புதன், 1 ஜனவரி, 2020

நாடகத்தில் நடித்துப் பார்!


நம்ம ஏரியா இந்த வருடத்தின் முதல் பதிவாக திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய நாடக மேடை அனுபவம் இடம் பெறுகிறது. 






கௌதமன் அவர்கள் என்னுடைய நாடக மேடை அனுபவங்களை எழுதி அனுப்பினால் எங்க ஏரியாவில் பதிப்பிப்பதாக கூறினார். 

என் நாடக மேடை அனுபவம் என்றால் நான் ஒரு சைல்ட் ஆர்டிஸ்ட்(தோடா!) என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு விளையாட செல்ஃபோன், ப்ளே ஸ்டேஷன் போன்றவை இல்லாததால், விடுமுறை நாட்களில் நாங்களே யோசித்து ஏதாவது செய்வோம். அதில் ஒன்று நாடகம் போடுவது. 


இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே ஏற்பாடுகள் தொடங்கி விடும். சில சமயங்களில் அன்று காலை முடிவு செய்து இரவில் அதாவது ஏழு மணிக்கு அரங்கேற்றுவோம். எங்கள் அண்ணா கதை ,வசனம், இயக்கம், தயாரிப்பு சி.வி,சந்தானகிருஷ்ணன் என்று தன் பெயரைப் போட்டுக் கொண்டு

……. முன்னிட்டு,
…….வழங்கும் ….. நாடகம்
கதை,வசனம், தயாரிப்பு, இயக்கம்
சி.வி. சந்தான கிருஷ்ணன்

என்று  ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து, எங்களை அக்கம் பக்க வீடுகளில் காசு வசூல் பண்ணிக்கொண்டு வரச் சொல்லுவார். பெரும்பாலானோர் நாலணா, அல்லது எட்டணா கொடுப்பார்கள். சில தாராளிகள் ஒரு ரூபாய், கொடுப்பார்கள். அதை வைத்துதான் கிரீடம், வாள், போன்றவை செய்வதற்கு அட்டை, ஜரிகைத் தாள், ரோஸ் பவுடர், போன்ற சமாசாரங்கள் வாங்க வேண்டியிருக்கும். 
  

இவற்றைச் செய்வதற்கு எங்களில் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் அதை ஒப்படைத்து விட்டு, நடிகர்கள் ஒத்திகையைப் பார்ப்போம். ஒப்பனை எல்லாம் நாங்களேதான். சில சமயம் வீட்டில் இருக்கும் பெரியவர்களும், சுற்றியிருக்கும் சில அக்காக்களும் உதவுவார்கள். 

ஒரு கோகுலாஷ்டமியின் பொழுது ஒரு நாடகம். அதில் நான் கிருஷ்ணர், என் அக்கா யசோதா. கிருஷ்ணர் கோபிகைகள் வீட்டில் வெண்ணை திருடுவதாகக் காட்சி. யாரோ ஒரு பையன் என் முன் குனிந்து, “என் முதுகில் ஏறி, உறியில் இருக்கும் வெண்ணெய்யை எடுக்கவேண்டும், கவலைப் படாதே, தைரியமா ஏறு” என்று ரகசியமாக கூறி விட்டு, குனிந்து கொள்ள அவன் மேல் ஏறி நின்ற என் கால்கள் கிடுகிடுவென்று ஆடியதைப் பார்த்து, ஆடியன்சில் உட்கார்ந்திருந்த ஒரு அக்கா பெரிதாகச் சிரித்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது.



நாங்கள் குடியிருந்த இடத்தில் ராம நவமியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்பொழுதும் கடைசி நாளன்று குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இருக்கும். அதிலும் ஒரு முறை பொம்மலாட்டம் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். ஒரிஜனல் பொம்மலாட்டத்தில் பொம்மைகளை மனிதர்கள் போல ஆட்டுவிப்பார்கள். நாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மனிதர்கள் பொம்மைகள் போல நடிக்க வேண்டும். வசனம் கிடையாது, அசைவுகளும் பொம்மலாட்ட பொம்மை போலத்தான் இருக்க வேண்டும். 



“மாலா புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாள்” என்று குரல் ஒலிக்கும். மாலாவாக நடித்த நான் பொம்மை போல் அசைந்து, புத்தகம் படிப்பது போல் பாவனை செய்ய வேண்டும்.

