வியாழன், 6 பிப்ரவரி, 2020

வா, அருகில் வா !


(நேற்றைய பதிவின் தொடர்ச்சி) 


அந்தப் படத்தை அப்படியே, தன்னுடைய மொபைலில், நீலுவுக்குக் காட்டினார், தங்கதுரை. 

அதைப் பார்த்த நீலுவுக்கு, சற்று நேரம் பேச்சே வரவில்லை. 




தங்கதுரையின் மொபைலை, கையில் வாங்கி, அருகே வைத்துப் பார்த்தார். 




நீலு , " இது...... இந்தப் படம் .... நீ அனுப்பியிருந்த படத்தின் ஒரு பகுதியா?"  - என்று கேட்டவாறே ரோடிலிருந்து முன்னூறு மீட்டர் தூரத்தில் தெரிந்த அந்த வீட்டையும், மரத்தையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தார். 




' ஆம். அதேதான். ' என்று தனக்குள் பேசிக்கொண்டார். " சிவ பார்வதி! - ஆம் அதுதான் அவளுடைய முழுப் பெயர். துரை - காரில் விஸ்கி இருக்குதா? எடு." 

தங்கதுரை எடுத்துத் தந்த விஸ்கி பாட்டிலை அப்படியே குடிக்கத் துவங்கினார் நீலு. 

நீ : " இந்தப் படத்தை உனக்கு அனுப்பியது யார்?"

த : " வினோத் என்று ஒரு புது நண்பன். நீ தங்கியிருக்கும் ஹோட்டலில்தான் வேலை செய்கிறான். நேரம் கிடைத்தால் உன்னை சந்திக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறான்."

நீ : " இது ஏதோ விசித்திரமான நிகழ்வாகத் தோன்றுகிறது. இந்தப் படம், மஹாபலிபுரம் சென்றபோது, நான் பார்வதிக்கு வாங்கித் தந்த ஒரு சிலை போல உள்ளது. அந்த சிலையை அவள் வீட்டில் வரவேற்பறையில் வைத்திருந்தாள். "

த : " ஓஹோ? அந்த வீட்டின் முன்பு இருக்கின்ற மரக்கிளைகளில் அப்படி இரண்டு உருவங்கள் உனக்குத் தெரிகிறதா? உற்றுப் பார்த்தால், எனக்கும் அப்படித் தெரிகிறது. வேறு சில பயங்கர உருவங்களும் தெரிகின்றன. "
             
நீ : " துரை, நீ இங்கேயே காரிலே ரெஸ்ட் எடுத்துக்கொள். நான் அந்த வீட்டை அருகிலே சென்று பார்த்துவிட்டு வருகிறேன். "

நீலு அந்த வீட்டை நோக்கி நடக்கத்துவங்கினார். 

நீலுவின் மனதில், பார்வதி பற்றிய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. மகாபலிபுரத்தில் தங்கி, அவளோடு கழித்த சில நாட்கள், அவளோடு பேசியது, பழகியது எல்லாம் கதம்பமாக அவர் மனதை ஆக்கிரமித்தது. அப்போ அவர் மனதில், ' அவசரப்பட்டு அவளைக் கொன்றிருக்கவேண்டாமோ? ' என்றும் ஒரு குரல். வேறொரு குரல் - 'அதற்கு மன்னிப்பே கிடையாது' என்றது. இன்னும் ஒரு குரல், 'தனிமையில் இருந்து, மனம் உருகி அவளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேள்' என்றது. 

' ஆம், அதுதான் சரி ' என்று நினைத்த நீலு, மெதுவாகத் திரும்பி வந்து, காரில் இருந்த தங்கதுரையிடம், " துரை, நான் திரும்பி வர எவ்வளவு நேரமானாலும் எனக்காக வெயிட் பண்ணு. மனசு சரியில்லை. இங்கே எங்காவது ஏகாந்தமாகக் கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வருகிறேன்" என்றார். 

" நானும் வருகிறேனே நீலு? "

" இல்லை.வேண்டாம். நான் தனிமையில், யாரும் அருகில் இல்லாமல் சற்று நேரம் இருக்கவேண்டும் " என்று சொல்லி, திரும்பவும், அந்த வீட்டை நோக்கி மெதுவாக நடந்தார் நீலு. 

(தொடரும்) 

21 கருத்துகள்:

  1. இதென்ன புதுத் திருப்பம். பார்வதியை இவரா கொன்றார்!!!!
    அப்பப் பழி வாங்கப் படுவார்.
    ஒன்றா ரெண்டா ஆசிரியர்கள்.
    எல்லாரும் சொன்னால் சுவை மாறாதோ.

    பதிலளிநீக்கு
  2. வெடியின் திரியில் நெருப்பு பற்றுவது போல் கதை சூடுபிடித்துவிட்டது. இனி வெடி எப்போது எவ்வளவு சத்தத்துடன் வெடிக்கும் என்பதுபோல் முடிவு வரை திக்-திக் தருணங்கள் நிறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கதை இப்போத் தான் சூடு பிடிச்சிருக்கு. இது ஆனால் யூகம் செய்திருந்தேன், நீலு தான் கொன்றிருப்பாரோ என! அதிலும் கர்பிணியான பெண்ணை அவரைத் தவிர யாரும் கொன்றிருக்க முடியாது. அந்த வீட்டுக்குப் போனால் அவருக்கு என்ன நடக்கப் போகிறதோ? உண்மை எல்லாம் வெளியில் வந்து விடுமோ?

    பதிலளிநீக்கு
  4. முன்பு விகடன் அட்டைப்படத்தில் முப்பரிமாண உருவம் என்று சொல்வார்கள்.  எவ்வளவு பார்தாலுமெனக்கு எந்த உருவமும் தெரியாது.   அதுபோலவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையே வழி மொழிகிறேன் ஸ்ரீராம்.
      எனக்கும் ஒன்றும் தெரியவில்லை.
      நானே வருவேன் அங்கும் இங்கும்.

      நீக்கு
  5. மெதுவாக நடக்காமல் கொஞ்சம் வேகமாக நடந்திருந்தால் அந்தக் காட்சியை மறைந்திருந்தாவது பார்த்திருக்கலாம், இல்லையா?.. நீலு, நீ ஏன் இப்படி அசமந்தமாய் ஆனாய்?..

    பதிலளிநீக்கு
  6. ஆஹா... சூடு பிடித்துவிட்டது! என்ன நடக்கப் போகிறது - பழி வாங்கும் படலம் உண்டோ? காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
    எனக்குத்தான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் தெரிந்தது என்ன என்று எனக்கும் தெரியவில்லை.

      நீக்கு
  8. //அப்போ அவர் மனதில், ' அவசரப்பட்டு அவளைக் கொன்றிருக்கவேண்டாமோ? '
    என்றும் ஒரு குரல். வேறொரு குரல் - 'அதற்கு மன்னிப்பே கிடையாது' என்றது. இன்னும் ஒரு குரல், 'தனிமையில் இருந்து, மனம் உருகி அவளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேள்' //

    தற்கொலை இல்லையா? கொலையா அதுவும் நீலுவா?
    அப்புறம் என்ன? பேயின் (சிவபார்வதியின்) பழி வாங்கும் படலம் ஆரம்பம்.

    பதிலளிநீக்கு