வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

உருவங்கள் அழிவதில்லை. இறுதிப் பகுதி.


தங்கதுரை தன்னுடைய இருப்பிடம் செல்லக் கிளம்பினார்.

நீலு உயிரிழந்த இடத்திற்கு, போலீசால் மோப்ப நாய் அழைத்து  வரப்பட்டு, அது, அந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வந்ததே தவிர வேறு எங்கும் செல்லவில்லை. 

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், நீலு கீழே விழுந்த அதிர்ச்சியில் இதயம் நின்றிருக்கக்கூடும் என்று இருந்தது. 




போலீசார், கேஸ் ஃபைலை க்ளோஸ் செய்து, விவரத்தை, தங்கதுரைக்கும், ஹோட்டல் நிர்வாகத்திற்கும் தெரிவித்தனர். 

தங்கதுரை, நீலுவின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தார். 

***************

இரண்டு நாட்கள் கழித்து,  அந்த ஹோட்டல் பாருக்கு, மதுப்புட்டிகள் சப்ளை செய்ய வந்த, வினோத்தின் நண்பன், வினோத் சோகமாக இருப்பதைப் பார்த்து, அவனருகே சென்று என்னவென்று விசாரித்தான். 

நண்பன் : " என்னடா வினு  - போன தடவை நான் வந்தபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தே. இப்போ என்ன இவ்வளவு வருத்தமாக இருக்கே?" 

வி : " உன்னிடம் முன்பே நான் சொல்லியிருந்தேன் இல்லையா - ஒரு பிரபல தமிழ்ப் பட டைரக்டர் இந்த ஹோட்டலில் தங்க வருகிறார்  - அவரிடம் இசை அமைப்பாளர் சான்ஸ் கேட்கப்போகிறேன் என்று?"

ந : " ஆமாம். அவர் இங்கே வருவதற்கு முன்பே அவரைப்பற்றி நிறைய என்னிடம் சொன்னாயே! அவர் இங்கே வந்த அன்று கூட, அவருடைய நண்பர் அனுப்பிய லொகேஷன் ஒன்றை என்னிடம் காட்டினாயே. எனக்கு ஞாபகம் இருக்கு "

வி : " எனக்கு இசை அமைப்பாளர் சான்ஸ் கேட்கும்பொழுது, அவரிடம் உனக்கு ஆர்ட் டைரக்டர் சான்ஸ் கேட்கச்சொன்னாய். "

ந : " ஆமாம். நீ காட்டிய அந்த லொகேஷன் படத்தில் நான் கொஞ்சம் டச் அப் செய்து ஆர்ட் வொர்க் செய்து உன்னிடம் கொடுத்தேன். எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்பதால், அந்தப் படத்தில் 'சிவ பார்வதி' என்று தமிழில் text எழுதி அனுப்பச்சொன்னேன்.  அவர் அந்தப் படத்தைப் பார்த்தாரா? உன் நண்பர் தங்கதுரை அந்தப் படத்தை அவருக்குக் காட்டினாரா? டைரக்டர் பார்த்திருந்தால், நிச்சயம் நம் இருவரையும் பார்க்கச் சம்மதித்திருப்பார். "



வி : " அந்தப் படத்தை, நண்பர் தங்கதுரை அவருக்குக் காட்டினாராம். இன்னும் பார்க்கப்போனால், அதுதான் டைரக்டர் நீலு பார்த்த கடைசிப்படம் என்று என்னிடம் சொன்னார் தங்கதுரை"

ந : " என்ன கடைசிப்படமா! அப்படி என்றால்...... "

வி : " அந்த லொகேஷனைப் பார்க்கச் சென்ற டைரக்டர் அதே இடத்தில் ஹார்ட் அட்டாக் வந்து விழுந்து இறந்துவிட்டார். " 

