செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

உருவங்கள் அழிவதில்லை flash back 2 ' பார்வதிப் பெட்டி '



தந்தி வந்ததும், மாமா சொன்னதைக் கேட்ட அம்மா, 'ஏன் இப்படி அழுகிறாள்' என்று பார்வதியின் குட்டித் தம்பி தாஸுக்குத் தெரியவில்லை. பாவம். விவரமறியாத வயது அவனுக்கு. 

ஆனால், அம்மா அழுவதைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவின் அருகே சென்று, " அம்மா ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான். 

பார்வதியின் அம்மா, தாஸிடம், "உன் பிரியமான அக்கா நம்மை விட்டுப் போய்விட்டாளடா. இனிமேல் அவளைப் பார்க்கமுடியாதே என்று அழுகின்றேன்"  என்று சொல்லி அழுதாள். 




" அக்கா எங்கே போயிருக்கா அம்மா?"

" உன் அப்பா போன இடத்துக்கே இவளும் போய்ச் சேர்ந்துட்டாடா .... " 

" நாமும் அங்கே போகலாமா அம்மா?"

" வேண்டாமடா - வேண்டாம். நீ ஒருவனாவது உயிரோடு, நன்றாக இருக்கவேண்டும். எப்பொழுதும் இந்த பார்வதி பெட்டியை உன்னிடமே வைத்துக்கொள். உனக்கு விவரம் தெரியும் வயது வரை இனிமேல் இதுதான் உன் பிரியமான அக்கா பார்வதி. இதை நினைவில் வைத்துக்கொள். " என்று சொன்னாள் பார்வதியின் அம்மா. 

பிறகு அவர்கள் எல்லோரும் சென்னைக்கு, பார்வதியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். 

பார்வதியின் தாய் மாமன், பார்வதிக்குச் செய்யவேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்தார். 

பார்வதியின் வேலைக்காரி, தெலுங்கு மற்றும் தமிழ் பேசத் தெரிந்தவள். அவள், பார்வதியின் அம்மாவிடம், முதல் நாள் மாலை, பார்வதி தன்னிடம் சொன்னதை, சொன்னாள். 



மேலும் அவள், " அம்மா எதுவோ சரியில்லை. என்னவோ நடந்திருக்கு. என்ன சொல்லி, என்ன செய்து என்ன பயன் ? இனி அம்மாயி உயிருடன் வரமாட்டார்கள் " என்று சொல்லி அழுதாள். 'ஆ .. தர்சகுடு நீலு  தொங்க, அம்மாயின சம்பேனாடு .... ' (ఆ దర్శకుడు నీలు - దొంగ పార్వతిని చంపాడు) என்று இரகசியக் குரலில் கூறினாள். 

பார்வதியின் அம்மா இதைக் கேட்டு திடுக்கிட்டார். " அந்த நீலு இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா ?" என்று வேலைக்காரியைக் கேட்டார். 

வேலைக்காரி, " இல்லை அம்மா - நீங்கள் எல்லோரும் வருவதற்கு முன்பே அவர் இந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். என்னால் இதை எல்லாம் தாங்கமுடியவில்லை. யாரிடமாவது சொன்னால்தான் என் மனசு ஆறும் என்றுதான் உங்களிடம் சொன்னேன்" என்றாள். 

பார்வதியின் அம்மாவுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. ஆனால், அவர்களுடைய மனதில், தன் பெண்ணின் மரணத்திற்குக் காரணம், நீலு என்ற டைரக்டர்தான் என்பது மட்டும் ஆழமாகப் பதிந்துவிட்டது. 

