ஞாயிறு, 3 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா!


எக்மோரிலிருந்து புரசவாக்கத்திற்கு, ஒரு பஸ் பிடித்து, 'கங்காதீஸ்வரர் டாங்க்' நிறுத்தத்தில் இறங்கி, அண்ணன் வழி காட்ட, சுந்தரம் (பிள்ளைத்) தெருவில் இருக்கின்ற அண்ணன் வீட்டை அடைந்தோம். அந்த வீட்டில் மொத்தம் எட்டுக் குடித்தனங்கள் இருந்த ஞாபகம். நாங்கள் இருந்த முதல் மாடியில் ஐந்து குடித்தனங்கள் இருந்தன.






அண்ணி ஆசிரியை. புரசவாக்கம் முத்தையா செட்டியார் ப்ரிபரேட்டரி ஸ்கூலில் பணிபுரிந்து வந்தார். அங்கு படித்த எல்லோருக்கும் (கமல்ஹாசன், மஞ்சுளா, குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த சில ஆசிரியர்களின் குழந்தைகள் என்று பெரிய பட்டியலே சொல்லுவார் என்னுடைய அண்ணி! கொஞ்சம் ரீலும் விடுவார். நான் இவர்களில் யாரையாவது சந்தித்தால் அண்ணி சொன்னது சரிதானா என்று அவர்களிடம் கேட்கவேண்டும் !) கீதா டீச்சரை ஞாபகம் இருக்கின்றதா என்று கேட்டால், அவர்கள் என் அண்ணியைப் பற்றிக் கூறுவார்கள்!


அசோக் லேலண்டில் பெரிய பதவி வகித்துக் கொண்டிருந்த ஒருவர், (பெயர் தெரியும்; ஆனால் சொல்லமாட்டேன்!) நாகைக்கு லீவில் வந்திருந்தார். அவரை, என்னுடைய அப்பாவின் முதலாளிக்குத் தெரியும். அந்த முதலாளியின் சிபாரிசின் பெயரில், நாங்கள் (அப்பாவும் நானும்) அவரைச் சென்று பார்த்தோம். அவரிடம் அசோக் லேலண்டில் எனக்கு அப்ரெண்டிஸ் ஆக சேர) எழுத்துத் தேர்வுக்கு அழைப்பு வந்துள்ள விவரத்தைக் கூறினோம். (ஹி ஹி கூறினோம் இல்லை - கூறினார், என் அப்பா. எனக்கு அப்பொழுதெல்லாம் அதிகம் பேச வராது! ) அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். அசோக் லேலண்டில் நாங்கள் என்ன உற்பத்தி செய்கிறோம் தெரியுமா? என்று கேட்டார். 'லாரி, பஸ்' என்றேன். "Commercial vehicles. Our product name is Comet. Prepare well for quiz type questions" என்றார். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்" என்றார்.

அந்தக் காலத்தில், நாகப்பட்டினம் (போன்ற பகுதிகளில்) பாலிடெக்னிக் படித்து, மூன்றாவது ராங்க் எடுத்த எனக்கும், முதல் ராங்க் எடுத்த பக்கிரிசாமி, இரண்டாம் ராங்க் எடுத்த கருணாநிதி போன்ற என் நண்பர்களுக்கும், competitive exams என்றால் என்ன என்றே தெரியாது. எங்களுக்குத் தெரிந்த கடினமான கணிதக் கேள்வி, காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால், காசுக்கு எவ்வளவு வாழைக்காய்? என்பதுதான். (இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், காசுக்கு எவ்வளவு வாழைக்காய் என்று பின்னூட்டத்தில் சொல்லலாம்). அந்தக் காலத்தில் கால்குலேட்டர்கள் கூடக் கிடையாது! .

அண்ணனிடம், competitive exam விவரங்கள் பற்றி நான் கூறியவுடன், அவருடைய அலுவலகத்தில் (Kilpauk Medical College Hospital Administration) சர்க்குலேஷன் லைப்ரரியில் இருந்து, Competition Success Review புத்தகத்தின் நடுவில், சிறிய அளவில் இருக்கும் பகுதியில் இருக்கின்ற கேள்விகள் எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துப் படித்து பதில்கள் அளிக்கச் சொன்னார். அது மாதாந்திர பத்திரிக்கை என்று நினைக்கின்றேன். பழைய CSR பத்திரிக்கைகளின் நடுப் பகுதிகளையும், (சர்க்குலேஷன் முடிந்து புத்தகக் கடைக்கு எடைக்கு போட வைத்திருந்த) புத்தகங்களிலிருந்து கிழித்துக் கொடுத்தார். ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஒரு வாரத்திற்குள் படித்து, தயார் செய்துகொண்டேன். 



அப்ரெண்டிஸ் எழுத்துத் தேர்வுக்கு, இந்த கேள்விகள் எல்லாம் பெரிதும் உதவின. அதே வகைக் கேள்விகள் அந்த Written exam கேள்வித் தாளில் நிறைய வந்திருந்தன. அந்த நாட்களில் Quiz type கேள்விகள் என்றால் என்ன என்றே தெரியாதிருந்த எனக்கு Competition Success Review என்ற புத்தகத்தையும், அதன் நடுப் பகுதியையும், கேள்விகளையும், அறிமுகம் செய்து, அண்ணன் காட்டிய வழி, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

===================================

அசோக் லேலண்டின் அசெம்பிளி பிரிவில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஸ்டீரிங் பாக்ஸ் அசெம்பிளி பிரிவில், ஜான் என்று வயதான நண்பர். 






ஸ்டீரிங் பாக்ஸ் அசெம்பிளி என்பது பார்ப்பதற்கு சுலபமாகத் தோன்றும். ஆனால், கை சக்கரத்தை (steering wheel) சுற்றும் பொழுது, தரை சக்கரத்தை (Road wheel) இயக்குகின்ற Cam & Roller மெக்கானிசம் சரியாக செட் செய்வது மிகவும் கடினமான வேலை. அந்த வேலைக்கு யாராலும் 'இப்படித்தான் செய்யவேண்டும்' என்று செய்முறை எழுதமுடியாது. ஸ்டீரிங் வீலில் இவ்வளவு டார்க் கொடுத்தால், அது இயங்கவேண்டும் (இணைப்புகள் இல்லாத பொழுது, இணைப்புகள் இணைத்த பிறகு, வண்டி முழு லோட் செய்த பிறகு என்று பல கட்டங்கள் உண்டு.) என்று சொல்ல முடியுமே தவிர, அதை எப்படி வரவழைப்பது என்பது யாராலும் சொல்லமுடியாது. அவைகளை சரியாக வரவழைக்க ஜான் ஒருவரால் மட்டுமே முடியும். அதற்கு Shims adjustment என்று பெயர். ஜான் அவர்களின் தாரக மந்திரம், 'கண் குன்சு, கை ஃபீலிங்' என்பது. மனிதர் ஸ்டீரிங் அட்ஜஸ்ட் செய்ய வந்தால், இப்படி ஒரு தட்டு, அப்படி ஒரு தட்டு, இங்கேயிருந்து இரண்டு ஷிம் எடுத்து அந்தப் பக்கம், மீண்டும் சில தட்டுகள், சுத்தியல் கொண்டு ஸ்டீரிங் ஷாப்டில் கொஞ்சம் அடி, ராக்கர் ஷாப்டில் கொஞ்சம் தட்டுவார். ஸ்டீரிங் செட் ஆகிவிடும்.


ஜான் ரொம்ப வருடங்கள் முன்பே ரிட்டையர் ஆகிவிட்டார். தக்ஷிணாமூர்த்தி என்று ஒரு சிஷ்யரை நன்றாகத் தயார் செய்திருந்தார். அவரும் என்னுடைய நண்பர். விரைவில் நாங்கள் இந்த வகை ஸ்டிரிங் பெட்டிகளுக்கும் ஓய்வு கொடுக்கவேண்டி வந்தது.