ந : " அடக் கடவுளே! அப்படியா விஷயம்? வருத்தமான விஷயம்தான். சரி போகட்டும் விடு. இன்னும் எவ்வளவோ சினிமா பிரபலங்கள் அடிக்கடி இங்கே வந்து தங்குவார்கள். உனக்கு இசை அமைப்பாளர் சான்சும், எனக்கு ஆர்ட் டைரக்டர் சான்சும் கிடைக்காமலா போய்விடும்? பார்ப்போம். சரி, பாருக்காக நான் கொண்டு வந்திருக்கும் பாட்டில்களின் எண்ணிக்கையை சரி பார்த்து, இந்த ஸ்லிப்ல received in good condition .... nos என்று எழுதி, கையெழுத்துப் போட்டு, ஹோட்டல் ஸ்டாம்ப் சீல் வைத்துக் கொடு. " 

வி : " சரிடா தாஸ். மீண்டும் சந்திப்போம்." 

(நிறைவு) 

14 கருத்துகள்:

  1. நல்ல அறிவு நிறைந்த இளைஞர்கள. என்னவெல்லாம் திட்டம் போட்டு தாஸ் பழிவாங்கி விட்டான். கடைசி அவர் நல்ல பன்ச்!
    வாழ்ததுகள்.

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரி நல்ல திருப்பம். கதை எதிர்பார்த்தமாதிரி முடிந்தாலும் தாஸ் தான் விநோத் என நினைத்திருந்தேன். நல்லா ஓங்கிக் குட்டிட்டீங்க! இஃகி,இஃகி,இஃகி,! நல்ல தர்க்கரீதியான முடிவு. படம் வரைந்தது விநோத்னு முன்னர் ஒரு பதிவிலே எனக்குப் பதில் சொன்னதாலும் விநோத் தான் தாஸ் என நினைச்சிருந்தேன். :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தை அனுப்பியது வினோத் என்பதால், நானும் அதை வரைந்தது அவரே என்று நினைத்தேன். ஆனால் இப்போதான் தெரியுது - தாஸ் டச் அப் செய்த படத்தை, 'சிவ பார்வதி' என்ற தமிழ் எழுத்துகள் சேர்த்தது மட்டும்தான் அவன் என்று. நீலு உயிரிழந்ததற்கு தாஸ் காரணம் என்பது கூட தாஸ் தவிர யாருக்கும் தெரியாது.

      நீக்கு
  3. நல்ல ட்விஸ்ட்! சிறப்பான முறையில் முடித்து இருப்பதற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பு. வாழ்த்துக்கள்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    பதிலளிநீக்கு
  5. //போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், நீலு கீழே விழுந்த அதிர்ச்சியில் இதயம் நின்றிருக்கக்கூடும் என்று இருந்தது. //

    நீலுவின் இறப்புக்கு யாரைக் காரணமாக்குவது என்ற திகைப்பில் வலிந்து கொண்ட முடிவு போல தோற்றமளிப்பதை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. குறிப்பாக 'கீழே விழுந்து' என்பதையாவது மாற்றி யோசித்திருக்கலாம். எப்படி?--

    சிவ பார்வதியின் இறப்பு இயற்கையாக நிகழ்ந்ததில்லை என்ற நிலையில் மனித ரூபமில்லாத ஆவியுலக பிரதிநிதியாய் பார்வதியை களத்தில் இறக்கியிருக்கலாம். மனித ரத்தத்தை உறிஞ்சும் டிராகுலா படங்களை உரோமக்கால்கள் குத்திட 'திடுக், திடுக்' என்று பார்த்து பயந்ததெல்லாம் எதற்காக?.. குறைந்த பட்சம் போன ஜென்ம உணர்வுகளையாவது கிளப்பி விட்டிருக்கலாம்.

    நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் இரவு இரண்டாம் காட்சிக்குத் தான் ஆவிப் படங்களுக்குப் போவோம். பொதுவாக இந்த மாதிரி படங்கள் ஊருக்கு வெளியே அத்துவான பிரதேசங்களில் இருக்கும் தியேட்டர்களில் தான் ஒருவித குரூர ரசனையுடன் திரையிடப்படுவது வழக்கம்.

    இரண்டாம் காட்சி முடிவது சரியாக இரவு இரண்டு இருபதுக்கு.. சின்ன சின்ன கும்பலாக ஜனங்கள் வெளிவந்தாலும் ஐந்து நிமிட நடையில் எங்கே மாயமாய் அத்தனை பேரும் மறைந்து போவார்கள் என்று தெரியாது. பல நேரங்களில் கூட வந்த நண்பனும் நாமும், அல்லது நாம் மட்டுமே என்று தனித்து விடப்படுவோம்.

    ஹோவென்ற நீண்ட வழுவழு ரஸ்தாவில் சொல்லி வைத்தாற் போல அநியாயத்திற்கு புளிய மரங்கள் தான் அணிவகுத்து வரிசைகட்டி நிற்கும். அப்படித் தான் ஒரு நாள் நட்ட நடுநிசியில் தன்னந்தனியாக விடுவிடுவென்று நிமிர்ந்து பார்க்காமல் நடந்து வரும் போது -----------

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி ஜீவி சார்.
      அந்த வகை கதைகள், நெல்லைத்தமிழன் சொல்வது போல, நாஞ்சில் பி டி சாமி எழுதிய பேய்க்கதைகள் போல, லாஜிக் இல்லாமல் இருக்கும். நிறைய கதைகள் அதுபோல படித்திருக்கிறேன். இந்தியாவில் கொலை செய்யப்பட்ட பார்வதி, வெளிநாட்டில் போய் பழி வாங்குவது என்பது கொஞ்சம் far fetched idea. அப்படி பழி வாங்கவேண்டும் என்றால், உள்ளூரிலேயே, தான் கொலை செய்யப்பட்ட ஓராண்டுக்குள் பழி வாங்கலாமே! பார்வதியின் ஆவிதான், தாஸ் மூலம் பழி வாங்கியது என்று கூட வைத்துக்கொள்ளலாம். பா ஆ தான், நீலுவை அந்த வீட்டை நோக்கி தனியாக இழுத்து வந்தது என்றும் சொல்லலாம். பார்வதிப் பெட்டியில் இருந்த செண்ட் பாட்டிலிலும், தூக்கு மாட்டப்பட்ட அந்த புடவையிலும் பார்வதியின் ஆவி உறைந்து மறைந்து இருந்து, நீலுவின் கண்களுக்குத் தென்பட்டிருக்கலாம். லாம், லாம், லாம் ...... மொத்தத்தில், அப்பாதுரை சார் அனுப்பிய படத்துக்கு - எழுதப்பட்ட ஒரு கதை. அவ்வளவுதான் ஜீவி சார்.

      நீக்கு
  6. பேயாவது, பழி வாங்குவதாவது?.. ஹஹ்ஹஹ்ஹா.. இந்த மாதிரி சமாச்சாரமெல்லாம் உண்மையில் நடந்த நிகழ்வுகள் மாதிரி வாசகரை, அல்லது படம் பார்ப்பவரை விதிர்விதிர்க்கச் செய்வதற்குத் தானே?

    அப்பாதுரை படமும் அப்படியெல்லாம் உடான்சு விடுவதற்கு ஏற்ற மாதிரி தானே இருக்கிறது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். படத்தைப் பார்த்து எழுதிய உடான்ஸ் கதைதான். சினிமா / டி வி நடிகர் / நடிகை தற்கொலை என்று எவ்வளவோ செய்திகள் படிக்கிறோம். பெண் பிரபலங்களின் தற்கொலை என்கிற சமாச்சாரம் எனக்கு எப்பவும் சந்தேகமான ஒரு நிகழ்வாகத்தான் தோன்றும். அதை வைத்து பின்னப்பட்ட கதை இது.

      நீக்கு
  7. தாஸ் அருமையான திட்டம் போட்டு பயமுறுத்தியே பழி வாங்கி விட்டார்.
    வினோத் தாஸ் இல்லை அவரின் நண்பர் தாஸ் என்று முடித்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு