வெள்ளி, 6 டிசம்பர், 2019

என்கவுண்டர்டூட்டி முடிந்து வீடு திரும்பிய வீராச்சாமி தன் மனைவியின் கண் ஜாடை பார்த்து, சற்றுக் குழம்பி, 'என்ன?' என்ற பாவனையில் புருவத்தை உயர்த்தினார். 

மனைவி மல்லிகா தன் உதட்டருகே ஒரு விரலை வைத்து, கைகளை 'குழந்தை' என்பதற்கு ஏற்ப அபிநயம் பிடித்து, அறைக்குள்ளே சைகை செய்து, ' அழுகிறாள்' என்பது போன்று நடித்துக் காட்டினாள். 

வீராச்சாமி, 'சரிதான் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஏதோ சிறு பிரச்னை போலிருக்கு. நான் தலையிட்டு, மத்யஸ்தம் பண்ணவேண்டும் போலிருக்கு' என்று நினைத்தவாறு அறைக்குள் சென்றார். 

" ரம்யா - என்னம்மா பிரச்னை? ஏன் அழுகிறாய்? அம்மா என்ன சொன்னா? "

அதுவரை மௌனமாகக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த ரம்யா, அப்பாவைப் பார்த்தவுடன், விசித்து விசித்து அழத் துவங்கிவிட்டாள். 

" என்னம்மா? என்ன ஆச்சு? என்கிட்டே சொல்லும்மா ? உன்னை அழவிட்டது யாராக இருந்தாலும்  சுட்டுப்போட்டுடறேன்!" என்று வீராச்சாமி விளையாட்டாக சொன்னார். ரம்யா பதின்ம வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஏழாம் வகுப்புப் படிக்கும் பெண்.

அழுதுகொண்டே - தனக்கு எதிரே உள்ள தினசரியில் வெளியாகியுள்ள படத்தையும் செய்தியையும் சுட்டிக் காட்டினாள். 

காலையில் அவரும் படித்து அதிர்ந்துபோன செய்திதான் அது. ஒரு பெண்ணை கற்பழித்துக் கொலை செய்து நெருப்பில் எரித்த கொடூரமான சம்பவம். 

" நானும் காலையில் படித்த செய்திதான் ரம்யா. என்ன செய்வது? இந்த மாதிரி கொடூரங்கள் நிகழ்த்தும் கொடியவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அது போகட்டும் - யாரோ இப்படி இறந்துபோனதற்கு நீ ஏன் அம்மா இவ்வளவு வருத்தப்படுகிறாய், அழுகிறாய்? "

" யாரோ இல்லை அப்பா அது. என் தோழி வசுந்தராவின் அம்மா. இன்றைக்கு வசுந்தரா வகுப்புக்கு வரவில்லை. கிளாசில் என்னுடன் படிக்கும் தோழிகள், 'பாவம்டி - வசுந்தராவின் அம்மாவை யாரோ கொன்னுட்டாங்களாம்' என்று சொன்னார்கள். ஸ்கூல் முடிந்ததும் நாங்கள் எல்லோரும் வசுந்தராவின் வீட்டுக்குப் போய் அவளைப் பார்த்தோம். வசுந்தரா பொங்கி பொங்கி அழுதுகொண்டே இருந்தாள். அதைப் பார்த்ததும் எங்கள் எல்லோருக்கும் அழுகை வந்துவிட்டது. அப்போதிலிருந்து என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை அப்பா! "

" இப்போ சொல்லுங்க அப்பா - வசுந்தராவை அழவைத்தவர்களை உங்களால் சுட்டுப்போட முடியுமா? "

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. 

========================

இந்த கேஸ் விசாரணை அவருடைய போலீஸ் ஸ்டேஷனிலேயே பதிவு செய்யப்பட்டது மறுநாள் அவருக்குத் தெரியவந்தது. தன்னுடைய மேலதிகாரியின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டதையும் தெரிந்துகொண்டார். அந்தக்குழுவில் அவர் இல்லை. 

ஒரு வார விசாரணை ஆமை வேகத்தில் நடந்தது. அரசாங்கத்திடமிருந்து அன்றாடம் கேஸ் பற்றி விவரங்கள் கேட்டு நச்சரிக்கத் தொடங்கினர். 

சட்டசபை, நாடாளுமன்றம் வரை பிரச்னை போய்விட்டது. 

மேலதிகாரி வெள்ளிக்கிழமை அன்று காலை ஃபோன் செய்து வீராச்சாமியைக் கூப்பிட்டார். 

அவசரம் அவசரமாக ஸ்டேஷனுக்கு விரைந்தார் வீராச்சாமி. 

மேலதிகாரி சொன்னார். " குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு, விசாரணைக்குழுவில் எல்லோரும், விசாரணையின் இறுதிப்பகுதியாக crime spot சென்று குற்றத்தை re-enact செய்யச் சொல்லப்போகிறோம். இதன் மூலம் இந்தக் கேஸில் விடுபடாத பல உண்மைகள் தெரிந்துகொள்ள முடியும். நாங்கள் ஸ்பாட்டில் இருக்கும்போது, நீங்களும், உங்கள் சக ஆபீசர் ராம்குமாரும், வேனிலிருந்து குற்றவாளிகளை கவனமாக கண்காணித்துக்கொண்டிருங்கள். குற்றவாளிகள் தப்பிச்செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்கள் இருவரின் பொறுப்பு. அவர்கள் தப்பிச்சென்றுவிட்டால், போலீஸ் துறைக்கும் மக்களிடம் கெட்ட பெயர், அரசாங்கமும் நம்மை சும்மா விடாது. புரிந்ததா?"

" புரிந்தது சார் " என்றார் வீராச்சாமி. 

================================================
23 கருத்துகள்:

 1. சபாஷ். சரியான முடிவு.வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 2. செய்தி கிடைத்ததும் கதை வந்து விட்டது. கட்டுக் கோப்பான கதை அமைப்பு.

  பதிலளிநீக்கு
 3. இப்படித்தான் அமைய வேண்டும்...

  குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது....

  பதிலளிநீக்கு
 4. உடனே கதை எழுதும் ஆற்றலுக்கு பாராட்டுக்கள்.

  குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இது போன்ற தண்டனை தர வேண்டும். பெரிய இடம் என்று தப்பிக்க விடக்கூடாது

  பதிலளிநீக்கு
 5. புரியலே. தொடர்கதையா?.. தொடரும் அல்லது வளரும் போடக் காணோமே?

  இதற்கு முன் பகுதி எங்கே?.. அல்லது இதான் ஆரம்பமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரம்பமும் இதே, முடிவும் இதே. செய்திச் சேனல் பார்த்தவுடன் உதித்த கரு. சிறுகதை(க்கான லட்சணம் எதுவும் கிடையாது.)

   நீக்கு
 6. " புரிந்தது சார் " என்றார் வீராச்சாமி.

  "ராமு... பாத்தியா இவன் நியாயம் பேசறத... இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை இந்த மாதிரி குற்றவாளிகளை எப்படித் தப்பவிட்டான்... இப்போ சம்பந்தமில்லாத குற்றவாளிகள்ன உடனே நியாயம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு"

  "ஆமாம் வீரா. போன செப்டம்பர்ல மாட்டினவன், அந்த பழைய எம்.எல்.ஏ. மருமகன். நைசா கேசிலிருந்து கழட்டிவிட்டுட்டான். அவன் அந்த எம்.எல்.ஏவைக் பார்க்கப் போனபோது நானும் போயிருந்தேன். நல்லா காசு தேத்திட்டான்"

  "ஏன்..அந்த வசந்தி கேஸ்ல... கற்பழிச்சு கொன்னதுக்கு சாட்சி வேற இருந்துச்சு. கவுன்சிலர் 1 சி கொடுத்துட்டான்னு நைஸா வேற ஆளைக் குற்றவாளியாக்கி என்கவுண்டர் செஞ்சான்"

  "இவனை மாதிரி ஆளு கீழ நாம வேலை பார்க்கவேண்டியிருக்கே... அத்தனை ஆத்திரமா வருது"

  "பேசாம அவங்க மேல சுடும்போது இந்த மாதிரி ஆள் மேலயும் தவறுதலா சுட்டுடலாமா?"

  "ஏய்.. எனக்கு மட்டும் அந்த மாதிரி தோணாதுன்னு நினைக்கறியா... ஆனா அப்புறம் நம்மை நம்பியிருக்கற குடும்பம் நாசமாயிருமேன்னு நினைச்சு இந்த மாதிரி அக்கிரமக்காரனைப் பொறுத்துக்க வேண்டியிருக்கு"

  "சரி..சரி.. ரெடியாகு... அவர் சிக்னல் காமிச்சுட்டார்"

  "டுமீல்... டுமீல்... டப்...டுமீல்..டுமீல்"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா இது நல்ல திருப்பமா இருக்கே! வெரி குட்!

   நீக்கு
  2. பேசாமல் பிளான் A யை செயல்படுத்தி இருக்கலாம்!

   நீக்கு
  3. //டுமீல்... டுமீல்... டப்...டுமீல்..டுமீல்// அஞ்சு சவுண்ட் - இது ப்ளான் ஏ தானே!

   நீக்கு
 7. என்னைக் கேட்டால் அந்த இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதிற்குப் பதிலாக அவர்கள் செய்த பாலியல் பலாத்காரத்திற்குக் காரணமான உறுப்பை மட்டும் வெட்டி விட்டு வாழ்நாள் முழுதும் அப்படியே வாழ விட்டிருக்க வேண்டும். பல ஆண்களுக்கும் இப்படிச் செய்தால் தான் இத்தகைய குற்றங்கள் குறையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் மனித உரிமை பேசுகின்ற சிலர் எல்லாவற்றிலும் தலையிட்டு தண்டனைகளை நீர்த்துப்போக செய்துவிடுவார்கள். ஓஷோ சொன்னது: 'ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ அவனுடைய இரண்டு கன்னங்களையும் அடித்துப் புண்ணாக்கி விடு. அப்போதான் அவனுக்குப் புரியும்.'

   நீக்கு
  2. You are wrong. They will live to spoil life of others. They will become organized criminals

   நீக்கு
 8. ஒரு பக்க கதை அருமையாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 9. நல்ல கதை. அதுவும் உடனே இப்படி ஒரு கதை எழுதியது சிறப்பு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு