சனி, 23 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 23:: மாடு பிடித்த கதை!வெகு பழங்காலத்தில், என் உடன் பணியாற்றிய நண்பர், அவருடைய மேலதிகாரி பற்றி, அவரின் விசித்திர பழக்கங்கள் பற்றி, என்னிடம் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். மதிய உணவு நேர அரட்டை கச்சேரிகளில், மேலதிகாரிகளின் தலைகளை நிறைய உருட்டுவோம்.

பெயர்கள் ஒன்றும் குறிப்பிடாமல், சம்பவங்களை மட்டும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.நண்பரும், அதிகாரியும், ஒரு குறிப்பிட்ட லாரி வகை ஒன்றைப் பார்த்து, அதனுடைய கேபின் வடிவமைப்புப் பற்றி ஆராய்ந்து, சில அளவுகள் எடுப்பதற்காக, அண்ணா சாலையில் உள்ள, ஒரு டீலர் பாயிண்ட்டுக்குச் சென்றிருக்கின்றார்கள்.


டீலர், குறிப்பிட்ட அந்த (போட்டியாளர்) வண்டி, இரவு பதினொரு மணிக்குத்தான் அங்கு வரும் என்று கூறியிருக்கிறார்.

நண்பரும், மேலதிகாரியும் இரவு எட்டு மணிக்கே அங்கு சென்று விட்டதாலும், அதிக நேரம் காத்திருக்க வேண்டும் என்பதாலும், பக்கத்தில் உள்ள உணவகம் சென்று, அங்கே இரவு உணவை முடித்துக் கொண்டு வந்து விடலாம் என்று சென்றிருக்கிறார்கள்.


இனி நண்பர் கூறியது, அப்படியே:

ஹோட்டலில் நுழைவதற்கு முன்பு, ஹோட்டல் வாசலில் எழுதியிருந்த மெனுவை, நன்கு, ஊன்றிப் படித்து, மனனம் செய்து கொண்டார் அதிகாரி. உள்ளே நுழைந்து, முதலில் ஓரிடத்தில் உட்கார்ந்து பிறகு அந்த இடம் வேண்டாம், சுத்தமாக இல்லை என்று வேறு ஒரு இடத்தில் போய் உட்கார்ந்தார், என்னையும் இழுத்துக் கொண்டு.

அதிகாரி: நீ என்ன சாப்பிடறே?

'எனக்கு நான்கு இட்லிகள் போதும்' என்றேன்.

அவர் சர்வரை அழைத்து, மள மள வென்று, செட் தோசை, சப்பாத்தி, ஆனியன் ரவா, தயிர் சாதம் என்று பெரிய மெனு கொடுத்து, இவருக்கு நாலு இட்லி என்று கூறினார். எல்லாவற்றையும் அவர் சாப்பிட்ட வேகம் அசாத்தியமாக இருந்தது. இதெல்லாம் முடிந்தவுடன், சர்வரிடம், ஒரு பால், ஒரு காபி என்றார்.
"எனக்கு எதுவும் வேண்டாம்." என்று நான் சொல்லிய பொழுது, 'இரண்டுமே எனக்குதான்' என்றார்.

"எதற்கு இரண்டும்?"

"பால் ஹெல்த்துக்காக,காபி தூக்கம் வராமல் இருக்க - வண்டி வந்து, அளவுகள் எடுத்து முடித்து, வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை தூக்கம் வராமல் இருக்கணுமே!"

"ஓஹோ? சரிதான்!"

அத்தோடு விட்டாரா? ஹோட்டலுக்கு வெளியே வந்ததும், அங்கே இருக்கின்ற கடையில், அரை டஜன் பச்சை வாழைப் பழம் வாங்கினார். சரி, இரவு வெகு நேரம் ஆகிவிட்டால், வயறு காயக்கூடாது என்று, பிறகு கடைகள் மூடிவிடுமே என்ற பயத்தில், முன்னேற்பாடாக வாங்குகிறார் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
"நீ பழம் சாப்பிடுறியா?"


"வேண்டாம்! வேண்டாம்! நாந்தான் சொன்னேனே - இரவு உணவு நான் எப்பவுமே ரொம்ப சிம்பிளாதான் சாப்பிடுவேன்!"


