திங்கள், 13 ஏப்ரல், 2020

ஏனடி இந்த உல்லாசம்!


இந்த மூன்றாவது இறுதிப் பகுதியைப் படிக்கு முன்பாக 
நீங்கள், 

1) கொக்கி 191222
2)  மாலினி 1
3)  மாலினி 2
4)  மாலினி 3
5)  யாரடி வந்தார் 
6)  என்னடி சொன்னார் 

ஆகிய பதிவுகளைப் படித்திருந்தால், இந்தக் கதையை அதன் போக்கில் சென்று ரசிக்க முடியும். 


ஏற்கெனவே மேற்கண்ட ஆறு பதிவுகளையும் படித்தவர்கள், இந்த இறுதிப் பகுதியை இப்போ தொடர்ந்து படிக்கலாம். 

***

சேது வந்து சென்ற மறுநாள், மாலினி, பல யோசனைகளுக்குப்பின்,  பிரபுவை ஃபோனில் அழைத்து அவனிடம் பேச மனதினுள் ரிஹர்சல் செய்தவாறு தொடர்புகொள்ள முயற்சி செய்தாள். 

'நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் மொபைல் ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது ' என்று ஒரு பெண் குரல் இனிமையாக சொன்னது.

மறுநாளும் அதே. 

அப்புறமும் அதே, அதே. 

'என்ன ஆச்சு இந்தப் பிரபுவுக்கு?' மாலினியின் மனசுக்குள் லேசான விபரீத சந்தேகங்கள் எழுந்தன. 

'என்ன செய்யலாம்?' என்று யோசித்தவளுக்கு, 'சேதுவுக்கு கால் செய்து, அவனிடம் பிரபு பற்றி கேட்டால் என்ன?' என்று தோன்றியது. சேதுவுக்கு கால் செய்தாள். 

" வணக்கம் மேடம். சொல்லுங்க என்ன சமாச்சாரம்?" 

" சேது சார், நீங்க அனுவை கன்வின்ஸ் செய்தாச்சா? "

" ஆமாம் மேடம். அது பெரிய கதை. அப்புறம் விவரமாக சொல்றேன். உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். விரைவில் ரெஜிஸ்டர் ஆபீசில் நாங்க சிக்கனக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறோம். தேதி, இடம் எல்லாம் உங்களுக்கு சொல்கிறேன். கல்யாணம் முடிந்தவுடன், மறுநாளே உங்க வீட்டுக்குத்தான் விருந்துக்கு வருவோம் "

" வாங்க, நிச்சயம் வரவேண்டும். சந்தோஷமா இருக்கு. அ .... அப்புறம் .... "

" சொல்லுங்க மேடம். எதுவாக இருந்தாலும் என்னிடம் நீங்க தயங்காமல் பேசலாம். "

" உங்க நண்பர் பிரபு எப்படி இருக்கிறார்? " 

" அவனை நினைத்தால்தான் எனக்குக் கவலையா இருக்கு மேடம் ... சாரி ... "

" ஏன் ? என்ன ஆச்சு அவருக்கு? " மாலினியின் குரலில் சிறு நடுக்கம். 

" எதிலும் ஈர்ப்பு இல்லாமல், முகத்தில் சிரிப்பே இல்லாமல், வேளா வேளைக்கு சாப்பிடாமல் ..... ப்ச் ... என்ன சொல்ல! வேலைக்கு மட்டும் ஒழுங்காக வந்துபோய்க்கொண்டு இருக்கான்."

" அவரை மொபைல் ஃபோனில் தொடர்புகொள்ள முடியவில்லை. ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வருகிறது." 

" ஆமாம் மேடம். அவனுடைய மொபைலில் ஒரு வாரமாக ஏதோ பிரச்னை இருக்கு. இன்று அவனுடைய மொபைல் ஃபோன் எங்கள் ஆபீஸ் ஆஸ்தான ரிப்பேரர் மூலம் சரி செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். இன்று மதியம் நான் உங்களுக்கு இதுபற்றி ஃபோன் செய்து சொல்கிறேன் மேடம்." 

" ரொம்ப தாங்க்ஸ் சேது சார்." 

=====================================

காட்சி டி வி யின் பல டிஸ்கஷன் ரூம்களில் ஒன்று. 

வந்திருந்த டெக்கீஸ், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர் என்று எல்லோரும் அன்றைய டிஸ்கஷன் முடிந்து கிளம்பிச் சென்றபின் ... 
சேது, அனு மற்றும் வெங்கட் ஆகியோர் மட்டும் அந்த அறையில் இருந்தனர். 

