திங்கள், 16 டிசம்பர், 2019

செல் சொல்லும் செய்தி


இந்தக் கதை, நம்ம ஏரியா 10/12/2019 பதிவின் பாதிக் கதையை ஒட்டி  மற்றொரு கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. 

எழுதியவர் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன். 

வித்தியாசமான கோணங்களில் சிந்தித்து கதை எழுதத்  திறமை உள்ளவர்கள், எங்கள் ப்ளாக் நண்பர்கள் குழுவில் இருப்பது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. 

கதையைப் படியுங்கள், உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். 




அலுவலக வேலை விஷயமாக  மைசூர் வந்திருந்த செந்திலுக்கு அப்பாடா என்றிருந்தது. இன்னும் சில மணி நேரங்கள்தான். ஊருக்குப் போய் விடலாம். அவன் மாயவரம் ஆசாமி. தமிழையும், சுமார் ஆங்கிலத்தையும் தவிர வேறு பாஷைகள் தெரியாது. சென்னைக்கு வந்தே ஒரு வருடம்தான் ஆகிறது. 

வேலை விஷயமாக பெங்களூர் என்றதும் கொஞ்சம் குஷியாக இருந்தது, அங்கு போனதும், பெங்களூரிலிருந்து மைசூருக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் இப்போதுதான் ஆரம்பித்திருக்கும் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டார்கள்.  அலுவலகத்தில் "ஐரன்(Iron)", "பர்னிங்(burning)" என்று பேசினாலும் ஆங்கிலம் பேசும் இரண்டு பேர் இருந்தார்கள். வெளியே வந்தால் மூச்!

இரண்டு வாரங்கள்தான் என்றாலும் இரண்டு வருடங்கள் போல் இருந்தது. எங்கு திரும்பினாலும் ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக்கள், ஹள,புள என்று ஒரு பாஷை! போதும்டா சாமி! எப்போது ஊருக்குப் போவோம். எப்போது தமிழில் மாட்லாடுவோம் என்றிருந்தது.   

செந்திலோடு பணியாற்றும் கிஷோர் அவனை ரயிலேற்ற வருவதாக சொல்லியிருந்தான். பெட்டியை பாக் பணியாயிற்று. அறையில் அடைந்து கிடைக்க போர் அடித்தது. மேலும் ஒரு அசட்டுக் குளிர். கொஞ்ச நேரம் வெயிலில் உட்காரலாம் என்று செந்தில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு வந்திருந்தான். இந்த ஊர் வெயில் எங்கே உறைக்கிறது? செந்தில் பார்வையை சுற்றி படர விட்டான். 


                 
அப்போ ஒரு ஆள், பரபரப்பாக பார்க் நுழைவாயில் வழியாக நுழைந்து, கையில் அலைபேசியுடன், ஒவ்வொருவராக என்னவோ கேட்டுக்கொண்டு வந்தான். 

இவன் அவனை ஒருவித ஆர்வத்துடன் பார்த்தவாறு, 'என்ன கேட்டுக்கொண்டு வருகிறான்? ஏன் எல்லோரும் உதட்டைப் பிதுக்கி, தெரியாது என்று தலை ஆட்டுகிறார்கள்?' என்று நினைத்தான். 

அவன், இவன் அருகே வரும்போது கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தான். 

இவன் அருகே அவன் வந்ததும், கையை என்ன? என்று கேட்கிற பாவனையில் ஆட்டி சைகையில் கேட்டான். 

அவன், அவசரமாக, " தமிளு, தமிளு ...... தமிளு கொத்தா? " என்று கேட்டான். 

இவன் உடனே, " ஓ தமிழ் தெரியும். என்ன விஷயம்?" என்று கேட்டான். 

அவன் அலைபேசியை இவன் கையில் கொடுத்து, ' பேசுங்க, பேசுங்க .... ' என்பதைப்போல சைகைக் காட்டினான். 

மறுமுனையில் பேசியவர் " அப்பாடி ஒருவழியா தமிழ் பேசுகிறவரைக் கண்டுபிடித்துவிட்டானா அந்த ஆளு! சரி நான் சொல்வதை கவனமாக கேட்டுக்குங்க. இந்த அலைபேசியை உங்களிடம் கொடுத்த நபரை, அடுத்த இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் கொல்லப்போகிறோம். ஏன், எதற்கு என்பதெல்லாம் அவனுக்கு நல்லாத் தெரியும். கொல்லப்போறோம் என்பதை மட்டும் அவனிடம் சொல்லுங்க. அவ்வளவுதான். " 

மறுமுனையில் பேசியவர் இணைப்பைத் துண்டித்துவிட்டார். 

இவன் அவசரம் அவசரமாக அழைப்பு வந்த எண்ணைத் திரும்பத் தொடர்புகொள்ள முயன்றபோது மீண்டும் மீண்டும் ' ..... கரைய மாடின ..., 
. ..... கரைய மாடின ....... ' பதிவு செய்யப்பட்ட குரல். 

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பு கிடைத்தது. அது ஏதோ ஒரு அபார்ட்மெண்ட் செக்யுரிட்டி எண். அங்கிருந்து ஃபோன் செய்தவன் - அங்கேயிருந்து ஒரு டூ வீலரில் ஏறிச் சென்றுவிட்டான். யார் என்று செக்யூரிடி ஆளுக்குத் தெரியவில்லை. முன்னே பின்னே பார்த்திராத ஆள். அவசரமாக ஃபோன் செய்யவேண்டும் என்று கேட்டு ஃபோன் செய்திருக்கிறான். 

அலைபேசியைக் கையில் கொடுத்தவன், " ஏனு? ஏனு? " என்று கேட்டான். 

இவன் தமிழில் சொன்னான். அவனுக்குத் தெரியவில்லை. 



செந்திலுக்கு குப்பென்று வியர்த்தது. இது ஏதடா வம்பு? அதுவும் ஊருக்கு புறப்படும் நேரத்தில். சுற்றும் முற்றும் பார்த்து, பார்க் பெஞ்சில் பெர்மூடாபேண்ட்ஸ், டீ ஷர்ட், அடிடாஸ் ஷூ, என்று தோரணையாக அமர்ந்திருந்த ஒரு பெரியவரைப் பார்த்ததும், அவருக்கு நிச்சயம் ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. எனவே அவரை அணுகி விஷயத்தை சொன்னான்.  அதைக் கேட்டவுடனே அவர் செந்திலையும், அவன் அருகில் நின்றவனையும் உற்றுப்பார்த்தார், இவனிடம் எதுவும் சொல்லாமல், ஊஞ்சலில் பேரனை வைத்து ஆட்டிக் கொண்டிருந்த மனைவியை அழைத்தபடி நகர்ந்து விட்டார். 

வேறு யாரை அணுகலாம் என்று செந்தில் யோசித்த பொழுது, நல்ல வேளையாக கிஷோர் வந்தது விட்டான். அவனிடம் விவரங்களை சொன்னதும், கிஷோர்,  "மை காட்! திஸ் இஸ் டேஞ்சரஸ், லெட் அஸ்  ஹாண்ட் ஓவர் ஹிம் டு போலீஸ்" என்று செந்திலிடம்  கூறிவிட்டு, அவனிடம் கன்னடத்தில் ஏதோ கூறினான். 

அவன் கூறிய விதத்திலிருந்து 'போலீஸ் ஸ்டேஷனுக்குச்செல்' என்று சொல்கிறான் என்று புரிந்து கொண்டான் செந்தில். 

உடனே அலை பேசியை கொண்டு வந்தவன், போலீஸ்..? பேடா.." என்று கூறி விட்டு அலை பேசியை கீழே போட்டு விட்டு ஓடத்  தொடங்கினான். கிஷோர் அவனைத் துரத்தி, மடக்கிப் பிடித்து கன்னத்தில் பொளேரென்று ஒரு அறை விட்டு "ஏன் ஓடற? எங்க திருடின?" என்று கேட்க, அவன், "நான் வரும்பொழுது ஒரு ரோட் ஆக்சிடெண்ட், ஒரு காரும், டூ வீலரும் மோதிக்கொண்டு, டூ வீலரில் வந்தவருக்கு படு காயம். அதிகம் கும்பல் சேரவில்லை. அவரருகே இந்த செல் போன் கிடந்தது. அதை எடுத்தேன், உடனே அழைப்பு. அடிபட்டவரின் குடும்பத்தினராக இருக்கலாம், செய்தியை தெரிவிக்கலாம் என்றுதான் தேடினேன்". என்றான். 

"எல்லி ?"

"இங்கதான் சார் பக்கத்துல" 

"சரி, வா, அங்க இந்நேரம் போலீஸ் வந்திருப்பாங்க, அவங்ககிட்ட இதை ஒப்படைக்கலாம்". என்றவன், அவனைப் பிடித்திருந்த பிடியை விடாமல், செந்திலிடம், "சார் நீங்க ஸ்டேஷனுக்கு போய்டுங்க, நான் இவனையும் போனையும் போலீசில் ஒப்படைக்கணும்" என்று கூறிவிட்டு அவனைத் தள்ளிக் கொண்டு சென்றான். 

மந்திரித்து விட்டவன் போல செந்தில் அறைக்கு வந்து தன் பெட்டியை எடுத்துக் கொண்டு ரயிலில் ஏறினான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட சற்று நேரம் பிடித்தது.  ஊருக்கு வந்து சேர்ந்ததும் கிஷோருக்கு ஃபோன் பண்ணி இதைப் பற்றி விசாரித்த பொழுது, 

"அவன் பொய் சொல்லலை சார். நிஜமாவே ஆக்சிடெண்ட் ஆன இடத்திலிருந்து போனை எடுத்திருக்கான். போலீஸ் விசாரிச்சிட்டு அவன் ஹார்ம்லெஸ்ன்னு விட்டுட்டாங்க. இதான் சார் நம்ம ஊர்ல ப்ராப்லம். ஏதாவது ஆக்சிடெண்ட் ஆனா, அவங்க வீட்டுக்கு தகவல் கொடுக்கலாம்னா செல் போன் இருக்காது, தொலைந்து விடும்னு போலீஸ் சொன்னாங்க. என்ன பண்றது?"

"அந்த கால்?பிராங்க் காலா?"

"ஆ! அதுவா. ஆக்சிடெண்டுல மாட்டினவர் ஒரு சின்ன பிஸினெஸ்மேன். அவர்கிட்ட வேலை பார்த்த தமிழ்க்காரன் ஒருத்தனை அவர் வேலையை விட்டு எடுத்திருக்கார். அவன் சும்மா மிரட்டியிருக்கான். அவனுக்கு தமிழைத் தவிர வேற பாஷை பேச வராது, அதனாலதான் தமிழ் பேச தெரிஞ்சவன்கிட்ட குடுன்னு சொல்லியிருக்கான்".

"நல்ல கதை!" என்று நினைத்துக் கொண்டான் செந்தில். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 
                      
            ***                   ***                 ***

18 கருத்துகள்:

  1. அருமை...

    மொழி தெரியாததால் விளையும்
    அவதியை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...

    செந்தில் நினைத்துக் கொண்டதைப் போலவே -

    நல்ல கதை!...

    பதிலளிநீக்கு
  2. //"நல்ல கதை!" என்று நினைத்துக் கொண்டான் செந்தில். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? // அதே, அதே!

    பதிலளிநீக்கு
  3. நானும் நல்ல கதை என்று நினைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக்கள்,
    ஹள,புள என்று ஒரு பாஷை!
    மாட்லாடுவோம்
    கரைய மாடின

    -- கதை இருக்கட்டும். கதை நிகழ்விடம் மைசூரு என்றால் நிகழ்விட பாஷை முக்கியமாகிப் போகிறது. விட்ட கதையைத் தொடர்ந்த இருவருக்கும் கன்னடப் பிரதேசம் தொடர்பிலிருந்தது செளகரியமாகப் போய் விட்டது என்று நினைக்கிறேம்.

    'ஊஞ்சலில் பேரனை வைத்து ஆட்டிக் கொண்டிருந்த மனைவியை அழைத்தபடி நகர்ந்து விட்டார்' -என்ற வரியை வாசித்ததும் அந்த பார்க் படத்தில் ஊஞ்சலை ஆட்டும் பெண்ணைத் தேடும் அளவுக்கு பா.வெ. தூள் கிளப்பியிருக்கிறார். நெல்லை பட்ட சிரமத்தை இவர் படாமல் சுளுவாக முடித்து விட்டார் எனப்தையும் சொல்லத் தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 🙏
      // ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக்கள்,
      ஹள,புள என்று ஒரு பாஷை!
      மாட்லாடுவோம்//
      ஆமாம், நானும் ரசித்த வரிகள்.

      நீக்கு
    2. //விட்ட கதையைத் தொடர்ந்த இருவருக்கும் கன்னடப் பிரதேசம் தொடர்பிலிருந்தது செளகரியமாகப் போய் விட்டது என்று நினைக்கிறேம்.// தொடர்ந்த இருவருக்கு மட்டுமல்ல, ஆரம்பித்தவருக்கும்.
      விரிவான விமர்சனத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. நெல்லை எடுத்துக் கொண்ட சப்ஜக்ட் அப்படி.

    பதிலளிநீக்கு
  6. ஐரன்,பர்னிங் யாரும் நோட் பண்ணவில்லை.

    பதிலளிநீக்கு
  7. //ஐரன்,பர்னிங் யாரும் நோட் பண்ணவில்லை.// வடக்கே பலரும் ஐரன், பர்னிங் என்றே சொல்லுவார்கள். பள்ளியையும் இஸ்கூல் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  8. //ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக்கள், ஹள,புள என்று ஒரு பாஷை! போதும்டா சாமி! எப்போது ஊருக்குப் போவோம். எப்போது தமிழில் மாட்லாடுவோம் என்றிருந்தது.//

    ஆயிரம் ஆனாலும் மாயவரம் போல் ஆகுமா என்ற ஊரை சேர்ந்த செந்திலுக்கு பெங்களூரு எப்படி பிடிக்கும்?

    கதை முற்றிலும் வேறு கோணத்தில் அருமை.

    //இதான் சார் நம்ம ஊர்ல ப்ராப்லம். ஏதாவது ஆக்சிடெண்ட் ஆனா, அவங்க வீட்டுக்கு தகவல் கொடுக்கலாம்னா செல் போன் இருக்காது, தொலைந்து விடும்னு போலீஸ் சொன்னாங்க. என்ன பண்றது?"//

    அடிபட்டவரின் செல் போன் மற்றும் உடமையை திருடுவது எவ்வளவு பெரிய கஷ்டம். அடிபட்டவர் வீட்டுக்கு செய்தி சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  9. அமைப்பாக இருக்கிறது பானுமதியின் கதை.
    நல்ல ரசனையுடன் மொழி நகர்கிறது.
    பாவம் அந்த ஆசாமின்னு சொல்ல வைத்து விட்டீர்கள்.

    ஒருவருக்கும் சேதமில்லாமல் கதையைச் சொன்ன விதம் அழகு.

    அன்பு வாழ்த்துகள் பானுமதி.

    பதிலளிநீக்கு
  10. இந்தப் படத்துக்குக் கதை எழுதினால் எப்படி இருக்கும்?

    பதிலளிநீக்கு