திங்கள், 15 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 6

 மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 6 

எழுதியவர் : நெல்லைத் தமிழன் 

வை.கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ” என்ற தலைப்பைப் படித்த உடனேயே, இந்த ‘வழுவட்டை’ கதையை நாம் எங்கோ முன்னாலேயே படித்திருக்கிறோமே என்று யோசித்தேன். நகைச்சுவை கதை எழுதுவதற்கு தனித் திறமை வேணும். மிக நன்றாக, படிக்கும்போதே சிரிப்பு வரும்படியாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  ரொம்ப ரொம்ப ரசித்துப் படிக்கும்படி இருந்தது. ஆறு அத்தியாயங்கள் வரை மிகச் சிறப்பாகச் சென்ற கதை,  துபாய் பயணம், அதனைத் தொடர்ந்த அரசியல் கட்சி என்று சம்பந்தமில்லாத தலைப்புகளை இந்தக் கதையில் சேர்த்தது, கதையை ஒட்டுப்போட்ட துணி போல ஆக்கிவிட் ட து. என்னதான் உள்ளூர ‘பொடி’ இந்த அத்தியாயங்களில் தொடர்ந்துவந்தாலும் கதையில் ஒன்ற முடியவில்லை. எப்போதுமே நகைச்சுவை கதைகளை சட் என்று ஓரிடத்தில் நிறுத்திவிட வேண்டும். தொடர்ந்து எழுதினால், நகைச்சுவை நீர்த்துவிடும் என்று பிரபல நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அகஸ்தியன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.  புதுப் பெண்டாட்டி பற்றி தன் சந்தேகங்கள் அதற்கான விளக்கங்கள் சிரிக்க வைத்தன. நல்ல இயல்பான நகைச்சுவை எழுத்து. பாராட்டுகள்.

 

ரிஷபனின் ‘மன்னிப்பு’ சிறுகதை மனதைத் தொட்ட கதை. அம்மா சொன்ன சின்னவயதுத் தீர்வுடன், திருமணமான தம்பதியினரில் சிறிய மனத்தாங்கலை இணைத்து நன்றாக எழுதியிருக்கிறார். மனதில் இளமையும் அனுபவமும் நிறைந்த கதை. மிகச் சிறப்பாக இருந்தது.  சிறிய வார்த்தையான ‘மன்னிப்பு’ கேட்பது எவ்வளவு பெரிய தவறுகளையும் ஆற்றும் வல்லமையுடையது என்பதைப் புரியவைக்கும் கதை. பாராட்டுகள் ரிஷபன்.

 

ரேவதி நரசிம்ஹனின் ‘காதலும் காமமும்” கதை மனதில் ஒன்றவில்லை. இது நடந்த சம்பவம் என்பது ஆச்சர்யத்தை விளைவித்தது.  காதல் திருமணம் செய்துகொண்டவர்களிடம் பரஸ்பர நம்பிக்கை 30 வருடங்களில் வந்திருக்கவில்லையா? இல்லை கணவன் விளையாட்டுத்தனம் மிக்கவன் என்பதால், கற்பனையாகச் சொன்ன செய்தி, உண்மையாகத்தான் இருக்கும் என்று அவளுக்குத் தோன்றிவிட்டதா?  அவர்கள் வாழ்வு வீண் பேச்சினால் அழிந்ததா இல்லை பரஸ்பர நம்பிக்கையின்மையினாலா என்று சொல்லத் தெரியவில்லை. எத்தனை விதவிதமான மனிதர்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்று மட்டும் மனதில் தோன்றியது.  

 

கீதா ரங்கனின் ‘வீரம்மை ஆச்சி’ சிறுகதை. மனதை என்னவோ செய்த சிறுகதை. நிறைய நாடகத் தன்மை,  ஒரே பேராக இருக்கிறதே என்றுகூட கவனத்தில் கொள்ளாத ஆச்சி, “கிராம ம் இந்தியாவின் ஆன்மா” என்ற ப்ராஜக்டுக்கான கிராமப் பயணம் என்று கொஞ்சம் சரியாக க் கோர்க்கப்படாத மாலையாக கதை இருந்தாலும், கதையின் ஒரு வரி என்னைக் கவர்ந்த து.  இன்னும் கவனமுடம் செதுக்கப்பட்டிருந்தால் மிக நன்றாக வந்திருக்கக் கூடிய கதை.  இடையில் ஸ்ரீராமின் கவிதைகளை வேறு இணைத்திருக்கிறார்..  கதையின் one lineக்குப் பாராட்டுகள்.

 

ஐயப்பன் கிருஷ்ணனின் ‘ஊர்மிளையின் உறக்கம்’ சிறுகதை. மிக வித்தியாசமான ஒரு கதை. இராமாயணம் படிக்கும் யாரும் ஊர்மிளையின் துயரத்தை மனதில் கொள்வதில்லை.  இலக்குவன் ஊர்மிளையின் இழந்த வாழ்க்கையை சிறப்பாகக் கதையாசிரியர் மனக்கண்ணில் கொண்டுவந்திருக்கிறார்.  சாதனைகளை ஆண்கள் புரியவேண்டுமானால் அது பல பெண்களின் கண்ணீருக்கும் காரணமாக அமையும் என்பதை நன்றாகச் சொல்கிறது.  சீதையைத் தவிர பிற பெண் பாத்திரங்கள் (சாந்தா…) இதுவரை கேள்விப்பட்டதில்லை. நல்ல கதைக்குப் பாராட்டுகள் ஐயப்பன் கிருஷ்ணன்.

 

சுபஸ்ரீ ஸ்ரீராமின் ‘நாற்காலி’ சிறுகதை எதை நோக்கிப் பயணிக்கிறது என்றே தெரியவில்லை. பழைய பொருட்களின் மதிப்பைப் பற்றி ஏதோ எழுதப்போகிறார் என்று பார்த்தால் எங்கெங்கோ பயணித்து நாற்காலியை அதீத விலைக்கு விற்பதில் முடிகிறது.  கதை என்னைக் கவரவில்லை.

 

சென்னை-திருப்பதி பாதயாத்திரை பற்றிய தில்லைநாயகத்துடனான பேட்டி நன்றாக இருந்தது.  பேட்டியின் மூலம் பல விவரங்கள் தெரிந்தது என்றாலும் பேட்டி முழுமையானதாக இல்லை.  இன்னும் பல விஷயங்களை பேட்டி கண்டவர் கேட்டிருக்கவேண்டும். உதாரணமாக, எப்படி மூன்று வகையான டிக்கெட்டுகள் வாங்குவீர்கள், வழியில் உணவிற்கு எப்படி ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன, முன்பே நிர்ணயித்த இடங்களில் இரவு தங்குவீர்களா?, ஒரு சமயத்தில் எவ்வளவு கிலோ மீட்டர்கள் நடப்பீர்கள், ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் நடக்க முடியுமா?, ஓய்வெடுப்பதை யார் முடிவெடுப்பார்கள், பயணத்தில் கலந்துகொள்ள வயது ஏதேனும் உண்டா, பயணத்தின் என்னவகையான ரசமான சம்பவங்கள் நடந்துள்ளன, யாரேனும் பாதி வழியில் தொடர முடியாமல் யாத்திரையை முடித்துக்கொள்ள நேர்ந்திருக்கிறதா?,  மலையில் ஏறும்போது கடினமாக இல்லையா, எவ்வளவு நேரத்தில் மலையை ஏறி முடிப்பீர்கள், திருமலையில் எங்கு தங்குவீர்கள், டார்ச் லைட்டின் தேவை என்ன, எவ்வளவு நாட்கள் திருமலையில் தங்குவீர்கள், திருச்சானூர் கோவில்களுக்குச் செல்வதுண்டா, சென்னையிலிருந்து திருப்பதி வரை உள்ள பாதியில் வேறு கோவில்களையும் தரிசனம் செய்வதுண்டா என்று பலவித கேள்விகள் என் மனதில் எழுவதே, பேட்டி முழுமையாக இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பேட்டிக்குச் சம்பந்தமில்லாத, ‘நடைப்பயிற்சியின் நன்மைகள்’ போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். அவரிடம் திருமலை அல்லது திருவண்ணாமலை நடைப் பயணத்தை முழுமையான பேட்டி எடுத்து அடுத்த மின்னூலில் வெளியிடலாம் அல்லது நானே அவரைப் பேட்டி காணலாம் என்று தோன்றுகிறது..

 

வாசகர் அனுப்பிய படங்கள் – தேர்வு சரியாக இல்லை. பல படங்கள் தெளிவாகவும் இல்லை. எங்கே எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் இல்லை. என்னை இந்தப் பகுதி கவரவில்லை.

 

குழந்தைகளில் ஓவியங்களுக்குப் பாராட்டுகள். தொடர்ந்து அவர்கள் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ளவேண்டும். படங்களை சரியாக வெளியிடவில்லை (புகைப்படமே சரியாக எடுக்கப்படவில்லை)

 

“நந்தீஸ்வரர் தரிசனம்” என்ற தலைப்பில் ராமலஷ்மி அவர்களின் புகைப்படங்கள் மிக அழகாக இருந்தன. சிறந்த புகைப்படக் கலைஞர் என்பது படங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. முதல் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.  படங்களை ஒழுங்குபடுத்தி இரண்டு மூன்று பக்கங்களிலேயே அனைத்தையும் வெளியிட்டிருக்கலாம்.

 

நான் மரபுக் கவிதைகளையும், கருத்தை புதுவிதமாகச் சொல்லும் சிந்திக்க வைக்கும் புதுக்கவிதைகளையும் ரசிப்பவன். அகழ்வாரைத் தாங்கும் நிலத்தின் குணத்தைச் சிலாகிக்கும் ‘பூமித்தாய்க்கு வணக்கம்”, “வாழ்க்கை உன் கையில்” போன்றவை சுமார் ரகம். “என் இதயப் பெண்ணே” கவிதை கவர்ந்தது.  (அனைத்தும் சூரியப்ரகாஷின் கவிதைகள்). ஒற்றுப் பிழைகள் கவிதைகளில் நிரம்பி இருப்பது உறுத்துகிறது. ராமலஷ்மியின் நீர்க்கோலங்கள் கவிதை ரசிக்க வைத்தது. பெரும்பாலான கவிதைகள் அவர் சொன்னது போன்றே இருக்கின்றன. இருந்தாலும் மொழியன்னை அனேக கவிதைகளை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்றே நினைக்கிறேன்.  துரை செல்வராஜின் ‘கண்ணாரப் பூப்பூத்து’ கவிதை பொங்கலை ஒட்டியுள்ள கிராமீய மனத்தைச் சொல்லிச் செல்கிறது. 


முதலில் சுருக்கமான விமர்சனம் மட்டும் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் கிட்டத்தட்ட 250 பக்கங்கள் உள்ள ஒரு சிறப்பிதழில், ஏகப்பட்ட உள்ளடக்கங்கள், சிறுகதை, கவிதை, அனுபவங்கள் என்று இருக்கும்போது, அதையெல்லாம் சுருக்கி மொத்த மின்னூலுக்கும் 500 வார்த்தைகளுக்குள் விமர்சனம் எழுதினால், பல படைப்பாளிகளின் பங்களிப்பை ignore செய்ததுபோல ஆகிவிடும் என்று தோன்றியது.  பாராட்டோ இல்லை விமர்சனமோ, அதனை நிச்சயம் அந்த அந்தப் படைப்பாளிகள் எதிர்பார்ப்பார்கள். அதனால்தான் முடிந்த அளவு எல்லாப் படைப்புகளையும் இந்த விரிவான விமர்சனத்தில் கொண்டுவந்திருக்கிறேன்.  எந்த ஒரு படைப்பாளியும், தனக்குத் திருப்தி தரும் படைப்பைத்தான் அனுப்ப முயல்வார். அதனால், நான் குறை என்று என் கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது, பலருக்கு நிறையாகத் தெரியும் சாத்தியங்கள் உண்டு.  ஒவ்வொருவருக்கும் ரசனை என்பது வித்தியாசப்படும்.  அதனால் நான் விமர்சித்திருப்பதை, என் கண்ணோட்ட அளவில் எழுதியுள்ள விமர்சனமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.  என்னுடைய விமர்சனம், மின்னூல் சிறப்பிதழ் வருவதற்கு உறுதுணையாக நின்ற படைப்பாளிகள் அனைவருக்கும், இன்னும் சிறப்பான படைப்புகளை வெளிக்கொணர உத்வேகமளிக்கும் என்று நம்புகிறேன்.

(நிறைவு) 

= = = = 

25 கருத்துகள்:

  1. கீதா ரங்கனின் கதை மனதைத் தொட்டதுனு சொல்லிட்டு பின்னர் அதற்கு முரணான கருத்து! நாடகத்தன்மையான கதை எப்படி மனதை என்னவோ செய்யும்? நாடகம் தானே! அப்புறமா மறுபடி வரேன். பொங்கல் மலரைத் திரும்பப் படிக்கணும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் ஒரு வரி மனதைத் தொட்டது. ஆனால் அதைக் கொண்டு சென்ற விதம், நிஜ வாழ்வில் நடக்க முடியாமல் நாடகத் தன்மையாக இருந்தது.

      நீக்கு
  2. அன்பு நெல்லைத்தமிழன்
    அருமையான விமரிசனம்.

    நல்ல அலசல். என் கதைக்கு மட்டும் நான் பதில் சொல்கிறேன்.
    இது நடந்தது தான்.
    இப்பொழுது வயதான 80 வயது தம்பதிகளாக
    நட்புடன் இருக்கிறார்கள்.

    சுந்தரம் மனைவி பொஸசிவ் தான்.
    ஏதோ ஒரு க்ஷண நேரத்தில் விதி விளையாடி அவர்கள் வாழ்வின் சில காலங்களைக் கெடுத்தது.

    ஏன் இதே வாலண்டைன் தேதியில் எங்கள் சின்ன வயதில்
    இவர் ,தன் பல்டாக்டருக்குப் பூங்கொத்து கொடுத்து,
    எனக்குக் கொடுக்கவில்லை என்று மூன்று நாட்கள் பேசாமல் இருந்தேன்:))))))))
    இப்பொழுது சிரிப்பாக வருகிறது.
    அவர்களை நினைக்கும் போது மனசு படும் வருத்தம்
    சொல்லி முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா. சில நேரங்களில் எதற்காக நாம் அப்படி நடந்துகொண்டோம், அது பெரிய விஷயமே இல்லையே என்று தோன்றும். நீங்கள் எழுதியுள்ள சம்பவம் ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கு.

      நெல்லையில் ஒரு பெரிய வக்கீல், நிறம் கருப்பு. மிக அழகான வெள்ளை வெளேர் மனைவி. மனைவிக்கு திருமணத்தில் இஷ்டமில்லாமல் நடந்தது. மனைவி கணவனைத் தொட விடலை. அவருடன் வெளியில் நடக்க மாட்டார். பத்து அடிகள் முன்பு செல்வார். பிறகு அவரை விட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போய்விட்டார். காலம் அவர் செய்தது தவறு என்பதைப் புரிய வைத்தவுடன் வந்து சேர்ந்தார். ஆனால் பிறகு குழந்தை பிறக்கவே இல்லை. இப்படி எத்தனையோ விநோத வாழ்க்கைகள் நடக்கிறது.

      நீக்கு
  3. சிறப்பான விமர்சனம். ஒவ்வொரு பகுதியையும் குறித்த அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். எப்போதுமே விமர்சனம் செய்யும்போது கொஞ்சம் கஷ்டம்தான், விமர்சிக்கப்படும் படைப்பை எழுதியவர் மனவருத்தம் கொள்வர். நானே இது வேண்டாத வேலை என்றுதான் நினைத்தேன்.

      நீக்கு
  4. விமர்சனங்கள் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் அருமையான விமர்சனம் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... சும்மா படித்த பிறகு என்னுடைய எண்ணத்தை எழுத ஆரம்பித்தேன். அவ்ளோதான் காமாட்சி அம்மா.

      நீக்கு
  5. கோபு >>>>> நெல்லைத்தமிழன் - 1

    //வை.கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ” என்ற தலைப்பைப் படித்த உடனேயே, இந்த ‘வழுவட்டை’ கதையை நாம் எங்கோ முன்னாலேயே படித்திருக்கிறோமே என்று யோசித்தேன்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எழுதியவரோ, அவரின் எழுத்தோ, வாசிப்பவரோ, அவரின் ரசனையோ வழுவட்டையாக இருப்பினும்கூட, எழுச்சியுடன்  யோசிக்க வைத்துள்ளது என்பதைக் கேட்க மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது ஸ்வாமீ.   

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. கோபு >>>>> நெல்லைத்தமிழன் - 2    

    //நகைச்சுவை கதை எழுதுவதற்கு தனித் திறமை வேணும். மிக நன்றாக, படிக்கும்போதே சிரிப்பு வரும்படியாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  ரொம்ப ரொம்ப ரசித்துப் படிக்கும்படி இருந்தது.//

    இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் பல கோடிக்கணக்கான உயிரினங்களில், ஒன்றைப்படித்து, புரிந்துகொண்டு, மனம் விட்டுச்  சிரிக்கக்கூடிய ஆற்றல் என்பது, மனிதர்களுக்கு மட்டுமே இறைவனால், பிரத்யேகமாக  அளிக்கப்பட்டுள்ள ஓர் வரமாகும், என நகைச்சுவை மன்றத்தில் பேசுவோர் அடிக்கடிச் சுட்டிக்காட்டி சிலாகித்துச் சொல்வது உண்டு.  

    எப்படி நகைச்சுவையாக எழுதுவதற்கு தனித்திறமை வேண்டுமோ, அதே போல அதை வாசித்து, மனம் விட்டு, வாய்விட்டுச் சிரிக்கவும் ஓர்  தனித்திறமை வேண்டும்தான். அதுவும் இன்றைய அவசர உலகில், ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே  முடிகிறது.   மீதி 999 பேர்கள்,  எந்த நகைச்சுவைக்கும் சிரிக்கவே மாட்டார்கள். விளக்கெண்ணெய் குடித்தது போலவும், எதையோ பறி கொடுத்ததுபோலவும் இருப்பார்கள்.

    இதில் ஆயிரத்தில் ஒருவனாகத் திகழும்  தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.  

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரத்தில் ஒருவனாக இருந்தாலும், ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதால், ஆயிரத்தில் ஒருத்தியைத் தேடும் வேலை மிச்சமாகிவிட்டது.

      நீங்க சொல்லியதுபோல, அவசர உலகில், நம் மனது, சிரிப்பொலி, நகைச்சுவைத் துணுக்குகள், கதைகள், நாவல்கள் (நகைச்சுவை நாவல்கள்) என்று தேடுவது உண்மைதான்.

      அதற்குத் தீனியாக நல்ல நகைச்சுவைக் கதைகளைப் படிக்கும்போது மனது ரிலாக்ஸ் ஆகிறது.

      நீக்கு
  7. கோபு >>>>> நெல்லைத்தமிழன் - 3  

    //ஆறு அத்தியாயங்கள் வரை மிகச் சிறப்பாகச் சென்ற கதை,  துபாய் பயணம், அதனைத் தொடர்ந்த அரசியல் கட்சி என்று சம்பந்தமில்லாத தலைப்புகளை இந்தக் கதையில் சேர்த்தது, கதையை ஒட்டுப்போட்ட துணி போல ஆக்கிவிட்டது. என்னதான் உள்ளூர ‘பொடி’ இந்த அத்தியாயங்களில் தொடர்ந்துவந்தாலும் கதையில் ஒன்ற முடியவில்லை.//

    கதையையையும், கதையின் தலைப்பையும் நன்கு மீண்டும் வாசித்து யோசித்துப் பாருங்கள். மூக்குக்கும் மூக்குப்பொடிக்கும் இருக்கும் சம்பந்தம் போல நல்ல சம்பந்தம் இருப்பதை நன்கு உணர்வீ ர்கள்.
     
    'மூக்குப்பொடி போடும் இந்த மூளையுள்ள ஆண்களுக்கு முக்கியமாகத் தேவை இந்தக் கைக்குட்டை' என 'தூக்குத்தூக்கி' என்ற சினிமாப்  படத்தில் துணி வியாபாரியாக, ஓர் காட்சியில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாட்டுப்பாடுவார். அந்தக் கர்சீப் என்பதைத்தான் 'ஓட்டுப்போட்ட துணி' எனச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.  மிக்க நன்றி.

    ஆமாம் .... பொடி போடுபவர் அணியும் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் கைக்குட்டை இருக்கக் கூடாது.   ஒட்டுத்துணிபோல டார்க் கலரில் (பொடிக்கலரில்) மட்டுமே இருக்க வேண்டும்.  

    தங்களால் எனது மிக  நீண்ட, முழு நீள நகைச்சுவைக் கதையில் ஒன்ற முடியாமல் போனாலும்கூட, என்னால் தங்களின் இந்த விமர்சன வரிகளில் ஒன்றிப்போக முடிந்துள்ளதில்  மட்டற்ற மகிழ்ச்சியே. :)    

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை கோபு சார்... ஆறு அத்தியாயங்கள் வரை அது தொடர் நகைச்சுவை. மற்ற இரண்டு அத்தியாயங்கள் தனித் தனி நகைச்சுவை நிகழ்வுகள். எல்லா அத்தியாயங்களுமே ரசிக்கும்படி இருந்தன என்பது உண்மை.

      துபாய் அனுபவம், அரசியல் கட்சியில் வவஸ்ரீ என்ற தலைப்பில் இரண்டு அத்தியாயங்களையும் ரசித்தேன்.

      நான் என் உறவினர்களில் ஒரே ஒருத்தரை, (பொடி போடுபவரை) 35 வருடங்களுக்கு முன்பு கண்டிருக்கிறேன். மதுரையில் படித்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்து நெல்லைக்கு பேருந்தில் விடுமுறைக்குச் செல்லும்போது பட்டணம் பொடியின் பெரிய விளம்பரப் பலகை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான் எனக்கும் 'பொடி'க்கும் உள்ள தொடர்பு. மற்றபடி இட்லி மிளகாய்ப்பொடிதான் எனக்குத் தெரிந்தது.

      நீக்கு
  8. கோபு >>>>> நெல்லைத்தமிழன் - 4   

    //எப்போதுமே நகைச்சுவை கதைகளை சட் என்று ஓரிடத்தில் நிறுத்திவிட வேண்டும். தொடர்ந்து எழுதினால், நகைச்சுவை நீர்த்துவிடும் என்று பிரபல நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அகஸ்தியன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.//

    அடியேன் கடுகுக்காகவோ, மிளகுக்காகவோ இந்தக் கதையை எழுதவில்லை. எனது பிரத்யேக  வாசகர் வட்டத்திற்காக, எனது ஆத்ம திருப்திக்காக, எனது முழுத்திறமைகளையும் உபயோகித்து,  எனது வலைத்தளத்தில், குறிப்பாக தமிழக சட்டசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நேரங்களில் மட்டும் இதுவரை வெளியிட்டு, வாய்விட்டுச் சிரித்து கருத்துக்கள் எழுதிய  ஆயிரக்கணக்கான வாசகர்களின்   பாராட்டுக்களைப் பெற்று மகிழ்ந்துள்ளேன். 

    என்னைப்பொறுத்தவரை சட்டென்று ஓரிடத்தில் மிக அழகாகவே, இந்தக்கதையை  நிறுத்தி முடித்துள்ளேன். 

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சட்டசபை தேர்தலின்போதும் நல்ல நகைச்சுவைக் கதையை எதிர்பார்க்கலாமா?

