வியாழன், 21 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 21 :: சின்ன காம்பஸ், பெரிய காம்பஸ்!


அசோக் லேலண்டில், ஆராய்ச்சி & அபிவிருத்திப் பிரிவில், ஒரு வரைவு மனிதனாக (டிராப்ட்ஸ்மேன்) பணியாற்றிய காலம். ('உனக்கு டிராப்ட்ஸ்மேன் என்கிற பதம் சரியில்லை. உனக்கு டிராப்ட்ஸ்பாய் என்பதுதான் சரியான டெசிக்னேஷன் என்று என்னை என் நண்பன் வி. பாஸ்கர் அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு!)பக்கத்து வரைவு மேசை/ வரைவுப் பலகையில் பணியாற்றியவர் பெயர் சி.வி. தயாளன். அந்தக் காலத்து ஆர்மி வண்டியில், (4X4 Model) பயன்படுத்தப் பட்ட பல பாகங்களை படம் வரைந்து அதற்கான விவரங்களை அட்டவணை (specifications) இட்டவர் அவர். அந்த வண்டியின் முன் அச்சு பாகங்கள் எல்லாமே அவருக்கு அத்துப்படி.
             
அவர் பல வருடங்களாக அசோக் லேலண்டில் பணியாற்றி வருபவர் என்பதால், பல்வேறு டிப்பார்ட்மெண்ட் நண்பர்கள் அவரைத் தேடி வருவதுண்டு. சில சமயங்களில், அவரைத் தேடி வருபவர்கள், அவரின் வேலைக்கு இடையூறாக ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில், அவர்களை, தவிர்க்க இயலாது திண்டாடுவார், அவர்.
 
நான் அப்பொழுது பணியாற்றிக் கொண்டிருந்தது, மெட்ரிகேஷன், சஜஷன் ஸ்கீம், ஸ்டான்டார்டைசேஷன் - என்று பல தலைப்புகளில். சஜஷன் ஸ்கீம் சம்பந்தமாக, என்னைக் காணவும் பல வெளி டிபார்ட்மெண்ட் ஆட்கள் வருவார்கள். என்னுடைய வேலையிலும் வருகின்ற விசிட்டர்களால் தாமதம் ஏற்படும்.
             
வெளியாட்கள் தொந்தரவுகளைத் தவிர்க்க நாங்கள் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

தவிர்க்கப்பட வேண்டிய இம்சை அரசர்கள், எங்கள் வரைவு மேஜைக்கு அருகில் வந்து, வேலையை செய்யவிடாமல் போர் அடித்துக் கொண்டிருந்தால், யாருக்கு இம்சையோ, அவர், எங்களில் மற்றவரிடம், "சின்ன காம்பஸ் கொடு" என்று கேட்கவேண்டும். உதாரணத்திற்கு, அவர் இம்சை அரசனால் பாதிக்கப் பட்டு, திணறிக் கொண்டிருந்தால், அவர் என்னிடம் வந்து, சத்தமாக, "கௌதமன், சின்னக் காம்பஸ் கொடு" என்று கேட்க வேண்டும். நான் உடனடியாக அதை அவருக்குக் கொடுத்து விட்டு, சற்று நேரம் கழித்து, கொஞ்சம் வெளியே உலா போவது போல - அல்லது தொலைபேசி மேஜை அருகே சென்று, தொலைபேசியை எடுத்து, சற்று நேரம் கேட்டுவிட்டு (கேட்பது போல நடித்து) "தயாளன் - போன் கால் ஃபார் யூ" என்று கத்தி சொல்லி, அகன்று விடுவேன். அவர் உடனே ஓடி வந்து போனில் சற்று நேரம் கேட்பது போல நடித்து, "இதோ வருகிறேன் சார்!" என்று பய பக்தியுடன் சொல்லி போனை வைத்துவிட்டு, அவருடைய பாஸ் இருக்கும் அறைப் பக்கம் பார்த்து வேகமாக நடப்பார். நன்றாக நடிப்பார்.
              வந்திருக்கும் இம்சை, சாதாரணமாக இந்தக் கட்டத்திலேயே வாபஸ் ஆகி வெளியே சென்றுவிடுவார்கள்.

அப்படியும் அசையாமல் அவர் மேஜைக்கு அருகே இம்சை நின்று கொண்டிருந்தால், நான், அந்த இம்சையிடம், "அவரு பாஸ் கூப்பிட்டிருக்காரு. பாஸ் ரொம்பக் கோபமா இருக்காரு. அது அவரு குரலிலேயே தெரியுது. அவர் திட்டு வாங்கிகிட்டு திரும்ப வரும்போது நீங்க இங்கே இருக்காதீங்க. அனேகமா பாஸ் அவர் கூட சேர்ந்து இங்கே வந்து, படப் பலகையில் இருக்கின்ற படம் குறித்து விவாதிப்பார்கள். இந்த சமயத்தில், நீஙகள் இங்கே இருந்தால், உங்க நண்பருக்கு மிகவும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆகவே சீக்கிரமாக சென்றுவிடுங்கள். பிறகு வந்து பாருங்கள்" என்று சொல்லி அனுப்பிவிடுவேன்.
   
நான் தயாளனிடம் 'சின்ன காம்பஸ்' கேட்டாலும் இந்த நாடகங்கள் அரங்கேறும்; நான் இம்சையிலிருந்து காப்பாற்றப் படுவேன்!
   
இப்படியாக எங்கள் நடிப்புத் திறமையைக் காட்டி நாங்கள் ஒருவரையொருவர் காப்பாற்றி வந்த நாட்களில் ஒருநாள் ......

"கௌதமன், அர்ஜண்டா சின்ன காம்பஸ் கொடு" என்று பரபரத்தார், தயாளன். அவருடைய மேஜை அருகே யாரும் இல்லை. 'சரி மனிதர் உண்மையிலேயே கேட்கிறார்' என்று நினைத்து, நான் அவரிடம் சின்ன காம்பஸ் கொடுத்துவிட்டு, என் வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.
       
சற்று நேரம் கழித்து, மீண்டும் தயாளன். "கௌதமன், பெரிய காம்பஸ் கொடு." கொடுத்தேன்.
             
சற்று நேரம் கழித்து மீண்டும் அவர். என்னருகே வந்து, "கௌதமன் சின்ன காம்பஸ் கொடு." நான் உடனே "அது உங்களிடம்தானே இருக்கு?" என்று சொன்னேன். அவர், "ஆமாம், ஆமாம். என் 'கிட்டே'தான் இருக்கு. போர்டு கிட்டே வா - ஒரு சந்தேகம்" என்றார்.         
சென்று பார்த்தால், வழக்கமாக மேஜை அருகே நின்று போரடிக்கின்ற இம்சை ஒன்று, தயாளனின் டிராயிங் போர்டு பக்கத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்துகொண்டு இருந்தார். அப்போதான் எனக்கு தயாளன் ஏன் இவ்வளவு பதட்டப்பட்டார் என்று தெரிந்தது. அவரை இம்சையிலிருந்து விடுவிக்க எண்ணி, தொலைபேசிகள் இருக்கின்ற மேஜையருகே சென்றேன். நான் அந்த மேஜையருகே சென்றபோது, சரியாக உள்(தொலை)பேசி அடிக்க ஆரம்பித்தது. எடுத்து, "ஹலோ?" என்றேன்.
மறுமுனையில் பேசியவர், தயாளனின் பாஸ். "ஹலோ தயாளனை உடனே வந்து என்னை பார்க்கச் சொல்லு." என்றார், வைத்துவிட்டார்.
     
நான் உடனே உரத்த குரலில், "தயாளன், கபீர் கால்ஸ் யூ" என்று சொல்லி, என்னுடைய இடத்திற்கு வந்துவிட்டேன். 'அப்பா - இன்று ஒரு நாளாவது உண்மையை உரைத்தோமே!' என்று மனதில் ஒரு திருப்தியும் வந்தது. நான் சொல்வதற்காகவே காத்திருந்தது போல தயாளன் அவசரம் அவசரமாக ஓடினார்.
             
வந்து உட்கார்ந்திருந்த இம்சை நபரும் ஒருவாறு நிலைமையுணர்ந்து இடத்தை விட்டு அகன்றார்.
             
பத்து நிமிடங்கள் கழித்து, அங்கே வேகமாக வந்தார் கபீர். "கௌதமன், தயாளன் எங்கே? அவரை என் ரூமுக்கு வரவேண்டும் என்று சொன்னேனே - அவரிடம் சொல்லவில்லையா?" என்று கேட்டார்.
           
நான் 'பெப்பேப்பே ' என்று விழித்தேன்.
           
அப்போதான் - உள்பேசியில் நிஜமாகவே ஒரு கால் வந்தது என்பதை தயாளன் கவனிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். வழக்கம்போல அவரை இம்சையிலிருந்து விடுவிக்க நான் சொன்ன பொய்தான் அது என்று நினைத்து, கபீர் ரூம் பக்கம் செல்லாமல் டிப்பார்ட்மெண்டுக்கு வெளியே ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
             
கபீரிடம், 'சொன்னேன் சார். அவர் வயிறு சரியில்லை. அர்ஜெண்டா டாய்லட் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னார் சார். இதோ வந்துவிடுவார் சார்!" என்றேன். பேசிக் கொண்டே வெளியே தூரத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் தயாளனை கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.
என் பார்வை போன திக்கில் பார்த்த கபீர், மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் தயாளனைப் பார்த்ததும், என் பக்கம் திரும்பி, "டிப்பார்ட்மெண்டில் டாய்லட் இல்லையா? அவரு ஏன் மரத்தடிக்கெல்லாம் போயி அசிங்கம் செய்கிறார்?" என்று கேட்டு, சிரித்தவாறு சென்றுவிட்டார்!

               

13 கருத்துகள்:

 1. காலை வணக்கம் கௌ அண்ணா ..

  ட்ராஃப்ட்ஸ் பாய்// ஹா ஹா ஹா...ரொம்பச் சின்னப் பையனாச்சே நீங்க வேலைல சேரும் போது..பார்க்கவும் அப்படி இருந்தீங்களோ!!!!!!
  பையனா
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ! வொர்க்ஸ் ஆபீஸ் பக்கம் சென்றபோது அங்கு இருந்த கிளார்க் ஒருவர் என்னைப் பார்த்து, 'அசோக் லேலண்டுல அமுல் பேபிகளைக் கூடவா வேலையில் சேர்க்கிறார்கள்' என்று ஆச்சரியத்துடன் வினவினார் !

   நீக்கு
 2. ஹா ஹா ஹா ஹா ஹா நடிப்பு பிரமாதம் ஆனா கடைசில பாருங்க நான் நினைச்சுட்டே வாசித்தேன்...இவங்க மாட்டிக்கப் போறாங்க பொய் உண்மையாவே நடந்தா என்னாகும்னு!! புலிவருது கதையாகிப் போச்சே!! ஹா ஹா ஹா..

  மரத்தடில எல்லாம்....ஹா ஹா ஹையோ சிரிச்சு முடில...அப்புறம் அவர் எப்படிச் சமாளித்தான் நீங்க அவர்கிட்ட சொல்லி அனுப்பினீங்களா இந்தப் பொய்யையும் வயிறு சரியில்லைன்றத...ஹா ஹா...இல்லைனா மாட்டிக்குவாரே..

  சுவையான அனுபவங்கள்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. ஆஹா.... ஆபீசிலே இதுக்கெல்லாமா கூட்டு. இந்த வெட்டிப்பேச்சு மன்னர்களுக்கு வேலை இருப்பதில்லையா? ஏன் அடுத்தவர் இடத்தில் வந்து கடலை போடுகிறார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், தன்னுடைய வேலையை, பயிற்சிக்கு வருகின்ற ஐ டி ஐ அப்ரெண்டிஸ் யாரிடமாவது செய்யச்சொல்லிவிட்டு, வேலை இடத்திலிருந்து இங்கே வந்து பேசிக்கொண்டிருப்பார்கள்!

   நீக்கு
 4. ஹாஹா... செம அனுபவம் தான். மரத்தடியெல்லாம் அசிங்கம் பண்ணிட்டு! ஹாஹா....

  இப்படியும் சில தொந்தரவுகள். தவிர்க்க முடியாத தொந்தரவுகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்! மொண்ணை பிளேடுகள்! எதற்காக வருகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது!

   நீக்கு
 5. எப்படி எல்லாம் அனுபவம்!
  நடிக்க தெரிய வேண்டும்.
  சமாளிக்க தெரிய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. //"டிப்பார்ட்மெண்டில் டாய்லட் இல்லையா? அவரு ஏன் மரத்தடிக்கெல்லாம் போயி அசிங்கம் செய்கிறார்?" என்று கேட்டு, சிரித்தவாறு சென்றுவிட்டார்!/// இஃகி,இஃகி,இஃகி,பல்லெல்லாம் சுளுக்கிக் கொண்டு விட்டன.

  பதிலளிநீக்கு