உதவியாளர் உள்ளே வந்தார்.
முதலில், 'கையது கொண்டு, மெய்யது போர்த்தி' நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். பிறகு, டாக்டரைப் பார்த்து, பார்வையாலேயே 'என்ன?' என்று கேட்டார்.
டாக்டர், அவரை ஒரு வினாடி நோக்கிவிட்டு, பிறகு என்னுடைய எக்ஸ் ரேயைப் பார்த்தவாறு, கேட்டார், " டீ வந்துடுச்சா?"
உதவியாளர் சொன்னார், " இன்னும் வரலை"
டாக்டர் : "என்ன பண்றாங்க இந்த கேண்டீன்காரங்க? ரொம்ப அநியாயமாக இருக்கே? மெயின் கேட்டுக்குப் பக்கத்தில், காண்டீனுக்கு கிட்டக்க இருக்கின்ற நமக்கு கடைசியாக டீ கொண்டுகிட்டு வராங்க, மத்த டிபார்ட்மெண்டுக்கெல்லாம் முதலில் கொண்டு போயிடராங்க! வெல்ஃபேர் ஆபிசரை ஃபோனில் கூப்பிடு, நான் பேசறேன்!" என்றார்.
உதவியாளர் அங்கிருந்து அகன்றதும், சூட்டோடு சூடாக என் பக்கம் திரும்பி, "நீ யாரு? ஏன் இங்கே ஜட்டியோட நின்னுகிட்டு இருக்கே?" என்று கேட்டார்!
நான் குழம்பிப் போய் - "சார், நான் இன்ஜினீரிங் அப்ரெண்டிஸ் - இன்டர்வியூ, மெடிக்கல் டெஸ்ட், நீங்க எக்ஸ் ரே - வாக்சினேஷன் ... " என்று தந்தியடித்தேன்.
டாக்டர் சட்டென்று நினைவுக்கு வந்தவராக, " ஓ அயம் சாரி!" என்று சொல்லியபடி, எக்ஸ்-ரே இருந்த கவரை எடுத்து, தலை கீழாக திருப்பி உதறினார். ஒன்றும் நிகழவில்லை. என்னிடம் "ஊது" என்றார். எங்கள் ஊர் பக்கமெல்லாம் பாண்டிச்சேரி / காரைக்கால் பகுதியிலிருந்து பஸ்ஸில் வருபவர்களை, எல்லையில் நின்று கொண்டிருக்கும் போலீசார், முகத்துக்கு அருகே வந்து, மோப்பம் பிடித்தபடி "ஊது" என்பார்கள். மத்யபானம் குடித்திருப்பவர்கள் ஊதினால், 'ம்ம்ம்ம் மாட்டிக் கொள்வார்கள்!'
எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் கிடையாதே! டாக்டர், என்னை ஏன் இந்த சோதனை செய்கிறார்? என்று சந்தேகத்தோடு, வாயை 'உப்' பென்று வைத்துக் கொண்டு அவர் முகத்தை நோக்கி முன்னேறினேன். அவர் தன் கையில் இருந்த எக்ஸ்-ரே கவரை, என் முகத்துக்கு எதிரே நீட்டினார். அப்போதான் என் மரமண்டைக்கு உரைத்தது - அவர் எக்ஸ்-ரே கவரைத்தான் ஊதித் திறக்கச் சொல்லியிருக்கிறார்! (அவர் வாயில் வெற்றிலைப் பாக்கு?)
நாகைக்கு வருகின்ற புயல் எல்லாம் திசை மாறி, ஆந்திரா அல்லது ஒரிசா பக்கம் அடித்து ஓய்வதைப் போல், நான் அவருடைய வாய்ப் பக்கம் அடிக்க இருந்த புயலை, கவரின் வாய்ப் பக்கமாக அடித்து கரையைக் கடக்க வைத்தேன்.
கவரின் உள்ளே ஒன்றும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரிந்தது.
"எக்ஸ் ரேயோடு ரிப்போர்ட் ஒன்றும் தரவில்லையா? எங்கே ரிப்போர்ட்?" என்று கேட்டார், டாக்டர்.
"சார்? ரிப்போர்ட் கொடுத்தார்கள். ஆனால், மெடிக்கல் டெஸ்டுக்கு அழைத்திருந்த கடிதத்தில், மார்புப் பகுதியின் எக்ஸ்-ரே என்று மட்டும் இருந்ததால், ரிப்போர்ட்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்!"
"ரிப்போர்ட்டில் என்ன எழுதியிருந்தது?" என்று கேட்டார் அந்த விடாக்கண்டர்.
"எவ்ரிதிங் நார்மல். நைன்டி எய்ட் பாயிண்ட் சிக்ஸ் டிகிரி ஃபாரன்ஹீட்" (கொடாக்கண்டன் )
டாக்டர் சிரித்துக் கொண்டே "நீ தஞ்சாவூர் ஜில்லாவா? ரொம்பக் குறும்பா பேசுறியே .... " என்றார். தொடர்ந்து, "நானும் தஞ்சாவூர் ஜில்லாதான்.." என்றார்.
மேலும் சிரித்துக் கொண்டே, மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஏதோ எழுதினார். பிறகு என்னிடம், " நீ ட்ரைனிங் சென்டருக்குப் போ. எல்லோருடைய ரிப்போர்ட்டையும் அங்கே ஆள் மூலமாக அனுப்பிவிடுவோம்." என்றார். "போகும்போது ஞாபகமா பாண்ட், சட்டை எல்லாத்தையும் போட்டுகிட்டுப் போ." (ரொம்ப முக்கியம்! அவனவன் உடுத்த மறந்து போய்தான் வந்து இவரு முன்னால காபரே ஆடுகின்றான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கு!)
(கீ சா மாமியின் மருத்துவப் பரிசோதகர் போல இவரும் நல்லபடியாக ரிப்போர்ட் எழுதியிருப்பார் என்று நினைத்த என்னை, பயிற்சி மைய பொறுப்பாளர் அழைத்துக் கூறியது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.)
"உன்னுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டில், 'அண்டர் வெயிட்' என்று எழுதி இருக்கிறார், டாக்டர். என்ன செய்யப் போகிறாய்?"
நான் ஏதோ கூறுவதற்கு முற்படும் முன்பாக அவரே, பயிற்சி மைய அலுவலக உதவியாளரை (பாட்ரிக் ஆண்டனி) அழைத்து, என்னை அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, அவரிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். பாட்ரிக் கையில் என்னுடைய விவரங்கள் கோர்க்கப்பட்ட கோப்புடன் வெளியே வந்தார்.
பாட்ரிக் ஆண்டனி - ஆங்கிலம் பேசினால், நாள் முழுவதும் கேட்கலாம். ஏன் என்றால், நமக்கு ஒன்றுமே புரியாது! அவர் அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த என்னிடம், "மிஸ்டர் கௌதமன், வி ஆர் கோயிங் டு *&^%$^& #@!(*&*) .... ப்ளீஸ் பாலோ மி ... ^&$##(^(&^$#$% ... " அதாவது எனக்குப் புரிந்த வார்த்தைகளை மட்டும் புரிகின்ற எழுத்துகளாக எழுதியிருக்கின்றேன்.
பூசாரியைத் தொடர்ந்து செல்கின்ற ஆடு போல அவரைப் பின் தொடர்ந்து சென்றேன்.
அவர் சென்றது - பெர்சனல் டிப்பார்ட்மெண்ட் என்றும், அங்கு அவர் சந்தித்தவர்கள் முக்கிய பதவி வகிப்பவர்கள் என்றும், அதில் சிலர் என் பெயரைப் பரிந்துரைத்தவர்கள் என்றும், பிறகு தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு அறை வாயிலிலும் (கௌதமன், யூ ப்ளீஸ் ஸ்டே அவுட்) சுமார் அரை மணி நேரம் வாயில் காப்போனாக நின்று கொண்டிருந்தேன்.
கடைசி வாயிலில் நான் நின்று கொண்டிருந்த பொழுது, மருத்துவப் பரிசோதனை அறையில் எங்களைப் பார்த்து, எதையாவது திருடிவிட்டு மாட்டிக் கொண்டவர்களோ என்று சந்தேகப்பட்ட அதே தோழர், அந்தப் பக்கமாக வந்தவர், மீண்டும் அங்கே என்னைப் பார்த்தவுடன், தன சந்தேகம் உறுதியான தெளிவோடு என்னைப் பார்த்தவாறு சென்றார்!
பாட்ரிக் நான்காவது நபரை சந்தித்து வெளியே வந்து என்னிடம், "கம் ஆன் கௌதமன், வி வில் கோ பாக் டு ட்ரைனிங் செண்டர் ..." என்றார். பயிற்சி நிலைய அதிகாரியின் அறைக்குள் நுழைவதற்கு முன்பாக, 'கௌதமன் யூ ப்ளீஸ் .... ' என்று அவர் ஆரம்பிக்கும் முன்பாக நான், "ஐ வில் ஸ்டே அவுட்" என்றேன். அவர் புன்னகையுடன் "தாங்க் யூ " என்று சொல்லி உள்ளே சென்றார்.
ஐந்து நிமிடங்களில் பாட்ரிக் வெளியே வந்து, "கௌதமன் ப்ளீஸ் கம் இன்.." என்றார்.
