திங்கள், 25 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 25:: எதிர்பாராத விடுமுறை தினம்.



திங்கட்கிழமைகள் அசோக் லேலண்டு (எண்ணூர்) தொழிற்சாலைக்கு வாராந்திர விடுமுறை.




சாதாரணமாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும், மற்ற மக்கள் எல்லோரும் பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் என்று சென்றுவிடுவார்கள். நான், வெளியூரில் இருக்கின்ற அப்பா, சகோதரர்கள் எல்லோருக்கும் கடிதங்கள் எழுத, இந்த நாளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். புரசவாக்கத்திலிருந்து வேப்பேரி போஸ்ட் ஆபீஸ் வரை நடந்து சென்று, கார்டு, கவர், இன்லண்டு லெட்டர் எல்லாம் வாங்கி வந்து, கை ஓயும் வரை கடிதங்கள் எழுதி, மாலை ராக்ஸி தியேட்டருக்கு எதிரே ஒரு மொபைல் போஸ்ட் வாகனம் வரும், அதிலே போஸ்ட் செய்துவிடுவேன்.




அப்பா நாகையிலும், புரசைவாக்கத்தில் என்னுடன் இருந்த அண்ணன் தவிர மற்றவர்கள் சோலையார், அருவங்காடு, செங்கிப்பட்டி என்று வெவ்வேறு ஊர்களில் இருந்தார்கள். அவரவர்களுக்குத் தகுந்தவாறு கடிதங்கள் எழுதுவேன். எல்லாம் எழுதி மேலும் நேரம் இருந்தால், குமுதம் 'ஆசிரியருக்கு கடிதம்' எழுதுவேன். ஏதோ ஒன்றிரண்டு கடிதங்கள் அந்தக் காலத்தில் குமுதத்தில் பிரசுரம் ஆயின!


அது ஆண்டு 1972. டிசம்பர் மாதம். திங்கட்கிழமை. அசோக் லேலண்டுக்கு வாராந்திர விடுமுறைநாள். அசோக் லேலண்டில் அப்ரசண்டியாக சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. அன்று கிறிஸ்துமஸ் நாளும் கூட. ஒவ்வொரு திங்கட்கிழமையும், என் பேட்சில் என்னுடன் இஞ்சினீரிங் அப்ரண்டிஸ் ஆக சேர்ந்த நண்பன் ராகவேந்திரன் பெரம்பூரிலிருந்து, பஸ் பிடித்து, என் வீட்டிற்கு வந்துவிடுவான்.


இருவரும் சேர்ந்து ஊர் சுற்றக் கிளம்பிவிடுவோம். அன்று அவ்வாறு எங்கே போகலாம் என்று ஆய்வு செய்தோம். நண்பன், ஜான் வெய்ன் என்னும் ஆங்கில(ப் பட) நடிகரின் விசிறி. எனக்கு ஆங்கிலப் படங்கள் அப்போ (இப்போ கூட) அவ்வளவாகப் புரியாது. காசு சுண்டிப் போட்டுப் பார்த்ததில் அவன் ஜெயித்தான். அவன் சொல்லுகின்ற படம் என்று தீர்மானமாயிற்று.


அவன் செலெக்ட் செய்தது, மவுண்ட் ரோடில் ஜெமினி பாலம் அருகே ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த RIO LOBO என்று ஒரு படம். ஜான் வெயின் நடித்ததாம். போய்ப் பார்த்தோம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் 'ஆஹா ஓஹோ - இந்த இடத்துல வாத்தியார் நடிப்பைப் பாரு...' என்று சொல்லிக் கொண்டே படத்தை இரசித்துப் பார்த்தான்.





படம் முடிந்து வெளியே வந்து, ஜெமினி பாலம் அருகே ஓர் ஓட்டலில், டிபன் சாப்பிட சென்று அமர்ந்தோம். ரேடியோவில் எம் எஸ் கோபாலகிருஷ்ணன் + சுபபந்துவராளி இசைத்தார். திடுக்கிட்டு,என்ன விஷயம் என்று உற்றுக் கேட்டோம்.


"சென்னை மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த சி இராஜகோபாலச்சாரியார் இன்று காலமானார்' என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்"



"ஹய்யா நாளைக்கு லீவு" என்று சந்தோஷப்பட்டான் நண்பன். எனக்கும் அப்படி ஒரு நொடி தோன்றிய பொழுதும், அவனைக் கண்டித்து, 'சேச்சே அப்படி எல்லாம் பேசக் கூடாது' என்று கூறினேன்.


மறுநாள், ஒரு எதிர்பார்ப்புடன், வேலைக்கு சென்றோம். ஏழரை மணிக்கு எப்பவும்போல, வேலை நேரம் ஆரம்பிக்கின்றதைக் குறிக்கும் வகையில், ஃபாக்டரி சைரன் ஒலித்தது. அப்பொழுது எனக்கு டூல் ரூம் பகுதியில் ட்ரைனிங். தொழிலாளர்கள் ஆங்காங்கே சிறு சிறு கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். சர்க்குலர் ஏதாவது வருகின்றதா என்று நோட்டிஸ் போர்டு பக்கம் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் விடுமுறை குறித்து ஆளுக்கொரு யூகம் செய்து, நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு இருந்தோம்.


எட்டே கால் மணி சுமாருக்கு லாங் சைரன். லாங் சைரன் ஒலித்தால் - 'வீட்டுக்கு பெல்' அடித்தாயிற்று என்று அர்த்தம். அரக்கப் பரக்க எல்லோரும் மெயின் கேட் வழியாக பஸ் ஸ்டாண்ட், இரயிவே ஸ்டேஷன் பக்கமாக ஓடினோம்.

ராஜாஜி ஹால் பக்கம் சென்று யாராவது ஒரு (இறந்த) தலைவரையாவது பார்க்கவேண்டும் என்று அவ்வப்பொழுது எனக்குத் தோன்றும். நண்பன் ராகவேந்திரன் என்னுடன் வருகிறேன் என்று கூறியதால், நாங்கள் இருவரும் எண்ணூரிலிருந்து பஸ் பிடித்து ராஜாஜி ஹால் சென்றோம். ஏறக் குறைய ஒருமணி நேரம் கியூவில் நின்று, மறைந்த இராஜாஜி அவர்களின் பாதங்களை மிக அருகே சென்று பார்த்து, வணங்கி வந்தோம். கால் கட்டை விரல்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டிப் போடப்பட்ட அந்த வாட்ட சாட்டமான கால்கள் இன்றும் ஞாபகத்தில் உள்ளன.

17 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா. அட! மொபைல் போஸ்ட் வாகனம்! இப்படி எல்லாம் கூட அப்போது இருந்திருக்கிறதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தலைவர் யாராவது இறந்தால் பள்ளிப் பருவத்தில் எதிர்பாரா லீவு கிடைக்கும் போது குதூகலிப்போம் நாங்களும் ஆனால் +2, கல்லூரி வந்த பிறகு அது தவறு என்று புரிந்திருந்தது.

    பல அனுபவங்களை நன்றாக நினைவில் வைத்திருக்கீங்க அண்ணா. சிறப்பான விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. எதிர்பாராமல் கிடைக்கும் விடுமுறை மகிழ்ச்சி தரும்.....

    இப்போது இப்படி விடுமுறை விடுவதை நிறுத்தி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை! ஆனால், பெங்களூரு பள்ளிகளில் திடீர் திடீர் என்று எதற்காவது லீவு விடுகின்ற வழக்கம் இன்றும் உள்ளது.

      நீக்கு
  4. நினைவுகள் அழியாதிருப்பது தங்களது பாக்கியமே..

    பதிலளிநீக்கு
  5. நேரில் சென்று அஞ்சலி செய்து வந்தது மறக்க முடியாதது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதே ராஜாஜி ஹாலுக்கு, காமராஜர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நானும் வேறொரு நண்பரும் சென்றபோது, கட்டுக்கடங்கா கூட்டம் காரணமாக ராஜாஜி ஹால் பக்கம் நெருங்க இயலாமல், தூரத்திலிருந்தே கூட்டத்தைப் பார்த்து, திரும்பநேர்ந்தது.

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து(ம்) ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. //சி இராஜகோபாலச்சாரியார் இன்று காலமானார்// - இது நான் 4-5வது படிக்கும்போது நடந்தது.

    எனக்குத் தெரிந்து பஹ்ருதீன் அலி அஹமது (ஜனாதிபதி) இறந்தபோது விடுமுறை விட்டார்கள் (11 மணிக்கு லீவு விட்டார்கள்னு நினைக்கிறேன்), நான் 7வது படித்தபோது. +2வில், சஞ்சய் காந்தி விமானவிபத்தில் இறந்ததை நாங்கள் மதிய உணவு உண்ணும்போது ரேடியோவில் அனொன்ஸ் செய்ததைக் கேட்ட காங்கிரஸ் அபிமானமுள்ள நண்பன், விக்கி விக்கி அழுதது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  9. //ராஜாஜி ஹால் பக்கம் சென்று யாராவது ஒரு (இறந்த) தலைவரையாவது பார்க்கவேண்டும் என்று அவ்வப்பொழுது எனக்குத் தோன்றும்//

    உங்கள் எண்ணம் நிறைவேறி விட்டது.
    அஞ்சலி நல்ல முறையில் செலுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. அப்போதெல்லாம் நடமாடும் தபால் அலுவலகம் ஆங்காங்கே முக்கியமான இடங்களில் நிறுத்துவார்கள். அதல்லாமல் ரயில் நிலையங்களிலும் அந்த தினத்தன்று மாலை தபால் பெட்டிகளில் போடும் கடிதம் மறுநாளே போய்ச் சேர்ந்து விடும் என்பதும் முக்கியமான ஒன்று. அப்போதெல்லாம் எக்ஸ்ப்ரஸ் தபால் என ஒன்று உண்டு. ஞாயிற்றுக் கிழமை ஆனாலும் மிகச் சரியாகத் தபால்கள் போய்ச் சேரும்.

    பதிலளிநீக்கு