வியாழன், 14 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 14 :: தீபாவளி நாட்கள்.



முன் காலத்தில், ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வந்தவுடன், நானும் என்னுடைய அண்ணனும் முதலில் படிப்பது, அதில் சிறுவர் கதைப் பகுதியில் வருகின்ற 'காட்டிலே தீபாவளி' அல்லது 'கரடியார் வெடித்த கேப்பு' அல்லது 'கபீஷ் கொளுத்திய கம்பி மத்தாப்பூ' போன்ற கதைகளைத்தான்! (எழுதியவர் வாண்டு மாமா? ராஜி?) இங்கே அசோக் லேலண்டு தீபாவளி! - கதையல்ல நிஜம்!





ஆயுத பூஜை போல - தீபாவளி நாட்களும் அசோக் லேலண்டில் இனிமையானவை, இனிப்பானவை. எழுபதுகளில், கம்பெனி சார்பில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் இலவசமாக கிடைக்கும். மேலும் குறைக்கப் பட்ட விலையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் - வேண்டும் என்று எழுதித் தருபவர்களுக்கு, சம்பளத்தில் இருபது ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு, தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பார்கள்.







எனது ஆபீசில், அனந்தநாராயணன் என்று பெயர் கொண்ட (காது கேளாதவர், பேச இயலாதவர்) நண்பர் ஒருவர் எங்களுடன் பணிபுரிந்து வந்தார். (இவருக்காகவே நான், காது கேளாதோரின் சைகை மொழியை, வேறு ஒரு நண்பரிடமிருந்து கற்றுக் கொண்டேன்) இவர், தனக்கு வருகின்ற குறைந்த விலை ஸ்வீட் பாக்ஸ் கூப்பனை / விண்ணப்பத்தை எங்கள் அலுவலகத்தில் இருந்த தலைமை வரைவாளர் ஒருவருக்காக விட்டுக் கொடுப்பது உண்டு. தலைமை வரைவாளர், அதற்குரிய தொகையை சம்பளம் வந்தவுடன் அனந்தநாராயணனுக்குக் கொடுத்துவிடுவார். குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கின்ற தரமான ஸ்வீட் என்பதால், அதற்கு அவ்வளவு டிமாண்ட்!




தீபாவளி மாதத்தில், பெஸ்டிவல் அட்வான்ஸ் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டு, பிறகு பத்து மாதங்களில் அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும்.

பெஸ்டிவல் அட்வான்ஸ் கையில் கிடைத்தவுடனேயே பெரும்பாலான டிபார்ட்மெண்ட்களில் இருக்கின்ற நண்பர்கள் செய்யும் ஒரு வேலை (நாங்களும் செய்ததுதான்!) என்ன தெரியுமா? ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு, தீபாவளி வெடி நிதி (Diwali Crackers Fund) ஒன்றை ஆரம்பிப்பார்கள். இருபது நபர்கள் ஒரு நிதி அமைப்பில் இருந்தார்கள் என்றால், இரண்டாயிரம் ரூபாய் மொத்த வசூல்.இந்த நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கு, இந்தத் தொகையிலிருந்து அவசரத் தேவைகளுக்கு கடன் அளிக்கப்படும்.




நூறு ரூபாய் கடன் பெறுபவர்கள், மாதம் ஒன்றுக்கு, ஐந்து ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். (ஆரம்பத்தில் மாதத்திற்கு மூன்று ரூபாய் வட்டி என்று வைத்திருந்தோம். பிறகு நான்கு ரூபாய் ஆகி, பல வருடங்களுக்கு ஐந்து ரூபாய் வட்டியாகவே இருந்தது என்று ஞாபகம்) நூறு ரூபாய் கடன் கேட்பவர்களுக்கு, தொண்ணூற்றைந்து ரூபாய்தான் கடன் கொடுப்போம். அவர் மறுநாள் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் எப்பொழுது கடன் திருப்பிக் கொடுத்தாலும் நூறு ரூபாயாகக் கொடுக்கவேண்டும்.

சொன்னால் நம்பமாட்டீர்கள் - இருபது உறுப்பினர்களில், மூன்று அல்லது நான்கு நபர்கள் மொத்தத் தொகையையும் கடனாக வாங்கிவிடுவார்கள். மாதா மாதம் வட்டித் தொகை செலுத்திக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் குறைந்தது நான்கு தீபாவளி வெடி நிதிக் குழுவாவது இருக்கும்.

ஒரு முறை, நான், என்னுடன் இரயிலில் வந்த குரோம்பேட்டை நண்பர் ஒருவரிடம் கேட்டேன், 'நூறு ரூபாய்க்கு, ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் வட்டி என்பது அதிகம் இல்லையா?' என்று. அவர் சொன்னார், "நாளை திங்கட்கிழமை, நமக்கு லீவுதானே, காலை நாலரை மணி சுமாருக்கு, ஸ்டேஷன் ஓவர் பிரிட்ஜ் மேலே வந்து கொஞ்சம் நின்று பாருங்கள்."

சென்று பார்த்தேன். அவரும், அவருடைய நண்பர் ஒருவரும், அங்கு நின்றிருந்தனர். அவருடைய நண்பரிடமிருந்து, பத்துப் பதினைந்து பேர் பணம் வாங்கிச் சென்றனர். என்ன விஷயம் என்று பிறகு அவர்கள் சொன்னார்கள். வந்து பணம் வாங்கிச் சென்றவர்கள் எல்லோரும் நடைபாதை காய்கறி வியாபாரிகள். ஒவ்வொருவரும் தொண்ணூற்றைந்து ரூபாய்கள் பெற்றுக் கொண்டு, ரயிலிலோ பஸ்சிலோ கொத்தவால் சாவடி (அப்போ கோயம்பேடு மார்க்கட் கிடையாது) சென்று காய்கறி வாங்கி வருபவர்கள். காய்கறி வாங்கிக் கொண்டு வந்து,கடை வைத்து, விற்பனை செய்து, வீடு திரும்பும்போது, தொண்ணூற்றைந்து ரூபாய் கொடுத்தவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை தங்கள் குடும்பச் செலவுக்காகக் கொண்டு செல்வார்கள்.

காலைக் கடன் கொடுத்து, மாலை வரவு வைக்கின்ற இவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தில் அது குறைந்த பட்சம் முப்பத்தாறாயிரத்து நானூறு ரூபாய் ஆகிவிடுமே!




அடுத்த தீபாவளி முன்பணம் பெறும் காலம் வரும்பொழுது, ஒவ்வொரு உறுப்பினர் கணக்கிலும், குறைந்தபட்சம் நூற்று அறுபது ரூபாய் இருக்கும். சிவகாசியிலிருந்து ஒரு லாரி லோடு வெடி வாணம் வாங்குகின்ற ஏஜெண்ட் - சென்னை ஒன்று பகுதியைச் சேர்ந்தவர் (பலர் இருப்பார்கள்), கம்பெனிகளில் இந்த மாதிரி தீபாவளி நிதி நடத்துபவர்களிடம், வெடிகள் வாணங்கள் பட்டியல் கொடுத்து, பட்டியல் நிரப்புகின்ற உறுப்பினர்களின் தேவைகளை ஒன்று சேர்த்து, வரவழைத்துக் கொடுத்துவிடுவார். ஒவ்வொரு நிதிக் குழுவும், உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வீட்டில் வெடிகளைக் கொண்டு வந்து, பட்டியல் பார்த்து, பிரித்து, கட்டி, மேலே உறுப்பினர் பெயரை எழுதி வைத்துவிடுவார்கள். அந்தந்த குழு உறுப்பினர்கள், அவரவர்களின் வெடி பாக்கிங்கை அங்கிருந்து பெற்றுச் செல்வார்கள்.



தீபாவளி முடிந்த மறுநாள், அலுவலகத்திற்கு வருகின்ற, (தீபாவளி கொண்டாடிய) எல்லோருமே அவரவர்களின் புது உடையணிந்து வருவார்கள். குடும்பஸ்தர்கள், தங்கள் இல்லங்களில் செய்த இனிப்பு, கார வகைகளை தாராளமாக எடுத்து வந்து, தங்கள் பகுதிகளில் பணிபுரிகின்ற தீபாவளி கொண்டாடாத மற்ற மதத்துத் தோழர்களுக்கும், குடும்பம் இல்லாத பேச்சிலர் மக்களுக்கும் கொடுப்பது உண்டு. ("வீட்டுல செஞ்ச பட்சணம்! - சாப்பிடுங்க!")


24 கருத்துகள்:

  1. இனிய அனுபவங்கள்.

    இங்கே அலுவலகங்களில் இப்படி கொண்டாடுவது அல்ல! ஹோலி சில அலுவலகங்களில் கொண்டாடுவது உண்டு. இந்த மாதம் - அதாவது அடுத்த வியாழன் ஹோலி! எல்லோருமே கலர்ஃபுல் ஆக இருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! ஆமாம்! நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பண்டிகை முக்கியத்துவம் பெறும்.

      நீக்கு
  2. பண அனுபவங்கள் இதில் நூறு ரூபாய் காய்கறி மார்க்கெட்டில் எல்லா ஊரிலும் நடக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  3. பல வருடங்களுக்கு முன் சென்னை சென்று (என்னுடன் எட்டாம் வகுப்பு வரை படித்தவன்) இதே போல் காய்கறி வாங்கி (தக்காளி கூடைகள் மட்டும் ஆரம்பத்தில்) இன்று இரண்டு மூன்று இடங்களில் மளிகைக் கடை வைத்துள்ளான்... அவன் ஞாபகம் வந்தது...

    இதில் பெருமை பட வேண்டிய விசயம் என்னவென்றால், இரண்டே வருடங்களில் குடிகாரா் தந்தையை திருத்தினான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அதிசயிக்கத்தக்க ஆள்தான்! வாழ்த்துகள்.

      நீக்கு
    2. முன்பு அலுவலகங்களில் மட்டும் இருந்த இந்த தீபாவளி ஃபண்ட்
      இப்பொழுது சில ஏஜெண்டுகளால் தனிப்பட்ட முறையிலும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அதில் பட்டாசு மட்டுமல்லாமல் ஐந்து கிலோ எண்ணெய், சர்க்கரை போன்றவிங்களும் வழங்கப்படுகின்றன.

      நீக்கு
  4. தீபாவளி அனுபவம் அருமை.
    காய்கறி வாங்க முன் பணம் கொடுத்து மாலையில் திரும்பி வந்து கொடுப்பவர் நம்பிக்கையில்தான் இது வளர்ந்து இருக்கும்.வீட்டில் செய்த பட்சணம் பகிர்ந்து அளிப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.

    பதிலளிநீக்கு
  5. கௌ அண்ணா வணக்கம்...லேட்டாகிப் போச்சு....

    //தீபாவளி மாதத்தில், பெஸ்டிவல் அட்வான்ஸ் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டு, பிறகு பத்து மாதங்களில் அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும்.//

    ஆமாம் கௌ அண்ணா முன்பெல்லாம் உண்டு...இப்பவும் இபப்டி இருக்கிறதா?

    கீதா

    பதிலளிநீக்கு
  6. (Diwali Crackers Fund) //

    மிக நல்ல விஷய்மாக இருக்கிறதே...சூப்பர். ஆனால் வட்டி 5 ரூ அதிகம் தான் இல்லையா?

    அட ப்ரிட்ஜ்ல இப்படி எல்லாம் கூட நடக்குமா?! கடன் கொடுத்தல் பின்னர் மாலை வரவு என்று...

    எங்கள் ஊரில் உண்டு இப்படியான வட்டிக்குக் கடன் கொடுத்தல் எல்லாம்....எங்கள் வகுப்பில் கூட நடந்ததுண்டு. நம் வீட்டில் எல்லாம் பாக்கெட் பணி கொடுக்க மாட்டாங்க பஸ்ஸுக்கு தரதே அதிசயம்...இல்லைனா நடைதான் 3 மைல்....அப்பல்லாம் கன்செஷன் என்பதால் பைசாவே தரமாட்டார்கள் கையில்.

    ஆனால் வகுப்பில் சிலருக்கு பாக்கெட் மணி கொடுப்பார்கள் அதில் சிலர் கடன் கொடுப்பார்கள். 5 ரூபாய்க்கு ஒரு ரூபாய் வட்டி!!!!!!

    இதெலலம் ஆஃப் தெ ஸ்கூல் தான் நடக்கும். பள்ளிக்குள் ரூபாய் நோட்டு கொண்டு வரக் கூடாது. சில சமயம் கேம்ஸ் டீச்சர்கள் திடீர் போலீஸ் போல சோதனை போடுவாங்க. இவர்கள் எல்லாம் கள்ளத்தனமாகச் செய்வது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நான் ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில்கூட பாக்கெட் மணி வட்டிக்கு கொடுக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  7. தீபாவளி இனிப்புகள் பரிமாற்றம் அநேகமாக எல்லா அரசு அலுவலகங்களிலும் இருந்திருக்கும் என நம்புகிறேன். இப்போது தெரியாது! அதோடு அப்போ கோ ஆப்டெக்ஸ் ஃபார்ம் அல்லது ஹான்ட்லூம் ஹவுஸ் ஃபார்ம் கொடுப்பார்கள். அங்கே போய் வேண்டிய துணிகள் வாங்கிக்கலாம். ஆனால் பலரும் கோ ஆப்டெக்ஸ் புடைவை என்றாலோ ஹான்ட்லூம் ஹவுஸ் புடைவை என்றாலோ மட்டமாக நினைக்கிறார்கள். இப்போதும் அந்தக் கருத்து இருக்கு! எங்க பொண்ணுக்கு நாங்க கோ ஆப்டெக்ஸ் பட்டுத் தான் வாங்கினோம். பட்டுன்னா அதான் பட்டு! அதுக்கடுத்துத் தான் நல்லியே! நான் பின்னாட்களில் ஹான்ட்லூம்ஹவுஸில் எல்லா மாநிலக் கைத்தறிச் சேலைகளும் வாங்கிக் கட்டி இருக்கேன். அருமைனா அருமை! அதோடு அங்கெல்லாம் கூட்டம் நெரியாது என்பதால் நம் விருப்பத்துக்கு ஏற்றபடி துணிகளைப் போடச் சொல்லி நிதானமாகத் தேர்வு செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய அண்ணன், தன அலுவலக கோ ஆப்டெக்ஸ் கடன் பணத்தில் எனக்கு சட்டை வேட்டி தீபாவளிக்கு எடுத்துக்கொடுத்தது உண்டு.

      நீக்கு
  8. ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் தவிர்த்து இந்த கோ ஆப்டெக்ஸ் ஃபார்மும் விநியோகிக்கப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ ஆப்டெக்ஸில் ஆசிரியர்களுக்கு மாதத்தவணையில் தீபாவளி ஜவுளி வாங்கும் சலுகை உண்டு. அதில் நாங்கள் வாங்கியிருக்கிறோம். எங்கள் இரண்டாவது அக்கா பெண்ணின் திருமணத்திற்கு கோ ஆப்டெக்ஸில்தான் வாங்கினார்கள். ஆனால் முன்பெல்லாம் ஒரிஜினல் ஜரிகை வந்து கொண்டிருந்தது, இப்போது அப்படி இல்லை.

      நீக்கு
    2. புதிய தகவல்கள் ! உங்கள் இருவருக்கும் நன்றி!

      நீக்கு
  9. முன்பு தீபாவளி எனில், கடைக்குச் சென்று, பார்த்துப் பார்த்து கார்ட்ஸ் செலக்ட் பண்ணி வங்கி அனுப்புவதும் ஒரு அழகிய அனுபவம்தான்.

    //காலைக் கடன் கொடுத்து, மாலை வரவு வைக்கின்ற இவர்கள் //

    என்னதான் இருப்பினும், இப்படிக் கடன் கொடுப்போர் இருப்பதனாலதானே, அந்த வியாபாரிகள் வீட்டிலும் விளக்கெரிகிறது.. ஆருமே கடன் கொடுக்கவில்லை எனில் எப்படித்தான் அவர்கள் வியாபாரம் பண்ணுவார்கள்.

    ஆனா நான் அறிஞ்ச வகையில், வட்டிக்கு காசு கொடுத்து வாழ்ந்த குடும்பம் எதுவும் நல்லா இருந்ததாகவே சரித்திரம் இல்லை.

    எங்கள் அம்மா எப்பவும் சொல்லுவா, நம்மிடம் எவ்வளாவு பணமிருந்தாலும், முடிஞ்சால் கைமாறாகக் கொடுத்து வாங்கலாமே தவிர, கடசிவரைக்கும் வட்டி என்ற நினைப்பே வந்திடக்கூடாது என.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளிக்கு மட்டுமில்லை அதிரா, பொங்கலுக்கும் விதம் விதமாக வாழ்த்து அட்டைகள் வாங்கி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பியது எல்லாம் ஒரு காலம்.

      நீக்கு
    2. ஆபீஸ் நண்பர்களுக்குள் குழு அமைத்து, இப்படி ஃபண்ட் நடத்தி பணம் புரட்டுதல் எனக்கு அந்த நாளில் அதிசயமாக இருந்தது! ஆனால் நாங்கள் வெளியாட்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கியதில்லை!

      நீக்கு
  10. இந்த வெடி, ஸ்வீட் பண்ட் என்பதை நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது கண்டிருக்கிறேன். மாதம் 50 ரூபாய் வெடிக்கு, 50 ரூபாய் ஸ்வீட்டுக்குன்னு வாங்குவாங்க (குழுக் குழுவா). இது ஃபேக்டரி தொழிலாளர்களிடையே பிரசித்தம். அப்புறம் அந்தக் குழுவில் ஓரிருவர் போய் சிவகாசிலேர்ந்து வெடி பர்சேஸ் பண்ணிக்கிட்டுவருவாங்க. அப்புறம் தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னால, ஒரு ஸ்வீட்/கார மாஸ்டரை எம்ப்ளாய் பண்ணி, நிறைய ஸ்வீட்ஸ், காரம் பண்ணுவாங்க (மூலப்பொருட்கள் வாங்கிக்கொடுத்து). பிறகு வெடி, ஸ்வீட்ஸை அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களிடையே பகிர்ந்துப்பாங்க. (இது பெரும்பாலும் வர்க்கர் யூனியன் ஆபீசர் லெவல்லதான். மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப் கிட்ட கிடையாது).

    அதை நினைவுபடுத்தியது இந்த இடுகை

    பதிலளிநீக்கு