வியாழன், 11 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 2.

 மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 2. 

எழுதியவர் : நெல்லைத் தமிழன் 

விரிவான விமர்சனம்: 
 

தேவராஜன் சண்முகம் எழுதிய ‘அந்த நாள் பொங்கல் மீண்டும் வராதா?’ என்ற கட்டுரை, கொஞ்சம் நம்மை இளமைக் காலத்துக்குக் கூட்டிச் செல்கிறது. எண்ணங்களை மீட்டெடுத்து ரசித்து எழுதியிருக்கிறார்.  2ம் 3ம் வகுப்பு படிக்கும்போது பரமக்குடியில், அப்பாவுடன் கரும்பு விற்கும் சந்தைக்குச் சென்று நீள கரும்பை இருவருமாகச் சுமந்து கொண்டுவந்தது நினைவுக்கு வருகிறது. வாழ்க்கையில் போன காலங்கள், போயின காலங்கள்தாம். வாழ்க்கையே இரயில் பிரயாணம்தான். நாம் கடந்த ஸ்டேஷன் மீண்டும் வருவதில்லை.திரவியம் கதை, வழிதவறி ஓடியவனை இரண்டு வருடங்களுக்குள் பட்டணத்தில் கண்டவர், கிராமத்தில் அவன் பெற்றோரோடு சேருமாறு செய்யும் கதை. துரை செல்வராஜு கதையில் எப்போதும் கிராமத்து மணமும், பழையநாட்களின் நேர்மையும், வெள்ளந்தித்தனமும், அவைகளை காலம் அழிக்கிறதே என்ற பதைபதைப்பும் இருக்கும். இந்தக் கதையிலும் அவற்றைத் தூவத் தவறவில்லை. “இன்றைய அவியல் போல் இல்லாமல்”, “செம்பொன் நழுவிச் சேத்துல விழுந்தா” போன்றவை ரசித்த வரிகள். கதைக்கான ஓவியம் கண்ணைக் கவர்ந்தது. வரைந்த ஓவியர் அருண்ஜவருக்குப் பாராட்டுகள்.

 “ஒரு அக்ரஹாரத்தின் பொங்கல் நினைவுகள்” – காமாட்சி அம்மா, அப்படியே நான் கடந்துவந்த கிராமங்களின் பொங்கல் நினைவுகளைக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஒவ்வொரு வரியும், அட..ஆமாம்..இப்படித்தானே நடந்தது என்று நினைக்கும்படியான வரிகள். என்ன என் இளமைக் காலத்துக்கு ஒரு முப்பது வருட காலம் முன்பு இருந்திருக்கலாம். வருடம் பூராவும் வருவதற்கு எப்படித்தான் வீட்டில் பொருட்களைச் சேகரித்து பத்திரமாக வைத்துக்கொண்டார்களோ. எங்கள் வீட்டில் அடுப்பைச் செய்துதான் பார்த்திருக்கிறேன். விலைக்கு வாங்கி அல்ல.  “ஏம்பா ஒரு கரும்பு போடேன்….”,”இழுத்துக்கோ” இந்த வரி ஒன்று போதும், நாம் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்து கொஞ்சம் சுயநலம் அதிகமாக உள்ள நிலைக்கு வந்திருக்கிறோம் என்று புரிந்துகொள்ள. இனாம் அணி… இப்போதும் அந்த வழக்கம் இருக்கும் என்றே நினைக்கிறேன். 180 குடும்பங்கள் இருந்த அக்கிரஹாரம்… நானும் பூலாங்குறிச்சியில் 20 குடும்பங்கள் இருந்த அக்கிரஹாரத்தைப் பார்த்திருக்கிறேன். காலத்தை மனதில் பதியவைக்கும் எழுத்து.  புகைப்படங்கள் அழகு சேர்த்தாலும்,  களிமண் இரட்டை அடுப்பு இருந்த காலத்தில் நடந்தவைகளுக்கு எரிவாயு அடுப்பில் வேகும் பொங்கல் பொருத்தமாயில்லை.

 

தேவராஜன் சண்முகத்தின் ‘ஐயா பொங்கல்’ கதை எத்தனையோ ஏதிலிகளை நினைவுபடுத்துகிறது.  இரக்கமுள்ள மனிதர்கள் அருகியதால்தான் வேகாத வெயிலில் ஐஸ்வண்டி தள்ளும் நிலைமையோ? நான் பத்துப் பைசாவுக்குச் சாப்பிட்ட பாலைஸ் இப்போது 15 ரூபாயா? இன்னும் கிடைக்கிறதா?
 சியாமளா வெங்கட்ராமனின் ‘அழகி’ கதை பொதுவான டெம்ப்ளட்டுடன் இருந்தது.  அழகு அம்மாவுக்கு தீக்காயம் விபத்தல்லவே., தானே வரவழைத்துக்கொண்டதல்லவா? பிளாஸ்டிக் சர்ஜரியின் பயனும் நோக்கமும் வேறு  அல்லவோ? கதைக்கான படம் கவர்ந்தது.

 

டெல்லிப் பொங்கல் எழுதிய ஆதி வெங்கட், அந்தப் பொங்கலில் நினைவாக அப்போது எடுத்த படங்களைச் சேர்த்திருந்தால் இன்னும் ரசனையாக இருந்திருக்கும்.

 

மாலா மாதவனின் ‘அன்புள்ள அண்ணா’ கதை,  கதாசிரியர் அப்படி நினைத்திராவிட்டாலும், சிரித்துக்கொண்டே கழுத்தறுப்பவனாக தம்பி ஸ்ரீதரனைச் சித்தரிக்கிறது,. அவனவன் சொத்து அவனவனுக்கே என்றதில் ஆதிகேசவன் தலைநிமிர்ந்து நிற்கிறார். ‘எந்தப் பறவையின் எச்சமும் அதன் பசுமையை ஒன்றும் செய்யாது” ரசித்த வரி. கதைக்கான படங்கள் பொருத்தமாக இல்லை.

 

 “பொங்கல் பண்டிகை வரலாறும் கொண்டாடும் விதமும்” என்ற கீதா சாம்பசிவத்தின் கட்டுரை, தெரிந்த விஷயங்களோடு எழுதியிருந்தாலும் நிறைய புதிய விஷயங்களையும் சேர்த்துச் சொன்னவிதம் நன்றாக இருந்தது. பொங்கல் செய்முறைக் குறிப்பும் விவரமாக இருந்தது.  படமும் அருமை.

 

தில்லை நாயகத்தின் ‘பொங்கல் கொண்டாட்ட த்தில் சுற்றுச் சூழலைக் காப்போம்” கட்டுரை பெரும்பாலும் போகி என்ற பெயரில் குப்பைகளை எரிக்கும் மக்களின் சமீபத்தைய மனோநிலைக்காக எழுதப்பட்டிருக்கிறது. முதலில்  ‘கண்ட தை எரிக்கணும்” என்று தாங்களாகவே கண்டுபிடித்த இந்த அசட்டுச் செயலைத்தான் முதலில் எரிக்கணும். மற்றபடி பொங்கல் என்பதே இயற்கையுடன் ஒன்றிணைந்த ஒரு பண்டிகை. அதில் சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு, பாரம்பர்யமாகக் கொண்டாடும் முறையில் நாம் பொங்கலைக் கொண்டாடினால்.

 

(தொடரும் ) 3 கருத்துகள்: