செவ்வாய், 20 நவம்பர், 2018

பாசுமதி - ரேவதி நரசிம்ஹன்



முன்குறிப்பு :


நம்ம ஏரியாவுக்கான கதைக் கரு கொடுப்பதில் கவுதமன்ஜியை மிஞ்சி யாரும் கிடையாது.  சுவையான பாத்திரங்களை, அவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே தலைப்பை உருவாக்கி விட்டார். 

வாழ்த்துக்கள்.

நாமும் அதை ஒட்டியே எழுதலாம் என்று ஆரம்பிக்கிறேன்.

லஸ் விநாயகரே துணை.

==================================================================================================================


பாசுமதி 
ரேவதி நரசிம்ஹன் 


 பாசு என்கிற பாஸ்கர் தன் தந்தையிடம் பாலபாடம் கற்று, மதுரை மாநகரில் ஆரம்பத்திலிருந்து உழைத்து அந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்  சி இ ஓ ஆனான். அப்பா அவ்வப்போது வந்து போவதோடு தன் ஓய்வை ஏற்றுக்கொண்டார்.  30 வயதில் இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வது சிரமமாகத்தான் இருந்தது.   இரண்டு வருடங்களில் தேறிவிட்டான். அந்தப் பதவிக்கான மிடுக்கும், அதிகாரமும் சேர்ந்தன.

தனக்கென்று உண்டான தனிக்குழுவாக  விளம்பர அதிகாரி  மதிவாணன். 

////என்ன தூக்குத்தூக்கி படத்தில் வர பெயர் மாதிரி இருக்கேன்னு நினைத்துக் கொண்டேன்.///////////

மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக  சுமதி. இனிமையான பெண். 

நல்ல பல்கலைக் கழகத்தில் இஞ்சினீரிங்க் முடித்து மேனாடு சென்று  நிர்வாகமும் கற்று வந்தவள்.

இவர்கள் கூட அவர்களுடைய உதவியாளர்களும் உண்டு.

பாசுவின் கூடப் படித்த தினேஷும் மாதம் ஒரு முறை வந்து போவான். 

இருவரும் பெரியப்பா, சித்தப்பா பசங்களாக இருந்ததால் உருவ ஒற்றுமை நிறைய இருக்கும். தினேஷ் ,பாசுவைவிட ஒரு பிடி  உயரம் கூட.  தீர்க்கமான நாசியும், பெரிய கண்களுமாக அழகனாகவே இருப்பான்.

 மார்ச் 15 ஆம் தேதி நிறுவனம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகிறது.

விமரிசையாகக் கொண்டாட பாசுவின் தந்தை முடிவு செய்தார்.

ஆரம்பத்திலிருந்து பணிமணையிலும் ,இப்பொழுது சர்வீஸ் செண்டரிலும் வேலை செய்பவர்களுக்கு நல்ல கைக்கடியாரமும் ,ஒரு வாரம் விடுமுறையில் செல்லவும் போனஸ் தொகையாக 2000 ரூபாயும் கொடுப்பதாக 300 தொழிலாளர்களைத் தேர்ந்து எடுத்திருந்தார்.

மேல்தட்டு எக்ஸ்கியூட்டிவ்களுக்கு  தாராளமாக சன்மானம். 

ஒரு கோடை வாசஸ்தலத்தில் இரண்டு வாரங்கள்  தங்குவதற்கும், 
போகவர ஒரு பெரிய  லேட்டஸ்ட்  சொகுசு பேருந்தும்   கொடுக்கப்பட்டது.  கம்பெனியின் கஸ்டமரான தினேஷுக்கும் இதே பரிசு.

பாசு இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்த விரும்பினான்.

காரணம் அவன் சுமதியின் வடிவழகில் லயித்து விட்டதுதான்.  அவளும் மதிவாணனும் தொழில் முறையில் சந்தித்துப் பேசினால் கூட அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கம்பெனி மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் தாரிணியும் சுமதியும் நல்ல தோழிகள்.

மதிவாணன்  சுமதியிடம் அன்பும் மரியாதையும் வைத்திருந்தான்.

தனக்குச் சரியான துணையாக அவள் இருப்பாள் என்று தீர்மானித்திருந்தான். அடுத்து என்ன என்று தொடர்ந்து பார்ப்போம்.



பகுதி 2 பாசுமதி.

++++++++++++++++++++++++++

முதல் வேலையாக தினேஷை  அழைத்தான்.

"என்னடா, என் குழுவோடு தேக்கடி, மூணாறு வருகிறாயா?"

"கொஞ்சம் உன் வேலையைத் தள்ளிப் போடு. எனக்கு உன்னால் ஒரு வேலை நடக்கணும் என்று பீடிகைபோடுபவனிடம்,  என்னடா, பெண்கள் சமாசாரமா. வசமா எங்கயாவது பிடிபட்டு விட்டாயா? வலையிலிருந்து மீட்கணுமா?" என்று சிரித்தான் தினேஷ்.

"டேய், வலை விரிக்க உன்னை அழைக்கிறேன், என்னைக் குத்திக் காண்பிக்கிறாயே.."  என்று வருத்தப் பட்ட பாசுவை அக்கறையோடு பார்த்தான் தினேஷ்.

"நீதான் பறவைகள் பலவிதம்னு  பல வண்ணம் பார்த்தவனாச்சே,  இப்போ புதிதா சாலஞ்ச் வந்திருக்கா உனக்கு?"  என்றவனிடம் விஷயத்தைச் சொன்னான்.  மதிவாணன் சுமதி நட்பு, தான் எப்படியும் சுமதியைக் காதலித்து மணக்க வேண்டிய உணர்வு...  என்று விவரித்தவனைப் புதிராகப் பார்த்தான் தினேஷ்.

"உன்னைத் திருமணம் செய்ய யாரும் மறுக்க மாட்டார்கள். வாட்ஸ் த ப்ராப்ளம்?"  என்று கேட்டவனிடம், தன் நடவடிக்கைகள், பெண்தோழிகள் அனைத்தையும் அறிந்தவளாக சுமதி இருப்பதே பிரச்சினை.

தன்னை நல்லவனாகக் காட்ட ,தினேஷின் உதவி தேவை என்றதும் திகைத்துப் போனான் தினேஷ்.

இதைவிட அதிசயம் மறு நாள் அவனுக்கு கம்பெனியில் காத்திருந்தது.

அவனுடைய அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு  மதி வந்திருந்தான்.   "என்ன விஷயம் மதி. பாஸ் ரொம்பக் கடிக்கிறானா?  நான் வேணா பேசிப்பார்க்கிறேன்" என்று புன்னகையோடு கேட்டான் தினேஷ்.

"இல்லப்பா, நான் காதலிக்கும் பெண்ணை அவரும் காதலிக்கிறார்.  நீ தான் உதவி செய்யணும்." என்றான்.

"ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டேனே அவனுக்கு" என்றதும்
அதிர்ச்சி காட்டினான்  மதிவாணன்.

"என்ன கேட்டிருக்கிறார்?" என்றதும் "அதை சொல்ல முடியாது.  உனக்கு என்னவேணும்" என்றதும்..

"நீங்கள் அவரைப் போலவே உருவத்தில் ஒத்திருக்கிறீர்கள், அசப்பில் யார் வேணுமானாலும் ஏமாறுவார்கள்.  இப்பொழுது போகப்போகும் ரிசார்ட்டில் கொஞ்சம் அப்படி இப்படி சுமதியிடம் நடந்து கொண்டால் அவள் பாசுவை வெறுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.  எனக்குச் சாதகமாக அமையும்"  என்றான்.   

கலகலவென்று சிரித்துவிட்டான் தினேஷ்.

"அப்படியே செய்கிறேன் நீ கவலைப் படாதே போய் வா"  என்று அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.  ஒரு வெள்ளிக்கிழமை பஸ் முழுவதும் ஏறிக்கொண்ட  அலுவலக நண்பர்களுடன்  பாட்டும் நடனமுமாக உற்சாகமாகக் கிளம்பினார்கள்.

சுமதி,தாரிணி ,இன்னும் அவளுடன் வேலை செய்யும் உதவி மருத்துவர்கள், சுமதியின் செகரட்டரி சரண்யா என்று வண்ணமலர்க்கூட்டமாக மங்கையர்.

பாசுவும் ,மதியும் அடிக்கடி அவர்களிடம் வந்து நலம் விசாரித்துப் போனார்கள்.

சுமதிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. 'இதென்ன புது அக்கறை' என்றபடி திரும்பினவளின் கண்களில் தினேஷ் தென்பட்டான்.

சட்டென்று தன் முகம் மலர்ந்ததை அவளால் மறைக்க முடியவில்லை.

"ஹேய் அது யார் ,அச்சு அசல் பாசு மாதிரியே இருக்கிறாரே?" என்று கேட்ட தாரணியிடம் "அவர் இவருக்கு கசின்" என்றாள் சுமதி.

"ஓ. அதென்ன திரும்பித் திரும்பி உன்னைப் பார்க்கிறார்?  எனிதிங்க் கோயிங்க் ஆன் பிட்வீன் யூ டூ"  என்று கேலி செய்தாள்.

"இல்லைப்பா. நீ வேற 😔😔😔😔😔.  அவர்கள் லெவலே வேற.  நான் வெறும் பணி செய்பவள். பாசு அங்கு உட்கார்ந்திருந்தால்  மூணாறில் செய்திருக்கும் ஏற்பாடுகளைச் சொல்லலாம் என்று பார்த்தேன்.  தினேஷ் இருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சர்ப்ப்ரைஸ் அவ்வளவுதான்"  என்றவளைப் பார்த்து "அந்த பேப்பர்களை என்னிடம் கொடு, நான் நம்ம பாஸ் உடன் அரட்டை அடிக்கிறேன். நீ உன் புத்தகத்தை எடுத்துக் கொள் காதில் இளையராஜாவை மாட்டிக் கொள்" என்றபடி எழுந்த தாரிணியைத் திகைப்புடன்  பார்த்தாள்  சுமதி.

பேப்பர்களை எடுத்துக் கொண்டு பாசுவை நோக்கி விரையும் தாரிணியை, குறும்பாகப் பார்த்த தினேஷ், தன் இடத்திலிருந்து எழுந்த சுமதியின் பக்கத்தில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான்.

திடுக்கிட்டு நிமிர்ந்த சுமதியின் முகத்தைப் பார்த்தவனுக்கு அவளின் சாந்தமான அழகு,மனதைத் தைத்தது.

ஒரு நிமிடம் தன் வாக்குகளை மறந்தான்.

"இங்க உட்காரலாமா. உங்களுக்கு மறுப்பொன்றும் இல்லை என்றால் என் பக்கத்தில் இருக்கும் அருணின் குறட்டையிலிருந்து தப்ப ஆசை " என்று இனிமையாகப் பேசினான்.

ஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய சுமதி பதில் சொல்லத் திணறினாள். 

சமாளித்துக் கொண்டு, "இல்லை எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை.  தாரிணி..."  என்று பின்னோக்கிப் பார்த்தாள்.

"ஓ...அவளுடைய அஜெண்டாவே பாசுவை நெருங்குவதுதான்.  
உங்களுக்குத் தெரியாதா. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே..."

"நான்...  நான்.."  என்று தயங்கிய சுமதியைப் பார்த்து புன்னகைத்தபடி,  "நீங்கள் உங்கள் பாடலைக் கேளுங்கள்.  நான் என் ஓய்வை எஞ்சாய் செய்கிறேன்" என்று இருக்கையை நீட்டி, பரிபூரண அமைதி முகத்தில் பிரதிபலிக்கக் கண்களை மூடிக் கொண்டான்.

கண்களை மூடிக் கொண்டாலும் அவன் நினைவுகள் அவளைச் சுற்றியே வந்தன.  

அப்பழுக்கில்லாத அழகு. பாசு இவளை விரும்புவதில் ஆச்சர்யமே இல்லை.  கொஞ்சம் தன் வாழ்க்கை முறைகளைச் சீராக்கிக் கொண்டால் இவளைக் கவருவதில் அவனுக்குச் சிரமம் இருக்காது 
என்று நினைத்தபடி உறங்க முற்பட்டான். கனவிலும் சுமதியே 
வர, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

அவன் தோளில் சுமதியின் முகம்.

மூச்சே நின்றது போல உணர்ந்தான். பஸ்ஸின் வெளியே மழை.

பாட்டு கேட்டுக் கொண்டே அவள் உறங்கி இருக்க வேண்டும்.

பஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது.

அதில் எழுந்த சுமதி அருகில் தினேஷின் முகத்தைப் பார்த்துத் திகைத்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.

"மன்னிக்கணும். என்னை அறியாமல்..."  என்றவளைக் கனிவுடன் பார்த்தான். 

"இட்ஸ் ஓகே.  நாம கீழ இறங்கணும்"

"பலத்த மழை.  அதனால் தேக்கடி விருந்தினர் மாளிகையில் தங்கப் போகிறோம்" என்றபடி  எழுந்த சென்றவனைப் பார்த்த வண்ணம் இருந்தவள், பாசு அருகில் வருவது கண்டு  மழையைப் பார்ப்பது போலக் கண்களைத் திருப்பிக் கொண்டாள் .  பின்னாலயே வந்த  தாரிணி "நல்லாத் தூங்கிட்டியே சுமதி. இயற்கைக் காட்சிகள் யானைகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டே"  என்று கேலி செய்தாள்.



- தொடரும் -

18 கருத்துகள்:

  1. நல்லாப் போகுது கதை! எல்லோருமே சுமதிக்கு வலை விரித்தால் அவள் யாரைத் தேர்ந்தெடுப்பாளோ? சஸ்பென்ஸா நிறுத்திட்டீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நன்றி கீதாமா. எல்லாம் வழக்கப்படி சுபம் தான். வேறென்ன.

      நீக்கு
  2. அதானே...

    கனவிலயும் சுமதியின் முகம்!...

    சுமதி -
    அவள் என்ன செய்யப் போகின்றாளோ!...

    அடுத்த பகுதிக்கு இன்னும் எத்தனை நாளோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. அன்பு துரை செல்வராஜு, கருத்துக்கு நன்றி மா. சீக்கிரமே
      வரும்னு நினைக்கிறேன். என் வலைப்பதிவில் நேராக டைப் செய்வதில் சில பிழைகள் வருகின்றன. அதனால் வேர்ட் பாடில் எழுதி இரண்டு நாட்கள் முன்புதான் அனுப்பினேன்.
      இவ்வளவு சீக்கிரம் பிரசுரமாகும் என்று நினைக்கவில்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில்
      எனக்கு சிரமம் அதிகம்.முடியாத காரியம்.
      பேரனே இரண்டு லைன் கதை சொல்லு பாட்டி என்கிறான்.

      நீக்கு
  3. நல்ல சுவாரஸ்யமாக செல்லும்போது தொடரும்.... காத்திருக்கிறேன் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாம்பாகம் நீளம் அதிகம். தேவகோட்டை ஜி.
      பிறகு வரும் என்று நம்புகிறேன். உங்களுக்கு கதை பிடித்தது எனக்கு சந்தோஷம் . நன்றி மா.

      நீக்கு
  4. கதை நல்லா போகுது. கொடுக்கப்பட்ட தீமிலிருந்து சிறிய விலகல்கள் இருந்த போதிலும், சுவையான நடை , உரையாடல்கள். ரசிக்கிறேன். நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கௌதமன் ஜி. சற்றே விலகிவிட்டேன். இது பெண்மனத்தை ஒட்டி எழுதப்பட்ட கதை.
      சுயம்வரம் போல. வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை மாதிரி.
      உங்களைப் புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன்.
      எண்ணங்கள் எப்பொழுதுமே மாறும் தானே.

      நீக்கு
  5. கதை முக்கோண காதலா?(பாசு, மதிவாணன், தினேஷ்)
    யார் வெற்றி பெறுவார்கள்?
    தினேஷ் என்று மனம் சொல்கிறது, பார்ப்போம்.
    கதை நன்றாக சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கோமதி இது நாற்கோணக் காதலாகிவிட்டது.
      அனைவரும் வந்தாலும் அர்ஜுனனுக்கே மாலையிட்டாள் த்ரௌபதி.

      என்னமோ இது போல எழுதத் தோன்றியது. விடாத தலைவலி.
      முடித்துவிட்டு ஸ்ரீராம்க்கு அனுப்பியதில் எத்தனையோ பிழைகள்.
      பாவம் அந்தப் பிள்ளை.
      தெமேன்னு சரி செய்து போட்டு இருக்கு.
      வாழ்க வளமுடன்.

      நீக்கு
    2. குளிர் காரணமாய் தலைவலி இருக்கும்.
      கவனமாய் குளிர்காலத்தில் இருங்கள் அக்கா.

      நீக்கு
    3. அன்பு கோமதி, ஆமாம் வெளியில் சென்று வந்தாலே தலைவலி வந்துவிடுகிறது. அதிக சத்தமாய் யாரும் பேசினால் அதுவும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
      மிகமிக நன்றி மா.

      நீக்கு
  6. கௌ அண்ணா எனக்கு மனசுல கதை தோனிருச்சு...எழுதநும் இனிதான்....கொஞ்சம் வேலை...பயணம் நு இருக்கு....

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வல்லிம்மா கதை அருமையாகப் போகிறது....அதுவும் மலையில்!! ஹா ஹா ஹா...முடிவு ஓரளவு ஊகிக்க முடிகிறது ரெண்டாவது அம்மா எப்பவுமே சுபமாகத்தான் முடிப்பீர்கள்! எனவே ஆவலுடன் தொடர்கிறோம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கௌ அண்ணாவின் கண்டிஷனில் கொஞ்சம் விலகினாலும் கதை நன்றாக இருக்கிறது....நான் கடைசி ஆளா கொடுக்க ஆகிடுச்சுனா என் கதைய மாத்த வேண்டிவருமோ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கதை நன்றாக இருக்கிறது வல்லிம்மா. நம்ம ஏரியா கதைக் கரு எல்லாம் விவரங்கள் சமீபத்தில் அறிந்தேன்...இனி தொடர்ந்து வருகிறேன்...கதைக் கரு என்ன என்று இனிதான் பார்க்கனும்.

    தொடர்கதை போலத் தெரிகிறது. தொடர்கிறேன் முடிவு அறிய.

    பதிலளிநீக்கு