ஜான் மாதிரி ஆட்கள், அ லே வில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு யூனிட்டிலும், உண்டு. அவர்கள்தான் அசோக் லேலண்டின் இராஜ அச்சுகள் (King pins) என்று சொல்லலாம்.


===================================


கொசுறு:

நேற்று எங்களுக்காக Xylo வாடகை கார் (Taxi for sure) ஓட்டிய பால் என்னும் ஓட்டுனர் என்னிடம் கேட்டார், "சார் நீங்க அசோக் லேலண்ட் எண்ணூர்ல வொர்க் பண்ணிணீங்களா? நான் எர்ணாவூர் பாரதி நகர்தான் சார். அந்நியன் ஷூட்டிங் எடுத்தாங்களே, அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில்தான் வீடு. உங்களுக்கு இருதயராஜ் தெரியுமா? என்னுடைய சித்தப்பா சார் அவரு."


நான் சொன்னேன் "எனக்கு அசோக் லேலண்டில் இரண்டு இருதயராஜ் தெரியும். ஒருவர் எலெக்ட்ரிகல் பிரிவு. இன்னொருவர் பைலட் ப்ரொடக்ஷன் பிரிவு கிளார்க். நீங்கள் சொல்வது யாரு". பால் உடனே "அவர் அசோசியேஷன் செக்ரட்டரி சார்!" என்றார். .

எனக்கு இப்போ அசோக் லேலண்டில் மூன்று இருதயராஜ்களைத் தெரியும்!

32 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அண்ணா அந்தக் காலம் என்றில்லை இப்பக் கூட இந்த டெக் யுகத்திலும் கூட பல மாணவர்களுக்கும் (சிட்டியில் இருப்பவர்களுக்கும் சரி, கிராமத்தில் இருப்பவர்களுக்கும் சரி) பல காம்பெட்டிட்டிவ் எக்ஸாம்ஸ் குறித்து தெரிவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. எங்க வீட்டுல எங்க பெரிய மாமா ப்ரைமரி தலைமை ஆசிரியர். அவர் நாங்கள் எல்லோரும் வேலைக்குச் செலணும்னு நினைத்தவர்..அதுவும் பெண் குழந்தைகள் கண்டிப்பா வேலைக்குப் போனும்னு. அதுக்காகவே பல எக்ஸாம்ஸ் குறித்து எங்களுக்குச் சொல்லி எழுதச் சொல்லுவார். சிலது மஸ்ட் என்று எழுத வைத்துவிடுவார்,. எம்ப்ளாய்ம்னெட் ந்யூஸ் வாங்கி அதில் ஒரு எழுத்து விடாமல் வாசிக்கச் சொல்வார்...ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. காலே அரைக்கால், அரைக்கால் இதெல்லாம் கீதாக்காவுக்கு விட்டாச்சு!! அவங்க வந்து சொல்லறதுக்கு இருக்கனும்னு நான் பதில் சொல்லலை...ஹிஹிஹிஹி (ஹப்பா என்னா தக்கினிக்கி தெரியாதுனு சொல்லறதுக்கு!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  5. முழுசா எண்ணவே எனக்குத் தெரியாது. இதிலே காலே அரைக்கால், வீசம் கணக்குக்கெல்லாம் எங்கே போக! தீர்க்கதரிசி அதிராவோ, இல்லாட்டி நெல்லைத் தமிழரோ வந்து சொல்லட்டும். என்னை மாட்டிவிட்ட தி/கீதாவை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன். :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா கீதாக்கா இப்படி என்னைய கவுத்திட்டீங்களே ஹா ஹா

      அதிரா தமிழில் தான் டி ஆக்கும்..!!!!

      நெத அல்லது டிடி சொல்லிடுவாங்க...

      கீதா

      நீக்கு
    2. கீசாக்கா மீ வந்துட்டேன்ன்ன்.. என்னால இங்கின நைட்லதான் வர முடியுமென நினைக்கிறேன்... பதில் அஞ்சு சொல்லிட்டதால மீ ஜொல்லல்லே:)..

      கீதாக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீக்கு மட்த்ஸ் லயும் டி தான்...

      நீக்கு
  6. அப்போவே புரசவாக்கத்தில் எட்டுக் குடித்தனங்களா? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!! இப்போ இன்னும் ஜாஸ்தியா ஆகி இருக்கும் போல! உங்க அசோக் லேலன்ட் கொசுறு ரொம்பவே நல்லா இருக்கு. வாசனையும், மணமுமாக! ஓசியாக் கிடைச்சாலும் கருகப்பிலை, கொ.மல்லி மணக்கத்தானே செய்யும்!

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் எப்பொழுது புரசவாக்கம் வந்தீர்களோ. நான் பிறந்ததிலிருந்து 1970 வரை
    வெள்ளாளத் தெரு பிள்ளையார் கோவில் ஒட்டினாற் போல வீடு.
    எல்லாம்மாறி இருக்கும் அந்த இடங்கள்.
    அழகாக வரைந்தது யாரோ. ஸ்டீரிங்க் வீல், ,கியர் பாக்ஸ் செட்டிங்க் எல்லாம் இவரும்
    16 வயதிலிருந்து கற்றுக் கொண்டார்.
    பழைய நினைவுகளுக்கு நன்றி கௌதமன் ஜி..

    பதிலளிநீக்கு
  8. இந்த காம்பெட்டிஷன் சக்ஸஸ் உம் என் மாமா வாங்கிக் குவிப்பார் ஆனால் அதுவும் பைசாவுக்கு இல்லை...ஃப்ரீயாக அவர் மாணாக்கர்களிடம் பழையவை இருந்தால் அவற்றை, அல்லது பழைய புக்ஸ் விலைக்கு கிடைக்குமே அதில் வாங்கிவருவார். இதற்காகவே பழைய பேப்பர் எடுப்பவர்களிடம் சொல்லி வைத்திருப்பார். அவர்கள் குழந்தைகளுக்கும் இவர்தானே வாத்தியார் அதனால...கிடைச்சுரும். அதற்குண்டான பைசாவும் கொடுத்திடுவார்.

    எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது என் மகனுக்கு அப்படித்தான் பல புத்தகங்கள் வாங்கினேன்..

    இன்னும் ஒன்றிரண்டு உண்டே...இப்ப நினைவுக்கு வரலை....எங்க வீட்டில நாங்க 8 கஸின்ஸ் அதுல 4 பெண்கள் எங்களுக்குனு..வாங்கிக் குவித்து அதுல இருக்கற அந்தக கணக்கெல்லாம் நினைச்சா இப்பவும் வயிறு கலங்குது!! ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காம்பெடிஷன் சக்ஸஸ் ரிவியூ நிறைய கை கொடுத்தது.

      நீக்கு
  9. உங்கள் அனுபவங்கள் பல விஷயங்கள் சொல்லுது...அந்த இயந்திரங்களைக் குறித்தும்...அதிலும் எத்தனை நுணுக்கங்கள், உழைப்பு கஷ்டங்கள்...

    ஒரு பொருள் வெளியே வருது என்றால் நீங்கள் சொல்லியிருப்பது போல் 'இராஜ அச்சுகள் (King pins)' மிக மிக முக்கியம் இவர்களது பணி முக்கியய்த்துவம் வாய்ந்தது உழைப்பு உட்பட!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால், காசுக்கு எவ்வளவு வாழைக்காய்..?

    11 சரியா...?

    பதிலளிநீக்கு
  11. உங்கள் இடுகையைப் படித்த பிறகு எனக்கு இப்போ மூணு கீதாக்கள் தெரியும்.

    சுவாரசியமான அனுபவங்கள். காம்படீஷன் சக்ஸச் - இதை எங்கேயே பார்த்த ஞாபகம் இருக்கு.

    படிப்பு வேறு, அனுபவம்/திறமை வேறு. பல இடங்களில் இந்த ஜான் மாதிரி ஆட்கள் நிறைய இருப்பார்கள். அவங்க தியரி எக்ஸாம் எழுதினா பாஸ் ஆவாங்களோ இல்லையோ ப்ராக்டிகல் எக்ஸாம்ல முதல் ரேங்க் வந்துடுவாங்க.

    பதிலளிநீக்கு
  12. //அண்ணன் காட்டிய வழி, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.//

    தலைப்பும், பதிவும் அருமை.
    அண்ணன் காட்டிய வழி நல்ல வழி, வாழ்க அண்ணன்.
    என்றும் மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது.
    வேலையை கண்ணும் கருத்துமாய் பார்த்த நேரங்கள், கிடைத்த பாராட்டுக்கள் எல்லாம் நினைத்து பார்க்க வேண்டிய காலங்கள் இது. (பழைய உற்சாகம் மீண்டும் வரும்)

    பதிலளிநீக்கு
  13. மூன்றையும் இப்பொழுதே படித்து கருத்துரை இடுகிறேன் கௌ ஜி

    பதிலளிநீக்கு
  14. ஆவ்வ் ¬¬சுந்தரம்பிள்ளை ஸ்ட்ரீட் அப்பா அடிக்கடி அவர் பிரண்டை பாக்க போவார் ..நம்ம ஏரியா கிட்டதான் )
    கங்காதீஸ்வரர் டாங்க் கிட்டத்தானே முந்தி மதர்ஷா இருந்திச்சி .எனக்கு இப்போவே மெட்றாஸ் பாக்கணும் போலிருக்கு
    வாழைக்காய் கேள்விக்கு ஆன்சர் =11
    இப்படி மீள்பதிவு போடும்போது பழைய பதிவை ஹைட் பண்ணனும் :) நான் அங்கே ஜம்ப்பி உடனே கண்டுபுடிச்சிட்டேனே @:)))))))))))))))
    காம்பெடிஷன் சக்சஸ் படிக்காத மாணவர்கள் இல்லையே அப்போ 90 இல் .இப்பவும் இருக்கா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்தரம்பிள்ளைத் தெருவில் நாங்கள் குடியிருந்த பகுதிக்கு பக்கத்துப் போர்ஷனில், ஜான், தாமஸ் என்ற பல்லவன் போக்குவரத்து நடத்துனர்கள் - என் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். தாமஸ் அண்ணனுக்கு நான் அவர் பார்ட் டைம் படித்து வந்த பாடங்களில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்தது உண்டு.

      நீக்கு
    2. இந்த காலகட்டத்தில் மை டாட் சென்னைல இல்லை :) அப்பாவின் நண்பர் ரெயில்வே TTE சுந்தரம்பிள்ளை ஸ்ட்ரீட் தான் ஆனா ஒரு ENDலருந்து அடுத்த END வரைக்கும் நீளத்தெருக்கலாச்சே .இப்போ எப்படி இருக்கோ தெரில அந்த குட்டை ஒட்டு வீடுகள் எல்லாம் ..தொடர்கிறேன்

      நீக்கு
  15. அதுசரி, அண்ணியோடு ஏன் இவ்ளோ போட்டி?:)..

    //எனக்கு இப்போ அசோக் லேலண்டில் மூன்று இருதயராஜ்களைத் தெரியும்!//
    ஹா ஹா ஹா இப்போ எனக்கும் இந்த மூவரையும் தெரிஞ்சுபோச்சே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டி எல்லாம் இல்லீங்கோ. அந்த அண்ணி எங்கள் அண்ணனைக் கல்யாணம் செய்துகொண்டு எங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆனபோது நான் நான்கு மாதக் குழந்தை!

      நீக்கு