதான் பாசம்,பரிவு எல்லாம் காட்டும். நமக்கென்று ஒன்றும் இல்லாமல் . இப்படி அசடாக
பதிலளிநீக்குஇருக்காதே என்று சொல்பவர்களா பஞ்சம்? இம்மாதிரி அநேக உபதேசங்கள். வயதான தாய்தந்தையர்களும் பிரச்னைதான். அவரவர்களுக்கு வரும் போது நியாயம் மாறி விடும். நாளாவட்டத்தில் அவள் மனப்போக்கு மாறியதை அரியாமல் இருந்த அப்பாவி குடும்பப் பிரியன். எல்லாம் சேர்ந்த உருவான கூட்டுக்குடும்பம். சிலரின் வாழ்வு இப்படியாகிவிடுகிறது.கயலும் என்ன ஸுகத்தைக் கண்டு விடப்போகிராள்? கேட்பார் பேச்சு கேட்டு இந்த நிலை. ஏதானும் உங்களுக்கும் கடவுள் வழிகாட்ட வேண்டும். அன்புடன்
அருமையான கதை ...தங்கள் சிந்தனை வளம் மேலும் வளர்ந்து வரலாறு படைக்க வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇன்னும் சில மாறுதல்களுடன் இம்மாதிரி நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரிய குடும்பங்கள் இல்லை. சிரிய குடும்பங்களானாலும் வயதானவர்களுக்குச் செய்வதில் ஏக வித்தியாஸங்களும், ஏன் நான் செய்யவேண்டும் என்ற மனப்பான்மையும் அதிகரித்து வருகிறது. அழகான நடை. கணவரையே வெறுப்பது மனதை நெருடுகிறது. அன்புடன்
நீக்குஇந்தக் கதையை ஞாயிறன்றே படிக்க ஆரம்பித்துப் பாதியில் விட்டுப் பின்னர் தொடர்ந்து மறுபடி பாதியில் விட்டு இப்படிப் போய் இன்று தான் திடீரென நினைவு வந்து படித்தேன். கதையில் யூகம் செய்யப் பல விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாய்க் கயல் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதற்கு ஆதாரபூர்வமான காரணம் ஒன்று வேண்டும். வெறும் பணம் மட்டுமே முக்கியமாக இல்லைனு நினைக்கிறேன். அவளைப் பாதிக்கும்படியாக அவள் மனோநிலையே முற்றிலும் மாறும்படியாக ஏதோ ஒன்று நடக்காமல் இப்படி மாற மாட்டாள். வசதியான குடும்பம் தான்! மாமனார்,மாமியாரை நர்ஸ் வைச்சுப் பார்த்துக்கலாம். முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டாம். 20 வருடங்கள் ஒன்றாக இருந்தவள் திடீரென மாறுவது என்றால் அடிப்படைக்காரணம் ஒன்று கட்டாயம் இருக்கும்.
பதிலளிநீக்கு"உனக்குன்னு அந்தக் குடும்பத்துல என்ன பிடிமானம் இருக்கு? குழந்தை இல்லை. வெறும்ன சம்பாதிச்சுக்கிட்டிருக்க. கணவன் பெற்றோரை நீயும் பாத்துக்கற... நாளைக்கு, 'சொத்துப் பிரிவினை' என்று சொல்லி ஒண்ணும் செய்யாத கணவன் சகோதரன், அவன் ஃபேமிலிலாம் சொத்தில் பங்கு பெற்று அனுபவிப்பாங்க. அப்போ வீடும் இருக்காது இல்லை சேமிப்பும் இருக்காது. இந்த வாழ்க்கைல உனக்கு என்ன கிடைக்கும்? காலம் பூராவும் அடிமையா யாருக்கோ உடலால உழைக்கற...அர்த்தம் இல்லாம பணமும் சம்பாதிக்கற"
நீக்குஎன்று சகோதரன் சொல்வதுபோல் ஒரு பகுதி வந்திருக்கலாம். இல்லைனா, கணவன் சகோதரன்/மனைவி, 'உங்களுக்கென்ன குழந்தையா குட்டியா.. எங்களுக்கு இறைவன் 4 கொடுத்திருக்கிறான். சம்பாத்தியமும் சுமாரா இருக்கு. அதுனால இந்த வீடோ இல்லை சொத்தோ எங்களுக்கு நிறைய கொடுத்தால் நல்லது" என்பதுபோன்ற பேச்சு எழுந்திருக்கலாம். இல்லை கணவோ இல்லை அவங்களோ, 'குழந்தை இல்லாம இப்படி இருக்கயே.. பேசாம மனைவியை டாக்டர்ட காட்டு இல்லைனா சொந்தத்துல ஒரு மறுமணம் செஞ்சுக்கோ' என்ற பேச்சாவது வந்திருக்கணும்.