அவர், கடைக்காரர் பழங்களைப் போட்டுக் கொடுத்த கேரி பாகிலிருந்து ஒவ்வொன்றாக பழத்தை எடுத்து, உரித்துச் சாப்பிட்டு, பழத்தின் தோலை, அதே கேரி பாகில் போட்டார். ஆறு பழங்களையும் சாப்பீட்டு முடித்து, பையில் ஆறு பழத்தின் தோல்களையும் பத்திரப் படுத்திக் கொண்டார். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து அதையும் சாப்பிட்டு விடுவாரோ என்று சந்தேகம் வந்தது.


"இரவு சாப்பாட்டிற்குப் பிறகு, எப்பவும் கொஞ்சம் வாக்கிங் போகணும். அதுதான் ரொம்ப நல்ல பழக்கம் என்று எங்க தாத்தா சொல்லியிருக்கார். வா என்னோடு!"


அவர் பின்னேயே சென்றேன். நேராக ஜெமினி மேம்பாலம் வரை சென்றோம்.

மேம்பாலத்தின் கீழே, சில மாடுகள் உட்கார்ந்து, அசை போட்டுக் கொண்டிருந்தன.உட்கார்ந்திருந்த ஒரு மாட்டை அவர் சுற்றி வந்தார். மாடு அவரைப் பார்த்து கொஞ்சம் மிரண்டது போல இருந்தது. அதன் முகத்தின் அருகில் போய் நின்று கொண்டார். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். பிறகு, மாட்டின் வால் பக்கம் வந்து, "ஹேய்" என்று லேசாக அதட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மாட்டிற்கும் ஒன்றும் புரிந்திருக்காது போலிருக்கு. அவரை இக்னோர் செய்து, அசை போடுவதில் கவனமாக இருந்தது.


அடுத்து அவர், தன் வலது கால் ஷூ வை தரையில் சத்தமாக உதைத்து, "ஹேய்" என்றார். மாடு, 'இது ஏதடா இந்த மனுஷன் நம்மை நிம்மதியாக உட்கார்ந்து அசை போட விட மாட்டான் போலிருக்கே' என்று நினைத்து, சிரமப்பட்டு கால்களை ஊன்றி, எழுந்தது. இருட்டில், அந்த மாட்டின் அடிப் பாகத்தை உன்னிப்பாக கவனித்த அதிகாரி, "ச்சே! காளை மாடு" என்று அலுத்துக் கொண்டு அடுத்த மாட்டை நோக்கி நகர்ந்தார்.


அதிகாரி, அப்புறம் சொன்னார், "பழத் தோலை, பசு மாடுகளுக்கு உண்ணக் கொடுத்தால், ரொம்ப புண்ணியம் என்று தாத்தா சொன்னார் .... "

19 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா ஹா ஹா..
  வணக்கம் கௌ அண்ணா....சிரிச்சு முடில. இத்தனையும் சாப்பிட்டுவிட்டு பழம் வேறு...

  அது சரி மாட்டுக்குத் தோல் கொடுக்க அதை ஏன் எழுப்ப வேண்டும்...ஒரு வேளை பசு என்றால் பின்பக்கம் தொட்டுக் கும்பிடுவார்களே அதுக்காக இருக்கும் போலும்.....பாவம் மாடு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பசுமாடாக இருந்தால் பழத்தோல் கொடுப்பார். இல்லையேல் .......

   நீக்கு
 2. இவ்வளவு சாப்பிடுபவர் என்ன வெயிட் இருந்திருப்பார்னு கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்...ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ கடைசி லைன் திரும்ப படிச்சப்புறம்தான் தெரிந்தது ..அவர் எழுப்பியது.பசுனு பார்க்கனு...எந்த மாட்டுக்குக் கொடுத்தால் என்ன?!!

   கீதா

   நீக்கு
  2. கடவுள் விநோதமான படைப்புகளுக்குச் சொந்தக்காரன். சிறு தீனி சாப்பிட்டாலே எனக்கு கன்னா பின்னாவென வெயிட் போடுது. சிலர் சாப்பிடும்போது வாயைப் பிளப்பேன், ஆனால் அவல்க ஒல்லியா இருக்கும் வரம் வாங்கி வந்திருப்பாங்க. ம்ம்

   நீக்கு
  3. எந்த மாட்டுக்குக் கொடுத்தால் என்ன?!!
   தாத்தா சொல்லைத் தட்டாதே!

   // "பழத் தோலை, பசு மாடுகளுக்கு உண்ணக் கொடுத்தால், ரொம்ப புண்ணியம் என்று தாத்தா சொன்னார் .... "//

   நீக்கு
  4. // ஆனால் அவல்க ஒல்லியா இருக்கும் வரம் வாங்கி வந்திருப்பாங்க. ம்ம்// நான் என்ன சாப்பிட்டாலும் ஐம்பத்திரண்டு கே ஜி தாஜ்மகாலாக இருக்கேன்!

   நீக்கு
  5. கேஜிஜி சார்.... ரகசியமா வச்சுக்கோங்க. நான் கண் வைத்துவிடப்போகிறேன். நான் தண்ணீர் குடித்தாலும் (1 டம்ளர்) 1 கிலோ வெயிட் ஏறிடறது. ம்ம்ம்ம் வாங்கி வந்த வரம் அப்படி

   நீக்கு
 3. நீங்க கொஞ்சம் அதிகப்படியா எழுதியிருக்கீங்களோ? எழுதின ஐட்டங்களில் இரண்டு சாப்பிட்டாலே, சாப்பிட்ட திருப்தி போயிடுமே. இதுல பால், காபி, அரை டஜன் பழமா? நிச்சயம் வண்டி வருவதற்கு முன் குறட்டை விட்டிருப்பார்..

  நானும் நல்லாச் சாப்பிடணும்னு நினைத்தால் இந்த மாதிரி இரண்டு இட்லி கேசுகளை கூட அழைத்துச் செல்ல மாட்டேன் (எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்குமோ...பின்னாளில் நம்மைப் பற்றி இதுபோல் எழுதிவிட்டால்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி ஹி எழுதியவர் அவர் அல்ல; என்னிடம் சொன்னது மட்டும்தான் அவர்! சமீபத்தில் வாட்ஸ் அப்பில் அந்த நண்பரிடம் கேட்ட போது அவர் இதை சுத்தமாக மறந்து போயிருந்தார்! நான் ஞாபகம் ஊட்டிய பிறகு அட அப்படியா என்று வியந்தார்!

   நீக்கு
 4. ஹாஹா... செம அனுபவம் தான்! சிலரால் இப்படி நிறைய சாப்பிட முடிகிறது! என்னால் முடியாது!

  பதிலளிநீக்கு
 5. பழத்தோல் பசு மாட்டுக்கு, காய்ஞ்ச இலை காளை மாட்டுக்கு? இரவு சாப்பாடு கம்பெனி வகையா? அது தான் பில் தீட்டியிருக்கார். அது சரி மாடு எங்கே இருக்கும் என்பது அவருக்கு எப்படி தெரியும்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாடுகள் தங்குமிடம் - சென்னையில் பஸ் பயணம் செல்லும்போதெல்லாம் பார்த்துவைத்திருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 6. உண்ணக் கொடுப்பதில் கூட பாவம், புண்ணியம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் எங்களை ரொம்ப ஆச்சரியபடுத்தியது அந்த நாளில்!

   நீக்கு
 7. "பழத் தோலை, பசு மாடுகளுக்கு உண்ணக் கொடுத்தால், ரொம்ப புண்ணியம் என்று தாத்தா சொன்னார் ...//  அசைபோட்டுக் கொண்டு இருந்த காளைமாட்டின் நிம்மதியை கெடுத்தால் புண்ணியம் உண்டா?

  //"பால் ஹெல்த்துக்காக,காபி தூக்கம் வராமல் இருக்க - வண்டி வந்து, அளவுகள் எடுத்து முடித்து, வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை தூக்கம் வராமல் இருக்கணுமே!"//

  விசித்திரமான் மனிதராக இருக்கிறார்.

  உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் பலவிதமாய் இருக்கிறது .

  பதிலளிநீக்கு
 8. பழத்தோலை எந்த மாட்டுக்குக் கொடுத்தால் என்ன? மற்றபடி இந்த மாதிரிப் பெருந்தீனிக்காரங்க முன்னெல்லாம் ஒல்லியாக இருந்தே வயிற்றெரிச்சல் கொட்டிப்பாங்க! :)))))) நானெல்லாம் சாப்பாடைப் பார்த்தாலே வெயிட் போடும் ரகம்!

  பதிலளிநீக்கு