என்னுடைய நண்பர் பி ராஜேந்திரன் என்பவர் பற்றி முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
அவர் 'இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மெண்ட்' பகுதியில் வேலை பார்த்து வந்தார். அந்தக் காலத்தில் நங்கநல்லூர் பகுதியிலிருந்து வேலைக்கு வந்துகொண்டிருந்தார். அவரும் நானும் பலநாட்கள், சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து, அவர் இறங்கிச் செல்கின்ற பழவந்தாங்கல் இரயில் நிலையம் வரை பல விஷயங்களையும் பேசிச் செல்வோம்.
அவர் அப்பொழுது வசித்து வந்த நாற்பத்து இரண்டாவது தெரு (என்று நினைக்கின்றேன்) சார்பாக வருடா வருடம் டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி இரவு, ஜனவரி ஒன்றாம்தேதி காலை வரை அந்தத் தெருவில் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். அதற்காக அவர் பல நிகழ்ச்சிகளை திட்டமிடுவார். அந்த சமயம் அவருக்கு சிறிய நகைச்சுவை உரையாடல்கள், பாடல்கள் எழுதிக் கொடுத்தது உண்டு.
சில காட்சிகள் படமாக்கப் பட்டுவிட்டன. கதைச் சுருக்கம் தயார். கதாநாயகி - 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் அம்பிகாவின் தங்கையாக நடித்த மனோஹரி. (மனோஹரியை படத்திற்கு ஒப்பந்தம் செய்யச் சென்று வந்த கதையை அவர் விலாவாரியாகக் கூறினார். அதை இப்போது இங்கே பதியப் போவது இல்லை. பிறகு ஒரு பதிவில் பகிர்கின்றேன்) கதாநாயகன் இன்னும் முடிவாகவில்லை.
அவர் கூறிய கதைச் சுருக்கம்: ஒரு லேடீஸ் ஹாஸ்டல். அங்கே கதா நாயகி, தன் தோழியுடன் தங்கி, படித்து வருகின்றாள். கதாநாயகி எந்த வம்பு தும்புக்கும் போகாத சாது. தோழி அப்படியே ஆப்போசிட். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வாழ்கிறவள். தோழி விளையாட்டாக எழுதிய காதல் கடிதம், கதாநாயகன் கைக்குக் கிடைக்கின்றது. அவன் கடிதத்தை எழுதியவள் யார் என்று அறிய வரும்பொழுது, அந்த விலாசத்தில் இருக்கின்ற கதாநாயகியைப் பார்த்து, அவள்தான் கடிதம் எழுதியவள் என்று தவறாக நினைத்து, அவளைக் காதலிக்கத் துவங்குகிறான். இது கதையில் வருகின்ற முடிச்சு. பிறகு என்ன ஆகிறது, எங்கே போகிறது, எப்படி முடி(க்)கிறது என்று என்னைக் கேட்டார். நான் இரண்டு மூன்று கண்டினூயிட்டி நூல் விட்டேன். அது அவருக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத் தெரியவில்லை.
"நீ வந்து தி நகர் ப்ரிவியூ தியேட்டரில் இதுவரை எடுத்துள்ள படத்தைப் பார். அப்போ உனக்கு ஐடியா ஏதாவது வரும் என்றார். தி நகர் பனகல் பார்க் பக்கத்தில் இருந்த பிரிவியூ தியேட்டருக்கு ஒரு திங்கட்கிழமை, என்னையும் அழைத்துச் சென்றார்.
படம் மொத்தம் ஏழு நிமிடங்களே திரையில் ஓடியது. ஏதோ ஒரு மலைச் சாரல். ஒற்றையடிப் பாதை, ஒரு பெண். (மனோஹரி இல்லை) ஒரு பிட் பேப்பரைப் பறக்க விட்டாள். ஒரு வயதான அம்மாள் தலைவிரி கோலமாக தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். மீண்டும் மலைச் சாரல். ஆடுகள், மாடுகள் மேய்ந்தன. கடற்கரை. சூரியோதயம். திடீரென்று ஒரு மரத்திலிருந்து பறவைகள் பறந்தன. அவ்வளவுதான். சவுண்ட் ரெகார்டிங் எதுவும் இல்லை. ப்ரொஜெக்டர் ஓடிய சப்தம் மட்டும் கேட்டது. படக் குழுவினரோடு இந்த மாஸ்டர் பீஸைப் பார்த்துவிட்டு, எல்லோருமாக மூன்று கார்களில் ஏறிக் கொண்டு, நங்கநல்லூரில் உள்ள நண்பர் ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்றோம்.
