வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 3

 மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 3 

எழுதியவர் : நெல்லைத் தமிழன் 

துரை செல்வராஜின் இன்னொரு கதையான ‘மருதாணிச் சித்திரம்’ தாயில்லாப் பிள்ளையின் மனதையும் கிராமத்துப் பண்புகளையும்  

சொல்லிச் சென்றாலும், கதை என்ன சொல்ல வருகிறதுகதையில் 

உள்ளவர்களின் உறவு என்ன என்பது புரியவில்லை யாருடைய தென்னந்தோப்பு, வீடு என்பதே குழப்பமாக இருக்கிறது. கார்மேகம் அத்தான் யார் என்பதுமே புரியவில்லை. “அறைப்பதா”? சொல்வது எப்படி என்றாலும் எழுத்தில் பிழை வரக்கூடாதே.

 

சுபஸ்ரீ ஸ்ரீராமின் பீட்ரூட் தொக்கு, புதுமையானதுதான். இனிப்பும் புளிப்புமாக இருக்குமோ? செய்துபார்க்கத் தூண்டுகிறது.

 

கீதா ரங்கனின் சிரோட்டி செய்முறை, நிறைய படங்களோடு தெளிவாக இருந்தது.  அது சரி… பதிர்பேணிக்கும் சிரோட்டிக்கும் எனக்குத் தெரிந்து கரண்டிக்கும் பாதாள கரண்டிக்கும் உள்ள சம்பந்தம்தான்.  ஆனால் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களைப் பார்த்து நாமே செய்யத் தூண்டும்படியான விளக்கங்கள்.  பாராட்டுகள் கீதா ரங்கன்.

 

ரேவதி நரசிம்ஹனின், ‘அம்மா செய்த மோர்க்குழம்பு’ மனதை மயக்கியது. சுட்டிப் பெண்ணுக்கு சமையல் கற்றுத்தரும் அம்மா. உம்மாச்சிக்குக் காண்பிச்சுட்டுச் சாப்பிடலாம் என்று சொன்ன அந்த இரட்டை ஜடை, பாவாடை சட்டை போட்ட பெண், பக்கத்தில் விறகடுப்பு, அதன் முன் ஊதுகுழலோடு உட்கார்ந்திருக்கும் அம்மா என்று அந்தச் சூழலே படமாக கண்ணில் விரிகிறது.  நல்ல எழுத்து.

 

“அக்கா மகள்” பரிவை குமாரின் சிறுகதை, பொதுவாக அக்கா மகளைக் கட்டிக்கொள்ளும் முறையையும் அதில் தம்பி மறுக்கும்போது வீட்டுக்குள் ஏற்படும் வருத்தத்தையும் மனதில் படரவிட்டுச் செல்கிறது.  செண்டிமெண்ட் பேசும் ராஜேஷ், மற்றவர்களெல்லாம் இந்த மாதிரிப் பேச்சைப் பேசிக்கொண்டிருந்தபோது, ஆரா அதனை எண்ணி கனவு கண்டுகொண்டிருந்தபோது என்ன செய்துகொண்டிருந்தான் என்ற கேள்வி மனதில் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. முடிவுக்காகப் பின்னப்பட்ட கதைபோலத் தெரிகிறதே தவிர முழுமையில்லை என்று தோன்றுகிறது.

 

தில்லைநாயகத்தின் ‘உலகளாவிய ஊறுகாய்கள்’, கல்கண்டு பத்திரிகை படித்த நினைவைக் கொண்டுவந்துவிட்டது. 

 

தேவராஜன் சண்முகத்தின், ‘அம்மா நினைவு ஊறும் ஊறுகாய்’ நல்ல ரசனையோடு அவர்கள் வீட்டின் நார்த்தங்காய் ஊறுகாய் தயாரிப்பைச் சொல்லியிருக்கிறார்.  அது சரி… கிடாரங்காயும் நார்த்தங்காயும் வேறு வேறு அல்லவா?

 

“ஊறுகாய் என்றால்” பானுமதி வெங்கடேச்வரனின் கட்டுரை, பத்திரிகைகள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளணும் என்பதைத்தான் தெளிவுபடுத்தியது.  எப்படி ஆவக்காய் ஊறுகாய் போடுவது என்பதை அவர் எழுதியிருக்கிறார் என்று நினைத்தால், அவர் நினைவிலிருந்து சொல்லியிருப்பது ஏடாகூடமான கதை, இதற்கு ஜெ.தான் அனேகமா படம் போட்டிருப்பார்… எப்படிப் போட்டிருப்பார் என்று யோசிக்க வைக்கிறது.

 

“ஊறுகாயின் நன்மைகளும் பிரச்சனைகளும்” என்ற தில்லை நாயகத்தின் கட்டுரை பல தகவல்கள் சொன்னாலும்,  உப்பு எலுமிச்சை, நார்த்தங்காய் உப்பு ஊறுகாய் தவிர மற்றவைகளால், மலைபோல் கட்டிய தயிர் சாதத்தை நொடியில் கரையச் செய்யும் என்பதைத் தாண்டி, அதன் மூலப் பொருட்களின் நலம் (நெல்லிக்காய்,  எலுமிச்சை, கடாரங்காய் போன்றவற்றின்) ஊறுகாயிலும் தொடரும் என்று குறிப்பிடுவதுதான் நம்பும்படியாக இல்லை. கோதுமையின் சத்தும், கரும்பின் சத்தும், மைதா ஸ்வீட்டில் இருக்கும் என்பதைப் போல.

 

ஊறுகாய் அதிகாரமோ (ஏ.ஜே.சூரியபிரகாஷ்) இல்லை ஊறுகாய் பாடலோ (கே.ஜி.யக்ஞராமன்) என்னைக் கவரவில்லை.

 

காமாட்சி மஹாலிங்கத்தின் ‘வெந்தய ஊறுகாய்’, அட… இதுவரை கேள்விப்படாத ஊறுகாயாக இருக்கிறதே என்று தோன்றியது. படிக்கிறவர்கள் மனதில் என்ன நினைப்பார்கள் என்பதை “என்ன..மெந்தியமாங்காய் ஊறுகாய்தானே’ என்ற முதல் வரியே காட்டிக்கொடுத்துவிடுகிறது.  அழகிய படங்களையும், செய்முறையையும் பார்த்த பிறகு, ‘நிஜமாகவே வெந்தய ஊறுகாய்’ என்று ஒன்று இருக்கு போலிருக்கு என எண்ணவைத்தது.  செய்துபார்த்துவிடலாமோ? 

 

(தொடரும்) 



13 கருத்துகள்:

  1. நிஜமாகவே வெந்தய ஊறுகாய் குஜராத்தில் பிரபலமான ஒன்று.அங்கே விதம் விதமான ஊறுகாய்கள் போடுவார்கள். எலுமிச்சை ஊறுகாயில் சர்க்கரைப் பாகு கலந்து ஒரு ஊறுகாய்! அருமையா இருக்கும். விமரிசனம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. முதலில் நெல்லைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து விட வேண்டும். விமர்சனம் என்ற பெயரில் பிட்டு பிட்டாகவே ஓரிரு வரி கமெண்ட்டுகளைப் பார்த்த இந்தத் தளத்திற்கு ஒட்டு மொத்த விமரிசனம் என்பது ஒரு புது மாதிரியான முயற்சி. புதுப்பாதையில் அடியெடுத்து வைத்து இதை ஆரம்பித்து வைத்திருக்கும நெல்லைக்கு அதற்காகவே வாழ்த்துக்கள். நாஸூக்கான அவரது சுட்டிக் காட்டல்கள் எல்லாமே உண்மையான வாசகனின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுபவை. எழுதுவோரின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் உள்ளன. வாழ்த்துக்கள், நெல்லை. உங்கள் பணி தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார்... எனக்கு விமர்சனம் எழுத ரொம்பவே தயக்கம். எல்லோருக்கும் அவரவர் படைப்பு மிக உயர்ந்ததுதானே. அவங்களுடைய நேரத்தைச் செலவழித்து எழுதி, அனுப்பி.... உட்கார்ந்த இடத்தில் விமர்சனம் செய்தால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று நினைத்தேன்.

      நீக்கு
  3. ஓ!..

    மருதாணிச் சித்திரம் கதைக்கான விமர்சனத்திற்கு நன்றி...

    மிகுந்த நெருக்கடியான - வேலைச் சுமையின் ஊடாகவெழுதிய கதை அது...

    உரையாடல்களின் வழி உறவுகளைப் புரிந்து கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்...

    சிக்கலைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூலுக்காக தாங்களும் அனுப்பணும் என்று ஒவ்வொருவரும் ஆர்வத்தோடுதான் எழுதி அனுப்ப்பியிருக்கிறோம். சில சமயம் சமையலில் எல்லாமுமே சிறப்பாக அமையாமல் போய்விடும் அல்லவா? முயற்சி, வேலை எல்லாமே போட்டிருந்தாலும், சில சமயம் இப்படி நிகழ்ந்துவிடும். சிறப்பான கதைகளை நிச்சயம் தமிழ் புத்தாண்டு மின்னூலில் எதிர்பார்ப்போம்.

      நீக்கு
  4. மற்றபடி மருதாணிச் சித்திரம் கதையில்
    வீட்டுப் பணியாளரை நேசித்து தாயில்லாப் பிள்ளையையும் தழுவிக் கொள்ளும் மாண்பினைச் சொல்லியிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. அந்தக் கதையில் வரும் பாட்டைப் பற்றி ரெண்டு வரி சொல்லியிருக்கலாம்...

    எனினும் மகிழ்ச்சி.. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக நினைக்கவேண்டாம். உங்க கதையில் உறவு, நேர்மறைச் சிந்தனை, வெள்ளந்தி, அன்பு/பாசம் போன்றவை சரியாகச் செதுக்கியிருக்கும். அதுக்காகத்தான் கதையை ஆர்வமாகப் படிக்கிறோம். சில சமயம் ஏமாற்றம் ஏற்படும்போது, இன்றைய விருந்தில் வாழைக்காய் கறி நல்லாப் பண்ணியிருந்தாங்க என்று சொல்வதை விட்டுவிடுவோம், மொத்தமாக விருந்தில் குறை இருந்ததே என்பது மனதில் பதிந்துவிடும்.

      நீக்கு
  6. தொடரும் விமர்சனம் - அவரது எண்ணங்களைச் சொல்லி இருப்பது சிறப்பு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  7. //இதற்கு ஜெ.தான் அனேகமா படம் போட்டிருப்பார்… எப்படிப் போட்டிருப்பார் என்று யோசிக்க வைக்கிறது.// இந்தக் கதைக்கு யார் படம் போட்டார்கள் என்று நினைவில் இல்லை. ஆனால் ஏடாகூடமாக இல்லை. ஒரு ஆண் தலையை பிடித்துக் கொண்டு விக்கித்து நிற்பது போன்ற படம்தான். 

    பதிலளிநீக்கு