ஞாயிறு, 22 டிசம்பர், 2019

கொக்கி 191222 : பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு


ஆட்டோவில் இருந்து இறங்கினார் அந்த எண்பது வயது முதியவர். ஆட்டோவுக்கு 'பே டிஎம்' மூலம் உரிய பணம் கொடுக்கப்பட்டுவிடும் என்றும், அவர் ஏதும் பணம் கொடுக்கவேண்டாம் என்றும் சொல்லி அனுப்பியிருந்தார் அவருடைய மகன். 
  
கல்யாண மஹால். 
    
விலாசம் சரியாக இருக்கின்றதா என்று தன் கையில் உள்ள கல்யாணப் பத்திரிக்கையை எடுத்து, கண்களுக்கு அருகே வைத்து மூக்குக் கண்ணாடி வழியாகப் பார்த்தார் பெரியவர். சரியாகத் தெரியவில்லை. முகூர்த்த நேரம்.  களை கட்டியிருந்தது கல்யாண மண்டபம். . இந்த மண்டபமாகத்தான் இருக்கும் என்று நினைத்து, உள்ளே சென்றார் அவர். 




பால்ய சிநேகிதனின் பேத்திக்குத் திருமணம். 

( ஃபேஸ்புக்ல ப்ரோஃபைல் போட்டோ பார்த்து, பால்ய சிநேகிதனை அடையாளம் கண்டிருந்தார், ராதாகிருஷ்ணன். . 
    


மெசஞ்சர் உரையாடல் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார். 

' ஏய், நீ கடலூர் தண்டபாணிதானே! ரெட்டிச் சத்திரத் தெருவில் நாம ரெண்டு பேரும் கோலியாடினது ஞாபகம் இருக்கா? கோழிமுட்டைப் பள்ளிக்கூடத்துல நீயும் நானும் படிச்சோமே ஞாபகம் இருக்கா? அது என்ன பாட்டு? அப்பாவைப்போல் நான் ஆனால், என்ன செய்வேன் தெரியுமா? ..... என்று ஆக்ஷனோடு பாடுவாயே! '

' அட! ஆமாம் .....   நீ ராதாக்ருஷ்ணன்தானே! எப்படி இருக்கே? எங்கே இருக்கே?' 

என்று ஆரம்பித்த புதுப்பிக்கப்பட்ட பழைய நட்பு, ராதா கிருஷ்ணனின் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தண்டபாணி தன் பேத்தி கல்யாணப் பத்திரிக்கையை அனுப்பி வைத்து, கல்யாணத்திற்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டது வரை வந்துள்ளது. ) 

ரா கி உள்ளே நுழைந்த அடுத்த நிமிடம் " கெட்டிமேளம், கெட்டிமேளம்" என்று குரல் கேட்க, கெட்டிமேளம் முழங்க, நாதஸ்வரக்காரர் வாசித்துக்கொண்டிருந்த நகுமோவின் நடுவே மேல் சஞ்சாரம் செய்தார். 

கல்யாண மேடையைச் சுற்றி அட்சதை தூவுவோர், படை எடுத்துப் போய் மேடையில் இருந்த எல்லோரது தலையிலும் அட்சதையை வீசிக்கொண்டிருந்தனர். 

தூரத்தில் இருந்து பார்த்த ரா கி க்கு யாரையும் அடையாளம் தெரியவில்லை. 

கூட்டம் எல்லாம் மேடை அருகே சென்றுவிட்டதால், தாறுமாறாகக் கிடந்த காலி நாற்காலிகளுக்கு இடையே நுழைந்து மேடை அருகே செல்லத் தயாரானார், ரா கி. 

அப்போ அவருக்குப் பின்னாலிருந்து இருவர் பேசியது அவர் காதில் விழுந்தது. ரா கி க்கு கண் சரியாகத் தெரியாவிட்டாலும் தெளிவான கூர்மையான காதுகள். 

" கல்யாணப் பெண்ணுக்கு பின்னாடி நாலு பொண்ணுங்க இருக்காங்க பார்த்தியா, அந்தப் பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணுதான். நல்லா பார்த்துக்க. ஏதேனும் ஆள் மாறாட்டம் பண்ணி சொதப்பிடாதே. சரியா?" என்றான் ஒருவன். 

" நீ கவலையே படாதே. என் கிட்ட அடையாளம் காட்டிவிட்டாய்தானே. இனிமே வேலையை கனகச்சிதமாக செய்துமுடித்துவிடுகிறேன். நீ போ "

இந்த உரையாடலைக் கேட்ட ரா கி, சில வினாடிகள் மேடைப்பக்கம் பார்த்து 'யார் அந்தப் பச்சை ட்ரெஸ் பொண்ணு' என்று பார்க்க முற்பட்டார். சரியாகத் தெரியவில்லை. 