      நீக்கு
  9. கோபு >>>>> நெல்லைத்தமிழன் - 5  

    இந்தக்கதைக்கான விமர்சனப்போட்டிகளில் (2014) பங்கேற்றவர்களில் ஐவருக்கு, போட்டியின் நடுவர் அவர்களால் ரொக்கப் பரிசுக்குப் பரிந்துரைத்து, என்னால் பரிசளிக்கப்பட்டுள்ளது.     

    அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.com/2014/04/vgk-13-03-03-third-prize-winner.html 
    மூன்றாம் பரிசு 

    http://gopu1949.blogspot.com/2014/04/vgk-13-02-03-second-prize-winners.html 
    இரண்டாம் பரிசுகள் (இருவருக்கு)

    http://gopu1949.blogspot.com/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html
    முதல் பரிசுகள்  (இருவருக்கு)

    http://gopu1949.blogspot.com/2014/04/vgk-13.html
    முழுக் கதைக்கான இணைப்பு   

    -=-=-=-=-=-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதான் காசை வெளிலேயே எடுப்பதில்லையாமே. விசிறி மடிப்பு செய்து பரிசளித்ததெல்லாம் பழங்கனவாகப் போய்விட்டதாம் என்று நிறைய விமர்சகர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். (விமர்சகர்கள் என்ன.. 2016ல் இணையத்துக்கு வர ஆரம்பித்த நெல்லைத் தமிழன் நினைத்துக்கொள்கிறார் ஹாஹ்ஹா)

      எங்க..போட்டிலாம் வைத்தால், திரும்பவும் விசிறி மடிப்பாக பணத்தை ரெடி பண்ணணும் என்பதற்காகவே நீங்கள் இணையத்தில் எழுதுவதில்லை என்று கேள்விப்படுகிறேன். ஹா ஹா ஹா.

      சலவை நோட்டுக்களாக பணத்தை வங்கியிலிருந்து வித்டிரா பண்ணினவுடன் சொல்லுங்கள்... உங்கள் புது இடுகைகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

      நீக்கு
  10. Apart from Jokes, பொதுவா விமர்சனம் செய்வது என்பது, வேண்டாத வேலை என்பது என் எண்ணம். எனக்கு, 'உட்கார்ந்த இடத்திலேயே நமக்கு வருகின்ற பஜ்ஜி, இனிப்பு வகைகள்' போன்றவற்றை, இதில் அரிசி மாவு இன்னும் வெந்திருக்கலாம், உப்பு கொஞ்சம் குறைச்சலோ, மிளகாய் பஜ்ஜியில் கடலைமாவு நன்றாக ஒட்டலை என்று வக்கணையாக விமர்சிப்பது தவறு என்ற எண்ணம் உண்டு. (கலாய்த்தல் தனி ரகம். அது நெருக்கத்தை அதிகமாக்கும் என்று நினைப்பேன், அது தவறு என்ற எண்ணமும் உண்டு). விமர்சகர்கள் அனேகமா எல்லோருக்கும், perform பண்ணத் தெரியாது (அதுனாலத்தான் காலாட்டிக்கிட்டு விமர்சிக்கறாங்க)

    விமர்சகர்களால் ஒரு மாற்றமும் விளையாது. அது ஒரு பொழுதுபோக்குதான். இப்போ நாலு பேர்ட்ட (ஏன் நாலு பேர்..நானூரு பேர்) பேசினீங்கன்னா, கோஹ்லி என்ன என்ன செய்யணும், யாரை எடுக்கணும், எப்படி விளையாடணும், யாரை பௌலிங் போடச் சொல்லணும் என்று வக்கணையாக ஐடியா கொடுப்பார்கள். அது சரி.. உள்ளூர் மேட்ச் ஏதாவது விளையாடியிருக்கயா என்று கேட்டால், ஸ்டேடியத்தைப் பார்த்திருக்கிறேன், கிரிக்கெட் மட்டை விற்கும் கடையைத் தெரியும் என்று சொல்வாங்க. (நானும்தான்). இல்லைனா, அதிகபட்சம், உள்ளூர் மேட்ச் விளையாடி சில சமயம் இரண்டு டிஜிட் ரன் எடுத்திருக்கிறேன் என்பார்கள். அவ்ளோதான் விமர்சகர்களின் வேலை, திறமை.

    அதனால விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து எல்லோரும் சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை முயற்சி செய்யுங்கள். நிச்சயம் அனேகமாக எல்லாப் படைப்புகளும் ரசிக்கும்படித்தான் இருக்கும். நான் பொங்கல் மலரில் ரொம்பவே ரசித்தவைகள் அப்பாதுரை அமானுஷ்ய கதை, கேள்வி பதில்-to some extent, வல்லிம்மாவின் மோர்க்குழம்பு, கோபு சாரின் நகைச்சுவைக் கதை, காமாட்சி அம்மாவின் வெந்தய ஊறுகாய், கமலா ஹரிஹரனின் செய்முறைகள், ரிஷபன் சாரின் கதை, மற்றும் சில சிறுகதைகள், ஆன்மீகம். அருண் ஜவஹரின் ஓவியங்களும் அருமை (நான் ஓவிய ரசிகன், தொழில் தெரிந்தவன் என்பதால்). மின்னூல் compile செய்யப்பட்டிருக்கும் விதமும் அருமை. இதில் ஸ்ரீராம், ஜீவி சார் போன்றவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவில்லை என்ற குறையும் உண்டு. பங்கேற்றவர்களுக்குத் தேவையான நேரம் கிடைக்காததால், அவர்களின் படைப்புகளை இன்னும் செம்மை செய்யும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் என்றும் புரிகிறது.

    அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துகளை கவனத்தில் கொள்கிறோம். நன்றி.

      நீக்கு
  11. //பங்கேற்றவர்களுக்குத் தேவையான நேரம் கிடைக்காததால்,/

    படைப்பாளிகளுக்கு தகவல் நவம்பர் இரண்டாவது வாரம் சொல்லி டிசம்பர் 31 வரை நேரம் கொடுக்கப்பட்டது என்று நினைவு.

    :)


    //இதில் ஸ்ரீராம், ஜீவி சார் போன்றவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவில்லை என்ற குறையும் உண்டு/

    பங்கேற்பது என்றால் எழுதுவதா?  நான் என்ன எழுதுவது என்று யோசிக்கவில்லை.  ஆனால் யார் யாரை என்னென்ன சப்ஜெக்டில் எழுத வைக்கலாம் என்று யோசித்து தகவல் அனுப்பி... வாங்கினேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படைப்பை ரெடி பண்ணுவது ஓரளவு முடியும். அதுக்கே சிலர், டிராஃப்டில் இருந்ததைத் தட்டிக் கொட்டிச் சரி பண்ணியிருப்பாங்க. அதைச் செதுக்கத் தேவையான நேரம் அவங்களுக்குக் கிடைத்திருக்காது.

      நீங்க, சென்ற வருடம் நினைவுபடுத்தும் சிலவற்றைப் பற்றி கவிதை எழுதியிருக்கலாம் (2020ன்னு சொன்னா உங்க மனசுல வரும் 6 நிகழ்வுகளை. உதாரணமா, புதுவீடு தயார் செய்வது/புகுவது, கொரோனா பூட்டிய பூட்டு, நோய் தரும் பயம், ஊரடங்கு, காய்கறி/பழம்/மளிகை திடுமென நமக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டா நம்மிடம் ஏற்படும் பதட்டம்....). ஜீவி சார், பழந்தமிழ் இலக்கியமும் நம் இன்றைய வாழ்வும் என்ற தலைப்பில் எழுதியிருக்கலாம்.

      நீக்கு
  12. //அதனால், நான் குறை என்று என் கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது, பலருக்கு நிறையாகத் தெரியும் சாத்தியங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ரசனை என்பது வித்தியாசப்படும். அதனால் நான் விமர்சித்திருப்பதை, என் கண்ணோட்ட அளவில் எழுதியுள்ள விமர்சனமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சொல்லவேண்டியவற்றை எல்லாம்  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச்சொல்லிவிட்டு ............ பேஷ் .... பேஷ் ............... சுவாமீ , நீர் நல்ல புத்திசாலி.  வாழ்க!  

    பதிலளிநீக்கு