வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி வெங்கடேஸ்வரன்




என்னோடு வா வீடு வரைக்கும் 2 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

(நேற்றைய கதையின் தொடர்ச்சி...)

அவளுக்கு வந்த கோபம் அவள் மகளுக்கு வரவில்லை. 

“ஓரு வாரத்தில் என்ன ஜட்ஜ் பண்ண முடியும்னு கேட்கிறாய், பொண்ணு பார்ப்பதுன்னு ஒரு நிகழ்ச்சியில் அரை மணி நேரம் பார்த்துட்டு கல்யாணம் நிச்சயம் பண்ணுகிறார்களே..? எந்த நம்பிக்கையில் செய்கிறார்கள்? தவிர நானும், அவனும் ஒரே வீட்டில்தானே இருந்தோம்…”
“என்னடி சொல்ற..?”
“அம்மா, ஒரே வீட்டில் இருந்தோம், ஒரே ரூமில் இல்ல.. நான் நியுஜெர்சி வந்த பொழுது இன்னொரு பெண்ணும் என்னோடு இருந்தாள், அவ ஊருக்கு வந்ததும் எனக்கு ரெண்டு மாசம்தான் நியூஜெர்சியில் இருக்கணும், அதுக்காக ஒரு வீடு பார்க்க வேண்டாமேனு அந்த வீட்டிலேயே இருந்துட்டேன்.”  அலட்சியமாக டப்பாவை திறந்து ஒரு பிஸ்கெட்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே அதை விட அலட்சியமாக கூறினாள்.
“அப்போ ஒரு வாரம் அவங்க வீட்டில் போய் இருக்க நீ ரெடியா?”
அவள் பதில் சொல்லாமல், புருவத்தை உயர்த்தி தோள்களை குலுக்கினாள்.
“என்னது இது? இவ இப்படி சொல்றா? ஒரு பெண்ணை கல்யாணதிற்கு முன்னால் எங்க வீட்டில் வந்து ஒரு வாரம் தங்குனு சொல்றது அயோக்கியத்தனம் இல்லையா?” கணவனை உதவிக்கு அழைத்தாள்.
இதுவரை மனைவியும், மகளும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சங்கர்,
“இவ மட்டுமா அவங்க வீட்டுக்கு போகப் போறா? அந்தப் பையனும்தான் நம்ம வீட்டுக்கு வரப் போறான். தவிர அயோக்கியன் வீட்டுக்கு வா னு கூப்பிட மாட்டான், வேற எங்கயோ கூப்பிடுவான். தன் வீட்டுக்கு வந்து பார்த்தால், பிடிக்கும்னு நம்பிக்கை இருந்தால்தானே கூப்பிட முடியும்.”
எப்போதும் போல் அப்பாவும், மகளும் ஒன்று சேர்ந்து விட்டார்கள், இனி தன் பேச்சு எடுபடாது என்பது புரிந்து போக, “என்னவோ பண்ணுங்க, அட்லீஸ்ட், நீங்களா ஃபோன் பண்ணாதீங்க, அவங்களா கூப்பிடட்டும்” என்றவள், ஹாலில் மாட்டியிருந்த வெங்கடாஜலபதி படத்தைப் பார்த்து கை கூப்பினாள்.
“என்னப்பா நீ பாட்டுக்க தடால்னு சொல்லிட்ட, அவங்க பாவம் இதை எதிர்பார்க்கலை…” கார் ஓட்டிக் கொண்டிருந்த குணா அப்பாவிடம் கேட்டான்.
“கேட்டுதானே ஆகணும்?”
“ஸ்ப்போஸ் அவங்க ஒத்துக்கலன்னா..?”
“வேற பொண்ணு பார்க்க வேண்டியதுதான்..”
“என் மேல் உனக்கு கோபம் எதுவும் இல்லையே..?” சிரித்துக் கொண்டே குணா கேட்க, “ஏன் அப்படி கேட்கற?” என்றார் ராமசேஷன்.
“பின்ன..? பொண்ணு கிடைக்கறதே கஷ்டமா இருக்கற கால கட்டத்துல அன் ரியலிஸ்டிக்கா கண்டிஷன் போட்டா?”
“டோண்ட் ஒர்ரி, பொண்ணு கிடைப்பா,”
“அனிதா வீட்டிலிருந்து ஃபோன் ஏதாவது வந்ததா?”
“இதுவரை இல்லை, நான் கூப்பிடுகிறேன்..” என்று சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது அவர் செல்ஃபோன் ஒலித்தது.
எல்லோரும் ஒப்புக்கொண்டதற்கிணங்க குணா, அனிதா வீட்டிற்கும், அனிதா வீட்டிற்கும் புலம் பெயர்ந்தனர்.
இருவரும் தங்கள் வீட்டில் இருப்பது போலவே இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.
------
முதல் நாள் காலை அவளை ஒரு விசித்திரமான சப்தம் எழுப்பி விட்டது. கொஞ்சம் பயத்தோடு வெளியே வந்து பார்த்தாள். “அங்கிள் ஈஷா யோகா செய்கிறார், வேற ஒண்ணும் இல்லை, பயப்படாதே” என்று சின்ன சிரிப்போடு சொல்லிவிட்டு, “பல் தேய்த்தாச்சா? காபி கலக்கலாமா?” என்று கேட்டாள் சுமதி.
உனக்கு சர்க்கரை எவ்வளவு?
“கொஞ்சம் கசக்கணும்”
ஆன்ட்டி கொண்டு வந்த காபி அதிகமாகவே கசந்தது.
ஈஷா யோகா முடித்து விட்டு வந்த, ராமசேஷன், “என்னம்மா? நன்னா தூங்கினாயா? பேப்பர் படிக்கும் பழக்கம் உண்டா?”
“இவருக்கு எல்லாரும் பேப்பர் படிக்கணும்..” என்றபடியே வந்த சுமதி, ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி, ஆரத்தி எடுக்க வரேளா..” என்று அழைத்ததும், எல்லோரும் பூஜை அறையில் குழுமினர். சாய் பாபா ஆரத்தி பாடலை சுமதி துவங்க, மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர்.
அம்மாவிடம் ஃபோனில் பேசலாம் என்று வாசலுக்குச் சென்றவள் கண்களில் கேட்டில் மாட்டியிருந்த ஒரு பிளாஸ்டிக் கவர் பட்டது. அதில் பன்னீர் ரோஜா, சாமந்தி, அரளி போன்ற உதிரிப் பூக்கள் மட்டும் இருந்தது. அதை எடுத்து சுமதியிடம் கொடுத்த போது, “இது சாந்தினி மதருக்கு வைக்க வாங்குவாள், ஃப்ரிட்ஜில் வைத்து விடு” என்றாள்.
அனிதாவுக்கு தலை சுற்றியது. ஒரே வீட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும், வேறு வேறு குருமார்களா? இது மட்டுமல்ல அந்த வீட்டில் எல்லாமே அவளுக்கு விதியாசமாகத்தான் இருந்தன.
இந்த வீட்டில் சாப்பிடும் போதும், இரவில் படுத்துக்கொள்ளும் முன்னரும், எல்லோரும் பல விஷயங்களை விவாதித்தார்கள். மோடி செய்வது சரி, தவறு என்று அர்னாப் கோ ஸ்வாமியின் டாக் ஷோக்கு ஈடாக அடித்துக்கொண்டார்கள். ரஜினி ஏன் இன்னும் கட்சியின் பெயர் கூட அறிவிக்கவில்லை? பி.ஜே.பி. தமிழகத்தில் வேரூன்ற முடியுமா?
“கர்னாடக இசைப் பாடகர்கள் கிருத்துவ பாடல்களை பாடலாமா? ஏன் கூடாது? அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன் ஏசு காவியம் எழுதவில்லையா?”
என்றெல்லாம் இவர்கள் சூடு பறக்க விவாதம் செய்யும் போது, “இதைப் பற்றியெல்லாம் இவர்கள் ஏன் கவலைப் படுகிறார்கள்?” என்றுஅனிதாவிற்கு தோன்றியது.
குணாவிற்கு நேர் எதிர் அனுபவமாக இருந்தது. அனிதா வீட்டில் ஒவ்வொரு நாளும் என்ன சமைக்க வேண்டும் என்பதைக் கூட அவள் தந்தைதான் முடிவு செய்தார்.
“கத்தரிக்காய் வாங்கி வந்திருக்கிறேன், ரசவாங்கி பண்ணிவிடு, அவியல் பண்ணி ரொம்ப நாளாச்சே..? நாளைக்கு செய்கிறாயா? ஈவினிங் அடை செஞ்சுடு..”
அவரால் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை ஓரிரு நாட்களிலேயே புரிந்து கொண்டான்.
ஒரு வாரம் ஓடி விட்டது, பெரியவர்களை பொறுத்தவரை இரண்டு வீட்டாருக்கும் திருப்திதான். இனிமேல் முடிவெடுக்க வேண்டியது குணாவும், அனிதாவும்தான். “பேசி உங்கள் முடிவை சொல்லுங்கள்” என்று இரு வீட்டு பெரியவர்களும் சொல்ல, அனிதாவும், குணாவும் ஸ்டார் பக்ஸில் சந்தித்தார்கள்.
“ஹொவ் வாஸ் த எக்ஸ்பீரியன்ஸ்?”
ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள, “குட்” என்று குணாவும், “கொஞ்சம் வியர்டாக இருந்தது” என்று அனிதாவும் சொன்னார்கள்.
“வியர்ட்..? எப்படி?”
“ஆமாம், ஒரு வீட்டில் நாலு பேர் இருந்தால், நாலு பேருக்கும், நாலு குருவா?”
“ஓ! அதுவா?, அவரவர் மன முதிர்சிக்கு ஏற்ப, குரு அமைவார். இதுல என்ன இருக்கு? எல்லா இடங்களுக்கும் சென்றாலும், அவரவர் குருவாக ஏற்றுக் கொண்டவர் சொல்வதைத்தான் பின்பற்றுவோம்,, க்ளியர்?”
அனிதா சிரித்துக் கொண்டே தலை அசைத்தாள். இன்னொரு விஷயம் ஆச்சர்யமா இருந்தது. எங்கேயாவது போகணும்னா, முதல் நாள்தான் எல்லா ஏற்பாடும் பண்றீங்க? எங்க வீட்டில் ரெண்டு நாள் முன்னாலேயே ரெடியாகி விடுவோம்.”
“வேலை நடக்கறதா, இல்லையா? அது சரி, என்ன சொல்ல வர? நம்ப ரெண்டு பேரோட வீடும் எதிரெதிர் துருவம் என்றா?
“ஆமாம்”
“சரி வா, இதை நம்ம பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிடலாம். முதலில் எங்கள் வீட்டுக்குப் போகலாம்,”
என்று இருவரும் கிளம்பி, குணாவின் வீட்டை அடைந்த பொழுது, வாசலில் போடப்பட்டிருந்த பெரிய கோலம் அவர்களை ஆச்சர்ய்ப்படுத்தியது.  
உள்ளே பெரியவர்களில் ஆண்கள் வேஷ்டி, ஜிப்பா, அங்கவஸ்திரம் அணிந்து கொண்டும், பெண்கள் பட்டுப் புடவையிலும் இருக்க, ஹாலில் பெரிதாக வரையப் பட்டிருந்த கோலத்தின் நடுவில் பழங்கள், பூ, மாலைகள், இனிப்பு என்று வைக்கப்பட்டிருக்க, அனிதாவும், குணாவும் திகைத்துப் போயினர்.
“என்னது இதெல்லாம்?”
“உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு நிச்சயதார்தம்”
“வா..ட்? இவ நம்ம ரெண்டு வீடும் எதிரெதிர் துருவமா இருக்குனு சொன்னா..”
குணா முடிக்கும் முன், அவன் தந்தை, “அதேதான், ஆப்போசிட் போல்ஸ்அட்ராக்ட் ஈச் அதர்” என்று கூறி சிரித்தார்.
“வீ நோ போத் ஆஃப் யூ லைக் ஈச் அதர். அதனால்தான், இந்த ஏர்பாடுகளை செய்தோம்” சீக்கிரம் ரெடி ஆகுங்கோ, ரிலேடிவிஸ் வரத் தொடங்கி விடுவார்கள்”
இன்ப அதிர்ச்சியிலிருந்து மீண்ட அனிதா சுதாரித்துக் கொண்ட பொழுது, குணாவின் தாத்தா அவளிடம் வந்து, நான் உன்னை சுந்தரி என்றுதான் கூப்பிடுவேன், ஏன்னா அது என் அம்மாவின் பெயர், சீக்கிரம் ரெடியாகும்மா” என்றார்.
“மை காட்!” என்று வியந்த இருவரும், இந்த பெரியவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டெ, நிச்சயதார்த்ததிற்கு தயாராக ஆரம்பித்தார்கள்.

25 கருத்துகள்:

  1. கொடுக்கப்பட்ட குறிப்புகள் வழியே அழகாக பயணித்து சுபமாக முடிந்த கதை!! பாராட்டுகள்!!

    பதிலளிநீக்கு
  2. ஆகா...
    இனிமையான நிறைவு...

    நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. குட் . ஆனால் சட்டென்று முடிந்துவிட்டது ஏமாற்றமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சட்டென்று முடிந்துவிட்டது ஏமாற்றமாக உள்ளது.// எழுதி முடித்து படித்த பொழுது எனக்கும் கூட இப்படித்தான் தோன்றியது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. திடுக்கிடும் திருப்பங்களை எதிர்பார்த்தேன், சட்டுனு முடிச்சுட்டீங்களே! நல்லாக் கதை சொல்ல வருது, சுருக்கமாகவும் சரளமாகவும் நடை! தொடர்ந்து இந்தக் கதையை ஓர் குறுநாவலாகக் கூட மாத்தலாம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்லாக் கதை சொல்ல வருது, சுருக்கமாகவும் சரளமாகவும் நடை!// பாராட்டுக்கு நன்றி.
      சிறுகதைதானே எழுத சொல்லியிருந்தார்கள், நாம் பாட்டுக்கு எழுதிக்கொண்டே போகிறோமே என்று நினைத்தது ஒரு காரணம்.

      நீக்கு
  5. ஆப்போசிட் போல்ஸ்அட்ராக்ட் ஈச் அதர்” என்று கூறி சிரித்தார்.//

    சரிதான்.

    கதை நன்றாக சுபமாய் நிறைவு பெற்றது.
    மணமக்கள் வாழி! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருவை அறிவித்த பொழுது ரொம்பவும் சினிமாட்டிக்காக இருப்பது போல தோன்றியது. ஆனால் அதிலிருந்த சவால் பிடித்திருந்ததால் எழுதிப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.
      இந்த விபரீத நிபந்தனையை நியாயப்படுத்த தாமரையின்'நெஞ்சுக்கள் பெய்திடும் மா மழை' பாடலில் வரும் 'என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டைப்பார் என்னைப்பிடிக்கும்' வரிகளை எடுத்துக்கொண்டேன்.
      இந்த பழக்கம் வந்து விடக்கூடாதே என்ற அச்சம் வருகிறது.
      கரு கொடுத்து கதையை வெளியிட்ட எங்க ஏரியாவுக்கும், படித்து உற்சாகப்படுத்தியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  6. எப்படியோ இருவரும் இணைந்தார்களே மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. இப்பொதுதான் பார்க்கிறேன் பானுமா. கருவை அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள். இனி அவர்கள் வாழ்க்கை சுகமாகப் பயணிக்கும். நோ மோர் அதிர்ச்சிகள். மனம் நிறை வாழ்த்துகள். உங்களுக்கும் நம்ம ஏரியாவுக்கும்.

    பதிலளிநீக்கு
  8. திடுப்பென்று முடித்து விட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்,எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வரிகள் என்னும் ரேஞ்சில் படு ஸ்லோவாக எழுதியது, சிறுகதை என்னும் அளவைத் தாண்டி நீண்டது போன்றவை சட்டென்று முடிக்கத் தோன்றி விட்டது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. லேட்டா வருவதில் ஒரு வசதி - முழுக்கதையும்/அனைத்து பகுதிகளையும் படித்து விட முடிகிறது! :)

    நல்லா இருக்கு. பலரும் சொன்னது போல சட்னு முடிந்த மாதிரி இருந்தது. இருந்தாலும் நல்ல முடிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் சட்டென்று முடடிந்து விட்டது போல் இருக்கிறது என்று கூறியிருப்பதை கருத்தில் கொள்கிறேன். இந்த தவறை தவிர்க்க பார்க்கிறேன். நன்றி.

      நீக்கு
  10. ஒருவருக்கொருவர் ஏதோ மனது பிடித்துவிட்ட ஒரு எண்ணத்தினால்தான் இந்த பரிட்சைக்கே ஸம்மதித்தனர். முதலிலேயே குடும்பத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதில் அனுஸரிப்பது ஸுலபமாக இருக்கலாம். குடும்பப் பின்னணி தெரியாமல் பிறகு மனஸ்தாபம் வருவதைத் தவிர்க்க இந்தடெக்நிக்கோ என்னவோ? பாராட்டுகள் அன்புடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சி அம்மா. சு.டோ.கு. அறிவிப்பில் இருந்த சவால்தான் என்னை எழுதத் தூண்டியது. மற்றபடி இந்த விபரீத ஏற்பாட்டை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எதிர்காலத்தில் வரலாம் என்றும் தோன்றுகிறது.
      பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  11. ஆப்போஸிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர். அஹா.. ஃபேமிலிக்கும் அதேவா. அட்டகாசம் :)

    பதிலளிநீக்கு
  12. பானுக்கா கதை நன்றாகவே இருக்கு. நல்ல முடிவு. ரெண்டு பார்ட்டுமே வாசித்துவிட்டேன். இருவரும் தங்கள் அனுபவங்களை ஓரிரு வரிகளில் பானுக்காவைப் போல ஷார்ட்டாகச் சொல்லுகின்றார்களே!! அதுவும் அனிதா வியர்டா இருக்கு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறாளே! அண்ட் குணா வும் அனிதா வீட்டில் அப்பாதான் மெனுவில் கூட முடிவு எடுக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கின்றானே.. இருவரும் மாறி மாறி தங்கும் வீட்டிலுள்ள உறுப்பினர்களை ஒரு வாரத்தில் இவ்வளவுதானே புரியும் புரிந்து கொள்ள முடியும் இல்லையா...அதுவும் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவுதானே! ஸோ ஷார்ட்டா சம்பவங்கள் என்று போகாமல் அவங்க புரிந்து கொண்டதைச் சொல்லியிருக்கீங்க...சரிதானே அக்கா! எனக்கு பிடிச்சுருக்கு அக்கா...

    நான் உங்க கதையை, என் கதையை முடிக்கும் வரை வாசிக்க வேண்டாம் என்றுதான் இருந்தேன். அப்புறம் இப்ப வாசித்துவிட்டேன். நீங்க வந்த கருத்துகள் பற்றி சொன்னதால்...ஓகே ஒன்று போல் இல்லை என்பதால் வாசித்து விட்டேன். என் மனதில் நான் எழுதும் கதை வடிவம் பெற்றாலும் எழுத முடியவில்லை இன்னும்.

    பானுக்கா கதை நன்றாக இருக்கிறது எனக்குப் பிடித்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இரு வீடுகளிலும் உள்ள வேறுபாடுகள் குணா அனிதா இருவருக்கும் புரிந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போக, அதற்குப் பெரியவர்களும் புரிந்து கொண்டு சம்மதம் சொல்லிவிட அப்புறம் என்ன டும் டும் தானே...!!!! இனி குணாவின் வீட்டில் அனிதாவின் சாமியும் குடிகொண்டுவிடுவார் அவ்வளவுதான்!!! என்ன ரைட்டுதானே!?

    கீதா

    பதிலளிநீக்கு
  14. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு