வெள்ளி, 22 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 22:: அறுவை சிகிச்சை நிபுணர்.


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து எட்டாம் ஆண்டு. ஏப்ரல் மாதம். அலுவலக மருத்துவர், என்னைப் பரிசோதித்து, ஹெர்னியா உள்ளது; ஆரம்ப கட்டம். அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது என்றார்.


நான் பல மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் தீர யோசித்துப் பார்த்து, குரோம்பேட்டையில் வீட்டுக்கு அருகிலேயே உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.




என்னுடைய அலுவலக நண்பர் எம். முரளி வேறொரு பரிந்துரை கூறினார். செலவுக்கு பயந்து, பெயர் தெரியா மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக அணுக வேண்டாம். அஜாக்கிரதையாக ஒரு சிறு பஞ்சு உள்ளே வைத்து தைத்துவிட்டார்கள் என்றால், பெரும் ஆபத்து ஆகிவிடும்.


வயிறும் வயிற்றுக்குக் கீழும் அறுவை சிகிச்சை என்றால், நூறு சத விகிதம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை அளித்து வருபவர் இருக்கிறார், அவரைப் போய்ப் பாருங்கள் என்றார் முரளி. முரளியின் மனைவியும் ஒரு டாக்டர். அவருடைய சிபாரிசுதான் இந்த டாக்டர்.


காலை பத்து மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். நான் ஒன்பதே முக்காலுக்கு மருத்துவமனை சென்றேன். டாக்டர் ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கின்றார். கொஞ்சம் காத்திருங்கள் என்றனர். கொஞ்சம் இல்லை, நிறையவே காத்திருந்தேன்.


பதினொன்றரை மணி சுமாருக்கு டாக்டர் வந்தார். ஆஜானுபாகுவான உருவம். பரிசோதித்தார்.

"டிரிங் பண்ணுவியா?"

"இல்லை சார்."

"ஸ்மோக்?"

"இல்லை சார்."


"அப்புறம் எப்பிடி உனக்கு ஹெர்னியா வந்தது? வெயிட் தூக்குவியா?"


"ஆமாம் சார். குரோம்பேட்டையில் தண்ணீர் கஷ்டம் அடிக்கடி வரும். டிரம் டிரம்மாக தண்ணீர் ஒரு மாடி ஏற்றி கொண்டு போனது உண்டு. அடிக்கடி ஜலதோஷம் வரும், ஒரு நாளைக்கு நாற்பது ஐம்பது தும்மல் போடுவேன்."


பிறகு, ஹெர்னியா என்றால் என்ன, அறுவை சிகிச்சை மூலம் என்ன செய்வார்கள் என்று பொறுமையாக, கம்பீரமான குரலில் கூறி, படம் போட்டு விளக்கினார், டாக்டர்.


'நல்ல நாள் பார்த்து வந்து இங்கே அட்மிட் ஆகிவிடு. இரண்டு நாட்கள் ப்ரிபரேஷன் ட்ரீட்மெண்ட். பிறகு ஆப்பரேஷன். அதற்குப் பிறகு நான்கு நாட்களில் வீட்டிற்குப் போய் ஓய்வு எடுத்துக் கொள். பிறகு ஒரு வாரம் கழித்து வா. தையல் பிரித்து விடலாம்' என்றார்.

நல்ல நாள் பார்த்து, அட்மிட் ஆனேன். ப்ரிபரேஷன் சிகிச்சை எல்லாம் இனிதே நடந்தது.


அறுவை சிகிட்சையன்று காலையில் ஒரு இளநீர் மட்டும்தான் சாப்பிடலாம் என்றார். வயிறு காலியாக இருக்கவேண்டும் என்றார்.

ஆப்பரேஷன் மேஜை. இதுவரை யாரும் என் உடம்பில் கத்தி வைத்தது இல்லை. மயக்க மருந்து சரியாக வேலை செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்ற கவலை வேறு. சரியாக மயக்கம் வராமல், பாதி ஆப்பரேஷன் நடக்கும் பொழுது நினைவு வந்துவிட்டால் என்ன ஆகும் என்று வயிற்றில் பட்டாம்பூச்சிகள் வேறு பறந்து கொண்டிருந்தன.

டாக்டர் என் காதுக்கு அருகே வந்து "கௌதமன், உங்க வாயில சொத்த பல்லு இருக்கா?" என்று கேட்டார்.


யோசனை பண்ணிப் பார்த்தேன். ஏதோ ஒன்று இரண்டு தேறும் என்று தோன்றியது. "உம் ..... இருக்கு" என்றேன்.


"எவ்வளவு சொத்தைப் பல்லு? எண்ணிச் சொல்லு" என்றார்.


"ஒன்று ........... இரண்டு .......... அப்புறம் ........."


மேலே இருந்த விளக்குகள் எல்லாம் ஒரு சுழல் சுழன்றது.


மீண்டும் ஏதோ சொல்ல கண்ணைத் திறந்தால் ஒரே இருட்டு.


கைகளை ஆட்ட முடியவில்லை. யாரோ என் கையில் கட்டெறும்பை விட்டிருந்தார்கள் போலிருக்கு. கட்டெறும்பு கனமாக இருந்தது. அவ் என்று கையில் கடித்தது. அந்த கட்டெறும்பை ஒரேயடியாக நசுக்கி விடலாம் என்று இன்னொரு கையை அதன் அருகே கொண்டு சென்ற போது, என் கையை தடுத்து நிறுத்தியது என் மனைவியின் கை.

"ட்ரிப்ஸ் ஏற்றுகின்ற நீடிலை பிய்க்கக் கூடாது"


"ஆப்பரேஷன் முடிந்து விட்டதா?"


"ஆயிற்று. மாலையே ஆப்பரேஷன் ஓவர். ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து உங்களை இங்கே கொண்டு வந்து படுக்க வைத்து, நான்கு மணி நேரம் ஆயிற்று"

கொஞ்சம் கூட வலியே தெரியவில்லை. அப்படியே வலித்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடிய சில்லறை வலிதான்

டாக்டர் கூறிய படி எல்லாம் இனிது முடிந்தது. டிஸ்சார்ஜ் ஆகும் பொழுது, டாக்டர் கூறினார். "இப்போ இடது பக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இன்னும் சில வருடங்களில் வலது பக்கமும் செய்யவேண்டி வரும். இந்த கம்ப்ளைண்ட் ஒரு பக்கத்தோடு நிற்காது என்றார். தயங்காமல் சிகிச்சைக்கு வாருங்கள்"


1999. மறுபடி, அதே மருத்துவமனை. அதே டாக்டர். அதே அனுபவங்கள். வலது பக்கமும் ஆப்பரேஷன் செய்து கொண்டு, வெற்றிகரமாக வீடு திரும்பினேன். இந்த தடவை தனியாளாக தைரியமாக போய் நானே அட்மிட் ஆகி, திரும்ப வரும் பொழுது டாக்சி பிடிக்க மட்டும் மனைவி உதவி செய்ய, டாக்சியில் வீடு திரும்பினேன். ஆப்பரேஷன் முடிந்த இரண்டாவது நாளே யார் உதவியும் இன்றி நடந்தேன்.


இந்த முறை தையல் எதுவும் கிடையாது. தானே கரைந்து போகின்ற ஒரு வகை தையல்.


'இனிமேல் நிச்சயம் உனக்கு ஹெர்னியா தொந்தரவு வராது. நீங்க தைரியமாக வீட்டுக்கு செல்லலாம்' என்றார் அந்த டாக்டர்.


மருத்துவமனை: ஸ்ரீ ரமணா சர்ஜிகல் கிளினிக்.


டாக்டர்:  14 - 07 -2013 அன்று  காலமான,

திரு என். ரங்கபாஷ்யம்.



தாங்க் யூ டாக்டர், ஃபார் தி நைஸ் ட்ரீட்மெண்ட்.

(இந்தக் கட்டுரையை அலேக் அனுபவங்கள் என்ற தலைப்பில் ஏன் சேர்த்தீர்கள் என்று ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து வினவினார். முதல் அறுவை சிகிச்சைக்கான செலவு ரூபாய் பதினைந்தாயிரத்தையும், இரண்டாவது சிகிச்சைக்கான ரூபாய் ஐம்பதாயிரத்தையும், அசோக் லேலண்ட் (மேஜர் மெடிக்கல் பிளான் மூலமாக) முழுவதும் அளித்தார்கள். அசோக் லேலண்டில் மெடிக்கல் லீவு எடுத்து, அப்பொழுது பெற்ற அனுபவங்கள்தாம் இவை!)
                        

15 கருத்துகள்:

  1. நானே சிகிச்சை பெற்றது போலிருந்தது பதிவின் நடை.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் அண்ணா....இந்த மருத்துவர் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்.

    எனக்கும் முதலில் ஹெர்னியா என்று சொல்லப்பட்டது. அப்புறம் அதன் பின் வலி எதுவும் இல்லை பின்னர் தெரிந்தது அது ஓவரியில் கட்டி இருந்ததால் என்று மகன் கண்டு பிடித்து அப்புறம் அறுவை சிகிச்சை என்று...

    ஹெர்னியா அடி வயிற்றில் எங்கு வேண்டுமானாலும் வரலாம் என்றும் தெரிந்தது...வெயிட் தூக்கினால் வரும் என்றும் சொல்லப்படுவதுண்டு
    உங்கள் அறுவைசிகிச்சை நல்லபடியாக நடந்தது மகிழ்ச்சி ஏனென்றால் இப்போதெல்லாம் மருத்துவம் அறுவைசிகிச்சை என்பதெல்லாம் பயமுறுத்தலாக இருக்கிறதே!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அனுபவத்தை எளிமையாக எழுதியருக்கீங்க. இதுமாதிரி டாக்டர் ஜெகதீசன் அவர்களைப் பற்றி சோ எழுதியிருப்பார்.

    நீங்கள் ஏதோ உங்க அனுபவத்துல நல்ல மருத்துவமனை, நல்ல மருத்துவரைப் பரிந்துரைக்கப் போகிறீர்கள் என்று பார்த்தால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிந்துரைத்தல் என்பது யாருக்கும் சரியாக வராது. எனக்கு சரியாக அமைகின்ற சில முறைகள், மற்றவர்களுக்கும் அப்படியே அமையும் என்று சொல்லிவிடமுடியாது. ஸ்டாக் டிரேடிங், மருத்துவம், சமையல் என்று எல்லாவற்றிலுமே நமக்கு சரியாக அமைவது மற்றவர்களுக்கு சரிப்பட்டு வராது.

      நீக்கு
  4. மிக அருமையான டாக்டர் திரு. ரங்கபாஷ்யம்.இப்பொழுதும் நன்றாக இயங்கி வருகிறது. கணையம்,கல்லீரல் உணவுக்குழாய் குழாய்,எல்லாம் துல்லியமாக சிகிச்சை. செய்துவிடுவார். உங்கள் சிகிச்சை இனிமை நடந்து முடிந்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. அறுவை சிகிச்சை சமயத்தில், எண்ணத்தை திசை திருப்பும் கலை சில மருத்துவர்களுக்கு உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆள் மயங்கிவிட்டாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளத்தான்!

      நீக்கு
  6. என் பேரனுக்கு 40 நாளில் (மகளின் மகன்) 40 நாளில் அறுவை சிகிட்சை செய்யப்பட்டது.
    குழந்தைக்கு இரு பக்கமும் செய்யப்பட்டது. மருத்துவர் சொன்னார் இனி இந்த குழந்தைக்கு எந்த் கஷ்டமும் வராது சின்ன வயதில் கஷ்டத்தை அனுபவித்து விட்டான் என்று.

    //குரோம்பேட்டையில் தண்ணீர் கஷ்டம் அடிக்கடி வரும். டிரம் டிரம்மாக தண்ணீர் ஒரு மாடி ஏற்றி கொண்டு போனது உண்டு. அடிக்கடி ஜலதோஷம் வரும், ஒரு நாளைக்கு நாற்பது ஐம்பது தும்மல் போடுவேன்."//

    உலக தண்ணீர் தினத்தில் தண்ணீர் தூக்கி கஷ்டபட்டதை பகிர்ந்து கொண்டது பொருத்தமாய் அமைந்து விட்டது.

    தன்ணீர் பற்றாகுறையால் எவ்வளவு எவ்வளவு கஷ்டம்.


    பதிலளிநீக்கு
  7. கௌதமன் சார் தொடர்ந்து உங்கள் அனுபவங்களை வாசித்து வருகிறேன். முட்டை, தீபாவளி இனிப்புகள், காலை டிஃபன், உங்கள் ரகசிய அரட்டை இடம் எல்லாம் வாசித்தேன்.

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் இது பாட்டு என்னைக் கேட்டால் கூடவே மருத்துவர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்றும் சொல்லலாம். உங்களுக்கு நல்ல மருத்துவர் அமைந்தது நல்ல விஷயம்.

    எனக்கும் ஹெர்னியா இருக்கிறது என்று தோன்றுகிறது. சிறிய வீக்கமும் வலி என்றால் வலி இல்லை ஒரு அன்கம்ஃபர்டபிள் ஃபீலிங்கும் வந்தது. மருத்துவரிடம் செல்லத் தயங்கிக் கொண்டு போகவே இல்லை ஆனால் அதன் பின் வலியும் இல்லை வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. நேற்றே படித்தேன்.

    நல்ல மருத்துவர். பலருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றாலும் மருத்துவரிடம் செல்லத் தயங்குகிறார்கள். எங்கள் பகுதியில் இருந்த ஒரு பெரியவர் - வயது காரணமாக சிகிச்சை செய்து கொள்ளாமலேயே இருந்தார்.

    பதிலளிநீக்கு
  9. அறுவை சிகிச்சை என்றாலே பயம் தான்! ஆனாலும் நானும் மூலத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி ஆயிற்று. அன்னிக்கு வலியில் நான் அலறின அலறலில் அம்பத்தூர் ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனையே கதி கலங்கிப் போச்சு!

    பதிலளிநீக்கு