வெள்ளி, 13 ஜனவரி, 2012

165 ஆவது தியாகராஜ ஆராதனை.

165 ஆவது தியாகராஜ ஆராதனை விழா.

நாள்: January 13 - 2012.

நிகழ்ச்சி: பஞ்சரத்ன கிருதிகள்.

கீழே எம் பி 3 கோப்பாக. கேட்டு இரசியுங்கள்.



டவுன்லோட் லிங்க் : இங்கே சொடுக்குக!

     

சனி, 7 ஜனவரி, 2012

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா ...

                              
இசை அனுபவம் - எழுதியவர் குரோம்பேட்டைக் குறும்பன். 

ஆசிரியர்களே! 
'சவடால் கதைப் போட்டி'யில் எனக்கு டெப்பாசிட் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. 

இதோ ஒரு புதுவகை இசை விமரிசனம். விமரிசனம் கூட அல்ல - இது ஒரு அனுபவம். 

படியுங்க; பிருந்தாவன சாரங்கா பாட்டு - நெட்டிலே எங்காவது கிடைத்தால் எடுத்துப் போடுங்க - அல்லது சுட்டி கொடுங்க. 

முன்னறிவிப்பு: இது ஒரு இனிய கற்பனை. 

********************************************************************
அஸ்தினாபுரம். 
பாண்டவர்களைக் காண வந்தான் கண்ணன். பாண்டவர்கள் வாய் நிறைய வரவேற்றனர். 

பிறகு அர்ஜுனன் கேட்டான், "எங்கே கண்ணா இந்தப் பக்கம்?"

கண்ணன்: "நான் எப்பவுமே உங்க பக்கம்தானே!"

தருமர்: "அது சரி! நாங்களும் எப்பவும் உன் பக்கமே!"

கண்ணன்: " எல்லோருக்கும் அவரவர்கள் சிறு வயதில் வாழ்ந்த, விளையாடிய இடத்தைக் காணவேண்டும் என்று பெரிய வயதில் ஆசை இருக்கும். எனக்கும் இப்பொழுது நான் சிறு வயது சேட்டைகள் செய்த பிருந்தாவனத்தைக் காணவேண்டும் என்று ஆசையாக உள்ளது."

பாண்டவர்கள்: "ஆமாம் - உன் பிருந்தாவனக் கதைகளைக் கேட்கும்பொழுதெல்லாம் எங்களுக்கும் அந்த இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததுண்டு. தேரில்தானே வந்திருக்கின்றாய் கண்ணா? நாம் அனைவரும் அங்கே செல்வோம்."

கண்ணனும் பாண்டவரும் தேரேறி மகிழ்ச்சியாக பிருந்தாவனம் செல்கின்றனர். 
***********************************************************************

பிருந்தாவனம் சென்றடைந்தவுடன், கண்ணன், "ஆஹா ஆஹா - சிறு வயது நினைவுகள் இங்கு ஒவ்வொரு இடத்தைப் பார்க்கையிலும் நினைவுக்கு வந்து மயங்க வைக்கின்றதே!"

அர்ஜுனன்: "கண்ணா உன் சிறு வயது விளையாட்டுகளை மீண்டும் ஒரு முறை எங்களுக்கு கூறு. எந்த இடத்தில் என்னென்ன லீலைகள் புரிந்தாய் என்பதை எங்களுக்குச் சொல்லு."

கண்ணன், பாண்டவர்களுக்கு பிருந்தாவனத்தைச் சுற்றி காட்டியபடி, பல சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றான். 

பிறகு, பாண்டவர்களிடம், "நான் இங்கே ஒளிந்து கொள்கின்றேன்; என்னை நீங்கள் ஐவரும் கண்டு பிடிக்க முடியுமா?" என்று கேட்டான். 
பாண்டவர்களும் சரி என்று இசைந்தனர். 

பாண்டவர்கள் ஐவரும், அங்கு இருந்த ஒரு மேடை மீது அமர்ந்து கண்களை மூடிய வண்ணம், கண்ணன் ஒளிந்துகொள்ள சற்று அவகாசம் அளித்தனர். கண்ணன் சென்று ஒளிந்துகொண்டான். 