படத்தின் டைரக்டர் (பார்ப்பதற்கு இயக்குனர் மகேந்திரன் சாயலில், அவருடைய ஒன்றுவிட்ட, பெரிய சகோதரன் போல இருந்தார்) உதவி இயக்குனர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று ஒரு ஆறேழு பேர்கள், ஸ்டோரி டிஸ்கஷன் என்று வட்டமாக உட்கார்ந்து கொண்டார்கள். குழுவில் ஒருவர் மூன்று சீட்டுக் கட்டுகளை எடுத்து, ஜமக்காளத்திற்கு நடுவே போட்டார்.
அவ்வளவுதான். ரம்மியாட்டம் ஆரம்பமாகியது. ஆட்டத்துக்கு நடுவே யாரோ ஒருவர், இசையமைப்பாளரைப் பார்த்து, அந்த டைட்டில் சாங் பிட்டை சொல்லுங்க என்றார். இசையமைப்பாளர், "தானனனா ..... தனதனனானா .... " என்றார். கவிஞர் அதற்கு, "கற்பனையோ .... கவியுள்ளமோ ... " என்றார். சுற்றியிருந்தவர்கள் "ஆஹா --- ஆஹா " என்றார்கள். திருமதி ராஜேந்திரன் தயாரித்த பஜ்ஜிகள் எல்லோருக்கும் நடுவே ஒரு பேசினில் கொண்டுவந்து வைக்கப் பட்டது. குழுவினர் ஆளுக்கு நான்கைந்து பஜ்ஜிகளை கபளீகரம் செய்தனர். பிறகு ஆளுக்கு ஒரு டம்ப்ளரில் காபி வழங்கப் பட்டது. காபி குடித்த சூட்டுடன் சூடாக ஒருவர் ரம்மி டிக்ளேர் செய்தார். டைரக்டர் அவருக்கு பத்து ரூபாய் கொடுத்தார். மற்றவர்கள், "கணக்குல எழுதிக்க .." என்றார்கள். சீட்டுக் கட்டை எடுத்து அடுத்தவர் கலைக்கத் துவங்கினார்.
இயக்குனர், தொப்பி + கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு, சிறிய குழந்தை ஒன்றை நடந்து வரும்படி கூறுகின்ற பாவத்தில் சில ஸ்டில் படங்கள் என்னுடைய பார்வைக்கு காட்டினார்கள். ஒரு (ப்ரேக்) வாய்ப்புக் கிடைத்தால், அவர் அப்படியே அசத்திவிடுவார் என்று கூறினார்கள் உதவி இயக்குனர்கள்.
நான் வீட்டுக்குக் கிளம்பினேன். ராஜேந்திரன் தன்னுடைய ஸ்கூட்டரில் என்னை பழவந்தாங்கல் இரயில் நிலையத்திற்குக் கொண்டுவந்து இறக்கிவிட்டார்.
"ஐடியா ஏதாவது வந்ததாப்பா?" என்று கேட்டார்.
"உம்ம்ம் .... வந்துவிட்டது."
"என்ன ஐடியா?"
"இந்தக் குழுவிலிருந்து, நீங்களும் நானும் எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகி இருப்பது நல்லது என்ற ஐடியா."
வணக்கம் கௌ அண்ணா...."விடையை நீயே சொல்லிடு" நு சொல்ற உங்கள் நண்பர் ராஜேந்திரன் தானே!!!!!!! அட படக் குழுவோடு தொடர்பு கொண்டு என்பதே ஸ்வாரஸியமாக இருக்கிறதே...
பதிலளிநீக்குமனோஹரி யாரென்று அந்த முகம் நினைவுக்கு வரவில்லையே....
கீதா
என்ன செய்வது! இணையத்தில் தேடித் தேடி இளைத்தேன்!
நீக்குகடைசில சொன்னீங்க பாருங்க அதுதான் பஞ்ச்!! ப்ரிவ்யூவே நல்லால்லியே...எப்படு உருப்படும் அப்படியான படமும் குழுவும்?
பதிலளிநீக்குசரி விலகினீங்களா இல்லை அவர் விலகினாரா?! இல்லைனா பாவம் அவர் மனைவி!!! எத்தனை பஜ்ஜி காபியோ!!
கீதா
மேற்கொண்டு நஷ்டப்படாமல் விலகியிருப்பார் என்றுதான் நினைக்கிறேன்!
நீக்குகடைசியில் நீங்கள் சொன்னது தான் நல்ல விஷயம். பலர் இப்படி படம் எடுக்கறேன் பேர்வழி என வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். என் நண்பர் ஒருவரின் தந்தை சொத்து அனைத்தையும் இழந்தார்.
பதிலளிநீக்குஸ்வாரஸ்ய அனுபவங்கள் தொடரட்டும்.
நன்றி வெங்கட்ஜி !
நீக்குஅந்தக்கோஷ்டி டைம்பாஸ்வாலா போலவே தெரிகிறது. தொடர்கிறேன் ஜி...
பதிலளிநீக்குஆமாம். பெரும்பாலான சினிமா கோஷ்டி இப்படிப்பட்டவைதான். யாருடைய பணமோ, யாருடைய கதையோ, யாருடைய உழைப்போ - இவை எல்லாவற்றையும் ஸ்வாஹா செய்து, யாருடைய செலவிலாவது ஓ சி டிபன், ஓ சி காபி, ஓ சி சாப்பாடு - இன்னும் என்னவெல்லாம் ஓ சி யில் கிடைக்குமோ எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு இருப்பார்கள். ஒட்டுண்ணிகள், அட்டைப்பூச்சிகள்!
நீக்குகேஜிஜி சார்... இது உண்மை. சினிமால 40% இந்த மாதிரி அல்லக்கைகள், ஒட்டுண்ணிகள், வேலையற்றவர்கள். வெற்றிபெற்றவரைச் சுத்திச் சூழ்ந்துகொண்டு அவரைப் புகழ்ந்து அவர் செலவில் குடித்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள். ஏமாந்த நடிகரை, 'ஆஹா ஓஹோ'ன்னு ஏத்திவிட்டு, சொந்தப் படம் எடுத்து உடுத்த துண்டுகூட இல்லாமல் அலையவிட்டவர்கள். வடிவேலு, கஞ்சா கருப்பு போன்ற நடிகர்கள் மட்டுமல்ல இன்னும் பெரிய நடிகர்களையே காலிபண்ணிய இவர்களை அட்டை என்று சொன்னது சரிதான்.
நீக்குகருத்துக்கு நன்றி, நெ த!
நீக்குநல்ல ஐடியா...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஎன்னமாதிரியெல்லாம் உங்களுக்கு அனுபவம். நல்லவேளை திசைமாறாமல் இருந்தது.
பதிலளிநீக்குமனோஹரி அவர்களின் வாழ்க்கை பற்றி நண்பர் விவரித்த விஷயங்கள், எனக்கு அவர் மேல் பரிதாப உணர்ச்சி உண்டாக்கியது. நண்பர் என்னிடம், ' நீயும் வருகிறாயா - இந்தப் படக்குழுவுக்காக ஒப்பந்தம் செய்ய இன்னும் சிலரை இந்தத் திங்கட்கிழமை (எங்களுக்கு திங்கட்கிழமைகள்தான் வாராந்தர விடுமுறை) போய்ப் பார்க்க இருக்கிறோம் என்று கூப்பிட்டார். ஏற்கெனவே இந்தப் படக்குழு பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை என்பதால், வர இயலாததற்கு ஏதோ ஒரு நொண்டிச்சாக்குக் கூறி தவிர்த்துவிட்டேன்.
பதிலளிநீக்குநல்ல அனுபவம்.இதன் மூலம் பிறரை அண்டிப் பிழைப்பவர்களைப் பற்றிப் புரிய வருமே! இந்த மட்டும் தப்பிச்சீங்களே! பெரிய விஷயம்.
பதிலளிநீக்கு