வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

தா, உயிரைத் தா!


(நேற்றைய பதிவின் தொடர்ச்சி.... இதை இளகிய மனம் கொண்டவர்கள் படிக்காதீர்கள்.) 

அந்த வீட்டை நோக்கி நடந்த நீலுவின் கண்களுக்கு சிவபார்வதி உருவம் மெது மெதுவே பெரிதாகிக்கொண்டே போனது போன்ற பிரமை உண்டாயிற்று. 

வீட்டை நெருங்குகின்ற நேரத்தில், மெல்லிய காற்று வீசியது. 

காற்றில் அது என்ன மணம் ? எங்கேயோ ரொம்பப் பரிச்சயமான மணம்! இந்த மணத்தை பல வருடங்களுக்கு  முன்பு நுகர்ந்திருக்கின்றோமே ... என்று யோசனை செய்தார். 



நினைவுக்கு வந்தது.  

ஆம். அது பார்வதி மிகவும் பிரியப்பட்டு வாங்கி உபயோகித்த செண்ட்டின்  மணம் அல்லவா! பார்வதியின் வீட்டில் எல்லா இடத்திலும் இந்த மணம் வருமே! நான் கூட அவளிடம், ஒவ்வொரு மாதத்திற்கும் எவ்வளவு லிட்டர் செண்ட் வாங்குவாய் என்று கேட்டு அடிக்கடி கேலி செய்வேனே! இது என்ன விசித்திரம்! இந்த வீட்டிற்கும் பார்வதிக்கும் அப்படி என்ன விசித்திரமான உறவு? தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் அவரை உந்தித்தள்ள, நாலாபக்கமும் பார்த்தபடி வீட்டின் அருகே சென்றார். 

செண்ட் மணம் இன்னும் கொஞ்சம் அதிகமானது. 

வீட்டின் முன் கதவு அருகே சென்று பார்த்தார் நீலு. 

வீட்டைச் சுற்றியிருந்த வேலி அமைப்பு, அவரைக் கதவருகே செல்லவிடாமல் தடுத்தது. 



சற்று நேரம் யோசித்த நீலு, வீட்டை, வேலியோரமாகவே நடந்து ஒரு சுற்று சுற்றிவரலாம் என்று நினைத்து நடந்தார். 

வீட்டின் பின்பக்கக் கதவு சற்றே திறந்திருந்த நிலையில் இருந்தது. பின்பக்கக் கதவுக்கு நேரே,  வேலி அமைப்புக்கு நடுவே கதவு ஒன்று திறந்த நிலையில் இருந்தது. 

மெதுவாக அந்த வேலிக் கதவின் வழியாக உள்ளே நுழைந்தார், நீலு. 

வீட்டின் பின்பக்கக் கதவின் வெளியே சற்று தூரத்தில் நின்று, வீட்டிற்குள் பார்த்தார். 

இருளடைந்து கிடந்ததால், வீட்டிற்குள் இருப்பது எதுவும் அந்த மாலைநேர,  இருள்கவியும் வேளையில் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. 

இன்னும் சற்று அருகே சென்று பார்த்தார். 

ஊஹூம் .... எதுவும் புலப்படவில்லை. 

தன் மொபைலை வெளியே எடுத்தார். அதில் flash light ஆன் செய்தார். 

கதவு வழியாக ப்ளாஷ் லைட் அடித்துப்பார்த்த நீலு திடுக்கிட்டார். 

பார்வதியைக் கொன்று, எந்த புடவையால் அவள் கழுத்தைச் சுற்றி, ஃபேனில் தொங்கவிட்டாரோ, அதே புடவையின் ஒரு பகுதி, வீட்டின் தரையில், உள்ளே உள்ள அறை வாசலில் பாதி உள்ளே, பாதி வெளியே என்ற நிலையில் கிடந்தது. 

அதே நேரம், பார்வதியின் குரலில், 

" எங்கும் ஒரு கீதம் - 
மங்கும் பொன் மாலை
பொங்கும் உன் மனம் 
தங்கும் ஒரு நினைவு ... " 

என்ற பாடல் ஒலித்தது.

பீதியில் உறைந்துபோன நீலு, அந்த வீட்டைவிட்டு, தான் வந்த பின்பக்க வழியில் கண்மண் தெரியாமல் வெளியே ஓடி வந்தார். வேலி அருகே, தடுக்கி விழுந்தார். அதிர்ச்சியில், அவர் உயிர் பிரிந்தது. 

(தொடரு ... மா?) 


23 கருத்துகள்:

  1. பழி வாங்கி விட்டதா சிவ பார்வதியின் ஆவி?
    மனசாட்சி பழி வாங்கி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதுல ஏதோ சூது இருக்குனு தோணுது. தொடரு மா? தொடரவேண்டுமா?

      நீக்கு
  2. அது சரி, பார்வதி இங்கே எங்கே வந்தாள்? நல்லா இருக்கு. அதே சமயம் இது அவர் பிரமையோ, மனசாட்சி குத்தல் தாங்க முடியாமல் உயிரை விட்டுட்டாரோ? ஆனால் பயமா எல்லாம் இல்லை. சிப்புச்சிப்பாத் தான் வந்தது. தொடருங்கள், தொடருங்கள்! காத்திருக்கோம். இந்த விநோத் இதைத் திட்டமிட்டுச் செய்திருப்பானோ என்றும் தோணுதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஆகவே, கதை இங்கே முடிந்துவிட்டது. இனிமேல் மற்றவர்கள் எழுதுகின்ற கதைகள் வெளியிடுவோம். இந்தக் கதையைத் தொடரவேண்டாம் என்று நினைக்கிறேன். (//சிப்புச்சிப்பாத் தான் வந்தது. // ஹையோ சிரிப்புக் கதை ஆயிடுச்சே ! sob..... sob....!)

      நீக்கு
    2. யார் தொடரப்போறாங்கனு காத்திருக்கேன். அல்லது நீங்களே?

      நீக்கு
    3. பா வெ மேடம் இந்த கொக்கிக்கு ஒரு கதை எழுதிக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். அவருடைய கதையை அவர் அனுப்பியவுடன் வெளியிடுவோம்.

      நீக்கு
    4. நான் எழுத ஆரம்பித்திருக்கும் கதைக்கான கொக்கி பச்சை டிரஸ், சிவப்பு டிரஸ் பெண்ணைப் பற்றியது. 

      நீக்கு
    5. ஓ ! அப்படியா! நன்று. ஆவலோடு காத்திருக்கிறோம். அனுப்புங்க.

      நீக்கு
    6. ஆரம்பப் பகுதிக் கதையில், பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு மட்டுமே. சிவப்புக் கலர் ட்ரெஸ் எல்லாம் கு கு குழப்பிய கதை!

      நீக்கு
  3. "வேணாம்ப்பா....  கதை ப்பயங்கரமா போவுது...." 

    காதலிக்க நேரமில்லை பாலையா குரலில் படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  4. கதை பொசுக்கென்று முடிந்து விட்டதே? பேய் கதை என்றால் பயப்படும் எனக்கே பயம் வரவில்லை. 

    பதிலளிநீக்கு
  5. அடடா. இதென்ன புல் தடுக்கி பயில்வானாக இருக்காரே இந்த நீலு.
    கொலை செய்தவனுக்கு தில் வேண்டாமா.
    வரிந்து கட்டி சண்டையில் இறங்கி
    அப்புறம் இறந்திருக்கலாம்.அந்த வினோதனுக்கு சுறுசுறுப்பு போதவில்லை.
    கன்னாபின்னான்னு நீலுவைக் கதறடித்து,
    கொலை செய்ததை நிரூபணம் செய்திருக்கணும்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய எம்ஜியார் படங்கள் பார்ப்பீர்கள் போலிருக்கு!

      நீக்கு
  6. எந்தப் புகைப்படத்திற்காக கதை எழுத ஆரம்பித்தீர்களோ அந்தப் புகைப்படம் கதையில் இடம் பெறும் பொழுது பட்டென்று முடித்து விட்டீர்களே! இனிமேல் தானே கதையே இருந்திருக்க வேண்டும்?
    இந்த இறுதிப் பகுதியை முதல் பகுதியாகக் கொண்டு ப்ளாஷ் பேக்கில் கதையை ஓட்டியிருந்தால் கூட சுவாரஸ்யம் கூடியிருக்குமோ என்று கூட யோசனை ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாகச் சொன்னால், கதை இன்னும் முடியவில்லை. இன்னும் பார்க்கப் போனால், நீலுவுக்கு அந்த வீட்டில் நிகழ்ந்தவை எல்லாவற்றுக்கும் ஒரு லாஜிகல் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், இந்தக் கதைக்கு அர்த்தமே இல்லை. அந்தப் பகுதியை எழுதலாமா / வேண்டாமா என்று தெரிந்துகொள்ள நினைத்தேன். எல்லோரும் இதையே முடிவாக ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்றால் நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன். தொடரலாமா / வேண்டாமா? மேலே கருத்துரைத்தவர்கள் எல்லோரும் சொல்லுங்க.

      நீக்கு
  7. அட இப்படி சட்டென்று முடிந்து விட்டதே... இன்னும் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு கதையை நகர்த்துங்கள்.

    பதிலளிநீக்கு