“அப்பொழுது மாலாவின் தோழி அங்கு வருகிறாள்” என்று குரல் ஒலிக்கும் பொழுது தோழியாக நடித்த என் அத்தை பெண் பொம்மை போல அசைந்து அசைந்து வருவாள். இப்படியே முழு நாடகமும். அதில் நடித்தவர்களுக்குப் பரிசெல்லாம் கொடுத்தார்கள். பரிசை வாங்கிக்கொண்டு வணக்கம் சொல்லாமல் வந்து விட்டேன். இப்படித்தான் பரிசை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு வருவார்களா? பதவிசாகப் பெற்றுக் கொண்டு, வணக்கம் சொல்லி விட்டு வர வேண்டாமா?” என்று என் மாமி கேட்டார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் பெரியவர்களின் ஒத்துழைப்பு. எங்கள் நாடகத்தை வந்து உட்கார்ந்து பார்ப்பார்கள். ராம நவமி சமயத்தில் முழு ஆண்டுத் தேர்வு சமயமாக இருந்தாலும், இதையெல்லாம் அனுமதித்தார்கள்.

அதன் பிறகு நாடகம் எதிலும் நடிக்கவில்லை. மஸ்கட்டில் ஒவ்வொரு வருடமும் இண்டியன் கல்சுரல் அசோஷியேஷன் பல விதமான போட்டிகளை நடத்துவார்கள். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறதோ அத்தனை சங்கங்கள் உண்டு. எல்லாம் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளும்.
 
அந்த வருடம் தமிழ்ச்சங்கம் நடத்திய ஜோக் போட்டியில் நான் முதல் பரிசு வாங்கினேன். அதைப் பார்த்த நாகராஜன் என்பவர் நாடகப் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்து, என்னை அவருடைய நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கக் கூப்பிட்டார். 
 
நடிப்பதில் உள்ள சிரமங்களைப் புரிந்து கொள்ளாமல் நானும் ஒப்புக் கொண்டு விட்டேன். அது ஒரு ஒன் ஆக்ட் ப்ளே. மொத்தம் நான்கு கதாபாதிரங்கள்தான். அந்த இயக்குனர் கதை மட்டும் சொல்லுவார். வசனங்கள் நாங்களேதான் எழுதிக் கொண்டோம். என்னுடன் நடித்த பெண்மணி மிகவும் அக்ரசிவ். மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார். டைரக்டருக்கு நடிப்பு சொல்லித்தரத் தெரியாது. 
           
முதல் நாள் ஒத்திகையில் நான் வசனம் பேசியவுடன், “அம்மாடி நீ இவ்வளவு வேகமாகப் பேசினால் என் நாடகம் பத்து நிமிடத்தில் முடிந்து விடும்.” என்றார். “ஏன் சிரிக்கற? சிரிக்கக் கூடாது, முகத்தைச் சோகமாக வைத்துக் கொள்ள வேண்டும்”. 

“தலையைச் சாய்த்துக் கொள்ளக் கூடாது” 

என்றெல்லாம் சொன்னாரே தவிர என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த கையை என்ன செய்வது என்றே தெரியவில்லை. அழு,அழு என்றார்கள். ரொம்ப கஷ்டமாக இருந்தது.  விலகிக் கொள்கிறேன் என்றாலும் விடவில்லை. “உன்னால் முடியும்” என்றார்கள். 

உடன் நடித்தவர் “உங்கள் முகத்தில் இயல்பாகவே ஒரு சிரி இருக்கு, அதை கான்ஷியசாக மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார். இன்னொரு நண்பர், “ வியட்நாம் வீடு படத்தில் பத்மினி நடித்திருப்பதைப் பாருங்கள்” என்றார். ஐயோடா! என்றிருந்தது. எனக்கு பத்மினியின் நடிப்பு சுத்தமாகப் பிடிக்காது. வேறு யாரை முன் மாதிரியாகக் கொள்ளலாம் என்று யோசித்து, சிறை படம் பார்த்தேன். அந்த படத்தில் லக்ஷ்மியின் நடிப்பை அதுவும் ஒரு நடிகையின் கோணத்தில்    பார்த்துப் பிரமித்துப் போனேன். அது வரை நடிப்பதில் சொதப்பிக் கொண்டிருந்த எனக்கு, அதன் பிறகு நடிப்பது எளிதாயிற்று. இருந்தாலும் அழும் பொழுது குரல் கம்மி விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவதுதான் கடினமாக இருந்தது. 

அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அதிகம். நாடகம் நடைபெறும் நாள் அன்று அலுவலகம் செல்லக் கூடாது. லீவு போட்டு விட்டு நன்றாகத் தூங்கி ஒய்வு எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றார்கள். என்னால் லீவு எடுக்க முடியவில்லை. எப்படியோ நடித்து முடித்து விட்டேன். 

ரிகர்சலை பார்த்தவர்கள் “ரிகர்சலில் இன்னும் சிறப்பாக செய்தீர்களே, இன்று பயந்து விட்டீர்களோ?” என்றார்கள். முதல் முறையாகப் பார்த்தவர்கள் “உனக்கு இவ்வளவு திறமையா? ப்ரமாதம்!” என்றார்கள். ‘நடிகையர் திலகம்’, ‘கோப்பை நாயகி’ என்றெல்லாம் தகுதிக்கு மீறி புகழ்ந்தார்கள். எனக்கு அப்பாடா! முடிந்தது! என்றுதான் தோன்றியது. 

======================================================

28 கருத்துகள்:

  1. ஆகா...

    முதல் பதிவு நகைச்சுவை ததும்ப அமைந்தது சிறப்பு...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லி அக்கா? மாறு வேடத்தில் வந்திருக்கிறாரா ?

      நீக்கு
    2. தவறாக பேஸ்ட் பண்ணி விட்டேன். முதல் ஆளாக வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி துரை சார். 

      நீக்கு
  2. இனி வருகின்ற
    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. பொம்மை போல நடந்து நடிப்பது சிரமமில்லையோ?  ஆனாலும் பல வகையிலும் முயற்சித்து சிறந்து விளங்கி இருக்கிறீர்கள்.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொம்மை போல நடந்து நடிப்பது சிரமமில்லையோ?//  அப்பொழுது கஷ்டம் என்று தோன்றவில்லை. சொல்லிக் கொடுத்தபடி செய்து விட்டோம்.//பல வகையிலும் முயற்சித்து சிறந்து விளங்கி இருக்கிறீர்கள்.// அப்படி அமைந்தது.     

      நீக்கு
  4. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    நாடக அனுபவம் அருமை.
    பன்முகவித்தகர் தான் நீங்கள்.
    நாங்களும் சின்ன வயதில் நாடகம் எல்லாம் போடுவோம்.
    என் அண்ணன் சினிமா பிலிம்களை வைத்து வேஷ்டியை திரையாக கட்டி படம் காட்டுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! ஆச்சரியமா இருக்கு. நானும் சிறு வயதில், வீட்டில் ஆண்டவன் கட்டளை பிலிம் கந்தன் கருணை பிலிம் மற்றும் சரஸ்வதி சபதம் பிலிம் எல்லாம் வாங்கி, ஒரு அறையை இருட்டாக்கி, சுவற்றில் அந்த பிலிம்களை ப்ரொஜெக்ட் செய்து, சினிமா கதை கூறி அக்கம்பக்கத்து சிறுவர்களை (ஐந்து பைசா டிக்கெட்டில்) மகிழ்வித்திருக்கின்றேன்!

      நீக்கு
    2. நன்றி கோமதி அக்கா. பன்முக வித்தகியெல்லாம் இல்லை. வாய்ப்பு அமைந்தது அவ்வளவுதான். நமக்கெல்லாம் சிறு வயதில் காட்ஜெட்டுகள் இல்லாததால் நம்முடைய கிரியேட்டிவிட்டி வளர்ந்தது. 

      நீக்கு
    3. எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பையன் இப்படி பிலிம்களை வைத்து படம் காட்டுவான். அவன் எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்ததால் எம்.ஜி.ஆர். படங்கள் மட்டும்தான் காட்டுவான். நாங்களலெல்லாம் சிவாஜி ரசிகர்கள் ஆயிற்றே, அதனால் எம்.ஜி.ஆர். படங்கள் பார்க்க மாட்டோம். 

      நீக்கு
    4. சி ர சார்பில், சிரம் தாழ்ந்த நன்றி!

      நீக்கு
  5. பத்மினியை-- எங்கள் நாட்டிய ஒளியைப்-- பிடிக்காதா?..
    என்னங்க இது?..
    பத்மினியைப் போல நடிக்க யாருண்டு இப்பாரினிலே என்று இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேனே?..
    'காத்திருப்பான் கமலக் கண்ணன்' ஒன்று போதாதா?..
    தங்கப்பதுமை பத்மினி நடிப்புக்கு உயிர் கொடுத்த உன்னதம் தான் என்னே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சமயத்தில் பத்மினியை பிடிக்காது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். மெலோ ட்ராமா என்று தோன்றும். சமீபத்தில் வியட்நாம் வீடு பார்த்த பொழுது மெலோட்ராமாவாக இருந்தாலும் சில இடங்களில் சிறப்பாக நடித்திருந்தார். சித்தி, மற்றும் தெய்வப்பிறவி(அதில்தானே அவருக்கு சிவாஜி ஜோடியாகவும், எஸ்.எஸ்.ஆர். தம்பியாகவும் நடித்திருப்பார்கள்?)  எல்லாம் பார்த்த பொழுது எவ்வளவு நன்றாக நடித்திருக்கிறார் என்று தோன்றியது. 

      நீக்கு
    2. "சித்தி"யில் ஜெமினியைக் காதலித்துவிட்டு எம்.ஆர்.ராதாவை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொள்வார். பத்மினி பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்தபோது வந்த முதல் படம் சித்தி. எனக்கும் பத்மினியின் நடிப்பையோ அவரின் நடனமோ பிடிக்காது என்றாலும் ஒரு சில படங்கள் பார்த்திருக்கேன். தெய்வப்பிறவி பற்றித் தெரியாது.

      நீக்கு
  6. கிருஷ்ணர் பற்றிய கோகுலாஷ்டமி நாடகத்தில் நீங்களே கிருஷ்ணர்.
    ராமநவமி ராமர் நாடகத்தில் நீங்களே தான் ராமரா?..
    எப்பவும் முக்கியமான பாத்திரங்களில் தான் குறி வைப்பீர்களா?..

    பதிலளிநீக்கு
  7. அட. அருமையான அனுபவம். நம்ம Area vukku முதல் பதிவு.பிரமாதம்..பலகளை கற்று இருக்கிறார்.பானுமதி. Jeevee.சார். ஸ்டேஜ்.பிரசன்ஸ்.இருப்பவர்களைத்தான்.போடுவார்கள்
    நகைச்சுவையும் சுவாரசியமான பதிவு.

    பதிலளிநீக்கு
  8. கோகுலாஷ்டமி நாடகத்தில் நான்தான் கிருஷ்ணர், மாலாவாக புத்தகம் படித்தது நான்தான், மஸ்கட் நாடகத்திலும் பிரதான கதாபாத்திரத்தை நான்தான் ஏற்றேன் என்பது எழுதும் பொழுதுதான் எனக்கு உறைத்தது. அது அப்படி அமைந்தது. என்னை இழுத்துக் கொண்டு போய் நடிக்க வைத்தார்கள். குறிப்பாக மஸ்கட்டில் "நான் நடிக்க மாட்டேன், என்னால் முடியாது" என்று நிறைய தகராறு செய்தேன். 

    பதிலளிநீக்கு
  9. ஹாஹாஹா, சின்ன வயசு நாடக அனுபவங்கள் எல்லோருக்குமே இருக்கும். அதே போல் பழைய ஃபில்ம்களை வைத்துக்கொண்டு அறையை இருட்டாக்கிப் படம் காட்டும் தொழில்நுட்பத்திலும் நாங்களும் தேர்ந்தவர்களே! நாங்க போட்ட நாடகமெல்லாம் வீர சிவாஜி, ஜான்சி ராணி, என்றே இருக்கும். சிவாஜி நாடகத்தில் அஃப்சல்கான் பாத்திரத்துக்கு யாருமே முன்வர மாட்டாங்க! :))) நல்ல அனுபவங்களைத் திறம்பட எழுதிய உங்களுக்குப் பாராட்டுகள். சகலகலாவல்லி!

    பதிலளிநீக்கு
  10. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு அனுபவம்.

    கல்லூரி நாட்களில் நானும் ஒன்றிரண்டு நாடகங்களில் நடித்தது நினைவுக்கு வருகிறது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கும் எழுதியனுப்பலாமே!

      நீக்கு
    2. நன்றி வெங்கட். //எங்களுக்கும் எழுதியனுப்பலாமே!// இதை நான் வழி மொழிகிறேன்.   

      நீக்கு