வாசக நண்பர்கள், நான் இங்கு பதிவது, நாற்பது வருடங்களுக்கு முந்தைய அனுபவங்களை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காலப் போக்கில் எவ்வளவோ மாற்றங்கள். இக்காலத்தில், அசோக் லேலண்டில் எவ்வளவோ மாற்றங்கள். நான் அன்றைய சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதைப் படிப்பவர்கள், இன்றும் அதே நிலைமை அங்கு இருக்கின்றது என்று தப்புக் கணக்குப் போடவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
*** ***
அசோக் லேலண்டில் ஆயுத பூஜை என்பது மிகவும் கோலாகலமாக இருக்கும். தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியினரும், தத்தம் பகுதியை சார்ந்த இயந்திரங்களை கழுவி, சுத்தம் செய்து, அலங்கார வண்ணத்தாள்களால் அலங்கரித்து, வைத்திருப்பார்கள். அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், அதிகாரிகளும் ஆயுத பூஜைக்காக பணம் அவரவர்கள் பங்காக செலுத்துவார்கள். இயந்திரப் பகுதி பெரிய பகுதி. இயந்திரப் பகுதி ஒன்று, இ ப இரண்டு என்று அந்த நாட்களிலேயே நான்கு பகுதிகள் உண்டு. ஒவ்வொரு இயந்திரப் பகுதியிலும் பல லைன்கள் (Bay 1,2,3 ...) உண்டு. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பூஜை இடம் உண்டு! ஆக, இயந்திரப்பகுதி மட்டும் குறைந்தது நாற்பது பூஜைகள்.
இது தவிர, அசெம்பிளி பகுதி, ஸ்டோர்ஸ் பகுதி, இன்ஸ்பெக்ஷன், இஞ்சினீரிங், ஸ்பேர் பார்ட்ஸ், அக்கவுண்ட்ஸ், சேல்ஸ், டிரான்ஸ்போர்ட், மெயிண்டனன்ஸ், டூல் ரூம், பயிற்சி நிலையம், மருத்துவ நிலையம், தீயணைப்பு நிலையம், செக்யூரிட்டி, சிஸ்டம்ஸ், பிளானிங், பர்ச்சேஸ் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகள். மொத்தத்தில், எண்ணூரில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படும்.
ஒவ்வொரு பூஜை பாயிண்டிலும், விநாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி திருவுருவப் படங்கள், ஏசு கிறிஸ்து படம், மேரிமாதா படம் எல்லாம் இருக்கும். வெள்ளிக் கிழமைகளிலும், ஆயுத பூஜை சமயத்திலும், இந்த எல்லாப் படங்களுக்கும் பூ சூட்டப்பட்டு, மாலைகள், ஊதுபத்தி சகிதம் தெய்வீகமாக இருக்கும்.
ஆயுத பூஜை சமயத்தில், நிர்வாகம் எல்லோருக்கும் ஒரு ஸ்வீட் கூப்பன் வழங்கும். அந்த ஸ்வீட் கூப்பனை, ஆயுத பூஜையன்று பயிற்சி நிலைய வளாகத்தில் கொடுத்து, ஒரு பெரிய மில்க் ஸ்வீட் பெட்டியை பெற்று வருவோம். நான் சேர்ந்த காலத்தில் வழங்கப்பட்ட இனிப்புப் பெட்டி ஒரு கிலோ ஆரிய பவன் ஸ்வீட் பெட்டி என்று ஞாபகம். அதில் இருக்கின்ற பால் இனிப்புகள் எல்லாமே மிகவும் சுவையானதாக இருக்கும். வீட்டில் அதை ஒருவார காலம் வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தது உண்டு.
ஆயுத பூஜை (நவராத்திரியின் ஒன்பதாம் நாள்) ஒரு வருடத்தில் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னிரண்டு பண்டிகை விடுமுறைகளில் ஒன்று. அதனால், அசோக் லேலண்டில், ஆயுத பூஜை எட்டாவது நாளே கொண்டாடப்படும். ஆயுத பூஜை வருவது இன்று போல ஒரு செவ்வாய்க்கிழமையில் என்றால், திங்கட்கிழமை எண்ணூர் தொழிற்சாலை வாராந்திர விடுமுறை நாள் என்பதால், ஞாயிற்றுக் கிழமையே கொண்டாடிவிடுவோம்!
வேலை நேரம் காலை ஏழரை மணி முதல், மாலை நான்கு மணி வரை. ஆயுத பூஜையன்று, உற்பத்தி, மாலை இரண்டு மணியுடன் நிறுத்தப்படும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பூஜா கமிட்டி இருக்கும். அந்த பூஜா கமிட்டி (ஒருவர் அல்லது இருவர் - அந்தப் பகுதி தொழிலாளர்) ஆயுத பூஜையன்று காலையோ அல்லது மதியமோ பெர்மிசன் வாங்கிக்கொண்டு, பாரிஸ் (ஹி ஹி - நம்ம பாரிமுனைதானுங்க!) போய்விடுவார்கள். பூஜைக்கு வேண்டிய வாழைக் கன்று, அவல், பொரிகடலை, பொரி, ஆப்பிள், ஸ்வீட் பாக்ஸ்(பூஜையில் வைக்க ஒன்று, பணம் கொடுத்த அங்கத்தினர்களுக்கு ஆளுக்கு ஒன்று), இன்னும் சர்ப்ரைஸ் கிப்ட், அலங்காரத் தாள்கள், ஊதுபத்தி, சந்தனம், குங்குமம், பூசணிக்காய், எலுமிச்சம்பழம் இத்யாதி இத்யாதிகள் வாங்கிக் கொண்டு, இரண்டு மணி சுமாருக்கு ஆட்டோவில் வந்து சேர்வார்கள். அதுமட்டும் அல்ல, ஆயுத பூஜை வரவு செலவு கணக்கும் - மொத்த கலெக்ஷன் எவ்வளவு, என்னென்ன செலவுகள் (ஆட்டோ வாடகை உட்பட) என்ற வரவு செலவு கணக்கும் அறிவிப்புப் பலகையில், பூஜை கமிட்டி ஆட்கள், கையொப்பமிட்டு, ஒட்டிவிடுவார்கள்.
இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரையிலும், குப்பையகற்றல், சுத்தம் செய்தல், குங்குமம் வைத்தல், அலங்கார தாள்கள் ஒட்டுதல் என்று முன்னேற்பாடுகள் நடக்கும். மூன்று மணியிலிருந்து, பத்து நிமிடங்கள் பூஜை. பிறகு பிரசாதம் விநியோகம். பிறகு பாடத் தெரிந்தவர்கள் சில பாடல்கள் பாடுவார்கள். நான் பணியாற்றிய எஞ்சினீரிங் பகுதியில் அதிக வருடங்கள் பூஜையும் செய்து, பாட்டும் பாடி அசத்தியவர், திரு டி எஸ் ஸ்ரீராம் என்பவர். (இசைமழலை ராம்ஜியின் அண்ணனின் சம்பந்தி). நானும் ஒரே ஒரு பூஜை தினத்தன்று பாடினேன். அதற்குப் பிறகு என்னை யாரும் பாடச் சொல்லவில்லை!
அந்தக் காலத்தில், டூல் ரூம் பகுதி ஆயுத பூஜை மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுப் பொருளாக, பூஜையில் வைப்பதற்காக அவர்கள், பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம், அண்டா - குண்டா என்று பிரம்மாண்டமான பொருட்களை வாங்கி வந்து அசத்துவார்கள். பூஜை செய்வதற்கு ஸ்பெஷல் கேட்பாஸ் போட்டு, ஒரு முறை ஒரு புரோகிதரை அழைத்து வந்தார்கள்!
ஒரு சமயம், எங்கள் எஞ்சினீரிங் பகுதி தொழிலாளர்கள் நடத்திய ஆயுத பூஜை நிதி சிறப்புப் பரிசு, நாங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த இருநூறு ரூபாயில், ஒவ்வொருவருக்கும் ஐந்து கிராம் தங்கக் காசு.
தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரி பங்கெடுத்துக் கொள்ளும் பூஜை, மெடிக்கல் செண்டருக்கு முன்பாக ஒரு வண்டியை நிறுத்தி, அதை அலங்கரித்து, அதற்குச் செய்யப்படும் பூஜை. பிறகு அவர் பயிற்சி மையம் நடத்தும் பூஜையிலும், எங்கள் எஞ்சினீரிங் பகுதி ப்ரோடோடைப் வொர்க் ஷாப் பூஜையிலும் கலந்துகொள்வார். எங்கள் ப்ரோடோடைப் வொர்க் ஷாப்பில் ஒவ்வொரு வருடமும், அந்தந்த வருடத்தில் நாங்கள் செய்த புதிய வண்டி ஒன்று (அல்லது பல) நிச்சயம் இடம் பெறும். பூஜை முடிந்த பிறகு, அந்த வண்டியின் சக்கரங்களுக்குக் கீழே எலுமிச்சம் பழங்களை வைத்து, வண்டியை அவைகளின் மீது ஏற்றி, ஒரு ரவுண்ட் ஓட்டி வந்து திரும்ப நிறுத்துவார்கள். இந்த முதல் ஓட்டத்தின் போது, அந்த வண்டியை உருவாக்கியதில் அதிக அளவு பங்கேற்றுக் கொண்ட தொழிலாளரை அந்த வண்டியை ஓட்ட செய்ததும் உண்டு.
மொத்தத்தில், அசோக் லேலண்டில், ஆயுத பூஜை என்பது அந்த நாட்களில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அந்தந்த வருடத்து பூஜைக் கொண்டாட்டங்கள், அதற்கு அடுத்த வருட பூஜை தினம் வரையில் நினைவில் நிற்கும்.
ஆயுத பூஜை பொதுவாகவே நான் அறிந்தது எல்லா நிறுவனங்களிலும் முதல் நாளே கொண்டாடிவிடுவார்கள்தான். பூஜை அன்று விடுமுறை என்பதால்...
பதிலளிநீக்கு//ஆயுத பூஜை வருவது இன்று போல ஒரு செவ்வாய்க்கிழமையில் என்றால், திங்கட்கிழமை எண்ணூர் தொழிற்சாலை வாராந்திர விடுமுறை நாள் என்பதால், ஞாயிற்றுக் கிழமையே கொண்டாடிவிடுவோம்!//
அப்பா ஞாயிறும் கொண்டாட்டம் அடுத்த ரெண்டு நாள் லீவு கொண்டாட்டம்தான் இல்லையா செம குஷியா இருந்திருக்குமே...
காலை வணக்கம் கௌ அண்ணா
கீதா
காலை வணக்கம்.ஆமாம், ஹாப்பி டேஸ்!
நீக்குபூஜை அனுபவங்கள் ஸ்வாரஸ்யம் இப்போதும் பொதுவாக எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஇங்கு பங்களூரில் நாங்கள் வந்ததும் தீபாவளி அப்புறம் வந்ததால் சிட்பெட் முழுவதும் கடைகள் எல்லாம் ஒரே கழுவல் மயம் தான்.சின்ன சின்ன..ரோடெல்லாம் தண்ணியாக இருந்தது...
தொடர்கிறேன் ..
கீதா
கீதா
பெரும்பாலும் வட இந்தியர்களுக்கு தீபாவளித் திருநாள்தான் புத்தாண்டு / புதுக்கணக்குத் தொடங்கும் நாள்!
நீக்குநானும் ஒரே ஒரு பூஜை தினத்தன்று பாடினேன். அதற்குப் பிறகு என்னை யாரும் பாடச் சொல்லவில்லை!//
பதிலளிநீக்குஎன்ன பாட்டு பாடினீர்கள் அப்படி?
ஆயுத பூஜை படங்கள் எல்லாம் அருமை.
நன்றி. 'வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள் ' என்று பாடினேன்!
நீக்குவேலை பார்த்த Binny Mill ஞாபகம் வந்தது...
பதிலளிநீக்குகுரோம்பேட்டையில் என்னுடைய பக்கத்துவீட்டுக்காரர், மற்றும் புரசைவாக்கம் நண்பர் ஒருவர் கூட பின்னி மில்லில்தான் வேலை பார்த்தார்கள்.
நீக்குமிக அருமையாக இருக்கின்றன நினைவுகள். ஒரே ஒரு பாட்டுப் பாடிப் பயமுறுத்திய அனுபவமும் அருமை! நான் ஒரு ஆயுத பூஜைச் சிறப்பு நிதி மூலம் 5கிராம் பொற்காசு வாங்கிக்கொண்டேன்.பொற்கிழி கொடுக்கலைனு யாரும் சொல்ல முடியாது! :)))))
பதிலளிநீக்குஹா ஹா !
நீக்குநான் வேலை பார்த்த எம்.ஈ.எஸ் அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையுமே சிறப்புப் பூஜை உண்டு. பக்கத்தில் குடி இருக்கும் அலுவலர் யாரானும் அவங்க வீட்டில் இருந்து சுண்டல், வடை,காஃபி எனப்போட்டுக் கொண்டு வந்து கொடுப்பார்.
பதிலளிநீக்குவெள்ளிக்கிழமை பூஜைகள் அ லேவிலும் உண்டு. ஏழு நாற்பதுக்குத் தொடங்கி, ஏழு ஐம்பதுக்கு முடிந்துவிடும். கர்ப்பூர ஆரத்தி மட்டுமே. யாராவது பிறந்தநாள் கொண்டாடுபவர் இருந்தால் - அல்லது பிரமோஷன் பெற்றவர் இருந்தால், அவர் ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வந்து, வெள்ளிக்கிழமை பூஜையில் வைத்து, எல்லோருக்கும் ஸ்வீட் வழங்குவார். ஆயுத பூஜை நாள் முழுவதும் கொண்டாடப்படும்.
நீக்குஅருமையான நினைவுகள். ரசிக்கும்படி இருந்தது
பதிலளிநீக்குநன்றி நெ த!
நீக்குஸ்வாரஸ்யமான நினைவுகள்.....
பதிலளிநீக்குமகிழ்வான நினைவுகள். சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு