அசோக் லேலண்டு எழுத்துத் தேர்வு முடிந்த இரு மாதங்கள் கழித்து, நேர்முகம் காணலுக்கான அழைப்பு வந்தது.
அதற்குள்ளாகவே நான் சென்னையில் மற்றும் பெங்களூரில் இரண்டு மூன்று கம்பெனிகள் நேர்முகம் சென்று வந்தேன். சென்னை அண்ணா சாலையில் கே சி பி எஞ்சினீரிங் பிரிவுக்கான டிராஃப்ட்ஸ் மேன் வேலைக்கு, பெயர் தெரியாத 'வால்வ்ஸ் அண்ட் பைப் பிட்டிங்க்ஸ்' கம்பெனி ஒன்று, எம் எப் எல், பாம்பே கம்பெனி ஒன்றிற்காக பெங்களூரில் ஹோட்டல் பிருந்தாவனில் ரூம் போட்டு டெஸ்ட் வைத்து, நேர்முகம் கண்ட கம்பெனி ஒன்று.
ஹிந்து பேப்பரில் ஒரு மருந்து மாத்திரை கம்பெனியில் டி எம் இ படித்த ஆட்கள் வேலைக்கு வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து, அதற்கும் அப்ளிகேஷன் அனுப்பினேன். பதில் வரவில்லை. ஒருவேளை 'டி எம் இ' என்று மருத்துவ சம்பந்தப்பட்ட படிப்பு ஏதேனும் இருந்திருக்குமோ அல்லது டி எம் ஓ (டிஸ்ட்ரிக்ட் மெடிக்கல் ஆபீசர்?) என்பது போன்ற அச்சுப் பிசாசு (பிரிண்டர்'ஸ் டெவில்) செய்த வேலையோ .... தெரியவில்லை! அசோக் லேலண்டு செய்த புண்ணியம் - என்னை வேறு யாரும் அதற்குள் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை!
நான் பாலிடெக்னிக் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போதே, டி என் பி எஸ் சி (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) பரீட்சை எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து, இதே நேரத்தில், என்னை வேலைக்கு வந்து சேரும்படி (மதுரையில், ஷிப்பெர்ஸ் - செய்லர்ஸ் அலுவலகத்தில் எழுத்தராக சேரும்படி ) ஒரு சாணிக் கலர் காகிதத்தில் டைப் அடித்து, அனுப்பி வைத்திருந்தார்கள். நான் போய் வேலையில் சேர்ந்தவுடன், அங்கு வேலையில் இருக்கும் 10A1 கிளார்க் ஒருவரை அந்த வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று குறிப்பிட்டு, அவருக்கும் ஒரு நகல் அனுப்பப்பட்டிருந்தது. அவர் அநேகமாக என்னை திட்டிக்கொண்டே இருந்திருப்பார். ஆனால், வேலையில் சேரவேண்டிய கடைசி நாள் வரையில் நான் வந்து சேரவில்லை என்று தெரிந்த பிறகு, என்னை வாழ்த்தியிருப்பார் என்று நினைக்கின்றேன்!
அசோக் லேலண்டு எண்ணூர் பயிற்சி மையத்தில் எனக்கும், மற்ற நண்பர்களுக்கும், நேர்முகம் காணல் நடைபெற்றது. அதுவரையிலும் எனக்கு, எண்ணூர், சென்னையின் எந்தக் கோடியில் இருக்கின்றது என்பது கூட தெரியாது. அண்ணனிடம் இருந்த பழைய சிடி மேப்பில், பொத்தல்களுக்கு நடுவே பார்த்ததில், ஜியார்ஜ் டவுனுக்கு வடக்கே வெற்றுத் தாளாக விட்டிருந்தார்கள். ஒரு அம்புக்குறி போட்டு, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் (செல்லும் வழி) என்று போட்டிருந்தார்கள்.
அண்ணன் குடியிருந்த போர்ஷனுக்குப் பக்கத்துப் போர்ஷனில், தாம்சன், ஜான் என்று இரண்டு நடத்துனர்கள் (சென்னை நகரப் போக்குவரத்து) இருந்தனர். இருவரும் எனக்கும், அண்ணனுக்கும் நண்பர்கள். அதில், ஜான், என்னை அசோக் லேலண்டில் நேர்முகம் காணல் அன்று என்னை அங்கே கொண்டு போய் விடுவதற்கு வந்தார். புரசவாக்கத்திலிருந்து ஒரு பேருந்து பிடித்து தங்கசாலைக்கும், பிறகு அங்கிருந்து வேறு ஒரு பேருந்து பிடித்து, எண்ணூருக்கும் போய்ச் சேர்ந்தோம்.
இந்தப் பயணத்தில் நான் தெரிந்துகொண்ட ஒரு சிறிய தகவல் - இங்கே எழுதுகின்றேன். ஜானுக்கு டூட்டி பாஸ் இருந்ததால், அவர் எனக்காக (மட்டும்) காசு கொடுத்து, டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுதெல்லாம், அந்தந்தப் பேருந்தில் இருந்த நடத்துனர்கள், அவரிடம் காசை வாங்காமல், அவரிடமே கொடுத்துவிட்டு, அவரை தோளில் ஒரு தட்டு, என்னை தோளில் ஒரு தட்டு என்று செல்லமாகத் தட்டிச் சென்றனர்! பிறகு ஜான் என்னிடம், அவருடைய யூனியனைச் சேர்ந்த நடத்துனர்கள் என்றால் இப்படி செய்வார்கள் என்றும், வேற்று யூனியன் ஆள் என்றால், எனக்கு பைசா வாங்கிக் கொண்டு, பயணச் சீட்டு கொடுத்திருப்பார் என்றும் சொன்னார்.
அசோக் லேலண்டு வாசலில் நாங்கள் இருவரும் இறங்கியவுடன், கம்பெனி காம்பவுண்டைப் பார்த்ததுமே, ஜான் உறுதியாகச் சொன்னார்: "சாரே! உனக்கு நிச்சயம் இங்கே வேலை கெடச்சிடும்" எனக்கு ஒரே சந்தோஷம்! அவருக்கு நன்றி கூறினேன். பிறகு அவர் விடை பெற்று சென்றார்.
நான் கம்பெனியின் கேட் அருகே சென்று, அங்கு இருந்த செக்யூரிட்டி அலுவலரிடம், என்னுடைய நேர்முகம் காணல் அழைப்புக் கடிதத்தைக் காட்டினேன். அவர் என்னிடம், "இண்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களா? உள்ளே போய், லெப்டுல திரும்பி கடைசி வரை போங்க. அங்கே லெப்டுல இருக்கு டிரெயினிங் செண்டர்." என்றார். சென்னை மாநகரத்தில், முதன் முதலாக ஒருமையில் பேசாமல், பன்மையில் மரியாதையாக 'நீங்க, வாங்க, போங்க' என்று ஒருவர் பேசியதைக் கேட்டு, எனக்கு மயக்கமே வந்தது.
மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் மீண்டும் தொடர்கின்றேன்!
வணக்கம் கௌ அண்ணா..
பதிலளிநீக்கு//ஒரு மருந்து மாத்திரை கம்பெனியில் டி எம் இ படித்த ஆட்கள் //
மருந்துக் கம்பெனிக்கா ஆச்சரியமா இருக்கே...டிப்ளமா இன் மெடிக்கல் இஞ்சினியரிங்க் எல்லாம் அப்பவே இருந்திருக்குமோ!!!!!!!!!!!?
அச்சுப் பிசாசு//
ஹா ஹா ஹா ஹா....உங்களுக்கு என்றே எங்கிருந்து அழகான பெயர்கள் நகைச்சுவையுடன் மனதில் உதிக்கிறதோ....!!!!!
கீதா
இரசிப்புக்கு நன்றி!
நீக்குநானும் நிறைய டி என் பி எஸ்ஸி பரீட்சைகள் எழுதியிருக்கேன்.
பதிலளிநீக்கு//ஒரு சாணிக் கலர் காகிதத்தில் டைப் அடித்து, அனுப்பி வைத்திருந்தார்கள்.// ஹா ஹா ஹா ஆமாம் அப்பல்லாம் அந்த மாதிரி பேப்பர் கொஞ்சம் தண்ணி பட்டாலே போதும் அவ்வளவுதான்...
நீங்கள் வேலையில் சேர்ந்ததும் எதற்கு அந்த 10A1 கிளார்க்கை நீக்குகிறார்கள்? ஒரு வேளை அதௌ அவருக்குத் தற்காலிக போஸ்டோ?!!
இந்த ஜான் மேட்டர் மட்டும் முன்ன எங்கேயோ எபியில் வாசித்த நினைவு இருக்கு வேறு எதுக்காச்சும் இதை மட்டும் பகிர்ந்திருந்தீங்கன்னு நினைக்கிறேன்...பு கே ப?
சென்னை மரியாதை எனக்கும் சென்னைக்கு வந்த புதிதில் பயமுறுத்தியது!!!! ஹா ஹா ஹா
கீதா
சென்னையில் நீ, வா, போ என்று பேசினால் மரியாதையாம்; வா ஐயா, போ ஐயா என்று பேசினால் மரியாதைக் குறைவாம். ரொம்ப நாளைக்கு கஷ்டப்பட்டேன். ஆனால் இதுவரை வயதில் சிறியவர்களாக இருந்தாலும், வா போ என்று பேசியதில்லை. வாங்க, போங்க என்றுதான் பேசுவேன், என்னுடைய கார் டிரைவர் உட்பட எல்லோரிடமும்.
நீக்குஇப்போவும் வயதில் குறைந்தவர்களானாலும் "நீங்க, வாங்க!" என்றேபேசுவேன். அது யாராக இருந்தாலும்.
நீக்கு//நான் போய் வேலையில் சேர்ந்தவுடன், அங்கு வேலையில் இருக்கும் 10A1 கிளார்க் ஒருவரை அந்த வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று குறிப்பிட்டு, அவருக்கும் ஒரு நகல்//
பதிலளிநீக்குஎன்ன ஆச்சரியம்! நான் தண்டையார்ப்பேட்டை எலக்ட்ரிசிடி ஆஃபீஸில் வேலையில் சேர்ந்ததும் அந்த டைப்பிஸ்ட் போஸ்டில் இருந்த வசந்தா என்னும் டிசிஎல்லை வேலை நீக்க உத்தரவு கொடுத்து அனுப்பினார்கள். அந்தப் பெண் அன்றைக்கு என்னைத் திட்டி இருந்தாலும் பின்னால் அதே அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தது/அதிகாரம் பண்ணியது எல்லாம் வேறே கதை! :)))))
அட! இன்டரஸ்டிங்!
நீக்கு10A1 என அரசுத்துறையில் குறிப்பிடுவாங்களா. இங்கே டெம்பரரி காஷுவல் லேபர் என்பதைத் தான் டிசிஎல் எனச் சொல்லுவார்கள். அன்றன்று சம்பளம். வாரக்கடைசியில் தருவாங்க. பிஎஃப் போன்ற பிடித்தங்கள், தீபாவளிக்கு அட்வான்ஸ்,கோ ஆப்டெக்ஸ் துணி வாங்கும் சலுகைப்பத்திரம் எல்லாம் அவங்களுக்குக் கிடையாது. ஆனால் வேலை மட்டும் எப்படியானும் கிடைச்சுடும்! ஓரிரு வருடங்களில் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாகவும் ஆகிடுவாங்க.
பதிலளிநீக்குசரிதான். நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கேன்.
நீக்குவெளி ஊர்களிலிருந்து வந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தவர்கள் மரியாதையுடனே அழைப்பார்கள். அவங்க தமிழ் பேசும் விதத்திலேயே வெளி ஊர்க்காரங்க எனப்புரிஞ்சுடும். இம்மாதிரி அனுபவங்கள் அநேகமாய் அனைவருக்கும் இருக்கும். இப்போச் சென்னை காஸ்மாபாலிடன் நகராகி விட்டது. ஆகவே கலந்து கட்டித் தான் தமிழே! :))) சுத்தத் தமிழைப் பார்க்கிறதே அரிது!
பதிலளிநீக்குசுத்தத் தமிழில் பேசினால், நம்மைக் கலவரமாக ஒரு நோட்டம் விட்டு, பாதுகாப்பான தூரத்திற்கு சென்று நின்றுகொள்வார்கள்!
நீக்குஉங்களுக்கு மயக்கம் வந்ததை இரசித்தேன்.
பதிலளிநீக்குதண்ணி அடித்து விட்டு (ஸாரி தண்ணீர் தெளித்து விட்டு வரவும்) காத்திருக்கிறேன்...
ஹா ஹா !
நீக்குஅனுபவங்கள் அருமை. எத்தனை பேர் உதவி இருக்கிறார்கள்! நல்ல உள்ளங்களை நினைவுகூர்ந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு.// சென்னை மாநகரத்தில், முதன் முதலாக ஒருமையில் பேசாமல், பன்மையில் மரியாதையாக 'நீங்க, வாங்க, போங்க' என்று ஒருவர் பேசியதைக் கேட்டு, எனக்கு மயக்கமே வந்தது.//
ரசித்தேன்.
நன்றி!
நீக்குஒருத்தர் வாழ்க்கைக்கு எத்தனை உதவிக்கரங்கள் நீளுகின்றன... வாழ்க்கைச் சுழலில் இதையெல்லாம் மறந்துவிடுகிறோம்.
பதிலளிநீக்குதொடருங்கள்.
நன்றி!
நீக்குமெட்றாஸ் பாஷை பேசாத செக்யூரிட்டி அலுவலரும் புதிதாக சேர்ந்திருப்பாரோ...?
பதிலளிநீக்குபுதிதாக சேர்ந்திருக்கமாட்டார்; என்னைப்போல வெளிமாவட்டம் ஆசாமியாக இருப்பார்!
நீக்குஹா ஹா ஹா இன்று எங்கள் புளொக்கில் மயங்கிக் கிடந்திட்டேன்ன் அதனால இதை மறந்தே போனேன்ன்.. இப்போதான் நினைச்சிட்டு ஓடி வந்தேன்ன்ன்..
பதிலளிநீக்கு//மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் மீண்டும் தொடர்கின்றேன்!
//
ஆவ்வ்வ்வ் ஆராவது கெள அண்ணனுக்கு சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்பி விடுங்கோ:).. அவருக்கு ஜலதோசம் குளிர்நீர் ஒத்துக்காது:).
இப்போ எனக்கு நோட்டிபிகேசன் வருது கெள அண்ணன்.
பதிலளிநீக்கு