சனி, 7 ஜனவரி, 2012

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா ...

                              
இசை அனுபவம் - எழுதியவர் குரோம்பேட்டைக் குறும்பன். 

ஆசிரியர்களே! 
'சவடால் கதைப் போட்டி'யில் எனக்கு டெப்பாசிட் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. 

இதோ ஒரு புதுவகை இசை விமரிசனம். விமரிசனம் கூட அல்ல - இது ஒரு அனுபவம். 

படியுங்க; பிருந்தாவன சாரங்கா பாட்டு - நெட்டிலே எங்காவது கிடைத்தால் எடுத்துப் போடுங்க - அல்லது சுட்டி கொடுங்க. 

முன்னறிவிப்பு: இது ஒரு இனிய கற்பனை. 

********************************************************************
அஸ்தினாபுரம். 
பாண்டவர்களைக் காண வந்தான் கண்ணன். பாண்டவர்கள் வாய் நிறைய வரவேற்றனர். 

பிறகு அர்ஜுனன் கேட்டான், "எங்கே கண்ணா இந்தப் பக்கம்?"

கண்ணன்: "நான் எப்பவுமே உங்க பக்கம்தானே!"

தருமர்: "அது சரி! நாங்களும் எப்பவும் உன் பக்கமே!"

கண்ணன்: " எல்லோருக்கும் அவரவர்கள் சிறு வயதில் வாழ்ந்த, விளையாடிய இடத்தைக் காணவேண்டும் என்று பெரிய வயதில் ஆசை இருக்கும். எனக்கும் இப்பொழுது நான் சிறு வயது சேட்டைகள் செய்த பிருந்தாவனத்தைக் காணவேண்டும் என்று ஆசையாக உள்ளது."

பாண்டவர்கள்: "ஆமாம் - உன் பிருந்தாவனக் கதைகளைக் கேட்கும்பொழுதெல்லாம் எங்களுக்கும் அந்த இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததுண்டு. தேரில்தானே வந்திருக்கின்றாய் கண்ணா? நாம் அனைவரும் அங்கே செல்வோம்."

கண்ணனும் பாண்டவரும் தேரேறி மகிழ்ச்சியாக பிருந்தாவனம் செல்கின்றனர். 
***********************************************************************

பிருந்தாவனம் சென்றடைந்தவுடன், கண்ணன், "ஆஹா ஆஹா - சிறு வயது நினைவுகள் இங்கு ஒவ்வொரு இடத்தைப் பார்க்கையிலும் நினைவுக்கு வந்து மயங்க வைக்கின்றதே!"

அர்ஜுனன்: "கண்ணா உன் சிறு வயது விளையாட்டுகளை மீண்டும் ஒரு முறை எங்களுக்கு கூறு. எந்த இடத்தில் என்னென்ன லீலைகள் புரிந்தாய் என்பதை எங்களுக்குச் சொல்லு."

கண்ணன், பாண்டவர்களுக்கு பிருந்தாவனத்தைச் சுற்றி காட்டியபடி, பல சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றான். 

பிறகு, பாண்டவர்களிடம், "நான் இங்கே ஒளிந்து கொள்கின்றேன்; என்னை நீங்கள் ஐவரும் கண்டு பிடிக்க முடியுமா?" என்று கேட்டான். 
பாண்டவர்களும் சரி என்று இசைந்தனர். 

பாண்டவர்கள் ஐவரும், அங்கு இருந்த ஒரு மேடை மீது அமர்ந்து கண்களை மூடிய வண்ணம், கண்ணன் ஒளிந்துகொள்ள சற்று அவகாசம் அளித்தனர். கண்ணன் சென்று ஒளிந்துகொண்டான். 

*************************************************************************
இதோ மேடை மீது பஞ்ச பாண்டவர்கள்: 


தர்மராக கத்ரி கோபால்நாத்(சாக்ஸஃபோன்) பீமராக பெங்களூர் ராஜசேகர் (முகர்சிங்) நகுலனாக பட்ரி சதீஷ்குமார் (மிருதங்கம்) சகாதேவனாக ராஜேந்திர நகோத் (தபலா) எல்லாவற்றுக்கும் மேலே, வில் வீரனான அர்ஜுனனுக்கு நிகர் - வில்லேந்தும் வீராங்கனை கன்னியாகுமரி (வயலின்). 

தேடல் ஆரம்பமாயிற்று. 
   
தர்மர் தேட ஆரம்பிக்கின்றார். பின்னாலேயே அர்ஜுனன் வில்லுடன் வழி தொடர, பீம, நகுல சகாதேவர்கள் பின் தொடர, கண்ணனைத் தேடுகின்றார்கள். 

தர்மர்: "அதோ அந்தக் காக்கைச் சிறகினில் இருப்பானோ?"

அர்ஜுனன்: "ஆம் அண்ணா. எனக்கும் அதே சந்தேகம்தான்!"

மற்றவர்கள்: "ஊஹூம் - இங்கே இல்லை கண்ணன்."

தர்மர்: " அப்போ அந்த மூங்கில் காட்டில்? புல்லாங்குழல் சத்தம் கேட்கிறதே - அங்கு இருப்பானோ?"

அர்ஜுனன்: "ஆமாம். அதுவும் சாத்தியமே!"

மற்றவர்கள்: "நாம் வந்தவுடன் புல்லாங்குழல் சத்தம் நின்றுவிட்டதே!"

தர்மர்: "அந்தப் பூ?"

இல்லை.

தர்மர்: "அந்த மயிலிறகில்?"

ஊஹூம் - மயிலிறகு மௌனப் புன்னகை புரிகின்றதே!

தர்மர்: "அந்தக் கருமேகக் கூட்டம் அவன்தானோ?"

மற்றவர்கள்: "கருமேகங்கள் கான மழையாகப் பொழிகின்றனவே - இங்கேயும் கண்ணனைக் காணோமே!"

தர்மர்: "அந்த வானவில்லாக இருக்கின்றானோ?"

அர்ஜுனன்: "வானவில் வந்தது போலவே மறைந்துவிட்டதே! கண்ணன் அதில் மறைந்திருக்க முடியாது."

தர்மர்: "இந்த மலை வடிவாகி நிற்கின்றானோ - அந்த மலையப்பன்?"

மற்றவர்கள்: "இல்லை - இந்த மலை எப்பொழுதுமே இங்குதான் இருக்கின்றது. பழைய தோற்றம்தான்."

தர்மர்: "இந்த இனிய தென்றல்தான் அவனோ?"

மற்றவர்கள்: "இருக்காது. இந்தத் தென்றல் நம்மைத் தீண்டிய பிறகு நம்மோடு நிற்காமல் சென்று விட்டதே! நம் கண்ணனாக இருந்தால், நம்மை விட்டு நீங்க மாட்டானே!"

தர்மர்: "அப்போ கண்ணன் எங்கே? கண்ணா நீ எங்கே இருக்கின்றாய்?"

எல்லோரும் சேர்ந்து: : "கண்ணா - எங்கே இருக்கின்றாய் நீ?"

புன்னகை தவழும் முகத்துடன், அவர்கள் எதிரில் பிரத்யட்சமாகின்றான் கண்ணன்.

பாண்டவர்கள்: "கண்ணா எங்கே மறைந்திருந்தாய் நீ? எங்களால் உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையே!"

கண்ணன் கூறினான்: "நான் உங்களுடனேயே இருந்தேன். நீங்கள் ஐவரும் இசைத்த பிருந்தாவன சாரங்கா ராகமாக - அந்த ராகத்தின் எழில் வடிவமாக, அந்த ஸ்வரக் கோர்வைகளை சுவாசித்தவண்ணம், தாளக் கட்டுகளாக இதயம் துடிக்க, ஆரோகண அவரோகண அலைகளின் ஆர்ப்பரிப்புகளை இரசித்தவண்ணம். உங்கள் தேடல்களுக்குள்ளேயே நான் மறைந்து நின்றதால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை."

                

9 கருத்துகள்:

  1. தாளக் கட்டுகளாக இதயம் துடிக்க, ஆரோகண அவரோகண அலைகளின் ஆர்ப்பரிப்புகளை இரசித்தவண்ணம். உங்கள் தேடல்களுக்குள்ளேயே நான் மறைந்து நின்றதால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை."

    அழகான சங்கீதப்பகிர்வு..

    பதிலளிநீக்கு
  2. பிரமாதம்! நன்றி கு.கு.!

    பதிலளிநீக்கு
  3. ஹிஹிஹி, பாவம்ங்க நீங்க. எப்படி இருந்த நீங்க இப்புடி ஆயிட்டிங்க???:)))))))

    பதிலளிநீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னவோ நடக்குது! எப்படிங்க இப்படி எல்லாம் மீனாக்ஷிக்கு 60% த்துக்கும் மேலே ஓட்டு விழுது?? வாக்குப் பெட்டியிலே ஏதோ பிரசனை. மறு வாக்குப்பதிவுக்கு அறிவிப்புக் கொடுங்க! இந்த வாக்குப்பதிவை நாங்க ஒத்துக்க மாட்டோம்.

    கு.கு.
    ரேவதி,
    கீதா சந்தானம்,
    அப்பாதுரை,

    எல்லாரும் வாங்கப்பா! ஒண்ணாய்ச் சேர்ந்து குரல் கொடுப்போம்.

    :)))))))

    பதிலளிநீக்கு
  5. என்னங்க இது கீதா! எனக்கே இது அதிசயமா இருக்கு. நான் எதுவும் கான்வாஸ் கூட பண்ணாம இங்க அடிக்கற குளிருக்கு தேமேன்னு உக்காந்து இருக்கேன். எனக்கு எதிரா இப்படி குரல் குடுக்க கும்பலை சேக்கறீங்களே. இது நியாயமா? :)

    பதிலளிநீக்கு
  6. கதிரி கொஞ்சம் எதிரி எனக்கு.. :) கற்பனை அற்புதம் கு.கு.

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ப்ளாக்13 ஜனவரி, 2012 அன்று PM 7:57

    அப்பாதுரை said...
    கதிரி கொஞ்சம் எதிரி எனக்கு.. :)

    ஏன்? ஏன்? ஏன்?

    பதிலளிநீக்கு
  8. உங்கள் தேடல்களுக்குள்ளேயே நான் மறைந்து நின்றதால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை."

    >>>
    ஆம், நம் அருகிலேயே இருந்து இறைவனைன் இருப்பை புரிந்துக் கொள்ள இயலத அறிவிலிகள் நாம் சகோ

    பதிலளிநீக்கு