செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

வினோத் வைத்த கோரிக்கை


(நேற்றைய பதிவின் தொடர்ச்சி) 

ஹோட்டல் பார் நோக்கி நடந்தபோது, தங்கதுரை கேட்டார் : " நீ யாரு? என்ன பேரு? நான் தமிழ் பேசுபவன் என்று எப்படிக் கண்டுபிடித்தாய்? "




இளைஞன் : " சார், என் பெயர் வினோத். இந்த ஹோட்டலில், பார் பகுதியில் வேலை செய்கிறேன். பல வேலைகள் தெரியும், கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில், இங்கே கிடார் இசைத்துப் பாட்டு கூட பாடுவேன். பிழைப்புக்காக இந்தியாவிலிருந்து இங்கே வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஹோட்டல் ரெஜிஸ்டரில் இன்று இங்கே வந்து தங்கி இருப்பவர், டைரக்டர் நீலு தேவேந்திரா என்று தெரிந்துகொண்டேன். அவரைப் பார்த்துப் பேச ஆசைப்பட்டேன். ஆனால், அவர் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் யாரையும் பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதை மீறி நான் அவரைப் போய்ப் பார்த்தேன் அல்லது பேசினேன் என்றால், ஹோட்டல் நிர்வாகம் என்னை வேலையை விட்டு நீக்கி, வீட்டுக்கு அனுப்பிவிடும். இன்றைக்கு தங்கதுரை என்ற நண்பருக்கு மட்டும் அவர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார் என்று ஹோட்டல் ரெக்கார்ட்களிலிருந்து தெரிந்துகொண்டேன். இந்த நேரத்தில் வந்து, இவ்வளவு நேரம் அவருடன் பேசிய நீங்கதான் அவருடைய நண்பர் தங்கதுரை என்று தெரிந்துகொண்டேன். "

இருவரும் பாரில் உட்கார்ந்து மது அருந்தியபடி, உரையாட ஆரம்பித்தார்கள். 

த : " சரி, உனக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?"

வி : " சார், எனக்கு அவரைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுங்கள். எனக்கு சினிமாவில் ஒரு சான்ஸ் அவரிடம் கேட்கவேண்டும். "

த : " நடிக்கவா? "

வி : " இல்லை சார். எனக்கு இசையில் இன்டெரெஸ்ட் இருக்கு. என்னால் பாடல்களுக்கு இசையமைக்க முடியும். எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தார் என்றால், நான் நிச்சயம் முன்னுக்கு வந்துவிடுவேன்."

த : " வினோத் - இது சரியாக வராது. ஏற்கெனவே, வாழ்க்கையில் ஓர் இசையமைப்பாளரின் விரோதத்தால், அவர் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார். இப்போ மீண்டும் ஒரு புது இசையமைப்பாளர் என்று சொன்னாலே அவர் என்னை விரட்டியடித்துவிடுவார்."

வி : " அப்படியா? என்ன பிரச்னை வந்தது அவருக்கு? "

தங்கதுரை வினோத்திடம் சுருக்கமாக, உருவங்கள் அழிவதில்லை பட பிரச்னையையும் படம் நின்றுபோன விவரத்தையும் கூறினார். 

வி : " சார், அவர் இங்கே எத்தனை நாட்கள் தங்கியிருப்பார்? எதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லுங்கள். அதற்குள் அவரை எப்படியாவது சந்தித்து இம்ப்ரெஸ் பண்ணப் பார்க்கிறேன். "

த : " அதெல்லாம் உன்னால் முடியாது வினோத். இந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லொகேஷனுக்கு அவரைக் கூப்பிட்டுக்கொண்டு போய் காட்டப்போகிறேன். அவர் ஷூட்டிங் செய்ய தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததும், ஊருக்குப் போய், தன்னுடைய படக்குழுவினரை அழைத்து வருவார். "

தங்கதுரை, தான் நீலுவுக்கு அனுப்பிய ஆளரவமற்ற வீடுகளின் படங்களைப் பற்றி சொன்னார். 

வி : " சார். அப்போ எனக்கு இந்த உதவி மட்டும் செய்யுங்கள் சார். என்னுடைய வாட்ஸ் ஆப் நம்பரைத் தருகின்றேன். அந்த நம்பருக்கு நீங்கள் அந்த படங்களை அனுப்புங்கள் சார். நான் மேலும் அது போன்ற லொகேஷன்கள் இந்தப் பகுதியில் இருக்கின்றதா என்று பார்த்து, அவற்றைப் படம் எடுத்து உங்களுக்கு அனுப்புகின்றேன். உங்கள் நண்பர் அதில் சந்தோஷமடைந்தார் என்றால், என்னைப் பற்றி அவருக்குச் சொல்லுங்கள் சார்." 

தங்கதுரை, " ஓ கே - அப்படியே செய்கிறேன். நான் எடுத்த படங்களை இன்று இரவு உனக்கு அனுப்புகின்றேன் " என்று சொல்லிவிட்டுக்குக் கிளம்பினார். 

வீட்டிற்கு வந்ததும், தங்கதுரை, வினோத்தின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இந்தப் படங்களை அனுப்பி வைத்தார். 








(தொடரும்)  






10 கருத்துகள்:

  1. //இசையமைப்பாளரின் விரோதத்தால், அவர் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார். இப்போ மீண்டும் ஒரு புது இசையமைப்பாளர் என்று சொன்னாலே அவர் என்னை விரட்டியடித்துவிடுவார்."//

    பழைய இசையமைப்பாளருக்கும் வினோத்துக்கும் தொடர்பு இருக்குமோ?
    கதை பல யூகங்களை தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே சந்தேகம் வருது.

      நீக்கு
    2. நல்ல ட்விஸ்ட். விடாது கறுப்பு மாதிரி, பார்வதியோட மறு பிறவி இந்த இளைஞனா
      இருக்குமோ.இவ்வளவு சலிக்காமல் பேசுகிறானே.

      நானே வருவேன் அங்கும் இங்கும்னு பாடல் கேட்கிறது கௌதமன் ஜி.

      நீக்கு
    3. யார் நீ படம் பார்த்த வயதில் அந்தப் பாடல் காட்சியில் நிஜமாகவே பயந்துபோனேன்.

      நீக்கு
  2. இந்த இசை விஷயத்தில் தான் ஏதோ மர்மம் இருக்கு. அது சரி, அந்த வீடுகளில் குடி இருந்த/இருக்கும் பேய்களுக்குப் பாட்டுன்னா வெறுப்போ? அதான் இசை அமைப்பாளர்களாப் பார்த்து நீலு தேவேந்திராவுடன் சண்டை நடக்குதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீலு இன்னும் அந்த லொகேஷன் பக்கம் போகவில்லை. இதுவரை அந்த வீட்டை அருகில் சென்று பார்த்தவர் தங்கதுரை மட்டுமே.

      நீக்கு
  3. நீங்கள் போட்டிருந்த கொக்கிக்கு சினிமா உதவி இயக்குனரை வைத்துதான் கதை யோசித்து எழுதத் தொடங்கியிருக்கிறேன். நான் எழுதி முடித்ததும், என் கதையை திருடி விட்டார் என்று சொல்ல மாட்டீர்கள்தானே? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்.ஆனால் நான் யாரிடமிருந்து கதையைத் திருடினேனோ அவர் கேஸ் போட சான்ஸ் இருக்கு.

      நீக்கு
  4. கோரிக்கை வைத்த வினோத் - மேலும் என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் - அது மட்டுமே இப்போதைக்கு சாத்யம்!

    பதிலளிநீக்கு