வியாழன், 28 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 28 :: பி டி சி டெப்போவில்



(குறிப்பு: இது ஒரு டெக்னிகல் பதிவு கிடையாது. சில விஷயங்கள் / சொற்கள் புரியவில்லை என்றால் அவற்றை பொருள் விளங்கா உருண்டையாக முழுங்கிவிட்டுப் படியுங்கள். நான் சொல்ல வருவது ஒரு நான் - டெக்னிகல் மேட்டர்தான்!)




ஒரு பஸ் நூற்று எழுபத்தாறு இஞ்சு சக்கர அடிப்படை அளவு (அதாவது 176 inch wheelbase!!) கேரளா டிரான்ஸ்போர்ட் கேட்டிருந்தது என்று ஞாபகம். சாசிஸ் ஃபிரேம் டிரில்லிங் படம் வரைய நானும் என்னுடைய வரைஞர் (டிராப்ட்ஸ்மேன்) மிகவும் முனைந்து வேலை செய்யவேண்டி இருந்தது.


சாசிஸ் பிரேமில் காற்றுத் தடைக்கான (ஏர் பிரேக் அமைப்புக்கு வேண்டிய சமாச்சாரம்) காற்று உருளைகள் எங்கே பொருத்துவது என்று ஒரு பிரச்னை வந்தது.


பஸ்ஸில் பயணிகள் ஏற, இறங்க இடது புறம் வழிகள் வேண்டும். அந்தப் பாதைகளுக்கு இடையே மூன்று காற்று உருளைகள் பொருத்தப்பட வேண்டும். வலது புறம் டீசல் டாங்கு. எவ்வளவு முட்டி மோதிப் பார்த்தாலும், மூன்று ஏர் சிலிண்டர்கள் (அதாங்க காற்று உருளைகள் - தமிழ் வாழ்க) அமைப்பது மிகவும் கடினமான விஷயமாகப் பட்டது.

அப்போ ஒரு சர்விஸ் இஞ்சினியர், (தமிழில் சேவைப் பொறியாளர்) பல்லவன் டிரான்ஸ்போர்ட் திருவொற்றியூர் டிப்போவில் ஒரு இருநூற்று மூன்று இன்ச் வீல் பேஸ் வண்டி - டியுவல் ப்ரேக் லைன் வண்டி இருக்கின்றது என்றும், அதில் காற்று உருளைகள் எங்கே அமைக்கப்பட்டிருக்கின்றது என்றும் பார்க்கலாம் என்று கூறினார். அதிலிருந்து இருபத்தேழு இஞ்சு கூட்டல் கழித்தல் விவகாரம் செய்துகொள்ளலாம் என்று எங்களுக்கு ஒரு ஐடியா வந்தது.


உடனே நானும் என் உதவியாளரும் ஒரு இன்ச் டேப் எடுத்துக் கொண்டு, திருவொற்றியூர் பல்லவன் டிப்போவிற்கு விரைந்தோம். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. (எங்களுக்குத் திங்கக் கிழமைகள்தான் வாராந்திர விடுமுறை) திருவொற்றியூர் பணிமனையில் அன்று அதிக ஆட்கள் இல்லை. ஒரு ஜூனியர் எஞ்சினியர் மட்டும் டிப்போ பணிகள் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தார்.




அவரிடம் நாங்கள் வந்த விவரம் கூறியதும், ரொம்ப ரொம்ப ரொம்ப தயங்கினார். "சார் டிப்போ மேனேஜர்தான் வண்டிகளைப் பார்க்க அனுமதி வழங்கலாம். என் அளவில் நான் ஒன்றும் செய்யமுடியாது" என்றார்.

"நாங்க ஒன்றுமே செய்யமாட்டோம். சும்மா பார்த்து, சில அளவுகளை, நாங்கள் கொண்டுவந்திருக்கும் பேப்பரில் எழுதிக்கொண்டு செல்வோம். அவ்வளவுதான்" என்று அவரிடம் கூறினேன்.


"இல்லை சார். நாங்க வண்டியில் உங்களிடமிருந்து வாங்கிய பிறகு சில மாற்றங்கள் செய்திருப்போம். அவற்றை நீங்கள் பார்த்தால், வண்டியில் சர்விஸ் கிளைம் செய்வதில் பிரச்னைகள் தோன்றலாம். தயவுசெய்து என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள்! இன்று போய்விட்டு, அப்புறம் மேனேஜர் இருக்கும்பொழுது வாருங்கள்."


என்ன சொன்னாலும் மசியவில்லை அவர். திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் போல, அதே பல்லவி.


அது அலைபேசி, வலைபேசி என்ற சமாச்சாரங்கள் தோன்றியிராத காலம். திடீர் என்று ஒரு மின்னல் வெட்டு ஐடியா வந்தது. "சார் உங்க மேனேஜர் வீட்டுத் தொலைபேசி எண் கொடுங்கள். நான் அவரிடம் பேசி அனுமதி வாங்குகின்றேன்" என்றேன்.

டிப்போ மேனேஜர் வீட்டு தொலைபேசி என்னை ஒரு தாளில் எழுதிக் கொடுத்தார்.

ஜே இ யின் மேஜையில் இருந்த தொலைபேசியை எடுத்து, அவர் கொடுத்த எண்ணைப் பார்த்தபடி, மிகவும் ஜாக்கிரதையாக ஓர் எண்ணை மட்டும் மாற்றி (அதாவது இரண்டு மூன்று என்று வந்த இடத்தில், மூன்று இரண்டு என்று மாற்றி) டயல் செய்தேன்.


மறுபக்கம் எடுத்தவர், நான் பேச ஆரம்பித்தவுடனேயே 'சாரி ராங் நம்பர்' என்று கூறி வைத்துவிட்டார். ஆனால் நான் அந்தப்பக்கம் டிப்போ மேனேஜரிடம் பேசுவது போல பொறுமையாக நான் யார், எங்கிருந்து வருகிறேன், வண்டியில் எந்த விஷயங்களை அளவு எடுத்துக் கொள்ளப்போகின்றேன் என்பதை விளக்கினேன்.

"ஆமாம் சார், ஆமாம் சார். அது மட்டும்தான்."

"இல்லை சார் சேச்சே, அதேதான் உங்கள் ஜே இ யும் சொன்னார். அதுபற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை. அப்படி ஏதேனும் மாற்றங்கள் என் கண்களில் பட்டால் நான் கண்களை மூடிக் கொள்கின்றேன். எனக்கு வேண்டியதெல்லாம் ஏர் சிலிண்டர் லொகேஷன். அவ்வளவுதான்."

"இதோ இங்கேதான் இருக்கிறார் ஜே இ - பேசறீங்களா? - ஓ கே நானே சொல்லிடறேன் சார். தாங் யு."


போனை வைத்துவிட்டேன்.

ஜே இ க்கு பரம சந்தோஷம். அவர் கிட்டே சொல்லிட்டீங்க இல்லே. அது போதும். இப்போ நீங்க அளவுகள் எடுத்துக்குங்க. வண்டியை பிட்டில் நிறுத்தச் சொல்கின்றேன்.


எங்களுக்கும் சந்தோஷம். அளவுகள் எல்லாம் எடுத்து, குறித்துக்கொண்டு கிளம்பினோம்.


அப்புறம் அந்த ஜே இ யும், டிப்போ மேனேஜரும் இந்த விவகாரம் குறித்து ஏதேனும் பேசியிருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கின்றது!


25 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா...

    //இல்லை சார். நாங்க வண்டியில் உங்களிடமிருந்து வாங்கிய பிறகு சில மாற்றங்கள் செய்திருப்போம். அவற்றை நீங்கள் பார்த்தால், வண்டியில் சர்விஸ் கிளைம் செய்வதில் பிரச்னைகள் தோன்றலாம். தயவுசெய்து என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள்//

    அட! இப்படி எல்லாம் கூட உண்டு இல்லையா? நிறைய தெரிஞ்சுக்க முடியுது..
    கீதா

    பதிலளிநீக்கு
  2. உங்க தக்கினிக்கி சூப்பர் அண்ணா!! செம காமன்சென்ஸ். ரொம்பவும் ரசித்தேன் அப்பகுதியை!

    என்ன அனுபவங்கள். உங்க அனுபவங்களை வாசிக்கும் போதுதான் தெரியுது செம மூளைத் திறன் காமென்சென்ஸ், அதை அனுபவங்கள் மெருகூட்டி...புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் ஆர்வம் விடையும் கண்டுபிடிக்கும் திறன் எல்லாம்! மாத்தி யோசி! தக்கினிக்கி!

    சூப்பர் அண்ணா. நிறைய தெரிந்து கொள்வதோடு கற்றும் கொள்ள முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. //பொருள் விளங்கா உருண்டையாக முழுங்கிவிட்டுப் படியுங்கள்.//

    சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொ.வி.உ. எப்படி முழுங்கறது? நானெல்லாம் கடிச்சுத் தான் சாப்பிடுவேன்! :)))))

      நீக்கு
    2. உடைத்து / கடித்துச் சாப்பிட்டாலும் முழுங்கித்தானே ஆகவேண்டும்!

      நீக்கு
    3. கீசா மேடம்.. எனக்குத் தெரிந்து பொருள்விளங்கா உருண்டை யாருக்குமே பண்ணத்தெரியலை. அந்த தெக்கினிக்கு முந்தைய தலைமுறையோடவே போயாச்சு. கடைகளில் இப்போது விற்பது மாலாடு-பொரிவிளங்கா உருண்டை என்ற பெயரில். அழுத்தினா உடைந்துபோகிறது.

      எங்கேயாவது ஒரிஜினல் பொரிவிளங்காஉருண்டை கிடைக்குதா?

      நீக்கு
  4. //"சார் டிப்போ மேனேஜர்தான் வண்டிகளைப் பார்க்க அனுமதி வழங்கலாம். என் அளவில் நான் ஒன்றும் செய்யமுடியாது"//

    அவர் சொல்வதும் சரிதான்.

    பதிலளிநீக்கு
  5. //அப்புறம் அந்த ஜே இ யும், டிப்போ மேனேஜரும் இந்த விவகாரம் குறித்து ஏதேனும் பேசியிருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கின்றது!//

    இந்த சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
    யாரையும் மோசம் செய்யவில்லை என்றாலும் ஜே .இ டிப்போ மேனேஜரிடம் சொல்லி அதற்கு அவர் நான் சொல்லவில்லையே என்று அவருக்கு டோஸ் விட்டு இருந்தாலும் இருக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லவன் போன்ற அலுவலகங்களில், உள் அரசியல் அதிகம் இருக்கும். எந்த சம்பவமும் நடந்து முடிந்த பிறகு, தான் செய்தது தவறோ என்று நினைப்பவர்கள் அது பற்றி வாய் திறக்கமாட்டார்கள்!

      நீக்கு
  6. சந்தர்ப்பங்களை மிக லாகவமாய்க் கையாள்வதில் திறமைசாலி நீங்கள். வாழ்த்துகள். சமீபத்திய பயணத்தில் விமானநிலையத்தில் பயணிகளை விமானத்திற்குக் கொண்டு சேர்க்கும் பணியை உங்கள் அசோக் லேலண்டு பேருந்துகளை வாங்கித் தான் விமானப் போக்குவரத்து சேவை செய்து வருபவர்கள் செய்து வருகின்றனர் என்பதைக் கவனித்தேன். அதோடு இல்லாமல் மேலே பிடிக்கும் கைப்பிடியில் கூட அசோக் லேலான்ட் முத்திரை! சந்தேகம் வராமல் இருக்க! )))))) அந்தத் தானியங்கிக் கதவுகள் உள்ள பேருந்துகளைப் பார்க்கையில் நம் தமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் நிலைமையும், அதன் உடைந்த கதவுகளும் கண்ணில் ரத்தம் வர வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமானநிலையங்களில் அப்படிப் பயன்படுத்தும் வண்டிகளுக்கு Tarmac coach என்று பெயர். பல்லவன் டெப்போ மெயிண்டனன்ஸ் பற்றி தனி புத்தகமே எழுதலாம். பதிவு பிறகு எழுதுகின்றேன்.

      நீக்கு
  7. ஒரு பேருந்தையோ, லாரியையோ உருவாக்குவதில் உள்ள சிரமங்களையும் அது சரியாக வருவதற்கு எத்தனை பேர் உழைக்க வேண்டி இருக்கிறது என்பதையும் மிக அழகாய்ச் சொல்லி வருகிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. //"இல்லை சார். நாங்க வண்டியில் உங்களிடமிருந்து வாங்கிய பிறகு சில மாற்றங்கள் செய்திருப்போம். அவற்றை நீங்கள் பார்த்தால், வண்டியில் சர்விஸ் கிளைம் செய்வதில் பிரச்னைகள் தோன்றலாம். தயவுசெய்து என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள்!//

    அல்லாமல் மட்டும் சர்வீஸ் செய்யும் போது மாற்றங்களை கவனிக்க முடியாதா என்ன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரண்டி பீரியடுக்குள் வருகின்ற சர்விஸ் கிளைம்கள் பற்றிதான் பிரச்னையே. வாரண்டி பீரியட் முடிந்துவிட்டது என்றால், ஃப்ரீ சர்விஸ் க்ளைம் செய்யமுடியாது.

      நீக்கு
  9. பொய் சொன்னாலும் நமக்கு லக் இல்லைனா பெரிய பிரச்சனையாயிடும். ஒருவேளை அவர், எங்கிட்ட லைன் கொடுங்கன்னு சொல்லியிருந்தா, உங்க பேர் கெட்டுப் போயிருக்குமே... ரொம்ப ரிஸ்க்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது. நமக்கு வேலை ஆகவேண்டும். யாருக்கும் ஆபத்து இல்லாத பொய்.

      நீக்கு
  10. அவர் தப்பித்தாரா என்பது சந்தேகம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் தப்பித்திருப்பார். அவர் அனுமதி வழங்கவில்லை. அவரைப் பொறுத்தவரை டிப்போ மேனேஜர் அனுமதி அளித்துவிட்டார். டிப்போ மேனேஜருக்கு இது பற்றி எதுவும் தெரியாது. அவருக்கு போன் கால் போகவில்லை! அதனால் யாரும் மாட்டிக்கொண்டிருக்க சந்தர்ப்பம் இல்லை.

      நீக்கு
  11. எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது! அந்த உதவியாளர் பிரச்சனை எதுவும் சந்திக்க வேண்டியிருக்காது என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரச்னை எதையும் சந்திக்கவில்லை என்றே நம்புகிறேன்.

      நீக்கு