பிறகு, பேசியவர்களையாவது யார் என்று பார்க்கலாம் என்று பின்னால் திரும்பிப் பார்த்தார். 

அதற்குள் பேசியவர்கள் ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றுவிட்டார்கள். 

யார் இவர்கள்? யார் அந்தப் பெண் ? அந்தப் பெண்ணை என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள்? என்று யோசித்த ரா கி - ஏதேனும் விபரீத திட்டமாக இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தார். 

விடு விடுவென்று மேடை அருகே சென்று, மேடையில் ஏறி, மணப்பெண்ணுக்கு அருகே சென்றார் ரா கி. 

ஆசீர்வாதம் வழங்க வருகின்ற முதியவரைப் பார்த்து, எல்லோரும் வழிவிட்டார்கள். 

ரா கி மணப்பெண்ணிடம், " தண்டபாணி பேத்திதானே அம்மா நீ? தண்டபாணி எங்கே?" என்று கேட்டவாறு, பின்னால் நின்றிருந்த அந்த பச்சை ட்ரெஸ் பெண்ணைப் பார்த்தார். 'அப்சரஸ் போன்று அசத்த வைக்கும் அழகுடன் இப்படி ஒரு பெண்ணா ! ' என்று தடுமாறிப் போனார். 

" இல்லை தாத்தா - நான் தண்டபாணி பேத்தி இல்லை. என் தாத்தா பேரு கணேசன்" என்றாள் மணப்பெண். 

குழம்பிப் போன ரா கி, தன் கையில் வைத்திருந்த கல்யாணப் பத்திரிகையை எடுத்தபடி, " .........   இது தண்டபாணி வீட்டுக் கல்யாணம் இல்லையா! .... " என்று கேட்டு, மேலே என்ன செய்வது / சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றார். 

மேடையில் இருந்த பெண்ணின் தகப்பனார் போன்ற ஒருவர், ரா கி கையில் வைத்திருந்த கல்யாணப் பத்திரிகையை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, " சார். இந்தப் பத்திரிக்கை  கொத்தவால் சாவடி 'சந்து'ல இருக்கற மண்டபத்துல நடக்கிற கல்யாணத்து இன்விடேஷன். நீங்க தவறுதலாக கொத்தவால் சாவடி 'தெரு' கல்யாணத்துக்கு வந்துட்டீங்க. அந்தக் கல்யாணமண்டபம் நேரே போய் வலது பக்கம் திரும்பினால் இருக்கின்ற சந்துல இருக்கு. இருங்க. நான் ஒரு ஆளை உங்களோடு அனுப்புகிறேன். அவன் உங்களை சரியான இடத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடுவான். "

ரா கி, 'பச்சை கலர் ட்ரெஸ் பொண்ணுக்கு வரப்போகிற ஆபத்தை எப்படி, யாரிடம் சொல்வது?' என்று யோசித்தார். 

கல்யாணப் பத்திரிகையை வாங்கிப் பார்த்த மனிதர், அதற்குள், " டேய் வெங்கிட்டு - இங்கே வாடா " என்று யாரையோ கூப்பிட்டார். 

" என்ன மாமா?" என்று கேட்டபடி  அவர் அருகே வந்து நின்றான் ஒருவன். 

" இவரைக் கொண்டு போய் கொத்தவால் சாவடி சந்து கல்யாண மண்டபத்துல விட்டுவிட்டு வா " 

" வழி தவறி வந்துவிட்டாரா மாமா! ஆள் மாறாட்டமா!  சரி. நான் கொண்டுபோய் அவரை அங்கே விட்டுவிட்டு வருகிறேன்" என்று சொல்லி,  " என்னோடு வாங்க தாத்தா" என்று ரா கி யை அழைத்துக்கொண்டு, வாசல் நோக்கி நடந்தான். 

வெங்கிட்டு பேசியவைகளைக் கேட்ட ரா கி திடுக்கிட்டார். சற்று நேரம் முன்பு, பச்சை ட்ரெஸ் பெண்ணை மற்றவனுக்கு அடையாளம் காட்டியவன் குரல்தான் அது. ஆள் யாரென்று பார்க்காவிட்டாலும் அந்தக் குரல் ரா கி க்கு நன்கு ஞாபகம் இருந்தது. 

அப்போ இந்த வெங்கிட்டுதான் மற்றவனிடம் பச்சை ட்ரெஸ் பெண்ணை அடையாளம் காட்டியவனா ?

அவனோடு சேர்ந்து நடந்தவாறு, " தம்பி - உன் பேர் வெங்கிட்டுவா? So kind of you ! " என்றார். 

வெங்கிட்டு ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான். 

" தம்பி நீ கல்யாணப் பொண்ணுக்கு உறவா? "

" இல்லை. " 

" மாப்பிள்ளைப் பக்கத்து சொந்தமா?"

" இல்லை" 

" Family friend ? "

" In a way, yes. "

" தம்பி நீ எந்த ஊர்? வேலை பார்க்கிறாயா ? என்ன வேலை? " 

" நான் இதே ஊர்தான். வேலை பார்க்கிறேன். என்ன வேலை என்று சொன்னால் உங்களுக்குப் புரியாது." 

மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் மெளனமாக நடந்தார் ரா கி. 

அவர் செல்லவேண்டிய மண்டபம் வந்துவிட்டது. 

வெங்கிட்டுவிடம் அவர், " தம்பி உன்னுடைய உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ். ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன் கேட்டுக்கோ. பெண் பாவம் பொல்லாது என்று சொல்வார்கள். இதை எப்பவும் நினைவில் வெச்சுக்கோ. நல்லா இரு " என்று சொல்லிச் சென்றார். 

வெங்கிட்டுவின் முகத்தில் சற்றுக் குழப்பமும், கோபமும் தெரிந்தது. 

*****************************************************  

மீதியை நீங்க எழுதுங்க. 

*****************************************************  





10 கருத்துகள்:

  1. இயல்பான நடையில் நேர்த்தியாக நகர்ந்த அரைகுறைக் கதை. மீதிக் கதையை எழுதுவது சுலபமான வேலை தான் என்றாலும் இந்த நடை நேர்த்தி வருமா, தெரியலே! அந்தப் பெண்ணுக்கு நல்லது நடக்கற மாதிரி எழுதி, அந்தப் பெரியவர் அநாவசிய கவலைப் பட்டுவிட்டார் என்று முடிக்கிற் மாதிரி எழுதினா எதையெல்லாமோ பாஸிட்டிவாக நினைக்கிறவர்கள், மீதிக் கதை முடிவை பாஸிட்டிவ் முடிவு என்று சொல்ல மாட்டார்களா, என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ச்சியை எந்தக் கோணத்தில் சிந்திக்கிறார்கள்? யார் கதாநாயகன், யார் வில்லன், என்றெல்லாம் பார்க்க, படிக்க ஆசை!

      நீக்கு
  2. நீங்க உங்களுக்குள்ளே ஒரு முடிவை வைச்சிருப்பீங்களே! யாரானும் எழுதி அனுப்பிச்சதோட அது ஒத்துப் போறதானு பார்த்துட்டு ஒத்துப் போனால் பரிசு கொடுங்க! (நான் கலந்துக்கலை. சொதப்புவேன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போட்டியில்லை. வித்தியாசமான சிந்தனைக்கு ஒரு spark. யார் வேண்டுமானாலும் எந்த விதமாகவும் தொடரலாம். ( நான் எந்த முடிவும் வைத்திருக்கவில்லை.)

      நீக்கு
    2. நவீன தாத்தாக்கள் . பெண்ணைப் பார்த்து வைத்துக் கொள்
      என்றால் பலவித அர்த்தங்கள் வருகிறதே,.

      புதுவிதமாகக் கதையை எடுத்துச் சென்றால்
      அந்த ஃப்ளோ தடைப்படாதா.
      முயற்சிக்கலாம். வாழ்த்துகள் கௌதமன் ஜி.

      நீக்கு
  3. கொக்கிக்கதை - நன்றாக இருக்கிறது கான்செப்ட்! கதைக்கான முடிவுகளை யார் எழுதப் போகிறார்கள், எப்படி எழுதப் போகிறார்கள் என்பதைப் படிக்க ஆவலுடன் நானும்.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா ,,கதை மிக மிக சுவாரஸ்யமாக இருக்கு ... அந்த பச்சை கலர் ட்ரெஸ் பொண்ணு ... மீதி கதையையும் நீங்களே எழுதுங்க .. வேறு யாரையாவது எழுதசொன்னீங்கன்னா எங்கேயாவது தள்ளிட்டு பொயிடப் போறானுங்க ... ( நான் கதைய சொன்னேன் ) சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    பதிலளிநீக்கு
  5. சரியான கொக்கியாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு