செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

மின்நிலா பொங்கல் மலர் 2021 விமரிசனம் - பானுமதி வெங்கடேஸ்வரன்

 மின்நிலா பொங்கல் மலர் 2021 விமரிசனம் 

எழுதியவர் : பானுமதி வெங்கடேஸ்வரன் 

கிட்டத்தட்ட முன்னூறு  பக்கங்களோடு வெளி வந்திருக்கிறது மின்னிலா  பொங்கல் சிறப்பிதழ் 2021. கனமான பதிப்புதான். தொடங்கிய இத்தனை குறுகிய காலத்திலேயே பொங்கல் சிறப்பிதழ் என்று தனியாக  கொண்டு வந்திருக்கும் ஆசிரியக் குழுவை பாராட்ட  வேண்டும். 

அட்டைப் படமே அபாரம்! இந்த அட்டைப் படத்தை ஹார்ட்  காபியாக கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன். ஓவியர் அருண்ஜவர் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.  துரை செல்வராஜூ அவர்களின் 'மருதாணி சித்திரம்' கதைக்கு அவர் வரைந்திருக்கும் சித்திரம் அருமை!

எங்கள் ப்ளாகின் ஆஸ்தான  எழுத்தாளர்களை தவிர எப்போதாவது எழுதும் சிலர், இதுவரை எழுதவே எழுதாத  சிலரும்  எழுதியிருக் கிறார்கள். பலர் தலைக்கு இரண்டு படைப்புகள்  தந்திருக்கிறார்கள்.  அவற்றில் ஒன்று சிறப்பாகவும், ஒன்று சுமாராகவும் அமைந்திருக்கிறது. 

துரை செல்வராஜூ அவர்கள் எழுதியிருக்கும் திரவியம், மருதாணி சித்திரம் என்னும் இரண்டு கதைகளில் காதலைப் பேசும்  மருதாணிச் சித்திரத்தை விட, பெற்றோர்களுக்கு குழந்தைகள் திரவியம், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் திரவியம் என்ற திரவியம் கதை சிறப்பாக இருக்கிறது. 

மாலா மாதவனின் அன்புள்ள அண்ணா, விட்டில் பூச்சி  என்னும்  இரண்டு கதைகளில் முதல் கதை மாலாவுக்கே உரிய ஆழமும், அழுத்தமும் கொண்டதாக இருக்க, இரண்டாவது கதை வெகுஜன பத்திரிகைகளுக்காக எழுதப்பட்டது போல இருக்கிறது. 

தில்லையகத்து கீதாவின்  வீரம்மை ஆச்சி படைக்கப்பட்டிருக்கும் விதம் செம்மை! பாத்திர படைப்பாகட்டும், கதையை  எடுத்துச்  சென்றிருக்கும் விதமாகட்டும், ஒரு நல்ல சிறுகதைக்குரிய லட்சணத்தோடு அமைந்திருந்தது.  எனக்கு விடுதலை வேண்டும்  என்னும் முதல் கதைக்காக நிறைய தகவல்கள் திரட்டியிருக்கிறார். அந்த விதத்தில் பாராட்டலாம். 

எப்போதும் நம்மை ஏமாற்றாத ரிஷபனும், ரஞ்சனி நாராயணனும் இப்போதும் ஏமாற்றவில்லை. ரஞ்சனி  அவர்களின் படைப்பை  புதினமாகவும் கொள்ளலாம், கட்டுரையாகவும் கொள்ளலாம். அவருக்கே உரிய மெல்லிய நகைச்சுவை இழையோட  சந்தோஷமாக இருக்கத்  தெரியாதவர்களைப் பற்றி அவர் எழுதியிருப்பது  ரசனைக்குரியது. //குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு 'நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே.' என்று ஆரம்பிப்பாள்.  குழந்தைக்கு என்ன பாட்டு பாடுகிறாய்? என்றால், அடுத்தது,'பொன்னான வாழ்வு மண்ணாகிப் போச்சே..' என்று ஆரம்பிப்பாள். அவள் பாடிய சந்தோஷமான பாடல், 'சின்ன சின்ன  கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ' பாடல்தான் //  என்று எழுதியிருப்பதை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். 

வை.கோபாலகிருஷ்ணன் எழுதியிருக்கும் வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ.என்னும் நெடுங்கதை ஆங்காங்கே கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறது. இந்தக் கதையில்  எழுச்சி என்னும் வார்த்தை எத்தனை இடங்களில் வந்திருக்கிறது என்று போட்டி வைக்கலாம். 

சிறப்பு சிறுகதையை எழுதியிருப்பவர் அப்பாதுரை. அவருடைய ஏரியாவான அமானுஷ்யம். நடை என்னவோ நன்றாக இருந்தாலும், கதையின் போக்கையும், முடிவையும் யூகிக்க முடிவது ஒரு குறை. 

முறைப்பெண்ணை மணந்து கொள்ள மறுக்கும் முறைமாமன் கூறும் காரணம் அருமை! தூக்கி வளர்த்த பெண்ணை எப்படி மனைவியாக பார்ப்பது? கதையை அழகாக நகர்த்தியிருக்கிறார் குமார். வாழ்த்துகள். 

ஊர்மிளையின் உறக்கம் என்னும் சிறுகதை அற்புதம். ராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் இரு பொக்கிஷ சுரங்கங்கள், அவைகளை தோண்டத் தோண்ட புதுப்புது ரத்தினங்கள் கிடைக்கும். இந்தக் கதையைஎழுதியிருக்கும் ஐயப்பன் கிருஷ்ணன் ஒரு ரத்தினத்தை கொடுத்துள்ளார். தெலுங்கு நாட்டுப்புற பாடலை அடிப்டையாகக் கொண்டு எழுதப்பட்டதாம். வாழ்த்துக்கள்!

ஏகாந்தன்  அவர்கள் ஓ ஹென்றியின் சிறுகதையை மிக அழகாக மொழிபெயர்த்து அழகாக இருந்தால் யோக்யமாக இருக்காது, யோக்யமாக இருந்தால் அழகாக இருக்காது என்று மொழி பெயர்புக்கு சொல்லப்படும் வாக்கியத்தை பொய்யாக்கியிருக்கிறார்.

கட்டுரைகளில் ஏகாந்தன் அவர்களின் சோமாலியாவில் நடந்த பார்டியைப்பற்றிய விவரங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. சோமாலியா என்றாலே பஞ்சத்தில் அடிபட்ட, எலும்பு தெரியும் குழந்தைகள்தானே நினைவுக்கு வருவார்கள், அங்கும் பார்ட்டி, அதில் சங்கீதம் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த அனுபவத்தை சிறப்பாக சித்தரித்திருந்தார்.

தில்லை நாயகமா? தகவல் நாயகமா? ஊறுகாய் பற்றி அவர் கொடுத்திருக்கும் தகவல்கள் சைட் டிஷ் அல்ல, மெயின் கோர்ஸ்! திருப்பதி நடைப்பயணம் பற்றி அவர் கொடுத்திருக்கும் தகவல்களு்ம் மிகவும் உபயோகமானது.

தினமலர் உதவி ஆசிரியர் தேவராஜன் சண்முகம் அவர்களின் இளவயது பொங்கல் நினைவுகளும், காமாட்சி மஹாலிங்கம் அவர்களின் அக்ரஹார பொங்கல் கட்டுரையும் இனிமையான மலரும் நினைவுகள். 

பழைய நினைப்புதான் பேராண்டி நெல்லைத் தமிழனின் கட்டுரை. நெல்லை நினைவுகளை சொல்லப் போகிறார் என்று நினைத்தால், அந்தக்கால நெல்லையின் உணவகங்களை மட்டும் நினைவு கூர்ந்திருக்கிறார். 

நகரத்தில், கிராமீய பாணியில் பொங்கல் கொண்டாடுவதை புகைப்படங்களோடு விளக்கியிருக்கிறார் திருமதி சியாமளா வெங்கடராமன். 

கட்டுரைகளில் விஞ்சி நிற்பது கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதியிருக்கும் பொங்கல் பண்டிகை கட்டுரை. சஹானா மின்னிதழிலும் பொங்கல் பண்டிகையைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். ஆனால் அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் இதில் இடம் பெறாமலும், இதில், இடம்  பெற்றிருக்கும் கருத்துகள் அதில் இடம் பெறமலும் பார்த்துக் கொண்டிருப்பது அவருடைய விசாலமான,அறிவைக் காட்டுகிறது. 

ஆன்மீகம் குறித்த அவருடைய கட்டுரையும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கேள்வி பதில்களிலும் ஆன்மீகம், உடனே ஆன்மீகம் பற்றிய அவருடைய கட்டுரை என்பதால் ரெபடிஷன் ஆக தோன்றுகிறது. இரண்டையும் அடுத்தடுத்து வெளியிட்டதை தவிர்திருக்கலாம்.

கேள்வி பதில் மிகப்பெரிய ஏமாற்றம். "ஆவலோடு எதிர்பாருங்கள், உங்கள் அபிமான அப்பாதுரை உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறார்" என்னும் ரேஞ்சுக்கு விளம்பரப்  படுத்தி விட்டதில் எதிர்பார்ப்பு எகிறி விட்டது ஒரு காரணமாக இருக்கலாம். தவிர கேள்வி பதில்கள் சுருக்கமாக இருந்தால்தான் ரசிக்க முடியும். 

பொங்கல் சிறப்பிதழ் என்று கூறி விட்டதலோ என்னவோ எக்கச் சக்க சமையல் குறிப்புகள். இதில் என்னைக் கவர்ந்தவைகளில் முதலிடம் பிடிப்பது ரேவதி நரசிம்மன் அவர்கள் எழுதியிருக்கும் மோர்க்குழம்பு செய்முறை. ஒரு சமையல்  குறிப்பை சிறு கதை போல எழுத முடியுமா?  மோர் குழம்பு பிடிக்காத ஒரு சிறு பெண்ணுக்கு, அதன் தயாரிப்பில் அந்தப் பெண்ணையும் ஈடுபடுத்துவதன் மூலம் விரும்ப வைக்குமொரு தாயின்  முயற்சியை சொல்லும் பொழுதே மோர் குழம்பு செய்முறை யையும் கூறி விட்ட அவரது பாங்கு பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!

அதற்கு அடுத்த இடம் காமாட்சி மஹாலிங்கம் அவர்களின் வெந்தய ஊறுகாய். ஊறுகாயில் வெந்தயம் போடுவதுண்டு, வெந்தயத்திலேயே ஊறுகாய் போட முடியும் என்பதை அழகான படங்களோடு அவர் விளக்கியிருக்கும் விதம் சுவை! 

செரோட்டி (பேணி) செய்வது கஷ்டம், அதை படிப்படியாக புகைப்படம் எடுத்து, கொலாஜ் ஆக்கி, அதற்குள் செய்முறை எழுதி,,, அடே அப்பா! ரொம்ப பொறுமை கீதா ரங்கனுக்கு. பாராட்டுகள்.

கமலா ஹரிஹரன் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை, ஆனால், செய்திருந்தவைகளின்  செய்முறையை  புகைப்படங்களோடு விளக்கியிருந்த விதம் சபாஷ் போட வைக்கிறது.

அதுபோலவே துரை செல்வராஜூ சமையல் குறிப்பை தந்திருக்கும் விதம் சிறப்பு! அவருடைய கவிதையும் நாட்டுப்புற பாடல்  பாணியில் நன்றாக இருக்கிறது. மற்ற கவிதைகள் அவ்வளவாக கவரவில்லை. 

எழுத்தாளர்களின் புகைப்படத்தோடு அவர்களைப்பற்றிய தகவல்களும் அளித்தது பாராட்டுதல்களுக்கு உரியது. 

குறை என்று சொல்ல வேண்டுமென்றால் நகைச்சுவை துணுக்குகள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம். புதிர் ஒன்றே ஒன்றுதான் இருந்தது, அதையும் எல்லோரும் எந்த அளவிற்கு ரசித்தார்கள் என்று தெரியவில்லை. ரசிக்கும் வண்ணம் புதிர்கள் போடலாம். சமையல் குறிப்புகளை கொஞ்சம் குறைக்கலாம். 

கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் பாராட்டுகள்! 

======= 

மின்நிலா பொங்கல் மலர் 2021 LINK


25 கருத்துகள்:

 1. பொங்கல் மலருக்கான விமர்சனம் சிறப்பு. பாராட்டுகள் பானும்மா.

  பதிலளிநீக்கு
 2. எனது கதைகளையும் கவிதை மற்றும் சமையல் குறிப்பினையும் சிறப்பித்து எழுதியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அழகாக வகுத்து பிரித்து கருத்து சொல்லியிருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது இது மாதிரியும் எழுதி இருக்கலாம் என்று ஒவ்வொருவர் கருத்தையும் படிக்கும்போது பல யோசனைகள் உதிக்கிறது மிகவும் ரசனையாக இருக்கிறது இம்மாதிரி மலரில் பங்குகொண்ட ஒவ்வொருவரும் அவரவர்கள் பாராட்டி எழுதலாம் கருத்து சொல்பவர்களும் உற்சாகம் ஏற்படும் என்னுடைய கருத்து இது வாழ்த்துகள் அன்புடன்

  பதிலளிநீக்கு
 4. என்னுடைய கதை 'கோபு - வெச்ச ஆப்பு' பற்றி ஒன்றும் குறிப்பிடாததால், உங்க பேச்சு கா !!

  பதிலளிநீக்கு
 5. பானுமதி அவருடைய பாணியில் வெகு சுருக்கமாகவும் நறுக்கென்றும் எல்லோருடைய படைப்புக்களையும் விமரிசித்து விட்டார். இந்தப் பாணி எல்லோருக்கும் கை வந்தால் எவ்வளவு நல்லது என யோசித்துப் பார்த்துக்கொண்டேன். எங்கே! நமக்கெல்லாம் கருத்தே ஒரு பதிவாக வரும்போது! இதெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. அருமையான விமரிசனம் பானுமதி! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை ஆறு பகுதிகளாக விமர்சனம் எழுதியிருக்கிறார் என்று அறிந்தவுடன் நடுங்கி விட்டேன். பிரித்து மேய்ந்து விட்டாரோ?இன்னும் அவருடைய விமர்சனத்தை படிக்கவில்லை. அதன் பாதிப்பு வந்து விடக்கூடாதே என்பதே காரணம்.

   நீக்கு
 6. ஆன்மிகக்கட்டுரைனு தனியா எதுவும் எழுதுவதாக எனக்கு எண்ணம் இல்லை. ஶ்ரீராம் தனியாகக் கேட்டுக்கொண்டதின் பேரில் முதலில் சுருக்கமாக எழுதிட்டுப் பின்னர் கொஞ்சம் விரிவாகக் கேட்டதால் விரிவாக்கினேன். என்னுடைய கேள்வியை அப்பாதுரைக்கு அதற்கு முன்னரே அனுப்பி விட்டபடியால் அந்த நினைவும் எனக்கு வரலை. அதோடு அப்பாதுரையின் கருத்தைத் தானே நான் கேட்டிருந்தேன். ஆகவே அவர் கருத்துக்கும் என்னோட கருத்துக்கும் வித்தியாசங்கள் இருக்குமே! குறைந்தது ஆறு வித்தியாசங்கள்!

  பதிலளிநீக்கு
 7. இருக்கலாம். ஆனால் இரண்டும் அடுத்தடுத்து வந்ததால் சற்று அலுப்பாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ - இந்தத் தவறு, கட்டுரைகளை சரியாக அமைக்காத என்னைச் சேர்ந்தது. எதிர்காலத்தில் இதை கவனத்தில் கொள்கிறேன். நன்றி.

   நீக்கு
 8. அதெல்லாம் சரி தான்!..

  மருதாணிச் சித்திரம் தாய்மையின் அன்பைப் பேசுவதாயிற்றே!..

  அதில் காதல் என்ற வார்த்தை கூட கிடையாதே!...

  அப்புறம் எப்படி காதல் கதை என்றானது!..

  பதிலளிநீக்கு
 9. நான் தான் ஒழுங்காக சொல்லத் தெரியாமல் குழப்பி விட்டேன்...

  பதிலளிநீக்கு
 10. கிரிக்கெட்டிலிருந்து கொஞ்சம் விடுப்பு கிடைத்ததால் இப்போதுதான் நுழைகிறேன் இந்தப் பக்கத்தில்.

  விமரிசனக் கட்டுரை படிக்க சுவாரஸ்யம். எல்லாவற்றையும் வாசித்து, எதையும் விடாது குறித்திருக்கிறீர்கள்.
  அடியேனது மொழிபெயர்ப்புக் கதை, கட்டுரைக்கான பாராட்டுகளுக்கு நன்றி. குறிப்பாக மொழிபெயர்ப்பின் தன்மைபற்றிக் குறிப்பிட்டதில் மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி ஏகாந்தன் சார். சற்று தாமதமாக வந்தாலும் கருத்திட்டது குறித்து சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரி

  இன்றுதான் இந்த விமர்சனம் படிக்கிறேன். பொங்கல் மின் நிலாவுக்கு விமர்சனம் இந்த தனியிடத்தில் வெளி வந்திருப்பதே எனக்கு தெரியாது. இப்போதுதான் அறிந்து கொண்டேன். இது பற்றி சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் என் பதிவில் பதிலாக தந்துள்ளேன்.

  நீங்கள் அழகாக பொங்கல் மின்நிலாவின் அனைத்துப் பகுதிகளையும் பற்றியும் விமர்சனம் செய்துள்ளீர்கள். அதில் என்னையும் வாழ்த்தி கூறியமைக்கு மிக்க நன்றி. ஆனால், தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு