புதன், 26 பிப்ரவரி, 2020

மலர்கள் பேசுமா?



மாலை நேரத்தில், இருள் கவியும் சமயம். 

அந்தப் பாதையோர மகிழ்வுத் திடலுக்கு, வந்திருந்தனர், அறுபது வயது அப்பாவும், முப்பது வயது மகனும். 



அப்பாவுக்கு கண் ஆப்பரேஷன் முடிந்து இன்னும் கட்டுப் பிரிக்கவில்லை. மகன், அப்பாவைக் கைபிடித்துக் கூப்பிட்டு வந்து, அந்த கருங்கல் இருக்கையில் ஓர் ஓரமாக உட்காரவைத்தான். 

" அப்பா இந்த இடத்தில் நல்ல நிழலாக இருக்கு. இங்கே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் ஷாப்பிங் போய்விட்டு, அரைமணி நேரத்தில் வந்துவிடுகிறேன் " என்று கூறிச் சென்றான். 

அப்பா உட்கார்ந்தார். 

சுற்றிலும் என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாத நிலை. கண்களுக்கு கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தார். 

சற்று தூரத்தில் சிறு குழந்தைகள் சத்தமிட்டபடி விளையாடிக்கொண்டிருந்தனர். கதம்பமாக அவர்களுடைய பேச்சுகள், சப்தங்கள் அங்கு அவர் காதில் கேட்டுக்கொண்டிருந்தன. 

சற்று நேரம் கழித்து ... 

அவர் அருகே காற்றில் ஏதோ ஓர் அசைவு. 

ஏதோ பூ மணம். 

யாரோ அவர் பக்கத்தில் வந்து அமர்ந்த உணர்வு அவருக்கு. 

பக்கத்தில் திரும்பி அவர், " சாரி - எனக்கு இன்று காலை கண் ஆப்பரேஷன் நடந்தது. நாளைதான் கட்டுப்பிரிக்கவேண்டும். இங்கே நான் உட்கார்ந்திருப்பது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா ?" என்று கேட்டார். 

" இல்லை " என்றது ஒரு பெண் குரல். 

" நன்றி. நீங்க இங்கே பக்கத்திலேதான் வசிக்கிறீர்களா?"

" ஆமாம்."

" தினமும் இங்கே வருவீர்களா?"

" வருவதெல்லாம் இல்லை. நான் இங்கேயேதான் இருபது வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். "

பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'ஒருவேளை தனக்குதான் சரியாகக் காதில் விழவில்லையோ' என்று நினைத்துக்கொண்டார். ஆனாலும் விடாமல் " நீங்க தனியாதான் வந்தீங்களா? கல்யாணம் ஆயிடுச்சா? குழந்தைகள் இருக்கிறார்களா? " என்று கேட்டார். 

" கல்யாணம் - இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்பு ஆச்சு. ஏதோ போன ஜன்மத்தில் நடந்தது போல இருக்கு. கல்யாணம் ஆன ஐந்து வருடங்களில், குழந்தை பாக்கியம் இல்லை என்று என் புருஷன், என்னைத் தள்ளி வைத்துவிட்டு, இன்னொருத்தியைக் கல்யாணம் கட்டிகிட்டாரு. இந்த பார்க்குல ஒரு மூலையில இருக்கற வாட்ச்மேன் குடிசைதான் எங்க வீடு. அந்த இளையாள் வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து என்னை, அவளும் என் புருஷனும் பாடாய்ப்படுத்தினார்கள். மனசு வெறுத்து பக்கத்திலே இருக்கின்ற நீர்வீழ்ச்சியைப் பார்த்து ஒருநாள் ஓடினேன். "

" அப்புறம்?"

" எப்போ இங்கே வந்தேன் என்று தெரியவில்லை. பக்கத்தில் உள்ள இந்த மரத்தில்தான் இருபது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். தினமும் ஒரு பூவாக இங்கே பூத்து, இதோ எதிரில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எல்லோரையுமே என்னுடைய குழந்தைகளாக நினைத்துப் பார்த்து ரசிப்பேன். " 

மேற்கொண்டு ஏதோ கேட்க நினைத்த பெரியவரைத் தடுத்து நிறுத்தியது, மகனின் கேள்வி. " அப்பா யாருகிட்ட பேசிகிட்டு இருக்கீங்க? வாங்க போகலாம்." 


(அவ்வளவுதாங்க கதை.) 

12 கருத்துகள்:

  1. அற்புதம்.
    ஆமாம் இந்த ஃப்ராங்கிபானி மலர்களின் மயக்கும் வாசனை
    பல நினைவுகளை வரவழைக்கும். இங்கே ஒரு ஆவியே வந்துவிட்டது.
    நல்ல கற்பனை வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
  2. மலர்கள் பேசுமா?

    மலரும் , மங்கையும் ஒரு ஜாதி பாடல் நினைவுக்கு வருது தன் மனதில் உள்ளதை பெரியவரிடம் சொல்லி விட்டாள். மரத்தின் பூவாக உதிரும் பெண்.

    கற்பனை மிக அருமை. மரத்தில் பேய் என்று சொல்லாமல் மென்மையான நறுமணம் வீசும் மலராக வந்து தன் கதை சொல்லியது அருமை.
    மலரின் கதை சோகம்.

    பதிலளிநீக்கு
  3. விரிவான கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நறுமணத்தோடு தன் கதையைச் சொல்லிவிட்ட அந்த மலர் என்றென்றும் வாடாமல் இருக்கட்டும். மனதைப் பாதித்த கதை!

    பதிலளிநீக்கு
  5. மாலையிலிருந்து 
    பிரிந்ததும் 
    ஆளையே மறந்துட்டாங்களே 
    கிளையை விட்டுப் 
    பிரிந்த நேரம் தவறா 
    நான் 
    பிறந்த நேரம் தவறா?
    கிளையிலும் இல்லாமல் 
    யார்
    தலையிலும் இல்லாமல் 
    உடன் 
    வேறு மலர்களும் இல்லாமல் 
    தனித்தே நிற்கிறேனே 
    நான் கொடிமலர் அல்ல 
    தனிமலர் 

    பதிலளிநீக்கு
  6. ஆமாம்.. உருவங்கள் அழிவதில்லை தான். மங்கையாகவும் இருக்கும் மலராகவும் இருக்கும். சம்பந்தப்பட்டவர்களின் அருகாமை கிடைத்து விட்டால் போதும், எப்படியும் வந்து விடும். பேசும்; சிரிக்கும்.. யாருக்கும் தெரியாதவாறு கிசுகிசுக்கவும் செய்யும். எப்போ மனசில் தேங்கிய நினைவு பாருங்கள்.. இன்னும் தொடர்பு அறுந்து விடாம்ல் தொடர்ந்து கொண்டே இருக்குது பாருங்கள்.

    உருவங்கள் அழிவதில்லை என்பது கூட சரியில்லை போலிருக்கு.. உருவம் இருந்தாலல்லவா அழிவதற்கு?.. அரூபந்தளுக்கு எங்கே அழிதல்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரூபந்தளுக்கு எங்கே அழிதல்? அரூபங்களுக்கா? ஆம்.

      நீக்கு
  7. பேசும் மலர் சொன்ன கதை சிறப்பு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு