புதன், 27 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 27 - விஸ்வநாதம் (தொடர்ச்சி)



விஸ்வநாதம் என்னிடம் ஒரு நாள் கேட்டார்:

தமிழில் 'நல்லார்க்கு' என்றால் என்ன அர்த்தம்?

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னேன்.



'என்னுடைய அறை நண்பன் ஒரு பைத்தியக்காரன்' என்றார்.

ஏன்?



விஸ்வநாதம் கூறியது:

நேற்று ரங்கநாதன் தெரு ஜவுளிக்கடை ஒன்றில், ஒரு போர்வை வாங்கினேன்.

இரவு போர்த்திக் கொள்ள அதை பையிலிருந்து எடுத்தேன். அதைக் கண்ட நண்பன். "நல்லார்க்கு" என்றான். 'அப்படி என்றால் என்ன?' என்று கேட்டேன். அவனும் நீ சொன்ன அர்த்தம்தான் சொன்னான். ஆனால் மேற்கொண்டு, நாம் வாங்கிய பொருளை யாராவது பார்த்து, நல்லா இருக்கு என்று சொன்னால், அதை அவரிடம் கொடுத்து விட வேண்டும்' என்றான்.

'காசுக்கா?' என்று கேட்டேன். 'இல்லை - பைசா எல்லாம் கேட்கக்கூடாது; ஓசிக்குதான் கொடுக்கவேண்டும்' என்றான்.

எனக்கு இந்த லாஜிக் புரியவில்லை. டெஸ்ட் செய்து பார்ப்போம் என்று நினைத்து அவனிடம், 'உன்னுடைய பைலட் பேனா நன்றாக இருக்கிறது' என்று சொன்னேன். அவன் உடனே ' ஆமாம் சூப்பர் பேனா. என்னுடைய அலுவலக நண்பன் வாங்கினான். நான் ஆசைப் பட்டேன் என்று தெரிந்ததும் எனக்கு கிப்ட் பண்ணிவிட்டான்' என்றான். 

'நீ இந்த மாதம் ஏதாவது புதிதாக வாங்கினாயா?' என்று கேட்டேன்.

'ஒன்றும் வாங்கவில்லை' என்றான்.

மீண்டும் போர்வை பற்றி பேச்சு வந்தது. நான் அவனிடம், இந்தக் கலர், இந்த மெடீரியல் நன்றாக இருக்கிறது, எனக்குப் பிடித்திருக்கிறது என்றுதான் நான் வாங்கினேன். எந்தக் கடையில் வாங்கியது என்றும் சொல்கின்றேன், இதே போல அங்கே நிறையப் போர்வைகள் உள்ளன. நீ அங்கே போய் வாங்கிக் கொள்ளலாமே' என்றேன்.

அவன் கோபமாக, 'அது எனக்குத் தெரியாதா? இதை நீ எனக்குக் கொடுத்துவிட்டு, நாளைக்குப் போய் வேறு வாங்கிக் கொள்' என்றான்.


எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 'சரி, நான் பைசா தருகின்றேன், நீ போய் வாங்கிக்கொள்' என்றேன். உடனே அந்த நண்பன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டான். நீ எல்லாம் ஆந்தராவிலிருந்து வந்தவன். எங்கள் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் உனக்குத் தெரியவில்லை. நீ ஒரு சரியான கஞ்சூஸ், கருமி' என்று திட்டிவிட்டு (நைட் ஷிப்ட்) வேலைக்குக் கிளம்பி சென்று விட்டான்.

**** **** ****

எனக்கும் சென்னை வந்த புதிதில் இந்த மாதிரி அனுபவங்கள் ஒன்றிரண்டு நடந்தன. எப்பொழுதும் யாராவது புதியதாக எதையாவது வாங்கி என்னிடம் காட்டினால், 'நல்லாயிருக்கு' என்று கூறுவேன். அப்படி எதேச்சையாகக் கூறிய ஓரிரண்டு சந்தர்ப்பங்களில், அதை அவர் எனக்குக் கொடுத்துவிட அதை வாங்கிக்கொள்ள மறுப்பது பெரும்பாடாக ஆன சந்தர்ப்பங்கள் உண்டு. பிறகு கொஞ்சம் மாற்றி, 'ஆஹா இது உங்களுக்கு மிகவும் சரியான உடை, நல்ல செலெக்ஷன் என்றெல்லாம் கூறி, 'நல்லா இருக்கு' என்று கூறுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கிய பொருட்களை யார் 'நல்லா இருக்கு' என்று கூறினாலும், பதிலுக்கு 'நன்றி' மட்டுமே கூறுவேன்!

அன்று மாலை நண்பன் வந்த பிறகு என்ன நடந்தது என்று விஸ்வநாதமிடம் பிறகு விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், மறந்துபோய் விட்டது!

===========================

அப்ரண்டிஸ் ஆக இருந்தபொழுது, இதே விஸ்வநாதம், அவருடைய பள்ளிக்கூட நாட்களைப் பற்றி சுவையாக பல தகவல்கள் தெரிவித்தது உண்டு. அவருடைய சிறிய தங்கைகள் எப்படி மணலில் வீடு கட்டி விளையாடுவார்கள், பார்த்துக் கொண்டே இருந்த இவர் எப்படி ஓடிப் போய் அவர்கள் கட்டி விளையாடும் கோபுர வீடுகளைக் காலால் உதைத்து சிதைத்து, அவர்கள் கையில் சிக்காமல் ஓடிவிடுவார் என்பதை எல்லாம் ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சிறிய தங்கைகளின் பெயர் என்ன என்று சும்மா கேட்டு வைத்திருந்தேன்.


பிறகு பல வருடங்கள் எங்களுக்குள் அதிகத் தொடர்பு இல்லாமல் இருந்தது.


நாங்கள் இருவரும் கிட்டத் தட்ட பத்து வருடங்கள் கம்பெனியில் குப்பை கொட்டிய பிறகு, ஒருநாள் மின்சார ரயிலில் கடற்கரை நிலையத்திலிருந்து அவர் கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கும் நான் குரோம்பேட்டை ஸ்டேஷனுக்கும் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் அடுத்த வாரம் லீவில் செல்லப் போவதாகத் தெரிவித்தார்.

'எதற்கு?' என்று கேட்டேன்.

'தங்கைக்குக் கல்யாணம்' என்றார்.

'நான் உடனே அவருடைய இரண்டு தங்கைகளின் பெயரையும் கூறி, இதில் யாருக்குக் கல்யாணம்?' என்று கேட்டேன். (இப்போவும் பெயர்கள் ஞாபகம் உள்ளன. இங்கே குறிப்பிடவில்லை) அவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்.

'ஹவ் டூ யு நோ தி நேம்ஸ் ஆஃப் மை சிஸ்டர்ஸ்?' என்று கேட்டார் ஆச்சரியமடைந்து!

' யு ஒன்லி டோல்ட் மி தெயர் நேம்ஸ் - டென் இயர்ஸ் பேக்' என்றேன்.




அவரால் நம்பவே முடியவில்லை. கோடம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டியவர், ஸ்டேஷன் வந்த போது, அதை கவனியாமல், ஸ்டேஷனைத் தவற விட்டுவிட்டு, மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கிச் சென்றார்.
                 

29 கருத்துகள்:

  1. அண்ணா அங்க தலை சுத்தி கிர்ர்னு இங்க வந்து லேன்ட் ஆகியாச்சு!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா ஸ்டேஷன் தவற விடும் அளவுக்கு நீங்க அவர் தங்கைகள் பெயரை நினைவு வைச்சுருந்தது அவருக்கு ஷாக் ஆகிப் போச்சு!!! பாருங்க!!

    அது சரி அந்தப் போர்வை விஷயத்தில் அவர் தானே ஆந்திராவில் இருந்து வந்தவர் தமிழ் புரிய கஷ்ட்டப்பட்டவர் அப்புறம் ஏன் அவர் உங்களைச் சொல்லணும் எங்கள் தமிழ்நாட்டு வழக்கம் அப்படினு எல்லாம் டயலாக்! ஒரே கன்ஃப்யூஷன் போர்வை மேட்டர்...தலை நிஜமாவே சுத்துது ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // விஸ்வநாதம் கூறியது:// // உடனே அந்த நண்பன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டான். நீ எல்லாம் ஆந்தராவிலிருந்து வந்தவன். எங்கள் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் உனக்குத் தெரியவில்லை.// அந்த நண்பன் கூறியது விஸ்வனாதத்திடம். அதை அவர் (விஸ்வநாதம்) சொன்னபடியே எழுதியுள்ளேன். இதை எதையும் நான் நேரில் பார்க்கவில்லை, கேட்கவில்லை. விஸ்வநாதம் கூறிய சம்பவத்தை மட்டும் பகிர்ந்துள்ளேன்!

      நீக்கு
  3. நானும் சென்னை லோக்கல் ட்ரெயினில் ஸ்டேஷன் தவற விட்டதுண்டு நல்ல காலம் நெடுந்தூர பயணத்தில் ஸ்டேஷனில் தவற விட்டதில்லை..ஹிஹிஹி.!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் புத்தகம் படித்தபடி, எப்பவாவது தூங்கியபடி எல்லாம் குரோம்பேட்டை விட்டு, சானடோரியம் / தாம்பரம் ஸ்டேஷன் வரை சென்றதுண்டு.

      நீக்கு
  4. நல்லாயிருக்கு என்று சொல்லவே பயமாய் இருக்கே!

    எங்கள் பக்கத்து வீட்டில் வாசலில் போட்டு இருந்த
    கால்மிதியடி அழகாய் இருந்தது .
    சாக்கில் சங்கிலி தையலால் அழகான பூவும், கோலமும் போட்டு இருந்தது , நல்லாயிருக்கு , எங்கே வாங்கினீர்கள் ? என்று கேட்டேன்.
    சிவகாசியில் வாங்கினேன் என்று சொன்னார்கள். அப்புறம் மீண்டும் ஊருக்கு போன போது அதே மாதிரி வாங்கி வந்து எனக்கு கொடுத்தார்கள்.

    இது போன்ற அன்பு தொல்லைகள் கொண்டவர்களும் உண்டு.

    தங்கையின் பெயரை எப்போதோ சொன்னதை நினைவு வைத்து கேட்டதும் அதிர்ச்சியை வரவழைத்து விட்டதா? இறங்கும் இடத்தை தவறவிடும் அளவு!

    பதிவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் ஞாபக சக்தி அவரை மறக்கடிக்க செய்து விட்டதே...!

    பதிலளிநீக்கு
  6. விசுவநாதம், அவர் தம்பிகளுன் பெயர்களைச் சொல்லியிருந்தால் நினைவிலிருந்திருக்குமா?

    தங்கைகளின் பெயரில் ஏதேனும் நினைவில் வைத்துக்கொள்ளும்படி வித்யாசமாக இருந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கிண்டல்தானே கூடாது என்பது! (துர்)அதிர்ஷ்டவசமாக அவருக்குத் தம்பிகள் கிடையாது ! அந்தப் பெயர்கள் அப்படி ஒன்றும் வித்தியாசமானவை அல்ல. ஆனால் ஒரு தங்கையின் பெயர், என்னுடன் ஏழாம் வகுப்புப் படித்த ஒரு பெண்ணின் பெயர்(!)

      நீக்கு
    2. உடனே கோச்சுக்காதீங்க கேஜிஜி சார்.... ஏதோ ஒன்றை ரிலேட் செய்யாமல் என்னால் எந்தப் பெயரையும் நினைவுவைத்துக்கொள்ள முடிவதில்லை (இந்த பிரச்சனை 15+ வருடங்களாகவே இருக்கு. ஆளைப் பார்த்தால், பார்த்த ஞாபகம் இருக்கும். அவங்க என்னைப் பற்றியும் முந்தைய சந்திப்புகளைப் பற்றியும் புட்டுப் புட்டு வைப்பாங்க..ஆனா எனக்கு நினைவில் இருக்காது. அதனால ஆபீஸ்ல என்னைச் சந்திக்க வரவங்ககிட்ட இந்தப் பிரச்சனையைச் சொல்லிடுவேன்.). இப்பக்கூட பாருங்களேன்... புத்தர் பெயர் என்பதால் ஸ்ரீயின் ஒரு பையன் பெயர் ஞாபகம் இருக்கு. இன்னொன்று நினைவுக்கு வருவதில்லை. எழுத்தாளர் என்று நினைத்து அவங்க பாஸ் பெயர் நினைவில் வைத்துக்கொண்டுள்ளேன். சில நாட்கள் முன்பு, உங்கள் சகோதரரின் மனைவியையும் மகளையும் சந்தித்தோம் (என் மனைவிதான் பார்த்தது). ஆனா எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை. என் மனைவி சரியாக நினைவில் வைத்திருந்து அவங்களை விசாரித்திருக்கிறாள். அப்புறம் மெதுவாத்தான் எனக்கு கொஞ்சமா நினைவுக்கு வந்தது. அப்படியும் 'எழுத்தாளரின்' பெயர்தான்-அந்தப் பெண்ணின் சகோதரி, நினைவில் இருந்ததே தவிர, அவரை அல்ல.

      இப்போவும் உங்களுக்கு நல்ல நினைவாற்றல் இருக்கிறதா?

      நீக்கு
    3. அடேடே ! நான் எங்கே கோபித்துக்கொண்டேன்? எந்தப் பெயரையும் ரிலேட் செய்துதான் நினைவில் நிறுத்தமுடியும் என்பது சரிதான். ஏதோ ஒரு ரிலேட் சமாச்சாரம் நம் அறிவுக்கு எட்டும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகும் வரை, அவர் எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. இன்னும் நிறைய சொல்லலாம். பிறகு முடிந்தால் ஒரு தனிப்பதிவு போடுகிறேன்.

      நீக்கு
  7. ஹ...ஹஹா...நெல்லைத்தமிழன் 'சைக்கிள் கேப்ல' நன்றாகவே கலாய்க்கிறார் உங்கள.....

    பதிலளிநீக்கு
  8. "நல்லார்க்கு"என்று சொன்னாலே அதைக் கொடுத்துடணுமா?க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானெல்லாம் அப்படிக் கொடுத்துடமாட்டேனே! என் கிட்டேயும் பலர் என்னோட புடைவைகள் செலக்‌ஷன் நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க! அப்போவும் , இப்போவும். அதெல்லாம் தூக்கிக்கொடுப்பேனா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ... இனி உங்கள் வீட்டில் சாப்பிடும்போது, 'நல்லார்க்கு' என்று சொன்னால், 'இன்னும் வேணுமா, போடவா' என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்று சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. இந்த "நல்லார்க்கு" விஷயத்தைப் பற்றியும் ,சென்னையில் அதுவும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு பழக்கம் இருக்கு என்பதையும் இப்போத் தான் முதல் முதல் கேள்விப் படறேன். :)))) நான் பலமுறை பலரிடம் அவங்களோட வைர நெக்லஸ் நல்லார்க்குனு சொல்லியும் அதைக் கழட்டிக் கொடுத்ததே இல்லை! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டவா! இந்த 'நல்லா இருக்கு' சமாச்சாரம், சென்னையில் மட்டுமே நான் கேள்விப்பட்ட (அதுவும் அந்தக்காலத்தில் கேள்விப்பட்ட ) விஷயம். சென்னையில் பழம் தின்னு, கொட்டை போட்ட என்னுடைய மன்னி ஒரு முறை சொன்னார்கள், 'யாராவது நம்ம வைத்திருக்கும் புதிய பொருளைப் பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் திருஷ்டி பட்டுவிடும். அந்த கண் திருஷ்டியைப் போக்க, அந்தப் பொருளை பாராட்டியவருக்கே தானமாகக் கொடுத்துவிடவேண்டும்'. இந்த சென்டிமெண்டைப் பயன்படுத்தி, பல ஏமாற்றுக்காரர்கள், ஓ சி யிலேயே தங்களுக்கு வேண்டிய பல விஷயங்களை வாங்கி காலம் கடத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்!

      நீக்கு
  10. நல்லாருக்கு என்று சொல்வதில் இத்தனை வில்லங்கமா? சில சமயம் சில பேரிடம் அவர்கள் உடுத்திக் கொண்டிருக்கும் புடவை நன்றாக இருக்கிறது என்று ஒரு முறைக்கு இருமுறை சொன்னால் அவர்கள் கொஞ்சம் சங்கடமாய், அது அவர்களுக்கு யாரோ கொடுத்தது என்பார்கள். அதன் சூட்சுமம் இப்போதுதான் புரிகிறது.

    நண்பனின் மனைவியை பார்த்து உன் மனைவி நன்றாக இருக்கிறாள் என்று சொன்னால் என்ன ஆகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கீசா மேடத்திற்கு ஏடாகூடமாக பதில் எழுதலாம்னு நினைத்தேன். ஆனா நீங்களே இந்தக் கேள்வி கேட்கறீங்களே... யாராவது நண்பனிடம் அவன் மனைவியைப் பற்றி இப்படிச் சொல்வாங்களா? (மனதுக்குள் நினைத்து ம்ஹும்... அவனுக்குப்போய் இப்படி லக்கா என்று சொல்லிக்கொண்டாலும்).. இல்லை அப்படிச் சொன்னால், அடுத்து நண்பன் வீட்டுக்குப் போகத்தான் முடியுமா?

      நீக்கு
    2. அட! இப்படி ஒரு வில்லங்கமா! அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கண் திருஷ்டி படாமல் இருக்க, சொன்னவரின் காலடி மண் எடுத்து, மனைவியின் தலையைச் சுற்றி, அப்புறம், அவர்கள் வாயால் அதில் மூன்று முறை எச்சில் துப்பச் சொல்லி, அந்த மண்ணைத் தூக்கி தூரப் போடவேண்டியதுதான்!

      நீக்கு
  11. @Nellai Tamizhan://யாராவது நண்பனிடம் அவன் மனைவியைப் பற்றி இப்படிச் சொல்வாங்களா?// நான் சொல்வது திறந்த மனதோடு கொடுக்கும் பாராட்டை. அப்படி சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருட்களுக்கு, 'நல்லா இருக்கு' என்று சொல்லலாம். ஆனால் மனிதர்களுக்கு அந்த சொற்றொடர் சரியாக அமையாது! மேலும் = நெருங்கிய நண்பர்கள் என்றால், கல்யாணத்திற்கு முன்பே நண்பனின் மனைவியை அல்லது fiancee யைப் பார்த்திருப்பார்கள். எனவே, நெல்லை கூறுகின்ற சந்தர்ப்பம் வாய்க்காது என்று சொல்லலாம்.

      நீக்கு
  12. நல்லாருக்கு நினைவுகள்..... ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு