வியாழன், 13 பிப்ரவரி, 2020

போலீஸ், போலீஸ்!


காத்திருந்தவன் கண்களுக்கு, மாலைப்பொழுது மங்கலாகும் நேரத்தில், வீட்டைச் சுற்றிக்கொண்டு வந்த நீலு தென்பட்டார். 

சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே தயக்கத்துடன் நடந்துவந்த நீலு, வேலிக் கதவின் வழியாக உள்ளே நுழைவதைப் பார்த்ததும், அவன் தன் திட்டத்தை செயல் படுத்தத் தயாரானான். 
நீலு தன்னுடைய மொபைலை எடுத்து flash light ஆன் செய்து வீட்டுக்குள் பார்க்க முற்பட்டதும், பிளாஸ்டிக் கயிற்றை இழுத்து கேட்டை மூடினான். பிறகு மரத்தில் கட்டப்பட்டிருந்த மொபைல் எண்ணுக்கு அழைப்பு அனுப்பினான். 

அவன் எதிர்பார்த்தபடியே, பேயறைந்தது போல, கண் மண் தெரியாமல் ஓடிவந்த நீலு, தான் உள்ளே வந்தபோது திறந்திருந்த கேட், பிறகு மூடப்பட்டிருப்பதை அறியாது, ஓடி வந்த வேகத்தில் வேலிக் கதவு அருகே தடுக்கி விழுந்தார். அதிர்ச்சியில் இறந்துபோனார். 

எல்லா அமைப்புகளையும் திட்டமிட்டு செய்த இவன், நீலு இறந்துவிட்டாரா என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டான். பிறகு, மூடியிருந்த கேட்டை கொஞ்சம் திறந்து, வலது பக்க ஜன்னல் அருகே சென்றான். அங்கே அவன் விட்டு வைத்திருந்த பிளாஸ்டிக் கயிற்றின் முனை மூலம் உள்ளே அவன் போட்டு வைத்திருந்த புடவையை வெளியே இழுத்து, புடவை, கயிறு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டான். பிறகு, மரத்தில் கட்டியிருந்த மொபைல் போனையும், கயிற்றையும் எடுத்துக்கொண்டான். அதன் பிறகு, கேட்டை, நீலு அடிபட்டு விழும்போது எப்படி இருந்ததோ, அதே நிலையில் வைத்தான். கேட்டில், தான் கட்டியிருந்த பிளாஸ்டிக் கயிற்றை அவிழ்த்து, அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டான். 

தூரத்தில் நிறுத்தியிருந்த தன்னுடைய காரை நோக்கி நடந்தான். 

*************************

நீலுவுக்காகக் காத்திருந்த தங்கதுரை, ரொம்ப நேரம் ஆகியும் நீலு திரும்பி வரவில்லையே என்று கொஞ்சம் கவலைப்பட ஆரம்பித்தார். 

அரை மணி நேரம், முக்கால் மணி நேரம் ..... ஒரு மணி நேரம்..... ஊஹூம். 

நீலு திரும்ப வரவில்லை. 

'இந்த சினிமாக்காரங்க எல்லோரும் இப்படித்தான். நேரத்தின் அருமை தெரியாதவர்கள். போனால் போன இடம், வந்தால் வந்த இடம் என்று நேரத்தை வேஸ்ட் செய்வார்கள்' என்று நினைத்துக்கொண்டார். 

' இந்த நீலு எங்கே உட்கார்ந்து தியானம் செய்கிறானோ - சப்தம் செய்யாமல் போய்ப் பார்த்து வரலாம்' என்று நினைத்து, மெதுவாக காரிலிருந்து இறங்கி, அந்த வீட்டை நோக்கி வந்தார். 

" நீலு, நீலு.... " என்று மெல்லிய குரலில் கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் பின்பக்கம் வந்தவர், நீலு விழுந்துகிடந்ததைப் பார்த்ததும், திடுக்கிட்டார். 

அவசரம் அவசரமாக போலீசுக்கு போன் செய்தார். 
            
போலீஸ் வந்தவுடன், 'நீலு யார், அவர் அங்கே தன்னுடன் ஏன் வந்தார்' என்ற விவரங்களை அவர்களிடம் கூறினார், தங்கதுரை. 

           

போலீஸ், நீலுவின் உடலை, விழுந்துகிடந்த நிலையை எல்லாவற்றையும் படம் பிடித்துக்கொண்டார்கள்.  'இடத்தைப் பார்த்தால், இது கொலை போலத் தெரியவில்லை' என்று ஒருவர் சொன்னார். இன்னொருவர், 'ஆமாம். முற்றிலும் புதிய இடத்தில், யாருக்கும் தெரியாத ஒருவர் உயிரிழக்க நேரிடுகிறது என்றால், அது தற்கொலை அல்லது விபத்தாக இருக்கலாம்' என்றார். 

ரிப்போர்ட் ஒன்று தயார் செய்து, தங்கதுரையிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். பிறகு உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார்கள். 

இரண்டு போலீஸ் அதிகாரிகள், அந்த இடத்தை மேலும் ஆய்வு செய்ய, அங்கேயே இருக்க முடிவு செய்தனர். வேறு இரண்டு போலீஸ் அதிகாரிகள் தங்கதுரையுடன், அவருடைய காரில், நீலு தங்கியிருந்த ஹோட்டல் அறையை ஆய்வு செய்ய வந்தனர். 

***************** 

போலீசுடன் வந்த தங்கதுரையைப் பார்த்ததும், ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்த வினோத் குழம்பிப்போனான். போலீஸ் அதிகாரிகள், நீலுவின் அறை சாவியை வாங்கிக்கொண்டு, தங்கதுரையிடம், " நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க, நாங்கள் இருவரும், ஹோட்டல் சிப்பந்தி ஒருவரை அழைத்துக்கொண்டுபோய் நீலுவின் அறையை ஆய்வு செய்கிறோம். அவசியமானால் உங்களைக் கூப்பிடுகிறோம்" என்று சொல்லிப் போனார்கள். 

ரிசப்ஷன் பகுதியில் அமர்ந்திருந்த தங்கதுரையிடம் சென்ற வினோத், " என்ன சார்? என்ன ஆச்சு? நீலு சார் எங்கே? ஏன் போலீஸ் வந்துருக்காங்க? ஏதாவது ஆக்சிடெண்டா? " என்று கேட்டான். 

தங்கதுரை வினோத்திடம், தான் சென்றது முதல் போலீசுடன் வந்தது வரை நடந்தது எல்லாவற்றையும் கூறினார். 

கேட்டுக்கொண்டிருந்த வினோத்தின் கண்களில் கண்ணீர். " உங்க நண்பர் மூலமாக சினிமா உலகில் நுழையலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த எனக்கும் இது பேரிழப்பு சார். நான் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் போலிருக்கு. சார், உங்களுக்கு சினிமா உலகில் தெரிந்தவர்கள் இருந்தால், எனக்கு இசை அமைப்பாளர் சான்ஸ் வாங்கிக்கொடுங்க சார். என்னுடைய மொபைல் நம்பர் உங்களிடம் இருக்கிறதே. அதற்கு செய்தி அனுப்பினால் போதும், உடனே ஓடிவந்து உங்களைப் பார்க்கிறேன். ப்ளீஸ் சார். ச்சே - நண்பரை இழந்த சோகத்தில் இருக்கின்ற உங்களிடம் நான் இதை எல்லாம் சொல்வதற்கு தயக்கமாக இருக்கு. ஆனாலும் என்னை மறக்காதீர்கள் சார்" என்று தங்கதுரையின் கைகளைப் பிடித்து, கண்ணீருடன் சொன்னான். 

தங்கதுரைக்கு, வினோத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. " நிச்சயம் சொல்கிறேன் வினோத் " என்று சொல்லி அவனை முதுகில் லேசாகத் தட்டிக்கொடுத்து அனுப்பினார். 

போலீஸ் அதிகாரிகள் நீலுவின் அறையை சோதனை இட்டபின், திரும்பி வந்தார்கள். தங்கதுரையிடம் " நீங்கள் சொல்லிய விவரங்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. அவருடைய அறையில் சந்தேகப்படும்படி எந்த விஷயமும் இல்லை. அவர் இறந்தது கொலையாலோ அல்லது தற்கொலையாலோ இல்லை என்று நினைக்கிறோம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தவுடன், கேசை முடித்து, ஃபைலை க்ளோஸ் செய்துவிடுகிறோம். உங்களுடைய மொபைல் நம்பரைக் கொடுங்கள். ஏதேனும் விவரம் தேவைப்பட்டால், உங்களிடம் கேட்கிறோம்" என்று சொல்லிச் சென்றனர். 

(அடுத்த பதிவில் கதை நிறைவடையும்) 

8 கருத்துகள்:

 1. //போலீசுடன் வந்த தங்கதுரையைப் பார்த்ததும், ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்த வினோத் குழம்பிப்போனான்//

  ஏன் குழம்பினான் வினோத்? தாஸ் வினோத் இல்லையென்றால் என்ன குழப்பம் அவனுக்கு.


  // உங்களுடைய மொபைல் நம்பரைக் கொடுங்கள். ஏதேனும் விவரம் தேவைப்பட்டால், உங்களிடம் கேட்கிறோம்" என்று சொல்லிச் சென்றனர். //

  இதனால் கதை வினோத்தை விட்டு நகர்ந்து இப்போது தங்கதுரைக்கு தாவுகிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே! ஆனால் நீலு பற்றி முதல் தகவல் தந்தது தங்கதுரை என்பதால் போலீஸ் அதிகாரி அப்படி சொல்லியிருப்பார்.

   நீக்கு
 2. தாஸ் தான் நிறைய தடவை பார்வதியின் அம்மா எழுதியவைகளை மனப்பாடம் செய்வது போல் படித்தான். நீலு தொங்க என்று பார்வதி அம்மா எழுதியது படி நீலுதான் பார்வதியை கொன்று தொங்க விட்டார் என்பதை தெரிந்து கொண்டு வளர்ந்ததும் பலி வாங்கி இருப்பான், அல்லது பார்வதியின் அம்மா ஆவி தாஸ் உடம்பில் புகுந்து கொன்று இருக்கும் திட்டம் போட்டு .
  எப்படி என் கற்பனை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூப்பர் கற்பனை. தனி கதையாக எழுதலாம் போலிருக்கு. நாளைய பதிவில் விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 3. தங்கதுரை வருவதற்குள்ளே இங்கே விநோத் திரும்பி வந்துட்டானா? அது சரி, இந்தக் கட்டிடம் இருப்பது வெளிநாட்டில். நீலு லொகேஷன் தேடி வந்ததும் வெளிநாட்டில். அங்கேயும் போலீஸ் விசாரணை எல்லாம் நம்ம நாடு போலத் தானா? எப்படி முடிக்கப் போறீங்கனு ஆவல் அதிகமா இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா ஊரிலும் போலீஸ் விசாரணை ஒரே மாதிரிதான்.

   நீக்கு
 4. ம்... அப்ப தாஸும் வினோத்-உம் ஒருவர் இல்லையா... என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருக்கிறேன்! - வேறு வழி? :)

  பதிலளிநீக்கு