ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சு டோ கு : சுந்தரி நீயும் குணபதி நானும் 2


சுந்தரி நீயும் குணபதி நானும் 
கீதா ரெங்கன்  


சுந்தரியின் வீட்டில் முதல் நாளே சரியாக இல்லை.

“குட்மார்னிங்க் மாமா, நீங்கல்லாம் ரொம்ப சீக்கிரமா எழுந்துருவீங்க இல்லையா?” என்று சொல்லிக் கொண்டே குணபதி வரவும், விச்சு வாயில் விரல் வைத்து பேசாதே என்று செய்த சமிஞையைக் கவனிக்காத குணபதி புவனாவைத் தேடி “குட்மார்னிங்க் மாமி!” என்று சொல்லிக் கொண்டே கிச்சனுக்குச் சென்றான்,

“கிச்சனுக்குள்ள வரக் கூடாது”

குணபதியின் வீட்டில் சுந்தரிக்குத்தான் ஒட்டவில்லையே தவிர குணபதியின் குடும்பத்தினர் மிகவும் கேஷுவலாக இருந்தார்கள். “ஹாய் சுந்தரி குட்மார்னிங்க், கிச்சனுக்குள்ள வரலாம். ஏன் தயங்கற. சரி என்ன சாப்பிடற?”

“நான் குளிச்சுட்டு வரேன். லேட்டாதான் சாப்பிடுவேன்….. காபி, டீ தவிர ஏதாவது”

“இத உங்க வீடு மாதிரியே நினைச்சுக்கோமா. பழக்கவழக்கங்கள் வித்தியாசமா இருக்கும்தான். ஆனா, என்னவா இருந்தாலும் தைரியமா ஃப்ராங்கா கேளு. இங்க எந்தவித கண்டிஷனும் கிடையாது. கேஷுவலா இரு. ஒகேயா”

சுந்தரியின் வீட்டில்…

.“மாமி ரொம்பக் கறாரோ” என்று விச்சுவின் அருகில் சென்று மெதுவாகக் கேட்டான் குணபதி.

“ஏற்கனவே ரொம்ப கறாரு. இன்னிக்கும் சமையல் மாமி லீவு. ஒரு நிமிஷம் கூடப் பிரியாம சுந்தரி தன் கூடவே இருக்கணும்னு நினைக்கறவளுக்கு இப்ப சுந்தரி உங்க வீட்டுல இருக்கறது வேற கடுப்பு. அதான்…”

“சரி மாமா அப்போ நான் கிளம்பறேன்.” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு புவனாவின் காதில் விழும்படி சத்தமாகச் சொன்னான்.
“ஆ! குணபதி நீ குணத்தின் அதிபதி! இப்படி எல்லாம் சொல்லிட்டு என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு காசிக்குப் போயிடாதே” என்று விச்சுவும் விளையாட…

“மாமா நான் பாத்ரூமுக்குத்தான் போறேன்” என்று குணபதி சிரித்தான்.
“யாரும் இங்க வந்து இருக்கணும்னு கண்டிஷன் இல்லை. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. அசிங்கமா இருக்கு”

குணபதியின் வீட்டில்….மற்றொரு நாள்

“என்னாச்சு இப்படி அசிங்கமா இருக்கு” என்று குளித்துவிட்டு வந்த சுந்தரி கேட்டுக் கொண்டே சமையலறைக்கு வந்தாள்.

“ஓ சுந்தரி எழுந்தாச்சா? குட்மார்னிங்க்! நல்லா தூங்கினியாமா? அட குளிச்சுட்டே வந்துட்டியா. வெரிகுட்! அது வேற ஒன்னுமில்ல. என் கை தவறுதலா சாம்பார் கொட்டிருச்சு.” என்று கணபதி சொல்லிக் கொண்டே க்ளீன் செய்தார்.