*************************************************************************
இதோ மேடை மீது பஞ்ச பாண்டவர்கள்: 


தர்மராக கத்ரி கோபால்நாத்(சாக்ஸஃபோன்) பீமராக பெங்களூர் ராஜசேகர் (முகர்சிங்) நகுலனாக பட்ரி சதீஷ்குமார் (மிருதங்கம்) சகாதேவனாக ராஜேந்திர நகோத் (தபலா) எல்லாவற்றுக்கும் மேலே, வில் வீரனான அர்ஜுனனுக்கு நிகர் - வில்லேந்தும் வீராங்கனை கன்னியாகுமரி (வயலின்). 

தேடல் ஆரம்பமாயிற்று. 
   
தர்மர் தேட ஆரம்பிக்கின்றார். பின்னாலேயே அர்ஜுனன் வில்லுடன் வழி தொடர, பீம, நகுல சகாதேவர்கள் பின் தொடர, கண்ணனைத் தேடுகின்றார்கள். 

தர்மர்: "அதோ அந்தக் காக்கைச் சிறகினில் இருப்பானோ?"

அர்ஜுனன்: "ஆம் அண்ணா. எனக்கும் அதே சந்தேகம்தான்!"

மற்றவர்கள்: "ஊஹூம் - இங்கே இல்லை கண்ணன்."

தர்மர்: " அப்போ அந்த மூங்கில் காட்டில்? புல்லாங்குழல் சத்தம் கேட்கிறதே - அங்கு இருப்பானோ?"

அர்ஜுனன்: "ஆமாம். அதுவும் சாத்தியமே!"

மற்றவர்கள்: "நாம் வந்தவுடன் புல்லாங்குழல் சத்தம் நின்றுவிட்டதே!"

தர்மர்: "அந்தப் பூ?"

இல்லை.

தர்மர்: "அந்த மயிலிறகில்?"

ஊஹூம் - மயிலிறகு மௌனப் புன்னகை புரிகின்றதே!

தர்மர்: "அந்தக் கருமேகக் கூட்டம் அவன்தானோ?"

மற்றவர்கள்: "கருமேகங்கள் கான மழையாகப் பொழிகின்றனவே - இங்கேயும் கண்ணனைக் காணோமே!"

தர்மர்: "அந்த வானவில்லாக இருக்கின்றானோ?"

அர்ஜுனன்: "வானவில் வந்தது போலவே மறைந்துவிட்டதே! கண்ணன் அதில் மறைந்திருக்க முடியாது."

தர்மர்: "இந்த மலை வடிவாகி நிற்கின்றானோ - அந்த மலையப்பன்?"

மற்றவர்கள்: "இல்லை - இந்த மலை எப்பொழுதுமே இங்குதான் இருக்கின்றது. பழைய தோற்றம்தான்."

தர்மர்: "இந்த இனிய தென்றல்தான் அவனோ?"

மற்றவர்கள்: "இருக்காது. இந்தத் தென்றல் நம்மைத் தீண்டிய பிறகு நம்மோடு நிற்காமல் சென்று விட்டதே! நம் கண்ணனாக இருந்தால், நம்மை விட்டு நீங்க மாட்டானே!"

தர்மர்: "அப்போ கண்ணன் எங்கே? கண்ணா நீ எங்கே இருக்கின்றாய்?"

எல்லோரும் சேர்ந்து: : "கண்ணா - எங்கே இருக்கின்றாய் நீ?"

புன்னகை தவழும் முகத்துடன், அவர்கள் எதிரில் பிரத்யட்சமாகின்றான் கண்ணன்.

பாண்டவர்கள்: "கண்ணா எங்கே மறைந்திருந்தாய் நீ? எங்களால் உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையே!"

கண்ணன் கூறினான்: "நான் உங்களுடனேயே இருந்தேன். நீங்கள் ஐவரும் இசைத்த பிருந்தாவன சாரங்கா ராகமாக - அந்த ராகத்தின் எழில் வடிவமாக, அந்த ஸ்வரக் கோர்வைகளை சுவாசித்தவண்ணம், தாளக் கட்டுகளாக இதயம் துடிக்க, ஆரோகண அவரோகண அலைகளின் ஆர்ப்பரிப்புகளை இரசித்தவண்ணம். உங்கள் தேடல்களுக்குள்ளேயே நான் மறைந்து நின்றதால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை."

                

வெள்ளி, 6 ஜனவரி, 2012

வாக்காளப் பெருமக்களுக்கு .... கீதா சாம்பசிவம் வேண்டுகோள்!


               
//கீதா சாம்பசிவம் மேடம் - கான்வாசிங் உண்டு. நீங்க உங்கள் தரப்பு வாதங்களை, உங்களுக்கு வோட்டுப் போட்டால் வாக்காளப் பெருமக்களுக்கு என்ன இலவசம் கொடுப்பீர்கள் என்று எழுதி engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஜனவரி பதினான்காம் தேதி வரை வாக்குப் பதிவு இருக்கின்றது. ஒரு கை பார்த்துவிடலாம்!//


//ஒரு ஓட்டுக்கு ஒரு ஆடு, ஒரு ரெப்ரெஜிரேடர், ஏசி கார் இலவசம். இன்னும் நிறைய இலவசத் திட்டங்கள் வருகின்றன. சைனாவில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாகிறது. அதற்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டாம். அப்பாதுரை. //

ஹாஹா, மேலே இருப்பது எங்கள் ப்ளாக் எனக்குக் கான்வாசிங்குக்குக் கொடுத்த அனுமதி.  என்னடா தானைத் தலைவியா இருந்துட்டு அனுமதி எல்லாம் கேட்கறேன்னு பார்க்கறீங்களா?  தேர்தல்னு வந்தால் எலக்‌ஷன் கமிஷனின் உத்தரவுகளை மதிக்கணுமே!  அதான்!  எலக்‌ஷன் கோட் அறிவிச்சுட்டாங்க.  அதற்கு உட்பட்டு நானும் சில, பல பதிவுகளில் போய்க் கான்வாசிங் செய்திருக்கேன்.  மிச்சத்துக்குத் தேடிக் கண்டு பிடிச்சுட்டுப் போகணும். ஹிஹி, ஆனால் கான்வாசிங் செய்யாமலேயே கீதா சந்தானத்திற்கு மதிப்பெண்கள், சே,சே, வாக்குகள் கூடுதலாய் இருக்கிறதைப் பார்த்து கண், காது, மூக்கு, வாய்னு எல்லாத்திலேயும் புகை வந்துட்டு இருக்கு.  (இங்கே மெம்பிஸில் உறைநிலைக்குப் போயிடுது ராத்திரி எல்லாம், வாயைத் திறந்தால் புகை வராமல் என்ன பண்ணும்?) சரி, சரி, இலவசம் அறிவிக்கச் சொல்லித் தேர்தல் கமிஷனே உத்தரவு கொடுத்து அதையும் எழுத்து வடிவத்தில் (ஒரு ஜாக்கிரதைக்குத் தான்) வாங்கி வச்சுட்டிருக்கிறதாலே நான் எனக்கு ஓட்டுப் போடறவங்களுக்கு என்னவெல்லாம் கொடுப்பேன் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாருங்க அது, உங்களுக்கு வாங்கித்தான் பழக்கம்னு முணுமுணுக்கிறது?  வாங்கினதை பத்திரமா வச்சுப்போம் இல்ல? அதைப் பாருங்க! வழக்கமா நான் முப்பெரும் விழா நடத்தறச்சே தொண்டர்கள் தான் எடைக்கு எடை தங்கம், வெள்ளி, வைரம்னு கொடுப்பாங்க. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணறது? நேரம், ஏழரைச் சனி இப்போ எனக்கு. கையை விட்டுச் செலவு பண்ண வேண்டி இருக்கு .  இதோ பட்டியல் தயார்.


லேட்டஸ்ட் இன்டெல் கோர் லாப்டாப்


காரிலே வைச்சுட்டுப் போற சகலவசதிகளோடு கூடிய பிசி.



அன்ட்ராய்ட் போன்
  
 ஆப்பிள் ஃபோன்

  

ஐ ஃபோன் 5ஜி
  
  ஐ பாட்

  

நோட் புக்

எல்லாத்தையும் பார்த்துக்குங்க.   பார்த்துட்டு எங்கள் ப்ளாக் சைடு பாரில் உள்ள வாக்குச் சாவடியில், உங்கள் ஓட்டை எனக்கே போடுங்க!  எனக்கே எனக்கு. 
      
கீதா சாம்பசிவம்.
              

வியாழன், 22 டிசம்பர், 2011

கடதரங்கம்!

கடந்த மூன்று வருடங்களாக, சென்னை இசை விழாவில், சுகன்யா குழுவினர் நடத்தும் ஸ்திரீ தாள் தரங்கிணி நிகழ்ச்சியின் மிகச் சிறிய சாம்பிள். உங்கள் பார்வைக்கு. 

    

Sthree Thal Tharang (Laya Raga Sangamam – Ensemble) 
     

திங்கள், 5 டிசம்பர், 2011

சென்னை இசைவிழா கச்சேரிகள் 2011-12


எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு: 

சென்னை இசைவிழா 2011-12 கச்சேரிகள், ஒவ்வொரு தேதியிலும், எந்தெந்த நேரத்தில், என்னென்ன கச்சேரிகள், எங்கெங்கு நடக்கின்றன; அவைகள் காசுக் கச்சேரியா அல்லது ஓசிக் கச்சேரியா? கச்சேரிகள் நடக்கும் சபா விலாசம் என்ன போன்ற விவரங்களை, ஒரு பி டி எஃப் கோப்பாக வெளியிட்டுள்ளோம். 

அதைக் காண, தரவிறக்க,  >>>>இங்கே<<<<     சொடுக்கவும். 

நம் வாசகர்களுக்கு, மேலும் ஒரு வேண்டுகோள். 

இந்த சீசனில், நீங்கள் ஏதாவது கச்சேரிக்குச் சென்று வந்தால், உங்கள் கச்சேரி விமரிசனத்தை, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ, எழுதி, engalblog@gmail.com   மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 

கச்சேரி விமரிசனம் எழுதுபவர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி எழுதலாம்.

கச்சேரி நடந்த தேதி: 

கச்சேரி நடந்த இடம்.

யார் பாட்டு?

பக்க வாத்தியங்கள் வாசித்தவர்கள் யார்?  

நினைவிருக்கின்ற பாடல்கள் / ராகம்.

எந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்தது.

கச்சேரியின் சிறப்பம்சம் என்று எதையாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

பாடகரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஏதாவது சொல்ல விரும்பினால், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

இந்த விவரங்கள் + உங்கள் எழுத்துத் திறமை ஆகியவற்றுடன், எழுதி அனுப்புங்கள். இயன்ற வரையில், வளரும் இளம் கலைஞர்களை, உற்சாகப் படுத்தும் வகையில் எழுதப் படுகின்ற விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பாடகர், உங்கள் சொந்த பந்தமாக அல்லது நண்பராக இருந்தாலும் ஆட்சேபணையில்லை! 
                         

சனி, 3 டிசம்பர், 2011

தவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)


(எழுதியவர் மீனாக்ஷி. )

."..காப்பாற்ற வேண்டும்.  தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்!"  என்று அவள் சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கி, குரல் தழுதழுத்தது.  

அவள் சொன்னதை கேட்டு புங்கவர்மன் மனம் இறங்கினாலும் தன்னுடைய நிலைமையை நினைத்துப் பார்த்தான்.  பின் அவளிடம் "இளவரசி.. நான் மீளமுடியாத பணப் பிரச்சனையில் இருக்கிறேன்.  இந்த நிலைமையை எப்படி சீர்செய்வது என்பதறியாமல் நானே பெருங்குழப்பத்தில் இருக்கிறேன்.  அதனால்தான் நாட்டில் இருக்க இயலாமல் அடிக்கடி வேட்டையாட காட்டுக்கு வந்து விடுகிறேன்.  இந்த நிலையில் நான் எப்படி உங்களுக்கு..." என்றான். 

அவன் முடிக்கும் முன்னமே அவள், "..உங்கள் ஒருவரால்தான் அவரை காப்பாற்ற முடியும்... நீங்கள் என் கணவரை மீட்டு வந்து என்னிடம் ஒப்படையுங்கள்.   நான் உங்களுக்கு வேண்டிய பொன்னும், பொருளும் அளிக்கிறேன்.  நீங்கள் மறுக்காமல் இந்த உதவியை எனக்கு செய்தே ஆகவேண்டும், ஏனென்றால் உங்கள் ஒருவரால்தான் அவரை, அவரை.." என்று சொல்லியபடியே மயங்கி சரிந்தாள்.

அவளுக்கு என்ன ஆயிற்று என்று அவள் அருகே செல்ல ஓரடி எடுத்து வைத்தான் புங்கவர்மன். 
      
எதிர்பாரால் அடித்த பலத்த காற்றினால் மேகங்கள் விலகி நிலவின் ஒளி மயங்கி விழுந்த அவள் மேல் பட, அவள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தவளை ஆனாள்.  மயக்கம் இன்னும் தெளியாத நிலையில் தவளை அப்படியே அசையாமல் படுத்திருந்தது.
    
பொன்னும், பொருளும் வேண்டிய அளவிற்கு கிடைக்க போகிறது என்பதினாலேயே புங்கவர்மன் உடனேயே செயலில் இறங்கினான்.  புறப்படும்முன் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளியை அழைத்து நடந்த அனைத்தையும் சொல்லி, தவளை உருவில் இருக்கும் அந்த இளவரசியை பாதுகாக்கும்படி ஆணையிட்டான்.   எப்படியாவது ஏழு கடல், ஏழு மலையை கடந்து இந்த சாதனையை செய்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் தங்கள் குல தெய்வமான புங்கனாதரை வேண்டிக் கொண்டு மேற்கு திசையை நோக்கி புறப்பட்டான்.
   
பாதையில் கவனம் வைத்து பயணத்தை செலுத்தி கொண்டிருந்தவனின் பாதையில் ஒரு மிகப் பெரிய மலைபாம்பு குறுக்கிட்டது.   புங்கவர்மன் சிறிதும் அஞ்சாமல் அதனுடன் போராடி, வென்று தன் பயணத்தை தொடர்ந்தான்.  இரவு நேரத்தில் தனிமையில் காட்டில் பயணிக்கும்போது ஓய்வெடுக்க வேண்டாம் என்ற தீர்மானத்துடன் பயணத்தை தொடர்ந்தவன், விடிந்ததும் சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் புறப்படலானான்.  பகல் நேரம் முழுவதும் வழியில் ஏற்பட்ட இடர்களை களைந்து,  தன் பயணத்தை தொடர்ந்தான்.  அந்தி நேரமும் வந்தது, அவன் பயணத்தின் முதல் கட்டமாக பரந்து விரிந்து கடலும் தென்பட்டது.  சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கினான்.  இருள் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.  முற்றிலும் இருள் பரவுவதற்கு முன், எப்படியாவது இந்த கடலை கடந்து விட வேண்டும் என்ற உறுதியுடன் கடலை கடக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டான் புங்கவர்மன்.
  
"என்ன இது? என்ன பண்ணிண்டு இருக்க?" என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

"இருட்டுறதுக்குள்ள கடலைக் கடந்தாகணும்" என்றான்.

"என்னடா உளறிட்டிருக்கே? கரண்ட் போறதுக்குள்ள ஹோம் வொர்க் முடிக்காம, இந்த புது வீடியோ கேமை  விளையாட ஆரம்பிச்சுட்டயா!  ஹோம் வொர்க்கை முதல்ல  முடிச்சுட்டு அப்பறமா விளையாடுனு உனக்கு எத்தனை தடவ சொல்றது?".  அம்மா அவனை கடிந்து கொண்டாள்.
   
'அம்மாக்கு எங்கேந்து புரிய போறது, ஹோம் வொர்காவது எமர்ஜென்சி லாம்ப் வெச்சுண்டு பண்ணிடலாம், வீடியோ கேம் ஆட முடியுமா?  யுபிஎஸ் ஒண்ணு வாங்குப்பான்னு ஒரு தடவ அப்பாகிட்ட கேட்டதுக்கு  எனக்கெல்லாம் அந்த காலத்துல....னு தன் பழைய ராமாயணத்தை பாட ஆரம்பிச்சவர்தான்.  நிறுத்தறதுக்கு ஒரு வாரம் ஆச்சு.  

இப்போ இந்த பாழாப்போன லாப் டாப்ல அப்பர் ஏரோ கீ சரியாவே வேலை செய்யல.  இதுல நான் எப்படி இந்த கடலை தாண்டறது.  அப்பாகிட்ட ஒரு புது லாப்டாப் வாங்கி தரயான்னு தப்பி தவறி கூட கேக்க முடியாது.  யுபிஎஸ் கேட்டதுக்கே ஒரு வாரம் ராமாயணம் பாடினவர், லாப்டாப் கேட்டா, யம்மா!   

இவங்களுக்கெல்லாம் என் நிலைமையை எப்படி புரிய வைக்கறது?  வகுப்புல பாதி பேர் இந்த கேம் முழுக்க முடிச்சாச்சு.  அவங்கள் எல்லாரையும் விட வேகமா நான் இதை முடிச்சு காமிக்கறேன்னு பெட் வேற கட்டி இருக்கேன்.  என் லாப் டாப் இருக்கற அழகுக்கு இந்த பெட் எல்லாம் நான் போட்டிருக்கணுமா?' என்று தன்னை தானே நொந்தபடி மீண்டும் மீண்டும் ஏரோ கீயை விரல் தேஞ்சு போற அளவுக்கு அழுத்தினான். 
  
பக்கத்துல இருந்து இவன் படற பாட்டை எல்லாம் பாத்து இவன் தம்பி சிரிச்சுண்டு இருந்தான்.  வர்ற ஆத்திரத்துக்கு.. 'அவ்வ்வன்ன்னை ஒண்ணும் பண்ண முடியாது.   ஏன்னா, அவன் ஏற்கெனவே இந்த கேமை இவனுக்கு முன்னாடி முடிச்சாச்சு' என்று நொந்தவனுக்கு தம்பியோட இளிப்பு வெறுப்பா இருந்துது.  
  
'தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே தேவலாம்னு எப்பவும் அம்மா சொல்லுவா.  இப்ப இந்த குட்டி பிசாசோட தயவு தேவை' நெனச்சு,  "ஏய், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா"னு கெஞ்சலா கேட்டான்.
  
"நீ நேரா லெவல் அஞ்சுக்கு போ.  அங்க அந்த இளவரசியோட கணவன் இருப்பான்.  அவன் மேல கிளிக் பண்ணினா அவனுக்கு மயக்கம் தெளிஞ்சுடும்.  அதுக்கப்பறம் லெவல் ஆறு விண்டோ தானே ஓபன் ஆயிடும்.  அது ரொம்ப ரொம்ப ஈசி.  லெவெல் ஆரோட கேம் ஓவர்" என்றான் தெரிந்த பிசாசு.  

"டேய், ரொம்ப தேங்க்ஸ்டா!  கரண்ட் போறதுக்கு முன்னாடி இந்த கேமை முடிக்கறேன்".  அஞ்சாவது லெவலுக்குத் தாவினான். 

விண்டோ ஓபன் ஆகாமல்  திரும்ப டென்ஷன் ஆகி தம்பியிடம், ""என்னடா இதுக்கு கோட் வோர்ட் இருக்கா? க்ளிக் செஞ்சா ஒண்ணும் ஆகலியே? என்ன கோட் வோர்ட்? சொல்லித்தொலை" என்றான். 
  
"அதாண்டா.. அந்த இளவரசி மயக்கமாறதுக்கு முன்னாடி சொன்ன கடைசி வார்த்தை, அதான் கோட்" என்று தம்பி சொன்ன ஸ்பெல்லிங்கை வாய் விட்டு அழுத்தமாக சொல்லிக் கொண்டே டைப் செய்ய ஆரம்பித்தான்.....

அ வ ரை.     

செவ்வாய், 29 நவம்பர், 2011

மழையுடன் நாங்கள்!

 Dear EB,

Not a clean picture. But thats  how it is  infront of our house.

No one listens,  if we complain.

revathinarasimhan.



 டியர்   எங்கள் ப்ளாக்,
எங்கள் வீட்டு முன்னால் தொங்கும் தொலைபேசிக் கம்பிகள், கேபிள் கம்பிகள், மேலும் ஒரு மின்சாரக் கேபிள்.

மூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது.
யார்கிட்டச் சொல்லியும் பிரயோசனமில்லை.
நடுவில் யாராவது வந்து உயர்த்தூக்கிக் கட்டுவார்கள். அடுத்த நாளே விழுந்துவிடும்.
எங்கள் கார்  சின்ன அளவு அதனால் வெளியே செல்வதில் பிரச்சினை இல்லை.
ரேவதி நரசிம்ஹன்....மழையுடன்  நாம்.