வெ : " டேய் சேது - இன்னும் எத்தனை நாட்களுக்கு நான் என்னுடைய மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருக்கவேண்டும் சொல்லுடா!"

சே : " பொறு மகனே பொறு. இன்னும் சற்று நேரம்தான். அதற்குள் நான் சொல்லப்போகும் கதையைக் கேள்." 

அனு: " ஏய் சேது!  - வெங்கட் அண்ணா பாவம் - நீ சொன்ன சொல்லுக்கெல்லாம் அடங்கி நடந்துகிட்டு இருக்கார். நீ என்னடாவென்றால் கதை சொல்லக் கிளம்பிட்டியே!" 

சே : " அனு நீதான் நான் சொல்லப்போகும் கதையில் முக்கிய கதாபாத்திரம். நீயும் கவனமாகக் கேள். " 

சேது, சில நாட்களுக்கு முன்பு தான் மாலினியை சந்தித்தது, அப்போது அவளிடம் சொன்னவை எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் சொல்லிமுடித்தான். அதற்குப் பிறகு அன்று காலை மாலினி தன்னிடம் ஃபோனில் பேசியதையும் சொன்னான்.

அனு : " அடப்பாவி !! நான் வெங்கட் அண்ணனை மனசுல நெனச்சிருந்தேனா ! நமக்குதான் ரெண்டுவாரம் முன்பே கல்யாணம் ஆயிடுச்சேடா பாதகா! என்னுடைய அம்மா அப்பா ரெண்டு பேரும் போட்ட கண்டிஷன் வரை எல்லாம் சரியா சொல்லியிருக்கே. அப்புறம் நீ எனக்கு ப்ரபோஸ் பண்ணியது, நான் சம்மதித்தது, நமக்குக் கல்யாணம் ஆனது இதை எல்லாம் மாலினியிடம் சொல்லாமல் விட்டுவிட்டாயே!" 

சே : " மேடம் - அங்கேதான் இருக்கு இந்த சேதுவின் சாதுரியம். மாலினியையும், வெங்கட்டையும் இரண்டே வாரத்தில் சேர்த்து வைப்பேன் என்று நம்ப கல்யாணத்தன்று சொன்னேன் அல்லவா? அதற்குத்தான் ஒரு வாரம் முன்பு வெங்கட்டை மொபைல் போனை ஆஃப் செய்து வைக்கச் சொன்னேன். ஒரே ஒரு சிம்பிள் சைக்காலஜி அப்ளை செய்தேன். இதோ இன்றைக்கு, இன்னும் சற்று நேரத்தில், எல்லாம் சுபம் என்று முடியப்போகிறது."

வெ : " டேய் சேது - இப்போ நான் தாடி வளர்த்துக்கொண்டு லொக் ... லொக் என்று இரும வேண்டுமா? அதையும் சொல்லுடா. " 

சே : " சேச்சே - அதெல்லாம் வேண்டாம் வெங்கட். இப்போதைக்கு உன்னுடைய மொபைலை ஆன் செய். நான் என்னுடைய மொபைலை ஸ்பீக்கர் மோடில் போட்டு மாலினியுடன் பேசப்போகிறேன். அனு நீ ஏதேனும் கெக்கே பிக்கே என்று சத்தம் போட்டு சிரித்துவிடாதே. சிரிச்சா தலையில குட்டுவேன்." 

அனு : " நீ என் தலையில குட்டினா நான் உன் தொடைல கிள்ளுவேன் " 

வெ : " அடா டா - குட்டுவது கிள்ளுவது எல்லாம் அப்புறமா செஞ்சிக்கோங்க ... இப்போ உடனே மாலினிக்கு கால் பண்ணுடா சேது. " 

சேது கால் செய்தான். 

" மேடம் -- ரெண்டு விஷயம் சொல்லப்போகிறேன். நம்பர் ஒன்: எனக்கும் அனுவுக்கும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் கல்யாணம். (அனு,  'வெவ்வெவ்வே' என்று சேதுவைப் பார்த்து ஜாடை செய்கிறாள்) அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருவோம். "

" அப்படியா ! ரொம்ப சந்தோஷம் சேது சார்! நிச்சயம் வாங்க. இரண்டாவது விஷயம் என்ன?"

" மேடம், வெங்கட்டினுடைய மொபைல் ஃபோன் சரியாகிவிட்டது. இன்றைக்கு அவன் காம்ப் ஆஃப். எங்கள் அலுவலக  ஸ்டாஃப் ஒருவரிடம் அவனுடைய ஃபோனைக் கொடுத்து, அவன் வீட்டிற்கு சென்று கொடுக்கச் சொல்லியிருக்கோம். இந்நேரம் அவனுடைய மொபைல் அவனுக்குக் கிடைத்திருக்கும். " 

" ரொம்ப தாங்க்ஸ் சேது சார். அந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். அந்த நேரத்தில் நான் உங்கள் இருவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன் "

" அப்படியா மேடம் ... வெரி குட். ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம் " 

சேது ஃபோன் இணைப்பை துண்டித்தான். 

சே:  " வெங்கட் - இப்போ மாலினி உனக்கு கால் செய்வாள். உன்னைப் பொறுத்தவரை நடந்த விஷயம் எதுவுமே உனக்குத் தெரியாது. சமாளிச்சிப் பேசு. அதுக்கு முன்னாடி அனுவோட வாயை ஒரு கைக்குட்டையால் கட்டிப்போட்டுடறேன். மாலினி உன்னோடு பேசும்போது இவள் சிரிக்கிற சத்தம் ஏதாவது மாலினிக்கு கேட்டுச்சுன்னா விஷயம் விபரீதம் ஆகிவிடும்." 

இரண்டு நிமிடங்கள் கழித்து வெங்கட்டின் ஃபோன் ரீங்காரமிட்டது. 

" ஹலோ ! யார்?  மால்ஸ் நீயா ! ஆஹா இன்றைக்கு எனக்கு அதிர்ஷ்டநாள். இப்போதான் என்னுடைய மொபைல் சரியாகி என் கைக்கு வந்து சேர்ந்தது. என் கைக்கு போன் வந்து சேர்ந்ததும் முதல் கால் உன்னிடமிருந்து! ஆஹா ! வானத்தில் பறப்பதுபோல இருக்கும்மா ! எப்படி இருக்கே ? எங்கே இருக்கே? " 

" நான் நல்லா இருக்கேன். பிரபு நீ எப்படி இருக்கே? " 

" மால்ஸ் - நீ அன்றைக்கு கோபமாகப் பேசி என்னை அனுப்பிய தினத்திலிருந்து இதோ இந்த நிமிடம்வரை எனக்கு வாழ்க்கை வெறுத்து வேம்பாகித்தான் போயிருந்தது. நம்முடைய கல்யாணத்திற்கு என்னுடைய அம்மா அப்பா சம்மதித்தபோது கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இதோ இப்போதான் வசந்தம் வீசுவதுபோல் இருக்கு." 

" பொய் சொல்கிறாயோ உண்மை சொல்கிறாயோ தெரியவில்லை. இப்போ நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப்போகிறேன். ரெடியா?"

" நீ என்னிடம் பேசியதே ஒரு இனிய சர்ப்ரைஸ் - இப்போ இன்னும் ஒன்றா? சொல்லு, சொல்லு " 

" சொல்கிறேன். வரும் வாரம் புதன் கிழமை நாம் இருவரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளப்போகிறோம். அதற்கப்புறம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையில் உனக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. " 

" ஏன் அடுத்த புதன் கிழமை? நான் இப்போவே ரெடி மால்ஸ். கொஞ்சம் இரு. என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொள்கிறேன். " 

சேது, வெங்கட்டின் கையில் அழுத்தமாகக் கிள்ளினான். 

" ஆ ! ஐயோ வலிக்கிறது ! (அலறிவிட்டான் வெங்கட்!) அப்போ நான் காண்பது கனவு இல்லை. தாங்க் யூ மால்ஸ். ஐ லவ் யூ. " 

ஃபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

அனுவிடமிருந்து கைக்குட்டையை மீறி 'கிக் கிக் கிக் பிப் பிப்' என்று சிறிய குலுங்கல்கள். 

சேது அனுவின் வாயில் கட்டியிருந்த கைக்குட்டையை அகற்றினான். 

அனு : " வெங்கட் அண்ணா. எங்கள் இருவருக்கும்தான் நீங்க முதலில் ட்ரீட் கொடுக்கணும். "

வெ : " நிச்சயம் கொடுக்கிறேன் சிஸ்டர். டேய் சேது - பாவம்டா மாலினி - அவளிடம் எல்லா உண்மையையும் இப்போவே கால் பண்ணி சொல்லிடப் போறேன். " 

சே : " அடேய் ! இப்போ அப்படி ஏதாவது செய்து வைக்காதே. வெண்ணெய் திரண்டு வருகின்ற நேரத்தில் தலை கால் தெரியாமல் ஆட்டம் போடாதே. கல்யாணம் முடிந்த பிறகு, ஞாயிற்றுக் கிழமை நீங்க ரெண்டுபேரும் எங்க ரெண்டு பேருக்கு விருந்து கொடுத்து முடிக்கும் வரை கூட வாயைத் திறக்காதே. அதற்கு அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மெதுவாக ஒவ்வொரு நாளும் ஒரு உண்மையை அவசியம் ஏற்பட்டால் மட்டும் சொல்லு." 

வெ : (கை கட்டி, வாய் பொத்தியபடி) " சரி குருவே! "

======================     சுபம்   ========================


திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய மாலினி 1,2,3 யின் தொடர்ச்சியாக திருமதி கீதா ரெங்கன் அவர்கள் எழுதிய " அந்த நாளும் வந்திடாதோ" கதை, இரண்டு பகுதிகளாக, நாளையும் (ஏப்ரல்14) நாளை மறுநாளும் ( ஏப்ரல் 15) , காலை பத்து மணிக்கு வெளியாகும்.

========================================================25 கருத்துகள்:

 1. கதை அருமை. முடிவு இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கலாம்.

  இந்த பதிவு எமது வலைத் திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

  பதிவகளுக்கு குறிச் சொற்கள் வழங்குவதில் கவனம் செலுத்தக் கோருகிறேன். நீங்கள் சரியான குறிச்சொற்களை வழங்கினால் எமது வலைத்திரட்டியின் மெனுவில் தானாகவே உங்கள் பதிவு இணைந்துவிடும். ஆகவே திரட்டிக்கு வருபவர்களுக்கு பதிவை படிக்க இலகுவாக இருக்கும்.

  இந்த பதிவை தொடர்கதை என்று வகைப்படுத்துதல் நலம்.

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. ஸ்வாரஸ்யமான முடிவு! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 4. ஹை..கௌ அண்ணா.....நல்லா ஜாலியா இருந்துச்சு. வாசிக்க. கௌ அண்ணா ஸ்டைல்.. ஒரு சினிமா பார்ப்பது போல..அதுவும் நகைச்சுவை நடிகர்கள் சேர்ந்தா எப்படி இருக்கும் அது போல...நேத்தே கொஞ்சம் தோணுச்சு இந்த சேது வெங்கட் மாலினி சேர ஒரு நாடகம் போடுறானோன்னு...ஹாஹா..

  நல்லாருக்கு முடிவு. எஞ்சாய்ட்...அண்ணா. சரி அப்ப ஞாயிறு அன்று ஒரு விருந்து இருக்குன்னு சொல்லுங்க நாமெல்லாம் உண்டுதானே.!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ! மாலினி மனது வைத்தால்தான் நம்மை எல்லாம் அழைப்பார். அதற்குள் வெங்கட் ஏதாவது உளறி வைத்தான் என்றால், அனு, சேது எல்லோரும் ஓடவேண்டியதுதான்!

   நீக்கு
 5. கீதாவின் கதை 14, 15

  மிக்க நன்றி அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஆஹா, நினைச்சேன், நம்ம கு.கு. இப்படித் தான் முடிப்பார்னு! சுபமான முடிவுக்கு நன்றி. என்றாலும் விறுவிறு! குறையவில்லை. அடுத்தது தி/கீதாவா? படிக்க ஆவலுடன் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. கு கு எங்கே வந்தார்!

   நீக்கு
  2. அது என்னமோ தெரியலை, மனசில் இதை எழுதுவது கு.கு.னு பதிஞ்சு போச்சு! அதான் சொன்னேன். அவர் இல்லைனா நீங்களா? :)))))))

   நீக்கு
  3. அவரும் இல்லை, நானும் இல்லை என்று சொல்லமுடியாதே!

   நீக்கு
  4. ரெண்டு பேருமே என்றும் சொல்லமுடியாதே!

   நீக்கு
 7. தலைப்பு அருமை.கதை சேதுவின் ஏற்பாடு நல்லா இருக்கிறது. ஆனால் உண்மை தெரிந்தால் அனுவின் மனநிலை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 8. நான் கதையை முடிக்கும் பொழுது அதை இவ்வளவு ஸ்வாரஸ்யமாக தொடர்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. சில படங்கள் முதல் முறை ரிலீஸ் செய்யும் பொழுது சரியாக ஒடாது. இரண்டாவது முறை ரிலீஸ் பண்ணினால் நன்றாக ஓடும். அது போல இந்த கொக்கி கதை லேட்டாக பிக் அப் ஆகியிருக்கிறது.

  பதிலளிநீக்கு