புதன், 25 ஜூலை, 2018

சு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்


இரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா..

- ஸ்ரீராம் -

====================================================================================================

உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை..
ரேவதி நரசிம்மன் 


திருவிடந்தை வராஹ பெருமாளைப் பூமிப்பிராட்டியை ஏந்திய கோலத்தில் அவளூக்கு உபதேசம் செய்யும் அழகை  ,நித்ய கல்யாணப் பெருமாளாகத் தரிசனம் செய்து வாங்கிப்போன அழகிய ரோஜா மாலையை அவருக்குச் சார்த்தினார் சுந்தரியின் அப்பா.

அங்கிருந்த அர்ச்சகர், சுந்தரியின் பெயருக்கு ,அர்ச்சனை செய்து அந்த மாலையை சுந்தரியிடம் கொடுத்து அணிந்துகொள்ளச் சொன்னார்.

'கையில வச்சுக்கறேனேப்பா' என்று கெஞ்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் சுந்தரி.

'இல்லைம்மா கழுத்தில போட்டுக்கோ' என்ற அம்மாவின் கண்டிப்பான வார்த்தையை மீற முடியாமல் மாலையை அணிந்து கொண்டாள்.

 இத்தனை பேர் முன்னால் மாலையோடு ஒன்பது தடவை கோவிலைச்  சுத்தணுமாம்.

'என்ன பைத்தியக் காரத்தனம்' என்று மனம் முரண்டு பிடிக்க கடுகடு முகத்துடன் கருவறைப் படியைத் தாண்டும்போது அந்தப் பக்கம் ஒரு வாலிபனும் அவன் பெற்றோர்களும் கைகளில்  மாலையுடன் உள்ளே நுழைவதைக் கண்டாள்.

'ஆஹா இன்னோரு பலியாடு போகிறது' என்று சன்னிதி வெளிச்சத்தில் அவனை எடை போட்டாள்.

'ம்ம். நல்லாத்தானே இருக்கார்...  எந்த இடத்தில தோஷமோ' என்று குறும்பு கண்களில் மின்ன அவனை நோக்கவும், அந்தப் பையனும் எதேச்சையாக இவளைப் பார்க்கவும், அந்தக் குறும்பைப் புரிந்து கொண்டவனாக, அவனும் முறுவல் செய்தான்.

அடுத்து சூரிய வெளிச்சத்தில் வந்ததும், துவஜஸ்தம்பத்தைச் சுற்றி பிரகாரத்திற்கு வந்தார்கள்.

அங்கே பார்த்தால் இவளைப் போல பத்துப் பேராவது மாலை
 அணிந்து இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டு தாயார் சன்னிதிக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

உள்ளே போக வழி இல்லாமல் ஏதோ வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

வெளியிலிருந்து சேவித்துவிட்டு,  அடுத்தாற்போல் இருந்த ஸ்தல வ்ருக்ஷத்தை நோக்கிச் சென்றனர்.

'கல்யாணம் ஆன பிறகு இங்கே கொண்டு வந்து மாலையை மரத்துல சார்த்தணும்பா.  பாரு எத்தனை வாடின மாலை தொங்குகிறது.  ரொம்ப  கருணையான பகவான். வருடத்தில் எல்லா நாளும் கல்யாணம் புரிந்து கொள்ளும் தயாபரன்.  

365 கன்னிகைகளைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களது தந்தைக்கு வாக்குக் கொடுத்திருக்கிறான்.  குணபதி..  'மரத்தை வணங்கிக் கொள்ளப்பா, சீக்கிரமே மணப்பெண்ணுடன் வர அருள் செய்' என்று வேண்டிக் கொள்'  என்னும் குரலைக் கேட்டு மீண்டும் திரும்பினாள்.

'ஓ... அதே  பையன்...  குணபதியா.  படு கர்னாடகமா இருக்கே.
இந்தக் குணபதிக் கேற்ற குணவதியே மணப் பெண்ணாக வரட்டும்'
என்று மீண்டும்  சிரிப்புத் தோன்ற, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அப்படியும் பார்த்துவிட்டான் அந்தக் குணபதி.

மிக்க சிரமத்துடன் தன்னை அடக்கிக் கொண்டான்.

இதே போல ஒன்பது தடவை சுற்றி வருவதற்குள் பெற்றோர்கள் பழகி விட்டார்கள். குலம் கோத்ரம் எல்லாம் எல்லாம் தெரிந்து கொண்டார்கள்.. 

'ஏதோ தெய்வாதீனமாகச் சந்தித்திருக்கிறோம்.   
ஆனால்...'. என்று இழுத்தார் சுந்தரியின் அப்பா  முத்துராமன்.

'எங்கள் குல வழக்கப் படி ஜாதகம் குறிப்பதில்லை,,,' என்றதும் ஆச்சர்யத்துடன் பார்த்தார் நடராஜன்.

'எங்க வீட்டில தான் அந்தப் பழக்கம்னு நினைத்தேன்.  நாங்க நெல்லைப் பக்கம்,  நீங்க .... '

'நாகர்கோயில்' என்று முடித்தார் முத்துராமன்..

'எங்க வழக்கப் படி 23 24 வயசில பையனுக்கு மணமுடிச்சுடுவோங்க.  இவனுக்கு 24ம் முடிஞ்சுடுத்து'

'எங்க வீட்டிலயும் 20 வயசுல பொண்ணு வீட்டை விட்டுப் போயீடும்.  இவளுக்கு 21 ஆகிறது' என்றார் சுந்தரியின் அப்பா.

மௌனம் நிலவியது.

சுந்தரியின் அம்மா  கோமதியும், குணபதியின் அம்மா காந்திமதியும்  தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டார்கள்.   சுந்தரியும் குணபதியும் மௌனம் காத்தார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


கோவிலில் சந்தித்ததால் இந்தச் சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் பெரியவர்கள்.

 குணபதிக்கு  சுந்தரியைப் பிடித்துவிட்டது.  சுந்தரி ஜாக்கிரதையாக இருந்தாள்.


'முதல் சந்திப்பில் எப்படி எல்லாவற்றையும் முடிவெடுக்க முடியும்.  சந்திப்பு நல்லது தான்.  அவனுடன் பேசணும்.
அம்மா அப்பா எப்படி இருப்பார்களோ...'  என்று யோசித்தபடி வெளிமண்டபத்தில் வாங்கிய வடைமாலைத் துணுக்குகளைச் சத்தம் வராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

மகன் அடிக்கடி சுந்தரியைப் பார்ப்பதைக் கண்ட  அவன் அப்பா நடராஜன் 'பேசுவதானால் பேசேன் பா'..' என்றதும்  'இல்லப்பா நீங்க பேசி முடிங்க. நான் அப்புறம் பேசுகிறேன்' என்றான்.

முத்துராமனும் சுந்தரியைக் கேட்டார். அவளோ 'நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்.  பிறகு நாங்கள் பேசிக்கொள்கிறோம்.' எனவும், பெற்றோருக்கு இவர்கள் சொல்லி வைத்தாற்போல
ஒரே மாதிரி பேசுவது சிரிப்பு வந்தது.

 'நாளை உங்களுடன் பேசுகிறோம்'  என்றபடி விடை பெற்றனர்
இரு குடும்பத்தினரும். சுந்தரியும் குணபதியும்  வணக்கம் சொல்லி அவரவர் வண்டியில் ஏறிக் கொண்டனர்.

இரு பெற்றோர்களும் பெண் பையனைக் கேட்ட போது
'நாங்கள் இருவரும் முதலில் சந்திக்கிறோம்.
அவள் விருப்பம் என் விருப்பம் எல்லாம் ஒத்துப் போகணும்,. பிறகு உங்க இஷடப்படி உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோம்' என்று இருவருமே சொல்லிவிட்டார்கள்.
IMG_20180710_051258.jpg

சு டோ கு  இரண்டாம் பாகம் 


சுந்தரியும் குணபதியும் அன்றிரவு உறக்கம் வராமல்
யோசித்துக் கொண்டிருந்தனர்.

குணபதியின் பெற்றோர்களும் சுந்தரியின் பெற்றோர்களும்
செய்த தீர்மானத்தைப் பற்றியும் அவர்கள்  யோசிக்க வேண்டி இருந்தது.

திடீரென வந்த ஐடியாபடி சுந்தரி முதலில் குணபதியை கைபேசியில் அழைத்தாள்.  

உடனே   எடுத்துப் பதில் சொன்னான். 

சுந்தரிக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. 'நீங்களும் தூங்கவில்லையா?' என்று கேட்டாள்.

'இது போலக் கண்டிஷன் எல்லாம் போட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.  நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டால்தானே அடுத்த நடவடிக்கை...'. என்றான் அவன்.

'அதே தான் எனக்கும் தோன்றியது.  நாளைக்கு நாம் சந்திக்க வேண்டும்...எங்கே?'  என்றாள். 

'USIS  லைப்ரரிக்கு வரமுடியுமா...?'

'ஓகே. சாயந்திரம் 4 மணிக்கு அங்கே இருப்பேன்' என்றதும், இருவருக்கும் மனம் கொஞ்சம் அமைதியாகியது.

காலை எழுந்ததும் பெற்றோர்களைப் பார்த்து 'எனக்கு
சாயந்திரம் லைப்ரரி போகணும்.  உங்கள் திட்டம் பற்றி எனக்கு யோசிக்க நேரம் வேண்டும்' என்றாள்.

'அதுக்கு என்னம்மா..  உங்கள் இருவர், வாழ்க்கை திருப்தியாக அமையத்தான் இந்த ஏற்பாடு' என்றார் அப்பா.

'நாங்கள் முதலில் ஒருவருக்கு ஒருவர் சரியான்னு பார்க்கணும் அப்பா.  அப்புறம் தான் பெற்றோர்' என்ற  பெண்ணை.மலைப்புடன் பார்த்தார்.

'இந்த யோசனையே முதலில் தப்பு.  நாங்கள் என்ன
சின்னக் குழந்தைகளா.  இரண்டு நாள் நேரம் எடுத்துப்போம்' என்றாள் சுந்தரி.

'குணபதியும் ஒத்துக் கொண்டானா..?'

'ஆமாம்..  நாங்கள் இருவரும்  சந்தித்துப் பேசப் போகிறோம்...'

'சரி.  நல்ல முடிவுக்கு வாருங்கள்' என்று ஒதுங்கிக் கொண்டார் தந்தை.

இதே நாடகம் குணபதியின் வீட்டிலும் நடந்தது..  அவர்களும்
ஒத்துக் கொள்ள வேண்டியது ஆயிற்று.

மாலை தன்னைக் கச்சிதமாக ஒப்பனை செய்து கொண்டு
ஜீன்ஸ், டி ஷர்ட்டில் கிளம்பும் பெண்ணை அம்மா கவலையுடன்
பார்த்தாள்.

'இதுதான் மா நான் .  சரியா?' என்று கிளபினாள் தன் ஸ்கூட்டியில்.

அங்கே லைப்ரரி வாசலில் நின்ற குணபதியைக் கண்டதுமே இயல்பாக மனம் மலர்ந்து புன்னகை வந்தது.

'ஹலோ...' என்று விளித்தபடி இருவரும் நெருங்கி, தங்கள் தங்கள் அட்டையைக் காட்டி உள்ளே நுழைந்தனர்.

ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு மேஜையின் இருபக்க நாற்காலிகளில் அமர்ந்தனர்.

'வீட்டில் ஓகேயா?' என்றான் குணபதி.  

'ஆமாம் குணா..  நான் சொல்லிவிட்டேன்...'

'நானும்தான் சுன்சுன்' என்றான் குணா வான குணபதி.

'சுன்சுனா?  என்ன பேரு அது...  ஏதோ இந்திப் பாட்டு மாதிரி இருக்கு' என்று சிரித்தாள்.

'ஆமாம்.  பழைய காலப் பெயர்,  புது உடை பேரை மாற்றி விட்டேன்' என்றான் குணா.

'சரி.. இப்போ நம் எதிர்காலம் என்ன ஆகப் போகிறது?  இரண்டு பேருக்கும் வேறு குழந்தைகள் கிடையாது. அதனால் தங்கள் சாய்ஸ் சரியாக இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்கள்...'

'நம் முடிவுதான் இப்போது முக்கியம்' என்றான் குணா.

அதற்குமேல் மடை திறந்தது போல் தங்கள் விஷயங்களையும்,
நம்பிக்கை,  விருப்ப வெறுப்புகளையும்  பற்றிப் பரிமாறிக்
கொண்டனர்.

அங்கிருந்து வெளியே வந்து லஸ் வினாயகர் கோவிலுக்குச் சென்றனர்.  அங்கிருந்த குருக்கள் இருவரையும் பார்த்து நட்புடன்
புன்னகைத்தார்.  'நண்பர்களா?'  என்றார்.  
'ஆமாம் சார்.  பிள்ளையார் பெயரில் அர்ச்சனை' என்றனர்.

'ஆஹா அதுக்கென்ன.. என்றபடி  தன் கணீர்க் குரலில் அர்ச்சனையை ஆரம்பித்தார்.

அழகான குழந்தையைப் போல் வீற்றிருந்த பிள்ளையாரை இருவரும் ரசித்துத் தொழுதனர்.

மாலையைக் குணாவின் கழுத்தில் போட்ட கணபதிக் குருக்கள், 'சீக்கிரமே  விவாகப் பிராப்திரஸ்து' என்று ஆசிர்வதித்தபடி சுந்தரியின் பக்கம் திரும்பி மல்லிகை மாலையைக் கொடுத்தார்.

தட்டில் அர்ச்சனைக்கான பணத்தை மரியாதையுடன் வைத்த குணாவை பார்த்து மகிழ்ந்தாள்.  இங்கிதம் தெரிந்தவன் தான் என்றபடி பிள்ளையாரை இருவரும் வலம் வந்தனர்..

வெளியே வந்து அவரவர் வண்டியில் உட்கார்ந்து கொண்டு
'சரவணபவன் போலாமா' என்று கேட்ட குணாவுக்கு மறுப்பு
சொல்லவில்லை.

'நாளை நாங்கள் உங்க வீட்டுக்கு வருகிறோம்' என்றாள்.

'நான் காத்திருக்கிறேன்' என்றான் குணா.

இருவருக்கும் புரிந்துவிட்டது...  இனி வாழ்க்கையில்
அவர்கள் விருப்பம் போலத்தான் எல்லாம் என்று.

இரு வண்டிகளும் இணையாக சரவணபவனில் நுழைந்தன.
இரண்டு மணி நேரம் கழித்துதான் அவரவர் வீட்டை அடைந்தனர்.

பெற்றோர் விருப்பமும் அவர்கள் விருப்பமும் ஒன்றாகி
ஆவணி மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

45 கருத்துகள்:

 1. குணாவுக்கும் சுன் சுனுக்கும் :) நல்ல பொருத்தம் ..சூப்பரா இருந்தது வல்லிம்மா ஒரே மூச்சில் படிச்சி முடிச்சிட்டேன் ..

  இங்கே வசிக்கும் பஞ்சாபியர் இப்படித்தான் முதலில் கெட் டு கெதர் அல்லது வேறு வைபவங்களில் மாப்பிள்ளையையும் பெண்ணையும் சும்மா அறிமுகபடுத்தி வைப்ப்பாங்க அப்புறம் அவங்க நட்பாகி திருமணத்தில் முடியும் .
  ஆனாலும் பெற்றோர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கோயிலில் வேண்டுதல் செய்தது மிக நல்ல விஷயம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு ஏஞ்சல், வந்து படித்ததிற்கும் கருத்திட்டதுக்கும் மிக நன்றி மா.
   மாறு பட்ட கருத்து சொன்ன கௌதமன் ஜிக்கும் நன்றி.

   எனக்கு அது பொருந்திப் போகுமா என்று சந்தேகம் வந்ததாள் கதைப் போக்கைச் சற்றே
   மாற்றினேன்.
   இன்னும் கொஞ்சம் கருத்துகளைப் புகுத்தி இருக்கலாம்.
   இன்னோரு கதையில் சொன்னால் போகிறது.

   நீக்கு
 2. இருவருக்கிடையே ஏதாவது கருத்து வேறுபாடு வந்து விடுமோ என்று பயந்தேன்...

  சுபம்...

  எங்கள்Blog-ல் சமீபத்திய துரை செல்வராஜூ ஐயாவின் பதிவும் ஞாபகம் வந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் டிடி.....துரை அண்ணாவின் கதையும் வந்தது...நீங்க சொல்லிட்டீங்க!!

   கீதா

   நீக்கு
  2. அன்பு தனபாலன், இந்தக் கதையை 7 நாட்கள் இருக்குமா... அப்போது எழுதி வைத்தேன்.
   பிறகு ஸ்ரீராமுக்கு அனுப்பினேன்.
   அங்கே கதைகள் வரிசையாக நிற்கும் என்பதே என் கணிப்பு.
   அதை மீறி இப்பொழுதே வெளியிட்டது ஆச்சர்யமே நடுவில் ஜிமெயிலில் தகராறு வேறு,.

   சுபமாக ஆரம்பித்து சுபமாக முடிக்கவே எப்பொழுதும் விருப்பம் மா.
   உங்கள் அருமைப் பின்னூட்டத்துக்கு மிக நன்றி.

   நீக்கு
 3. ஆஹா வல்லிம்மா செம!! ரொம்ப நன்றாக இருக்கிறது....நல்ல சுபம்....ரொம்ப நல்லா வந்துருக்கு வல்லிமா....அழகான ஸாஃப்ட் நடை!! சூப்பர் அம்மா!!

  நானும் எழுதத் தொடங்கி இன்றுதான் முந்தைய பதிவில் கௌ அண்ணாவைக் கொஞ்சம் கலாய்த்து...நான் எழுதியதை போட்டு என்னால் தொடர முடியவில்லை வேறு யாரேனும் தொடரலாமே என்றும் போட்டிருந்தேன். கருத்துப்பெட்டியிலேயே....ஹா ஹா ஹா ஹா

  அதிலும் அவர்கள் சொல்லுவார்கள் நாம பேசி டிசைட் பண்ணுவதை எதுக்கு பெரியவர்கள் இடையில் என்று டெலிஃபோன் டாக் சன்ட்ரீயும் (சுந்தரிதான்...ஹிஹிஹி) ஆனால் முடிக்க முடியலை...என்னால் இப்போது,,,ஃப்ளோ வரவில்லை...

  நான் முந்தைய பகுதியில் போட்டது கருத்து போச்சானு தெரியலை.கதையை எழுதிய வரை பிரித்துப் பிரித்து கருத்துப் பெட்டியில் போட்டேன்...போச்சானு தெரியலை..ஸ்ரீராம் அல்லது கௌ அண்ணா சொன்னால்தான் தெரியும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு கீதா, உடனே பின்னூட்டம் இட்டதுக்கு மிக நன்றி மா.
   சன் ட்ரி நல்லா இருக்கே. நல்லா வரும் எழுதுங்க. இன்னும் அழகாக எழுதி இருக்கலாம்.

   ஏதோ, ரயிலைப் பிடிக்க அவசரமான்னு கேப்பாங்களே அந்த மாதிரி எழுதி முடித்துவிட்டேன்.
   ரசித்துக் கருத்து சொல்வதில் கீதாவை மிஞ்ச யார். வாழ்க வளமுடன் மா.

   நீக்கு
 4. ஆவணி 7-ஆம் தேதி முகூர்த்தம் உண்டு. பத்திரிக்கை அனுப்பவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா. நல்ல யோசனை தேவகோட்டையாரே.
   அப்படியே ஏவீஏம் மண்டபம் பதிவு செய்துட்டேன்.
   மணமக்கள் பெற்றோர் சார்பில் தங்களைத் திருமணத்துக்கு
   வந்து சிறப்பிக்கும்படி அழைக்கிறேன். நன்றி மா.

   நீக்கு
 5. ஆவ்வ்வ்வ் மிக நீண்ட இடைவெளியின் பின்பு, நம்ம ஏரியாவில் கன்னிக்கதை:). அதாவது புதுவருடத்தில் பிறந்த முதல்க் கொயந்தை... அதுவும் வல்லிம்மாவுடையது என்பதில் மிக்க மகிழ்ச்சி. சந்தோசம்.. நல்ல ஆரம்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு அதிரா,
   நம்ம ஏரியா லிங்க் , எங்கள் ப்ளாக் இல்,
   தெரியவில்லையே என்று யோசித்தேன். பிறகு ஸ்ரீராம்
   லிங்க் கொடுத்திருப்பதைப் பார்த்தேன்.
   படித்துக் கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.

   நீக்கு
 6. //'கல்யாணம் ஆன பிறகு இங்கே கொண்டு வந்து மாலையை மரத்துல சார்த்தணும்பா. பாரு எத்தனை வாடின மாலை தொங்குகிறது. //

  ஸ்ரீராமின் கல்யாணமாலை நினைவுக்கு வந்தது:)..

  அழகிய கதை, நல்லவேளை ஒரு பதிவாகவே போட்டு விட்டமையால் நமக்கு ரென்ஷன் இல்லை ஹா ஹ ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யெஸ் யெஸ் அதிரா எனக்கும் ஸ்ரீராமின் கல்யாண மாலைனினைவுக்கு வந்தது!! இதுங்களாச்சும் உடனே போய் முடிச்சுரணும்....ஹா ஹா ஹா ஹா ஹா...இதைப் போட வந்தப்பா நெட் தகராறு...ஹிஹிஹி

   அதுக்குள்ள அதிராவும் அதே கருத்து சொல்லிட்டாங்க ஸோ டிட்டோ...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. கீதா, எனக்கு நினைவில்லையே. ஸ்ரீராம் திருவிடந்தை பற்றி எழுதி இருந்தாரா,.
   எபியில் வந்ததா. ம்ஹூம்.வல்லிம்மாவின் மெமரி பவர் குறைந்து போய் விட்டது,
   போதாக்குறைக்கு இங்கே பகல் அங்கே இரவுன்னால் குழம்பிப் போகிறது.
   மீண்டும் நன்றி மா

   நீக்கு
  3. http://engalblog.blogspot.com/2018/07/180708.html

   இந்த போஸ்ட் வல்லிம்மா

   நீக்கு
 7. ஆற்றோட்டமான எழுத்து நடை வாசிக்க லயமும் சுகமும் கூட்டியது. கதை என்றால் துக்குனூண்டு டுவிஸ்ட்டாவது இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை எழுத்தில் புறந்தள்ளியிருக்கிறீர்கள்.

  அதென்ன சுடோகு இரண்டாம் பாகம்?.. 'உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை' கதைத் தலைப்பில்லையா?.. அல்லது மூன்றாம் பாகம் என்று ஒன்றிருந்தால் அதில் தான் அந்தக் குறை தெரியவரும் என்பதினால் 'சுடோகு' என்று தலைப்பில் மாற்றமா?.. தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு ஜீவி சார், கதையைப் படித்ததற்கு மிக நன்றி.
   பிழை என் மேல் தான்.
   ரொம்ப நேரம் எழுத முடியவில்லை. ஒரு ப்ரேக் தேவைப் படுகிறது.
   திடீர்னு நிறைய வளவளன்னு எழுதிட்டோமா என்கிற சந்தேகம் வேற வந்துவிடுகிறது.
   அதுவே பாகப்பிரிவினையாக முடிந்து நல்ல வேளை ஸ்ரீராமன் கிருபையில் ஒரு பதிவாக வெளி வந்தது.
   கதைக்குக் கொடுத்த //சு to கு// என்பதே தலைப்புன்னு நானாக நினைத்துக் கொண்டு விட்டேன்.

   அவரே நல்ல தலைப்பும் தந்துவிட்டார். இல்லாவிட்டால் நாமகரணம் செய்யப் படாத குழந்தையாக வந்திருக்கும்.

   ட்விஸ்ட் வைத்திருக்கலாம். திருமண விஷயத்தில் வேண்டாமே என்ற கவனம் தான்.
   உங்கள் அருமையான கருத்துக்கு மனம் நிறை நன்றி சார்.வணக்கம்.

   நீக்கு
 8. இப்பொழுது தான் 'சுடோகு' {புதிய கதைக் கரு} பார்த்தேன்.

  //ஒரு வாரம், சுந்தரி, குணபதியின் வீட்டிலும், அதே வாரத்தில், ( சு To கு வாரத்தில்) குணபதி, சுந்தரியின் வீட்டிலும் தங்கி அந்தந்த வீட்டில் ஒரு அங்கத்தினராக இருந்து, தங்கள் வேலைகளைப் பார்ப்பது.//

  அபாயகரமான ஐடியாவாக இருக்கிறேதே! ஒரு கால் 'பிக் பாஸ்'ஸின் மைய்யமாக தாக்கமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா. நல்ல வேளை நான் அதைப் பார்க்க இங்கே சான்ஸ்
   இல்லை சார்.

   நீக்கு
 9. தளத்தின் மாற்றங்களை யாருமே இன்னும் கவனிக்கலை போல டிடி... !

  பதிலளிநீக்கு
 10. சுந்தரியும் குணபதியும் அன்றிரவு உறக்கம் வராமல்
  யோசித்துக் கொண்டிருந்தனர்.

  ராத்திரி தூக்கம் வராமல் இருப்பது தொந்தரவாயிற்றே,

  (எங்கள் ஊரில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் நிச்சயமான பின்
  ராத்திரி பெண் ஆணுக்கு அழைப்பு விடுத்தாள்,
  ஆண் ஒற்றை ரிங்கில் போன் அட்டெண்ட் செய்தது தப்பா?,இந்த ராத்திரி நேரம் எவ கூட பேசிட்டு இருந்த னு கேட்டு பயங்கர சண்டை,
  அப்புறம் என்ன கல்யாணம் நின்னு போச்சு.

  நல்ல வேள சுந்தரி அப்படி கேக்கல...😊😊😊

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சோ, நிஜமாகவா.
   க.சி.கவிதைகள். அதிசயமாக இருக்கிறதே. நிச்சயமான அன்றே
   சண்டையா.
   திருமணம் நின்றதும் நல்லதுக்குத் தான்.
   வாழ்னாட்கள் சச்சரவிலேயே சென்றிருக்கும்.
   பாவம் அந்த அம்மா அப்பா.

   நீக்கு
 11. ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை! ரசிக்க முடிந்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிக நன்றி , கௌதமன் ஜி. நீங்கள் ஐடியா கொடுத்துவிட்டால் எழுதுவது சுலபம். எல்லாச் சிக்கல்களைத் தாண்டித்தானே வருகிறோம். கதையிலாவது சிக்கல் இல்லாமல்
   இருக்கட்டும்னு நினைத்தேன்.

   நீக்கு
 12. கௌதமனின் வித்தியாசமான விமரிசனம் எங்கே? தேடித் தேடிப் பார்த்தேன்! கிடைக்கலை. நல்ல அழகான கதை. அது சரி, ரெண்டு பேரும் அவங்க அவங்க வீட்டில் இருந்தாங்களா இல்லை ஒரு வாரம் மாத்தி இருந்தாங்களா, அது சொல்லலையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா மா
   அதெல்லாம் ஒண்ணும் செய்யவில்லை. நேராகக் கல்யாணம் தான். யாராவது மாற்றி எழுதினால் படிக்க ஆசை . அந்த வரிகளைச் சேர்த்து இருக்கணுமோ.
   சுபம்தான் எப்பவும் பிடித்தது மா.மேலே இருக்கு கௌதமன் ஜியின் கருத்து.

   நீக்கு
 13. சுபமான முடிவு எப்போதுமே மகிழ்ச்சி தரும்.

  பதிலளிநீக்கு
 14. ஆகா...
  சுபம்... சந்தோஷம்.. சௌபாக்யம்..

  வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நன்றி துரை செல்வராஜு. கதை மாந்தர்கள்
   சௌக்கியமாக இருப்பது ஒன்று தான் என்னால்
   எழுத முடிகிறது. உங்கள் அளவு தமிழ்க் கோர்வை கிட்டவில்லை. நீங்கள் வந்து சொன்னது
   மிக மகிழ்ச்சிமா.

   நீக்கு
  2. கதை மாந்தர்களுக்குள் பிரச்னை வரட்டும்..
   முட்டி மோதிக் கொள்ளட்டும்.. ஆனால்,
   அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும்..
   சௌபாக்யம் தழைக்கட்டும்!...

   மகிழ்ச்சியான தருணங்களைக் காட்டியது - கதை..

   என்றும் அன்புடன்..

   நீக்கு
  3. அன்பு துரை.,

   வீடு என்றால் வம்பும் சண்டையும் இருக்கட்டும். சாயந்திரம் ஆவதற்குள்
   சஞ்சலம் அடங்கி சௌகர்யமாகட்டும் இல்லையா மா. கொஞ்ச கார சாரமாகச் சாப்பாடு இருந்தால் மாறுதல் தான். ரசிக்கப் படும். நன்றி மா.

   நீக்கு
 15. திருவிடந்தை வராஹ பெருமாள், பூமிப்பிராட்டி அருளால் குண்பதி, சுந்தரி திருமணம் ஆவணி மாதத்தில் நடைபெற வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
  அக்கா ஸ்ரீராம் திருமணஞ்சேரி பற்றி எழுதி இருந்தார். அதிலும் பழைய மாலையை அந்த கோவிலில் கொண்டு சேர்க்க வேண்டும். அதை சொல்கிறார் அதிரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ. படிக்காமல் விட்டுவிட்டேனா. கோமதிமா. நன்றி.
   திருமணஞ்சேரி போனதில்லை. மாலையைத் திருப்பிக் கொண்டு போய்
   அங்கே மரத்தில் மாட்டணும். அதற்குள் இந்த மாலையில் நார்தான் மிஞ்சும்.
   நன்றி மா.

   நீக்கு
 16. கதை எந்தவித குழப்பம் இல்லாமல் தடைகள் இல்லாமல் இனிதாக நிறைவு பெற்றது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்வில் தான் நிறையத் திருப்பங்கள் பார்க்கிறோமே கோமதி மா.
   கற்பனையிலாவது எல்லோரும் சுகமாகச் சங்கடம் இல்லாமல் இருக்கட்டும்.

   நீக்கு
 17. ஜாதக மையம் போய் அங்கு ஜாதகம் பதியும்போது, அங்கு பார்த்த இரண்டு அம்மாமார்கள், பெண்ணைப் பார்க்க பிள்ளையைப் பெற்றவர்களைக் கூப்பிட, அவர்களும்வர, பெண் பிடித்துப்போய், மேன் மேலும் பேசி பதினைந்து தினங்களுக்குள்ளேயே கல்யாணம் நிச்சயமாகி விட்டதைப் பார்த்திருக்கிறேன். உங்கள் புனைவு கடவுளின் ஸன்னதியிலேயே, கைமேல் பலனாக , மிக்க அழகாக தெய்வ நம்பிக்கையை மிகவும் ஊக்கும் விதமாக அமைந்திருப்பது அழகாக இருக்கிறது. குணபதி,சுந்தரி கொடுத்து வைத்தவர்கள். பாராட்டுகள் வல்லிம்மா.. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு காமாட்சி மா. இந்தக் கவனிப்பைத் தான் நான் எதிர்பார்த்தேன்.
   கடவுள் சன்னிதியில் இருவருக்கும் பிடித்துவிட்டது. இளம் வயதில்
   ஈர்க்கப் படுவது சாத்தியம் தானே.
   இருந்தும் இந்தக்காலப் போக்குப் படி பெற்றோர் வார்த்தைக்கு உடனே கட்டுப்பட்டால்
   கௌரவம் என்னாவது.
   சுய சிந்தனைக்குப் பங்கம் வரக்கூடாது. எல்லாம் தான்.
   நீங்கள் படித்து மகிழ்ந்தது எனக்குப் பெரிய சந்தோஷம்.

   மிக மிக நன்றி.
   ஆமாம் ஜாதக மையக் கல்யாணங்களை நானும் கவனித்திருக்கிறேன்.
   மகிழ்ச்சியா எல்லோரும் இருக்க வேண்டும்.

   நீக்கு
 18. கோவிலில் ஆரம்பித்து கோவிலில் சுபமாக முடித்திருக்கிறீர்கள். சரளமான நடை.

  பதிலளிநீக்கு
 19. // நானும் எழுதத் தொடங்கி இன்றுதான் முந்தைய பதிவில் கௌ அண்ணாவைக் கொஞ்சம் கலாய்த்து...நான் எழுதியதை போட்டு என்னால் தொடர முடியவில்லை வேறு யாரேனும் தொடரலாமே என்றும் போட்டிருந்தேன். கருத்துப்பெட்டியிலேயே....ஹா ஹா ஹா ஹா//
  ஐயையோ கீதா, நானும் கௌதமன் சாரை கலாய்த்து எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் எழுதியே முடித்து விட்டீர்களா? எங்கே என் கண்களில் படவில்லையே?

  பதிலளிநீக்கு
 20. சிறப்பு. சரவண பவனை விடுவதில்லை போல.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  https://newsigaram.blogspot.com/

  பதிலளிநீக்கு