புதன், 6 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 06:: சிபாரிசு தேவையா, இல்லையா?



ஒரு வேலையில் சேரவேண்டும் என்று நமக்கு ஆர்வம் இருக்கின்றது. அந்த வேலையில் சேர, சிபாரிசு என்கிற ஒன்று தேவையா இல்லையா என்று என்னைக் கேட்டால், 'சிபாரிசு நிச்சயம் தேவை' என்று (அடித்துக்) கூறுவேன்.





சில 'ஆட்கள் தேவை' விளம்பரங்களில், 'சிபாரிசு கூடாது; எந்த வகையிலாவது சிபாரிசு செய்ய முயற்சி செய்பவர்களின் விண்ணப்பங்கள் தயவு தாட்சண்யம் இன்றி நிராகரிக்கப்படும்.' என்பது போன்ற எச்சரிக்கைகளை முன் காலத்தில் நிறைய கண்டது உண்டு.




ஆனால், ஒரு கம்பெனியில் சேர்ந்த பிறகு, அதன் உள்ளே என்ன நடக்கின்றது என்று தெரிந்த பின்னால், அதுவும் அசோக் லேலண்ட் போன்ற ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் உள்ள ஒரு நிறுவனத்தில், முன்னே பின்னே தெரியாத ஆட்களை, வேலைக்கு எடுத்துக் கொள்வது (மேனேஜர் & மேலே உள்ள லெவல் தவிர) மிகவும் அபூர்வம் என்பதைத் தெரிந்துகொண்டேன்.


எழுத்துத் தேர்வு நிலை வரை, கல்லூரியில் நல்ல மதிப்பெண் எடுத்த எல்லோருக்கும் அழைப்பு வரும். அதில் தேறியவர்கள், நேர்முக தேர்வில் வடிகட்டப் படுவார்கள். இந்த நிலை வரும்பொழுதே, சிபாரிசு செய்யக் கூடியவர்களை அணுகி, அவர் மூலமாக நேர்முகத் தேர்வு செய்பவர்களிடமோ அல்லது எந்தப் பகுதிக்காக நடக்கின்ற நேர்முகமோ, அந்தப் பகுதியின் தலைமை ஆட்களிடமோ நம்மைப் பற்றிச் சொல்லுபவர்கள் கிடைத்தால், மிகவும் நல்லது. (நன்கு கவனிக்கவும் - நான் சொல்வது சிபாரிசுக் கடிதம் யாரிடமிருந்தாவது பெற்று,- To whomsoever it may concern - type அதை இன்டர்வியூ செய்பவரிடம் கொடுப்பது அல்ல.) 

இதை நான் என்னுடைய அந்தக் கால அனுபவத்திலிருந்து சொல்கின்றேன். இந்தக் காலத்திற்கும் இது சரியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். 




நான் அசோக் லேலண்ட் எழுத்துத் தேர்வுக்காக வந்திருக்கின்றேன் என்று தெரிந்தவுடனேயே அண்ணன் குடியிருந்த போர்ஷனுக்குப் பக்கத்தில் குடியிருந்தவர்களும், அண்ணனுடைய அலுவலகத் தோழர்களும், அண்ணியுடன் பணி புரிந்த சக ஆசிரியைகளும், மற்றும் என்னுடைய அண்ணன் வீட்டுக்கு விசிட் செய்த நண்பர்களும், உறவினர்களும் கூறிய சில கருத்துகள்:

# அங்கே நல்ல சம்பளம் கொடுப்பார்கள்.

# நல்ல பெர்சனாலிட்டி இருக்கின்ற ஆட்களைத்தான் அங்கு வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

# அங்கே யாராவது தெரிந்தவர்கள் இருந்தால்தான் வேலையில் சேர முடியும்.

# அங்கே காண்டீன் உணவு நன்றாக இருக்கும்.

# காலங்காத்தால எழுந்து வேலைக்குப் போகத் தயாராயிருக்கணும். நைன் டு பைவ் எல்லாம் அங்கே சரிப்பட்டு வராது!

என்னைப் பொறுத்தவரை, அதிகாலை எழும் பழக்கம் எனக்கு பதின்ம வயதிலேயே தொடங்கிவிட்டது. ஆமாம் - வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற தொழிற்பள்ளிக்கூடம் - காலை எட்டு மணிக்கு வகுப்புகள் ஆரம்பம். ஏழே முக்காலுக்குள் பள்ளிக்கூடம் சென்றுவிடுவேன். ஆறு மணிக்கு எழுந்து, ஏழு மணிக்குள் வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவேன்.




