சனி, 16 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள்16:: ஆண்டொன்று போனால் .... !


அசோக் லேலண்டில் நவம்பர் மாதம் வந்ததுமே தொழிலகத்தில் குறிப்பாக எங்கள் இன்ஜினியரிங் பகுதியில் ஓர் எதிர்பார்ப்பு கலந்த, ஆர்வத்துடன் கூடிய, சிறிய பரபரப்பு பற்றிக் கொள்ளும்.

நிர்வாகத்தினர், அடுத்த ஆண்டுக்கான பன்னிரண்டு நாட்கள் பண்டிகை விடுமுறை நாட்கள் என்னென்ன என்று ஒரு வரைவு சுற்றறிக்கை அனுப்புவார்கள். எல்லா பகுதி அறிவிப்புப் பலகையிலும் அந்த அறிவிப்புத் தாள் ஒட்டப்படும்.



தொண்ணூற்றொன்பது சதவிகிதம் அதுவே இறுதி அறிவிப்பாகவும் உறுதி செய்யப்படும். எனக்குத் தெரிந்து, ஒரே ஒரு வருடம் மட்டும் அந்த விடுமுறை நாள் பட்டியலில் இறுதி வடிவம் வரும் பொழுது, ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எல்லைக்கருகே அமைந்திருக்கும் தொழிலகம் என்பதால், எண்ணூரில் (என்னைப் போன்ற) மனவாடுகள் அதிகம். அந்த குறிப்பிட்ட வருடத்தில் தமிழ் வருடப் பிறப்பு தினம் ஒரு திங்கட்கிழமையில் (எண்ணூர் அசோக் லேலண்டுக்கு வாராந்திர விடுமுறை தினம்) வந்ததால், பன்னிரண்டு விடுமுறை நாட்களில் அதை ஒன்றாக சேர்க்காமல், தெலுங்கு வருடப் பிறப்பு தினத்தை அந்த ஆண்டில் விடுமுறை நாளாக அறிவிக்கும்படி ம வா எல்லோரும் சேர்ந்து கேட்டு, வெற்றியும் பெற்றார்கள்.


இதில் வேறொரு சூட்சுமமும் இருக்கின்றது. விடுமுறை நாட்களை யூனியன் தோழர்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது, இயன்றவரையிலும் சனி அல்லது செவ்வாய்க்கிழமை வருமாறு பார்த்துக் கொள்வார்கள். அந்தக் காலத்தில் ஞாயிறு வேலை நாளுக்கு விடுமுறை விண்ணப்பிக்க வேண்டியது இல்லை. ஞாயிறு வேலைக்கு வரவில்லை என்றால், சம்பளத்தில் உபரியாக வருகின்ற ஞாயிற்றுக் கிழமை சம்பளம் (sixth day salary) வெட்டப்படும். மாதத்தில் நான்கு அல்லது ஐந்து ஞாயிறு வந்தால், அதற்குரிய உபரி சம்பளம் கிடைக்கும்.


சனி அல்லது செவ்வாய்க்கிழமை பண்டிகை விடுமுறையாக அமைந்தால், விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று திரும்பும் தொழிலாளர்களுக்கு மிகவும் சந்தோஷமாகிவிடும். மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கின்றதே!


விடுமுறை அறிவிப்பு வந்தவுடனேயே எங்கள் பகுதியில் வேலை பார்க்கும் இரண்டு டிரேசர்கள் மும்முரமாக, ஒரு A4 டிரேசிங் பேப்பரில் அடுத்த ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பார்கள். (நோ நோ இந்தக் காலண்டரில் கவர்ச்சிப் படங்கள் எதுவும் கிடையாது). சற்றேறக் குறைய, அந்தக் காலண்டரின் அமைப்பு, இந்தப் படத்தில் காணப்படுவது போல இருக்கும்.


டிரேசிங் பேப்பரில் வரையப்பட்ட காலண்டர் என்பதால், இதை வைத்து நிறைய அம்மோனியா பிரிண்ட் எடுக்கலாம். எடுப்போம். எங்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று ஆளுக்கொன்று தருவதற்காக, ஆயிரக் கணக்கில் பிரிண்டுகள் தயாரான வருடங்களும் உண்டு.


என்னுடைய அசோக் லேலண்ட் சர்வீஸ் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் எல்லாமே ஒரு கோப்பாக வைத்திருந்தேன். 1974 தொடங்கி, 2006 வரை ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு தாள். என்னுடைய காலண்டர் தாளில், ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு நான் எத்தனை மணிக்கு வந்து, எத்தனை மணி வரை இருந்தேன், லீவு என்றால் என்ன லீவு, ஏன் லீவு, வாங்கிய சம்பளம் என்ன, இன்செண்டிவ் என்ன, போனஸ் என்ன போன்ற எல்லா விவரங்களும் எழுதி வைத்திருந்தேன்.

ஏ எம் ஐ ஈ பரிட்சை எழுதிய வருடங்களில், (1977 ~ 1983) summer / winter exams வருகின்ற நாட்களில், பரிட்சைக்குப் படிக்கவும், எழுதவும் ஒவ்வொரு சீசனிலும் இரண்டிரண்டு வாரங்கள் லீவு போட்டுப் படித்து பரிட்சை எழுதுவேன்.

நான்கு பரிட்சை எழுதி இரண்டு அல்லது மூன்று சப்ஜெக்டுகளில் பாஸ் செய்வேன். சில சமயங்களில் வாஷ் அவுட்டும் ஆனது உண்டு. அது தனிக் கதை! காலண்டரை வைத்துக் கொண்டு திட்டம் போட்டு லீவு விண்ணப்பம் அளித்து, படித்து, எழுதுவேன்.

ஏ எம் ஐ ஈ பாஸ் செய்த பிறகு, ஒவ்வொரு வருடமும் கடைசி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களோ அல்லது கடைசி பத்து நாட்களோ லீவு போட்டு விட்டு, எல்லா நாட்களையும், மியுசிக் அகடெமி, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், பாரதீய வித்யா பவன், தமிழ் இசை சங்கம், இன்னும் மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் கச்சேரி நடக்கும் இடங்களாக சுற்றுவேன். வாழ்க்கையின் மகிழ்ச்சியான மார்கழி மாதங்கள்!
         

20 கருத்துகள்:

  1. காலை வணக்கம் கௌ அண்ணா...ஹா ஹா ஹா முதல் வரியே சிரிக்க் வைச்சுது. சின்ன பிள்ளைகளாக இருந்தப்ப ஒவ்வொரு வருஷம் ஸ்கூல் திறகும் சமயம், அந்த வருஷத்தில் என்னென்ன லீவு எத்தனை நால் லீவு இருக்குனு பள்ளி டயரியைப் பார்க்கத் தொடங்கிடுவோம்...அது போல அலுவலத்திலும் என்பதை வாசித்ததும் அட மீண்டும் சின்னப் பிள்ளைகள்...

    என்றாலும் விடுமுறை என்றாலே குஷிதான் இல்லையா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய அசோக் லேலண்ட் சர்வீஸ் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் எல்லாமே ஒரு கோப்பாக வைத்திருந்தேன். 1974 தொடங்கி, 2006 வரை ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு தாள். என்னுடைய காலண்டர் தாளில், ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு நான் எத்தனை மணிக்கு வந்து, எத்தனை மணி வரை இருந்தேன், லீவு என்றால் என்ன லீவு, ஏன் லீவு, வாங்கிய சம்பளம் என்ன, இன்செண்டிவ் என்ன, போனஸ் என்ன போன்ற எல்லா விவரங்களும் எழுதி வைத்திருந்தேன்.//

    ஆஹா! என்ன மெட்டிக்குலஸ்! அண்ணா இது உங்கள் தனி ஆர்வமா இல்லை வேறு எதற்கும் உதவும் என்றா? நல்ல பொறுமை...இப்படி வேறு யாராச்சும் எழுதி வைச்சுருப்பாங்களா?!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலுவலகத்தில் நான் புள்ளிவிவரங்களுக்கு பெயர் வாங்கியவன்!

      நீக்கு
  3. உங்கள் வேலை, விடுமுறை, படிப்பு, மார்கழி மாதம் அனைத்தும் அருமை.

    காலண்டர் தயாரிப்பு விவரம் அருமை.
    உங்கள் பதிவுகளை சிறுவயதினர் படித்து பயன் அடையலாம்.

    பதிலளிநீக்கு
  4. ரசிக்கும் பதிவு. இதிலெல்லாம் ரொம்ப டிசிப்ளின்ட் ஆக இருந்திருக்கிறீர்கள். அண்ணாக்களின் அறிவுரையா இல்லை இது உங்கள் இயல்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய இயல்புதான் அது!

      நீக்கு
    2. ஒரு உண்மையைச் சொல்லவா? நமக்கு (தனுர்) வீட்டில் ஆதரவு நஹீம். ரொம்ப டிசிப்பிளிண்டா இருக்கறவங்களை நிறையபேர் விரும்புவதில்லை (ஹாஹா)

      நீக்கு
  5. படிப்பதற்கென்றே லீவு... அதற்கேற்ப திட்டம் அருமை ஐயா...

    காலண்டர் தாளில் கணக்கு வாசித்தவுடன் - Excel to dbase-ல் ஒருவரின் ஒரு வருட சம்பள விவரங்களை கொடுத்தால், சராசரியாக - ஒரு மாதம், ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் என Program செய்தது ஞாபகம் வந்தது... அன்றைய விளையாட்டு...!

    பதிலளிநீக்கு
  6. கேலண்டர் - எங்கள் அலுவலகத்தில் ஒருவர் எக்ஸெல் மூலம் கேலண்டர் தயாரித்து புத்தாண்டு அன்று எல்லா பிரிவுகளுக்கும் சென்று எல்லோருக்கும் கொடுத்து, வாழ்த்துச் சொல்வார்! அஃப்கோர்ஸ் பிரிண்ட் அவுட் எடுப்பது அலுவலகத்தில் தான்!

    அலுவலக அனுபவங்கள் - எத்தனை எத்தனை அனுபவங்கள் இங்கே... சில அனுபவங்கள் ஸ்வாரஸ்யமானவை... சில இங்கே எழுத முடியாதவை! ஹாஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான விவரங்களை, பெயரை மாற்றி, ஊரை, அலுவலகத்தின் பெயரை மாற்றி, பகிரலாமே வெங்கட்ஜி !

      நீக்கு
  7. ஏ எம் ஐ ஈ பாஸ் செய்த பிறகு, ஒவ்வொரு வருடமும் கடைசி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களோ அல்லது கடைசி பத்து நாட்களோ லீவு போட்டு விட்டு, எல்லா நாட்களையும், மியுசிக் அகடெமி, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், பாரதீய வித்யா பவன், தமிழ் இசை சங்கம், இன்னும் மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் கச்சேரி நடக்கும் இடங்களாக சுற்றுவேன். வாழ்க்கையின் மகிழ்ச்சியான மார்கழி மாதங்கள்!//

    ஆஹா கௌ அண்ணா நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம்...சூப்பர்...எனக்கும் பிடித்தமான ஒன்று ஆனால் பெரும்பாலும் வாய்ப்பு மிஸ் ஆகும் குடும்பக் கடமைகளால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சென்னை வேலைக்கு என்று இருந்ததன் முழுமுதல் காரணம் மியூசிக் சீசன். என்னை வேறு யூனிட்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய அலுவலகத்தில் முயற்சி செய்தபோதும் சென்னை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.

      நீக்கு
  8. நாங்கள் mainframe கம்ப்யூட்டரில் வேலை செய்த சமயம் 80 காலம் கார்டில் லயன் லயன் ஆக லினோடைப் போன்று பஞ்ச் செய்து line பிரின்டரில் பிரிண்ட் செய்து மேஜை கிளாஸ் டாப் கீழ் வைத்துக் கொள்வோம். இதில் monalisa படம் கூட உள்படும்.

    1982க்கு பிறகு PC வந்தவுடன் அதில் microsoft xenix OS இல் cal command உபயோகித்து காலண்டர் உண்டாக்கி அதை வேர்ட்பிரஸ் இல் எடிட் செய்து PC யில் கிடைக்கும் படங்களையும் சேர்த்து Dot Matrix பிரின்டரில் stencil கட் செய்து காப்பிகள் எடுத்துக் கொள்வோம்.

    தற்போது பல வசதிகள் வந்துவிட்டாலும் இன்னமும் cal command இருக்கிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயக்குமார் சார்.. 86ல் கம்ப்யூட்டர் படித்தபோது, எங்களுக்கு கேலண்டர் ப்ரிண்ட்டுக்கு ப்ரோக்ராம் எழுதறது ஒரு சிறிய ப்ராஜக்ட். எந்த வருடம் கொடுத்தாலும் அது காலண்டர் ப்ரிண்ட் பண்ணணும், முழு லாஜிக்கோட.

      நீக்கு
    2. அப்போ ப்ராஜெக்ட் கொடுத்தவுங்களுக்கும் cal command பற்றி தெரியாதா? இந்த ப்ராஜெக்ட் எதில் செய்தீர்கள். PC with C language? or Basic? or mainframe in Fortran?
      Jayakumar

      நீக்கு