ஞாயிறு, 31 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 31 :: இளநீர் செய்த உதவி!


அசோக் லேலண்டு பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள google உதவியுடன் தெரிந்து கொள்ளுங்கள் 


ஆனால், அதுவல்ல நான் சொல்ல வந்தது.







மெஷின்ஷாப்பில் வேலை பார்த்த, அசோக் லேலண்டின் ஆரம்ப நாட்களிலிருந்து பணிபுரிந்து வந்த ஒருவர் கூறிய விவரங்கள் அவர் சொன்னது போல, இங்கே பதிகின்றேன்.

" நீ எப்போ பொறந்தே?"

(சொன்னேன்.)

"அப்போவே நான் அசோக் லேலண்டு கம்பெனிலே சேந்துட்டேன், தெரியுமா?"

"ஓ அப்படியா?"

"ஆமாம் - அப்போ எல்லாம் நிரந்தர பணியாளர்கள் யாரும் இங்கே கிடையாது! தெரியுமா?"


ஆச்சரியமாகப் பார்த்தேன்.

"ஆமாம். ஒன்றிரண்டு துரைமாருங்க மட்டும் இருப்பாங்க. பீச் ரோடு (பின் நாட்களில் இராஜாஜி சாலை) வழியாக அசோக் லேலண்டு ஆள் பிடிக்கிற பஸ் ஒன்றிரண்டு வரும். பார்க்கிறதுக்கு தாட்டியா இருக்கறவங்களை எல்லாம் நீ வா / அல்லது வரியா வேலைக்கு - என்று கேட்டு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்து இங்கே விடுவார்கள். "

"துரை யாராவது ஒருவர் இங்கிலீசுல தஸ் புஸ்ஸுன்னு சொல்லுவாரு, கொஞ்சம் விவரம் தெரிந்த உதவியாளர், ஒவ்வொருவரும் அவரவர்கள் உடல்வாகுக்குத் தகுந்த மாதிரி, என்ன வேலை செய்யணும் - ஆஸ்டின் மோட்டார் பாகங்களை எப்படி இணைக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்.





எல்லோரும் கேட்டுப்போம். அதன்படி மோட்டார் பாகங்களை இணைப்போம்.

டீ நேரத்துல டீ. பன்னு. ரொட்டி, பிஸ்கட் எல்லாம் செலவில்லாம கிடைக்கும். சாப்பாடு நேரத்துல நல்ல சாப்பாடு. எட்டு மணி நேரம் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்பொழுது ஆளாளுக்கு அவங்கவங்க செஞ்ச வேலைக்குத் தகுந்தாற்போல் கையில் நாலணா /ஆறணா/எட்டணா பத்தணா ஏதாவது கொடுப்பார்கள்!




அதை செலவு செய்ய ஒரு வாரம் ஆகும்! சில பேருங்க ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் பீச்சு ரோடு பக்கம் வந்து, பயில்வான் போல நெஞ்சை நிமிர்த்தி, ஆள் பிடிக்கிற பஸ் வரும்பொழுது போஸ் கொடுப்பாங்க. ஒரு நாள் சம்பாதித்ததில் ஒரு வாரம் ஜாலியாக செலவழித்து, அடுத்த வாரம் ஒருநாள் வருவார்கள்!

ஆள் பிடிக்கிற பஸ்ஸில் வருகின்ற காண்டிராக்டருக்கு சம்திங் கொடுத்து, அடிக்கடி வேலைக்கு வந்தவர்களும் உண்டு!


இப்போ உங்க ட்ரைனிங் ஆபீசராக இருக்கானே --- (ஹி ஹி பெயர் எல்லாம் சொல்லக்கூடாது!!!) அவன் பொன்னேரியிலிருந்து ட்ரைன் பிடிச்சு வருவான். சும்மா வரமாட்டான், கையில ரெண்டு மூணு எளநீ வாங்கிகிட்டு வருவான். சும்மா சொல்லக்கூடாது தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசுவான்! துரைமாருங்க கிட்ட அவன் இங்கிலீசுல பொளந்து கட்டுவான்.


துரைங்களுக்கு எல்லோருக்கும் இவனைப் பார்த்தா ஒரு இது! இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி! "




உண்மையோ, பொய்யோ - இது அவருடைய வார்த்தைகளில், அவருடைய பார்வையில், அந்தக் கால அசோக் லேலண்டு!

======================================================
படங்கள் : நன்றியுடன் இணையத்திலிருந்து சுட்டவை.

======================================================

எதிர்காலத்தில், இன்னும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசை. பார்ப்போம்! 

இன்றோடு அலேக் அனுபவங்கள் முதல் தொகுப்பு நிறைவடைகிறது 

16 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா.

    //அதை செலவு செய்ய ஒரு வாரம் ஆகும்! // ஆஹா அப்ப காசின் மதிப்பு எப்படி இருந்துருக்கு பாருங்க!

    அந்தப் பாராவை வாசித்து சிரிப்பும் வந்தது. ஒரு வாரம் செலவழித்து ஜாலியா இருந்துட்டு அப்புரம் அடுத்த வாரம் நெஞ்சை நிமிர்த்தி...

    ஜாலியான லைஃபோ!! வேனும்னா சம்பாதித்தல். அத்தனை ஈசியா இருந்துச்சு போல அப்ப வாழ்க்கை.

    சரி எதுக்கு பயில்வான் போல இருக்கணும்? மெஷினரி என்பதாலோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசோக் லேலண்டு ஆரம்பக்காலத்தில், இங்கிலாந்திலிருந்து பாகங்கள் இறக்குமதியாகும். இங்கே, எண்ணூர் தொழிற்சாலையில், அவற்றை ஒன்றோடு ஒன்று பொருத்தும் வேலை மட்டுமே. அதற்கு அவர்கள் பயில்வான்களை தேட வேண்டியதாயிற்று!

      நீக்கு
  2. துரைங்க தொடங்கிய கம்பெனியா! அப்பலருந்தே இருக்கு போல. அவங்க நம்ம நாட்டை விட்டுப் போனப்புறம்? சரி கூகுள்ல பார்த்துவிடுகிறேன்..

    ஆஸ்டின் கார் அழகா இருக்கு அது அப்புறம் மோரிஸ் மோட்டார்ஸ் வாங்கிட்டாங்கனு எங்கேயோ வாசித்த நினைவு. ஆஸ்டின் சின்ன குடும்பம் போறா மாதிரியான கார் வடிவில் இருக்கும் சமீபத்துல அனுப்ரேம் தளத்துல கூட பழைய மாடல் காட்சி படம் எடுத்துப் போட்டதுல ஆஸ்டின் அந்தக்காலத்து மாடலும் இருந்தது.

    ஸ்வாரஸியமா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. //ஒரு நாள் சம்பாதித்ததில் ஒரு வாரம் ஜாலியாக செலவழித்து, அடுத்த வாரம் ஒருநாள் வருவார்கள்//

    எத்தனை ஆச்சர்யம்.
    சுவாரஸ்யமாக பதிவை கொண்டு சென்றமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. அணாக்கள் மதிப்புடன் இருந்த காலம். அது சரி, அசோக் லேலன்ட் என்னும் பெயர் எப்படி வந்தது? அதுவும் கூகிளாரைத் தான் கேட்கணுமோ? விரைவில் முடிந்து விட்டது. சீக்கிரமாய் அடுத்த பாகத்தைத் தொடர்வீர்கள் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப காலத்தில் கம்பெனியின் பெயர் அசோக் மோட்டார்ஸ். ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து எட்டு. அந்த கம்பெணியின் நிறுவனர், திரு ரகுநந்த சரண். அவருடைய ஒரே பையனின் பெயர் அசோக் சரண். எனவே அசோக் மோட்டார்ஸ் என்ற பெயர் இடப்பட்டது. பிறகு ஆஸ்டின் மோட்டார்ஸ் உற்பத்தியை நிறுத்தி, சுதந்திர இந்தியாவில், முதல் பிரதமர் நேருவின் வேண்டுகோளுக்கிணங்கி, பஸ் லாரி தயாரிப்பைத் தொடங்கினர். பிரிட்டிஷ் லேலண்டு வண்டி பாகங்களை இறக்குமதி செய்து, இங்கே ஒன்றிணைத்து விற்பனை செய்வது என்று தொடங்கப்பட்ட போது அசோக் மோட்டார்ஸ் அசோக் லேலண்டு ஆனது.

      நீக்கு
  5. அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. முயற்சி செய்கிறேன். தொடர்ந்து எழுத இயலாமல் போனாலும் அவ்வப்போது இந்த வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.

      நீக்கு
  6. //துரைங்களுக்கு எல்லோருக்கும் இவனைப் பார்த்தா ஒரு இது! இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி! "//

    அவர் பிழைக்க தெரிந்தவர்.

    திறமை இருந்தாலும் பிழைக்க தெரியவில்லை, உங்களிடம் தன் பழைய அனுபவங்களை சொன்னவருக்கு.


    தொடரை மிக அருமையாக சொன்னீர்கள். நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. பிழைக்கத் தெரிந்தவர்கள்....

    ஸ்வாரஸ்யமாகச் சென்ற தொடர். அலுவலக அனுபவங்கள் பற்றி நேற்று நண்பர் பத்மநாபனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரிடமும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. எழுதச் சொல்லி இருக்கிறேன். நானும் முடிந்த போது எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

    அடுத்த தொகுப்பிற்கான ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, எதிர்பார்ப்பிற்கு. நிச்சயம் எழுதுவேன்.

      நீக்கு
  8. தொடர் நல்ல சுவாரசியமாகப் போனது. நீங்க வேலைக்குச் சேர்ந்தபிறகான நிறைய சுவாரசிய அனுபவங்கள் இருந்திருக்குமே.... அதையெல்லாம் எழுதியிருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் எழுதுகிறேன். கூடுமானவரை டெக்னிகல் ஜார்கன் இல்லாமல் எழுதவேண்டும் என்பதால், எல்லா அனுபவங்களையும் எழுத இயலாது என்பது ஒரு பிரச்னை. பார்ப்போம்.

      நீக்கு