சிபாரிசுகள் பிடித்த அனுபவங்கள் பலப்பல. எழுத்துத் தேர்வு எழுதி முடித்தவுடன், அந்த எழுத்துத் தேர்வு நடந்த இடம் (சென்னை - புரசைவாக்கம் - சி என் டி இன்ஸ்டிடியூட் - ஜுபிலி ஹால்.) நடந்த தேதி (ஆகஸ்ட் 29 - 1971 என்று ஞாபகம்). 

என் பெயர், ஊர், பாலிடெக்னிக், எழுத்துத் தேர்வில் என்னுடைய விடைத் தாளில் நான் எழுதிய சுய விவரங்கள் எல்லாவற்றையும், விரல் நுனியில் வைத்திருந்தேன். அந்தக் கால கட்டத்தில், யாருடன் பேசினாலும், அவர்களிடம் அறிமுகப் படலம் முடிந்தவுடன், நான் கேட்கும் முதல் கேள்வி, 'உங்களுக்கு அசோக் லேலண்டில் யாரையாவது தெரியுமா? அல்லது உங்கள் நண்பர்களில், உறவினர்களில் யாருக்காவது அ லே வில் தெரிந்தவர்கள் யாராவது உண்டா?' அவர்களிடமிருந்து 'ஆம்' என்று பதில் வந்தால், நான் கேட்கும் அடுத்த கேள்வி, 'அவரை எனக்கு அறிமுகம் செய்து வைப்பீர்களா? எப்பொழுது அவரை சந்திக்கப் போகலாம்?'

இந்த வகையில் நான் (தெரிந்தவர்கள் மூலம்) வலைவிரித்துப் பிடித்தவர்கள்:

# அசோக் லேலண்டில் - உதவி ட்ரைனிங் ஆபீசர் ஆக இருந்த ஒருவர்.

# அசோக் லேலண்டில் வெல்ஃபேர் ஆபீசராக இருந்த ஒருவர். (இவர் இப்பொழுதைய அரசியல் பெரும் புள்ளி ஒருவரின் காட் ஃபாதர் லெவலுக்கு இருந்தவர் என்பது பிறகு தெரிந்துகொண்ட விஷயம்)

# அசோக் லேலண்டில் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜ் ஆக இருந்த ஒருவர்.

# அசோக் லேலண்ட் காண்டீனுக்குக் காய்கறி சப்ளை செய்பவர் ஒருவர்.

இதில், முதலில் சொல்லப்பட்ட மூவரின் காதுகளுக்கும், என்னைப் பற்றிய விவரங்கள் கொண்டுபோய் சேர்க்கப்பட்டன.


****************************************************

அசோக் லேலண்டில் நான் வாங்கிய முதல் பணக் கவரில் இருந்த தொகை எவ்வளவு தெரியுமா? ஏழு ரூபாய்கள்! ஆம். நான் அப்ரெண்டீசாக வேலையில் சேர்ந்தது டிசம்பர் ஒன்பதாம் தேதி, 1971.




ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் வாரத்தில், அதற்கு முந்தைய ஆண்டில் எடுக்கப்படாத லீவு நாட்களுக்கு என்காஷ்மெண்ட் கொடுத்துவிடுவார்களாம். முதல் மாத சம்பளம் வருவதற்கு முன்பே, லீவ் என்காஷ்மெண்ட் ஆக, ஒருநாள் சம்பளம் கைக்கு வந்து சேர்ந்தது. பேஸிக் நூறு ரூபாய், டி ஏ நூற்றுப் பத்து ரூபாய். மொத்தம் இருநூற்றுப் பத்து ரூபாய். ஒரு நாள் சம்பளம் ஏழு ரூபாய். அந்த சம்பளக் கவரையும், ஐந்து + இரண்டு ரூபாயையும் பல வருடங்கள் அப்படியே  வைத்திருந்தேன்! 



18 கருத்துகள்:

  1. வணக்கம் கௌ அண்ணா முதல் பாராவிலே சொன்னது என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது. அதாவது சிபாரிசு தேவை என்பது. பொதுவாக சிபாரிசு கூடாது என்று நாம் நினைப்பது உண்டு இல்லையா அதனால். மனதில் ஒரு தயக்கமும் வரும். ஏதோ ஒரு தயக்கம். ஒரு ஆப்ளிகேஷனுக்குப் போகிறோமே என்ற தயக்கம். முழுவதும் வாசித்துவிடுகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. எத்தனை பேரைப் பார்த்திருக்கிறீர்கள்! உங்கள் முயற்சி அபார முயற்சி.

    சில சமயம் தோனும். ஒருவருக்கு நல்ல திறமை இருக்கும் ஆனால் இந்த சிபாரிசு இல்லாததால் நுழைய முடியாமல் போகிறதே...சிபாரிசினால் அந்தத் திறமை வீணாகாமல் உள்ளே நுழைய முடிந்தால் நல்லதுதானே என்றும் தோன்றும்தான்....

    //ஒருநாள் சம்பளம் கைக்கு வந்து சேர்ந்தது. பேஸிக் நூறு ரூபாய், டி ஏ நூற்றுப் பத்து ரூபாய். மொத்தம் இருநூற்றுப் பத்து ரூபாய். ஒரு நாள் சம்பளம் ஏழு ரூபாய். //

    அக்காலத்த்ல் இது பெரிய அமௌன்ட் இப்போது இதை நினைத்தால் இது ஒரு நாளைய செலவாகக் கூட இருக்கிறது சில சமயங்களில். பல வருடங்கள் அப்படியே வைத்து விட்டு அப்புறம் என்ன செஞ்சீங்க?

    நல்ல அனுபவங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய சூட்கேசை காலி செய்து புதிய பெட்டிக்கு மாறும் சமயத்தில், அந்த இரண்டு + ஐந்து ரூபாய்த் தாள்களை பர்ஸுக்கு இடம் மாற்றிவிட்டேன் என்று ஞாபகம்.

      நீக்கு
  3. அந்தக் காலத்தில் இது நல்ல சம்பளம் தான். நானும் ஈபியில் 250 ரூ சம்பளம் வாங்கினேன். சரியாச் சொல்லப் போனால் 268 ரூபாயும் சில்லறையும்! முதல் மாசச் சம்பளமாக 250ரூ வந்தது. அதில் முதல் முதலாக நம்ம ரங்க்ஸுக்கு ஒரு பைலட் பேனா வாங்கிக் கொடுத்தேன். கேட்காமல் செலவு செய்து விட்டதுக்கு வாங்கியும் கட்டிக் கொண்டேன். இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கேட்காமல் செலவு செய்து விட்டதுக்கு வாங்கியும் கட்டிக் கொண்டேன்// புடவையா?

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், :)))) இருந்தவற்றையே விநியோகம் பண்ணிடுனு சொல்ற/சொன்ன ஆளு அவர்! :)))))

      நீக்கு
  4. நேர மேலாண்மையில் சிறந்து விளங்கினால், எதிலும் வெற்றி கொள்வார்கள் - தங்களை போல...

    பதிலளிநீக்கு
  5. வேலைக்கு போய் முதல் முதலில் பெற்ற தொகை இப்போது சிறிதாக இருந்தாலும் அப்போது அதன் மதிப்பும் உழைத்த காசு என்ற பெருமதிதமும் தந்து இருக்கும் உங்களுக்கு இல்லையா?

    பதிலளிநீக்கு
  6. பெருமிதமும் தந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. ரசிக்கும்படி தொடர்கிறது.... ஏதேனும் டிவைன் செயலாக நடந்தது என்று நடந்தவைகளை நினைக்கும்போது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய உள்ளன. இந்தப் பழைய பதிவுகளில் வரவில்லை என்றாலும் கூட, அதைத் தொடர்ந்து எழுதப்போகும் கட்டுரையில் நிச்சயம் சொல்கிறேன். நன்றி.

      நீக்கு
    2. நீங்க அப்போ விட்டுப் போனவற்றை ரசனை கெடாமல் விஸ்தாரமாச் சொல்லும்போதுதான் இன்னும் ரசிக்கும்படி இருக்கும். அப்புறம் அந்த அனுபவத்துல நீங்க எண்ணுவதையும் சேர்த்துச் சொல்லுங்க.

      நீக்கு
  8. சில சமயம் சில விஷயங்களுக்கு சிபாரிசு தேவைப்படுகிறதுதான்.

    அக்காலத்து ரூபாயின் மதிப்பு இப்போது மிகவும் குறைந்துள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது.

    உங்கள் அனுபவங்கள் ஸ்வரஸ்யம். தொடர்கிறோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு