சனி, 13 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 4

 மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 4 

எழுதியவர் : நெல்லைத் தமிழன் 

மாலா மாதவன் அவர்களின் ‘விட்டில் பூச்சி’ கதை, சமீப சித்ரா கதையை நினைவுபடுத்தியது.  மாடல் ஸ்வயதா, மாட்டிக்கொண்ட வாழ்க்கையை விட்டு ஸ்மார்ட்டாகத் தப்பிப்பதாக கதை. கனவுலகமாகத்தான் இருக்கவேண்டும், நனவில் இப்படியா நடக்கிறது? கதை பரவாயில்லை ரகம்.

 

“என்னைப் பேசச் சொன்னால்” பானுமதி வெங்கடேச்வரனின் பேச்சு அனுபவம் ரசிக்கவைத்தது.  அவரைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் விஷன் இருந்திருக்குமானால், எதிர்கால வி.ஜே, ஆர்.ஜே வீட்டில் பிறந்திருக்கிறது என்று கொண்டாடியிருப்பார்கள். ஒவ்வொருவர் பேசும் முறையும் ஒவ்வொரு ரகம். விமர்சிப்பவர்களால், வளர்ச்சி அடைபவர்களைத் தடுக்க முடியாது என்பதற்கான நல்ல உதாரணமான ரஜினிகாந்தைக் குறிப்பிட்டது சிறப்பு.

 

அயல்நாட்டுச் சிறுகதை என்ற தலைப்பில் ஓ.ஹென்றியின் சிறுகதை ஒன்றை ஏகாந்தன் கொடுத்திருக்கிறார். கதை ரொம்பவே நல்லா இருந்தது. எப்படியெல்லாம் சிந்திக்கறாங்க.  விநோதக் கதை நிஜமாகவே விநோதமாகத்தான் இருக்கிறது.

 

அப்பாத்துரையின் ‘அன்பு மகள்’ சிறப்புச் சிறுகதை நிச்சயம் வாசிப்பவர்களின் மனதை இழுத்துப் பிடிக்கும்.  அமானுஷ்யம். ஜில்லிட வைக்கும் கதை. ஏன் இரவு நேரத்தில் படிக்க உட்கார்ந்தோம் என்று நினைக்க வைத்த கதை. அமானுஷ்யத்துக்கு ‘இதெல்லாம் நடக்கக்கூடியதா.. கதை விடறாங்க’ என்று நினைக்கும் தீம்தான் கிடைக்கும், ஆனால் தன் எழுத்தால் அதற்கு உயிரைக் கொடுத்திருக்கிறார் என்றால் மிகையல்ல. பாராட்டுகள் அப்பாதுரை.  கதைக்கான படமும் மனைதைக் கவர்ந்தது.

 

அப்பாத்துரை கேள்வி பதில் பகுதி மிகவும் ரசிக்கும்படி இருந்தது.  எந்தப் பதிலிலும் கடைசி வரியோ அல்லது ஏதாவது வரியோ முத்தாய்ப்பாக இருந்து பளீரிடவைக்கிறது.  உதாரணத்துக்கு ‘ஒரு உருண்டை இருந்தா மட்டும் ‘எ’ என்கிறோமே’, “இன்னும் முதல் விரலிலேயே நிற்கிறேன்”, “எழுதுவானேன்’ போன்றவைகளைச் சொல்ல லாம்.  அரசு பதில்களில் ஒரு டெக்னிக் உண்டு. ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் நெடிய விஷயம் கோர்த்த பதிலாக இருக்கும். மற்ற கேள்விகளுக்கெல்லாம் ஓரிரு வரிகளில்தான் பதில் இருக்கும். நிறைய கேள்விகளுக்கு நெடிய பதில் என்பது, கேள்வி கேட்டவர்கள் அப்பாத்துரையிடம் கேட்டார்களா இல்லை ‘அப்பானந்த அடிகள்’இடம் கேள்வி கேட்டார்களா என யோசிக்க வைக்கிறது. கொஞ்சம் பிரசங்க நெடி ஆனால் சுவாரசியம்.

 

கமலா ஹரிஹரனின், “பொங்கல் பண்டிகை கண்களுக்கும் + வயிற்றுக்கும்” மனதைக் கவர்ந்தது.  பூக்கள் கொழிக்கும் மரம், பிள்ளையார், முருகன், கோலம் என்று எங்கோ பயணித்த கட்டுரை,  பால் கொழுக்கட்டை, சேமியா கேசரி, சேப்பங்கிழங்கு ரோஸ்ட், புடலங்காய் உசிலி,  வாழைப்பூ வடை,  என்று எங்கள் பிளாக்கில் ஐந்து திங்கள் கிழமைகளில் வந்திருக்கவேண்டிய சமையல் குறிப்புகளை ஒரே தலைப்பில் அடைக்க முயன்றிருக்கிறார். ரொம்ப நன்றாக இருந்தது.  பாராட்டுகள்.

 

நான் ரேணு – கீதா ரங்கனின் சிறுகதை. பொதுவா யாரும் தொடாத சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு எழுதியிருக்காங்க. ஏதேனும் பத்திரிகை/தொலைக்காட்சிச் செய்தி இந்தக் கதை எழுத அவருக்குத் தூண்டுதலாக இருந்திருக்கும். வறுமை, அதை எக்ஸ்ப்ளாயிட் செய்பவர்கள், அதில் பெண் குழந்தை என்பவள் பண்டமாற்றுப் பொருள்.  நிஜ வாழ்க்கையில் இவ்வளவு சுலபமாக ஏதேனும் தீர்வு வந்துவிடுமா? இருந்தாலும் பாதிக்கப்பட்ட ரேணு கடைசியில் தப்பித்துவிட்டாள் என்று படிக்கும்போது மனதுக்கு நிம்மதி வருகிறது. நல்ல கரு, இன்னும் பொறுமையாகச் செதுக்கியிருக்கலாம், நாடகத் தன்மை குறைந்திருக்கும்.

 

துரை செல்வராஜுவின் ‘பன்னீரும் பத்மப்ரியாவும்’ தலைப்பைப் பார்த்த தும், தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்கு எதிராக அரசியல் கிசுகிசு எழுதியிருக்காரா என்று படிக்க ஆரம்பித்தால்,  அருமையான சமையல் குறிப்பை குமுதம் சுந்தர பாகவதர் பாணியில் எழுதியிருக்கார். அல்மராய் படங்களைப் பார்த்துத்தான் எவ்வளவு வருடங்கள் ஆகிறது. அல்மராயின் நெய்யை அம்போன்னு விட்டுவிட்டு இந்திய உணவு வாசனைக்காக கோவர்தன் நெய்யும் பனீரும் உபயோகித்திருக்கார் போலிருக்கிறது. நெய்ச்சோறுக்கு பாசுமதி அரிசியில் சிவப்பு மிளகாயை நறுக்கிச் சேர்க்கணுமா என்று கதிகலங்கியபோது, அது சிவப்பு குடமிளகாய் என்று படம் சொன்னது.  பச்சை கேப்ஸிகம் உபயோகித்தால் பத்மப்ரியாவிற்குக் கோபம் வருமோ என்னவோ.  எழுத்து ரசிக்கும்படி இருந்தது.

 

கோபு வச்ச ஆப்பு – கேஜிஜி எழுதிய நகைச்சுவைக் கதை நல்லாவே இருந்தது.  நானெல்லாம் என் வீட்டில் சாப்பிடும் பொருள் விழுந்துவிட்டது என்றால் அதை எடுத்துத் துடைத்துவிட்டுச் சாப்பிட்டுடுவேன். இந்த குணம் எங்க வீட்டில் யாருக்குமே பிடிக்காது.  நான் கணிணி இன்ஸ்டிடியூட்டில் 1988ல் ப்ராஜக்ட் செய்யும்போது ஒவ்வொரு வாரமும் நண்பர்கள் வீட்டில் உணவு உண்டு, பிறகு அங்கேயே ப்ராஜக்ட் வேலையையும் செய்வோம். அப்படி ஒரு பெண் நண்பர் வீட்டில், சுடச் சுட இட்லி பரிமாறினார்கள். கை தவறி மேசையில் (தட்டைவிட்டு வெளியே) ஒரு இட்லி விழுந்துவிட்ட  து. உடனே நண்பியுடைய அம்மா அந்த இட்லியை எடுத்து குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டார். எனக்கு மனசே ஒரு மாதிரி ஆகிவிட்ட து. இப்படியா உணவை வீணாக்குவது என்று.  கௌதமனின் அவர் பையனிடம் படும் பாட்டை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார். அது சரி.. பக்கத்து வீட்டுக்காரர் உண்மையை உடைத்தது அவரின் மருமகளிடம்தானே.


(தொடரும்) 

 

( // பக்கத்து வீட்டுக்காரர் உண்மையை உடைத்தது அவரின் மருமகளிடம்தானே.

// KGG : ஹலோ நெ த - கதையில் கோபு வந்து கதவைத் தட்டுவதற்கு முன்பே சொல்லியிருக்கிறேன் - ' ஒரு சனிக்கிழமை. வீட்டில் எல்லோருக்குமே விடுமுறை.' மருமகளிடம் கோபு சொன்னது எல்லோருக்குமே கேட்டது. ) 


8 கருத்துகள்:

 1. வெகு நாட்களுக்குப் பின் எழுதிய சமையல் குறிப்பு - பன்னீரும் பத்மப்ரியாவும்...

  அன்பின் நெல்லை அவர்களது விமர்சனம் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ரசித்துப் படித்தேன். அதனால் அப்படி எழுதியிருக்கிறேன். உங்கள் எழுத்துக்குத்தான் பாராட்டு.

   நீக்கு
 2. பிரசங்க நெடி - :)

  மின் நிலா பொங்கல் மலரின் விமர்சனம் - அவர் பார்வையில் - நன்று.

  பதிலளிநீக்கு
 3. சிறுகதைகளை அனுபவித்து வாசித்திருக்கிறீர்கள். விபரமான விமரிசனம்

  பதிலளிநீக்கு
 4. //அவரைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் விஷன் இருந்திருக்குமானால், எதிர்கால வி.ஜே, ஆர்.ஜே வீட்டில் பிறந்திருக்கிறது என்று கொண்டாடியிருப்பார்கள்.// நானும் இதை நினைத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய இளமைக் காலத்தில் நிதானமாகத்தான் பேச வேண்டும்., ரேடியோ ஜாக்கிகள் வந்தது 90களில்தானே? 

  பதிலளிநீக்கு