“பக்கத்து வீட்டுப் பொண்ணு நீலாவுக்கு நட்ட நடு ராத்திரில பிரசவ வலி. அந்தப் பொண்ணுக்கு அம்மா இல்லை. நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி பழக்கம். உடனே குணவதி அவளோட ஆஸ்பத்திருக்குப் போயிருக்கா. அதான் கணபதி சமையல். பொண் குழந்தை பொறந்திருக்கு. குணாவுக்கு சொல்லணும். அந்தப் பொண்ணுக்கு என்ன எடுத்துட்டுப் போணும்னு பத்திய சமையல் சொல்லிண்டுருக்கேன்.”

பாட்டி அடுத்தடுத்து இங்கும் அங்குமாக யோசனைகள் வழங்கியதும் எல்லாமே சுந்தரிக்கு மிக மிக வியப்பாக, வித்தியாசமாக இருந்தது. அவளுக்கு இதெல்லாம் பழக்கமே இல்லை.

குணபதியின் வீட்டில் சுந்தரிக்கு அவ்வளவாக ஒன்ற முடியவில்லை. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள். வீடு சாதாரணமான வீடு. ஆனால் வீடு சுத்தமாகத்தான் இருந்தது என்றாலும் தன் வீடு போல ஆடம்பரமாக பள பளவென்று இல்லை என்று தோன்றியது.

சுந்தரியின் வீடு பெரிய வீடு. மெயிண்டெய்ன் செய்ய, சமையலுக்கு, வீட்டு வேலைக்கு என்று ஆட்கள் உண்டு.  புவனா ஒரே பெண் என்பதால் சொத்துகள் ஏராளம். தவிர புவனாவும் இன்சுரன்ஸ் கம்பெனியில் ரீஜனல் மேனேஜராக வேலை பார்த்து வாலன்டரி ரிட்டையர்மென்ட் வாங்கியவள். 
          
குணபதியின் வீட்டில் எல்லோரும் அவரவர் வேலையை அவரவர்களே செய்து கொள்ளும் பழக்கம் என்பதால் வீட்டில் வேலைக்கு ஆள் இல்லை. வாஷிங்க் மெஷின் இருந்தாலும் தங்கள் துணிகளைத் தாங்களேதான் தோய்த்துக் கொண்டனர். பெரிய துணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தினர். பாட்டியின் துணிகளை குணவதியும்., தாத்தாவின் துணிகளை கணதியும் தோய்த்து விடுவர். சுந்தரியிடம் வாஷிங்க் மெஷினைப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்னாலும் அவளுக்குப் பழக்கம் இல்லை என்பதால் கொஞ்சம் திணறித்தான் போனாள்.
புவனாவிடமிருந்து அழைப்பு வந்தது
.
சுந்தரி அங்கிருந்த வசதி குறைவுகள், இவர்களது பழக்கவழக்கங்கள் பற்றி குறைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தது கணபதியின் காதில் விழுந்தது. என்றாலும் அவர் அன்று கண்டு கொள்ளவில்லை.

சுந்தரியின் வீட்டில் குணா தன் வேலைகளைத் தானே செய்து கொண்டு பாட்டி தாத்தா மற்றும் புவனாவிற்கும் உதவிட முன்வந்தாலும் மறுத்துவிட்டனர்.  மிக மிக வசதிவாய்ப்புகளில் திளைப்பவர்கள், எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் என்பதைப் புரிந்து கொண்டான். எல்லாமே புவனாவின் மற்றும் அவள் பெற்றோரின் சொத்து, என்பதால் புவனா மற்றும் அவள் பெற்றோரின் குரல்தான் அங்கு ஓங்கி ஒலிப்பதையும் குணா புரிந்து கொண்டான். இத்தனை வசதிகள் இருந்தும் ஏன் எல்லோரும் இத்தனை சீரியஸாக எப்போதும் முகத்தில் ஒரு சிரிப்பு கூட இல்லாமல் டென்ஷனோடு இருக்கிறார்கள், விச்சுவைத் தவிர, இவர்களால் சிரிக்கவே முடியாமல் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று எண்ணி வியந்தான்.

குணபதி சுந்தரியின் வீட்டில் அட்ஜஸ்ட் செய்த அளவு, என்னதான் குணபதியின் பெற்றோரும், தாத்தா பாட்டியும் தங்கள் வீட்டுப் பெண் என்று அன்புடன் இருந்தாலும் சுந்தரியால் குணபதியின் வீட்டில் ஒன்ற இயலவில்லை. அவர்கள் சாப்பிடும் போது எல்லோரும் கலந்து ஜாலியாகப் பேசி சிரித்து பாட்டி சில சமயம் சாதம் பிசைந்து கையில் போட்டது சுந்தரிக்கு என்னவோ போல் இருந்தது. முகமும் சுளித்தாள். அவளை அவர்கள் வற்புறுத்தவுமில்லை. அன்று நடந்த ஸ்வாரஸ்யமானவற்றை சுந்தரியிடமும் பகிர்ந்து கொண்டு அவளிடமும் ஆஃபீஸ் பற்றி ஸ்வாரஸ்யமான விஷயம் என்ன என்று கேட்டது அவளுக்கு வித்தியாசமாகப் பட்டது.

சுந்தரியின் வீட்டில் டைனிங்க் டேபிளில்….. “மாமா, இன்னிக்கு எங்க ஆஃபீஸ்ல என்னாச்சு தெரியுமா” என்று குணா தொடங்கவும், புவனாவிற்குக் கடுப்பு.

“நாங்க வள வளனு பேச மாட்டோம். ஸ்டாப் இட்.”

“ஓ! ஸாரி மாமி. என் கெட்ட பழக்கம், எனக்கு ஆஃபீஸ்லருந்து வீடு வந்ததும் எங்க அப்பா அம்மா பாட்டி தாத்தா எல்லாரையும் உக்கார வைச்சு, ராத்திரி சாதம்னா பாட்டிதான் பிசைஞ்சு என் கையில போட அன்னிக்கு நடந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை எல்லாம் சொல்லிப் பேசி சிரிச்சு பகிர்ந்துக்கற பழக்கம்.”

“நான்சென்ஸ். அன்ஹைஜீனிக்…” என்று முகம் சுளித்தாள்.

“ஸாரி மாமி! வீடுனா கலகலனு இருக்கணும்ன்றது எனக்குச் சின்ன வயசுலருந்தே பழகிப் போச்சு. கையில பிசைஞ்சு போடறதுன்றது பாசம் கலந்த அந்த சாப்பாடு பழையதும் அமிர்தம்தான். அதை அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும்”

சுந்தரியின் வீட்டிற்கு உறவுகள், நட்புகள் என்று யாருமே வராமல் எல்லாமே ரிச்சுவலிஸ்டிக்காக இருக்க, குணபதியின் வீட்டிலோ எப்போதும் யாரேனும் வந்து கொண்டும் போய்க்கொண்டும் கலகலவென்று இருக்கும் சுந்தரியின் வீட்டில் பணம் அரண் என்றால் குணபதியின் வீட்டில் மனிதர்களும், பாசமும் அரணாக இருந்தது.

சுந்தரி நல்ல பெண் ஆனால் அவள் புவனா மற்றும் அவள் பெற்றோரின் வளர்ப்பில் சுயசிந்தனை இல்லாமல் இருக்கிறாள் என்பதை குணாவின் வீட்டினர் புரிந்து கொண்டார்கள். ஒப்பந்தம் முடியும் இறுதி நாளுக்கு முந்தைய நாள்.

“சுந்தரி உங்கூட கொஞ்சம் பேசலாமா? இப்படி வாம்மா.” சுந்தரிக்குப் புரியவில்லை. இப்படி எல்லாம் பழக்கமுமில்லை. சிறிய அமைதிக்குப் பிறகு, “நீ எங்கவீட்டுப் பொண்ணுதாமா. நீ ரொம்ப நல்ல பொண்ணு. உங்கிட்ட நிறைய நல்ல எண்ணங்கள், திறமைகள் எல்லாம் இருக்கு ஆனா அது வெளில தெரியாம இருக்கு. காரணம் அதுக்கான சூழல் உனக்கு அமையலை. பரவாயில்லை. இட்ஸ் நாட் டூ லேட். என்னை உன் அப்பாவா நினைச்சுக்கோ. தப்பா எடுத்துக்க மாட்ட.

எல்லா பெண்களுமே அவங்கவங்க அம்மாகிட்ட எல்லா விஷயமும் பகிர்ந்துப்பாங்கதான். பெண், தான் இருக்கற வீட்டோட குறைகளை மட்டும் ஹைலைட் பண்ணி தன்னோட அம்மாகிட்ட பேசறது நல்லதில்லைமா. அது ஒரு சைட் பார்வை மட்டும்தான் இல்லியா? அந்த அம்மாவின் பார்வை சிந்தனை நல்லதா இருந்தா பெண்ணைக் கட்டுப்படுத்தி குறை பார்க்காம, நல்லத பார்த்து வாழனும்னு அட்வைஸ் பண்ணி பாசிட்டிவா சொல்லுவாங்க. அம்மா நெகட்டிவா அட்வைஸ் கொடுத்தா உறவுல விரிசல்தான் வரும். ஸோ அதைப் பேசி தீர்த்துக்கறது நல்லது இல்லையா? நான் சொல்லறது நார்மல் குடும்பங்கள் பற்றி. அதீதமான கொடுமைகள் நடக்கற குடும்பத்தைப் பத்தி இல்ல. நீ யாரைக் கல்யாணம் பண்ணிட்டாலும் இந்த பாயிண்டை மனசுல வைச்சுக்கோ. நாளைக்கு கடைசி நாள். நீ உங்க வீட்டுல டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறம் நாம பேசுவோம். ஆல் த பெஸ்ட் சுந்தரி குட்டி!”

சுந்தரிக்கு முதலில் என்ன இது? தன் ஸ்பேஸில் நுழைவது போலத் தெரிந்தது. என்றாலும் சிந்திக்கத் தொடங்கினாள். முடியும் நாள் வந்தது. தன் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரம்……..நீலாவுக்கு குணவதி உதவியதே சுந்தரிக்கு வியப்பாக இருந்தது என்றால், அன்று மாலை அதையும் விட வியப்பான சம்பவம் அவள் வீட்டில் நடந்தது.

திடீரென சுந்தரியின் அம்மா தளர்ந்து மயங்கினாள். தன் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த குணா உடனே கால் டாக்ஸி புக் செய்து, அது வருவதற்குள் தன் மருத்துவ நண்பனை அழைத்து விவரம் சொல்லி, புவனாவை தூக்கிக் காரில் வைத்து மருத்துவமனை சென்று அட்மிட் செய்து உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்திடச் செய்தான். குணாவின் வீட்டார் அனைவரும் அங்கு வந்துவிட்டனர். சுந்தரிக்கு இதுவும் புதிதாக இருந்தது. சுந்தரி மருத்துவமனையில் இருந்திட, தேவைகளைக் கவனித்த பிறகு, குணா குடும்பத்தினருடன் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

மறுநாள்……“எப்படி இருக்கீங்க மேடம்? உங்க பிபி அதீதமா ஷூட் அப் ஆகி நல்ல காலம் மிஸ்டர் குணபதி இம்மீடியட்டா உங்களை இங்க அட்மிட் செஞ்சு டைம்லி ட்ரீட்மென்ட்.” என்று சொன்ன மருத்துவர் சுந்தரி மற்றும் அவள் அப்பா, தாத்தா பாட்டி எல்லோரையும் அழைத்தார்.

“ஒரு சின்ன சஜஷன். உங்க வீட்டுச் சூழல் பத்தி குணபதி சொன்னார். வீட்டுல நல்ல சூழல் ஏர்படுத்தினா நல்லது. மனுஷங்க, கலகலப்பு இதெல்லாம் ரொம்ப அவசியம். அப்படி இருந்தா பொஸஸிவ்னெஸ் அவ்வளவா வராது. இந்த மாதிரி டென்ஷன், லோன்லினெஸ் எதுவும் வராது அவங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே. டேக் கேர்” என்று சொல்லிவிட்டு அகன்றதும் சுந்தரியின் மனதில் பல எண்ணங்கள் ஓடியது. தன் வீட்டாரையும் குணாவின் வீட்டாரையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்

எத்தனை வித்தியாசம். புவனாவின் அருகில் சென்று அவளது கையைப் பிடித்துக் கொண்டு ஆதரவாக வருடினாள். ‘அம்மாவின் மனதினுளும் மாற்றம் வந்திருக்குமோ?” என்று சுந்தரிக்குத் தோன்றியது.

குணா சுந்தரியை அழைத்து அவளை மருத்துவமனையில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். புவனாவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு சுந்தரியும் குணாவும் மருத்துவமனையின் கேண்டீனுக்குச் சென்று அமர்ந்தார்கள். சுந்தரிக்கு மாதுளை ஜூஸ் பிடிக்கும் என்பதை அறிந்திருந்த குணா ஜூஸிற்கு ஆர்டர் செய்தான்.

“ஸோ ஹௌ வாஸ் யுவர் ஸ்டே அட் அவர் ஹோம். நான் ஹோம்னுதான் சொல்லுவேன். வீடுனா செங்கல் சிமென்ட் சுவர்கள். ஆனா ஹோம், இல்லம் அப்படின்றது பெரிய சண்டைகள் இல்லாத, அன்பு, கலகலப்பு கலந்த இடம் அப்படினு என் மனசுல பதிஞ்ச ஒன்னு. சரி… சொல்லுங்க…”

“உங்க ஸ்டே எங்க வீட்டுல எப்படி இருந்துச்சு.?”

புன்சிரிப்பொன்றை உதிர்த்தான் குணா. “ஸன்ட்ரீ, நீங்க பதில் சொல்றதை அவாய்ட் பண்ணறதுக்காக என் ஸ்டே பத்திக் கேக்கறீங்கனா உங்க ஸ்டே நெகட்டிவோனு தோணினாலும் நான் அந்த எண்ணத்துக்குப் போல. மை ஸ்டே வாஸ் ஃபென்டாஸ்டிக். விச்சு அங்கிளோட நல்ல ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணினேன். வெரி ஜாலி பெர்சன். இப்ப உங்க பதிலை நான் எதிர்பார்க்கலாமா?”

“ம்…… எனக்கு இப்ப என்ன சொல்லனு தெரியலை. கொஞ்சம் யோசிக்கணும்..”

“பரவால்ல நல்லாவே யோசிங்க. என் பதிலையும் எண்ணங்களையும் சொல்லிடறேன். அப்புறம் உங்க விருப்பம். ஐ வுட் லைக் டு கோ அஹெட். முதல்ல ஒரு பாயிண்டை க்ளியர் செஞ்சுடறேன். பிடிச்சுருக்குனு சொன்னது உங்க வெல்த் பார்த்து இல்லை. எனக்கு முக்கியம் மனுஷங்க. எங்க வீட்டுலயும் பிரச்சனைகள் வரும்தான். ஆனா, யாரும் எதையும் ரொம்பத் தப்பா எடுத்துக்க மாட்டாங்க. அன்பு, சிரிப்புனு கடந்து போய்டுவோம். ஸோ எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு உங்க அம்மா, பாட்டி தாத்தா எல்லாரையும் டென்ஷன் ஃப்ரீயா ஆக்கிடலாம்னு.

உங்களுக்கு எங்க வீட்டுப் பழக்கவழக்கங்கள், சூழல் எல்லாமே வித்தியாசமா இருக்கும், நீங்களும் ஒரே பொண்ணு, உங்க பேரன்ட்ஸ் பாட்டி தாத்தா எல்லாரையும் விட்டு எங்க வீட்டுக்கு வந்து வாழறதுன்றது முதல்ல கஷ்டமா இருக்கும்…..உங்களை ஒரு வாரம் பிரிஞ்சதே உங்கம்மாவுக்கு டென்ஷன், பிபி எகிரியிருக்கு. புரிஞ்சிக்க முடியுது. ஸோ, சப்போஸ் உங்க முடிவு பாஸிட்டிவா இருந்தா, நாம அங்கயும் இங்கயுமா மாறி மாறி இருந்துக்கலாம்.  விசேஷம், விழா எல்லாம் சேர்ந்து கொண்டாடலாம். அங்கியோ அல்லது இங்கியோ அது அப்பப்ப எப்படி சௌகரியமோ, செண்டிமென்ட்ஸோ அதுக்கு ஏத்தாப்புல கொண்டாடலாம். அஃப்கோர்ஸ் உங்கம்மா, அவங்க பேரன்ட்ஸ் விரும்பினால். உங்களுக்கு ஏத்த வசதிகளை கூடியவரை நாங்க செஞ்சு தரோம். எல்லாத்துக்கும் மிஞ்சி அன்பு, ஜாலி இதுக்குக் குறைவே இருக்காது.

எனக்கு ஒரே ஒரு விருப்பம்தான். என்னை கல்யாணம் பண்ணிக்கற பொண்ணு கருத்து வேறுபாடுனு தனிக்குடித்தனம் போனும்னு சொல்லிடக் கூடாதுன்றது மட்டும் தான். எங்க இல்லம் எங்க தாத்தா பாட்டியோட உழைப்புல ரொம்ப வருஷம் முன்னாடி கட்டினது. எங்கப்பாவுக்குக் கூடப் பிறந்த இரட்டையர் ஒரு தங்கை தம்பி இறந்துட்டாங்க. ஸோ அவங்களுக்கு ஒரே பைனாகிட்டதுனால அப்படியே அவங்க கூடவே எங்கம்மா வீட்டு மனுஷங்களும் வந்து ஜாலியா தங்கிட்டுப் போவாங்க.

நீங்க “நம்ம வீடு”, “நம்ம ஏரியா” க்கு வந்து பாருங்க ஒரு பெரிய பட்டாளமே இருக்கு. அதகளம்தான். நீங்களும் எஞ்சாய் செய்வீங்கனு நம்பிக்கை இருக்கு. இப்படிச் சொல்லறதையும், நீங்க பாசிட்டிவா சொன்னீங்கனா அதையும் எங்க கேஜிஜி அங்கிள் கேட்டார்னு வையுங்க, ”டேய் குணபதி! பொளந்து கட்டிட்ட போ! சிக்ஸரா அடிச்சிதள்ளிட்டனு” சொல்லி சந்தோஷப்படுவார்னு தோணுது. ஏன்னா அவர்தானே இப்படியான கன்னாபின்னா சஜஷன் கொடுத்தது!!!!!!!!!!!!

ஓகே நிறையவே பேசிட்டேன்னு நினைக்கிறேன். என் குடும்பத்தினருக்கும் சம்மதம். உங்கம்மா வீட்டுக்கு வந்ததும் அவங்கள ரென்ஷன் பண்ணாம மெதுவா டிஸ்கஸ் செஞ்சு சொல்லுங்க. அவங்க ஹெல்த் முக்கியம். நோ ஹர்ரி.  வாட்சப்புல நான் ஒரு வீடியோ அனுப்பிருக்கேன். முடிஞ்சா நீங்களும் பாருங்க, ஆன்டிக்கும் காட்டுங்க. பாசிட்டிவ் ரிப்ளை வரும்னு நம்பறேன். டேக் கேர். பை.”சுந்தரிக்கு மிக மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது குணா பேசியது எல்லாமே. இத்தனை வருடங்கள் ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்திருந்த சுந்தரிக்கு இப்போது வாழ்க்கையின் மறுபக்கம் லேசாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இரண்டு நாட்கள் கடந்தது. குணாவீட்டினர் எப்போது பேசலாம் என்ற ஒரு டென்ஷன் கலந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இதன் மூலகர்த்தா கேஜிஜி அங்கிளும்தான்.

நான்கு நாட்கள் கடந்த நிலையில் குணாவின் வீட்டு காலிங்க் பெல் அடித்திட. திறந்தால், விச்சு, புவனா, அவள் பெற்றோர், எல்லோரும் வெத்தலை பாக்கு பூ பழங்கள் தட்டுடன் நின்றிருந்தனர். பின்னால் அழகு தேவதையாய் சுந்தரி! 


சுபம்.

15 கருத்துகள்:

 1. >>>> விச்சு, புவனா, அவள் பெற்றோர், எல்லோரும் வெத்தலை பாக்கு பூ பழங்கள் தட்டுடன் நின்றிருந்தனர். பின்னால் அழகு தேவதையாய் சுந்தரி!..<<<<

  மங்கலம் சுப மங்கலம்!...

  பதிலளிநீக்கு
 2. திருமணத்தில் வந்து நின்றதில் மகிழ்ச்சி வாழ்க மணமக்கம்.

  பதிலளிநீக்கு
 3. //நீங்க “நம்ம வீடு”, “நம்ம ஏரியா” க்கு வந்து பாருங்க ஒரு பெரிய பட்டாளமே இருக்கு. அதகளம்தான். நீங்களும் எஞ்சாய் செய்வீங்கனு நம்பிக்கை இருக்கு. இப்படிச் சொல்லறதையும், நீங்க பாசிட்டிவா சொன்னீங்கனா அதையும் எங்க கேஜிஜி அங்கிள் கேட்டார்னு வையுங்க, ”டேய் குணபதி! பொளந்து கட்டிட்ட போ! சிக்ஸரா அடிச்சிதள்ளிட்டனு” சொல்லி சந்தோஷப்படுவார்னு தோணுது. ஏன்னா அவர்தானே இப்படியான கன்னாபின்னா சஜஷன் கொடுத்தது!!!!!//

  சூப்பர்.


  //எல்லா பெண்களுமே அவங்கவங்க அம்மாகிட்ட எல்லா விஷயமும் பகிர்ந்துப்பாங்கதான். பெண், தான் இருக்கற வீட்டோட குறைகளை மட்டும் ஹைலைட் பண்ணி தன்னோட அம்மாகிட்ட பேசறது நல்லதில்லைமா. அது ஒரு சைட் பார்வை மட்டும்தான் இல்லியா? அந்த அம்மாவின் பார்வை சிந்தனை நல்லதா இருந்தா பெண்ணைக் கட்டுப்படுத்தி குறை பார்க்காம, நல்லத பார்த்து வாழனும்னு அட்வைஸ் பண்ணி பாசிட்டிவா சொல்லுவாங்க. அம்மா நெகட்டிவா அட்வைஸ் கொடுத்தா உறவுல விரிசல்தான் வரும். //

  உண்மை, உண்மை.

  கீதா அழகாய் அருமையாக எழுதி விட்டீர்கள்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மிக்க நன்றி கோமதிக்கா நீங்க கோட் செய்து சூப்பர் என்று சொன்னதற்கும் பாராட்டிற்கும்

   கீதா

   நீக்கு
 4. மணமக்கள் மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ்க! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்!! ஆமாம்!! சுந்தரியும் மெதுவாக மனம் மாறி ஒன்றிவிடுவாள்!!

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 5. சுருக்கமாச் சொன்னா, கலக்கிட்டீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மிக்க நன்றி கௌ அண்ணா..!!

   இப்படியான ஒரு சாலஞ்சிங்க் கரு கொடுத்து கதை எழுத வைத்த உங்களுக்கு நாங்கள் நிறைய நன்றி சொல்லணும். நிஜமாவே எங்கள் க்ரியேஷன்ஸில் இன்னும் நிறைய கிரியேஷன்ஸ் வரணும் என்ற அவா.

   மிக்க நன்றி அண்ணா உங்க பாராட்டான கருத்திற்கும் எல்லாவற்றிற்கும்

   கீதா

   நீக்கு
 6. பிரமாதமான எழுத்து. கௌதமன் ஜியையும் குடும்ப நண்பர் ஆக்கினது பாசத்தின் வெளிப்பாடு.
  வெகு யதார்த்தமான கதை.
  சுபமாக முடிந்ததில் .மிக மகிழ்ச்சி.
  வாழ்த்துகள் கீதா மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வல்லிம்மா பாராட்டிற்கு. //கௌதமன் ஜியையும் குடும்ப நண்பர் ஆக்கினது பாசத்தின் வெளிப்பாடு// ஆமாம் ஆமாம்

   மிக்க நன்றி வல்லிமா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 7. இரண்டு வித்தியாஸமான குடும்பத்தினர். மனதில்பட்டதை பட்பட் என்று பேசும் குடும்பத்தினரிடையே குணபதி மாட்டிக்கொண்டு விட்டார் என்று தோன்றுகையில், அவர்களையும் ஸமாளிக்கிரார். ஸுந்தரியைக் கலகலஎன்ற ஸுபாவமுள்ள குடும்பத்தினர் ஸமாளிப்பதும் இயற்கையாக இருக்கிறது. தற்கால நாகரிகச் சூழ்நிலை கருவே தவிர, நடப்பதெல்லாம் இயற்கையாக இருக்கிறது.வீட்டில் நல்ல சூழலுக்கு, மனுஷர்களும்,கலகலப்பும் அவசியம்.டாக்டர் புவனாவுக்காகச் சொல்கிராரே அந்த இடம் மிகவும் பிடித்தது. இப்படி ஆங்காங்கே கருத்துகள் நல்ல விதமாகச் சொல்லப்பட்டது. அவசியமான விஷயங்கள் தூவப்பட்ட அருமையான கதையோட்டம்.மிக்க அழகாக எழுதி முடித்து நிச்சயம் செய்ய வந்துவிட்டனர். அவர்களைக் கவனியுங்கள். கீதா பாராட்டுகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 8. இரண்டு வேறு வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இணைவதை அழகான சம்பவங்களோடு வெகு அருமையாக எழுதியிருகிறீர்கள்! பாராட்டுகள்! பாராட்டுகள்! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 9. நல்லா இருக்கு. ஆனால் ஆரம்பம் படிக்கணுமே! இஃகி, இஃகி, பின்னாடி இருந்து படிச்சுட்டு வரேன். என்றாலும் கௌ அங்கிளும் கதையில் ஒரு காரக்டரா வந்திருக்கார்! நம்ம ஏரியா சரி, நம்ம வீடு? அது தான் என்னனு புரியலை. எதுக்கும் முன்னாடி படிச்சுட்டு வரேன். ஆனால் ஒண்ணு சொல்லியே ஆகணும். அந்தக் குணபதியைப் புரிஞ்சுக்கறதுக்காக கரெக்டா அவர் கிளம்பற நேரம் பார்த்து சுந்தரியோட அம்மாவுக்கு அட்டாக் வரது மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சினிமாத் தனமா இல்லையோ? (அது சரி! கட்டின வீட்டுக்குப் பழுது சொல்ல வந்துட்டியா? நீ என்னமோ எழுதிக் கிழிக்கிறாப்போல!) இஃகி, இஃகி, அடைப்புக்குறிக்குள்ளே என்னோட ம.சா. பேசுது!

  பதிலளிநீக்கு