உள்ளே சென்றவுடன், பயிற்சி நிலைய அதிகாரி, "வாட் மேன்? யூ ஆர் வெரி மச் அண்டர் வெயிட்? .." என்றார்.
"ஐ வில் இம்ப்ரூவ் " என்றேன் மிகவும் தன்னம்பிக்கையுடன்.
"வி வில் நாட் கன்ஃபர்ம் யூ இப் யூ டோன்ட் புட் அப் வெயிட் இன் த்ரீ இயர்ஸ் .." என்றார்.
"ஓ கே " என்றேன்.
"வென் வில் யூ ஜாயின்?"
மிகவும் சந்தோஷமாக உணர்ந்த தருணம் ..... !!
(அந்த சந்தோஷத்தை, அடுத்த அலேக் பதிவு போடுகின்ற வரையிலும் அனுபவிக்கின்றேனே!)
"நீ யாரு? ஏன் இங்கே ஜட்டியோட நின்னுகிட்டு இருக்கே?" என்று கேட்டார்!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா டாக்டருக்கு ரீ வந்தால் (ஓ இந்த பூஸார் வந்துருவாங்களோனே வந்தேனா டீ ரீ ஆகிப் போச்சு!!!!) தான் மூளை வேலை செய்யும் போல...
ஆரம்பம் இலக்கியம்!!
காலை வணக்கம் கௌ அண்ணா
கீதா
நன்றி
நீக்குஅதாவது எனக்குப் புரிந்த வார்த்தைகளை மட்டும் புரிகின்ற எழுத்துகளாக எழுதியிருக்கின்றேன்.
பதிலளிநீக்குபூசாரியைத் தொடர்ந்து செல்கின்ற ஆடு போல அவரைப் பின் தொடர்ந்து சென்றேன்.//
சுமார் அரை மணி நேரம் வாயில் காப்போனாக நின்று கொண்டிருந்தேன்.//
ஹா ஹா ஹா ஹா
அண்டர்வெயிட் நாலும் எப்ப ஜாய்ன் பன்றனு கேட்டது சந்தோஷமான தருணமாத்தான் இருக்கும்...
தொடர்கிறோம்
கீதா
நன்றி
நீக்கு//கீ சா மாமியின் //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதாரு புதுசா? :)
பதிலளிநீக்குநல்லா இருக்கு உங்களோட அவஸ்தை! ரசிக்கும்படி எழுதி இருக்கீங்க! நல்லவேளையா எனக்கு வாய்ச்சவர் நல்ல மருத்துவர். வெயிட்டை அப்போவே அதிகமாப் போட்டுக் கொடுத்துட்டார். காரணம் என்னன்னா அவரோட அப்பாவும் பள்ளிக்கூட வாத்தியாராம். எங்க அப்பா சேதுபதி ஹைஸ்கூலில் வாத்தியார் என்றதுமே அவருக்கு என் மேல் பாசம் பொங்கி விட்டது! :))))
அட! அப்படியா!
நீக்குஅட...! உடல் எடை ஏற மூன்று வருடம் கொடுத்திருக்காரே...!
பதிலளிநீக்குஆமாம்! ஆனால், இரண்டரை வருட காலத்திலேயே நாங்கள் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கினோம். அந்த சமயத்தில், என் எடை முப்பத்தொன்பது கிலோதான்! ஆனால், நான் சேரவிருந்த ஆராய்ச்சி & அபிவிருத்தி பிரிவில், அதற்குள் பல நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டு, என்னை வேலையில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க இயலாத விஷயமாகச் செய்துவிட்டேன். அந்த நேரத்தில் பயிற்சி மையத்தின் அதிகாரியும் வேறு ஒருவர்.
நீக்குபூசாரியைத் தொடர்ந்து செல்கின்ற ஆடு போல அவரைப் பின் தொடர்ந்து சென்றேன்.//
பதிலளிநீக்குமுல்லாவை தொடரும் ஆடு போல் இருக்கே படம்.
மூன்று வருடத்தில் உங்கள் உடலும் அபிவிருத்தி ஆகி இருக்கும் ஆராய்ச்சி& அபிவிருத்தி பிரிவும் அபிவிருத்தி ஆகி இருக்கும் உங்கள் உண்மையான உழைப்பால்.
உண்மை!
நீக்குகெள அண்ணனை நேற்று நான் மறந்தே போனேன்:)... திங்கள் செவ்வாயில் முடியுதில்ல:) நைட்டானது ச்ச்சோ ரயேட் ஆகிடுறேன்ன்ன்
பதிலளிநீக்குஹா ஹா இப்போவாச்சும் ஞாபகம் வந்துச்சே!
நீக்குஹாஹா... செம அனுபவம் தான்.
பதிலளிநீக்குநகைச்சுவை ததும்ப சொல்லி இருக்கிறீர்கள்...
நன்றி!
நீக்கு