பார்வதியின் அம்மா, பார்வதியின் இறுதி சடங்குகள் செய்து முடித்துவிட்டு வந்த தன் சகோதரனிடம், நீலு பற்றிக் கூறினார். ஆனால் அந்த தாய் மாமனுக்கு அப்போதைய தேவை, பார்வதியின் பெயரில் இருந்த சொத்துகள் மீதுதான். எனவே அவன், " இதெல்லாம் நாம் இங்கே சொல்லி என்ன ஆகப்போகிறது? கோர்ட், கேஸ் என்று பாஷை தெரியாத இந்த ஊரில் அலைந்தோம் என்றால், ஒன்றும் பயன் இருக்காது. நமக்கு வரவேண்டிய பொருட்களும் சொத்துகளும் கூட நம் கையை விட்டுப் போய்விடும். என்ன செய்தாலும், பார்வதி உயிருடன் இனி வரமாட்டாள். ஆகையால் இது பற்றி ஒன்றும் பேசாதே " என்று சொல்லிவிட்டான். 

பார்வதி நினைவாக, பார்வதியின் புடவைகள் (தூக்கு மாட்டி தொங்கிய புடவை உட்பட), வரவேற்பறையில் இருந்த சிவபார்வதி சிலை, பார்வதி வாங்கி வைத்திருந்த செண்ட் பாட்டில்கள், டயரிகள், இத்யாதி பொருட்கள், பார்வதிப் பெட்டியில் சேர்ந்துகொண்டன. 

பார்வதியின் அம்மாவும், தாஸும் ஆந்திராவிற்குத் திரும்பினர். 

பார்வதியின் மரணம் - பார்வதியின் அம்மாவை மிகவும் பாதித்துவிட்டது. 

பார்வதியின் அம்மா அடிக்கடி, பார்வதிப் பெட்டியை திறந்து, அதில் இருந்த கேசெட்டை டேப் ரிகார்டரில் போட்டுக் கேட்பது, பார்வதி தூக்கு மாட்டி இறந்ததாகச் சொல்லப்படும் புடவையை தன் நெஞ்சோடு சேர்த்து வைத்து அழுவது, 'நீலு தொங்க நின்னு சம்பேசாடே' என்று அரற்றுவது என்று சில வருடங்கள் கழிந்தன. அவளுடைய வருத்தம் அவளுடைய உடல் நிலையை பாதித்து அதிலிருந்து மீண்டு எழாமல் இறந்துபோனாள் அந்த அம்மா. அதுதான் தாஸுக்கு விவரம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்த வயது. 

அதன் பின், தாஸை வளர்த்து, அவனுடைய படிப்புக்கு செலவு செய்து, அவனை ஆளாக்கியவர் பார்வதியின் தாய் மாமா. 

தாஸ் விவரம் தெரிய ஆரம்பித்த பின், பார்வதிப் பெட்டியில் இருந்த டயரி, கடிதங்கள், எல்லாம் படித்து, கேசெட்  கேட்டு நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டான். 

பார்வதியின் டயரியில், பார்வதி இறந்த நாளின் பகுதியில், அம்மா எழுதி வைத்திருந்த, 'நீலு தொங்க ' பற்றிய விவரங்களையும் படித்துத் தெரிந்துகொண்டான். 

(தொடரும்) 

10 கருத்துகள்:

  1. ஆஹா... வேலை செய்யும் பெண்மணி சொல்லி விட்டாரா... ஆனாலும் பார்வதியின் அம்மாவால் ஒன்றும் செய்ய இயலவில்லயே பாவம்!

    மேலும் என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள, காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கதைப்போக்குப் புரிந்தாலும் கொஞ்சம் மெதுவாகப் போகிறதோ? விறுவிறுப்பு குறைவாய் இருக்கோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரப்பட்டு எல்லாவற்றையும் ஒரே பதிவில் எழுதிக் குழப்பவேண்டாம் என்ற எண்ணம்தான் காரணம். இன்னும் இரண்டே பதிவுகளில் முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  3. வினோத் தான் பார்வதியின் தம்பியா?
    வாட்ச் அப்பில் சிவ பார்வதி படம் அனுப்பியவன் அவன் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார், என்ன என்பது அடுத்த இரண்டு பதிவுகளில்தான் தெரியும்.

      நீக்கு
  4. தாஸ்தான் வினோத் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. அம்மாவின் சந்தேகம் பார்வதி தம்பிக்குப் புரிந்து விட்டது/ அவன் என்ன செய்யப் போகிறான், எப்படி செய்யப் போகிறான் என்று இனி சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு